Sunday, December 5, 2010

உருவெளிக் களங்கள்- 8

பதினைந்து வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது அலசப்பட்ட ஒரு பாய்ண்ட் ஞாபகத்திற்கு வருகிறது. அது கல்லூரிப் பருவம். அரசியல் சினிமா இலக்கியம் இத்தியாதி அத்தியாதி என்று பாடத்தைத் தவிர பிற எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தன. அதில் சினிமா அதிக வாக்குகள் பெற்று ஜெயித்து எப்போதும் ஆளுங்கட்சியாக இருந்தது. கோலிவுட் பாலிவுட் ஆலிவுட் என்று எல்லா வுட்டுகளையும் கொத்திக் கொண்டிருந்த மரங்கொத்திகளாக இருந்தோம். சினிமா என்றாலே அலர்ஜியாகி அப்பால் ஓடுகின்ற சில நல்லப்பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவோம். அவர்கள் எங்களுக்கும் சேர்த்துப் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்.

அப்படியான ஒரு வசந்த காலத்தில் நண்பன் ஒருவன் வீட்டின் மொட்டை மாடியில் நொறுக்குத் தீனிகளுடன் நடந்துகொண்டிருந்த ஜமாவில் அழகியல் பற்றிய பேச்சு கிளம்பியது. அலுக்காத உருப்படியான விஷயம் வேறு என்ன இருக்கிறது?
"கடவுள் எல்லா உயிரினத்திலும் பெண்ணை விட ஆணைத்தான் அழகாக்கி வைத்திருக்கிறான். யானைக்குத் தந்தம், சேவலுக்கு வால், மயிலுக்குத் தோகை என்பதுபோல. மனித இனத்தில் மட்டும் அதை ரிவர்ஸ் செய்திருக்கிறான். ஆணைவிட பெண்தான் அழகாக இருக்கிறாள்" என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. வைத்த ஞானி நான்தான் என்று ஞாபகம். கலீல் கிப்ரானின் எழுத்துக்களில் மூழ்கியிருந்த காலம் அது. நான் வேறுவிதமாக 'உளற' முடியாது என்பது எனக்கே தெரிந்திருந்தது! ஆனால் என் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவதற்கும் ஆள் உண்டு என்பதால் உரையாடல் தொடர்ந்தது.

"நீ சொல்றது சரியாப் படல. மனித இனத்துலயும் பெண்ணைவிட ஆண்தான் அழகு"     
"நீங்க ரெண்டுபேரு சொல்றதுமே உண்மைன்னு படுது. அழகு பொதுவானது. ஆண் பெண் ரெண்டு பேரிலுமே அழகானவங்க உண்டு."
"எனக்கு இன்னொரு விதமாத் தோணுது. பெண் முதுமையில் விடவும்  இளமையில் அழகா இருக்கா(ள்). ஆண் இளமையில் விடவும் முதுமையில் அழகா இருக்கான்."

மேற்சொன்ன கருத்தை நான் கூறவில்லை. என் நண்பன் யாரோ சொன்னான். அந்த மகாஞானி யாரென்று நினைவில்லை. ஆனால் அந்தக் கருத்து எனக்கு உடனே பிடித்துப் போனது. என் மனதில் ரமணர், ஓஷோ, அரவிந்தர்  போன்றவர்களின் முகங்கள் தோன்றி வந்தன. அவர்களின் இளமைக் கால உருவத்தைவிட முதுமைக் கால உருவங்கள் அழகானவைதான் என்று உணர்ந்தேன். பெண்களில் அப்படி ஓர் ஆளுமையை என்னால் நினைவுகூர முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை இது ஆணாதிக்கச் சமூகத்தின் பாதிப்பாக இருக்கலாம். கோலி-ஹாலி-பாலிவுட்களில் இளமை இருக்கும் சொற்ப காலத்திற்குத்தான் பெண் முன்மொழியப்படுகிறாள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களும் அவளை வழிமொழிகின்றன. இளமை தீரும்போது அல்லது முதுமை லேசாக எட்டிப்பார்க்கும்போது அவளை அவை ஒதுக்கிவிடுகின்றன. ஆனால் கதாநாயகன்களோ விட்டால் கொள்ளுப் பேத்திகளுடனும்  டூயட் பாடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இது ஒரு அசிங்கமான ஆணாதிக்கம் அல்லாமல் வேறு என்ன?

அதன் பிறகு என்னென்ன பேசிக் கொண்டிருந்தோமோ தெரியவில்லை. விஷயம் வட்டமடித்து மீண்டும் நான் ஆரம்பத்தில் சொன்ன கருத்தையே தொட்டது. இம்முறை அது ஆன்மிகத்தைத் தன் கையில் ஆயுதமாக எடுத்தது.
"ஆணைத்தான் அழகான உருவத்தில் படைத்ததாக இறைவன் கூறுகிறான்" என்று ஒரு நண்பன் சொன்னான். அவன் குறிப்பிட்டது திருக்குரானின் ஒரு வசனத்தை மனதில் வைத்து.
"திண்ணமாக நாம் மனிதனை
மிக்க அழகிய அமைப்பில் படைத்தோம்" (95 :4 )
என்னும் அந்த வசனத்தில் உருவம் - சூரத் -  என்ற சொல் வரவில்லை. "அஹ்சனித் தக்வீம்" என்று வந்துள்ளது. அஹ்சன் என்பது உச்சநிலை அழகைக் குறிக்கும் SUPERLATIVE DEGREE . தக்வீம் என்பது அமைப்பு என்று பொருள் தொனிக்கின்ற சொல். அகம் புறம் இரண்டையுமே ஒருசேரக் குறிக்கின்ற சொல். அதன்படி இந்த வசனக் கருத்தை உடலின் உருவம் சார்ந்து பொருள் கொள்ளவும் இடம் இருக்கிறது. "இன்சான்" - மனிதன் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளபோதும் 'ரஜுள்' - ஆண் என்று சொல்லப்படவில்லை. எனவே இந்த வசனம் ஆண் பெண் இருவரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் இறைவன் முதலில்  ஆதாம் என்னும் ஆணைப் படைத்ததாகத்தான் திருக்குர்ஆன் கூறுகிறது. அதன்படி இந்த வசனம் குறிப்பிடுவது ஆணைத்தான் என்று ஒரு வாதம் உருவானது. (எங்கள் 'உருப்படாவெட்டி' ஜமாவில்தான்.வேறெங்கே, ஐ.நா.சபையிலா?).இந்த வாதத்தையே என் மணம் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தது. ஒரு புதிய கதவு என் மூளையில் திறந்தது போல் இருந்தது. இறைவன் முதலில் ஆதாம் என்னும் ஆணைப் படைத்தான் என்பது உண்மைதான். ஆதாமை அவன் களிமண்ணில் இருந்து படைத்ததாகக் குரான் சொல்கிறது. ( சில நேரங்களில் வடை சரியாகப் பொரியாமல் உள்ளே மாவாக இருப்பது போல் சில மனிதர்களின் மண்டைக்குள் மூலப் பொருளாகவே இருக்கிறது போலும்.) அதன் பிறகு பெண்ணை இறைவன் ஆதாம் என்னும் ஆணின் விலா எலும்பிலிருந்து படைத்தான். அதன்படி ஆண் மண்ணிலிருந்து வந்தவன். ஆனால் பெண் மண்ணிலிருந்து வந்தவள் அல்ல! கச்சாப் பொருளில் இருந்து உருவாக்கப்பட்டுச் செம்மைப்படுத்தப் பட்டவன் ஆண். 
"உம் மேலான ரட்சகனைத் துதிப்பீராக!
அவன் எத்தகையோன் எனில் 
படைத்தான், பின் செம்மை செய்தான்" ( 87 : 1 , 2 )
எனவே பெண் என்பவள் செம்போருளில் இருந்து படைக்கப்பட்ட அரும்பொருள்! தூய்மையின் தூய்மை!

இப்படி ஒரு வெடியை நான் கொளுத்திப் போட்டதும் நண்பர்கள் முகத்தில் ஈயாடவில்லை. சூப்பரான சிந்தனை என்று சிலர் பாராட்டினார்கள். சிலர் இதை ஒத்துக்கொள்ளவில்லை. (இக்கருத்து அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. எல்லோருக்கும் எல்லாம் ஒத்துக்காது அல்லவா?).

என் மூளை திரி கிள்ளிக் கொண்டிருந்த அடுத்த வெடியை நான் பற்றவைத்தேன். "ஆணின் உருவம்தான் பெண்ணைவிட அழகானது என்றால் இறைவனின் படைப்பாற்றலை அது குறைத்து மதிப்பிடுவதாகும். ஏனெனில் மனிதன்தான் இறைவனின் உச்சகட்டமான படைப்பு. அதில் பெண் சிகரம்." என்று கூறினேன். சிலருக்கு இந்தக் கருத்து பேதியை உண்டாக்கியிருக்கக் கூடும். தர்க்கத்தின் விளையாட்டாக இப்படிக் கூறினேனே தவிர அதுதான் உண்மை என்றெல்லாம் அடித்துச் சொல்லவில்லை. அழகு என்னும் விஷயமே திட்டவட்டமான முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. அதில் எந்தக் கருத்தும் முழு உண்மை அல்ல என்பது எனக்குத் தெரியும்.பெண்ணின் படைப்பு மற்றும் உருவம் குறித்து இப்படிப் பல கேள்விகளும் விடைகளும் மனதில் தோன்றி வந்துள்ளன. பெண்ணுருவே புதிரும் வியப்புமாகத்தான் இருக்கிறது. ஆணின் ஜோடியாகப் படைக்கப்பட்டவள் அவள். ஆனால் அவள் ஆணைப்போல் இல்லவே இல்லை! பிற உயிரினங்களில் உள்ள ஆண்-பெண் உருவ வேற்றுமையை விடவும் மனிதப் படைப்பில் அதிகம் என்றே படுகிறது. ஒருவேளை  நான் மனிதன் என்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ? ஒரு பெண்ணின் பாதத்தின் படத்தை அல்லது கையின் படத்தை மட்டும் காட்டினால் போதுமே, அது பெண்ணுடையது என்று சொல்லிவிட முடிகிறது அல்லவா? கசாப்புக் கடையில் காலை மட்டும் பார்த்து கிடாவா பெட்டையா என்று அதுபோல் சொல்ல முடியுமா?

"டீசிங்"-ஆக ஒரு கேள்வியை என் நண்பர்களிடம் நான் கேட்டேன்.(ஈவ் டீசிங்காக அல்ல. வேண்டுமானால் ஆதம் டீசிங் என்று சொல்லலாம்). அதாவது, ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஆடைகள் உள்ளன. எல்லாக் கலாச்சாரத்திலும் இந்த வேற்றுமை இருக்கிறது. ஆனால் பெண்ணுக்கென்று பிரத்தியேக ஆடைகள் உள்ளது போல் ஆணுக்கென்று பிரத்தியேக ஆடைகள் இல்லை என்றே படுகிறது! பொதுவாக ஆணுக்கு பேண்ட்- சட்டை என்று ஆடை இருந்தாலும் அதைப் பெண்களும் அணிகின்றார்கள். பெண்களுக்கென்று ஜீன்ஸ் பேண்ட்டுகளும்   உள்ளன. ஆணுக்கென்று உள்ள ஆடை வடிவங்களைப் பெண்களும் அணிகின்றார்கள். ஏன் அணிகின்றார்கள் என்பது அபத்தமான கேள்வி.அது அவர்களுக்கு அழகாக இருப்பதால்தான் அணிகின்றார்கள். அசிங்கமாக இருந்தால் யாரும் அணியமாட்டார்கள். ஆனால் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக உள்ள ஆடைகளை - தாவணி அல்லது சேலை போல - ஆண்கள் அணிந்தால் அது அவர்களை விகாரமாகக் காட்டுகிறது. கேலிப்பொருள் ஆக்கிவிடுகிறது. நம் மணம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இது என் என்று நான் கேட்டேன். "பெண்களைப்போல் உடை அணியும் ஆண்களையும், ஆண்களைப் போல் உடை அணியும் பெண்களையும் நபிகள் நாயகம் சபித்தார்கள்" என்று ஒரு நபிமொழி உள்ளது. அது நடைமுறையில் எப்படி இருக்கவேண்டும் என்னும் எதிக்ஸ் சார்ந்த விஷயம். என் கேள்வி வேறு தளத்தில் செயல்படுகிறது. ஆணின் ஆடையை பெண் அணியும்போது அது அவள் உருவத்தை விகாரப் படுத்துவதில்லை. ஆனால் பெண்ணின் ஆடையை ஆண் அணியும்போது அது விகாரமாகத் தெரிகிறது. இது ஏன்? என்று என் மனம் சிந்தித்தது. ஒவ்வொருவரும் அவரவருக்குப் பட்டதைக் கூறினார்கள். சொல்லித் தெரிவதில்லை! வேண்டுமானால் ஒரு 'ஹிண்ட்' கொடுக்கிறேன் என்று கூறி சூஃபி ஞானி இப்னுல் அரபி எழுதிய "ஃபுசூஸ் அல்-ஹிகம்" நூலிலிருந்து ஒரு பகுதியைக் காட்டினேன். அது இது:

"இறைவன் ஆதமிலிருந்து இன்னொரு உருவத்தை உண்டாக்கினான்; அதைப் பெண் என்று அழைத்தான். தனது சொந்த உருவிலிருது ஆன அவளைக் கண்டதும், தன்மீது தனக்கு உண்டாவது போன்ற பிரியம் அந்தப் பெண் மீதும் அவர்களுக்கு உண்டாயிற்று. அதேபோல் அந்தப் பெண்ணும் தன்மீதும், தன் சொந்த மண்மீதும் பட்ட்ருதல் வைப்பதுபோல் அவர்கள்மீது பற்றுதல் கொண்டாள். எனவேதான் நபி பெருமானாருக்குப் பெண் பிரியமானவளாக இருந்தாள். இது இறைவன் தன் நமூனாவில் [வடிவமைப்பு] ஆக்கிய ஆதம் (அலை) மீது பிரியம் வைத்தது போலாம். அமரர்கள் மனிதனைவிட உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்கள், ஒளியிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருந்தும் இறைவன் அவர்களை மனிதனுக்கு அடிபணியச் செய்தான். இவ்வாறு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலும், மனிதனுக்கும் பெண்ணுக்கும் இடையிலும் தொடர்புகள் நிர்ணயமாயின.மனிதன் இறைவனுடைய ஜோடியானான்; பெண் ஆணுடைய ஜோடியானாள். இவ்வாறு மூன்று நபர்கள் உண்டாயினர்: இறைவன் மனிதன் பெண். பெண் தன் அசலான ['அசல்' என்னும் அரபுச் சொல்லுக்கு 'மூலம்' என்று பொருள்.]  ஆணிடம் பற்றுக் காட்டுவது போல் ஆண் தன் அசலான இறைவனிடம் பற்றுதல் கொண்டுள்ளான். மனிதன் பெண்ணிடம் காட்டும் அன்பு யதார்த்தத்தில் இறைவனிடம் காட்டும் அன்பாகும். எனவே, சம்பூரண மனிதரான நபி பெருமானார் 'பெண்கள் எனக்குப் பிரியமானவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்' என்று அருளினார்கள். 'நான் என்னை நேசிக்கிறேன்' என்று அவர்கள் கூறவில்லை. இவ்வாறு அவர்களில் இறைவனின் கல்யாண குணங்கள் கைவந்திருந்தன."
( "மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்", தமிழாக்கம்: ஆர்.பி.எம். கனி, பக்.189 ,190 )    
  


  

2 comments:

 1. செம்மை செய்தது யாரை ?(87 :1 , 2 ) இருபாலரையுமா இல்லை பெண்ணை மட்டுமா?இன்னொரு கேள்வியும்
  மிஞ்சுகிறது.உலகெங்கும் அழகன் போட்டியை விடவும் அழகி போட்டிகள் தான் நடக்கின்றன.அழகில் அவள்
  தான் கூடுதல் என்பதனாலா? maleek

  ReplyDelete
 2. பெண்ணின் நளினத்தையும், ஆணின் கம்பீரத்தையும் ஒரு சேரக் காட்டும்
  அர்தநாரித் தத்துவம், உருவம் மனதில் தோன்றவில்லயா?

  ReplyDelete