Sunday, June 2, 2013

மணலின் கதை



வெகு தொலைவில் உள்ள மலை முகடுகளில் புறப்பட்ட நதியொன்று பலவகை நிலங்களின் வழியே ஓடி வந்து குறுகிய நீரோடையாகிப் பாலைவனத்தின் மணல்களைத் தொட்டது. இதுவரை கடந்து வந்தது போன்றே இந்தத் தடையையும் கடந்து பாய்ந்தோடி விடலாம் என்று நினைத்தது. ஆனால், எவ்வளவு வேகமாக அது பாலையின் மணலில் மோதியதோ அவ்வளவு வேகமாக உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.

[நதி என்பது நான் என்னும் தன்னுணர்வைக் குறிக்கும். சுயத்தைக் குறிக்கும். நதி என்பது நீரோட்டம். அது நிலையாக நிற்கும் ஒன்றல்ல. பாய்ந்து ஓடிக்கொண்டிருப்பது. நிற்பது அதற்கு மரணமாகும். ஒவ்வொரு கணமும் நமது சுயவுணர்வு – ‘நான்’ என்னும் உணர்வு வந்துகொண்டே இருக்கிறது. இதனை உள்ளம் என்றும் சொல்லலாம். கல்பு என்னும் அரபிப் பதத்திற்குப் புரளக்கூடியது என்று பொருள்.

மூணாறு ; ஒளியோவியர் : சையத் இப்ராஹீம் பிலாலி 

இந்த நான் பல கட்டங்களைக் கடந்து வந்துவிட்டது, பிள்ளைப்பருவம் விடலைப்பருவம் வாலிபப்பருவம் இப்படியாக. அப்பருவங்களில் இந்த உலகம் தரும் பல்வகை இன்பங்களை சுவைத்துக் கிரகித்தபடி வந்துவிட்டது. ஆனால் உலகம் அதைக் கிரகித்து அழித்துவிடக்கூடிய கட்டம் ஒன்று வருகிறது. அதுவே பாலை. அதற்கு மேல் உலக இன்பங்களில் முன்பு கண்ட சுவை உள்ளத்திற்கு வாய்ப்பதில்லை. பாலை என்பது வெறுமை. ‘வீரான்’ என்று சொல்வர். பழைய புலனின்பப் பயணத்தைத் தொடர உள்ளம் முனைகிறது. ஆனால் உலகம் தன்னை அழிப்பதை அது உணர்கிறது.]

எனினும், இந்தப் பாலைவனத்தைக் கடந்து செல்வதே தன் விதி என்றும் அதை மாற்ற வேறு வழி இல்லை என்றும் அது தெளிவாகக் கண்டது. பாலையிலிருந்து ஒரு ரகசியக் குரல் அதன் செவிகளில் ஒலித்தது: “காற்று பாலையைக் கடக்கின்றது. நீரோடையாலும் அது முடியும்”

[மண்ணில் சிக்காமல் பறந்து போய்விடும் காற்று. உலக இச்சைகளில் சிக்காமல் சென்றுவிடும் ஆன்மிகத்தின் மூச்சு. ‘அன்ஃபாசே ஈசா’ – இயேசுவின் மூச்சுகள் என்று சூஃபிகள் குறிப்பிடுவது அதனையே.]

நீரோடை மறுத்தது: “நான் மணல்களுடன் மோதிப் பார்க்கிறேன். ஆனால் அது என்னை உறிஞ்சி விடுகிறது. காற்று பறக்கிறது, எனவேதான் இந்தப் பாலையைக் கடக்க அதனால் முடிகிறது.”

[உள்ளம் தன் இயற்கைத் தன்மையை எடுத்துக்காட்டி சாக்கு சொல்கிறது. ‘ஆண்டவன் கண்ணைத் தந்து பார்வையையும் கொடுத்திருக்கிறான். பார்த்து ரசிக்காமல் என்ன செய்ய?’ என்பது போல்... எச்சரிக்கை. ‘தீயை அணைக்கிறேன் என்று மேலும் மேலும் அதன்மீது தீயை அள்ளி வீசாதே’ என்று மௌலானா ரூமி (ரஹ்) சொல்வதைக் கேள்.]

”உன் பழைய வழிமுறையில் நீ இந்தப் பாலையைக் கடக்க முடியாது. அப்படிச் செய்ய நினைத்தால் நீ மறைந்து விடுவாய் அல்லது சேறாகிவிடுவாய். உன் இலக்கிற்குச் சுமந்து செல்லும்படிக் காற்றிடம் உன்னை ஒப்படைத்துவிடு.”

[ஆன்மிகம் என்பது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும். சடங்குகளை நிறைவேற்றி வந்தது போல் இதில் செயல்பட முடியாது. ’ஃகிலாஃபே ஆதத்’ – பழக்க வழக்கங்களைப் புரட்டுதல் என்று சூஃபிகள் சொல்கிறார்கள்.]

”அது எப்படி?”

“நீ ஆவியாகிக் காற்றில் கலந்துவிட வேண்டும்”

[ஆவியாதல் ’ஃபனா’ என்னும் தன்னுணர்வின் அழிவு. ‘நான்’ என்னும் அகந்தையின் அழிவு. இறைக்காதல் என்னும் நெருப்பு இச்சைகளின் ஈரத்தை ஆவியாக்கி விடுகிறது. காற்றில் கலத்தல் – ஆன்மிக மூச்சில் உன் உள்ளத்தைக் கரைத்துவிடு. அல்லாஹு அல்லாஹ் என்று ஒவ்வொரு மூச்சும் இறைநாமத்தின் நாதம் ஆகிவிட வேண்டும். இதனை ‘பாஸே அன்ஃபாஸ்’ (மூச்சுக்களைப் பாதுகாத்தல்) என்று சூஃபிகள் சொல்கின்றனர்.]

இந்தச் சிந்தனை நீரோடைக்கு ஏற்புடையதாக இல்லை. அதுவரை, எதிலும் அது தன்னைப் பறிகொடுத்தது இல்லை. அது தன் சுயத்தன்மையை இழக்க விரும்பவில்லை. மேலும், அதனை ஒருமுறை இழந்துவிட்டால் அதை மீண்டும் அடைய முடியுமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்?

மணல் சொன்னது: “காற்று இவ்வாறு வேலை செய்கிறது. அது நீராவியை அள்ளியெடுத்து உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. பாலைவனத்திற்கு அப்பால் கொண்டு போய் கீழே விழச் செய்கிறது. மழையாகப் பொழிந்து, அந்த நீர் மீண்டும் ஓடையாகி விடுகிறது.”

[நீரோடை இதுவரை நீராகவே இருந்து வந்துள்ளது. அது வந்த வழியில் பல தோட்டங்களையும் தோப்புத் துரவுகளையும் செழிப்பாக்கி வந்திருக்கலாம். மக்களும் மாக்களும் தாகம் தணிப்பதற்குத் தண்ணீர் தந்து சேவை செய்திருக்கலாம். ஆனால் அது இன்னும் நீராகவேதான் இருக்கின்றது. அதாவது ’நான்’ என்பது உலகில் பல நிலைகளில் உதவியாகவும் இருக்கின்றது என்பது உண்மைதான். இதுவரை வழிபாட்டுச் சடங்குகளை வண்டி வண்டியாகச் செய்து வளமாக்கி வந்திருக்கலாம். சமூக சேவைகள் சகோதரத்துவப் பணிகள் என்றெல்லாம் செய்து வந்திருக்கலாம். ஆனால் உனது ‘நான்’ என்பது இன்னும் அப்படியே இருக்கிறது. இப்போது காலடி எடுத்து வைத்திருப்பது ஆன்மிகம் என்னும் களத்தில். இங்கே ’நான்’ என்னும் நீரோடை ஆவியாக்கப்பட வேண்டும்.

‘அந்த நீர் மீண்டும் ஓடையாகி விடுகிறது’ – நான் என்பது மீண்டும் நான் ஆகிவிடுகிறது. ஆனால் ஃபனா என்னும் அழிவின் பின் மீண்டும் அருளப்படும் நான் என்பது முற்றிலும் தன்மையால் வேறுபட்டது. Transformed Self என்று சொல்வது இதைத்தான். Trans – ஆவியாகிப் பாலையைக் கடத்தல். Formed – பழைய வடிவத்தை ஒத்ததாகப் புதிய வடிவம் கொடுக்கப்படுதல். முன்பு பல்கீஸ் அரசியின் நாட்டில் இருந்த அதே சிம்மாசனம் இப்போது சுலைமான் நபியின் அவையை அலங்கரிக்கின்றது. இப்போது அதன் மதிப்பே வேறு. ‘வேதத்தின் ஞானம் கொடுக்கப்பட்ட ஒருவர் அதனை இங்கே கொண்டு வந்தார்’ என்று குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதைச் சிந்திக்கவும். நான் என்னும் சிம்மாசனத்தை இம்மையிலிருது மறுமைக்கு எடுத்துச் செல்ல ஒரு ஞானகுரு வேண்டும். அந்த ’நான்’ – பேரமைதி மிக்க இதயமாக (கல்புன் சலீம்) இருக்கும்.

நீரோடை பல நிலங்களில் ஓடி வந்ததில் அதன் நீர் தூய்மையை இழந்துவிட்டது. இப்போது முற்றிலும் சேறாக மாறிவிடும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் அது ஆவியாகிக் காற்றில் பறந்து மலைகளின் உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் நீராகும்போது அது அழுக்குகளை விட்டும் விடுதலை அடைந்ததாக – மீண்டும் அதன் ஆதி நிலையில் இருந்தபடியே தூய்மையானதாக ஆகிவிடுகிறது. ‘குழந்தை போல் ஆதல்’ என்பது இதுதான். உள்ளம் வெள்ளை ஆகிவிட வேண்டும். மாசு மறுவற்ற தன்மை – மாசூமிய்யத் – உண்டாகிவிடுவது.

ஃபனா என்னும் அழிவு – இறைக்காதலில் அடைந்த அகமரணம் ’மவ்த்தே இஃக்தியாரி’ என்று சூஃபிகள் சொல்வது – மீண்டும் உயிர்த்தெழும் உள்ளம் இறைவனைக் கொண்டு வாழ்வதாகிறது. அந்நிலை ’பகா’ என்று சொல்லப்படுகிறது. (’பாகீ பில்லாஹ்’ – ’இறைவனைக் கொண்டு தரிப்பட்டிருப்பவர்’ என்னும் பெயரில் ஒரு சூஃபி மகான் இருந்தார்கள்.)

’காற்று இவ்வாறு வேலை செய்கிறது. அது நீராவியை அள்ளியெடுத்து உயரத்திற்குக் கொண்டு செல்கிறது’ – அதாவது ஆன்மிகத்தின் பயிற்சிகள் அகமாற்றத்தைத் தந்து படித்தரங்களை உயர்த்துகின்றன. (’தரஜாத்’ ‘மகாம்’ என்று சொல்லப்படுபவை.) சடங்கு வழிபாடுகள் எவ்வளவு எண்ணிக்கையில் இருப்பினும் அவற்றால் படித்தர உயர்வு உண்டாகாது. ‘ஞானம் (இல்ம்) இல்லாத மனிதனின் வழிபாடு செக்கு மாடு சுற்றுவதைப் போல்’ என்பது நபிமொழி ஒன்றின் கருத்து. அதாவது வருஷக் கணக்காக அந்த மாடு நடக்கிறது. ஆனால் இருந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட அது அப்பால் நகர்ந்திருக்காது!

நான் மீண்டும் நான் ஆகிவிடுவதை பற்றி ஒரு கவிதை. பீர் கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:
“நான் என்பதைப் புரட்டு
நான் என்று ஆகும்...
மூலமந்திரம் சொல்லும்
தெளிவான முகவரி இதுவே”
(அனா கோ பல்ட்டோ அனா ஹீ ஹே
யெஹீ ஹே சாஃப் பதா லா இலாஹ இல்லல்லாஹ்) 

அறபியில் நான் என்பதற்கு ‘அனா’ என்று சொல்லப்படும். அலிஃப்-நூன்-அலிஃப் என்னும் மூன்றெழுத்து. புரட்டிப் படித்தாலும் அதேதான். ANA. புரட்டினாலும் ANA. தமிழிலும் ’நான்’ என்பது அப்படி அமைந்துள்ளது எனலாம். Palindrome. NAAN. புரட்டினால் மீண்டும் NAAN. ஆங்கிலத்தில் அது ஒற்றை எழுத்துப் பாலிண்ட்ரோம். I என்பதை பக்கத்திலோ தலைகீழாகவோ புரட்டினாலும் மீண்டும் I வருகிறது. உருதுவில் சற்று வேறு மாதிரி. மைய்ன் (மீம்-யா-அலிஃப்). புரட்டினால் ‘னயம்’ – ‘நான் இல்லை’ என்று வரும்! அதனால்தான் பீர் கௌஸீ ஷாஹ் (ரஹ்) தன் உருதுக் கவிதையில் அனா என்னும் அறபிப் பதத்தைப் பயன்படுத்தி விஷயத்தை விளக்குகிறார்கள்.]

”இது உண்மைதான் என்று நான் எப்படி நம்புவது?”

”அது அப்படித்தான். நீ நம்பவில்லை எனில் ஒரு புதைமணலாகத்தான் ஆவாய். அதுவும்கூட பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால் ஒரு நீரோடையாக நீ இருப்பதைப் போல் அது இருக்காது.”

”இன்று நான் இருக்கும் இதே நீரோடையாகவே நான் இருந்துவிட முடியாதா?”

”இரண்டு நிலைகளிலுமே நீ இப்படியே இருப்பது சாத்தியமில்லை. உன்னுடைய சாரம்சங்கள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஒரு நீரோடை உருவாகிவிடும். இப்போது நீ என்னவாக அழைக்கப்படுகிறாயோ இந்நிலை எப்படி வந்தது? நீ உன் சாராம்சம் என்னவென்று அறிவாயா?”

இதைக் கேட்டதும் அந்த நீரோடையின் நினைவில் சில எதிரொலிகள் எழுந்தன. முன்பு எப்போதோ ஒரு காற்றின் கைகளில் தான் அல்லது தன்னின் ஏதோ ஒன்று இருந்தது நிழலோட்டம் போல் ஞாபகம் வந்தது. மீண்டும் அந்நிலையை அடைவதே செய்யவேண்டிய உண்மையான காரியம் என்பதை அது உணர்ந்தது.

[’அதமிய்யத்’ (இல்லாமை) என்பதுதான் படைப்புக்களின் எதார்த்த நிலை ஆகும்.

‘நிரந்தரத்தில் இருந்து
மனிதனின் மீது ஒரு நிலை இருக்கவில்லையா?
(அப்போது) அவன்
நினைக்கப்படும் ஒரு பொருளாகவே இல்லை’
(ஹல் அதா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி
லம் யகுன் ஷைஅம் மத்கூரா – அல்குர்ஆன் 76:1)

”ஒரு பொருளாக இல்லாதிருந்த மனிதனை
முன்னம் நாமே படைத்தோம் என்பதை
அவன் நினைவுகூர வேண்டாமா?”
(அவலா யத்குருல் இன்சானு அன்னா ஃகலக்னாஹு
மின் கப்லு வலம் யகு ஷைஆ – அல்குர்ஆன் 19:67)

இறைவன் தன் உள்ளமையில் படைப்புக்களை வெளியாக்கினான். அவ்வாறு அவன் அவற்றின் ரட்சகன் ஆனான். அந்த ஞாபகம் தூண்டப்பட வேண்டும்.]

அந்த நீரோடை ஆவியாகித் தன்னைக் காற்றின் கைகளில் ஒப்படைத்தது. காற்று அதனை அள்ளி எடுத்து பல மைல்களுக்கு அப்பால் கொண்டு சென்றது. மேலே மேலே தூக்கிக் கொண்டு போய் ஒரு மலைச் சிகரத்தின் சாரலில் மழையாகப் பொழிந்தது. முன்பு அந்த நீரோடையின் உள்ளத்தில் ஐயங்கள் இருந்தது. இந்த அனுபவத்தை அது துல்லியமாகப் பதிவு செய்துகொண்டது. இப்போது அது சொன்னது, “இப்போது நான் என் உண்மையான அடையாளத்தை அறிந்து கொண்டேன்.”

அந்த நீரோடை கற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பாலையின் மணல் சொன்னது, “நாம் அறிவோம், ஏனெனில் அன்றாடம் இது நடைபெருவதை நாம் காண்கிறோம். இப்பக்கத்தில் இருந்து அப்பக்கம் அந்த மலைச்சாரல் வரை நாமே பரந்து கிடக்கிறோம்.”

”வாழ்வின் நீரோடை தன் பயணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டிய பாதை மணலில் எழுதப்பட்டுள்ளது” என்று சூஃபிகள் சொல்வதன் பொருள் இதுவே.

இக்கதை குறித்து இத்ரீஸ் ஷாஹ் எழுதியிருக்கும் குறிப்பு:

“இந்த அழகிய கதை பல மொழிகளில் பேச்சு வழக்கில் உள்ளது. குறிப்பாக தர்வேஷ்களிடமும் அவர்களின் மாணவர்களிடமும் புழக்கத்தில் உள்ளது. சர் ஃபேர்ஃபாக்ஸ் கார்ட்ரைட் 1899-ல் இங்கிலாந்தில் வெளியிட்ட “Mystic Rose from the Garden of the King” என்னும் நூலில் இக்கதை இடம்பெற்றுள்ளது. இங்கே நாம் கேட்ட இக்கதைப் பிரதி 1870-ல் இறந்த அவாத் அஃபீஃபீ தூனிஸி அவர்கள் சொன்னது.”  

3 comments:

  1. Alhamdulillah...
    amma salam sonnagga...
    innum naraya articles yether pakirom...
    romba naala articles podelene kavalai pattom
    Insya Allah...melum2 naraya post pannegge :)

    ReplyDelete
  2. ஸலாமலைக்கும் பாய் சாப், அனா என்ற அரபி வார்த்தையை திருப்பி படித்தாலும் அதே வார்த்தை வருவது போல் (தமிழில் விகடகவி போல்) குரான் ஷரீஃபில் ஏராளமானவை இருக்கின்றன என்று எங்கள் ஹஜ்ரத் பேச்சில் கேட்டிருக்கிறேன்...

    ReplyDelete