Saturday, October 15, 2011

எதிர்-புதிர் வினைகள்



”போதிதர்மா –ஏழாம் அறிவு” என்னும் பதிவுக்கு மளமளவென்று வந்து குவிந்த பின்னூட்டங்கள் கண்டு ஒரு கணம் மிரண்டுவிட்டேன். ‘பாத்தீங்களா, சினிமாவைப் பத்தி எழுதுனதும்தான் இவ்வளவு பேர் வாசிக்கிறாங்க” என்றாள் என் மனைவி. ஏதோ, அவளால் ஆன ஒரு விமரிசனம், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்துக்கும் இப்படி ஒரு ஷொட்டு வைக்க வேண்டும் என்று! ஜெயமோகன் அவர்களும் தன் இணையதளத்தில் போதிதர்மா என்னும் தலைப்பில் ஒரு சேதியைத் தந்துவிட்டு என் கட்டுரைக்கான லிங்க் கொடுத்திருப்பதை இன்று மாலை அவளிடம் காட்டினேன். அவள் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட்டிலேயே தீர்ப்பு கிடைத்ததைப்போல் “நான் தான் அப்பவே சொன்னேன்ல” என்று கூறிவிட்டுச் சென்றாள். இது பாராட்டா இல்லை வேறு எதுவுமா என்றே புரியவில்லை. ஒரே புதிர்வினைகளாக இருக்கிறது. பெண்கள் என்ன லேசுபட்டவர்களா? ஹைகூ கவிதை போல் எளிமையாக இருப்பவர்கள் சில நேரங்களில் இப்படித்தான் மண்டையைக் குழப்பும் சூ-டோ-கூ போன்று மாறிவிடுவார்கள் போலும்.

அற்புதமான, பயனுள்ள இடுகை என்றுதான் எல்லோரும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்த இடுகை ஷங்கர் கிருஷ்ணன் என்னும் அன்பரின் மனதை மட்டும் வெகுவாக வேதனைப் படுத்திவிட்டது போலும். இத்தனைக்கும் நான் கட்டுரையில் ’ஏழாம் அறிவு’ படத்தைப் பற்றி எழுதியுள்ளவை கம்மியே. சின்ன விமரிசனம். அவ்வளவுதான். அதுவே ஒரு மனதைப் புண்படுத்துகிறது. அவரின் எதிர்வினை இது:
i dont like this post.. if someone taking a different risk movie. we should support them, atleast we shouldnt criticize them.. please remove this post.. if you dont have any job please go and sleep well.. dont do this again.. its my humble request..

மிகுந்த அக்கரையுள்ள பதிலாகவே இதனை நான் எடுத்துக்கொள்கிறேன். பாவம், அவர் மனதை இப்படிப் புண்படுத்திவிட்டேன். ”உங்களுக்கு வேலை எதுவும் இல்லை என்றால் போய் நன்றாகத் தூங்குங்கள்” என்று உருப்படியான ஒரு ஆலோசனையும் வழங்கியிருக்கிறார். உண்மையில், அந்த இடுகையை எழுதிவிட்ட பிறகு நான் அதைத்தான் செய்தேன். இதாவது பரவாயில்லை. மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சமீபத்தில் ஒருவர் எழுதிய எதிர்வினையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


பாரதி மகாகவி அல்ல என்று ஒரு கருத்தை அவர் சொல்லப்போய் அவருடைய இணைய தளத்தில் தீவிரமான விவாதங்கள் நடந்து வந்தன. மரபின் மைந்தன் முத்தையா, ஜடாயு, எம்.ஏ.சுசீலா முதலிய பலரும் அந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். விஷயம் இப்படி நகரும்போது பாரதியைப் பற்றிய இந்த விவாதப் பொருண்மையை சகிக்க முடியாத R.நாராயணன் என்ற பாரதி பக்தர் எதிர்வினை என்னும் பெயரில் இப்படி எழுதியுள்ளார்:

”பாரதியார் மகாகவி இல்லை என்று நீங்கள் எழுதிவரும் அபத்தமான குறிப்புகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முதல் விஷயம் பாரதி பற்றி பேச நீங்கள் யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நீ இதுவரை எவ்வளவு கவிதை எழுதியிருக்கிறாய்? ஐம்பது கவிதை எழுதியிருப்பாயா? அதிலே ஒரு பத்துக்கவிதை தேறுமா? சினிமாவுக்கு வசனம் எழுதுபவன்தானே நீ? உனக்கு என்ன கொழுப்பு இருந்தால் பாரதி கவிஞனே இல்லை என்று சொல்வாய்? உனக்கு பிரபலமடைய வேண்டுமென்றால் அண்ணா சாலையிலே துணியில்லாமல் அரைமணி நேரம் நில்லு. அதை விட்டுவிட்டு பாரதியை வம்புக்கு இழுக்காதே. பாரதி ஒரு நெருப்பு. பாரதியின் கவிதைகளில் உள்ள எளிமையும் அழகும் உலகத்தில் உள்ள எந்தக் கவிஞனிடமும் இல்லை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். நீ என்ன படித்திருக்கிறாய்? ‘தூண்டில் புழுவினைப்போல் வெளியே சுடர் விளக்கினைப்போல்என்ற வரிக்கு என்ன அர்த்தம் சொல்லு பார்க்கலாம்.உனக்கு எங்கே புரியப்போகிறது? நானே சொல்கிறேன். அது பரந்தாமனை அறியாத ஆன்மா அடையக்கூடிய பதற்றமாகும். அணையப்போகும் சுடருக்குக் கைகளாக வந்து அணைப்பவன் பரந்தாமன். உனக்கு மூளை இருந்தால் நீ அண்ணா அவர்களின் சத்சங் உரைகளைக் கேட்டுப்பாரு. புத்தி தெளியும். இணைத்திருக்கிறேன்” 

ஓ மை காட், எவ்வளவு காரம்! எனக்கானால் கண்டித்து வந்த ஒரேயொரு எதிர்வினையில் நிம்மதியாகத் தூங்கச் சொல்லும் சாத்வீகமான ஆலோசனை மட்டும்தான். அந்த அளவு கனிவான வாசகர். நானும் நினைத்துத்தான் பார்த்தேன். தேவையில்லாத வெட்டி வேலையில் மாட்டிக் கொண்டுவிட்டேன் என்று தோன்றுகிறது. நான் பாட்டுக்கு ஆன்மிகக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு இதெல்லாம் எதற்கு? என்ன செய்வது, போதிதர்மா என்னும் ஆன்மிக ஆளுமையை நான் வாசித்தறிந்தது இன்று நேற்றல்லவே? சினிமா பற்றி எழுதினால் அதன்மீது ஆர்வம் உள்ளவர்கள் வந்து வாசித்துவிட்டு விமர்சிப்பது போல், போதிதர்மா பற்றிய படம் என்பதால் அதை நான் கவனித்து நாலு வார்த்தை எனக்குள்ள நியாயமான ஆதங்கத்தைச் சொல்லக்கூடாதா? இத்தனைக்கும் நான் மட்டையடியாக ஒன்றும் எழுதவில்லையே? சூர்யா ஒரு அருமையான தேர்வு என்றுதான் எழுதியிருக்கிறேன். அத்தகைய பாடிஸ்கேப்புக்காக அவர் மேற்கொள்ளும் கடினமான உழைப்பைப் பாராட்டத்தானே செய்தேன். அல்லாமல், சிம்புவைப் போட்டிருக்கலாம் என்பது போல் ஏதாவது உளறியா வைத்தேன்?

ஷங்கர் கிருஷ்ணனின் எதிர்வினையை நான் வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கிறேன். .. if someone taking a different risk movie. we should support them, atleast we shouldnt criticize them.. சரி, அந்த ரிஸ்க் என்பதுதான் என்ன? வியாபார ரிஸ்க் என்று ஒன்று இருக்கிறது. அதுதான் மிகப்பெரிய ரிஸ்க். அந்தக் கோணத்தில் பார்த்தால் ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கல்கள் எனக்குப் புரிகிறது. அது இண்டஸ்ட்ரி அரசியல் சார்ந்த ரிஸ்க். ஒரு படம் ஓடாவிட்டால் போச்சு, அடுத்ததில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லும் அவகாசம்கூட இன்று கிடையாது. தோல்விப்படம் என்பது பல அம்சங்களில் அதில் பங்குபெற்ற பலருக்கு அத்துடன் ஃபீல்ட் காலி என்னும் நிலைதான் இப்போது. மூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நிறுவிக்கொண்ட கமல் போன்ற கலைஞனே அர்த்தமுள்ள சினிமாவைத் தருவதற்கு அபூர்வமாகத்தான் அட்டெம்ப்ட் செய்ய முடிகிறது. 

இதுபோல் எத்தனை பேர் முகம்காட்டும் சந்தர்ப்பம்கூட வாய்க்காததால் உதிக்காமலேயே அஸ்தமனமாகி விட்டார்களோ தெரியவில்லை. அப்படி ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். முன்னணி நடிகர்களை வைத்து சில குப்பைப்படங்கள் எடுத்த இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக இருந்தவர் அவர். தற்போது அவர் திரைத்துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, இறந்துவிட்ட தந்தையின் அரசு வேலை தன்னைத் தேடி வரவே அதில் செட்டிலாகிவிட்டார். அவர் வீட்டில் பல இரவுகள் அவருடன் உரையாடியிருக்கிறேன். முட்டை விளக்கொன்றின் அடியில் பேடில் தாள்களும் கையில் பேனாவுமாக அமர்ந்து தவம் போல் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருப்பார். பல குறும்படங்களின் கதைகளை அவற்றின் தொழில்நுட்பம் சார்ந்து என்னிடம் சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருப்பார். தான் ஒரு இயக்குநராகும் வாய்ப்பு கனிந்தால் என்னென்ன படங்கள் எடுப்பது என்பது பற்றிப் பல முன்னோக்குகள் அவரிடம் இருந்தன. ஆனால் அவற்றில் அடிப்படையிலேயே ஒரு குறை இருந்ததை நான் இப்போது பார்க்க முடிகிறது. அவர் சொன்னதில் ஆரம்ப ஒற்றை வரியாக எனக்கு அது நினைவிருக்கிறது: ”ரஜினி சாருக்குன்னு ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்” இதைத்தான் தமிழ்ச்சூழலின் அபத்தம் என்று நான் கருதுகிறேன். இங்கே வெற்றி நடிகனின் பிம்பத்தை முன்வைத்துத்தான் கதையே பின்னப்படுகிறது. கதை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. இந்தப் பின்னணியில் நம் இயக்குநர்கள் ரிஸ்க் எடுப்பதெல்லாம் வெறும் காமெடியாகிப் போய்விடுகிறது.

இப்படியாகப் பல அபத்தங்கள் இங்கே சகிக்க முடியாத வகையில் அரங்கேறுகின்றன. உதாரணமாக, ஏழாம் அறிவில் வரும் ஒரு பாடலில் கதாநாயகனின் ஆட்டத்திற்கு ஒத்திசைவாக ஓராயிரம் பேர் ஆடுவது போல் ஒரு பாடல் வருகிறதாம். எடுப்பதற்கு மிகவும் கஷ்டம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பல கிறுக்குத்தனங்கள் உண்மையிலேயே மிகவும் கஷ்டமானவையாகத்தான் இருக்கும். ஒரு டி.வி ஷோவில் ஒருத்தர் தன் மூக்கின் வழியே ஒரு லிட்டர் பாலை அருந்திக்காட்டினார். இது மிகவும் ரிஸ்கான விஷயம்தான். இன்னொருவர் மூன்று வாத்தியக்கருவிகளை ஒரே ஆளாக ஏககாலத்தில் வாசித்துக் காட்டினார். இதற்காக அவரை நான் இசை மேதை என்று ஒத்துக்கொள்ள வேண்டுமா? அவர் செய்து காட்டியது வித்தை. அது மேதைமை அல்ல. மேதைகள் எல்லாம் ஒரு கருவிதான் வாசிக்கிறார்கள். உஸ்தாத் அம்ஜத் அலி ஃகான் என்றால் சரோத், பண்டிட் ரவிஷங்கர் என்றால் சிதார், ஸ்ரீநிவாஸ் என்றால் மாண்டோலின், எல்.சுப்ரமணியம் என்றால் வயொலின் என்பது போல். 


ஆனால் இந்த ’ஆயிரம் பேர் நடனம்’ என்னும் கிம்மிக் இருக்கிறதே இதை எந்த விதத்தில் சேர்ப்பது? ’அவதார்’ படத்தில்கூட ஆயிரக்கணக்கான ’நஃவி’ மனிதர்கள் சேர்ந்து கை கோர்த்துக் கொண்டு ஒத்திசைவாக ஒரு இனக்குழு தியான நடனத்தை நிகழ்த்துவதாக ஒரு காட்சி உண்டு. அதை ஒரு மகத்தான காட்சியாக நான் கருதுவதன் காரணம் கதையில் அது பெறும் இடமும் அதன் பிண்ணனியும்தான். எத்தனை சீரியஸான விஷயம் அது. ஆனால் இங்கே ஆயிரம் பேரின் ஆட்டம் எதற்காக வருகிறது? ஒரு கதாநாயகனின் ஆட்டத்திற்கு ஒத்திசைந்து ஆயிரம் பேர் ரோட்டில் நடனமாடுவது எப்படி சாத்தியம்? அப்படியானால் அப்பாத்திரம் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் போன்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்!
இப்படியாக இங்கே அபத்தங்கள் பல. பிரம்மாண்டத்தையே தரம் என்று தவறாக நாம் புரிந்துவைத்திருக்கிறோம். ஹாலிவுட்டில் வரும் வெற்றிப்படங்கள் எல்லாம் நமக்கு அப்படி ஒரு கருத்தியலை உருவாக்கித் தந்துவிட்டன. ஆனால் அங்கே பிரம்மாண்டங்களின் பின்னணியில் உள்ள வலுவான கதையம்சங்களை நாம் காண்பதில்லை. எனவே பிரம்மாண்ட தயாரிப்புக்கள் என்பதையே புதுமை என்றும் ரிஸ்க் என்றும் மேதைமை என்றும் வளர்ச்சி என்றும் உணர்ச்சி வசப்பட்டுப் பிதற்றிக் கொண்டிருக்கிறோம். (ஹாலிவுட்டிலும் அபத்தக் குப்பைகள் நிறைய உண்டு என்று திரை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் வெகுவாக நாம் காணக்கிடைக்கும் வெற்றிப் படங்களில் பெரும்பான்மைகூட வலுவான ஆராய்ச்சியைக் கொண்டதாக உள்ளன. உலகையே காப்பாற்றும் அவதார புருஷனாக அமெரிக்க அதிபரைச் சித்தரிக்கும் அப்பட்டமான அரசியலும் உண்டு.) 

இங்கே எடுக்கப்படும் ஜனரஞ்சக சினிமாவில் ஒரிஜினாலிட்டி என்பது எந்த அளவு தேறுகிறது? எல்லாம் அப்படி அப்படியே ஆங்கிலப் படங்களில் அல்லது லத்தீன் அமெரிக்க, ஐரோப்பியப் படங்களில் இருந்து சுட்டெடுத்த காட்சிகள். சமீபத்தில் வந்த குப்பைப் படங்களில் ஒன்றான எந்திரனில் பல காட்சிகள்  bicentennial man (1999), I robot (2004) முதலிய படங்களில் இருந்து அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டவை. எந்திரன் படம் வந்து உலகத்தரத்திலான ஒரு தமிழ்ப்படம் என்று பீற்றிக் கொண்டிருந்தபோது என் தம்பி ஒருத்தன் இந்தப் படங்களைப் போட்டுக் காட்டி ஷங்கர் என்னும் டுபாக்கூர் இயக்குநரை ஒரு அறிவுஜீவிக் கலைஞன் என்று நம்பும் அப்பாவித் தமிழர்களின் அறியாமையை எள்ளிக்கொண்டிருந்தான். அந்நியன் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எவ்வளவு பூச்சாண்டிகள்? அடேயப்பா, ஏதோ அர்ஜெண்டினாவின் புரட்சியாளன் சே குவாராவே தமிழ்த்திரையில் வரப்போவது போல் சிகப்பு நிறத்தில் விளம்பரங்கள். புரட்சிப் பாடகன் பாப் மார்லியின் கெட்டப்பில் முகம் தெரியாமல் முடியைப் பரப்பிக்கொண்டு ஒரு பீடிகை வேறு. 

“ஆயிரத்தில் ஒருவன்” வந்து சில விமரிசகர்களால் கிழிக்கப்பட்ட போது நொந்து போய் செல்வராகவன் இதையேத்தான் சொன்னார், “பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்லாமலாவது இருங்கள். உலகத் தரத்தில் ஒரு படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம்.” ஆனால் அந்தப் படத்தில் எத்தனை இடங்களில் எத்தனை ஆங்கிலப்படங்கள் தென்படுகின்றன என்பதை விமரிசனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. 

பிரம்மாண்டம் என்று சொல்லி எடுக்கப்படும் படங்கள் ஏன் காப்பியடிப்புக்களாக இருக்கின்றன? பிறகு அவற்றைக் குறைகூறாமல் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டும் என்றால் எப்படி? இரண்டு நாட்களுக்கு முன்பு மாரியொ பூசோவின் “GODFATHER” பார்த்தேன். அது தமிழில் நகலெடுக்கப்பட்டு “நாயகன்” ஆனது. ஆனால் மூலம் தொட்ட உச்சங்களை கவனித்துப் பார்க்கும்போது நாயகன் காமெடியனாகிவிடுவதை உணர முடிகிறது. காட்ஃபாதரின் இறுதிக் காட்சியில் அல்பாசினோவின் அசைவுகளும் ஒப்பனையும் அப்படியே மணிரத்தினத்தின் ’குரு’வில் தென்படுவதைக் காணலாம். 

Mrs.Doubtfire இங்கே ஔவை சண்முகி ஆனது, Memento இங்கே கஜினி ஆனது, I am Sam இங்கே தெய்வத்திருமகள் ஆனது என்று இப்படி நீளும் பட்டியலை அவதானித்தால் இந்தப் பிரம்மாண்டங்கள் அப்பட்டமான வியாபார நோக்கம் கொண்டவை மட்டுமே என்பது விளங்கும். அர்த்தமுள்ள கலையை வார்த்தெடுப்பதும் வளர்த்தெடுப்பதும் அவற்றின் நோக்கம் அல்ல. 

பிரம்மாண்டமான படங்கள் அவற்றின் முன்னறிவிப்புக்களுக்கு நியாயம் செய்வதில்லை. அவற்றின் முன்னறிவுப்புக்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போன்றே உள்ளன. இந்த உள்ளாட்சித் தேர்தலின் பிரச்சாரத்தில் ஒரு வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்துகொண்டு போன ஒரு வாகனத்திலிருந்து இவ்வாறு சொல்லப்பட்டது: ”உங்கள் வெற்றி வேட்பாளர் X மிகவும் நல்லவர், மக்களிடம் பழகுவதற்கு இனிமையானவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுக்காகப் பணியாற்றக் காத்திருப்பவர். உங்கள் பகுதி அனைத்து வசதிகளையும் பெற அல்லும் பகலும் அயராது உழைப்பவர். ஆதரிப்பீர் வெற்றி வேட்பாளர்….” எந்தக் கட்சி என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை. எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். 

இந்த அரசியலைத்தான் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் படங்களும் செய்கின்றன. அவை தொடர்ந்து மண்ணைக்கவ்வி வருவது கவனிக்கத்தக்கது. அதே சமயம் சினிமாவை சமூக மாற்றத்திற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று காண்பிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதை ஆதரிக்கவே வேண்டும். உண்மையில், ஷங்கர் கிருஷ்ணன் சொல்வதுபோல் ரிஸ்க் எடுப்பவர்கள் இவர்கள்தான். இவர்களிடமும் குறைகள் இருக்கலாம். அபத்தங்கள் இருக்கலாம். ஆனால் அதை ஆரோக்கியமாக விமர்சிக்கும்போது ஏற்றுக் கொண்டு அதை அகற்றிக்கொள்ளும் மனப்பான்மை இருக்கிறது. முக்கியமாக, வியாபாரத்தை முதன்மை ஆக்காத பார்வை இவர்களிடம் இருக்கிறது. சேரன், மிஷ்கின், அமீர், சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, வெற்றிமாறன்… இப்படிப்பட்டவர்கள். இவர்கள் ஏதோ திரையுலகின் லெஃப்டிஸ்டுகள் போல் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அர்த்தமுள்ள சினிமா பற்றிய அக்கறை இவர்களிடம் தென்படுகிறது. பாசாங்கு இல்லாத இயல்பான ஓட்டத்தில் கதை நகரும்படிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதே இதமாக இருந்தது. சசியின் படத்தில் வரும் ஒரு ஃப்ரேமுக்கும் நான் என் வீட்டுக்கு வெளியே நடந்தால் உள்ள சூழலுக்கும் வித்தியாசம் இல்லை. இருப்பது அங்கே கலையாகியுள்ளது. காட்சிகளில் மேனாட்டின் நகல் இல்லை. இதைப் பாராட்டலாம் ஷங்கர் கிருஷ்ணன்.


எம்.ஃபில் பாடத்திட்டத்தில் திரை விமரிசனத்தை ஒரு யூனிட்டில் வைத்திருக்கிறோம். மாணவர்களின் திரைப்பட அவதானங்கள் எந்த அளவில் உள்ளன என்பதைப் பரிசோதித்தால் ஏமாமற்றமே மிஞ்சியது. தேசப்பற்றை ஊட்டும் படம் என்று பேச்சு வந்தபோது ஒரு மாணவன் ‘ஜெய்ஹிந்த்’ என்று சொன்னான். இப்படி இருந்தால் இந்த நாடு உருப்படுமா சொல்லுங்கள்? ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் வென்ற சமயம். பலரும் அவர்தான் ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர் என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். சத்யஜித் ரே வாங்கியிருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரிகிறதா என்று பார்க்க எண்ணி அவர்களிடம் கேட்டேன். தெரியவில்லை. “அவர் ஒரு இயக்குநர்” என்று க்ளூ கொடுத்தேன். உடனே ஒரு மாணவன் கே.எஸ்.ரவிக்குமார் என்று சொன்னான். அது தந்த அதிர்ச்சியில் நானே பதிலைச் சொல்லிவிட்டேன். மேலும் கேட்டால் டி.ராஜேந்தர், இராமநாராயணன் போன்றவர்களின் பெயர்களைக் கேட்க நேரலாம் என்று சுதாரித்துக் கொண்டேன். இப்படி இருக்கிறது நம் மாணவ சமுதாயத்தின் நிலை. இது உருப்படுவதற்கான போக்கா சொல்லுங்கள்? எனவே எம்.ஃபில் வகுப்பில் ஒன்று செய்தேன். சாரு நிவேதித்தா எழுதிய இரண்டு பட விமரிசனங்களை மாணவர்களை வாசிக்கச் செய்தேன். குறைந்த பட்சம் அவர்கள் பார்த்த படங்களாகவாவது இருக்க வேண்டும் அல்லவா? எனவே, “உலகநாயகனே இதுதான் உலக சினிமாவா?” என்னும் கட்டுரை கமலின் பிம்பத்தை உடைத்துக் காட்டுவதற்காகவும், சுப்பிரமணியபுரம் பற்றிய கட்டுரை ஒரு புதிய பார்வையைத் தருவதற்காகவும். வெறும் மொழுக்கையான துதிபாடும் விமரிசனங்களை வெகுஜன இதழ்களில் படித்துவருபவர்களுக்கு இப்படி ஒரு திசை இருப்பதாவது தெரியட்டும் என்று இந்த முயற்சி. 

சரி, இதையெல்லாம் சொல்லும்போது இன்னொரு விஷயமும் குறுக்கே வருகிறது. திடீரென்று இரண்டு நாட்களாக கேபிள் டி.வி.யில் சன் நெட்வொர்க்கைச் சார்ந்த எந்தச் சேனல்களும் வரவில்லை. தமிழகத் தாய்க்குலத்திற்கு இது மிகவும் அதிர்ச்சியான செய்தி அல்லவா? அவர்களின் அறிவுக்குத் தீனி போட்டு அவர்களின் அகவுலகை செழுமையாக்கி வரும் அருமையான அரை டஜன் மெகா சீரியல்களைப் பார்க்காமல் இருந்தால் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்னாவது? நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் நான் கவலைப்பட்டது போல் ஒன்றுமே பாதிப்பு இல்லை என்பதாக என் சகதர்மினி மிக இயல்பாக இருந்தாள். சுட்டி சேனலைக் காணாமல் பிள்ளைகள்தான் தவித்துப் போய்விட்டார்கள் பாவம். சகதர்மினி அத்தனை மெகா சீரியல்களையும் ஏதோ ஒரு இணைய வலைமனையில் கண்டுபிடித்துப் பகுதி பகுதியாக தரிசித்துக் கொண்டிருந்தாள்! இடையிடையே டஜன் கணக்கில் விளம்பரங்கள் தோன்றி சீரியல் நம் மனத்தில் உருவாக்கும் காவியபாவத்தைச் சீர்குலைக்கும் அபாயம் இதில் இல்லை என்பது எவ்வளவு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.

இப்படியெல்லாம் டி.வி சீரியல்களை நக்கலும் நையாண்டியும் செய்வது ஒருபக்கம் இருக்கட்டும். அவற்றை உருவாக்குபவர்களும்தான் ரிஸ்க் எடுக்கிறார்கள். ஆனால் பாருங்கள், இதையெல்லாம் பார்க்கச் சகிக்காமல் தத்துவம் ஆன்மிகம் உன்னதக் கலைகள் என்று சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நான் ஒருபக்கம். இந்த சீரியல்கள்தான் தான் அறியும் ரசிக்கும் இலக்கியம் என்பதாக என் மனைவி ஒருபக்கம். ஆனால், யார் மனதில் காருண்யம் பெருகுகிறது? குழந்தைகள் மீது அவள் பொழியும் அன்பை என்னல் பொழிய முடிகிறதா? பிள்ளைகளிடமும் என்னிடமும் அவளின் உள்ளத்தில் பிரவகிக்கும் தாய்மையின் அரவணைப்பு என்னால் ஆகக்கூடியதா? எத்தனையோ தருணங்களில் என் மனம் கல் என்றும் அவள் மனம் கனி என்றும் உணர்ந்தாகி விட்டது. டி.வி.மெகா சீரியல்களை நிறுத்திவிட்டு அவள் இப்னு அரபி, கஸ்ஸாலி, ரூமி, ஓஷோ, ஜே.கே, போர்ஹே, ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங் என்றெல்லாம் படிக்கத்தான் வேண்டுமா? இப்படியும் யோசிக்கத்தான் செய்கிறேன். அபத்தம் என்று நான் சொல்பவற்றின் ரசிகையிடம் பல உன்னத நிலைகள் உள்ள போது, என் வாசிப்புகள் அவற்றை என்னில் இன்னும் உண்டாக்கித் தரவில்லை என்பதையும் நான் பார்க்கத்தான் செய்கிறேன். வாழ்க்கை மிகவும் புதிரானதுதான்.     

5 comments:

  1. "i dont like this post.. if someone taking a different risk movie. we should support them, atleast we shouldnt criticize them.. please remove this post.. if you dont have any job please go and sleep well.. dont do this again.. its my humble request.."

    - நான் இப்படி எழுதலாம் என்று நினைத்து பார்த்தேன் - எனக்கு உங்க கமெண்ட் பிடிக்கவில்லை. ஒருத்தவங்க போதி தர்மாவை பற்றி இவ்வளவு அருமையா எழுதியிருக்காங்க.. அதை நாம சப்போர்ட் பண்ணனும்.. குறைஞ்சபட்சம் குறையாவது சொல்லாம இருக்கணும்.. உங்க கமெண்ட்டை டெலிட் பண்ண சொல்லிடுங்க...உங்களுக்கு வேற இல்லைன்னா போய் தூங்குங்க.. இது மாதிரி மறுபடி கமெண்ட் எழுதாதீங்க... இது என்னோட தாழ்மையான வேண்டுகோள் - என்று

    ஆனால் எனக்கு பயம் - பதில் இப்படி வந்து விட்டால் - எனக்கு உங்களின் பதிலுக்கு பதில் எனக்கு பிடிக்க வில்லை .. நீங்க போய் தூங்குங்க.. - என்று - என் பயம் நியாயமானது தான்.. ஏன்னா எனக்கு தூக்கம் வராம தான் 12 மணிக்கு நடுஜாமத்துல காஞ்சனா வர்ர நேரத்துல ஒக்காந்து எழுதிகிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  2. நான் காட்ஃபாதர் படம் பார்கத்ததில்லை..

    ஆனால் எனக்கு நாயகன் படம் அமிதாப் நடித்த 1975ல் வந்த சலீம் ஜாவித்தின் தீவார் படத்தை ஒத்திருப்பதை கவனித்து இருக்கிறேன்.

    இப்போ தான் தெரியுது தீவாரே காட்ஃபாதர் படத்தின் காப்பி தான் என்று

    ReplyDelete
  3. தங்கள் வலைப்பூவில் கிடைத்த மின் அஞ்சல் முகவரிக்கு சில மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன்.

    எதிர்பாராமல் தடுக்கி விழுந்து,stumbled upon, உங்க‌ள் வலைப்பூவைப் பின்னால் இருந்து வாசித்து வருகிறேன். அந்த அந்த இடத்தில் பின்னூட்டம் இட்டு வருகிறேன்.

    தங்களுடைய வித்தியாசமான அணுகுமுறை எல்லா 'முஸ்லிம் ஆனவர்'களிடமும் காணக் கிடைப்பதில்லை.

    டாக்டர் ஜாகிர் நாயக் போன்றவர்களைப் படித்து நொந்து போயிருந்த எனக்கு, உங்கள் போக்கு மருந்து தடவுவது போல உள்ளது.

    கலாசாரப்படி தாங்கள் ஒரு இந்தியர்/தமிழர் என்பதை நன்றாகவே நிறுவி வருகிறீர்கள்.

    'இந்தியாவின் மீது உண்மைப் பாசமுடைய உள்ள ஒரு முஸ்லிமைக் காட்டு பார்க்கலாம்'என்று சவால் விடும் என் இந்து நண்பனுக்கு இதுநாள் வரை மேதகு அப்துல் கலாமை மட்டும் சொல்லி வந்தேன். இப்போது உங்க‌ளையும் காட்டுவேன்.

    சினிமாவைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் எதுவும் இல்லை.

    kmrk1949@gmail.com

    ReplyDelete
  4. "'இந்தியாவின் மீது உண்மைப் பாசமுடைய உள்ள ஒரு முஸ்லிமைக் காட்டு பார்க்கலாம்'என்று சவால் விடும் என் இந்து நண்பனுக்கு..."

    - செம சிரிப்பு

    ReplyDelete
  5. Recently hav started reading ur posts..shld say they r quiet good... :) nice work ..keep it up... :)

    ReplyDelete