Tuesday, July 28, 2015

...என்றார் சூஃபி - part 14

45

சூஃபி ஞானிகள் எழுதிய நூற்கள் பல உள்ளன. எனினும் எனது சூஃபி மகானின் கையில் ஒரு புத்தகத்தையோ அல்லது எழுதுகோலையோ நான் பார்த்ததில்லை. இது பற்றி அவரிடம் ஒரு நாள் கேட்டேன்.

புன்னகைத்தபடி சூஃபி சொன்னார், “நமது வேலை வேறு. கையையும் வாயையும்விட நமக்கு மூக்கே முக்கியமானது. நமது பாதையில் நாம் மூக்கால் நடக்கிறோம்.”

இதைச் சொல்லிவிட்டு அவர் நகர்ந்து அப்பால் போய்விட்டார். நான் தோட்டத்தின் முற்றத்தில் அமர்ந்து அவர் சொன்னதை அசை போட்டுக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் அந்தப் பக்கமாக வந்தவர் என்னருகில் நின்றார்.

“புத்தகப் பூச்சி ஒருபோதும் பட்டாம்பூச்சி ஆவதில்லை… ஒருவேளை அது Paper Butterfly ஆகலாம்” என்றார் சூஃபி.

46

      தன்முனைப்பு எப்படியெல்லாம் நுட்பமாக உருவாகிவிடும் என்பதை விளக்கிய போது சூஃபி பின்வரும் கதையைச் சொன்னார்.

      இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை). மற்றவன் பெயர் உபைதுல்லாஹ் (அல்லாஹ்வின் சிறிய அடிமை). இருவரும் ஒருநாள் தத்தமது குடும்பப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
     
”எங்கள் தாத்தா ஒரு பெரிய நிலச்சுவான். ஆயிரம் ஏக்கர் நிலம் அவருக்கு இருந்தது. ஊரிலேயே பெரிய பங்களா எங்களுடையதுதான்” என்றான் அப்துல்லாஹ்.

      ”ப்பூ இவ்வளவுதானா? எங்க தாத்தாகிட்ட பத்தாயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஊரே எங்க பங்களாவுக்குள்ளதான் இருந்தது!” என்றான் உபைதுல்லாஹ்.

      மிகவும் கடுப்பாகிப் போன அப்துல்லாஹ் சொன்னான், “இங்க பாரு. என்ன இருந்தாலும் நான் அப்துல்லாஹ். நீ உபைதுல்லாஹ். எனக்குக் கீழதான் நீங்கிறத மறந்துடாத.”

      இந்தக் குட்டிக்கதையைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். அந்த உவகை அலைகள் அடங்கிய பின் சூஃபி மீண்டும் பேசினார்.

      ”மதிப்பில், பெரிய பூஜ்யமும் சிறிய பூஜ்யமும் சமம்தான்” (In value, big zero and small zero are equal) என்றார் சூஃபி.

47
”கணிதத்தில் ஒரு சில கேள்விகள் கேட்கிறேன்” என்று ஆரம்பித்தார் சூஃபி. “ஐந்து பெரிதா நான்கு பெரிதா?” என்று கேட்டார். “ஐந்துதான் பெரிது” என்றோம். “இரண்டு பெரிதா மூன்று பெரிதா?” என்றார். “மூன்று” என்றோம்.

      சூஃபி தன் கையில் வைத்திருந்த ஓர் அட்டையை எங்களிடம் காட்டினார். அதில் பின்வருமாறு இருந்தது:
Count down
5
4
3
2
1
0

”இந்தக் கவுண்ட் டவ்னில் என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம்.

“இப்போது இதில் ஐந்தைவிடவும் நான்கு பெரிது அல்லவா? மூன்றைவிடவும் இரண்டு பெரிது அல்லவா? எல்லா எண்களையும் விட பூஜ்யம்தான் மிகப் பெரியது அல்லவா?”

”ஆம்” என்றோம்.

“எல்லாப் படைப்புக்களின் எதார்த்தம் இந்தப் பூஜ்யம்தான். சூஃபிகள் உணர்ந்த ஞானம் இது. இருப்பது இறைவன் மட்டுமே. அவனே உள்ளமை (உஜூத்). இருக்கும் உள்ளமை ஒன்றே, ஏக உள்ளமை – வஹ்தத்துல் உஜூத். இதுவே ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்). அந்த இறைவனின் சுயம் பூர்வீகமானது (தாத்தெ கிதம்). படைப்புக்களின் சுயம் வெறுமை (தாத்தெ அதம்). ’அடிமை’ (அப்து) என்னும் சொல்லின் தாத்பரியம் இதுவே. எனவே ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பூஜ்யம்.

பூஜ்யத்தில் இருந்தே மற்ற எண்கள் பலுகிப் பெருகியுள்ளன. சிலர் பத்தாக இருக்கிறார்கள். சிலர் ஒன்பதாக இருக்கிறார்கள். சிலர் எட்டாக இருக்கிறார்கள். ஆளுமைச் சிதைவுகள். இதில் தான் யார் என்பதில் குழப்பம். சில காலம் இது என்றும் சில காலம் அது என்றும் மயக்கம். தொடர்ந்து ஒரே நபராக இருப்பதில் தயக்கம். பொய் ஆளுமை சிதையும் போது கலக்கம்.

ஆன்மிகம் என்பது கவ்ண்ட் டவ்ன். 10 9 8 7 6 5 4 3 2 1 0.

”இறைவனே இருக்கிறான், நான் இல்லை” என்பதை உணர்ந்து கொண்ட ஒருவன், தன்னைப் பூஜ்யம் என்று உணர்ந்து கொண்ட ஒருவன் ஆகிறான். பிரபஞ்சம் அத்தகைய ஒருவனையே பூஜ்யஸ்ரீ என்று கொண்டாடும். அவனே இறை உள்ளமையின் கண்ணாடி.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் திளைத்திருக்கிறது. அழகான ஆரோக்கியமான பூஜ்யங்கள் (Beautiful healthy zeros).

இதோ நாம் அமர்ந்திருக்கும் இந்தத் தோட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் இருக்கின்றன. இறைவனைக் காட்டும் ஒவ்வொரு பூஜ்யக் கண்ணாடியும் மதிப்புடையதே.

பூஜ்யஸ்ரீ கொரியன் புல்!
பூஜ்யஸ்ரீ கூழாங் கல்!
பூஜ்யஸ்ரீ மூங்கில்!
பூஜ்யஸ்ரீ பழைய குளம்!
பூஜ்யஸ்ரீ தவளை!
பூஜ்யஸ்ரீ தவிட்டுக் குருவி!
பூஜ்யஸ்ரீ வெட்டுக்கிளி!

’அனைத்து வஸ்துக்களும் என் ஒளியிலிருந்து வந்தன’ என்கிறார் மகாபூஜ்யஸ்ரீ முஹம்மத் (ஸல்).

’பிரபஞ்சத்தை வளைக்கும்
மாபெரும் பூஜ்யம்
முஹம்மத் (ஸல்)’
என்றார் சூஃபி.

48
      மத வாழ்வைப் பொருத்த வரை மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார் சூஃபி: அறிபவர்கள், ஆற்றுபவர்கள், ஆகுபவர்கள்.

Knowing ones; Doing ones; Being ones.

இவை மூன்றும் முறையே ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று காணலாம்.

பலர் ஆன்மிக விஷயங்களை அறிவதோடு நின்று விடுகிறார்கள். அவர்களில் சிலரே செயலாற்றும் நிலைக்கு உயர்கிறார்கள்.

அவர்களில் பலர் வழிபாடுகள் தியானங்கள் செய்வதோடு நின்று விடுகிறார்கள். சிலரே அதுவாகி இருத்தல் என்னும் நிலையை அடைகிறார்கள்.

அறிதல் என்பது க்கால் (qaal – பேச்சு) மட்டுமே.
ஆற்றுதல் என்பது ஃபஅல் (fa’al – செயல்) மட்டுமே.
ஆகுதல் என்பதே ஹால் (haal - அனுபவ நிலை).

நபி (ஸல்) அவர்கள் செய்த ஒரு பிரார்த்தனை இம்மூன்று கட்டங்களையும் குறிக்கிறது:
“அல்லாஹும்மர்ஸுக்னா இலமத் தவ்ஹீதி வ அமலல் இஃக்லாஸி வ ஹுஸ்னல் ஃகாத்திமா” (அல்லாஹ்வே! எமக்கு ஏகத்துவ அறிவும் பரிசுத்த வழிபாடும் அழகிய முடிவும் அருள்வாயாக”


‘அதுவாகும் நிலையே அழகிய முடிவு’ என்றார் சூஃபி.

3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் ,,,அருமை ...மிகவும் எளிமையாக எல்லொரலும் புரிந்து கொள்லும்வகையில் ஆசிரியரின் வரிகள்“""""எல்லாப் படைப்புக்களின் எதார்த்தம் இந்தப் பூஜ்யம்தான். வஹ்தத்துல் உஜூத்""""இதைப் பற்றி அழகான விளக்கம்.

    ReplyDelete
  2. ...என்றார் சூபி, எந்த புத்தகம் மௌலா?

    ReplyDelete