Wednesday, September 22, 2010

தவறுகளின் தமிழ்ப்பணி





பேராசிரியர் மா.நன்னன் எழுதிய "நல்ல தமிழ் பேச வேண்டுமா?" என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. நூலை வெளியிட்டுப் பேசிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், "இப்பொழுதெல்லாம் தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிவைத்து அதனை ஆய்வேடு என்கிறார்கள். அதற்குப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டார். 

தமிழைப் பிழையின்றி எழுதவே தெரியாதவர்கள் பேராசிரியர்களாக இருப்பதையும் முனைவர் பட்டம் வரை பெற்று உலா வருவதையும் கண்டுவருகிறோம். தமிழை வைத்து இவர்கள் செய்யும் தொழில்களைக் காணும்போது "தமிழன்னை" போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, மாணவர்களின் விடைத்தாள்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளை வைத்து அங்கத இலக்கியத்தை நான் பல வருடங்களாகப் பயின்று வருகிறேன் என்பதையும் கூறவேண்டும். அந்த வகையில் தப்புத் தப்பாக எழுதித்தள்ளும் மாணவர்கள் எனக்கு ஆசிரியர்களும் ஆவார்கள்! அவர்களிடம் கற்ற சில 'பாடங்களை', அதாவது அங்கதமாக மலர்ந்த பாடபேதங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
(பாடபேதம் என்பதைச் சுருக்கமாகப் பா.பே என்று குறிப்பிடுகிறேன்)

தமிழில் ந,ன,ண ர,ற ல,ள, ழ ஆகிய எழுத்துக்களை மாணவர்கள் ஒரு ஆப்ஷனல் வசதியாகவே பார்க்கிறார்கள் போலும். எதை எங்கே வேண்டுமானாலும் போடலாம் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்கக் கலாச்சாரத் தாக்கம் என்று நினைக்கிறேன்.

பா.பே.#1 :  சிலப்பதிகாரத்தின் 'புகார்க் காண்டம்' என்பதை ஒரு மாணவன் "புகாக் காண்டம்" என்று எழுதியிருந்தான். என்ன பொருளில் எழுதினானோ அவனுக்கே வெளிச்சம். இதற்கு இரண்டு மதிப்பெண்கள் வேறு நான் போடவேண்டும்.என் தலைஎழுத்து.

பா.பே.#2 : சிலப்பதிகாரக் கதையை இன்னொருவன் இப்படி எழுதியிருந்தான்: "காணல்வெறி என்பது இலங்காவடிகளின் கவிதை ஆற்றல் முழுமையாக வெளிப்படும் இடமாகும். அதில் கேவலன் மாதவியைப் பார்த்து 'உன் கைவண்ணம் அன்று கண்டேன், வாய் வண்ணம் இன்று கண்டேன்' என்று பாடினான். உடனே மாதவி அவனுடன் ஊட்டினாள்." இந்தச் 'சிலப்பதிகாரம் மாணவர் வெர்ஷனை "பாம்புகார்" என்று யாராவது படமெடுத்து விடாமலிருந்தால் சரி.

பா.பே.#3 :  "கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்பது ஒரு புரட்சிப் பாடல் என்று ஒருவன் எழுதியிருந்தான். இதிலென்ன தவறு என்கிறீர்களா? ஒன்றுமில்லைதான். ஆனால் இந்தப் பாடலை எழுதியவர் நாமக்கள் கவிஞராம். அவரது இயற்பெயர் வெ.ரோமலிங்க அடிகளாம். பொதுவாக மாணவர்கள் "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்ற கவிதையைப் பாடியது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என்றுதான் எழுதுவார்கள். அது எவ்வளவோ தேவலாம். 

பா.பே.#4 :  கலைஞரின் மனோகரா வசனம் ஒன்றை ஒரு வகுப்பில் ஒரு முறை கூறியிருந்தேன். அதை இப்படி எழுதியிருந்தான் ஒருவன்: "துள்ளி வருகுது வேல், ஆவேசத்தை அள்ளி வருகுது வால்!" யப்பா மனோகரா, வால் ஒன்னு ஆவேசத்த அள்ளிக்கிட்டு வருதாம்ப்பா, பாத்துக்க.

பா.பே.#5 :  'புதுக்கவிதையின் வளர்ச்சி குறித்து எழுதுக' என்று கேள்வி கேட்டிருந்தது. அதற்கான விடையில் கவிஞர் வாலியைப் பற்றி ஒருவன் இப்படி எழுதியிருந்தான்: "வாலி ஒரு சிறந்த கவிஞர். இவர் அனுமாரை மறைந்திருந்து கொன்றார். [தேவைதான் அவருக்கு] இவர் எதிரியின் முன் வந்து நின்றால் எதிரியின் பழம் இவரிடம் வந்துவிடும்.[ஆமாம், திடீரென்று பழம் காணாமல் போய்விட்ட அதிர்ச்சியில் எதிரி மாரடைப்பு வந்து செத்துவிடுவான். இதுவும் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு அகிம்சை யுத்தம்!]

பா.பே.#6 :  சில மாணவர்களின் வைர வரிகளில் மீ-மெய்ம்மியல் சித்திரங்களைக் காண முடியும். 'ஆற்றிலே வெல்லம் புரண்டு புரண்டு ஓடியது' என்பதை அப்படியே கற்பனை செய்து பார்த்தால் தெரியும். 'மூளையிலே வால்' என்பதும் அப்படிப்பட்ட ஒரு வரிதான்.

பா.பே.#7 : 'அண்மையில் நடந்த விபத்தில்...' என்று ஒரு சிறுகதை துவங்கும். அதை வெகு சிரத்தையாக 'ஆண்மையில் நடந்த விபத்தில்...' என்று தொடங்கியிருந்தான். ஓபனிங் சீனிலேயே கதையை முடித்துவிட்டான்!

பா.பே.#8 : "பனை மாலை சூடிச் சேர வேந்தன் சிம்மக் குரலில் சூளுரைத்தான்" என்று நான் ஒழுங்காகத்தான் சங்க இலக்கியம் நடத்தியிருந்தேன். மாணவன் ஒருவனுக்கு அதில் உடன்பாடே இல்லை போலும். 'பணமாலை சூடி சேர வேந்தன் சிரமக் குரலில் சூளுரைத்தான்' என்பதுதான் அவனுக்குச் சரியாகப் படுகிறது.

பா.பே.#9 : இன்றைய மாணவர்களின் சிந்தனையே ஒரு மல்டி-டிசிப்ளின் போக்குடையாதாக இருக்கிறது. இலக்கியத்தில் அறிவியல் துறைகளை லாவகமாக நுழைப்பதில் இவர்கள் வல்லவர்கள்தான். 'விழையும் பயிர் முலையிலேயே தெரியும்' என்று ஒரு பழமொழியாம்! இது இலக்கியத்தில் அனாட்டமி போலும்.

பா.பே.#10 : ஒரு விடைத்தாளில் ஒரு கட்டுரை நெடுக "அரிஞர் அண்ணா", "பேரரிஞர் அண்ணா" என்றே எழுதப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அவர் அரிந்து தள்ளினார் என்று தெரியவில்லை. பகுத்தறிவு நளபாகத்தில் வெங்காயம் அரிந்தவர் என்று சொல்லவருகிறான் போலும். இன்னொரு செய்தியையும் பாருங்கள். அதாவது, நம் 'அரிஞர்' அண்ணா ஒரு மீட்டிங்குக்கு மிகவும் லேட்டாகப் போனாராம். அப்பவும் பெருங்கூட்டம் காத்திருந்ததாம். அவர்களைப் பார்த்து, "இங்க என்னய்யா செஞ்சுக்கிட்டிருகீங்க? வீட்டுக்குப் போய் சோலியப் பாருங்கய்யா" என்று கூறுவதுபோல் "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவுவதோ நித்திரை, மறக்காது இடுவீர் முத்திரை" என்று மிடுக்காக அடுக்கினாராம். உடனே தம்பிமார்கள் கிளம்பி வீடுகளுக்குச் சென்று மறக்காமல் முத்திரை இட்டார்களாம்! 

இப்படி தமிழின் எழுத்துக்களை தக்க இடங்களில் தப்பாகப் பயன்படுத்தியே பின்-நவீனத்துவம், மீ-மெய்ம்மை, கட்டுடைப்பு போன்ற உத்திகளை மாணவர்கள் உண்டாக்குவது இலக்கிய வளர்ச்சியில் நாம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறோம் என்பதைக் காட்டுகிறது அல்லவா? வாழ்க தமிழ்!   

4 comments:

  1. வெங்காயத்தை அ''ரி''ந்தவர் அண்ணா இல்லை. அவருடைய பெரிய ''அண்ணா'' பெரியார்.
    அடிக்கடி ''அட போடா! வெங்காயம்''' என்பார். வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் தான் வரும். உரித்து போட்டுக்கொண்டே போனால் வெறும் [காய்ந்த] தோல் தான் நிற்கும் என்பது தான் பொருளோ!

    ReplyDelete
  2. //'ஆண்மையில் நடந்த விபத்தில்...' என்று தொடங்கியிருந்தான். ஓபனிங் சீனிலேயே கதையை முடித்துவிட்டான்!// :)))))))))))

    //'விழையும் பயிர் முலையிலேயே தெரியும்' என்று ஒரு பழமொழியாம்// :))))))))
    LOL.
    btw, உங்களுக்கு நல்லா பொழுது போகும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. very funny jokes...non-stop comedy... :)

    ReplyDelete
  4. ///'புதுக்கவிதையின் வளர்ச்சி குறித்து எழுதுக' என்று கேள்வி கேட்டிருந்தது. அதற்கான விடையில் கவிஞர் வாலியைப் பற்றி ஒருவன் இப்படி எழுதியிருந்தான்: "வாலி ஒரு சிறந்த கவிஞர். இவர் அனுமாரை மறைந்திருந்து கொன்றார். [தேவைதான் அவருக்கு] இவர் எதிரியின் முன் வந்து நின்றால் எதிரியின் பழம் இவரிடம் வந்துவிடும்.[ஆமாம், திடீரென்று பழம் காணாமல் போய்விட்ட அதிர்ச்சியில் எதிரி மாரடைப்பு வந்து செத்துவிடுவான். இதுவும் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு அகிம்சை யுத்தம்!]///

    வயிறு புண்ணாயிற்று! உங்கள் கமெண்ட்ஸ் இல்லையென்றால் ஜோக் ரசிக்காது.

    ReplyDelete