Tuesday, June 18, 2013

ஒரு சூஃபியின் டைரி -2

இனி ருஸ்பிஹானின் நூலுக்குள் நுழைவோம்.

”இந்நூல் சுயசரிதையின் மரபார்ந்த வரையறைகளைச் சிதறடிக்கின்றது” என்று டேவிட் ஜேம்ஸ் டன்கன் சொல்கின்றார். இதன் அரபி மூலப் பிரதி எவ்வித உட்பகுப்புக்களோ உட்தலைப்புக்களோ அத்தியாய அமைப்போ நிறுத்தக் குறியீடுகளோ இன்றி எழுதிச் செல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் கார்ல் எர்ன்ஸ்ட் அதே அமைப்பில் தந்தால் தற்கால வாசகர்களுக்கு அது ஏற்பாக அமையாது என்று கருதி தானே தலைப்புக்கள் சூட்டிப் பத்தி பத்தியாக (210 பத்திகள்) அமைத்திருப்பதாகச் சொல்கிறார். நல்ல காரியம் செய்தார்.

இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற்பகுதி ’நினைவுகள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தன் கடந்த கால அனுபவங்களை இதில் ருஸ்பிஹான் சொல்கிறார். திறப்பு, ஆரம்ப ஆண்டுகள், ஆரம்ப தரிசனங்கள், பாரசீக ஞானியரின் அங்கீகாரம், மேலும் ஆரம்ப தரிசனங்கள், மக்கா தரிசனங்கள், தெய்வீக சபைக்கு ஆகிய ஏழு தலைப்புக்களில் மொத்தம் ஐம்பத்தாறு பத்திகள்.

இரண்டாம் பகுதி ‘நடப்பு தரிசனங்கள்’. இந்நூலினை ருஸ்பிஹான் தனது ஐம்பைத்தாம் வயதில் (கி.பி.1181) எழுதத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு நிகழ்ந்த ஆன்மிக தரிசனங்களின் பதிவாக இப்பகுதி 154 பத்திகள் கொண்டுள்ளது.

இதயத்தில் இறைஞான இரகசியங்களின் திறப்பு தனக்குப் பதினைந்தாம் வயதில் ஏற்பட்டதாக ருஸ்பிஹான் சொல்கிறார். அந்தச் சின்ன வயதில் அவருக்கு உண்டான அந்த அனுபவத்தை வாசிக்கும்போது ‘இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் ஐயா’ என்று சொல்லத் தோன்றுகிறது. மட்டுமல்ல, இதுவரை ஆன்மிக வாழ்வு என்று என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் இறைவன் மீதான ஒருவித ’க்ரஷ்’ மட்டுமே என்பதுபோல் தோன்றுகிறது. அவர் ஒரு சூஃபியாக பரிணமித்த ஆரம்பகால நிகழ்வுகளை அவர் வாயாலேயே கேட்போம்.

#1 முதன் முதலாய்...
“புரிந்துகொள்ளுங்கள் (இறைவன் உங்களுக்குப் புரிதலை அருள்வானாக!), நான் வழிதவறிப்போன மூடக் குடிகாரர்களின் மத்தியில் பிறந்தேன். மூன்று வயது வரை சந்தையில் உள்ள சாதாரண மக்களால் வளர்க்கப்பட்டேன். ‘அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக் கழுதைகளைப் போல்; சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதைகளைப் போல் இருக்கின்றார்கள்)’ (குர்ஆன் 74:50,51). ”படைப்புக்களின் இறைவனான உன் இறைவன் எங்கே?” என்னும் கேள்வி என் மனத்தில் எழுந்தது. எம் வீட்டின் முன்புறம் ஒரு பள்ளிவாசல் இருந்தது. அங்கே சில சிறுவர்களைக் கண்டு ‘உங்கள் இறைவனை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டேன். ‘அவனுக்குக் கைகளோ கால்களோ இல்லை என்று சொல்கிறார்கள்’ என்று அவர்கள் கூறினார்கள். அதாவது இறைவனுக்கு பாகங்களோ உறுப்புக்களோ இல்லை என்பதை அவர்கள் தம் பெற்றோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கேள்வியை நான் கேட்டபோது எல்லையில்லா இன்பத்தால் நான் நிரம்பினேன். இறைவனின் திருநாமங்களை ஓதும்போதும், ஆழ்நிலை தியானத்திலும் ஏற்படுகின்ற உதிப்பைப் போன்ற ஒரு நிலை எனக்கு அப்போது ஏற்பட்டது. ஆனால் அதன் எதார்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.”

#2 காதலின் கண்திறப்பு
”எனக்கு ஏழு வயது ஆனபோது அவனை நினைப்பதும் அடிபணிவதுமான ஒரு காதல் என் இதயத்தில் உண்டானது. நான் என் பிரக்ஞையில் தேடி அது என்னவென்று அறிந்தேன். அதன் பின் ஆழ்ந்த காதல் என் இதயத்தில் உண்டாயிற்று. அந்தக் காதலில் என் இதயம் உருகியது. அந்நேரம் நான் காதலில் பைத்தியமாக இருந்தேன். என் இதயம் நிரந்தரத்தின் நினைவெனும் கடலிலும் புனித நறுமணங்களின் வாசத்திலும் மூழ்கித் திளைப்பதாயிற்று. எவ்வித இடைஞ்சலும் இன்றிப் பேரின்பங்கள் என்னுள் விளைந்தன. ஒரு மெல்லுணர்வு என் இதயத்தை அதிரச் செய்தது; என் கண்கள் நீர் நிறைந்தன. மேலான இறைவனின் திருநாமங்களை நினைவு கூர்வதன்றி அவை வேறல்ல என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. அந்தக் காலங்களில் பிரபஞ்சம் முழுவதையும் நான் அழகிய முகங்களைப் போல் பார்த்திருந்தேன். மேலும் அப்போது தனிமை, வழிபாடுகள், தியானங்கள் மற்றும் சூஃபி குருமார்களைச் சந்தித்தல் ஆகியவற்றில் விருப்பம் வளர்ந்து வந்தது.”

#3 ஆன்மிகப் பாதையில் நுழைதல்
“நான் பதினைந்து வயதை அடைந்தபோது மறைவான உலகிலிருந்து வருவது போல் ஒரு குரல் என்னைச் சோதிப்பதாக ஒலித்தது ‘நீயோர் இறைத்தூதர்’ என்று. ‘என் பெற்றோர்களிடம் இருந்து நான் அறிந்திருக்கிறேன், முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் இறைத்தூதர் இல்லை. நான் உண்ணுகிறேன், குடிக்கிறேன், இயற்கைக் கடன் கழிக்கிறேன், எனக்கு அந்தரங்க உறுப்புக்களும் உள்ளன. எனும்போது நான் எப்படி இறைத்தூதராக இருக்க முடியும்?’ என்று நான் அப்போது சொன்னேன். ஏனெனில், நபிமார்களுக்கு இந்தக் குறைகள் இல்லை என்று நான் அப்போது நம்பியிருந்தேன். மதிய தொழுகைக்காக நான் என் கடையை விட்டு எழுந்து (பக்லீ என்றால் காய்கறி வியாபாரி என்று பொருள்.) அங்கசுத்தி செய்ய நீர் தேடிக்கொண்டு பாலைவனத்தில் நடந்தேன். ஓர் அழகிய குரலைக் கேட்டேன். என் உள்ளம் படபடத்தது. ‘பேசுபவரே! என்னுடன் இருங்கள்’ என்று கத்தினேன். என் அருகில் இருந்த ஒரு மலையின் மீது நான் ஏறினேன். சூஃபி குருமார்களின் உடையணிந்த ஒரு அழகிய நபரை அங்கே பார்த்தேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. இறைவனின் ஏகத்துவம் பற்றி அவர் ஏதோ சொன்னார். ஆனால் அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒருவித பரவச வெறிப்பு (ஜத்பு) என்மேல் கவிந்தது.”

#4 பாலைக்குப் பறந்தேன்...
“நான் அஞ்சினேன். மக்கள் சுற்றிலும் நடந்து கொண்டிருந்தார்கள். இரவு வரை ஒரு பாழிடத்தில் இருந்தேன். அதன் பின் கிளம்பி வந்து என் கடையில் தங்கினேன். விடியும் வரை பரவசமும் சஞ்சலமும் பெருமூச்சுக்களும் அழுகையுமாய் இருந்தேன். நான் அதிர்ச்சியும் வெறிப்பும் அடைந்திருந்தேன். அனிச்சையாக என் நாவில் “எம் ரட்சகனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்! (’குஃப்ரானக்க றப்பனா’ – குர்ஆன் 2:285) என்னும் சொற்கள் வந்தபடி இருந்தன. பிறகு என் நாவு அசைவற்றுப் போனது. பல நாட்கள் அங்கே நான் அமர்ந்திருந்தது போல் இருந்தது. மேலும் ஒரு மணி நேரம் கழிந்தது. பரவசம் என்னை ஆட்கொண்டது. தேவைக்காக என்று என் கடையில் நான் சேமித்து வைத்திருந்த பணப்பெட்டியையும் இதர பொருட்களையும் தெருவில் வீசி எறிந்தேன். என் ஆடையைக் கிழித்துக்கொண்டு பாலைவனம் நோக்கி விரைந்தேன். பரவசமும் வியப்பும் அழுகையும் ஏக்கமுமாக அதே மனநிலையில் ஒன்றரை வருடம் சென்றது. ஒவ்வொரு நாளும் நனி பரவசங்களும் மறைவான காட்சிகளும் நிகழ்ந்தன. அந்தப் பரவசங்களில் வானமும் பூமியும் மலைகளும் மரங்களும் எல்லாம் ஒளிமயமாய் இருப்பது போல் கண்டேன். பிறகு அந்த சஞ்சலத்தை விட்டும் அமைதி அடைந்தேன்.”

#5 முதல் திரை-நீக்கம் (கஷ்ஃபே அவ்வல்)
“என் ஆரம்பக் காலங்களின் அந்த திரையிடலை விட்டும் நான் மீண்டு வந்தேன். சூஃபிகளுக்குப் பணிவிடை செய்ய ஏங்கினேன். எனக்கு அழகிய முடி இருந்தபோதும் தலையை மொட்டை அடித்தேன். சூஃபிகளிடம் சேர்ந்து மிகவும் சிரத்தையுடன் அவர்களுக்கு ஊழியம் செய்தேன். திருக்குர்ஆனைப் படித்து அதனை மனனமும் செய்து முடித்தேன். [திருக்குர்ஆனை முழுமையாக (6666 திருவசனங்கள்) மனனம் செய்தவருக்கு ஹாஃபிழ் என்னும் பட்டம் வழங்கப்படும். ருஸ்பிஹான் பின்னாளில் திருக்குர்ஆனுக்கு ஒரு விரிவுரை நூலும் எழுதியுள்ளார்.] பேரின்பத்திலும் ஆன்மிக நிலைகளிலும் என் பெரும்பாலான நேரங்கள் சூஃபிகளுடனே கழிந்தன. ஆனால் ஒரு குறிப்பிட்ட நாள் வரை மறைவான உலகங்களில் இருந்து எவ்விதத் திறப்பும் ஏற்படாமல் இருந்தது. அந்த நாளன்று நான் ஃகான்காஹ்வின் (மடத்தின்) மேற்கூரை மீது அமர்ந்தவனாக மறைவான உலகம் பற்றி தியானித்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களான அபூபக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ(ரலி-ம்) ஆகியோருடன் என் முன் கடந்து செல்வதைக் கண்டேன். இதுவே என் முதல் திரை-நீக்கம்.”

#6 குருநாதரை அடைதல்
“அந்நாள் வரை எனக்கொரு குருநாதரை நான் அடைந்திருக்கவில்லை. எனவே பாஸாவில் உள்ள என் வீட்டிற்கே திரும்பி வந்தேன். ஈடேற்றம் அடைந்தவரான ஒரு ஞான வழிகாட்டியைத் தேடினேன். மேலான அல்லாஹ் என்னை ஷைகு ஜமாலுத்தீன் அபில் வஃபா இப்னு ஃகலீல் அல்-ஃபஸாயி (ரஹ்) அவர்களிடம் என்னை ஆற்றுப்படுத்தினான். அவர்களும்கூட பாதையின் ஆரம்ப நிலையில் இருந்தார்கள். மேலான இறைவன் அவர்களின் சகவாசத்தில் எனக்கு வானவருலகின் கதவுகளையும் இடையீடற்ற திரை-நீக்கங்களையும் அருளினான். அவர்களின் சகவாசத்தில், எண்ணற்ற பரவசங்களும் திரை நீக்கங்களும் ஏற்படும் வரை மறைவான ஞானங்களுடனும் இறை ரகசியங்களுடனும் ஆன்மிக நிலைகள் பொங்கிப் பாய்ந்தன.”


(to be continued)

4 comments:

 1. அல்ஹம்து லில்லாஹ்.

  ReplyDelete
 2. சுப்ஹானல்லாஹ்...ஆர்வமூட்டுவதாக அமைந்துள்ளது!!ரஷீத்-நாகை

  ReplyDelete
 3. அல்லாஹு அக்பர்!!!
  அவன் நேசத்தையும் அவன் நினனைவையும் தவிர வேற்ய் என்ன வேண்டும்.

  ReplyDelete