Sunday, October 2, 2011

உள்முகக் காலம் (தொடர்ச்சி #2)


இனி, போர்ஹேயின் இரண்டாம் அவதானத்தைப் பார்ப்போம்:

”காலத்தின் ஒரு துளிக்குள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்துள்ளன.”


கால அனுபவம் என்பது மனநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடிகார முட்கள் அளக்கும் ஒரு மணி நேரம் என்பது எல்லோருக்கும் சீரான ஒரே வேகத்தில் அனுபவப்படுவதில்லை. இதை நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் உணர்ந்து வருகிறோம். பிடித்த மனிதருடன் பிடித்தமான விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தால் நேரம் வேகமாகச் செல்வதாகவும், பிடிக்காத மனிதர்களின் சகவாசத்தில் அல்லது தனிமையில் அதே அளவு நேரம் மெதுவாக நகர்வதாகவும் உணர்கிறோம். சில ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் நேரம் போவதே தெரியவில்லை என்றும் சிலர் வகுப்புக்குள் வந்தால் மணி அடிப்பதற்குள் மாமாங்கம் ஆகிவிடுகிறது என்றும் உணர்கிறோம். காத்திருப்பில் நேரம் மந்த கதியில் நகர்வதாகவும், திளைப்புக்களில் காலக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் விரைவதாகவும் உணர்கிறோம். நேரம் அல்லது கால அனுபவம் என்பது ரிலேட்டிவ் ஆன ஒரு விஷயம் என்பதை அனைவரின் வாழ்க்கையும் அவ்வப்போது காட்டித் தரவே செய்கிறது. இதை ஐன்ஸ்டீனும் அறிவியல் மொழியில் சொல்லிவைத்தார்.




தன் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியாவின் பிரிவுத் துயர் தந்த வேதனையில் அமீர் குஸ்ரோ சோகம் ததும்பும் கஜல் ஒன்றைப் பாடினார். அதில் ஒரு கண்ணி இப்படி வருகிறது:
“பிரிவின் இரவுகள் நீண்டுள்ளன என் கூந்தலைப் போல்
சந்திப்பின் பகல் சுருக்கமாக உள்ளது என் வாழ்வைப் போல்.
என் பிரியமான காதலனைக் காணமுடியாது எனில்
இருளான இரவுகளை எப்படிக் கழிப்பேன் நான்?”
(ஷபானே ஹிஜ்ரான் தராஸ் ச்சூன் ஸுல்ஃப்
       வ ரோஸே வஸ்லத் ச்சூன் உம்ரி கோதாஹ்
ஸகி பியா கோ ஜொ மே(ன்) ந தேகூன்
       தோ கெ(ய்)ஸே காட்டூ(ன்) அந்தேரி ரத்தியா(ன்))

உருது மகாகவி இக்பால் பாடினார்:
“இணைதலின் மாதங்கள் பறந்துவிடுகின்றன
மணித்துளிகளின் கோலத்தில்
பிரிவின் மணித்துளிகளோ ஊர்கின்றன
மாதங்களைப் போல்.
(மஹீனே வஸ்ல் கெ, கடியோ(ன்) கி ஸூரத் உட்தே ஜாத்தே ஹெய்(ன்)
மகர் கடியா(ன்) ஜுதாயீ கி, குஸர்த்தி ஹெய்(ன்) மஹீனோ(ன்) மே(ன்))

இதே கருத்தை கவிஞர் வாலி ‘சுந்தரி, கண்ணால் ஒரு சேதி’ என்று தொடங்கும் பாடலில் இவ்வாறு எழுதியிருந்தார்:
“மாதங்களும் வாரம் ஆகும் நீயும் நானும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்”

பின்னால் வெளிவந்த ஏதோ ஒரு படத்தில் வேறொரு கவிஞரும் இக்கருத்தை அப்படியே தழுவிக் கொண்டதைக் கேட்க முடிந்தது, இப்படி:
“கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்”



காலம்-நேரம் என்பது ஒரு ‘ரிலேட்டிவ் கான்செப்ட்’ என்பதைச் சொல்ல வந்த நான் நேரங்காலம் தெரியாமல் வேறு ரூட்டில் பேசிக்கொண்டிருக்கிறேன். விட்ட இடத்திற்கு மீண்டும் வருகிறேன். அதாவது, காலத்தின் ஒரு துளிக்குள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்துள்ளன என்று போர்ஹே தரும் அவதானம். இதைப் படித்தவுடன் எனக்கு சட்டென்று நினைவில் வந்தது ஒரு சூஃபி மகான் நிகழ்த்திய அற்புதம் – கராமத்.



சூஃபி மகான் முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் ஜீவிய சரித அற்புதங்களால் நிரம்பியுள்ளது. அவரின் பெயரால் சொல்லப்படும் அற்புதங்களின் பட்டியலில் எல்லாமே அவரால் நிஜமாகவே நிகழ்த்தப்பட்டவைதானா என்னும் கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், அத்தகு அற்புதங்கள் நிகழ்வதற்குரிய ஆன்மிகப் படித்தரத்தில் அவர்கள் இருந்தார்கள் என்றே நான் உணர்கிறேன். நாம் இங்கே பார்க்கப் போகும் அற்புதமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இது வரலாற்றுப் பூர்வமானதா? என்னும் கவைக்குதவாத ஆராய்ச்சியில் நான் இறங்கப் போவதில்லை. நான் வரலாற்றைக் கடந்து வெகு காலம் ஆகிவிட்டது! முஹ்யுத்தீன் ஆண்டகை நிகழ்த்தியதாக வரும் இந்த அற்புதத்தில் உள்ள சர்ரியலிசத் தன்மையே என் மனதிற்குப் பெரிதும் வியப்பூட்டுகிறது. ஆனால் இது சாதாரணமான ஒரு சர்ரியலிசக் கதை போல் முடிந்துவிடாமல், முடியும் தருணத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறது பாருங்கள், அதை நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள்:

“பாக்தாதில் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் இருந்தார். அவருக்குப் பல்லாயிரம் தொண்டர்கள் இருந்தார்கள். அவருக்கு கலீஃபாவிடமும் செல்வாக்கு இருந்தது. அவர் இஸ்லாம் பற்றியும் திருக்குர்ஆன் பற்றியும் நன்றாக அறிந்திருந்தார். நபி (ஸல்) அவர்களின் மீதும் அந்த பாதிரிக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. எனினும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு விஷயம் தடையாக இருந்தது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட மிஃராஜ் நிகழ்ச்சியை அவரின் மனம் புரிந்துகொள்ள முடியாமலும் ஏற்க முடியாமலும் தவித்தது. அக்காலத்தின் சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் கலீஃபா அந்தப் பாதிரிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் ஒருவரும் அவரின் சந்தேகத்தைப் போக்கும்படியான விளக்கத்தை அளிக்க முடியவில்லை. பின்னர் கலீஃபா, முஹ்யுத்தீன் (ரலி) அவர்களுக்குச் செய்தி அனுப்பி அந்தப் பாதிரியாரின் ஐயத்தை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முஹ்யுத்தீன் ஆண்டகை அரண்மனைக்கு வந்தபோது கலீஃபாவும் பாதிரியும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாதிரி தன் நகர்வுக்காக ஒரு காயைக் கையில் எடுத்தபோது அவரின் கண்கள் முஹ்யுத்தீன் ஆண்டகையின் விழிகளைச் சந்தித்தன. பாதிரி தன் கண்களை இமைத்தார். இமைகள் திறந்த போது தான் ஒரு நதியில் மூழ்கிக் கொண்டிருக்கக் கண்டார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் அலறினார். கரையில் நின்று கொண்டிருந்த இடைச்சாதி இளைஞன் ஒருவன் ஆற்றுக்குள் பாய்ந்து சென்று மூழ்கிய பாதிரியைப் பிடித்துக் கரைக்கு இழுத்து வந்தான். பாதிரி நதியிலிருந்து எழுந்த போது தன் உடலமைப்பே மாறிவிட்டிருப்பதைக் கண்டார். தன் மறைவுறுப்பு காணாமல் ஆகி நெஞ்சில் ஸ்தனங்கள் முளைத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டார். அவர் ஓர் இளம் பெண்ணாக மாறிவிட்டார்! ’நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று அந்த இடையன் கேட்டான். பாக்தாதிலிருந்து என்று பாதிரி சொன்னா(ர்)/(ள்). அந்த ஊரிலிருந்து நான்கு மாதத் தொலைவில் இருந்தது பாக்தாத். எனவே அவளுக்கு அந்த இடையன் அடைக்கலம் கொடுத்தான். பின் அவளையே மணந்து கொண்டான். அவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று பிள்ளைகளும் பிறந்து விட்டன. இப்படியாக, பெண்ணாய் மாறிய பாதிரி அந்த இடையனின் மனைவியாக இல்லறம் நடத்திக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் அவள் அந்த நதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது வழுக்கி நீருக்குள் விழுந்தாள். அவள் முங்கி எழுந்தபோதோ… தான் ஒரு பாதிரியாக பக்தாத் அரண்மனையில் கலீஃபாவின் முன் சதுரங்கக் காயைக் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதையும், முஹ்யுத்தீன் ஆண்டகையின் கண்களுக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். ”பாதிரியாரே! இன்னும் நீர் நம்பவில்லையா?” என்று முஹ்யுத்தீன் ஆண்டகை கேட்டார்கள். என்ன நடந்தது என்பது பற்றித் தெளிவில்லாத அந்தப் பாதிரி இது முஹ்யுத்தீன் ஆண்டகை தன்னை மனோவசியம் செய்து காண்பித்த ஒருவிதக் கனவுக் காட்சி என்று எண்ணியவராக ”என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு முஹ்யுத்தீன் ஆண்டகை அவர்கள், “அப்படியானால் நீங்கள் உங்கள் குடும்பத்தை அவசியம் பார்க்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அரண்மனையின் கதவைத் திறந்தார்கள். அங்கே அந்த இடையனும் மூன்று பிள்ளைகளும் வந்து நின்றார்கள். நிஜத்தில்! இதைக் கண்டவுடன் அந்தப் பாதிரியார் ஓடி வந்து முஹ்யுத்தீன் ஆண்டகையின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். பின்னர் தன் ஐயாயிரம் தொண்டர்களுடன் இஸ்லாத்தை ஏற்றார்.”

இதுதான் அந்த அற்புத நிகழ்ச்சி. காலத்தின் ஒரு துளிக்குள் பல வருடங்கள் சுருண்டு கிடக்கும் நிகழ்ச்சி. இதில் சொல்லப்பட்டிருக்கும் ‘மிஃராஜ்’ என்னும் நிகழ்ச்சியும் காலத்தைப் பற்றிய நமது சாதாரண அனுமானங்களைத் தகர்த்துவிடுகின்ற ஒரு நிகழ்வுதான். நபி (ஸல்) அவர்களின் விண்ணேற்றம் உடலால் நிகழ்ந்ததுதான், அவர்கள் விழிப்பு நிலையில் இருக்கையில் நிகழ்ந்ததுதான். இவ்வுலகக் காலகதியில் ஒருசில கணங்கள் மட்டுமே நிகழ்ந்த அந்த நிகழ்வில் முப்பத்தாறு வருடங்களின் அனுபவத்தை நபிகள் நாயகம் அடைந்து வந்தார்கள்!

(to be continued...)

3 comments:

  1. /// பாதிரி தன் நகர்வுக்காக ஒரு காயைக் கையில் எடுத்தபோது அவரின் கண்கள் முஹ்யுத்தீன் ஆண்டகையின் விழிகளைச் சந்தித்தன. பாதிரி தன் கண்களை இமைத்தார். இமைகள் திறந்த போது தான் ஒரு நதியில் மூழ்கிக் கொண்டிருக்கக் கண்டார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் அலறினார். ///

    முதல் முறை சுவாமி விவேகானந்தரை பரமஹம்சர் தொட்டபோது, இளைஞனான நரேந்திரர் இப்படிப்பட்ட அனுபவத்தையே அடைந்தாராம்.
    என்னை என்ன செய்கிறீர்கள்.எனக்கு வீட்டில் பெற்றோர் தம்பி தங்கைகள் இருக்கிறார்கள் என்று கூச்சலிட்டாராம்.

    நன்றி!

    ReplyDelete
  2. In General, when the narrator himself says expect a twist at the end, one gets self-aware and one tries to predict the twist but the twist was so thrilling. For some strange reason, it Reminds me of the never ending stairs (the one that is shown in the movie 'Inception')

    ReplyDelete