Saturday, July 13, 2024

தெள்ளத் தெளிந்தார்க்கு…

 


”தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்” என்கிறார் திருமூலர்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவர் சீவனைச் சிவன் என்று சொல்லவில்லை, சிவலிங்கம் என்றே குறிப்பிடுகிறார். ஜீவான்மாவே பரமான்மா என்பதைச் சைவ சித்தாந்தம் ஒப்பாது.

பசுவே பதி ஆகிவிடாது. பசு பதியைச் சேரும். அப்போது, ஞானம் என்னும் பால் பொங்கி வழியும். ‘பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ப் பொழியுமே’ என்கிறார் திருமூலர். அந்நிலையிலும் பசு பசுதான், பதி பதிதான். உயிர் உயிர்தான், இறைவன் இறைவன்தான். 

’லிங்கம்’ என்னும் சொல்லுக்குக் ’குறி’ என்று பொருள். ’குறி’ என்றால் ’அடையாளம்’ (sign) என்று அர்த்தம். மனித உடலிலும் பாலினம் காட்டும் அடையாளம் உண்டு. எனவே, அவ்வுறுப்பைக் குறி என்று கூறப்படும். அவ்வளவில் அமைந்து நேர்ப்படச் சிந்தித்தால் தத்துவம் புரியும். [ஆனால், சித்த சேட்டை கொண்டோர்க்கு அனர்த்தம் உறும். அவர் அல்லர் யாம் கருதும் வாசகர்.]


நவீன மொழியியல் கோட்பாட்டாளர் ழாக் லகான் சொல்லும் ‘sign – signifier – signified’ என்னும் மும்மையை “குறி – குறிப்பான் – குறிப்பீடு” என்றே தமிழ் செய்கிறோம். [இதனை Observance – Observer – Observed (கவனம் – கவனிப்பான் – கவனிக்கப்படுபவன்) என்னும் மும்மையாகவும் காணலாம். “The Observer is the Observed” (கவனிப்பவனே கவனிக்கப்படுவோன்) என்கிறார் நவீன தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. திக்ரு – தாகிர்- மத்கூர் (தியானம் – தியானிப்பவன் – தியானிக்கப்படுவோன்) என்னும் மும்மையை ஸூஃபிகள் விளக்கும்போது, ‘தியானிப்பவனே தியானிக்கபடுவோன் ஆகிவிடும் நிலை’ என்பதைச் சுட்டுகின்றனர்.]

குறி என்பது எதற்காக? அறிவதற்காக. எனவே அறிதற் பொருட்டு காட்டப்படும் குறிகளை அறிகுறிகள் என்று சொல்கிறோம்.

பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் அடையாளங்கள் (அத்தாட்சிகள் – ‘ஆயாத்’) நிரம்பியிருப்பதாக குர்’ஆன் மீண்டும் மீண்டும் சொல்கிறது. அந்த அத்தாட்சிகளை எல்லோரும் காண்பதில்லை. சித்தம் தெளிந்தார்க்கே அந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

அந்த அடையாளங்கள், அத்தாட்சிகள், அறிகுறிகள் எதில் உள்ளன? முகத்தின் அடையாளம் முகத்தில்தானே இருக்கும்?

“நீவிர் எத்திசை திரும்பினும் அல்லாஹ்வின் முகமே நிறைந்துள்ளது” (2:115) என்கிறது குர்’ஆன்.

  அந்த அடையாளங்கள் அனைத்தும் ஒரு தரத்தன அல்ல. இறைவனின் ஆகப் பெரும் அடையாளமாக உயிரே உரைக்கப்படுகிறது.



            பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த ஸூஃபி ஞானி முஹம்மது காசிம் மரைக்காயர் என்பவர் ”அஸ்ராருல் ஆலம்” (பிரபஞ்ச ரகசியம்) என்றொரு நூல் எழுதினார். அந்நூல் குருவுக்கும் சீடனுக்குமான உரையாடலாக அமைந்துள்ளது. அதன் முதல் வினா விடையே உயிர் பற்றியதுதான். “அல்லாஹுத் த’ஆலாவுக்குப் பத்து விஷயங்களில் நமது உயிரை உவமை காட்டலாம்” என்று குரு குறிப்பிடுகிறார். அந்தப் பத்து விஷயங்களை இங்கே சுருக்கமாத் தருகிறேன்.

1.      கண்ணுக்குத் தெரியாத உயிர்தான் உடலின் அங்கங்கள் அனைத்தையும் இயங்கச் செய்கிறது. உயிர் இல்லாவிடில் உடல் பிணம்தான். அதுபோல், பார்வைக்குப் படாத இறைவன்தான் அகில உலகங்களையும் நடத்துகிறான். அவன் இல்லை என்றால் எதுவுமில்லை.

2.      உடலின் உறுப்புகள் பல என்றாலும் அவை அனைத்தையும் இயக்கும் உயிர் ஒன்றே. அதுபோல், உலகங்கள் பல, ஆனால் அவற்றைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே.

3.      உடல் செய்யும் நன்மைகளும் தீமைகளும் உயிரின் நாட்டத்தால் அமைகிறது. பிரபஞ்ச காரியங்கள் அனைத்தும் இறைவனின் நாட்டத்தால் நிகழ்வன.

4.      உடலில் எது நேர்ந்தாலும் உயிருக்குத் தெரியாமல் போவதில்லை; அதுபோல், பிரபஞ்சத்தில் எது நிகழ்ந்தாலும் இறைவன் அறியாமல் நிகழ்வதில்லை.

5.      உடலில் எதையும்விட உயிரே அருகிலிருக்கிறது; அதுபோல், அனைத்து வஸ்துக்களுக்கும் இறைவனே மிக நெருக்கமாக இருக்கிறான்.

6.      உடல் உண்டாகும் முன்பே உயிர் இருந்தது, உடல் அழிந்த பின்னரும் உயிர் இருக்கும். அதுபோல், பிரபஞ்சம் உண்டாகும் முன்பே இறைவன் இருந்தான், பிரபஞ்சம் அழிந்த பின்னரும் அவன் இருப்பான்.

7.      உடலில் இன்ன இடத்தில்தான் உயிர் இருக்கிறது என்று மட்டுப்படுத்த முடியாது. அது எங்கும் விரவி இருக்கிறது. அதுபோல், பிரபஞ்சத்தில் இறைவன் இல்லாத இடமே இல்லை.

8.      உயிர் உடலில் இருப்பது தெரிகிறது. ஆனால் அதன் தன்மை என்ன என்று நாம் அறிய முடிவதில்லை. அதுபோல், பிரபஞ்சமெங்கும் இறைவன் இருக்கிறான் என்பது தெரிகிறது. ஆனால், அவனின் தன்மையை நாம் அறிய முடிவதில்லை.

9.      உயிர் உடலில் இருந்தாலும் உடலின் எந்த உறுப்புடனும் அதனை ஒப்பிட்டுக் கூற முடியாது. அதுபோல், இறைவன் பிரபஞ்சத்தில் இருந்தாலும் அவனுடன் எதையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.

10.   உயிரை ஐம்புலன்கள் எட்ட முடிவதில்லை; அதுபோல், இறைவனை ஐம்புலன்கள் எட்டுவதில்லை.

இப்படிப் பத்துப் பொருத்தங்களைப் பார்த்து மயங்கித்தான் சிலர் சீவனே சிவன் என்று பிழையாகக் கருதிவிட்டனர் போலும். 

இந்த தத்துவத்தைச் சொல்ல வந்த வைணவம் ‘சரீர சரீரி பாவனை’ என்னும் கோட்பாட்டை வகுத்துள்ளது. அதாவது, உடலும் உயிரும்போல பிரபஞ்சமும் இறைவனும் என்பதே அதன் விளக்கம். “திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை / படர் பொருள் முழுவதுமாய்  அவை அவை தொறும் / உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன் / சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே” (திருவாய்மொழி-7) என்கிறார் நம்மாழ்வார்.

இன்னனம், உயிரை இறைவனின் அத்தாட்சியாக – அடையாளமாக – அறிகுறியாகக் கண்டு சித்தம் தெளிந்தாரையே நாம் ‘என் உயிரே! என் ஆருயிரே! என் உயிரின் உயிரே!’ என்றெல்லாம் விளிக்கத் தகும். அவ்வுணர்வு பேரின்பக் காதல் ஆகும்.

No comments:

Post a Comment