Thursday, December 30, 2010

சினி சித்தர்

அரைக்கால் சட்டைப் பருவத்தில் செருப்பில்லாக் கால்களுடன் தெருத் தெருவாக ஓடி விளையாடிய காலத்தில் தூர்தர்ஷனில் பார்த்த தமிழ்ப் படங்கள் என்ன ஜெனரல் நாலஜை வளர்த்ததோ சொல்லமுடியவில்லை. அனால் அதற்கென்று சில தனித்தன்மைகள் இருப்பதை உணரமுடிகிறது. அதில் ஒன்று திடீரென்று திரையில் தோன்றித் தத்துவக் கருத்துக்களைப் பாடல்களாக சுருதி சுத்தமாகப் பாடும் கேரக்டர்கள். இவர்கள் பாடும் கருத்துக்களை வைத்துப் பார்க்கும்போதும், கதையில் யாருடனும் தொடர்பின்றி தனியாக வந்துபோவதாலும் இவர்களைத் தமிழக சித்தர் மரபுடன் இணைத்துப் பார்க்கலாம்.



இந்த 'OUT OF BLUE ' சித்தர்கள் செய்யும் பணி என்ன என்று பார்க்கும்போதுதான் கதாநாயகனின் உந்துசக்தியே இவர்கள்தான் என்பது புரியும். தாய் தந்தையை இழந்து கதாநாயகன் அனாதைக் குழந்தையாக அழுதுக் கதறும்போது சட்டென்று தோன்றும் இந்த சித்தர் தன் தத்துவப் பாடலால் அவன் அழுகையை நிறுத்துவதுடன் அவனுடைய வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் ஒரு ஐடியாவை அவன் மனதில் விதைக்கிறார். (இவ்வாறு அவர் பாடல் இரண்டு தளங்களில் இயங்குகிறது!)  கால காலமாக தமிழ்ப் படங்களில் திடீர் சித்தர்கள் செய்யும் இந்தப் பணியைத்தான் ஹாலிவுட்டில் இப்போது கிறிஸ்டோபர் நோலன் INCEPTION என்னும் திரைப்படத்தில் விஸ்தாரமாக எடுத்து பிலிம் காட்டுகிறார்!



தமிழ்ப் பட சித்தர்களுக்கென்று சில பொதுத் தன்மைகள் உள்ளன. அவர்கள் தாடியுடன் தோன்றுவார்கள். (குளிப்பார்களா என்று தெரியவில்லை.) சீவாத பரட்டைத் தலையுடன் இருப்பார்கள். இதுவே அவர்களுக்கு ஒரு அமானுஷ்ய தன்மையை வழங்கிவிடும். அவர்கள் பெரும்பாலும் இரவில்தான் தோன்றுவார்கள். இது அவர்களைச் சுற்றி ஒரு மர்மத் தன்மையை பரவவிடுகிறது. குறிப்பான ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் கறுப்பு நிறக் கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருப்பார்கள்! இதனை அவர்கள் சூபி மரபிலிருந்து எடுத்திருக்க வேண்டும். பொதுவாக சூபிகளை 'முஸ்லிம் சித்தர்' என்று அழைப்பார்கள். சூபிகளின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் முரட்டுக் கம்பளி போர்த்தியிருப்பார்கள் என்பது. அவ்வகையில் இந்த சித்தர்களும் கறுப்புக் கம்பளி போர்த்தியுள்ளார்கள் போலும். இதுமட்டுமல்ல, அவர்களில் பலர் கையில் தபஸ்/ தாயிரா வைத்துக் கொண்டு பாடுவதும் தர்காக்களில் பாடுகின்ற தர்வேஷ்களுடன் அவர்களுக்கு ஒரு லிங்க் இருப்பதுபோல் காட்டுகிறது. 

இவர்களில் சிலரின் அருகில் நாய் ஒன்று இருக்கக் கூடும். அது பட்டினத்தாரின் மரபு. நாய் என்றால் ஏதோ அல்சேஷன், பாமரேனியன், டாபர்மேன் போன்ற உயர்ஜாதி நாய்கள் அல்ல. சித்தர்கள் பொதுவாக மேல்சாதிக்கு எதிரானவர்கள் என்பதாலும் அவர்களின் போக்கே ஒரு தினுசாகத் திரிந்து கொண்டிருப்பதுதான் என்பதாலும் அவர்களுடன் இருப்பது திரி-நாய்கள் (STRAY DOGS ) மட்டும்தான். கழுத்திலே லெதர் பட்டி அணியாத துறவுப் பட்டிகள் அவை.

சினிமாவில் வரும் இந்த சித்தர்களின் முக்கியப் பணியே அல்லது ஒரே பணியே கதாநாயகன் குழந்தையாக அல்லது சிறுவனாக இருக்கும்போதே அவனது பிறப்பின் நோக்கத்தை அவனது மனதில் புரோக்ராமிங் செய்வதுதான் என்பதால் அவர்களை நாம் பேபி சிட்டர்ஸ் என்பதுபோல் பேபி சித்தர்ஸ் என்று அழைக்கலாம்! 

தமிழ்ப் படங்களில் இவ்வாறு இன்றியமையாத ஒரு பாத்திரமாக உள்ள இந்த சித்தர்களின் பாடல்களை ஊன்றிக் கவனித்தபோது அதன் அடிநாதமாக ஒரு குரல் ஒலிப்பதைக் கேட்டேன். அது இசைஞானி இளையராஜாவின் குரல்! ஆமாம், பெரும்பாலான சித்தர் கேரக்டர் பாடல்களை அவர்தான் பாடியிருக்கிறார். எனவே அவரை நான் 'சினி சித்தர்' என்றே அழைக்க விரும்புகிறேன்!



இளையராஜா இப்போது பழையராஜா ஆகிவிட்டாலும் அவருடைய இசைப்பணி ஒரு சகாப்தம் என்பது நிறுவப்பட்டுவிட்டது. எனவே நிதானமாக அவரின் ஆளுமையை அசைபோட்டுப் பார்க்க முடிகிறது. அவ்வகையில் எனக்கு ஏற்பட்ட அவதானங்களில் ஒன்று அவருடைய குரல்தான் அச்சு அசலாக ஒலித்த முதல் கிராமத்துக் குரல் என்பது. அல்லது அவரது இசையில்தான் எனலாம். சீர்காழி கோவிந்தராஜனோ டி.எம்.சவுந்தர்ராஜனோ வேறு வகையில் நல்ல குரலாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக அவை கிராமத்து உயிரோட்டம் உள்ளவை அல்ல. அதற்கு ஒரு குரல் பண்ணைப்புரத்து ராசையாதான்!

சினி சித்தரின் ஆன்மிக நாட்டம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஹங்கேரி ஆகட்டும் யூ.கே ஆகட்டும், தன் சிம்பனி ஒலிப்பதிவுக்கு முன் தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி வெள்ளையர்களைக் கலவரப்படுத்திவிட்டுத்தான் ஆரம்பித்தார். அவர் தலைமையிலான ஒரு படத் துவக்க விழாவில் இதே போல் அவர் செய்ய "படம் துவக்குகிறார்களா மடம் துவக்குகிறார்களா?" என்று ஒரு வார இதழில் எழுதினார்கள். அப்படிப்பட்ட நம் சினி சித்தருக்கு தமிழக சித்தர் மரபின்மீதும் தனி ஆர்வம் உண்டு. சித்தராகவே வாழ்ந்த ரமண மகரிஷியின் மரபில் தன்னை இணைத்துக் கொண்டவர் அவர். குணங்குடி மஸ்தான் சாகிபை ஒரு முஸ்லிம் சித்தராகவே மதித்து அவரின் தர்காவிலும் தியானம் செய்தவர். இதுபோன்ற ஒரு சித்தர் ஆளுமையைத்  தன்னுள் வைத்திருக்கும் அவரின் திரைப்பாடல்களில் மட்டும் அது வெளிப்படாமலா போய்விடும்? எனவே வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தத்துவத்தைப் பொழிந்து தள்ளியிருக்கிறார்! அதற்கு எசவாப்  பாட்டெழுத நல்லா அகப்பட்டாரே பாக்கலாம் தாடிக்காரக் கவிஞர் வாலி. கேக்கவா வேணும்? (ஆன்மிக விருப்பமெல்லாம் இல்லாத பிற கவிஞர்களையும் அவர் சித்தர் பாடல்கள் எழுத வைத்துள்ளார், பொருள்முதல்வாதி வைரமுத்து உட்பட!)

சித்தர் பாடல்களில் காணலாகும் தத்துவங்களில் ஒன்று தேகத்தைப் பழிப்பது. காயமே இது பொய்யடா / வெறும் காற்றடைத்த பையடா என்ற வரிகள் பிரபலமானவை. தமிழ்த் திரைப்பாடல்களிலேயே ஆக 'ரா'வான தேகப் பழிப்புப் பாடலாக நான் கருதும் பாடல் சினி சித்தர் பாடிய பின்வரும் பாடல்தான்.
"அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைத்த  
குப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே !
குப்பையாக வந்த உடம்பு!- இது
புத்தனென்றும் பித்தனென்றும் சித்தனென்றும் ஆவதென்ன 
சக்கையாகப் போகும் கரும்பு - ஞானப் பெண்ணே! 
சக்கையாகப் போகும் கரும்பு!
பந்தப் பாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்?"
என்பது அந்தப் பாடலின் பல்லவி மட்டுமே! இதே பொருண்மை கொண்ட இன்னொரு பாடல்:
"காலிப் பெருங்காய டப்பா 
அதுல வாசனை பலமாத்தான் இருக்கு
இந்த தேகம் அது சந்தேகம்
இந்தக் காயம் வெறும் வெங்காயம்"
(இன்னொரு விதமான ஞானப் பார்வையில் இந்தக் காயம் காலி டப்பாவோ அல்லது வெறும் வெங்காயமோ அல்ல, இது பெருங்காயம் என்பதைக் கண்டுகொள்ள முடியும்!)

தேகாத்ம விசாரம் எப்போது ஆரம்பித்து விட்டதோ "நான் யார்?" என்ற கேள்வி தானாகவே தோன்றிவிடும். ரமணரின் KEY - QUESTION இதுதான். வேறு கேள்விகள் எல்லாம் அர்த்தமற்றவை என்று அவர் கூறுவார். "தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்" என்பது சூபிமொழி/வழி! அதைத்தான் நம் சினி சித்தர் சொல்கிறார்:
"நான் யாரு? எனக்கேதும் தெரியலியே!
அதைக் கேட்டால் நான் சொல்ல வழியில்லையே!"

பல பேர் வெளியே டாம்பீகமாகத் திரிகிறார்கள். உள்ளத்தில் உளுத்துப் போன கட்டையாக இருக்கிறார்கள். வெளியே வெளுப்பு - உள்ளே கறுப்பு என்பது அவர்களின் நிலை. ஞானி இந்த நிலையை தலைகீழாக்கி விடுகிறார். அவருடைய 'நான்' என்பது ஆன்மிக மல்யுத்தத்தில் புரட்டப்பட்ட நான். "பிறரை வீழ்த்துபவன் வீரனல்ல, தன்னை வீழ்த்துபவனே வீரன்" என்று நபிகள் நாயகம் இதனைக் குறிப்பிட்டார்கள். "சூபி என்பவர் பாழடைந்த கோட்டைக்குள் மறைந்துள்ள அரண்மனை" (A SUFI IS A PALACE IN RUIN ) என்றார் ஷம்ஸ் தப்ரேஸ். ஞானிகள் வெளித்தோற்றத்தில் பிச்சைக் காரர்களைப்போல் இருந்தாலும் உள்ளே பேரரசர்களாக இருக்கிறார்கள். அவர்களே உண்மையில் உலகத்தை வென்ற மன்னர்கள்! எனவேதான் பல மண்-மன்னர்களின் பொன் மகுடங்கள் அவர்களின் பாதங்களில் பணிந்தன. மாவீரன் அலேக்சாந்தர்கூட ஒரு ஞானியைத் தேடித்தான் இந்தியாவுக்கு வந்தான் என்று ஒரு குறிப்பு உண்டு. "உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி / ஆனால் உண்மையில மெழுகுவர்த்தி" என்று சினி சித்தர் சோகத்தில் பாடுவார். ஞானிகள் தம் போதத்தால் காலம் - இடம் கடந்தவர்கள் அல்லவா? அவர்களுக்கு முன் சுண்டைக்காய் சாம்ராஜ்ய ராஜாக்கள் எம்மாத்திரம்? சினி சித்தர் சொல்வதைப் பாருங்கள்:
"நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா.
கோட்டை இல்லை கொடியும் இல்லை
அப்பவும் நான் ராஜா."

சித்தர் பரிபாஷை என்று ஒன்று தனியாக இருக்கிறது. அது ஆழமான ஒரு குறியீட்டு மொழி. நேரடியாகப் பொருள் கொண்டால் அபத்தமாக, சில சமயம் விபரீதமாக ஆகிவிடும். மாங்கைப்பால் - தேங்காய்ப்பால் என்றெல்லாம் குதம்பைச் சித்தர் பாடுகிறாரே, அதுமாதிரி. Don't mess with it, if you don't know the language. இந்த உலகத்தை ஒரு காடு என்பார்கள். "வேட்டை பெரிதென்று வெறிநாயைக் கைப்பிடித்துக் காட்டில் புகலாமோ என் கண்ணே றகுமானே" என்பார் குணங்குடி மஸ்தான். அதாவது, காஞ்ச மாடு கம்பங் காட்டுல பாஞ்ச மாதிரின்னு சொல்றாங்களே, அதுமாதிரிதான் அர்த்தம்தான் இதுவும். சினி சித்தர் ஒரு பாட்டுல சொல்றார்:
"காட்டு வழி கால் நடையா போற தம்பி 
அதி காலையில சேருமிடம் சேர்ந்துவிடு"
ஞானம் அடையும் கணத்தைதான் அதிகாலை - விடியல் என்று சொல்வார்கள். "என்னைக்குத்தான் எனக்கு விடியுமோ?" என்று புலம்புகிறோம் அல்லவா? உண்மை விடியல் உள்ளே நிகழ்வதுதான்!

"சினி சித்தர் அவர்களே! ஞானம் எங்கே கிடைக்கும்? அதைத் தேடுபவன் எங்கே செல்ல வேண்டும்?" என்று கேட்டால் அவர் என்ன சொல்வார் என்று நினைக்கிறீர்கள். இமய மலை, திருவண்ணாமலை என்றா சொல்வார்? அவர் பாடிய பதில் இதோ:
"ஐயா வூடு திறந்துதான் கிடக்கு 
உள்ளே புகுந்து பந்தி போடு 
முத்துக் கடலு மூடியா கிடக்கு 
முடிஞ்சா எடுத்து மாலை போடு"
இதே கருத்தைத்தான் தன் நூல் ஒன்றுக்குத் தலைப்பாக வைத்தார்: "வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது." (ஆனால், 'ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்' என்று அவர் பாடிய பரிபாஷையின் அர்த்தம் என்ன என்பதை நான் அறியேன். விவேக்கின் கற்பனையில் கிருபானந்த வாரியார் சொன்ன பொழிப்புரையைக் கேட்டுத் தெளிவு பெருக!)

சித்தர்களின் பாடல்களில் காணலாகும் இன்னொரு பொதுக்கூறு பெண் வெறுப்பு என்பதாகும். காமத்தைக் கடப்பதற்குச் சித்தர்கள் பலரும் தடுமாறியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். அதனால் பெண்ணை - அவள் உடலை - மிக மட்டமான ஒன்றாக அருவருத்துப் பாடியுள்ளார்கள். சினி சித்தர் அந்த அளவுக்கெல்லாம் போகவில்லை என்றாலும் பெண் மனம்தான் மனிதனுக்கு என்றுமே புரியாத புதிர் என்னும் கருத்தைத் தன் பாடல்களில் கூறுகிறார்.
"ஆறும் அது ஆழம் இல்ல - அது
சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா - இந்தப்
பொம்பள மனசுதான்யா"
"பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்குத் தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்?
அதில் முத்திருக்கா? முள்ளு தச்சிருக்கா?
யாருக்குத்தான் தெரியும்?"
என்ற பாடல்கள் சரியான சாம்பிளாக இருக்கும்.

எல்லா செண்டிமென்ட்டுகளையும் தாண்டிய சித்தர்களுக்குக்கூட தாய்ப்பாசம் என்னும் செண்டிமெண்ட் தாண்ட முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது.தன் தாய் இறந்தபோது பட்டினத்தார் கதறிப் பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தம்.('தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்?'). சினி சித்தரும் இதற்கு விதிவிலக்கல்ல. இது அவர் அன்-அப்போஸ்டாக ஜெயிக்கும் தொகுதி! ஹீரோவின் அம்மா செத்துப் போவதாக ஏதாவது ஒரு டைரக்டர் தப்பித் தவறி ஒரு காட்சியை வைத்துவிட்டால் போதும், 'எல்லோரும் ஒத்துங்கப்பா' என்று கையில் மைக்கைத் தூக்கிவிடுவார். 
"தாயென்னும் கோவில காக்க மறந்துட்ட பாவியடி கிளியே!- என் 
வாயும் வயிறையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே!"
என்று கண்ணீர் கரைந்தோடும். "ஏன் ராசா இப்படி?" என்று கேட்டுவிட்டால் போதும், 'அம்மான்னா சும்மா இல்லேடா' என்று அதற்கும் ஒரு பாட்டு எடுத்துவிடுவார்.

சித்தர்களின் பாடல்களில் "விளி" என்பது ஒரு பாணி. 'குதம்பாய்! குதம்பாய்!' என்று அழைத்துப் பாடுவார் குதம்பைச் சித்தர். 'பாம்பே! பாம்பே!' என்று பாடுவார் பாம்பாட்டிச் சித்தர். மனோன்மணியே! என்று பாடுவார் மஸ்தான் சாகிபு. அதுபோல் நம் சினி சித்தர் ஞானப் பெண்ணே! என்றும், கிளியே! என்றும், கண்மணி! என் கண்மணி! என்றும் அழைத்துப் பாடியுள்ளதைக் கவனிக்கவும்.

இப்படி ஒரு கால் நூற்றாண்டு ஓடியது. சித்தர்கள் சினிமாவிலாவது வந்து கொண்டிருந்தார்கள். தத்துவங்களைத் தந்துகொண்டிருந்தார்கள். பிறகு ஒரு நாள் ஏ.ஆர்.ரகுமான் வந்தார். சித்தர்களை எல்லாம் துரத்தியடித்தார். தத்துவம் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டது. கையில் கிதார் எடுத்துக்கொண்டது. ஆலமரத்தடி அரசமரத்தடி என்ற லொகேஷன் எல்லாம் மாறிவிட்டது. சுழலும் வண்ண விளக்குகள் ஒளி பீச்சும் பப்பில், தலை கால் புரியாத மப்பில் அது ஆடுகிறது.

"யாக்கை திரி 
காதல் சுடர் 
ஃபனா!

ஜீவன் நதி 
காதல் கடல் 
ஃபனா!"

5 comments:

  1. இதே அலைவரிசையில் எனக்கு பிடித்த சினிசித்தர் பாடல்:
    கனவு காணும் வாழ்க்கை யாவும்
    கலைந்து போகும் கோலங்கள்
    துடுப்பு கூட பாரம் என்று
    கரையை தேடும் கோலங்கள் -
    பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி
    இருக்கின்ற தென்பது மெய் தானே
    ஆசைகள் என்ன ஆணவம் என்ன
    உணர்வுகள் என்பது பொய் தானே
    உடம்பு என்பது உண்மையில் என்ன..?
    கனவுகள் வாங்கும் பை தானே -
    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
    வாலிபம் என்பது பொய் வேஷம்
    தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
    போனது போக எது மீதம்
    பேதை மனிதனே கடமையை இன்றே
    செய்வதில் தானே ஆனந்தம்.

    ReplyDelete
  2. சினி சித்தரைத் தூக்கும் வேளையில்
    மினி சித்தரைத் தாக்கலாமோ
    கனி முதிர்க்கும் தருணமிது
    இனி தருவார் முக்கனி விருந்து :)

    ஆமாம், சினி சித்தரும் கணீர்ப் பித்தரும்
    இணைந்து கலக்கிய
    'நட்ட நடுக் கடல் மீது நான் பாடும் பாட்டு'
    பற்றி சொல்லவேயில்லை.

    ReplyDelete
  3. //"தாயென்னும் கோவில காக்க மறந்துட்ட பாவியடி கிளியே!- என்
    வாயும் வயிறையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே!"
    என்று கண்ணீர் கரைந்தோடும். "ஏன் ராசா இப்படி?" என்று கேட்டுவிட்டால் போதும், 'அம்மான்னா சும்மா இல்லேடா' என்று அதற்கும் ஒரு பாட்டு எடுத்துவிடுவார்.//

    கண் கலங்கிப்படித்தேன். நல்ல ஆக்கம்.

    ReplyDelete
  4. சினி சித்தர் இளையராஜா என்று எழுதியதற்கு பாராட்டுகள் ஆசிரியரே

    ReplyDelete
  5. பித்தம்
    சித்தம்
    தத்தம்
    உத்தம்

    ReplyDelete