Thursday, June 28, 2012

தன்னை மறத்தல்



இசையில் மூழ்கியிருந்தேன். மடிக்கணினியில் இசை கேட்கும் பழக்கம் கடந்த சில வருடங்களாக. கேட்கும்போது எனக்கு மட்டுமே கேட்கும்படி ஹெட்ஃபோன் அணிந்துகொள்வேன். ஏனெனில் நான் கேட்கும் பாடல்கள் ஜனரஞ்சகமானவை அல்ல. சூஃபி கவ்வாலிப் பாடல்கள் அவை.

நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் பாடிய ஒரு கவ்வாலிதான் அப்போது நான் கேட்டுக்கொண்டிருந்தது. அவரின் நூற்றுக்கணக்கான பாடல்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். அதில் ஏதோ ஒன்றில் மனம் கரைந்துகொண்டிருந்தேன். என் மச்சான் என்னைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவர் என் சகதர்மினியிடம் தன் குழப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். அதாவது, ‘இபாதத் (இறைபக்தி) ஆனவர் என்று பெயரெடுத்த ஒருவர் இசையை ரசிப்பதா?’

இந்தக் கேள்வி முஸ்லிம் சமூகத்தில் விசித்திரமான ஒன்றல்ல!

’இறைபக்தியாளர் நிச்சயமாக இசையை வெறுப்பார்’ என்பதே அதன் பொது புத்தியில் பதியப்பட்டுள்ள பார்வை.

என் மச்சான் சொன்னதை என்னிடம் என் சகதர்மினி தெரிவிக்கவே அவருடன் இது பற்றி அரைமணி நேரம் பேசினேன். இசை, கவிதை மற்றும் பிற கலைகள் மீதான இஸ்லாமியப் பார்வை என்ன என்பது பற்றி அந்த உரையாடல் அமைந்திருந்தது. குறிப்பாக இசையைப் பற்றி விரிவாகப் பேச முற்பட்டேன்.

இசை பற்றி வந்துள்ள அனைத்து நபிமொழிகளையும் ஒருசேர முன்வைத்துக் கொண்டு யோசிக்க வேண்டும் என்று சொன்னேன். அப்படி யோசித்தவர்களில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ‘கிதாபுஸ் ஸிமா’ (இசை நூல்) என்று ஒரு தனி நூலே எழுதியிருப்பதைக் குறிப்பிட்டேன். அதன் தமிழாக்கம் ‘இஸ்லாமும் இன்னிசையும்’ என்னும் தலைப்பில் அப்துல் வஹ்ஹாப் பாகவி (ரஹ்) அவர்களால் செய்யப்பட்டுள்ளதையும் சொன்னேன்.
இமாம் கஸ்ஸாலி அவர்கள் இசை குறித்துச் சொல்லும் ஒரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது:

“ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் என்ன உள்ளதோ அதையே இசை பற்றி எரியச் செய்கிறது. ஒருவனின் உள்ளத்தில் காமம் இருக்குமெனில் இசை அந்தக் காமத்தையே பற்றி எரிய வைக்கும். ஒருவனின் உள்ளத்தில் இறைக்காதல் இருக்குமெனில் இசை அந்த இறைக்காதலை மேலும் தீவிரமாக்கும். எனவே சிற்றின்ப மனநிலை உள்ளவன் இசை கேட்பது அவனுக்குக் கேடாக முடியும். எதை அணைத்துப்போட வேண்டுமோ அதைப் பற்ற வைப்பது எப்படிச் சரியாகும்? பேரின்ப மனநிலை கொண்டவர் அதற்கான இசையைக் கேட்பதால் அவர் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைவார். அவ்வாறு இசை கேட்பது ஆகுமானது மட்டுமல்ல, வரவேற்புக்குரியதும் ஆகும்”

இது போல் இன்னும் நிறைய விளக்கங்கள் இமாம் கஸ்ஸாலியின் நூலில் உள்ளன. அவை அனைத்தையும் பேசும் வாய்ப்பு அப்போது இல்லை. ‘படித்துப் பாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் சொன்னேன்.

இசை பற்றி என்னிடம் பலரும் பல தருணங்களில் விவாதித்திருக்கிறார்கள். சூஃபிகள் இசை கேட்பார்கள் என்பது உலகறிந்த ஒன்று. குறிப்பாக மௌலானா ரூமியின் ஆன்மிகப் பள்ளியைச் சார்ந்தவர்களும், சிஷ்திய்யா பள்ளியைச் சார்ந்தவர்களும் இசைக்குப் பெரிதும் முக்கியத்துவம் தருகிறார்கள். நான் சிஷ்திய்யா ஞானப் பள்ளியைச் சேர்ந்தவன் என்பதால் மட்டுமல்ல, இயல்பாகவே இசைக்கான ஒரு மனநிலை எனக்கு வாய்த்துள்ளது.

ஆன்மிக இசைக்கான மனநிலை என்னும் அருள் மிகவும் முக்கியமான ஒன்று என்றே நான் கருதுகிறேன். இல்லையெனில், ரசனையே இல்லாதபோதும் ’சிஷ்திய்யா பள்ளியைச் சேர்ந்தவன் நான், எனவே நான் இசை கேட்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு கேட்பார்கள், ஃகாஜா நாயகத்தின் பேரில் படிக்கப்பட்டது என்னும் பேரில் வெளிவரும் குப்பைத்தனமான இசைகளையும் கேட்டுக்கொண்டு மந்தையாடு போல் தலையாட்டிக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு நேர் எதிரான மனநிலையும் உண்டு. கருவிகளின் இசையைக் கேட்டாலே கோபம் கொப்பளிக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். எந்த இசையாக இருந்தாலும் அப்படித்தானாம். ’ஆன்மீக இசையாவது பெண்மீக இசையாவது. இசை என்றாலே அது ஆகாததுதான்’ என்பது அவரின் வாதம். ’அந்தக் கருமத்தைக் கேட்காதீர்கள், குர்ஆன் கிராஅத்துகளைக் கேளுங்கள்’ என்று ஓர் ஆலோசனையும் வழங்கினார். ‘இசை ஆகுமானதல்ல’ என்னும் வாதங்களைக் கேட்டுப் படு ஆழமான குற்றவுணர்வுக்கு ஆளாகியிருந்த பல நபர்களுக்கு அவர் இதே ஆலோசனையை வழங்கியிருக்கிறார். அவர்களும் அப்துல் பாசித் போன்றோரைக் கேட்கத் துவங்கி அதில் முழுதாக மனம் கரைய முடியாமல் இன்னும் மோசமான குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருப்பார்கள்!

நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியதுதான். உலகப் புகழ் பெற்ற ஓதுவார்களின் ஓதுதல்களை விடவும் சாதாரணமான பள்ளிகளில் ஓதப்பட்ட கிராஅத்துக்கள் என் மனதைக் கரைத்துள்ளன. மேற்படி நண்பரின் ஆலோசனையைச் செய்து பார்த்தேன்.
ஒத்துவரவில்லை.

“வேதம் ஓதப்படுகையில்
மௌனமாய்க் கேட்கிறேன்
ஓர் அசைவும் இல்லாமல்...
இசையோ
இதயத்தைப் பிசைகிறது
கண்ணீர் வழிகிறது...
முன்னதற்கு நன்றி இமாமுக்கு
பின்னதற்கு நன்றி நுஸ்ரத்திற்கு
எதில் எது இருக்க வேண்டும்?
ஆனால் எதில் கிடைக்கிறது?
இரண்டுக்குமாக நன்றி
இறைவனுக்கு”

என் மச்சானுடன் பேசியபோது அவர் சொன்ன ஒரு கருத்து மட்டும் ஹைலைட்டாக சிந்தனையில் மின்னிக்கொண்டிருந்தது. ‘இசை ஆகுமானதல்ல என்று நீங்கள் சொல்வதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், “இசை மெய் மறக்கச் செய்கிறது. எனவே அது ஆகுமானதல்ல”

இந்த விடை எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் இசையின் மிகவும் அருமையான அம்சமாக நான் கருதுவதே அது நம்மை மெய் மறக்கச் செய்கிறது என்பதுதான்!

“இசை மெய்மறக்கச் செய்தால் செய்யட்டுமே, அதனால் என்ன?” என்று கேட்டேன். ”மெய் மறப்பது ஆகுமானதல்ல” என்று சொல்லிவிட்டார். அதாவது மெய்மறப்பது - தன்னை மறப்பது – ஹராம்!

மெய் என்றால் உண்மை என்று ஒரு பொருள் உண்டு. அந்த அர்த்தத்தில் இப்படிச் சொன்னால் சரிதான். உண்மையை மறப்பது ஆகுமானதல்ல. ஆனால் தன்னை மறந்த நிலை என்பது ஆன்மிகத்தில் மிகவும் சிலாகித்துப் பேசப்படும் ஒன்றாயிற்றே? அது ஆகுமானதில்லையா?

இசை இறைவனை மறக்கச் செய்யும் எனில் அது ஆகுமானதல்ல என்று சொல்லலாம். இசை இறைவனை நினைக்கச் செய்து தன்னை மறக்கச் செய்யும் எனில் அதை எப்படி ஆகுமானதல்ல என்று சொல்ல முடியும்?

”தன்னை மறந்த நிலையில் தொழுவது கூடாது” என்று ஒருவர் என்னுடன் முன்பொரு முறை வாதிட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எப்படிப்பட்ட மேதாவிகளை எல்லாம் வாழ்வில் சந்திக்கக் கொடுத்து வைத்திருக்கிறது!

“இறைவனை மறந்த நிலையில் தொழுவது கூடாது” என்பதுதான் என் கருத்து. இறைவனை மறந்துவிட்டுத் தன்னை நினைத்துக் கொண்டிருப்பது தொழுகை ஆகுமா?
இறைவனையும் என்னையும் மாற்றி மாற்றி நினைத்துக் கொண்டு தொழுதால் அது இறைவனுக்கு மரியாதை ஆகுமா?

இறைவனின் நினைவு முழுமையாக இருக்கும் இடத்தில் தன்னைப் பற்றி நினைப்பதற்கு இடம் ஏது? அப்படித் தொழுவது அல்லவா உண்மையான தொழுகையாக இருக்க முடியும்.
எங்கள் உரையாடல் துவங்கிச் சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது, நாங்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளப் போவதில்லை என்பது. வேறு வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கும் இருவர் எப்படிச் சந்திப்பது?

“தன்னை ஒருவன் மறந்துவிட்டால் எத்தனை விடுத்தம் தொழுதிருக்கிறான் என்பதை எல்லாம் எப்படி நியாபகம் வைப்பான்?” என்ற கேள்வி எழும் கோணத்தில் இருந்து அவர் பேசுகிறார்.

“நபிகள் நாயகம் கூட்டுத் தொழுகை நடத்தும் போது குழந்தை ஒன்று அழுத சப்தத்தைக் கேட்டுத் தொழுகையை விரைந்து முடித்தார்களே, அப்படியானால் அவர்கள் தன் சூழலை மறக்கவில்லை என்பதுதானே பொருள்?” – அதே கோணத்தில் இருந்து இன்னொரு கேள்வி.

“தன் தொடையில் அம்பு ஒன்று பாய்ந்துவிட்ட போது, தான் தொழும்போது அதைப் பிடுங்கி எடுக்குமாறு ஹழ்றத் அலீ (ரலி) அவர்கள் சொன்னார்களே. அப்படியே அவர்கள் தொழும்போது அந்த அம்பு உருவியெடுக்கப்பட்டது. அது உருவப்பட்டதே அவர்களுக்குத் தெரியாமல் இருந்ததே. இது என்ன? இறைவனின் நினைவில் தன்னையே மறந்த நிலைதானே?” – இந்தக் கேள்வி எழும் கோணத்தில் இருந்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இருவேறு திசையில் சென்று கொண்டிருக்கும் இருவரும் நிச்சயமாகச் சந்திக்க முடியும். சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில் பூமி உருண்டையானது. என்ன, கொஞ்சம் தாமதம் ஆகும். ஏனெனில் பூமி விசாலமானது! ஆனால் சந்திப்புப் புள்ளி நிச்சயமாக இருக்கிறது.

ஹழ்றத் அலீ (ரலி) அவர்கள் தன்னை மறந்துதான் தொழுதார்கள். அதே சமயம் தொழுகையின் விடுத்தம், கியாம், ருகூ, சஜ்தா, மக்அத் (நிற்றல், குனிதல், பணிதல், இருத்தல்) ஆகிய தொழுகை உறுப்புக்களைச் சரியாகவும் செய்திருக்கிறார்கள்.
இன்னும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது திருக்குர்ஆனின் வசனம் ஒன்றின் பக்கம் கவனம் சென்றது.

“அன்றியும், அல்லாஹ்வை மறந்துவிட்டவர்கள் போன்று
நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில்
அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான்.
அத்தகையோர்தாம் பெரும்பாவிகள்”
(வலா தகூனூ கல்லதீன நசுல்லாஹ ஃபஅன்சாஹும் அன்ஃபுசஹும்;
உலாஇக ஹுமுல் ஃபாசிகூன் – 59:19)

‘நான்’ அல்லது ‘தான்’ (அன்ஃபுஸ்) என்பதன் உண்மையை, எதார்த்தத்தை (ஹகீக்கத்) அறிய இந்தத் திருவசனம் அருமையானதொரு சிந்தனைக் களத்தை நம் முன் திறந்து தருகின்றது.

பொதுவாக, நான் என்பதன் அடையாளங்களாக மக்கள் எவற்றைக் கருதுகிறார்கள்? அதாவது, எவற்றை ஒருவன் மறந்துவிட்டால் அவன் தன்னையே மறந்துவிட்டான் என்று மக்கள் சொல்வார்கள்?

ஒருவன் தன் பெயரை மறந்துவிட்டால் அவன் தன்னையே மறந்துவிட்டான் என்று சொல்லலாமா? நிச்சயமாக முடியாது. தன் பெயர் ஞாபகம் வராத நிலையில் ஒருவன் மிகவும் பதற்றமடைவான். ‘என் பெயர் எனக்கே மறந்துபோய்விட்டதே?’ என்று புலம்புவான். ஆக, அவன் தன்னை மறக்கவில்லை. தான் வேறு தன் பெயர் வேறு என்பதை அவன் அறிந்தே வைத்திருக்கிறான்.

இதேபோல், ஒரு நபர் அவரது பாலினம், வயது, முகவரி, பதவி போன்றவற்றை மறப்பது என்பது அவர் தன்னை மறப்பது ஆகாது. இவையெல்லாம் வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்ட புற அடையாளங்கள் மட்டுமே. இவை நம் சுயத்தின் அடையாளங்கள் அல்ல.

எனவே, “அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான்” என்னும் திருவசனப் பகுதிக்கு அவர்கள் தங்கள் பெயர், முகவரி, பதவி, பாலினம் போன்ற புற அடையாளங்களை மறந்துவிட்டார்கள் என்று பொருள் கொள்வது பொருந்தாது. அது நடைமுறையிலும் நிகழ்வதில்லை.

இறைவனை மறந்தவர்களாக, அவனுடைய நினைவின் லேசான நறுமணத்தைக் கூட நுகராதவர்களாகத் திண்ணையில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் தீவட்டிகளிடம் போய் அவர்களின் பெயர், முகவரி, தொழில் போன்றவற்றைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். அதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இவையெல்லாம் மிகவும் மேம்போக்கான விஷயங்கள். இவற்றுக்கும் மனிதனின் சுயத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

ஆனால், இறைவனை மறந்திருக்கும் அவர்கள் தங்களையே மறந்திருக்கிறார்கள் என்று திருமறை வசனம் குறிப்பிடுகிறது. தங்களின் புற அடையாளங்களை மறந்திராத அவர்கள் தங்களின் சுயத்தின் எதார்த்தத்தை மறந்துவிட்டார்கள். இந்தப் புற அடையாளங்கள் அவர்களுக்குத் தமது சுயத்தையும் காட்டவில்லை, இறைவனையும் காட்டவில்லை.

தம் சுயத்தின் எதார்த்தத்தை அவர்கள் அறிந்திருப்பார்களே எனில் ஒருபோதும் இறைவனை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மறக்கவும் முடியாது!

’இறைவனை மறந்தவன் தன் சுயத்தையும் மறப்பான்’ என்னும் கருத்தை மேற்காணும் திருவசனம் தருகின்றது.

சூஃபிகள் அடிக்கடிச் சொல்லும் நபிமொழி நினைவு வரவில்லையா? “தன் சுயத்தை அறிந்தவன் தன் ரட்சகனை அறிந்தான்” (மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப றப்பஹு)

தன் புற அடையாளங்களே தன் சுயம் என்று தவறாக விளங்கிக் கொள்பவன் அவற்றைப் பேணுவதிலும், தக்க வைத்துக் கொள்வதிலும் தன் வாழ்நாளை வீணடித்துவிடுகிறான். தன் பேரும் புகழும் நிலைக்க வேண்டும், பதவிகள் உயர வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்பன போன்ற நோக்கங்களில் தீவிரமாக சதா இயங்கிக் கொண்டிருக்கிறான். ‘நான்’ என்பதாக அவன் வகுத்துக் கொண்ட பொய்த் தோற்றத்தைப் பரிசோதிக்க அவன் ஒரு கணமும் நிதானிப்பதில்லை. எனவே அவன் இறைவனையும் தன் சுயத்தையும் மறந்தவன் ஆகிறான்.

புற அடையாளங்கள் சுயத்தின் அடையாளங்கள் என்னும் தெளிவு பிறக்கும் கணத்தில் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள்! அப்படிப் பிறந்த நீங்கள்தான் சுயத்தின் மொழியை மெல்ல மெல்ல கற்க முடியும். அந்தக் கல்வியின் பாடங்களைத்தான் நான் இதோ மழலையாக எழுதிக் கொண்டிருக்கிறேன்!

முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு சுயதரிசனம் பெற்றவர்களின் வாசகங்கள் என் மனதில் பிரதிபலிக்கின்றன. சராசரி மனிதர்களுக்கு அவை ஒரு பேதையின் பிதற்றலாகவோ, போதையின் உளறலாகவோ தெரியலாம்.  

இறையொளியில் நனையும் சுயத்தின் போதையை இந்த உலகில் உள்ள மதுவிடுதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் ஏற்படுத்த இயலாது. ஏனெனில் ஞானபோதை இவ்வுலகைச் சேர்ந்ததல்ல.

அந்தப் பேரின்ப நிலையில்தான் பிறந்தது, மன்சூர் அல் ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் வாயில் ‘அனல் ஹக்’ என்னும் முழக்கம்.

அந்த ஞானப் பரவசத்தில்தான் தோன்றியது, அபூ யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்களின் நாவில் “சுப்ஹானீ மா அஃழம ஷஃனீ” (நான் பரிசுத்தமானவன்! என் மகத்துவம் என்னே!) என்னும் வாசகம்.

பீர் கௌஸி ஷாஹ் (ரஹ்) அவர்கள் பாடுகிறார்கள்:
“நான் என்னைத் தேடுகின்றேன்
அவன் கைவசமாகி வருகின்றான்!
இப்போது அவன் என் உருவில்
தன் பிரகாசம் காட்டுகின்றான்”
(மெ(ய்)ன் ஃகுத் கோ டூண்ட்தா ஹூன் வோ ஹாத் ஆரஹே ஹைன்
அப் மேரீ ஷகல் சே வோ ஜல்வா திகா ரஹே ஹைன்)

அல்லாமா இக்பாலின் அற்புதமான வரிகள்:
“என் அகமியத்தின் ஆழத்தை நானே அறிய முடியவில்லை
என் நினைவுகளின் ஆழம் மூழ்குவதற்கு ஏற்றதல்ல; மிகவும் ஆபத்தானது.
(மெ(ய்)ன் ஃகுத் பீ நஹீன் அப்னீ ஹகீக்கத் கா ஷனாசா
கெஹ்ரா ஹே மேரே பஹரெ ஃகயாலாத் கா பானீ)
இக்பாலைக் காணவேண்டும் என்று எனக்கும் ஆசைதான்
அவன் பிரிவால் நான் நிறையவே அழுதிருக்கிறேன்
(முஜ் கோ பீ தமன்னா ஹே கெ இக்பால் கோ தேக்கூன்
கீ உஸ் கீ ஜுதாயீ மேன் பொஹத் அஷ்க் ஃபஷானீ)
இக்பாலுக்கே கூட இக்பாலைத் தெரியாது!
அல்லாஹ்வின் மீது ஆணை! இதில் வேடிக்கை ஏதுமில்லை!
(இக்பால் பீ இக்பால் சே ஆகாஹ் நஹீன் ஹே
குச் இஸ் மேன் தமஸ்ஃகுர் நஹீன் வல்லாஹ் நஹீன் ஹே)

புறவுலகில் தேடி அடையும் செல்வங்கள் எதுவும் நிரந்தரமானவை அல்ல. தன்னையே அறியாதவன் எந்தச் செல்வத்தை அடைந்து என்ன பயன்? தேட வேண்டிய பொக்கிஷம் நமக்குள்ளேயே மறைந்திருக்கிறது. எனவேதான், மௌலானா ரூமி (ரஹ்) நமக்குச் சொல்கிறார்கள்:

”உன் உயிருக்குள் ஓர் உயிருண்டு
அந்த உயிரைக் கண்டுபிடி
உன் மலையினுள் உள்ளது ஒரு புதையல்
அந்தப் புதையலைக் கண்டுபிடி
உனக்கு வெளியே தேடாதே
சுற்றித் திரியும் சூஃபியைப் போல்
அவனை உன்னுள் கண்டுபிடி”
(தர் ஜானே தூ ஜானீஸ்த் பஜோ ஆன் ஜான் ரா
தர் கோஹே தூ கானீஸ்த் பஜோ ஆன் கான் ரா
சூஃபியே ரவான்தா கர் தவானி மீ ஜூயி
பிரூனே தூ மஜோ ஸ ஃகுத் பஜோ தூ ஆன் ரா)

இசையில் நான் என்னை மறக்கிறேன் என்பது என் புற அடையாளங்களை விட்டும் என் கவனத்தை என் அகத்தினுள் திருப்புவதுதான். சூஃபி இசை சுயத்தின் மீது தொங்குகின்ற திரைகளை விலக்கும் கையாக உள்ளது.

3 comments:

  1. காலை காட்டுங்க... வஹ்ஹாபிகள் பாணியில் சொல்வது என்றால் கொஞ்சம் ஷிர்க் செய்யணும்...

    ReplyDelete
  2. ஞானபோதை கொள்ள செய்கின்றன உங்கள் வரிகள். மாஷா அல்லாஹ்.

    பகிரங்கமான திரை நீக்கம் பயம் கொள்ளவும் செய்கிறது.

    ReplyDelete
  3. நான் இந்தப்பதிவை என் முகநூலில் பகிர்ந்துள்ளேன்....நன்றி நண்பரே..

    ReplyDelete