Monday, September 20, 2010

தட்டைமுகத் தரிசனம்

                         

மக்காவில் எழுப்பப்பட்டுள்ள மணிக்கூண்டு பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் ஒரு கட்டிடம் ரொம்ப அவசியம்தானா? என்று தோன்றியது. இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகள் சவூதி வஹ்ஹாபிகளின் மார்க்க உளவியலையே கேள்விக்குறியாக்குகின்றது. எந்த விதமான சமய போதமும் அற்ற ஒரு தற்குறிக் கூட்டம் என்றுதான் இந்த சவூதி வஹ்ஹாபிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பார்க்கவேண்டியுள்ளது. இந்த மணிக்கூண்டு எந்த வகையில் புனித மக்காவிற்குச் சிறப்பு சேர்க்கின்றது என்று தெரியவில்லை.



 சவூதி அரசு என்பது வம்சாவழி மன்னராட்சியில் உள்ளது. மன்னர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்கா மற்றும் மதீனா நகரங்களின் நவீன வடிவமைப்பில் அவர்கள் காட்டி வந்துள்ள கட்டிட மோகத்திற்கு ஒரு சான்றாகவே இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. இது போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஹஜ் பயணிகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் காபாவின் மீதான அவர்களின் கவனத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடும். ஏனெனில் சராசரி மனநிலை எப்போதும் பெருவடிவங்களின் முன் எளிமையின் பேரழகை கவனத்தில் இழந்துவிடுவதாகவே உள்ளது. இங்கோ, அந்த மணிக்கூண்டின் அடியில் காபாவைப் பார்க்கும்போது ராட்சத கோலியாத்தின் முன் சின்னஞ்சிறு தாவூது (அலை) நிற்பதைப்போல் உள்ளது.

  உலகப் பொருட்களின் அங்காடிகள், நவீன விடுதிகள் என்று ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எல்லா வசதிகளும் மக்கா மற்றும் மதீனாவில் உள்ளன. இப்போது உலகின் மிக உயரமான மணிக்கூண்டு வேறு. போகும் போக்கைப் பார்த்தால் ஹஜ் செல்வதை ஏதோ டிஸ்னி லேண்டுக்குப் போவதைப் போல் ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

இப்ராஹீம் நபி (அலை) காபாவைக் கட்டியது  ஐயாயிரம் வருடங்களுக்கு முன். சுற்றிலும் வெறும் வனாந்தரம். நடுவிலே காபா. அது ஒரு கச்சிதமான வடிவத்தில்கூட இல்லை. நன்கு சுவர்களும் அளவெடுத்துக் கட்டியதாக இல்லை. கொஞ்சம் கோணலாக இருந்தது என்றுதான் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட கட்டிடத்தைத்தான் இறைவன் தன் வீடு என்று கூறிச் சிறப்பளித்தான். கச்சிதமாக இருக்கிறதா அல்லது கோணலாக இருக்கிறதா என்பதல்ல அளவுகோல். அதைக் கட்டியது ஒரு இறைத்தூதர். அதுதான் விஷயம். ஒரு இறைத்தூதரின் கைகள் கோணலாகக் கட்டினாலும் அது இறைவனின் இல்லம்தான். சுலைமான் நபி (அலை) ஜெருசலேமில் கட்டிய இறையாலயம் கச்சிதமான கட்டிடாமாகும். அவர்கள் மாமன்னராக இருந்தார்கள். ஒரு அரண்மனைக்குரிய ஏற்பாடுகளுடன் இறையில்லத்தைக் கட்டினார்கள். அதுவும் இறையில்லம்தான். அது கச்சிதமாக இருந்ததால் அல்ல. அது ஒரு இறைத்தூதர் கட்டியது என்பதால். கோடிக்கணக்கான இறையில்லங்களைக் கட்டுவது விஷயமல்ல. எந்த மனநிலையில் ஒரு இறையில்லக் கட்டிடம் நிர்மாணிக்கப் படுகிறது என்பதுதான் இறைவனின் அங்கீகாரத்தைப் பெறும். இதைக் காபாவின் உருவாக்கமே நமக்குக் காட்டுகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டியபோது காபாவின் கட்டிட அமைப்பு  மிகவும் எளிமையானதாக இருந்தது. பின்னால் வந்த அரபிகளுக்கு காபாவில் ஒன்றுமே இல்லையே என்ற எண்ணம் மலர்ந்தது போலும். எனவே காலப்போக்கில் அதில் கூடுதலாகப் பல சிலைகள், அதாவது முன்னூற்றி அறுபது சிலைகள் நிறுவப்பட்டு மக்கள் தூல வணக்கத்திற்கு வந்துவிட்டார்கள். மக்களின் சிந்தனையை மீண்டும் அருவ வழிபாட்டிற்குத் திருப்பவேண்டிய நிலை வந்தபோது நபிகள் நாயகம் அந்தச் சிலைகளை எல்லாம் நிர்மூலப் படுத்தினார்கள். இப்ராஹீம் நபி அவர்கள் கட்டியபோது இருந்த நிலைக்கே காபா திருப்பப்பட்டது. காபாவைச் சுற்றிலும் சில சிறு மண் வீடுகள் தோன்றியிருந்தாலும் அவை காபாவை விடப் பெரிதாக இல்லை. எனவே காபா அந்த அரபு வனாந்திரத்தில் தன்னை முழுவதுமாகப் பரந்து விரிந்த வானத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு நின்றது. அப்படித்தான் பல நூற்றாண்டுகளாக நின்றுவந்துள்ளது. ஆனால் அது இன்று மிகப்பெரிய நவீன கட்டிடத்திற்குள் உள்ளடங்கி ஒரு ஆஜானுபாகுவான மணிக்கூண்டை அண்ணாந்து பார்ப்பது போல் தோற்றமளிக்கிறது. இது வஹ்ஹாபிய உளவியலின் தோற்றம்தான்!

வஹ்ஹாபிய உளவியல் என்பது "டைட்டானிக்" கப்பல் கட்டிய அமெரிக்க உளவியலைப் போன்றதுதான். "உலகிலேயே பெரிசு என்னிடம்தான் உள்ளது"  என்று மார்தட்டிக் கூவவேண்டும். அதில் அதற்கு ஒரு தனிப் பெருமையும் அலாதியான சுகமும் உள்ளது. எளிமைக்கெல்லாம் அதன் அகராதியில் அர்த்தமே கிடையாது!

உண்மையில் காபா உருவாக்கும் சமய உணர்வெழுச்சி, ஆன்மிக மனநிலை என்பது அது நிற்கும் மண்ணோடு மட்டும் தொடர்புடையது அல்ல. காபாவின் மேல் பரந்து உயர்ந்து கவிந்து நிற்கும் வான வெளிக்கும் அதில் முக்கியமான பங்கு உண்டு. காபாவின் மாற்றப்படக்கூடாத ஒரு பரிமாணமாகவே அதன் மீது வானவெளி வியாபித்து நிற்கும் அமைப்பை நான் காண்கிறேன். அந்த நீல விதானம் எந்தக் கட்டிடத்தின் குறுக்கீடும் இன்றி ஹஜ்ஜிற்கு வருபவர்களின் பார்வைகளை இழுக்கவேண்டும். 
அப்போது அது உருவாக்கும் மனநிலை, மணிக்கூண்டு போன்ற கட்டிடங்கள் காபாவிற்கு அருகில் நிற்கும் நிலையில் உருவாக முடியாது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு கூறு காலம் பற்றியது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே ஓர் ஒற்றைக்காலத்தில் இருப்பதாகப் பார்க்கும் பார்வைதான் மக்காவையும் மதீனாவையும் நவீன கட்டிடக்கலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பழைய அரபி இனத்திற்கென்று தனியாகச் செவ்வியல் கட்டிடக்கலை எதுவும் கிடையாது. இன்று அராபிஸ்க் (Arabesque) என்று அழைக்கப்படும் கட்டிடக்கலைக்  கூறுகள் - பூ வேலைப்பாடுகள், ஜியோமிதிக் கோலங்கள் போன்றவை - எதுவும் நபிகள் நாயகம் காலத்தில் அரேபியாவில், குறிப்பாக காபாவிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் இருக்கவில்லை. அவை பாரசீகக் கலையுலகிலிருந்து பின்னால் அரபுலகம் வரித்துக் கொண்டவை. அவற்றை இஸ்லாமியக் கூறுகளாக மாற்றியது சூபிகள்தான். நபிகள் நாயகத்தின் காலத்தில் காபாவின் சுற்றுப்புறமும் சரி, மஸ்ஜிதுன் நபவியின் அமைப்பும் சரி, எந்தக் கலையலங்காரமும் இல்லாமல் மிக எளிமையான நிலையிலேயே இருந்தன. அந்த எளிமை இன்று இல்லை. தங்கப் பூச்சுக்கள் அலங்கரிக்க மக்காவும் மதீனாவும் வாட்டிகன் போல் மாற்றப்பட்டுள்ளன. கட்டிட வேலைப்பாடுகளில் அவை தாஜ்மகால் போன்ற கட்டிடங்களின் கலையமைப்பைப் பின்பற்றுகின்றன. இந்தப் புறச்சூழலில் ஹாஜி எவரும் நபிகள் நாயகத்தின் காலச் சூழலை அங்கு உணரமுடியாது. ஹஜ்ஜில் அடைந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அனுபவத்திற்கு இந்த நவீனப் புறச்சூழல் மிகப்பெரிய தடையாக இருக்கும்! 

 ஆனால் வஹ்ஹாபிகளுக்கு காலம்-வெளி உருவாக்கும் அகநிலை, உள்ளுணர்வு போன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. இது போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியில் உள்ளம் எல்லாம் தடித்துக்கொண்டு அரிப்பெடுத்துவிடும். எனவே மக்காவிலும் சரி மதீனாவிலும் சரி, தொன்மைச் சூழலைப் பேணுவதற்குப் பதிலாகத் திட்டமிட்டே அழித்து வருகிறார்கள். உதாரணமாக, நபிகளாரின் குடும்பத்தாரும் தோழர்களும் வாழ்ந்த வீடுகளையெல்லாம் நூலகம், மருத்துவமனை போன்ற அலுவலகங்களாக மாற்றியுள்ளார்கள். அதாவது சும்மாக் கிடக்கும் இடத்திற்குப் பயன்பாட்டினை உருவாக்குகிறார்களாம்! இவ்வாறாக, மக்கா மற்றும் மதீனாவில் காணப்படுவது வஹ்ஹாபிசத்தின் தட்டையான அராஜக முகம்தான்!

இந்து மதத்தின் நிலை அப்படியே தலைகீழானது! டிஸ்கவரி சேனலில் காசியைப் பற்றி ஒரு ஆவணப்படம் காட்டினார்கள். காசி இன்னும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருப்பதாகத் தெரிந்தது. இது ஒரு தேக்க நிலை என்று கூறுவது முட்டாள்தனம். புரியாதவர்கள்தான் இதை உறைந்துபோன நிலை என்று காண்பார்கள். காசி முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்ட காலத்தின் சூழல் முடிந்த அளவு பேணப்பட்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும். சங்கரர் உலவிய காசியை, குமரகுருபரர் நடந்த காசியை இன்று ஒரு ஹிந்து அங்கே எளிதாக அடைந்துகொள்ள முடியும். ஆனால் இந்து மதத்தின் பிரச்சனை இந்தப் பேணுதலின் நீட்சியாக உண்டாவதுதான். அதாவது புறச்சூழலில் சுகாதாரக் குறைபாடு. ஆனால் இதை எளிதாக நிவர்த்தி செய்துவிட முடியும்.


   
இந்த விஷயத்தைப் பற்றித்தான் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை, "இந்துக் கோயில்களில் சுத்தம் என்பதே இல்லை. எண்ணெய்ப் பிசுக்கும் வவ்வால் புளுக்கையுமாக உள்ளது. அதில் சென்று வணங்குவதைவிட நதியை வணங்கலாம். அதில் உயிர்த்துடிப்பு அதிகமாக உள்ளது!" ("ஒரே ஒரு புரட்சி")  என்று கூறினார்.

ஒரு பெருங்காய டப்பாவின் தூய வடிவம் என்பது உள்ளீடு எதுவும் இல்லாமல் காலி டப்பாவாக இருப்பதுதான். மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதாகக் கூறும் வஹ்ஹாபிகளின் நிலை ஆன்மிகச் சாராம்சம் எதுவுமற்ற வெறும் புறச்சடங்குகளால் ஆன காலி டப்பாவாகத்தான் இருக்கிறது. இதற்காக அது மிகுந்த இறுமாப்புடன் திரிகிறது!

Thursday, September 16, 2010

விடலைத்தாள்



மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்தித் திருத்தி ஏதோ சி.ஐ.டி வேலை பார்ப்பது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இலக்கியத்தை, தமிழைப் புதுப் புது டெக்னிக்குகளில் கொலை செய்து வைத்திருப்பதைப் பக்கத்திற்குப் பக்கம் காணலாம். "கண்ணகியைக் கோவலன் கற்பழிக்க வந்தான்" ( இதில் அடுக்குமொழி வேறு!) என்று எழுதுவதெல்லாம் மாணவ உலகில் சர்வ சாதாரணமான விசயம். இப்படி எழுதிவிட்டு, "ஐயா, சிலப்பதிகாரம் பத்தி எழுதீருக்கேன்ல, பத்துக்கு ஆறாவது போடுங்க" என்று தருமி ரேஞ்சில் கெஞ்சுவதைப் பார்க்கவேண்டும் நீங்கள். மாணவன் ஆசிரியரின் மனநிலையில் சிந்திக்கத் தெரிந்து கொள்கிறானோ இல்லையோ, நான் மாணவனின் நிலையில் இருந்து சில இலக்கியங்களைச் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அதில் ஒரு சர்ரியலிசத் தன்மை இருப்பதைக் காணலாம். சில நேரங்களில் காலத்தைக் கடந்த ஒரு போதமும் தென்படுவதுண்டு.

அந்த வகையில் சில தமிழ்க் கவிஞர்களைப் பற்றி, மாணவன் அவன் பாணியில்  குறிப்புக்கள் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

1 கண்ணதாசன்: இவர் திருக்குறளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். சினிமா உலகில் கொடி கட்டிப் பரந்த இவர் சில ஹாலிவுட் படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமிழுக்குப் புகழ் சேர்த்துள்ளார். பாரதியார் இவருடைய சீடராவார்.

2 . கவிக்கோ: இவர் எழுதிய "அம்மி கொத்த சிற்பி எதற்கு?" என்னும் புகழ் பெற்ற கவிதை புறநானூற்றில் காணப்படுகிறது. சிற்பி என்னும் சங்கக் கவிஞனை அரண்மனையில் அம்மி கொத்துவதற்காகச் சேரன் செங்குட்டுவன் அழைத்த போது அரசவைப் புலவராக இருந்த கவிக்கோ சீறி எழுந்து, "தேரா மன்னா! நான் இருக்கும்போது அம்மி கொத்த சிற்பி எதற்கு?" என்று கேட்டதே அந்தப் பாடல். இவர் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இசுலாம் மதத்திற்கு மாறி தன் பெயரை அப்துல் ரகுமான் என்று வைத்துக் கொண்டார்.

3 . கவிப்பேரரசு வைரமுத்து: இவர் கவிப்பேயரசு என்பவரின் தம்பியாவார். இவரும் ஒரு சங்கக் கவிஞர் ஆவார். புதுக்கவிதை பாடுவதில் வல்லவர். இவர் கவிதை  பாடுவதற்காக அரண்மனைக்கு வந்தால் பாடுவதற்கு முன்பே மன்னர்கள் வைரமும் முத்தும் கொடுத்து அனுப்புவார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க கவிஞர். 

4 . மீரா:  இலக்கணம் மீறாமல் பாடக்கூடிய வல்லமை உடையவர். எனவே இவர் மீரா என்று அழைக்கப்பட்டார். இவர் பக்தி ரசம் சொட்டச் சொட்ட பாடுவார். இவர் கவிதை வாசித்து முடித்தவுடன் தாள்கள் நனைந்து ஈரமாக இருக்கும் என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். இவர் காதலைப் பாடுவதிலும் சிறப்பாகத் திகழ்கிறார். இவர் எழுதிய "கனவுகள் + நினைவுகள் = ஊசிகள்" என்னும் நூலில் இதனைக் காணலாம்.

5 . மேத்தா: இவர் புதுக்கவிதையின் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இவருடைய கவிதைகளைப் படித்தவர்கள் இவரை புதுக்கவிதையின் கொல்லு தாத்தா என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு அற்புதமாக எழுதித் தள்ளுவார். இவர் சாகித்திய டம்மி விருது, பல ஆஸ்கார் விருது எல்லாம் பெற்றவர். இவர் ஆகாயத்துக்கு அடுத்த பக்கம் வூடு கட்டிப் பாடுவார்.

6 . சிற்பி: இவர் ஒளவையாரின் மாணவராவார். அறம் செய்ய விரும்புவார். அதனால் பல கவிதைகளை எழுதினார். இவர் தன் கவிதைகளைத் தாளில் எழுதாமல் உளி வைத்து கல்லில் செதுக்கி எழுதினார். எனவே இவரை மக்கள் சிற்பி என்று அழைத்தனர். இவர் ஆனைமலை புறாமலை அண்ணாமலை மற்றும் ஏழுமலைகளில் செதுக்கிய கவிதைகள் இன்றும் அழியாமல் உள்ளன. இவருடைய "சர்ப்ப தாகம்" என்னும் நூலுக்கு தமிழக அரசின் விருது பெற்றார்.

7 . பெருங்கவிக்கோ: இவர் ஒரு தமிழ்க்கவிஞர் ஆவார். முதலில் பெருங்காயம் விற்றுக்கொண்டிருந்தார். கவிக்கோவுக்கு மீசை இருக்காது. இவருக்கு பெரிய மீசை உண்டு. எனவே பெருங்கவிக்கோ என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் உணர்வு பொங்கி வழியும் வண்ணம் எழுதுவார். யாப்பெருங்கலக்காரிகை வழி நின்று வருணித்து எழுதுவார். எனவே "எழுத்தாணியில் மை தீராக் கவிஞர்" என்று சங்கப் புலவர்கள் இவரை போற்றினார்கள். "கொம்மை ________ பொருப்பு வட்ட ________ " போன்ற வரிகள் இவர் கவிதைகளில் மிளிர்கின்றன. ( குறிப்பு: இலக்கியங்களில் 'முலை' என்று வரும் இடங்களில் டேஷ் போடுவது கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்கலைக் கழகங்கள் கடைப்பிடித்து வரும் மரபு. அதை இந்த மாணவன்  பாடத்தில் உள்ளபடி கசடறக் கற்று எழுதியுள்ளான்)

8 . பாவலரேறு பெருஞ்சித்திரனார்: வீரம் கொப்பளிக்கும் கவிதைகளைக் குமுறிக் குமுறிப் பாடுவதில் திறமை உள்ள சங்கக் கவிஞர் இவர். இவர் பாடினால் கனல் தெறிக்கும், அனல் அடிக்கும் , புனல் கொதிக்கும். போர்ப்பாடல்களானலும் சரி காதல் பாடல்கள் ஆனாலும் சரி எல்லாவற்றையும் பெரிய சைசில் சித்திரமாக வருணித்துப் பாடுவதால் இவர் பெருஞ்சித்திரனார் என்று பெயர் பெற்றார். "பாவலரேறு" என்னும் பெயர் குறித்து கருத்து வேற்றுமைகள் உள்ளன. பாவலர்கள் ஏற்றிப் போற்றும் பாவலர் இவர் என்று புலவர்கள் கூறுகின்றனர். பாவலர்கள் ஏறும் பாவலர் இவர் என்று மானிடவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

9 . இன்குலாப்: இவர் குலாப் ஜாமூன் போல் இன்சுவை மிக்க கவிதைகள் செய்வதில் வல்லவர். இஸ்லாமியப் பாடல்கள் பல இயற்றியுள்ளார். இவர் குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா என்னும் சூபி ஞானியின் சீடராவார். இவருடைய பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்துள்ளன. "முஸ்தபா முஸ்தபா..", "முக்காலா முக்காபுலா லைலா.." போன்ற இவரது பாடல்கள் மக்களின் மனம் கவர்ந்த பாடல்களாகும்.  

இதுவே தமிழ் இலக்கிய வரலாறில் நாம் காணலாகும் செய்திகளாகும்.

********       *********        *********

இந்த விடையை எழுதிய பின் மாணவன் தேர்வாளருக்காக எழுதிவைத்த ஓரக்குறிப்பையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்:
"ஐயா, நீங்கள் மனிதரில் தெய்வம். பொன்மனம் கொண்டவர். நான் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். பார்ட் டைம் வேலை செய்கிறேன். படிக்க நேரம் கிடைக்கவில்லை. இரவெல்லாம் கண் முழித்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து எழுதியுள்ளேன். தயவு செய்து எனக்கு பாஸ் போடவும். நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ கடவுளை வேண்டுகிறேன். நன்றி."

மேலும் ஒரு குறிப்பு:
கவிஞர் இன்குலாபின் குரு என்று மாணவன் குறிப்பிட்டுள்ள 'குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா' என்பவர் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையின் வழி அறியப்படுகிறார். அதைப் பற்றி வகுப்பறையில் நான் ஒரு முறை சொன்னதை மாணவன் ஞாபகம் செய்து எழுதியுள்ளான். இது அவனுடைய நினைவாற்றலுக்கு நல்ல சான்று. பாபாவைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் ஜெயமோகன் எழுதிய "மனிதனாகி வந்த பரம்பொருள்" என்னும் கட்டுரையை அவரது வலைத்தளத்தில் காணவும்.

Tuesday, September 14, 2010

செல்போன்-றவன்




வகுப்பறையில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவனைக் கையும் களவுமாகப் பிடித்து வந்து எங்கள் துறைத் தலைவர் முன் நிறுத்தினார் ஒரு பேராசிரியர். விசாரணை மற்றும் தக்கப் பரிசோதனைக்குப் பின் அந்த செல்போன் என்னும் 'மினி மசாலாத் திரையரங்கு' அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டது. மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்த அந்த மாணவன் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான்: "சார், எல்லாப் பசங்களுந்தான் வச்சிருக்காங்க. என்னை மட்டும் ஏன் புடிக்கிறீங்க?" ( தமிழுக்கே சிலேடையா? மவனே பேத்துருவேன்)

"ஐயகோ! இவன் விரிவுரையாளருக்கு வல்லின றகரம் போடுவான் போலிருக்கே. இந்தச் செல்லினத்தை - புல்லுருவியைப் பூண்டோடு அழித்துவிடவேண்டும்" என்று நான் காண்டாகக் கூறவில்லை. அவன் சொன்னதில் டபுள் மீனிங்கை ஒதுக்கிவிட்டு நேரான அர்த்தத்தில் கவனம் செலுத்தி யோசித்தேன். மாணவர்களின் நிலை உண்மையில் இப்படித்தான் இருக்கிறதா? ஏன் இப்படி ஆனது? 

தரையிறங்கி வந்த தாந்திரீகச் சிலைகள் போல் பத்திரிகைப் பக்கங்களில் பாவைகளின் படங்கள். திரையில் அவர்களின் தீட்சை. அதனால்தான் மாணவன் மந்திரித்துவிட்டது போல் இருக்கிறான். மலையாள மாந்திரீகம்! இந்த நிலையில் இருப்பவனிடம் போய் நான் இலக்கியம் இயம்ப வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? சம்போகச் சயனத்தில் இருப்பவனிடம் மளிகைக் கடை ரோக்கா வாசிப்பதுபோல் ஆகிவிடுகிறது. என் சக பேராசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்வார், "வகுப்பறையில் பாடம் நடத்துவது வன்புணர்ச்சி" என்று.

"இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்று பாரதிதாசன் பாடினார். மாணவன் உலகத்தைத் தேடி சினிமாக் கொட்டகைக்குப் போய்விட்டான். அவன் கனவு காணும் உலகம் அங்கேதான் இருக்கிறது.

"இருட்டறையில் ஏதில் பிணம் தழுவியதுபோல" என்று வள்ளுவர் ஒரு உவமை கூறுவாரே, அது சில வகுப்பறைகளுக்கும் பொருந்துகிறது.



இரண்டாம் பிரிவேளையிலேயே சில மாணவர்கள் கிறங்கி அமர்ந்திருப்பார்கள். தள்ளாடி மேசைமீது விழுகிறான். மந்தமான கண்கள். மந்தமான புத்தி. காரணம் கேட்டால் இரவெல்லாம் தூங்கவில்லை என்று கூறுவான். சம்சாரியான நானே ஷிப்ட் முறையிலாவது தூங்கி எழுந்து வருகிறேன். பிரம்மச்சாரியான இவனுக்கென்ன வந்தது? அலைபேசியோ? மடிக்கணினியோ?  சீவகச் சிந்தாமணியை அவன் கற்பனைப்புலன் 3D -யில் காட்டியிருக்கும்போலும்.

என்னவோ சொல்வார்களே, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாவா? இவனால் பதினெட்டிலேயே பகலில் நிமிரமுடியவில்லை. இந்த லட்சணத்தில் இவன் எதிர்கால இந்தியாவின் முதுகெலும்பு வேறு. ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கூறுகிறார்.

மதுரை கோவை நெல்லை தஞ்சை சென்னை என்று விதவிதமான ஸ்லாங் எல்லாம் போட்டு அரசியல் சினிமா நாட்டு நடப்பு எல்லாம் கலந்து பாடத்தைக் கொடுத்தாலும் இவர்களுக்குச் சுவைப்பதில்லை. என்ன சொல்வது? இவனுகளுக்கு மு.வ , வ.சுப.மா , தெ.பொ.மீ , அ.கி.ப வகையறாக்கள் வந்து தமிள்ல தாளிச்சிருக்கணும்... அப்பத் தெரியும் அருமை.

  

Monday, September 13, 2010

காணக் கண் கோடி வேண்டும்


"ஹஜ் போயிட்டு வந்தவங்கள போய்ப் பாத்தா ஜம்ஜம் தண்ணியும் பேரீச்சம் பழமும் கிடைக்கும்கறது சரிதான். ஆனா, ஹஜ் போயிட்டு வந்ததைப் பத்தி ஒரு மொக்கை போடுவாய்ங்க பாரு.... அதத் தாங்க முடியாதுப்பா."
                                         *****************************************
மேற்காணும் உரையாடலைப் பற்றி நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.
புனித ஹஜ் பயணம் சென்று வந்ததன் அனுபவங்களை ஒருவர் பகிர்ந்து கொள்ளும்  பேச்சு ஒரு சிறந்த மததன்மை கொண்ட உரையாக இல்லாமல் சாரமற்ற 'மொக்கை'யாக - அதாவது பிளேடாக ஆவது ஏன் என்ற காரணங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் அவர்களின் பேச்சு பின்வரும் விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருக்கக் காணலாம்:
# வானளாவும் பள்ளிவாயில்களின் பரப்பளவும் உயரமும்
# உணவு விடுதிகள், உணவு வசதிகள் மற்றும் ஏற்பாடுகள்
# தண்ணீர் வசதிகள்
# சாலை மற்றும் வாகன வசதிகள்
# சவூதி அரசின் பல நிர்வாகத் திறமைகள்
இவையெல்லாம் இன்றைய நிலையில் நம் பலவீனங்களைச் சமாளிக்கும் பொருட்டு இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ள அருட்கொடைகள் என்பதில் ஐயமில்லை. இனி ஹஜ் சென்று வருபவர்கள் உலகின் மிக உயரமான மணிக்கூண்டு பற்றியும் பேசுவார்கள். ( "ஆஹா! எவ்வளவு பெரிய மணிக்கூண்டு தெரியுமா? காணக்கண் கோடி வேண்டும் மணிக்கூண்டை! அதைப் பாக்குறதுக்காவது நீங்க அவசியம் ஹஜ் போயிட்டு வாங்க" என்பது போன்ற பரவச உரையாடல்களையும் நாம் அவ்வப்போது கேட்க நேரலாம்)


இவையெல்லாம் அடிப்படை மனித வசதிகள் என்பதைக் கவனிக்க வேண்டும். இவை எதுவும் நபிகளாரின் காலத்தில் இருக்கவில்லை. இவற்றுக்கும் ஹஜ்ஜின் சாராம்சத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இதர பல நாடுகளில் காணலாகும் வசதிகள்தான் இவையெல்லாம். இதில் இஸ்லாத்திற்கென்று தனித்தன்மை ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த நாகரீக வளர்ச்சிகளை எல்லாம்
- அதாவது தொழில்நுட்பம் சார்ந்த புற வளர்ச்சிகளை எல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன்தான் சவூதி அரசு வளர்த்துக்கொண்டது. இவற்றை வியந்து வாயாரப் பேசுவது ஒருபோதும் இஸ்லாத்தை வியப்பதோ ஆன்மிகப் பேச்சோ அல்ல, இறையுணர்வால் உண்டாவதும் அல்ல.


இந்தக் கருத்துக்குத் தொடர்பான ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்:
அபூ யஜீது பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஒருமுறை ஹஜ் சென்றபோது மதீனா நகருக்குச் செல்கிறார்கள். அப்போது மதீனாவில் ஏற்பட்டிருந்த கட்டிடங்களின் வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, அதனை ஹதீஸ்களின் வாயிலாக நாம் காணும் எளிமையான மதீனாவுடன் மனதில் ஒப்பிட்டு, 'இது என்ன ? நான் நபியின் நகரத்திற்கு வரவேண்டும் என்ற ஆவலுடன் வந்தேன். ஆனால் இதை பிரௌனின் நகரத்தைப் போல் ஆக்கிவிட்டார்களே!' என்று வேதனைப்பட்டார்கள்.

முதலில் எடுத்துக்கொண்ட கருத்தின்பக்கம் திரும்புவோம். அதாவது, ஹஜ் சென்று வந்தவர் தன் அனுபவங்களைக் கூறுவது ஏன் சாரமற்ற வெற்றுப் பேச்சாக உள்ளது?

காதலியைச் சந்திக்கும்போது ஒருவன் பரவசத்தை அனுபவிக்கிறான் எனில், அவளைப் பிரிந்திருந்த நேரங்களில் வேதனையை, துயரத்தை அனுபவித்திருப்பான் என்பதுதான் உண்மைக் காதலின் அடையாளம். இந்த உதாரணம் உங்களுக்குப் புரிகிறதா?

ஹஜ்ஜில் வழிபாடுகளின் உச்சத்திற்குச் செல்வதாக உணர்கின்றோம். ஹஜ் செல்லும் முன்பும், சென்று வந்த பின்பும் நம் இறையுணர்வு எந்த நிலையில் இருந்தது? இருக்கிறது? ஆன்மிக அகநிலை எதையுமே பெற்றிராத ஒருவர் ஹஜ் சென்றால் திடீரென்று அது உருவாகிவிட முடியாது. அதனால்தான் அவர் பார்த்துவிட்டு வந்து வியப்புடன் குறிப்பிடுவதெல்லாம் சடங்குகளின் புறம் சார்ந்த விஷயங்களில் ஏற்பட்டுள்ள வசதிகள் பற்றியதாகவே உள்ளன. பொருளாதார வளர்ச்சி அடைந்த எந்த நாட்டிற்கு அவர் சென்று வந்தாலும் இந்த விஷயங்களைப் பற்றித்தான் அவர் பேசுவார். இடனகளின் பெயர்களும் கட்டிடங்களின் பெயர்களும் மாறியிருக்கும். அவ்வளவுதான் வேறுபாடு. எனவேதான் ஹஜ்ஜின் தனித்தன்மையாக அவர் உணர்ந்த எதுவும் அவர் பேச்சில் வெளிப்படவில்லை என்கிறேன். ஏனெனில் அப்படியொரு சாராம்சத்தை உணர்வதற்கான மனப்பயிற்சி எதிலுமே அவர் அதுவரை ஈடுபட்டதில்லை.

ஜுனைது (ரஹ்) அவர்கள் தன் ஹஜ் அனுபவங்கள் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்கள்:
"நான் முதல் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தை மட்டும் கண்டேன், இறைவனைக் காணவில்லை. நான் இரண்டாம் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தையும் இறைவனையும் கண்டேன். நான் மூன்றாம் முறை ஹஜ் சென்றபோது இறைவனை மட்டுமே கண்டேன்."

நம் ஹஜ் யாத்திரைகள் எந்த நிலையில் உள்ளன?
காதலியைக் காணச்சென்று அவளின் முகத்தைக் காணாமல் முகத்திரையை மட்டுமே ஒருவன் பார்த்து வருவான் எனில் அதைப்பற்றி என்ன சொல்வது?

Wednesday, September 8, 2010

பாங்கர் நிமித்தம்




வீட்டில் அமர்ந்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து மாலைத் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. புத்தகத்தை மூடாமல் அப்படியே கவிழ்த்துத் தொடை மீது வைத்தேன். பாங்கிற்குப் பதில் சொல்லவேண்டும். என் மனதிற்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். புத்தகத்தில் வாசித்துக்கொண்டிருந்த செய்திக்கும் பாங்கின் பதிலுக்குமாக மனம் பிளவுபட்டுக் கிடந்தது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எந்த லயிப்பும் இல்லாமல் என் மனம் ஒரு சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. 
பாங்கு சொல்லப்படும்போது பதில் கூற வேண்டும்.பேசக்கூடாது. அப்படிப் பேசினால், பாங்கை அவமதித்தால், அல்லாஹ் உங்களை நரக நெருப்பில் வீசித் தண்டிப்பான் என்று ஒரு அருள்வாக்கு கூறுகிறது. கேள்விப்பட்ட விஷயம்.

எனவே, பாங்கு ஒலிக்கும்போது எங்கள் வீட்டுப் பெண்கள் பேசவே மாட்டார்கள். பவ்யமாகத் தலையில் முக்காடிட்டு மறைத்துக்கொள்வார்கள். பாங்கிற்கு பதில் கூறுவார்களா என்று தெரியாது. கணவன்மார்கள் பேசினாலே பதில் கூறத் தயங்கும் பணிவுகொண்டவர்கள் அல்லாவை அஞ்சி இப்போதும் பதில் பேச மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் டி.வியை ஆப் செய்ய மாட்டார்கள். அதில் மெகாசீரியல் ஓடிக்கொண்டிருக்கும். பேசக்கூடாது என்பதுதானே டீல்.பார்க்கக்கூடாது என்றில்லையே? எப்படியோ, பேசாமல் ஓர்மையுடன் மெகாசீரியல் பார்க்கும் உத்தியை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். இறைவன் அவர்களுக்குச் சொர்கத்தை வழங்குவானாக!


ஆக, பாங்கிற்குப் பதில் கூறுவது என் மனதில் உப்பு சப்பில்லாத ஒரு சடங்காக நடந்துகொண்டிருந்தது. எத்தனை ஆழமான வரிகள்! அதற்கு எத்தனை நெகிழ்வான பதில்கள்! 'தொழுகைக்கு வாருங்கள்! தொழுகைக்கு வாருங்கள்! வெற்றி பெற வாருங்கள்! வெற்றிபெற வாருங்கள்!' என்று மோதினார் - பாங்கர் - அழைத்துக்கொண்டிருந்தார். சலாத், பலாஹ் ஆகிய சொற்களின் அர்த்த ஆழங்களில் சற்றே மூழ்கிப்போனேன். 'அல்லாஹ்வினது அன்றி எனக்குச் சுயமாக ஆற்றலோ சக்தியோ இல்லை' என்று பதில் கூறுகிறேன். அவன் அசைத்தால்தான் அசைவேன். இது எவ்வளவு உன்னதமான மனநிலை. ஆனால் அப்படிப்பட்ட மனநிலையில் இருந்துகொண்டுதான் நான் பாங்கிற்குப் பதில் கூறுகிறேனா? பாங்கிற்கு அழைப்பவரும் இதையெல்லாம் விளங்கி அப்படியொரு மனநிலையில் இருந்துதான் அழைக்கிறாரா? 


இதை எண்ணிப்பார்க்கும்போதுதான் பங்கிற்குப் பதில் கூறுவதன் பின்னணியில் உள்ள ஒரு முழுமையான வாழ்க்கைத்திட்டம் புரிகிறது. அதாவது, ஒரு நாளில் ஐந்து வேளைகள் பாங்கிற்குப் பதில் கூறவேண்டிய நிலை உள்ளது. அப்போது நீங்கள் சுயமுனைப்பு அற்ற நிலையில், அகங்காரம் அற்ற நிலையில் இருக்க வேண்டும், ஒரு வெற்றுக் கோப்பையைப் போல. ஆனால் இந்த நிலை பாங்கு சத்தம் கேட்டவுடன் சட்டென்று உண்டாகிவிட முடியாது. நீங்கள் ஏற்கனவே அந்த நிலையில் இருந்தாகவேண்டும்.ஐவேளை பாங்கு என்பது அந்த அர்ப்பணிப்பு நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்கின்ற ஒரு சோதனைக் கணம் மட்டுமே. பாங்கிற்கு முன் நீங்கள் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அது இந்த அகநிலையைப் பாதிக்கக்கூடாது. அப்படியொரு நிலையில் உங்கள் வாழ்க்கை செல்லவேண்டும். 


ஆனால், அல்லாமா இக்பால் கூறுவதுபோல் 'பாங்கில் பிலாலின் உயிர் இல்லை.' அதேபோல்  பாங்கிற்கான பதிலில் அகநிலை இல்லை. காதலன் - காதலி உரையாடல்போல் இருக்கவேண்டிய பாங்கும் பதிலும் நம்மிடம் எப்படி இருக்கிறது? காதலன் - காதலி வேடமிட்ட இருவர் நாடக ஒத்திகையில் பேசுவதுபோல் உள்ளது. இல்லை அதைவிட மோசமாக, காதலனும் காதலியுமாக வேடமிட்ட இரண்டு அரவாணிகள் பேசிக்கொள்வதுபோல் இருக்கிறது. அல்லாஹ் மன்னிப்பானாக!
  

கீழே விழுந்த மெட்டு




"என் சுவாசங்களின் 
மணிமாலையில் 
உன் பெயரை 
தியானம் செய்வேன்"
(சாசோன் கி மாலா பெ சிம்ரூன் மே தேரா நாம்...)

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் நுஸ்ரத் அவர்கள் பாடிய ஒரு சூபி பாடலின் ஆரம்ப வரி இது. ஒரு இறைக்காதலனின் உணர்வுகளை லௌகீகக் காதலின் தளத்திற்கும் பொருந்தும்படியான மெட்டில் வெளிப்படுத்தும் பக்திப்பாடல் அது.
இந்தப் பாடலின் மெட்டினை அப்படியே சுட்டு ஒரு தமிழ்த் திரைப்படத்தில் போட்டிருந்தார்கள். "கத்தாழ கண்ணால..." என்று தொடங்கும் அந்தப் பாடல் சினிமாவுக்கே உரிய மேலோட்டமான, சாரமற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்த கலைஞனின் தளத்திற்கு நுஸ்ரத்தின் மெட்டு இறக்கப்பட்டுவிட்டது. அவ்வளவுதான். அந்த இசைக்கலைஞனைக் கேட்டால் 'நுஸ்ரத்தின் பாடலால் இன்ஸ்பயர் ஆகி இதைப் போட்டேன்' என்று கூறுவான்.
                      இன்று திருச்சிக்கு முதலமைச்சரின் தலைமையில் தளபதியும் மந்திரிகளும் எண்ணற்ற இந்நாட்டு மன்னர்களும் வருகை தருவதால் நேற்று மாலை முதலே நகரம் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் நெடுகப் பதாகைகளும் பளிச் பளிச் என்று நகைச்சுவை உணர்வு கொப்பளிக்கச் சிரிக்கும் முகங்களைக் காட்டும் போர்டுகளும், அவற்றில் அதே உணர்வினைத் தூண்டும் வாசகங்களும் அலங்கரிக்க, லவுடு ஸ்பீக்கர்களில் நாகூர் ஹனீபா தொண்டை கிழிய அலறிக்கொண்டிருந்தார். தில்லை நகர் வீதியில் இந்த 'ரொமாண்டிக்கான' சூழலில் நான் என் மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது யாரோ ஒரு கழகக் கண்மணி பாடிக்கொண்டிருந்த அந்தப் பாடல் என் காதில் விழுந்தது. மேற்சொன்ன 'கத்தாழ கண்ணால' பாடலை அப்படியே காப்பி அடித்துத் தன் தலைவனை அவன் மெய்சிலிர்க்கப் புகழ்ந்து கொண்டிருந்தான். அரசியலுக்கே உரிய ஒரு வருணிக்க முடியாத நெடி அதில் காரமாக வீசிக்கொண்டிருந்தது.
எனக்கு நுஸ்ரத்தின் சூபிப் பாடலும், அதிலிருந்து இன்ஸ்பயர் ஆன சினிமாப் பாடலும் நினைவில் தோன்றி அதிலிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த அரசியல் பாடலுக்கு அருகில் வந்து நின்றன. சிங்கமும் நாயும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று விலங்கியல் கூறுகிறது. சிங்கம் போன்ற ஒரு பாடல் இன்ஸ்பயரேஷனில் நாயாகி, பின்பு காப்பியடித்தலில் சொரிநாயாகித் திருச்சி சாலையில் என் கண்முன்னே ஓடுவதுபோல் இருந்தது. 
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் மனிதனும்கூட இறைவனுக்காக இசையமைக்கப்பட்ட ஒரு மெட்டுத்தான் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த மெட்டு சினிமாத்தனமாகவும் அரசியல்தனமாகவும் உருமாறிப் போய்விடுகிறது. 
"மனிதனை நாம் சிறந்த வடிவத்தில் படைத்தோம்.
பின்பு அவனைக் கீழினும் கீழான நிலைக்குத் தள்ளினோம்"
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

Sunday, January 24, 2010

எழுத்துக் கண்ணாடி



இந்தப் பொங்கல் விடுமுறையில் இரண்டு நாவல்கள் வாசிக்க முடிந்தது. யுவன் சந்திரசேகர் எழுதிய "கானல் நதி" நாவலைப் படித்து முடித்ததும் மனம் தாளாமல் கனத்துக் கிடந்தது. இடையிடையே எல்.சுப்ரமணியத்தின் "ஜிப்சி டிரய்ல்" ஆல்பத்திலிருந்து ஒரு இசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த இசையின் ஆதார சுருதியில் இழைந்த சோக உணர்வு நாவலின் கதையோட்டத்துடன் நன்றாகப் போடுந்தியிருன்தது. 
அதனால் ஏற்பட்ட அழுத்தமும் இணைந்து நள்ளிரவில், னேஎர்பானையில் விரிசல் விட்டதுபோல் கண்ணில் கசிந்தது. 
"யாரோ எழுதியதைப் படித்துவிட்டு இப்படி ஏன் அழ  வேண்டும்?" என்று என் மனைவி கேட்டாள், சற்று கோபமாகவே. இந்தச் சிறுபிள்ளைத்தனங்கள் அவளுக்குப் பிடிக்காது.  
எனக்கு வேறு மாதிரித் தோன்றுகிறது. எழுதியவரை யாரோ என்று நினைத்துக் கொண்டு படித்தால் நான் முதலில் அதைப் படிக்கத்தான் முடியுமா? எழுதியவருடன் என் மனதின் அலைவரிசை இயைபு கொள்ளும்போதுதான் ஒரு நூலைத் தோய்ந்து படிக்க முடிகிறது.  
 

அதாவது, எனக்குப் பிடித்த எழுத்தாளனின் எழுத்தில் நான் காண்பது அல்லது தேடுவது என் மனதின் எழுததைதான், குரலைத்தான். எனவே, ஒரு நூலைத் தோய்ந்து வாசிக்கையில் நான் வாசிப்பது என் மனதின் பிரதியைத்தான். அதாவது, ஒரு கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு என் மனதையே அதில் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

"இதெல்லாம் நீ கூறுவது சரி. வேதம் வாசிக்கையிலும் அப்படித்தானோ?" என்று ஒரு குரல், என் உள்ளிருந்தே வருகிறது. யோசித்துக்கொண்டிருக்க்கிறேன்.