Friday, December 17, 2010

ஜன்னலுக்கு உள்ளே

இறைவனுக்கு உருவம் இல்லை என்பதும் அதனால் உருவ வழிபாட்டிற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படியானால் ஒரு முஸ்லிம் எப்படித்தான் வழிபாடு செய்கிறார் என்ற சந்தேகம் பிற சமயத்தவருக்கு இருக்கக் கூடும். அதை என்னிடம் பலரும் கேட்டுள்ளார்கள். உடனே நான் அவர்களிடம் அழைப்புப் பணியில் இறங்கிவிடவில்லை. ஏனெனில் எனக்கு நானே தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டிய பல விஷயங்கள் இருந்தன, இன்னும் இருக்கின்றன. (ஆனால் இறைவனுக்கு உருவம் இல்லை, அவன் அரூபி என்பதில் தர்க்கம் தாண்டிய உறுதி மட்டுமல்ல தர்க்க ரீதியான உறுதியும் எனக்குள்ளது.)

நான் பி.எஸ்ஸி  படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை அம்மாப்பேட்டைக்கு என் நண்பர் கரிகாலனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரின் அம்மா என்னிடம் தொழுகை பற்றிக் கேட்டார்கள். அந்த உரையாடல் இன்னும் எனக்கு ஞாபகமுள்ளது:
"அல்லா சாமி எப்படி இருக்கும்?"
"அல்லாவுக்கு உருவம் கிடையாதும்மா"
"அப்படீன்னா மசூதிக்குள்ள என்ன இருக்கும்?"
"மக்கா திசைய காட்டுற ஒரு மாடம் இருக்கும். அதுக்குப் பின்னாலதான் அஜரத்து நின்னு தொழ வப்பாரு."
"அதுதான் சாமியா?"
"இல்ல. அது சாமியில்லை. அதுக்குப் பக்கத்துல மூனு படி வச்ச ஒரு மேடை இருக்கும். மிம்பருன்னு சொல்வாங்க."
"அதுதான் அல்லா சாமியா?"
"இல்லை. அது சாமியில்லை"
"அட என்னா ரமீசு, எதுவுமே சாமியில்லைங்கற, அப்புறம் எதைத்தான் கும்பிடுற?" என்று அவர் அலுத்துக்கொண்டார்.இந்து மதத்தில் உருவம்-அருவம் என்று இரண்டு கோணங்களில் இறைவனைக் காணும் முறை உள்ளது. சற்குண பிரம்மம் என்றும் நிர்குண பிரம்மம் என்றும் கூறுவார்கள். உருவ வழிபாடு பெரும்பான்மையான பொதுமக்களுக்கு உரியது என்றும் அருவ வழிபாடு தேர்ந்த சாதகர்களுக்கு உரியது என்றும் விவேகானந்தரிடம் ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்குவார். நண்பர் கரிகாலனிடம் இது போன்ற தத்துவங்களை நான் பேசலாம். அவர் அம்மாவுக்கு என்னால் புரியவைக்க முடியாது. (ஒருவேளை பி.ஜெய்னுலாபிதீனை அனுப்பினால் அவர் புரியவைத்துவிடுவார் என்று நினைக்கிறேன். அல்லாவுக்கு உருவம் உண்டு என்னும் கொள்கையை அவர்தான் பரப்பிக்கொண்டிருக்கிறார்.)

சரி, அல்லாவிற்கு உருவம் இல்லை. பள்ளிவாசலில் இருப்பதெல்லாம் மிஹ்ராப், மிம்பர், ரேக்காளி, அசா, பாய் இவைதான் என்றால் நண்பரின் தாயார் கேட்டதுபோல் எதைத்தான் கும்பிடுகிறேன்? என்று நான் சிந்திக்கலானேன். அதாவது, சிந்தனையில் இறைவன் எப்படித் தோன்ற முடியும்? என்று சிந்தித்தேன். பின்னாளில் நான் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தபோது குணசேகர் என்ற நண்பன் இதே கேள்வியைக் கேட்டான்.
"அல்லாவை எப்படிச் சிந்தனையில் கொண்டு வருவீர்கள்?"
"அல்லாஹ் நம் சிந்தையில் சிறைபடாதவன். கற்பனைக்கு எட்டாதவன்."
"இதுதான் எனக்குப் புரிய மாட்டேங்குது. எங்களுக்கு சாமிக்குன்னு உருவம் இருக்கு. அதை சிந்தனையில் நினைத்துக் கொள்வோம். அல்லாவுக்கு உருவம் இல்லைன்னா தொழும்போது உங்க சிந்தனைல எதை வைப்பீங்க?"ஒரு முஸ்லிம் தொழும்போது தன் கவனத்தைக் குரான் ஓதப்படுவதன்மீது (கிராஅத்) வைக்கிறான் என்று சொன்னால் அதுவும் முழுமையான பதில் அல்ல. காரணம், குரான் இறைவனல்ல. அதை ஒரு மனிதர் ஓதி வெளிப்படுத்தும்போது அது ஒலி என்னும் படைப்பு ரூபம் கொள்கிறது. இன்னாருடைய குரல் என்று அடையாளம் பெற்றுவிடுகிறது. அது நாதம் அல்ல. மனித ஓசையைப் போர்த்திக் கொண்ட வடிவம். இன்னொரு காரணம், ஐந்து வேளை தொழுகைகளில் மூன்றில்தான் கிராஅத் செய்யப்படும். இரண்டில் மனதிற்குள்தான் ஓதுவார்கள். அப்போது அவரவர் மனதைத்தான் கவனிக்க வேண்டிவரும். அதாவது மூன்று தொழுகையில் கவனம் வெளிநோக்கிச் செல்கிறது. இரண்டு தொழுகையில் உள்நோக்கிச் செல்கிறது. ஆனால் அவற்றில் அவதானம் ஆவதும் நம் சொந்த எண்ணங்களும் ஒசைகளும்தானே தவிர இறைவன் அல்ல.

"எதையுமே சிந்தனையில் கொண்டுவர மாட்டோம். மனம் வெறுமையாக இருக்கும் பயிற்சி அது." என்று நான் உளறினேன்.
"அப்போ அந்தச் சூனியம்தான் அல்லாவா?" என்று குணசேகர் வச்சானே பாக்கலாம் ஒரு ஆப்பு. எனக்குச் சூனியம் வைத்ததுபோல் ஆகிவிட்டது! அவன் கேட்டது அர்த்தமுள்ள கேள்விதான். மனதில் தோன்றும் எண்ணங்கள் இறைவனல்ல என்றால் எண்ணங்கள் இல்லாத மனதின் வெறுமையும் இறைவன் அல்லவே? பிறகு இறைவனை எப்படித்தான் வணங்குவீர்கள்?பல வருடத் தேடல்களில் கதவுகள் படிப்படியாகத்தான் திறந்துகொண்டு வருகின்றன.
"நம்மில் கடினமாக முயல்பவர்களுக்கு
நிச்சயமாக நாம்
நம் பாதைகளைத் திறப்போம்"
(29 :69 )
என்று இறைவன் தன் மறையில் சொல்வதைப்போல.

இஸ்லாத்தின் வழிபாடு குறித்த ஐயங்களும் தவறான புரிதல்களும் பல அறிஞர்களிடம்கூட உள்ளது. "திக்கைத் தொழும் துருக்கர்" என்று பாரதியார் பாடினார். முஸ்லிம்கள் பிறையை வணங்குகிறார்கள் என்னும் கருத்தை பாரதிதாசன் ஒரு கவிதையில் பாடினார். கொஞ்சம் யோசித்திருந்தாலே இந்த அபத்தங்களை அவர்கள் தவிர்த்திருக்கலாம். இந்தியாவிலிருந்து மேற்கு திசை நோக்கி ஒருவர் தொழுகிறார் என்றால் அமெரிக்காவில் உள்ள ஒருவர் கிழக்கு நோக்கித் தொழுவார். கிழக்கா மேற்கா வடக்கா தெற்கா என்பதல்ல பிரச்சனை. கஃபா ஆலயத்தை முன்னோக்கவேண்டும் என்பதுதான் கருத்து. அப்படியானால் கஃபாவை வணங்குகிறார் என்று சொல்லலாமா? என்றால் கஃபாவை யாரும் கடவுள் என்று கூறுவதில்லை. அதைக் காட்டி இது என்ன என்று கேட்டால் இறைவனின் வீடு என்றுதான் ஒரு முஸ்லிம் சொல்வாரே தவிர அதையே கடவுள் என்றோ அதைத் தான் வணங்குவதாகவோ கூற மாட்டார். பள்ளிவாசலில்கூட வரிசை வரிசையாக நின்று தொழும்போது ஒவ்வொருவரும் தனக்கு முன்னால் உள்ளவரை வணங்குகிறார்கள் என்று பொருளல்ல. அப்படி யாரும் நினைக்கவில்லை. அப்படிக் குனிந்து எழுந்து தொழும்போது முன்னால் உள்ளவரின் பிருஷ்டத்தில் பின்னால் உள்ளவரின் தலை நங்கென்று மோதுவதும் உண்டு. (சுய அனுபவமும் உள்ளது எனக்கு!). தலை எங்கே போய் மோதுகிறது என்பதை ஒரு பிரச்சனை ஆக்குவதில்லை யாரும். தலைக்குள் இருப்பதுதானே முக்கியம்? 

அதேபோல், பிறையைத் தொழுகிறார்கள் என்று பாரதிதாசன் கருதியது படு அபத்தம். ஏனெனில் ஐவேளை தொழுகை என்பதில் பகல் நேரத் தொழுகையும் உள்ளது. அதுமட்டுமல்ல தினம் தினம் தொழுகிறார்கள். எல்லா நாளுமா பிறை இருக்கும்? இதைக்கூட புரட்சிக் கவிஞர் சிந்திக்கவில்லையா?

இதே லாஜிக்கை ஏன் இந்து மதத்திற்கு அப்பளை செய்யக்கூடாது? என்று யாராவது கேட்டால் "ஓ பேஷா செய்யலாமே" என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு கருத்தை ஜெயமோகன் முன்பொருமுறை எழுதினார்.('நான் கடவுள்' திரைப்படம் குறித்த ஒரு நீண்ட பதிலில்.) "இந்து மதத்தில் சிலை வழிபாடு இல்லை என்று நான் சொன்னால் அதை ஒருவர மறுத்துவிட முடியாது" என்று அதில் சொல்லியிருந்தார். இதெல்லாம் தனி மனிதனின் அகநிலை சார்ந்த விஷயம். ஒரு திசையில் உள்ள ஒரு பொருளை நோக்குவதால் ஒருவன் அந்தத் திசையை வணங்குகிறான் என்று கூற முடியாது. இன்னும் ஒரு படி மேலே சிந்தித்தால் ஒரு பொருளின் வழியாக ஒன்றை ஒருவன் அவதானிக்கும்போது அவன் அந்தப் பொருளை அவதானிக்கின்றான் என்று சொல்லமுடியாது.புரிகின்றதா? இல்லை என்றால் ஓர் உதாரணம் சொல்கிறேன்.

எங்கள் வீட்டின் அருகே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. பதினான்கு வயதுப் பையன் ஒருவன் அந்த ஆட்டோ ஸ்டாண்டைக் கடந்து போகும்போதும் வரும்போதும் டிரைவருக்குத் தெரியாமல் ஆட்டோவில் உள்ள ரப்பர் ஹாரனை (ஏர் ஹார்ன் - காற்றொலிப்பான்) ஒரு அமுக்கு அமுக்கிவிட்டு ஓடிவிடுவான். அதைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு கை பரபரக்க ஆரம்பித்துவிடும். அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று பிராய்டிய உளவியல் நிபுணரிடம் கேட்டுப்பாருங்கள் - அந்த ஒலிப்பானில் அவன் வேறு எதையோ காண்கிறான் என்றுதான் சொல்வார். வயசுக் கோளாறு!

இதைத்தான் ஜெயமோகன் சொல்லவந்தார். சிலையை ஒருவன் முன்னோக்குகிறான் என்பதாலேயே அவன் சிலையை வணங்குகிறான் என்று சொல்லமுடியாது. அதன் வழியாக அவன் வேறு ஒன்றை அவதானிக்கின்றான். லைலா- மஜ்னூன் கதையில் ஒரு அழகான ஆழாமான உரையாடல் வருகின்றது. லைலாவின் மீது பைத்தியமாகி "கைஸ்" என்ற மஜ்னூன் அவளுடைய வீதியே கதி என்று கிடக்கிறான். அவனது வெறித்த பார்வை லைலாவின் மீதே நிலைத்துள்ளது. அப்போது லைலாவுக்கும் அவளின் தோழிக்கும் நடக்கும் உரையாடல் அது.
"லைலா, நீதான் உலகிலேயே அழகான பெண் என்பதற்கு மஜ்னூன் சான்றாக இருக்கிறான். உன் அழகில் அவன் மூழ்கிக் கரைந்துவிட்டான்" என்கிறாள் தோழி. அதற்கு லைலா சொல்கிறாள், "அவன் என் அழகில்  மயங்கிவிட்டான் என்றுதான் முன்பு  நானும் நினைத்திருந்தேன். அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவன் என்னைப் பார்க்கவில்லை. நான் வெறும் ஜன்னல்தான். அவன் என் வழியாக வேறு ஒன்றைப் பார்க்கிறான்!"

"உள்ளம் உறங்கிக்கொண்டு 
பள்ளிவாசலில் நிற்பவனைவிட 
விழிப்படைந்த இதயத்துடன்
கோவிலில் நிற்பவன் மேலானவன்"
என்று பாடியது வேறு யாருமல்ல, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற முஸ்லிம் கவிஞர் என்று போற்றப்படும் மகாகவி இக்பால்தான்!எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு வருவோம். சித்தன் போக்கு சிவம் போக்கு என்று ரோலர் கோஸ்டர் மாதிரி போய்க்கொண்டிருந்தால் எப்படி?
தொழுகையில் தான் சிந்தனையில் என்னென்ன வருகிறது என்று கவனித்துப் பார்த்தால் அது பலருக்கும் சிக்கலாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். திருமணமான ஒருவனுக்குத் தான் மனைவியின் முகத்தை நினைப்பதுதான் மிகவும் கடினமான காரியம் என்று ஒரு உளவியல் கருத்தை ஓஷோ கூறியுள்ளார். அதுபோல் தொழுகையில் அல்லாஹ்வை  நினைப்பதுதான் ஒரு முஸ்லிமுக்கு மிகவும் கடினமான காரியம் என்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர் கூட்டம் சொல்கிறது. உலக அழகிகள் முதல் உள்ளூர் அழகிகள் வரை ஓர்  உளவியல் கஜுராஹோவில் தொழுகிறோம் என்ற குற்ற உணர்வில் நெளிபவர்கள் எத்தனைப் பேர்? அத்துடன் ஆடு மாட்டு கழுதை அவன் இவன் அவர் இவர் என்று எத்தனைச் சிலைகள்? ஆயிரம் ஆயிரம் கள்ள தெய்வங்கள்!  அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. மனத்தின் இயல்பு அது. அடிப்படைக் கருவிகளை மார்க்கம் தந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் இன்னும் ப்ரோக்ராம் எழுதும் கலையைக் கற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் கருவிகளைக் கையிலெடுத்துக் கொண்டு கண்டதையும் நோண்டுகிறார்கள். எழுதத் தெரியாதவன் கையில் தங்கப் பேனாவே கிடைத்தாலும் அதை வைத்து காதுதானே குடைவான்? 

திருக்குர்ஆன் ஓதப்படும்போது அரபி மொழி தெரியாதவன் அதன் ஓசை நயத்தில் - கிராஅத் அழகில் மனதை லயிக்க விடுவான். அரபி மொழி அறிந்தவனாக இருந்தால் அவனுக்கு அந்த வசனங்களின் அர்த்தங்கள் மீது கவனம் போகும். அப்போது அது அவன் மனத்தில் கற்பனைக் காட்சியாக விரியத்தான் செய்யும். "அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்பதை அவர்கள் பார்க்கமாட்டார்களா?"(46 :33 ) என்ற வசனக் கருத்தைக் கேட்கும்போது அவன் கற்பனையில் வானமும் பூமியும் வரும். ஆனால் அல்லாஹ் வரமாட்டான். படைப்புக்கள்தான் வருகிறது, படைத்தவனைக் காணவில்லை! 
"ஒட்டகத்தை நாம் எப்படிப் படைத்திருக்கிறோம் என்று அவர்கள் உற்று நோக்க வேண்டாமா?" (88 :17 ) என்னும் வசனத்தைக் கேட்டால் கற்பனையில் ஒட்டகம் வரும். மனதிற்குள் எவ்வளவு உற்று நோக்கினாலும் அல்லாஹ் வரமாட்டான்!
"வானங்கள் மற்றும் பூமியில்
உள்ளவை எல்லாம்
அல்லாஹ்வுக்கே பணிந்து
தலை சாய்க்கின்றன"
(13 :15 ) என்னும் வசனக்கருத்தைக் கேட்டதும் அவர் மனக்காட்சியில் மரங்கள் விலங்குகள் எல்லாம் வளைந்து சாய்ந்து தரையைத் தொடுவது போன்று தோன்றலாம். எதார்த்தத்தில் இப்படி இல்லாததால் அவர் மனம் இப்போது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு வளர்ந்து விட்டது என்றே கூறவேண்டும்! இதிலும் அல்லாஹ் வரமாட்டான். (ஒருவேளை பி.ஜெ.&கோ.வுக்கு வரக்கூடும். இறைவனுக்கு உருவம் உண்டு, கை கால் முகம் என்று திருக்குரானிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டதெல்லாம் உருவத்தைதான் குறிக்கும் என்று அவர்கள்தான் நம்புகிறார்கள். எனவே அவர்களின் மனம் அதைச் சார்ந்து கிராஃபிக்ஸ் போடக் கூடும்.)

சொர்க்கக் கண்ணிகளைப் பற்றி வருணனைகள் வரும்போது தொழுபவரின் மனதில் என்ன காட்சி விரியும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. "ஹூருல் ஐன்" என்னும் சொர்க்கக் கன்னியரை நேரில் பார்த்தவர் யாருண்டு? சில இறைநேசர்களின் கனவில் அவர்கள் தோன்றுவார்கள் என்று பதிவுகள் உண்டு. பார்க்காதவர்கள் என்ன செய்வார்கள்? "ஹூருல் ஐன்" என்றால் 'கண்ணழகி' என்று பொருளாமே? அப்படியானால் அந்த இலக்கணத்திற்குப் பொருந்தி வருவதாக அவரவர் மனம் கருதும் பெண்ணைக் கற்பனையில் காண்பார்கள் என்று நினைக்கிறேன். ஹூரிகள் பெண்கள்தான் என்பதாவது உறுதியாகத் தெரிவதால் சிக்கல் இல்லாமல் ஆயிற்று. அவர்களை ஏதோ ஆண்டனாக்கள் அளையும் ஏலியனிய உருவங்களாகக் கற்பனை செய்து பீதியடைய வேண்டியதில்லை. அப்படியானால் தொழுகை ஃபசாதாகி விடுமே?

இப்போது மட்டும் என்ன வாழுகிறது என்கிறீர்களா? வாஸ்தவம்தான். அதனால்தான், வாலிபர்கள் பங்குபெறும் ஜமாஅத் தொழுகையில் ஹூருல் ஐன்கள் பற்றிய வசனங்களை ஓதலாகாது என்று இமாம் கஸ்ஸாலி எழுதியுள்ளார்கள். (வயதானால் ஒரு பக்குவம் வந்துவிடும் என்னும் நல்ல நம்பிக்கையில் இப்படிக் கூறியுள்ளார்கள். எனவே விதிவிலக்குகள் இருந்தால் அதைப் பற்றி நாம்தான் தனியாக இனிமேல் யோசிக்க வேண்டும்.)  சொர்க்கக் கன்னிகள் பற்றிய வசனங்கள் வாலிபர்களுக்குக் கிளர்ச்சியை உண்டாக்கிவிடும் அல்லவா? பிறகு அவர்கள் தொழுகைக்குள் குண்டலினி யோகம்தான் செய்யவேண்டும்! (அதிலும் குறிப்பாக, ஜட்டி அணிந்துகொண்டு தொழலாமா? என்பது போன்ற அறிவார்ந்த மார்க்க ஆய்வுகளில் ஈடுபட்டு மார்க்கத்தை அதன் தூய வடிவில் வெளிப்படுத்தத் துடிக்கும் வாலிபர்கள் உள்ள இந்தக் காலத்தில் இது மிகவும் சென்ஸிடிவான விஷயம் அல்லவா?)

இஸ்லாமிய அறிஞர்களால் இந்தச் சிக்கல் அவ்வப்போது விவாதிக்கப் பட்டுள்ளது. "Sex with slaves and women's rights" என்னும் கட்டுரையில், நான்காம் கேள்வியின் விடையில் ஜி.எஃப்.ஹத்தாத் இப்படி எழுதுகிறார்:
"....சிருங்காரக் கவிதைகளைக் கேட்டும் அசையாத ஒருவனைப் பார்த்து இமாம் ஷாஃபி அவர்கள் "நீ உணர்ச்சியற்றவன்" என்று சொன்னதுபோல். இறைநம்பிக்கையுள்ள ஆண்களின் விஷயத்தில், ஓர் அவ்லியா சொல்லியிருப்பது போல், அதாவது 'முற்றிய முலை கொண்ட சம வயது கன்னியர்' (78 :33 ) என்னும் திருவசனத்தைக் கேட்டதற்கே அவர்களில் சிலருக்குக் குளிப்பு ('குஸ்ல்' - இந்திரியம் வெளிப்பட்டால் குளிக்க வேண்டியது.) கடமையாகிவிடுகிறது. ஆனால் நம்மைப் போன்ற தற்குறிகள் அந்த வசனத்தை மீண்டும் மீண்டும் வாசித்தாலும் எந்த விளைவும் ஏற்படுவதில்லை!"  

இந்த விவாதம் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதீதமான கற்பனைத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் போலும். அந்த அளவு கற்பனைத் திறன் என்பது இறைவனின் அருட்கொடையாகத்தான் இருக்க வேண்டும்! இவ்வளவு பேசினோமே, தொழுகையில் அல்லாஹ்வை தியானிப்பது எப்படி என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லை பார்த்தீர்களா?

7 comments:

 1. நீங்கள் குறிப்பிட்ட வசனம் 78 :83 அல்லது 78 :33 எது சரி?78 :33 ல் சம வயது கன்னியர் என்று தானே உள்ளது

  ReplyDelete
 2. 78ல் 83 ஏது..? 40 வரை தானே உள்ளது..

  ReplyDelete
 3. நீங்கள் என்ன சொள்ளவரிங்க அல்லாக்கு உருவல் உண்டா இல்லையா?

  ReplyDelete
 4. கொஞ்சம் பொறுமையா இருங்க அறிவுக் கடல்? பீ ஜே தற்போது ஆராய்ச்சியில் இருக்கின்றார்!

  ReplyDelete
 5. ஒரு குர்ஆன் வசனத்தையோ ஹதீஸையோ விளங்குவதில் வித்தியாசம் வரலாம் (இதுவே கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்களில் முக்கியமானது - இது காலாகாலமாக நீடிக்கின்றது) எனவே சொல்லப்பட்ட கருத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்கள் கருத்துக்களுக்கு மட்டும் கண்ணியமாக பதிலளிக்க - மறுப்பளிக்க வேண்டுமேத் தவிர கருத்திட்டவரை முன்னிலைப்படுத்தி எழுத வேண்டாம் என்று கூறி வருகிறோம். அதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

  இஸ்லாத்தை ஆய்வு செய்து எழுதி வருபவர்கள் தங்களை மட்டுறுத்தலுக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்..

  ReplyDelete
 6. /// இவ்வளவு பேசினோமே, தொழுகையில் அல்லாஹ்வை தியானிப்பது எப்படி என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லை பார்த்தீர்களா?///

  அட, ஆமாம்! அதை நீங்கள் சொல்லவே இல்லையே!

  ReplyDelete
 7. இவ்வளவு பேசினோமே, தொழுகையில் அல்லாஹ்வை தியானிப்பது எப்படி என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லை பார்த்தீர்களா? ஆமா பாய் அதையும் சொல்லிடுங்களேன்

  ReplyDelete