Wednesday, December 15, 2010

கிரேக்க மிக்சர்

அடையார் ஆனந்த பவனில் (சாஸ்திரி சாலை, திருச்சியில் உள்ள கிளை) சீனி போலி வாங்கிக்கொண்டு வெளியே வந்து தலைக்கவசத்தை (ஹெல்மெட்) மாட்டி ஸ்கூட்டரில் ஆரோகணித்தேன். "தம்பி" என்று பின்னாலிருந்து குரல் ஒன்று அழைத்தது. திரும்பிப் பார்த்தபோது ஐம்பது வயது என்று தோன்றிய ஒருவர் தன் மனைவியுடன் நின்றுகொண்டிருந்தார். முகத்தில் வெளுத்த தாடி. கோலிக்குண்டுகள் போல் உருண்ட கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'என்ன' என்று என் கண்கள் கேட்பதை உணர்ந்தவராக "இந்தப் பக்கமா போறேள்?" என்று தன் கையை மகாத்மா காந்தி ஸ்கூலின் திசையில் காட்டினார். "ஆமாம்" என்றேன். "பாலத்துக்குக் கீழ என்னைக் கொஞ்சம் எறக்கி விடுறேளா? எனக்கு உடம்பு சரியில்ல" என்றார். "நீங்க ரெண்டு பேர் இருக்கேளே? ஒருத்தர்தானே வர முடியும்?" என்றேன். ஜரிகை வைத்த, கிருஷ்ண துளசி நிறப் புடவை அணிந்திருந்த அவர் மனைவி சிரித்தபடி "நான் நடந்து வந்துடறேன். நீங்க இவர ஏத்திண்டு போங்கோ போதும்" என்றார். சரி என்று நான் தலையாட்டினேன். சாந்து நிற ஜரிகை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பின்னால் ஏறி அமர்ந்தார். வண்டியைக் கிளப்பினேன். பேசிக்கொண்டே வந்தார்.
"பேரென்ன?"
"ரமீஸ்"
"ரமேஷா?... என்ன நட்சத்திரம்?"
"நட்சத்திரமெல்லாம் தெரியாது. துலாம் ராசி"
"ஓஹோ! சாஃப்ட் பெர்சன்" என்று சிரித்தார்.உதவி செய்வதால் அப்படிச் சொன்னார் என்று நினைக்கிறேன். ராசி பற்றியெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நண்பர் சற்குணம் முன்பு ஒரு முறை சொன்னார், "துலாம் ராசிக்கு இந்த ஜென்மத்திலேயே ஞானம் உறுதி. நீ கொடுத்து வச்சவன். நான் பாரு கன்னி ராசி. ஜான் ஏறுனா முழம் சறுக்கும். ராஜராஜனுக்கும் கன்னி ராசிதான். அதீதமான பெண் சகவாசம். சுர ரோகம் வந்து செத்தான்!" பதினைந்து வருடங்களுக்கு முன் இந்த உரையாடல் நடந்தபோது அவர் சொன்னதை வியப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். தகவல்கள் உண்மையா என்று தெரியாது.
"என்ன செய்யறேள்? என்றார் பெரியவர்.
"லெக்சரர்"
"எந்த காலேஜ்?"
"ஜமால் முஹம்மது"
பாலத்திற்குக் கீழே ஓரமாக நிறுத்தினேன். இறங்கிக்கொண்டார். ஹெல்மெட் வழியே பார்வையால் ஊடுருவிப் பார்த்தார். "நீங்க ஹிந்துவா?முஸ்லிமா?" என்று கேட்டார். "முஸ்லிம்" என்றேன். ஏன் அப்படிக் கேட்டார் என்று புரிந்தது. "நான் திருவையாத்தில் வளந்தவன்" என்றேன். "அப்போ நீங்க பாதி பிராமணன்" என்று சொல்லிச் சிரித்தார்.

வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த பின்னும் ஐந்து நிமிடங்கள் தாண்டாத அந்த உரையாடல் மனித இனம் எப்படிப் பின்னிக் கிடக்கிறது என்ற அவதானத்தைக் கிளறிக்கொண்டிருந்தது. தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழி நெடுக உள்ள ஊர்களில் முஸ்லிம்கள் ஜாஸ்தி. அய்யம்பேட்டை  வழுத்தூர் பாண்டாரவாடை ராஜகிரி போன்ற ஊர்களில் உள்ள தெரு அமைப்பும் உயர்ந்த திண்ணையும் ஒட்டுக் கூரையும் கொண்ட பழைய வீடுகளைப் பார்த்தால் அக்ரஹார அமைப்பு தென்படும். உள்ளே ரேழி இருக்கக்கூடும். அந்தப் பகுதியின் பழைய பத்திரங்களை அவற்றின் மொழி நடைக்காக ஆராய்ச்சி செய்த ஒருவர் சொன்னார், 'சீனிவாச ஐயங்காரின் மகனான அபூபக்கருக்கு பாத்தியதையான...' என்பது போன்ற பல குறிப்புக்களை அவற்றில் கண்டு வியந்தாராம். குறிப்பிட்ட ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் பிராமணர்கள் பலர் முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார். ராஜகிரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் இதை நான் ஒரு முறை சொன்னேன். அவருடைய சிவந்த 'காம்ப்லக்ஷனும்' கூர்ப்பான மூக்கும் மேற்சொன்ன கருத்தை உறுதிப்படுத்துவதாக உணர்ந்தேன். தன் முன்னோர்கள் பிராமணர்கள் என்ற கருத்தை அவர் மனம் எப்படி உணர்ந்தது என்பதை அவரது முக பாவனையிலிருந்து என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை!

தமிழ்நாட்டு முஸ்லிம்கள் எல்லாம் அப்படி மாறியவர்கள்தானே? பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உறவுமுறை கொண்ட ஒரு குடும்பம் இஸ்லாத்தைத் தழுவியது என்றும் அதில் வந்த வாரிசுதான் வள்ளல் ஜமால் முஹம்மது என்றும் சொல்கிறார்கள். ஜமால் முஹம்மது ராவுத்தரின் முகம் அதை உறுதிப்படுத்துவதாக உணர்கிறேன். எங்கள் கல்லூரியின் விழா ஒன்றில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஹாரூன் மேடையிலேயே இதைக் குறிப்பிட்டார், "எங்கள் முன்னோர்கள் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்" என்று. அவர் ஜமால் முஹம்மது குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இதேபோல் என் பெரியத்தா "நான் புதுக்கோட்டைக் கள்ளன்டா" என்று சொல்வார்களாம். அவரே என்னிடம் கூறிய செய்தி.இந்தச் சிந்தனைகளை அப்படியே வெட்டிவிட்டு புதிதாக வாங்கி வந்த புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஹோல்கர் கெர்ஸ்டன் (HOLGER KERSTEN ) என்பவர் எழுதிய "JESUS LIVED IN INDIA - HIS UNKNOWN LIFE BEFORE AND AFTER THE CRUCIFIXION" என்னும் அந்த நூல் 1981 -ல் ஜெர்மனியில் முதன் முதலாக வெளியிடப்பட்டது. ஏசு தன் பால்ய வயது முதல் முப்பது வயது வரை இந்தியாவில், காஷ்மீரில் வாழ்ந்தார் என்றும், முப்பத்துமூன்று வயதில் 'சிலுவையில் அறையப்பட்ட' பின் அவர் சாகவில்லை, மாறாக, தப்பித்து மீண்டும் காஷ்மீருக்கு வந்து முதிய வயது வரை அங்கேயே வாழ்ந்தார் என்றும் ஹோல்கர் ஆதாரங்களை விளக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, ஏசுநாதரின் சமாதியும், மோசசின் சமாதியும் காஷ்மீரில்தான் உள்ளது என்றும் இஸ்ரவேலர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் என்பது காஷ்மீர்தான் என்றும் அதில் கூறியுள்ளார். ஆப்கானியர்கள் உண்மையிலேயே யூதர்கள்தான் என்பது போன்ற பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. 1887 -ல் திபெத்தின் லெஹ் நகரில் உள்ள ஹெமிஸ் புத்த மடாலயத்திற்குச் சென்ற ருஷ்ய ஆய்வாளர் நிக்கொலாய் நோடோவிச் ஏசுநாதரைப் பற்றிப் பின்வரும் 'செய்தி'களைத் தருகிறார். ஏசு தன் பதினான்காம் வதில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். இமயமலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அவர் ஜகன்னாத் நகரில் பிராமணர்களிடம் வேதங்களைப் பயின்றார். (பிராமணரல்லாத அவருக்கு வேதங்களை எப்படிச் சொல்லிக்கொடுத்தார்கள்?) அந்த ஞானத்தை அவர் சூத்திரர்களுக்குக் கற்பித்தார். அதனால் பிராமணர்களின் வெறுப்பிற்கு ஆளானார். அதனால் அங்கிருந்து வெளியேறி மீண்டும் இமயமலைச் சாரல்களில் சுற்றித் திரிந்து திபெத்தில் உள்ள லெஹ் நகருக்குச் சென்றார். அங்கு புத்தரின் கொள்கைகளைக் கற்றுக்கொண்டார். பிராமணர்களுடன் வாதம் செய்தபொது சூரிய வழிபாட்டை ஏசு எதிர்த்துப் பேசுகிறார். "இஷ்ட மற்றும் துஷ்ட தேவதைகளைப் போன்றே சூரியனையும் வழிபட வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் கொள்கை மிகவும் தவறானது என்று நான் கூறுகிறேன். ஏனெனில் சூரியனுக்குச் சுயமாக எந்த சக்தியும் இல்லை. மறைந்திருக்கும் இறைவனின் நாட்டத்தின்படியே அது உண்டானது, பகலுக்கொரு விண்மீனாக ஆக்கப்பட்டது, மனிதனின் உழைப்பையும் காலத்தையும் வெதுவெதுப்பாக்குகிறது." என்று அவர் பேசுகிறார். ( பிறகு எப்படி 'கடவுள் இல்லை' என்று புத்தர் போதித்த நாத்திகக் கருத்தை அவர் ஏற்றுக் கொண்டார் என்று சொல்லமுடியும்? அல்லது புத்தரையே கடவுளாக வழிபடுவதை அவர் எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்?) 
1925 -ல் திபெத்தின் புத்த மடாலயங்களில் ஆய்வுகள் செய்த ருஷ்ய தொல்பொருள் ஆய்வாளர் நிக்கோலாஸ் ரோறிச் ஏசு தன் இருபத்தொன்பதாம் வயதில் மீண்டும் பாலஸ்தீனுக்குத் திரும்பினார் என்று கூறுகிறார்.திபெத்தில் ஏசுநாதர் 'இஸ்ஸா' என்றும் 'ஈஸா' என்றும் அழைக்கப் படுகிறார். அரபிமொழியில் - திருக்குரானில் ஏசுநாதரின் பெயர் 'ஈஸா' என்பதுதான்! (ஜப்பானில் தோன்றிய ஹைக்கூ கவிதையின் பிதாமகர்கள் மூவருள் ஒருவர் பெயர் கோபயாஷி இஸ்ஸா என்பதும் ஞாபகம் வருகிறது.)  ஹோல்கர் கெர்ஸ்டன் தன் தேடல்களில் நோடோவிச்சின் டைரியைத் தேடி அலைந்தபோது பேராசிரியர் ஃபிதா ஹஸ்னைன் என்பவரைச் சந்திக்கிறார். ஜம்மு காஷ்மீர் அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் அருங்காட்சியகங்களின் ஆவணக் காப்பகத்தின் தலைவராக இருந்தவர் அவர். ஏசுநாதர் காஷ்மீரில் இருந்தார் என்னும் கருத்தை விளக்கி ஏறத்தாழ முப்பது நூல்கள் எழுதியுள்ளார். அவர் முன்வைக்கும் ஆதாரங்களில் ஒன்று இந்து மதத்தின் பதினெண் புராணங்களில் ஒன்றான பவிஷ்ய மகாபுராணம் ஆகும். (மகாராஜா ரானா பிரதாப் சிங்கிடம் இருந்த பிரதி. தற்போது புனேயில் உள்ள பந்தர்கர் ஆய்வு நிலையத்தில் உள்ளது.) அதில் ஏசு காஷ்மீரின் மன்னரைச் சந்திக்கிறார். தன் பெயரை 'ஈஸா மஸீஹ்' என்று கூறுகிறார். அரபியில் மஸீஹ் என்றால் தூதர் என்று பொருள். (ஆங்கிலத்தில் இச்சொல் MESSENGER என்று ஆகிறது.) இது 'மஸஹ்' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. மஸஹ் என்றால் தடவுதல் என்று அர்த்தம்! இறைத்தூதர்கள் பலர் இருந்தாலும் ஏசுவைத்தான் 'மஸீஹ்' என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஏனெனில் தன் கையால் தடவி நோய்களை சொஸ்தம் செய்து அற்புதங்கள் நிகழ்த்தியவர் அவர்தான்.(மஸஹ் செய்தவர் மஸீஹ் எனப்பட்டார். ஆங்கிலத்தில் அது messenger ஆகி அவர் வழங்கிய செய்தி message ஆனது. எனவே தடவுதல் மசாஜ் எனப்பட்டது!) இயக்குனர் சசிக்குமார் தற்போது எடுத்து வரும் திரைப்படத்திற்கு முதலில் "ஈஸா" என்றுதான் பெயர் வைத்திருந்தார். ஈஸா என்பது அரபியில் ஏசுவைக் குறிக்கிறது என்றால் சமஸ்கிருதத்தில் சிவனைக் குறிக்கும். அல்லது உபநிஷதத்தில் இறைவனின் பெயர். ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ஜ ஜகத்யாம் ஜகத்! தினத்தந்தியில் அந்தப் படத்தின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என் சகோதரன் ஒருவன் மிகவும் கோபப்பட்டான். "ஈஸா(அலை) நபியின் பெயரை எப்படி ஒரு சினிமாப் படத்துக்கு வைக்கலாம்?" என்று கத்தினான். இந்த ஈஸா சம்ஸ்கிருத ஈஸா என்று நான் விளக்கினேன். படத்தின் பெயர் இப்போது 'ஈசன்' என்று மாற்றப்பட்டுள்ளது. ஜமாத்துகளின் எதிர்ப்பு காரணமாக இருக்கக்கூடும்.லெவி டௌலிங், நோடோவிச், ரோறிச், கெர்ஸ்டன் வகையறாக்கள் கிளப்பிவிட்ட இந்த காஷ்மீர் பிரச்சனை - அதாவது ஏசு காஷ்மீர் புத்திரன் - என்ற கருத்து இப்போது ஹாலிவுட்டில் "THE AQUARIAN GOSPEL " என்னும் பெயரில் படமாக்கப் படுகிறது! 'டா வின்சி கோட்' கதையில் இருந்த சர்ச்சையைவிட இந்தப் படத்தின் கதையில் இன்னும் அதிகமான சர்ச்சைகள் இருக்குமாம். ஏசுநாதர் சந்தித்த இந்திய ஆளுமைகளில் ஆன்மிகவாதிகள் மட்டுமல்லாது மேனகா என்னும் ஓர் இளவரசியும் அடக்கமாம். சர்ச்சைக்கு இது போதாதா? (மேனகா என்னும் பெயர்தான் மோனிகா என்று ஆகிறதோ?)

ஹோல்கர் கெர்ஸ்டனின் புத்தகத்தில் முன்வைக்கப்படும் முக்கியமான புள்ளிகள் என்று இவற்றைக் கூறலாம்:
1 . யூதர்களின் பூர்விகம் காஷ்மீர். இஸ்ரவேலர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் அதுதான்.
2 . ஆபிரஹாம் காஷ்மீரில் இருந்துதான் பலஸ்தீனுக்கு வந்தார்.
3 . இறைத்தூதர் மோசசின் சமாதி காஷ்மீரில் இருக்கிறது.
4 . இயேசு புத்தரின் அவதாரமாகப் பிறந்தார். அவரைத் தேடிக்கொண்டு கிழக்கிலிருந்து பரிசுகளுடன் வந்த மூன்று ஞானியர் புத்த லாமாக்களாவர்.
5 . ஏசுநாதர் தன் பன்னிரண்டாம் அகவையில் காஷ்மீருக்கு வந்தார். புத்தநெறியில் பயிற்சி பெற்றார். அந்த நெறியை போதிக்கத் தன் இருபத்தொன்பதாம் வயதில் மீண்டும் பாலஸ்தீனுக்குச் சென்றார்.
6 . சிலுவையில் அறையப்பட்ட ஏசு சாகவில்லை. உயிருடன் தப்பி மீண்டும் காஷ்மீருக்கு வந்து முதிய வயது வரை வாழ்ந்து மரித்தார். அவரின் சமாதி காஷ்மீரில் உள்ளது.

இந்தப் புள்ளிகள் கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரண்டு சமயங்களின் கொள்கைகளுக்கும் எதிராகவே உள்ளது. (ஏசு சிலுவையில் அறியப்படவில்லை என்று இஸ்லாம் சொன்னபோதும் அவர் விண்ணுக்கு உயர்த்தப்பட்டார் என்றும் மீண்டும் வருவார் என்றுமே அது சொல்கிறது.) என்றாலும் இந்த நூலை நான் மிகவும் உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். 
"முதலைகள் இல்லாத நதியில் 
நான் என் படகைச் செலுத்துவதில்லை"
என்று மகாகவி இக்பால் பாடுவார். இந்த நூலில் முதலைகள் அதிகமாகவே இருக்கின்றன, அதீதப் பசியுடன்!

காஷ்மீருக்கும் யூதர்களுக்கும் உள்ள தொடர்புகள் ஒருபக்கம் குடைகிறது என்றால் கிரேக்கர்களுக்கும் காஷ்மீருக்கும் உள்ள தொடர்பு இன்னொரு பக்கம். அப்கானிஸ்தான் மற்றும் சிந்து சமவெளிப் பகுதிகளில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குடையோ குடை என்று குடைந்ததில் கிடைத்த சாமான்களில் ஃபிலிப் , அலக்சாந்தர், இரண்டாம் அலக்சாந்தர், டையோடோடஸ், மேக்சாந்தர் போன்ற பன்னிரு கிரேக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்துக் காசுகள் கிடைத்துள்ளன. இது வணிகத் தொடர்பை உறுதி செய்கிறது. காஷ்மீரின் பழைய வரலாற்றைக் கூறும் 'ராஜதரங்கிணி' (12 -ம் நூற்றாண்டில் கல்ஹானா எழுதியது.) என்னும் நூலில் கிரேக்கர்கள் 'யொவனா' என்றும் 'மிலேச்சா' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ( சங்கத் தமிழில் கிரேக்கர்களை 'யவனர்கள்' என்று அழைத்தார்கள்.)கிரேக்க மன்னர்களில் இந்தியா வரை வந்தவன் அலெக்சாண்டர்தான். பீஸ் நதிக்கரையில் போரஸ் மன்னனைப் போரில் வென்றபின் தன் நாட்டிற்குத் திரும்ப அலெக்சாண்டர் முடிவு செய்தான். அவனுடன் வந்த வீரர்களில் சிலர் இந்தியாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். அவர்கள் இந்தியப் பெண்களை மணந்துகொண்டார்கள். அவர்களின் வாரிசுகள் இன்றும் இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள "மலானா" என்ற பகுதியில் இருக்கிறார்கள். 'துரோக்பாஸ்' (DROGPAS ) என்று அலைக்கப்பர்டுகிரார்கள். தனிப்பட்ட ஒரு மொழியைப் பேசுகிறார்கள். வெளியே திருமணத் தொடர்புகள் வைத்துக்கொள்வதில்லை. (இவர்களைப் போலவே ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 'நூரிஸ்தானி'கள் அலெக்சாண்டரின் வாரிசுகள் என்று கருதப்படுகிறார்கள்.பாகிஸ்தானில் உள்ள 'கலாஷ்' இனத்தவர்களும் அப்படியே கருதப்படுகிறார்கள்.)துரோக்பாஸ் இனத்தவர்களின் 'சாமுத்திரிகா' லட்சணங்கள் கிரேக்கர்களின் அடையாளங்களைக் காட்டுகின்றன. பொன்னிறக் கேசமும் நீலக்கண்களும் கொண்ட குழந்தைகள் பெண்கள் ஆண்கள்! அலெக்சாண்டரின் படையைச் சேர்ந்த ஒரு குழு மட்டும் ஏன் இந்தியாவிலேயே தங்கி விட்டது என்பதற்கு என்ன பதில் இருக்க முடியும்? களைத்துப் போனதால் இங்கேயே தங்கிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. திட்டமிட்டு செய்த ஒன்று என்றுதான் நான் நினைக்கிறேன். எந்தெந்த நாடுகளை ஒரு மன்னன் படையெடுத்துக் கைப்பற்றுகின்றானோ அங்குள்ள பெண்களிடம் தங்கள் வாரிசுகளை உருவாக்குவதன் மூலம் தன் இனத்தை உலகெங்கும் பரவச் செய்யும் திட்டம்தான் அது. அதனால்தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் கிரேக்க இனத்த்தின் விதைகளை அலெக்சாண்டர் விதைத்துச் சென்றுள்ளான். ( ஒருவேளை மனித வள மேம்பாடு என்பது இதுதானோ? )

கிரேக்கர்களும் அரேபியர்களும் தமிழகம் வந்த செய்திகளைச் சங்க இலக்கியம் கூறுகிறது. தமிழ் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டு அவர்களில் பலர் இங்கே(யும்) இல்லறம் பேணியிருக்கலாம்! கிரேக்கர்கள் "யவனர்கள்" எனப்பட்டார்கள். அரேபியர்கள் "சோனகர்" எனப்பட்டார்கள். காயல்பட்டினத்து முஸ்லிம்கள் எகிப்தியர்கள் என்று அரபிப் பேராசிரியர் ஒருவர் கூறினார். எப்பூடி? என்று நான் யோசிக்கும் வேளையில் எடிமாலாஜி காரணமும் சொன்னார். "கைரோ- பட்டினம்" என்பதுதான் காயல்பட்டினம் ஆனதாம். நல்ல ஆய்வு. 

திராவிடம் ஆரியம் கிரேக்கம் எபிரேயம் அரேபியம் மங்கோலியம் என்று இனக்கலப்புகள் நேர்ந்து மனித இனத்தின் ஜீன்கள் ஜீன்ஸ் பான்ட்டுகளைப் போலவே ஒரு சர்வதேசத் தன்மை அடைந்துவிட்டன என்று சொல்லலாம். உலகின் முதல் பெண் -ஏவாள்- எதியோப்பிய இனத்தின் கறுப்புப் பெண் என்று ஓர் மரபணுவியல் ஆய்வு கூறுகிறது. உலகில் நிகழ்ந்த இனக்கலப்புக்களைக் காணும்போது வெள்ளையும் மஞ்சளும் அரக்கும் கலந்த கதைகளைக் காண முடிகிறது. கறுப்பு கலக்கப்படவில்லையே? என்ற கேள்வி எழுகிறது. உடல் வன்மை மிக்க கறுப்பின அடிமைகளைக் காயடித்துதான் சந்தைகளில் விற்றார்களாம். (1001  அரபுக் கதைகளில் இந்தச் செய்தி சார்ந்த கதைகள் உள்ளன!) மனித இன வரலாற்றில் கறுப்பு என்பது இருட்டாகவே இருப்பது ஏன்? என்றும் உள்மனம் கேட்கிறது.

  
     
   

7 comments:

 1. அப்பப்பா எத்தனை விஷயங்கள்.
  உங்களை நேரில் சந்தித்துப் பேச
  வேண்டுமென ஆவல் மேலிடுகிறது.

  ReplyDelete
 2. நீங்கள் தமிழ் முஸ்லீம்களின் சொத்து

  ReplyDelete
 3. யப்பா...படித்து முடித்ததும்...'நான் யார்' என்ற கேள்வி வந்து விட்டது.அதானே...பிராமணர்கள் வெளி ஆளுங்களுக்கு வேதம் சொல்ல மாட்டாங்களே...ஒருவேளை அப்போதும் யாராவது 'எதிராக' யோசிக்கிறவன் இருந்திருக்கலாம்...எல்லா மதங்களும் கிழக்கே தோன்ற காரணம் என்ன? எனக்கென்னவோ மனித குல வளர்ச்சியில்...தர்க்கம் தாண்டி...கிழக்கே தியானத்துக்குள் போக முடிந்தது அற்புதம் என்றே தோன்றுகிறது...

  ReplyDelete
 4. // (ஒருவேளை மனித வள மேம்பாடு என்பது இதுதானோ?) //

  நல்லாச் சொன்னீங்க!!

  //"கைரோ- பட்டினம்" என்பதுதான் காயல்பட்டினம் ஆனதாம். நல்ல ஆய்வு. //

  ம்ம்ம் நல்ல உதாரணம் தான். ஆனா போற போக்கைப் பார்த்தா நாமெல்லாம் நாமல்லவோ??

  ReplyDelete
 5. கிரேட்..ஆர்டிகிள்..உண்மை தேடும் ஆர்வமுள்ளோருக்கு தங்களின் இந்த ஆர்டிகிள் ஒரு வழியைக் காண்பிக்கிறது..
  ஏசுபிரானின் இளம்பிராயம் காஷ்மீரில் என்ற கருத்து எனக்குத் தெரியாதது..கேள்விப்பட்டிறாதது என்கிற ரீதியிலான தேடலில் KMRK என்ற ஒரு நண்பரின் உதவியால் உங்கள் குடிலுக்கு வழி கிடைத்தது.. ரொம்ப நன்றி..
  ஆங்காங்கே தகவல்கள் tight packing ஆகி இருக்கிறது..ஆர்வம் இருப்போர் மட்டுமே தொடரக்கூடிய தரமான வலைப்பக்கம்..
  விஷயங்கள் ரொம்ப ஆழமாக ஆதாரங்களுடன் அலசப்பட்டிருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பு..முடிந்த போது எல்லாப்பக்கங்களையும்
  வாசிக்க பிரபஞ்சக்குடிலுக்கு வர முயற்சிக்கிறேன்..மீண்டும் நன்றி..

  ReplyDelete
 6. /// "நீங்க ஹிந்துவா?முஸ்லிமா?" என்று கேட்டார். "முஸ்லிம்" என்றேன். ஏன் அப்படிக் கேட்டார் என்று புரிந்தது. "நான் திருவையாத்தில் வளந்தவன்" என்றேன். "அப்போ நீங்க பாதி பிராமணன்" என்று சொல்லிச் சிரித்தார்.///

  அவர் அப்படிச் சொல்வார் என்று எதிர் பார்த்தே சொல்லியது போல உள்ளதே உங்கள் கூற்று.

  என் நண்பரை, கும்பகோணம் பச்சையப்பன் தெரு பிராமணர், ஒரு முஸ்லிம் ஏழைப் பெண் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் வைத்து அவரை முஸ்லிம் என்றே எண்ணிக் கொண்டு உதவி கேட்டாள். அவரும் அவள் நம்ப்க்கையைக் கெடுக்காமல் சிரித்துக்கொண்டே தன்னால் முடிந்ததை அளித்தார்.

  ReplyDelete
 7. அதனால்தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் கிரேக்க இனத்த்தின் விதைகளை அலெக்சாண்டர் விதைத்துச் சென்றுள்ளான். ( ஒருவேளை மனித வள மேம்பாடு என்பது இதுதானோ? )
  // அருமை சார் //

  ReplyDelete