Thursday, January 6, 2011

ஆனந்த அலைகள்

"முன்பெல்லாம் ஒரு ஊருக்குள் போய் நான் ஆன்மிகவாதி என்று சொன்னால் காலில் விழுவார்கள், வீட்டுக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் நான் ஆன்மிகவாதி என்று யாராவது சொன்னால் இன்வெஸ்டிகேஷன் நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆன்மிகத்தை அப்படி ஆக்கி வைத்திருக்கிறோம்!"


2 .01 .2011 அன்று மாலை சென்னை YMCA மைதானத்தில் நடந்த 'ஆனந்த அலை' கூட்டத்தில் இப்படிப் பேசினார் ஜக்கி வாசுதேவ். இதுபோல் பல ஆனந்த அலைகள் அவர் சொற்பொழிவில் வீசிக்கொண்டிருந்தன. நித்தியைத்தான் இப்படிச் சுத்தியால் 'நச்' என்று நடு மண்டையில் போட்டுத் தாகுகிறார் என்பதை விளங்கிக் கொண்டதால் பார்வையாளர்களின் மத்தியிலும் ஓர் ஆனந்த அலை ஓடி மறைந்தது. நான் திருச்சியில் இருந்து "சங்கரா" சேனலின் வழியே கண்டு கொண்டிருந்தேன்.




ஜக்கி வாசுதேவின் பேச்சில் பல புதுமையான கருத்துக்களும், புதிய கோணங்களும் இருப்பதைக் கண்டு அவரை ரசிக்கத் தொடங்கினேன். அவரின் ஆளுமையை நான் ரசிப்பது ஆன்மிகத்துக்காக அல்ல என்றாலும் வேறு சில காரணங்கள் இருக்கின்றன:
1 . இத்தனை வயதிலும் ஒரு வாலிபனுக்குரிய சுறுசுறுப்புடன், தேக நலத்துடன் இருக்கிறார். வெறுமனே இருக்கிறார் என்பது மட்டுமல்ல கைப்பந்து விளையாடுகிறார், ஹோவர்கிராப்ட் ஓட்டுகிறார், மிருதங்கம் வாசிக்கிறார், நடனம் ஆடுகிறார் என்று அவருடைய 'ENERGY ' உண்மையிலேயே வியக்க வைக்கிறது. (பல்கலைக்கழக ஹாக்கி வீரராக இருந்தாராம்.)
2 . ஆங்கிலத்தில் பிய்த்து உதறுகிறார்.
3 . பட்லர் தமிழில் பேசுகிறார். அதிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறது!




ஆரம்பத்தில் அவருடைய கெட்-அப்களைப் பார்த்தபோது ஓஷோவைக் காப்பி அடிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றியது. அவருடைய கருத்துக்களும் அப்படித்தான் இருந்தன. ஓஷோவின் தாக்கம் நிச்சயம் இவரிடம் இருக்கிறது. வேறு வகையில் அதனை அவர் வடிவமைத்துக் கொண்டுள்ளார் என்றே எண்ணுகிறேன். முக்கியமான இன்னொரு விஷயம்  ஓஷோவைப் போலவே இப்படியும் அப்படியும் விமரிசனம் செய்வதற்கான வசதியை இவரே தருகிறார் என்பதுதான். ஜக்கி வாசுதேவ் கலைஞர் கருணாநிதியின் பினாமி என்பது வரை எதிர்வினைகள் அவர்மீது உண்டு!  

அவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிகவும் சீரியசானது என்று சொல்லவேண்டுமானால் அவருடைய மனைவியின் மரணம் பற்றி எழுந்த சர்ச்சையைத்தான் கூறவேண்டும். 23 -01- 1997 அன்று அவருடைய மனைவி விஜயகுமாரி இறந்தார். உடனடியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதில்தான் பலருக்குச் சந்தேகம் பிறந்தது. ஜக்கியின் மாமனார் டி.எஸ்.கங்கண்ணா தன் மகளின் இறப்பில் ஏதோ சதி இருப்பதாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். ஜக்கியோ  தன் மனைவி ஆழ்நிலை தியானத்தில் உயிர் துறந்துவிட்டார் என்று கூறினார். இருக்கலாம். இப்படி அவர் வாழ்வில் ஒரு எபிசோடு உண்டு.

ஆனால் அவருடைய பேச்சுக்களில் நான் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டியுருப்பது போன்ற பொறிகள் தெறிக்கும்போது அதை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரே மொத்தமான ஒரு தொகையில் தன் சீடர்களைக் கைலாச மலை வரை யாத்திரை அழைத்துச் சென்றவர்தான். ஆனால் YMCA மைதானத்தில் பேசும்போது ஒரு கருத்தைச் சொன்னார். வருடம் தவறாமல் இமயமலைக்குச் செல்லும் நடிகரை வாருவதுபோல் இருந்தது அது! ("ஆன்மிகத்துக்காக இமயமலைக்குப் போறாங்களாம், அங்கே யாரோ அவதாரமாம், அவரைப் பார்க்கணுமாம், அப்போதுதான் ஆன்மிகம் வருமாம். அதெல்லாம் தேவை இல்லை. ஆன்மிகம் என்பது இங்கே நீங்க இருக்கிற இடத்துலேயே வர்றது. ஆன்மிகம் உண்டாவது மனசுலதான். இமயமலைக்குப் போனாலும் இதே மனசுதானே இருக்கும். இதே மனசைத்தானே தூக்கிக்கிட்டுப் போவீங்க. இமயமலை அற்புதமான இடம்தான். இந்தியனா பிறந்த ஒவ்வொருத்தரும் ஒரு தடவையாவது இமயமலையைப் பார்க்கணும். அதுக்காகப் போங்க. ஆனால் ஆன்மிகத்துக்காக இமயமலைக்குப் போகவேண்டியதில்லை!)

சில இடங்களை அல்லது நபர்களை நாம் முதன் முதலாகப் பார்க்கும்போதே அதற்கு முன்பே எங்கோ எப்போதோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு தோன்றுவதுண்டு. சீல நிகழ்ச்சிகள்கூட அப்படி ரீப்ளே பார்ப்பதுபோல் தோன்றும். எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. நோயடிக் அறிவியல் (NOETIC SCIENCE ) இதனை PRECOGNITION என்றும் PRESENTIMENT என்றும் அழைக்கிறது. DEJA VU என்று இத்தைகைய அனுபவங்களுக்கு ஒரு பெயர் உண்டு. இதைப் பலர் பூர்வ ஜென்ம ஞாபகம் என்று எடுத்துக்கொண்டு குழம்புவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அதை ரொம்ப சீரியஸாக ஜக்கியிடம் விளக்கம் கேட்கிறார். ஜக்கியின் பதில் எப்படி இருந்தது என்கிறீர்கள். லாவகமான நக்கல்! (அதில் எனக்கு ஓஷோதான் தெரிந்தார்). அந்த உரையாடல் இதுபோல் இருந்தது:
"சத்குருஜி, சிலரை முதல் முறையாப் பார்க்கும்போது அவரை ஏற்கனவே பார்த்து பழகியிருக்கிறேன் என்று தோன்றுகிறது..."
"ரொம்ப அழகா இருப்பாங்க போல!"
"......? சத்குருஜி, இது பூர்வ ஜென்ம ஞாபகமா இருக்குமா?"
"இது இயல்பான ஒரு விஷயம்தான். இயல்பா நடக்குற ஒன்றுதான். இதை அப்படியே விட்டுருங்க. தேவையில்லாம பூர்வஜென்மமா இருக்குமோ அப்படி இப்படீன்னு குழப்பிக்காதீங்க"

இரண்டறக் கலந்து ஒன்றாகிவிட வேண்டும் என்ற தவிப்பு மனிதக் காதலிலும் உண்டு இறைக் காதலிலும் உண்டு. ஒருவரில் ஒருவர் இணைந்து ஒன்றாகிவிட காதலர்கள் தவிக்கிறார்கள். இறைவனை அடைய பக்தன் தவிக்கிறான். (அப்படி ஒன்றாகிவிட்டால் பிறகு காதல் ஏது?) இந்தத் தவிப்பின் 'அபத்தத்தை' ஒரு சொற்பொழிவில் ஜக்கி நக்கலடித்தார்: "ஒன்றாகிவிடனும்னு அப்படி ஒரு தவிப்பு. ஏற்கனவே இது (தன்னைச் சுட்டுகிறார்) ஒன்றாகத்தானே இருக்கு?" உண்மைதான். யோகி என்பவன் அனைத்தும் ஒன்று என்பதை அனுபவத்தில் உணர்ந்து அந்த அனுபவத்திலேயே நின்று வாழ்பவன். அதனால் இப்படி இவ்வளவு எளிமையாகச் சொல்லிகிட முடியும். ஆனால் இது எப்படிக் காதலர்களுக்குப் புரியும்?

ஜனவரி 2004 -ல் EVOLVE என்னும் பத்திரிகையில் ஜக்கியுடன் ஒரு நேர்காணல் வெளியானது. அதில் ஒரு கேள்வி: "சத்குரு, உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமுடியுமா? நீங்கள் எந்த மரபில் அல்லது பாரம்பரியத்தில் வருகிறீர்கள்?" இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: "அடிப்படையில், நான் எந்தவொரு குறிப்பிட்ட மரபிலிருந்தும் வரவில்லை. நான் உள் அனுபவத்திலிருந்து வருகிறேன். ஆனால், இப்போது நான் பார்க்கும்போது, உலகின் ஒவ்வொரு மரபிலும் நான் இருக்கிறேன்!"



இந்த பதிலை வைத்துக்கொண்டு அவர் தன்னை ஒரு இந்து என்று கருதவில்லை என்பதாகவெல்லாம் கூறுகிறார்கள். இது வேறு ஒரு தளத்தில் கூறப்பட்ட பதில். அவருடைய தியான முறைகளும் யாத்திரைகளும் கொண்டாட்டங்களும் அவரை இந்து மரபில்தான் அடையாளம் காட்டுகின்றன. தான் அடைந்த அக அனுபவத்தின் வழியே அதை அவர் வார்த்துக் கொள்கிறார் என்பதுதான் கவனிக்கவேண்டியது. இந்த விடையில் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால் இதே கருத்தை ஓரிடத்தில் ஓஷோ கூறியுள்ளார் என்பதுதான். "நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல. எல்லா மதங்களும் என்னைச் சேர்ந்தவை!" (I don't belong to any religion. All religions belong to me!)  என்று மிக எகத்தாளமாகக் கூறுவார். கூர்ந்து கவனித்தால் அதில் 'ஏக தாளம்' இருப்பது புரியும்!

ஜக்கி தன் யோகா முறையை "ஈஷா யோகம்" என்று அழைக்கிறார். ஈஷாவாச்ய உபநிஷத்தின் ஆரம்ப வாசகத்திலேயே இந்தப் பெயர் வருகிறது. பதஞ்சலி முனிவரின் யோகா முறைமையை அடிப்படையாக வைத்துத்தான் இதை அவர் உருவாக்கியிருக்கிறார். இதெல்லாம் இந்து ஞான மரபில் அவர் வருவதைத்தான் காட்டுகிறது. நெருடும் ஒரு விஷயம் என்னவென்றால் இதற்கெல்லாம் ஒரு R வட்டம் போட்டு வணிகம் செய்கிறார்கள் என்பதுதான். ஆனால் இதையெல்லாம் வெளியே இருந்து விமர்சிப்பது எளிது. 'உள்குத்து' எவ்வளவு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஜாக்கியாவது பரவாயில்லை "ஈஷா யோகம்" என்று ஒரு சொற்றடரைப் புதிதாகக் 'காயின்' செய்து வட்டம் போடுகிறார். ஆனால் "வாழும் கலை" (ART OF LIVING ) கற்றுத் தரும் ஸ்ரீ ஸ்ரீ  ரவிஷங்கர் தன் தலைப்பில் வட்டம் போட்டிருப்பதை என்னவென்று கூறுவது? இதே தலைப்பில் அவருக்கு முன்பே ஓஷோவின் ஒரு நூல் வெளிவந்துவிட்டது. சொல்லப்போனால் ART OF LIVING என்பது ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி எபிக்டீடஸ் பெயரால் உள்ள ஒரு நூலின் பெயராகும். அவரே அதற்கு ரெஜிஸ்டர் வட்டம் போடவில்லை!

சரி, இதெல்லாம் இருக்கட்டும். இந்தக் கட்டுரையை நான் கணினியில் தட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொல்கிறார்: "சாமியாரப் பத்தியா எழுதுறீங்க? சூதானமாட்டு எழுதுங்க. பின்னால இவரும் ஏடாகூடமா மாட்டிக்கிட்டா என்ன செய்வீங்க?" அவர் சொல்வதிலும் பாய்ண்ட் இருக்கிறது. நித்த்தியைப் பத்தி "CHILD PRODIGY " என்று நாகூர் ரூமி எழுதிவிட்டு சாமியார் மாட்டிக்கொண்டு மாமியார் வீட்டுக்குப் போனதும் ஏண்டா எழுதினோம் என்று விளக்கம் சொன்னாரல்லவா? அதுபோல் ஜக்கி விஷயத்திலும் ஆகிவிடுமோ என்று நண்பர் கவலைப் படுகிறார். 'நம்பித்தானேங்க எழுதுறோம்' என்றேன் நான். ரிஸ்க் எடுக்கிறது நமக்கெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி இல்லையா?

4 comments:

  1. இது வீணான ரிஸ்க்

    ReplyDelete
  2. உங்களுக்குமா? சொல்லவே இல்ல.

    ReplyDelete
  3. I too see that Jakki is simple and INNOCENT... And we too should be innocent, na?

    ReplyDelete