Thursday, July 5, 2012

கோல்மன் பார்க்ஸ் - 2


கோல்மன் பார்க்ஸ் தன்னுடைய முக்கியமான நூலான “THE ESSENTIAL RUMI”-ஐ ரூமியின் குருநாதரான ஷம்சுத்தீன் தப்ரேஸி (ரஹ்) அவர்களுக்கும், தன் குருநாதரான பாவா முஹையத்தீன் அவர்களுக்கும் அர்ப்பணம் செய்துள்ளார். (“for the compassionate heart within the mind, the light within the body, for the sun, Shams of Tabriz, and Bawa Muhaiyaddeen.”) எனினும், பாவா முஹையுத்தீன் அவர்களைச் சந்திப்பதற்கு முன் கோல்மன் பார்க்ஸ் வேறொரு ஆன்மிக ஆளுமையைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஓஷோ!


1988-ல் அவர் புனேவில் இருக்கும் ஓஷோ கம்யூனுக்கு வந்திருக்கிறார். அப்போது ஓஷோ ஜென் ஞானியான ரின்ஸாய் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்த காலம். ரூமியின் மீது ஆழமான காதல் கொண்டிருந்த பார்க்ஸிடம், சூஃபித்துவம் வெறும் ஆரம்ப நிலை மட்டுமே என்றும் சூஃபித்துவத்தில் இருந்து ஜென்னுக்குச் செல் என்றும் ஓஷோ அறிவுரை சொல்கிறார். டிபிக்கல் ஓஷோ பாணி! (RINZAI: MASTER OF IRRATIONAL Chapter#2)

சூஃபி ஞானி ஹக்கீம் சனாயீ (ரஹ்) அவர்களின் ‘ஹதீக்கத்துல் ஹகீக்கத்’ நூலில் உள்ள கவிதைகள் சிலவற்றைத் தன் பாணியில் ஓஷோ விளக்கியுள்ள “UNIO MYSTICA” என்னும் நூலுக்கு கோல்மன் பார்க்ஸ் முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறார். “STERN MYSTICS AND SECRET GOVERNMENTAL MURDER” என்பது அதன் தலைப்பு! நவம்பர் 1985-ல் ஒக்லஹாமா சிறைச்சாலையில் ஓஷோ அடைக்கப்பட்டிருந்த போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ரொனால்டு ரீகனின் அரசு அவருக்குத் தாலியம் தனிமத்தினால் ஆன மெதுவிஷம் கொடுத்தது என்பதைத்தான் பார்க்ஸ் அப்படிக் குறிப்பிடுகிறார். புனே ஆசிரமத்தில் ஓஷோவுடன் தான் உரையாடியதைக் குறிப்பிடும் அவர் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்:

“மௌலானா ரூமியின் கவிதைகளை மொழிபெயர்ப்பது பற்றி நான் ஓஷோவிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஊக்கப்படுத்தினார். அதேசமயம், ‘உன் முதுகை நீ காண இரண்டு கண்ணாடிகள் வேண்டும்’ என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்கு அப்போது விளங்கவில்லை. பின்னால் தெரிந்து கொண்டேன், முதல் கண்ணாடி என்பது அவர்தான், இரண்டாம் கண்ணாடி என்று அவர் சொன்னது பாவா முஹையுத்தீனை!”



கோல்மன் பார்க்ஸ் சொல்லும் இன்னொரு சுவையான நிகழ்ச்சி அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது நடந்தது. அவருடைய வாயாலேயே கேட்போம்:
“சமீபம் வரை என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சிறுவர் ஜோக் உண்டு. ஆறு வயதில் நான் ஒரு புவியியல் கிறுக்காக இருந்தேன். 1943-ல் வெளியான Rand McNally Atlas-ல் உள்ள எல்லா நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களையும் நான் மனப்பாடம் செய்திருந்தேன். ச்சட்டனூகாவில் நான் ஒரு மாணவர் விடுதியில் வளர்ந்தேன். அங்கே என் ஆசிரியர்கள் என் விசித்திரமான திறமையை அவ்வப்போது சோதித்துக் கொண்டே இருந்தார்கள். நடைவாசலின் திருப்பத்தில் வரும் ஆசிரியர் ஒருவர் திடீரென்று “பல்கேரியா” என்று கூவுவார். நான் சற்றும் தாமதிக்காமல் “சோஃபியா” என்று விடை சொல்வேன். என்னை யாரும் தோற்கடிக்க முடியவில்லை. ஆனால், ஒருநாள் அந்த மகா கிண்டல்காரரான ஜேம்ஸ் பென்னிங்டன் அவருடைய லத்தீன் வகுப்பறையின் கீழே இறங்கி வந்து என்னைப் பார்த்து, தலைநகரே இல்லாத ஒரு நாட்டின் பெயரைக் கூறினார்: “கப்படோகியா.” அப்போது என் முகம் போன போக்கு! நான் அறியாத ஒன்று எனக்குப் பெயர் வைத்துவிட்டது! ஆம், அப்போதிலிருந்து நான் “கப்படோகியா” என்றும் சுருக்கமாக “கப்” என்றும் அழைக்கப்படலானேன்.

“சில வருடங்களுக்கு முன் என் பால்ய வயதுப் பட்டப் பெயர் மீண்டும் என் நினைவில் பளிச்சிட்டது. அந்த நிலப்பகுதியின் வரலாற்றுப் பின்னணியை நான் அறிந்த போது நான் கிட்டத்தட்ட மயங்கி விழுந்து விட்டேன். ஏனெனில் அந்த அனடோலியன் நிலப்பகுதியின் மைய நகரின் பெயர் ஐகோனியம். அதாவது, ’கூன்யா.’ மௌலானா ரூமி அவர்கள் வாழ்ந்து அடக்கப்பட்டுள்ள இடம்! ரூமி என்றால் ‘ரோமானிய அனடோலியாவைச் சேர்ந்தவர்’ என்றுதான் பொருள். ரூமியுடன் எனக்கு ஏதோ தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மௌலானாவின் கவிதைகள் கடந்த இருபது ஆண்டுகளாக என் வாழ்வின் பெரும்பகுதியாக விளங்குகின்றன. அவை எனக்குப் பல நல்ல நண்பர்களையும் இனிமையான வாய்ப்புக்களையும் தந்துள்ளன. ஆனால் அத்தகைய வியப்பூட்டும் விரிவும் ஆழமும் கொண்ட கவிஞருக்கு பல மொழிபெயர்ப்பாளர்களும் வியாக்கியானிகளும் தேவை. சூஃபிக் கவிதை என்பது மொழியின் மூடுபனிக்குள் மறைந்திருக்கும் ஆப்பிள் தோட்டத்தை நமக்குக் காட்ட முயல்கிறது (இது மௌலானா ரூமியின் உவமைதான்!) என் இந்த மொழிபெயர்ப்புகள் அந்த மூடுபனியை மேலும் அடர்த்தியாக்கி விடாது என்று நம்புகிறேன்; அதை உருக்கி மெலிதாக்கும் என்று நம்புகிறேன்.” (THE ESSENTIAL RUMI, Page:291).

உண்மையில், கோல்மன் பார்க்ஸின் மொழிபெயர்ப்புப் பணியே அந்த மூடுபனியை அவர் தனக்குத் தானே மெலிதாக்கி ஞானத்தின் ஆப்பிள் தோட்டத்தைத் தெளிவாக தரிசிப்பதற்குச் செய்யும் தியானம்தான். அவரது இந்தப் பணியில் மிக முக்கியமான மூன்று நூற்களாகக் கருதப்படுபவை “THE ESSENTIAL RUMI” (1995), “THE SOUL OF RUMI” (2001) மற்றும் “THE BOOK OF LOVE” (2003). இந்த நூற்கள் வெளிவந்த காலகட்டங்களில் கோல்மனின் அகநிலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும், அவரின் மொழிபெயர்ப்பு மாற்றம் அடைந்திருப்பதையும் நம்மால் காண முடிகிறது.


மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் ஆன்மிகச் சிந்தனைப் பள்ளியின் சாராம்சம் இறைக்காதல்தான். இதனைக் கோல்மன் பார்கஸே இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சூஃபிகள் ரூமி (ரஹ்) (1207-1273) அவர்களை ‘குத்புல் இஷ்க்’ (காதலின் அச்சாணி) என்றும், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) (இறப்பு 1166) அவர்களை ‘குத்புல் குத்ரத்’ (ஆற்றலின் அச்சாணி) என்றும், இப்னுல் அரபி (ரஹ்) (1165-1249) அவர்களை ’குத்புல் இர்ஃபான்’ (மெய்ஞ்ஞானத்தின் அச்சாணி) என்றும் அழைக்கின்றனர்.” (’THE BOOK OF LOVE’, INTRODUCTION: THE MAGNIFICENT REGIONS OF THE HEART, Page:xxi)

கோல்மன் பார்க்ஸின் அத்தனை நூல்களிலும் காதலும் பரவசமும் (LOVE AND ECSTASY) மையக் கருத்தாக அமைந்துள்ளன. அவருடைய ஆங்கிலக் கவியாக்கங்கள் இந்த இரு உணர்வுகளால் ஊறியுள்ள கனிகளாக இருக்கின்றன. எனவே இவை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அமெரிக்காவில் மிகவும் விரும்பிப் படிக்கப் படும் கவிஞராக மௌலானா ரூமியை அவை ஆக்கியுள்ளன. யுனெஸ்கோ 2007-ஆம் ஆண்டினை ‘மௌலானா ரூமியின் ஆண்டு’ என்று அறிவித்ததற்கான சூழ்நிலை உருவானதில் கோல்மன் பார்க்ஸின் பணிக்கு முக்கியமான பங்கு உண்டு.

அமெரிக்க மனநிலை நம்பகமானதல்ல. அது இப்படித்தான் அவ்வப்போது யார் மீதாவது பைத்தியம் பிடித்துக் கிடக்கும். ஆனால் அது நீடிக்காது. விரைவில் இன்னொரு பைத்திய நிலைக்கு அது மாறிவிடும். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உமர் ஃகய்யாம் மீது ஒரு பித்து நிலை அமெரிக்கர்களிடம் உண்டானது. எங்கே பார்த்தாலும் உமர் ஃகய்யாம் கவிதைகள் தென்பட்டன. இந்த நிலை சில ஆண்டுகள்தான் இருந்தது. பிறகு அவர் சுத்தமாக மறக்கப்பட்டார். உமர் ஃகய்யாமின் உண்மையான அகம் கூட அல்ல அது. அவரின் பெயரால், அவரின் கவிதைகளைத் திரித்து ஃபிட்ஜெரால்டு உருவாக்கிய தோற்றம் அது. ஃபிட்ஜெரால்டு செய்த அதே வேலையை கோல்மன் பார்க்ஸும் செய்துவிடுவாரோ என்னும் சந்தேகம் பலருக்கும், குறிப்பாக ஃபார்ஸி மொழி பேசப்படும் நாடுகளில் உள்ள ரூமி ரசிகர்களுக்கு உள்ளது.

இதற்கு நாம் கோல்மன் பார்க்ஸிடம் பெறும் விடை, நல்ல வேளையாக, ‘இல்லை’ என்பதுதான். ஃபிட்ஜெரால்டுக்கு சூஃபித்துவப் பின்னணியே தெரியாது என்பதையும் கோல்மன் பார்க்ஸ் சூஃபி குருநாதர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். (பாவா முஹையுத்தீனுடன் ஒன்பது ஆண்டுகள்). எனவெ, ரூமி ‘காதல்’ என்றும் ‘பரவசம்’ என்றும் சொல்லும் போது அவை எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகின்றன என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார். அதே அர்த்தத்தில்தான் தன் மொழிபெயர்ப்புக்களில் வெளிபத்டுத்துகிறார்.

””THE ESSENTIAL RUMI” நூலினை நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் வாசித்தபோது அது என்னில் ஏற்படுத்திய மாற்றம் மிகவும் அற்புதமானது. அன்றாட வாழ்வின் எளிமையான நிகழ்ச்சிகளைக் கூட மிகவும் ரசனையுடன் பார்ப்பதற்கு, அதில் இறைவனின் கருணை பொங்குவதைக் காண்பதற்கு அந்நூல் கற்றுத்தந்ததது. ஐம்புலன்களில் நாம் அனுபவிக்கும் உணர்வுகளில் இறைவனின் கருணையைச் சுவைப்பதற்குத் தூண்டும் நூலாக அது இருந்தது. இதயத்தில் இரக்கத்தின் நீர்ச்சுனையைச் சுரக்க வைத்தது. ’நீங்கள் மிகவும் மென்மையாக மாறிப் போய்விட்டீர்கள்’ என்று ஒரு நண்பர் சொன்னார். இதற்கெல்லாம் மௌலானா ரூமியின் ஞானம்தான் காரணம் என்றாலும், அந்த ஞான பானத்தை நான் அப்போது கோல்மன் பார்க்ஸின் மொழிபெயர்ப்பு என்னும் கிண்ணத்தில்தான் பருகியிருந்தேன். அந்தக் கிண்ணம்தான் எத்தனை அழகானது!

கோல்மனின் மொழிபெயர்ப்புக்கள், ’இவ்வுலக வாழ்க்கை மாயம் செய்யும் அற்ப சுகமே அன்றி வேறில்லை’ (’வமல் ஹயாத்துத் துன்யா இல்லா மதாஉல் குரூர்’ – 3:185; 57:20) என்னும் திருக்குர்ஆன் வசனத்தின் கருத்திற்கும் ”இஸ்லாத்தில் துறவறம் இல்லை” (‘லா ரஹ்பானிய்யத் ஃபில் இஸ்லாம்’) என்னும் நபிமொழியின் கருத்திற்குமான இடைவெளியில் உலவுவதாக நான் உணர்கிறேன்.


இதில் எந்த அளவுக்குக் கோல்மன் பார்க்ஸ் வளர்ந்து வந்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் அவருடைய முதல் நூலுக்கும் மூன்றாம் நூலுக்கும் இடையே ஒரு மாற்றம் இருப்பதை நாம் காண்கிறோம். அதனை அவரே சொல்கிறார்:
“பீர் விலாயத் ஃகான் சமீபத்தில் என்னிடம் சொன்னார், ‘உங்கள் ஆரம்ப ரூமி நூல்களில் காமம் அதிகமாக இருந்தது.’ அவர் சொன்னது சரிதான். என் முதல் ரூமி மொழிபெயர்ப்பில் அந்த சக்தி சற்று அதிகமாகவே இருந்தது, குறிப்பாக சில நாலடிக் கவிதைகளில். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய நீரால் நானே மிகவும் ஈரமாகத்தான் இருந்தேன். அப்போது என் வயது முப்பத்தொன்பது. இப்போது என் வயது அறுபத்தைந்து. விஷயங்கள் மாறுகின்றன; அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில் உயிருடன் உள்ளது எதுவும் மாறத்தான் செய்யும்.” (”RUMI: THE BOOK OF LOVE”, CHAPTER#1: SPONTANEOUS WANDERING, Page.1)

என்றபோதும், மனிதக் காதல் என்பது இறைக்காதலுக்கு இட்டுச்செல்வதாக இருக்க வேண்டும் என்றும், உண்மையில் காதல் என்பது இறைவனை அடையும் வழிதான் என்பதையும் கோல்மன் பார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர் சொல்கிறார்: “நாம் ரூமியின் அறிதலுக்கு, அவர் வழியிலான காதலுக்குத் தயாராகக் கனிந்திருக்கிறோமோ என்னவோ? நான் அப்படியே நம்புகிறேன். ’தி கெஸ்ட் ஹவுஸ்’ போன்ற கவிதைகளைத் தாங்கள் விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு வரும் பன்னிரண்டு வயதுச் சிறுவர்களைச் சந்திப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எல்லா விதமான போலிக் காதல் கதைகளைக் கொண்டு ஊடகங்களும் சமூகமும் அவர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியுள்ளதை அவர்கள் உணர்கிறார்கள். ரூமி அவர்களுக்குக் காதல் பற்றிய உண்மையைச் சொல்ல முயல்வதை அவர்கள் அறிகிறார்கள். அதை அவர்கள் வரவேற்கிறார்கள். தன்னுள் மூழ்குவது, காதலில், தியானத்தில், கனவுகளில் ஞான தரிசனம் பெறுவது ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைக் கேட்பதற்கான காலம் வந்துவிட்டது போலும்.” (“RUMI: THE BOOK OF LOVE”, PREFACE, Pages: xv,xvi)


தன் நூலுக்கு “RUMI: THE BOOK OF LOVE” என்னும் பெயரைத் தான் சூட்டியதற்கும் ஒரு பின்னணி இருப்பதை கோல்மன் பார்க்ஸ் சொல்கிறார். நியூ ஜெர்ஸி மாநிலத்தின் நெவார்க் நகரிலிருந்து அறுவர் இசைக் குழு ஒன்று இருந்தது. அதன் பெயர் ’மோனோடோன்ஸ்’ (MONOTONES). அவர்கள் 1957-ல் வெளியிட்ட ஒரு இசைப்பேழையில் உள்ள ஒரு பாடலின் பல்லவி “ நான் வியக்கிறேன், காதலின் நூலை எழுதியவர் யார்?” (I WONDER WONDER WHOM / WHO WROTE THE BOOK OF LOVE?) என்னும் கேள்வியை எழுப்பியிருந்தது. இருபது வயது இளைஞராக அந்தப் பாடலைக் கேட்டபடி கோல்மன் தலையாட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். 2003-ல் அவர் தன் ரூமி மொழிபெயர்ப்பு நூலுக்கு அதையே தலைப்பாக வைத்து விடை சொல்கிறார்: “நியூ ஜெர்ஸியின் மோனோடோன்ஸ்  1957-ல் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். இந்த நூலின் அட்டையில் என் பெயர் இருக்கலாம், ஆனால் அவர்கள் தேடிக்கொண்டிருந்த நபர் நான் அல்ல. ஜலாலுத்தீன் ரூமிதான் காதலின் நூலை எழுதியவர். இந்த மொழிபெயர்ப்பில் காணப்படும் சத்தியமும் அழகும் அவரின் காதலில் இருந்து வந்தவை. பிழைகள் இருப்பின் அவை எல்லாம் என்னுடையவை.” (”RUMI: THE BOOK OF LOVE”, Page:183)

மௌலானா ரூமி எழுதிய அந்தக் காதல் நூல் “மஸ்னவி ஷரீஃப்” ஆகும். அந்த ஆப்பிள் தோட்டத்தில் இருந்து தன் சிறு கையால் கொய்துச் சுவைத்த கனிகளைத்தான் கோல்மன் நமக்கும் தருகிறார். “RUMI: THE BOOK OF LOVE” என்னும் நூலுக்கு அவர் தந்திருக்கும் உபத்தலைப்பு “POEMS OF ECSTASY AND LONGING” என்பதாகும். இந்நூலில் வாஸ்த்தவத்தில் பதினைந்தே புதிய மொழிபெயர்ப்புக் கவிதைகள்தான் உள்ளன. அவருடைய ஆரம்பக் கால நூல்களில் முக்கியமானது ஆன “THE ESSENTIAL RUMI”-யில் உள்ள கவிதைகளையே இதில் மீண்டும் பதிப்பித்திருக்கிறார். ஆனால் அவற்றின் சில பகுதிகளை மட்டும் ஹைலைட் செய்து, அத்தியாயங்களுக்கு வேறு தலைப்புக்கள் கொடுத்து அவற்றுக்குப் புதிய வெளிச்சத்தில் விளக்கங்களைத் தந்திருக்கிறார்.

“சூஃபிசத்தில் இருந்து ஜென் நோக்கி நகர்வாயாக” என்று புனே கம்யூனில் ஓஷோ தன்னிடம் சொன்னதை கோல்மன் பார்க்ஸ் மறந்திருக்க முடியாது. அது மிக ஆழமாக அவருடைய மனதில் வேலை செய்திருக்க வேண்டும். 2000-ல் நான் “THE ESSENTIAL RUMI”-யைப் படித்த போதே அதில் பல இடங்களில் ஓஷோவின் பார்வைகள் இருப்பதைக் கண்டேன். ஆனால் இத்தனை வருடங்களில், கோல்மனின் மையப் புள்ளி மௌலானா ரூமியின் சூஃபித்துவம்தான். அதை விட்டும் அவர் நகர முடியாது. தான் நேரில் சந்தித்த பாவா முஹையுத்தீனிடம் தான் ரூமியையே கண்டதாக அவர் சொல்கிறார். ஆனால், “RUMI: THE BOOK OF LOVE”-இல் அவர் மௌலானா ரூமியின் கருத்துக்களைப் பிற சமயங்களின் ஆன்மிக நெறிகளுடனும் (குறிப்பாக ஜென் மற்றும் தாவோ) ஐரோப்பிய, அமெரிக்க ஆன்மிகக் கவிஞர்களுடனும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். தன் ஆங்கில இலக்கியப் பயிற்சி மற்றும் உலகச் சமய வாசிப்பு ஆகியவற்றின் திசையில் இருந்து அவர் ரூமியைப் புரிந்து கொள்கிறார் எனில், அவரின் நூலை வாசிக்கும் நான் சூஃபித்துவத்தின் கோணத்தில் இருந்து ஆங்கிலக் கவிஞர்களையும் பிற ஆன்மிக நெறிகளையும் புரிந்துகொள்வது நிகழ்கிறது!

உதாரணமாக, ’ஞானப் பாதையில் நடந்து கொண்டே இரு, ஓய்ந்து விடாதே. ஒரு படித்தரத்தில் நின்றுவிடாதே. அதிலிருந்து அடுத்தப் படித்தரம் (மகாம்) நோக்கிச் செல்” என்னும் சூஃபி அறிவுரையை கோல்மன் பார்க்ஸ் மேற்கோள் காட்டும் ஜென் கவிஞர் ’நனாவோ சகாகி’ (NANAO SAKAKI)-யின் ஓர் அழகான ஜென் கவிதையில் காணமுடிகிறது:
“அசிங்கக் கதைகளைக் கேட்டால்
உன் செவிகளைக் கழுவு
மோசமானதைப் பார்த்தால்
உன் கண்களைக் கழுவு
தீய சிந்தனைகள் வந்தால்
உன் மனதைக் கழுவு
ஆனால்
உன் கால்களை வைத்திரு
சேற்றில் நனைந்ததாக”

’பரவசம்’ (ECSTASY) என்னும் அடை மொழியை ரூமியின் கவிதைகளுக்கு லேபிலாக ஒட்டும் கோல்மன் பார்க்ஸ் அதனை எந்த அர்த்தத்தில் சொல்கிறார்? என்னும் கேள்வி எழாமல் இல்லை. இறைக்காதலால் உண்டாகும் பரவசம் அது. இறைவனின் கருணையை எப்போதும் உணர்ந்து கொண்டிருப்பதால் வரும் பரவசம் அது. இறைவனை ஒவ்வொரு பொருளிலும் தரிசிப்பதால் உண்டாகும் பரவசம் அது.

காதல் மற்றும் பரவசத்தை மட்டுமே முன்னிலைப் படுத்திப் பேசுவதால் மௌலானா ரூமியின் கராரான பார்வைகளைக் கோல்மன் பார்க்ஸ் மறுதலித்து விட்டார் என்று சொல்லிவிட முடியாது. ஞான உபதேசம் செய்யும் கவிதைகளின் தொகுப்பாக அவர் ஒரு தனி மொழிபெயர்ப்புத் தொகுதியை வெளியிட்டார், “FEELING THE SHOULDER OF THE LION.” அதில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் கோல்மனின் பிற ரூமி தொகுதிகளில் காணலாகும் கனிவான காதலும் அதன் பரவசமும் இல்லை. இவை நம் தன்முனைப்பை இரக்கமின்றி வெட்டும் கூர்வாளாகப் பாய்கின்றன.

இருந்தபோதும், கோல்மனின் பெரும்பான்மையான ரூமி தொகுதிகள் காதல் மற்றும் பரவசம் என்னும் இரு பொருண்மைகளின் வழியாக சூஃபித்துவத்தை வெளிப்படுத்துபவையே. அந்தக் கவிதைகள் அமெரிக்காவில் பெற்ற ஆச்சர்யமான வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் ஆர்வத்திற்குமான காரணமாகக் கோல்மன் சொல்வதைக் கவனிக்க வேண்டும். ‘YOGA JOURNAL’ என்னும் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இப்படிச் சொன்னார்:
யோகா ஜர்னல்: ரூமியின் கவிதைகள் அடைந்துள்ள பிரபல்யத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கோல்மன் பார்க்ஸ்: இது வெற்றுப் பரபரப்பு அல்ல. ஊட்டச்சத்துக்கு ஏங்கும் மேற்கத்திய மனத்தின் ஒரு தேவையை அது நிறைவேற்றுகின்றது. மேற்கு மனத்தில் பரவசக் கலைகளுக்கான ஒரு பசி இருப்பதாக ரொபர்ட் ப்ளை உணருகிறார். புதிய ஏற்பாட்டில் இருந்து பெரும்பான்மையான பரவசங்கள் நீக்கப்பட்டுவிட்டன. இது கிறித்துவ மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களில் பரவச ஞானத்திற்கான ஒரு ஏக்கத்தை உண்டாக்கிவிட்டது. இது ஒரு சுவையான கோட்பாடு. ஆனால், மக்கள் தங்கள் படுக்கை அறைகளிலும், அலுவலகங்களிலும், விமான நிலையங்களிலும் என் நூல்களை (ரூமி மொழிபெயர்ப்புக்களை) ஏன் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது!

காதலின் உண்மையான முகவரியை மௌலானா ரூமியின் கவிதைகள் காட்டுவது போலவே பரவசம் என்பதன் உண்மையான அர்த்தத்தையும் அவை நமக்குச் சொல்கின்றன. கண்மூடித்தனமான காமத்திலும், புலனின்பங்களிலும் வீழ்ந்து புரண்டு சீரழிந்து போன மேற்கத்திய மனத்திற்கு இந்த சூஃபித்துவ தரிசனங்கள் மருந்தாக உள்ளன. கோல்மன் பார்க்ஸின் மகத்தான பணி அந்த தரிசனங்களை அமெரிக்க மக்களுக்கு அவர்கள் ரசிக்கும் மொழிநடையில் தந்து வாழ்வின் அர்த்தம் என்ன என்று அவர்களை யோசிக்க வைத்ததுதான்.

‘ஒவ்வொரு பொருளிலும் இறைவன் வெளிப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு பொருளும் அவனைக் காட்டும் கண்ணாடியாகவே இருக்கின்றது’ என்று சூஃபிகள் கூறுகின்றனர். அந்த தரிசனத்தில்தான் மௌலானா ரூமி சொல்லும் பரவசம் பிறக்கிறது. “RUMI: THE BOOK OF LOVE”-ஐ ஆறு வருடங்கள் கழித்து இரண்டு நாட்களுக்கு முன் எடுத்துப் புரட்டிய போது அதில் கோல்மன் எழுதியிருந்த ஒரு வரி மின்னலாக இதயத்தில் பாய்ந்து பரவசப் படுத்தியது: “காதலியின் ஒவ்வொரு அம்சத்தையும், நுணுக்கமான குறிப்புக்களையும், காதலிக்காத காதல் காதல் அல்ல” (“Love is not love that doesn’t love the details of the beloved, the minute particulars.” (Page:18))

பரவசம் என்பது பெரிய விஷயங்களில் இருந்து மட்டுமே உண்டாவதில்லை. ஒரு எறும்பின் உடற்கூறுகளில் இறைவன் வைத்துள்ள அதிசயங்களை, ஒரு அருகம்புல்லில் அவனின் அழகு வெளிப்பட்டுச் சுடர்வதைக் காண முடியாத கண்களுக்குப் பரவசம் என்னும் உணர்வு ஒருபோதும் வாய்க்கப் போவதில்லை. குழந்தைகளிடம் இயல்பாகவே அந்தப் பரவச உணர்வு அமைந்துள்ளது. ஆனால் அந்த அதிசயத்தின் வாசலை நம் பாட நூல்களும், வளர்ப்பு முறைகளும் இழுத்துச் சாத்திப் பூட்டிவிடுகின்றன.

கோல்மன் பார்க்ஸின் கவிப்பணி இத்தனை மகத்தான வெற்றி பெற்றதற்கு, அவரின் கவித்திறமைக்குக் காரணம் அவரின் பட்டப் படிப்புக்கள் அல்ல, அவரின் கல்விப் பயிற்சிகள் அல்ல. சிறுவனாக அவர் இருந்த போது இயற்கையின் அழகில் மனம் தோய்ந்து பரவசம் அடைந்த அவரின் சுயத்திற்கு அவரின் குடும்பம் தந்த ஆதரவுதான்.

“ரூமியை மொழிபெயர்ப்பதற்கான உங்கள் தகுதி என்ன?” என்று பில் மோயர்ஸ் ஒரு நேர்காணலில் கேட்கும் கேள்விக்கு கோல்மன் பார்க்ஸ் தரும் விடை இது:
“என் சுயத்தின் இந்தப் பரவசப் பகுதியுடன் எப்போதுமே எனக்குத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த வாழ்க்கை எனக்கு ஒரு வரம் என்பதாகவே நான் எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். நிறைய கருணை என்னை நோக்கி வந்திருப்பதாக உணர்கிறேன். ஏப்ரல் மாதத்தில் சில நாட்கள், தங்கமயமான ஒளியுடன் சூரியன் சாயும்போது, நான் என்னையே அணைத்துக் கொண்டு தரையில் உருளுவேன். அது சரியானதுதான் என்று கருதுகின்ற குடும்பத்தில் நான் வளர்ந்தேன். அதில் யாரும் எந்தக் கணத்திலும் ஒரு பாடலோ ஆடலோ அல்லது வேறெதுவுமோ நிகழ்த்த முடிந்தது. அத்தகைய சூழல் பரவச தரிசனத்திற்கான பேருதவியாக இருந்தது.”

இதே சூழலை இப்போது அவர் தன் பேத்திக்கும் தந்துகொண்டிருக்கிறார். “நீங்கள் குறிப்பிடும் பரவசம் என்பது என்ன?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஒரு சம்பவத்தைச் சொல்லி விளக்குகிறார்: “ஒருநாள் நான் என் பேத்தியுடன் இருந்தேன். நாங்கள் தோட்டத்திற்குச் சென்று ஒவ்வொரு கல்லாகப் புறட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம் – அவற்றுக்கு அடியில் ஏதேனும் வியப்பூட்டுவதாக இருக்கக்கூடும் என்று தேடிக் கொண்டிருந்தோம். தெருவில் போய்க்கொண்டிருந்த ஒரு பெண் எங்களைப் பார்த்துவிட்டு ‘நீங்கள் அவளை உருப்பட விடாமல் குட்டிச்சுவராக்கப் போகிறீர்கள்’ என்று கத்தினார். இந்தப் பிரபஞ்சம் மிகவும் அற்புதமானது. அதில் நாம் அனைவருமே உருப்படாத குட்டிச் சுவர்கள்தான். அதில் தவறேதும் இல்லை. ரூமி சொன்னார்கள், ‘கண்கள் பார்ப்பதற்கு இருக்கின்றன, சுயம் இங்கே கொண்டாட வந்துள்ளது.’”

“பறவையின் பாடல்
வீசும் காற்று
தண்ணீரின் முகம்
ஒவ்வொரு பூவாய்
நறுமணம் நினைந்து
அறிகிறேன் நான்
அருகில் நீ இருப்பதை”

பதின்மூன்றாம் நூற்றாண்டின் பாரசீகத் தோட்டத்தில் மௌலானா ரூமியுடன் நம்மை உலவ வைக்கிறார் அமெரிக்காவின் கோல்மன் பார்க்ஸ். எழுதி வைக்கப்பட்ட விதிதான் இது!

3 comments:

  1. http://www.livingdialogues.com/Coleman_Barks.html

    ReplyDelete
  2. http://personallifemedia.com/guests/605-coleman-barks

    ReplyDelete
  3. http://www.salon.com/2001/10/12/barks/

    ReplyDelete