Wednesday, May 17, 2017

நான் விளக்கைப் படைத்தேன் - part 3

தஷ்பீஹ் என்பதை இன்னொரு வகையில் சொல்வதெனில் குறியீடு (symbol) என்று சொல்லலாம். ஏனெனில் உருவகம் என்பது மொழியிலமைந்த குறியீடுதான். எனவே முதஷாபிஹாத் வகைத் திருவசனங்களைக் ‘குறியீடான ஆயத்கள்’ (Symbolic Verses) என்று சொல்லலாம்.

முஹ்கமாத் மற்றும் முதஷாபிஹாத் என்னும் இருவகை வசனங்களில் ஊடறுத்து நிற்குமொரு வெளிப்பாட்டு உத்தியையும் இறைவன் தனது மறையில் கையாள்கிறான். அது மிஸ்லு (பன்மை: அம்ஸால்) என்னும் உவமை (Similitude) ஆகும். (இதனைச் சிலர் ’உதாரணங்கள்’ (examples) என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.)  முஹம்மத் மர்மத்யூக் பிக்தாலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் முப்பத்தாறு திருவசனங்களில் Similitude என்னும் சொல்லினைக் கொண்டு வருகிறார். அதற்கு இணையர்த்தத்தில் (Synonymous) “allegory” என்னுஞ் சொல்லையும் பயன்படுத்துகிறார்.

”திண்ணமாக நாம் முன்வைத்துள்ளோம், இந்த குர்ஆனில், ஒவ்வொரு உவமையிலிருந்தும், அவர்கள் நினைவுகூர்வதற்காக” (வ லகத் ளரப்னா லின்னாசி ஃபீ ஹாதல் குர்ஆனி மின் குல்லி மிஸ்லின் லஅல்லஹும் ய(த்)த-த(z)க்கரூன் – குர்ஆன்: 39:27) என்னும் திருவசனமும், “இந்த உவமைகள், மனிதருக்காக அவற்றை முன்வைக்கிறோம், அவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்காக” (வ தில்கல் அம்ஸாலு நள்ரிபுஹா லின்னாசி லஅல்லஹும் ய(த்)தஃபக்கரூன் – குர்ஆன்: 59:21) என்னும் திருவசனப் பகுதியும் இறைவன் உரைக்கும் உவமைகளின் நோக்கம் என்னவென்பதைக் காட்டுகின்றன. அதாவது, இவ்வுவமைகளைக் கொண்டு மனிதர்களிடம் இறைவனின் எதிர்பார்ப்பு அவர்கள் அவற்றை தியானிக்கவும் (தத(z)க்குர்) ஆழ்ந்து சிந்திக்கவும் வேண்டும் (தஃபக்குர்) என்பதேயாம்.

ஆனால் குர்ஆனின் உவமைகளை எல்லோரும் விளங்கிவிட முடியுமா? அல்லது அதற்கென்றான சிறப்புத் தகுதிப்பாடு, நாம் உருவக, குறியீட்டு (முதஷாபிஹாத்) வசனங்களுக்குச் சுட்டியது போல, ஏதேனும் தேவைப்படுகிறதா? இதற்கும் இறைவசனமே பதிலளிக்கிறது: ”இந்த உவமைகள், மனிதருக்காக அவற்றை முன்வைக்கிறோம். ஆனால், அறிஞர்களே அன்றி அவற்றை விளங்குவதில்லை” (வ தில்கல் அம்ஸாலு நள்ரிபுஹா லின்னாஸி, வ மா யஃகிலுஹா இல்லல் ஆலிமூன் – குர்ஆன்: 29:43). உவமைகளை விளங்குவதற்கு இல்மு (அறிவு, கல்வி) என்னும் தகுதிப்பாட்டினை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. குர்ஆனை ஓதவும் படிக்கவும் தெரிந்த அனைவரிடமும் ஒரு குறைந்தபட்ச ‘இல்மு’ இருக்கத்தான் செய்கிறது. எனவே, இவ்வசனம் அறிவு என்று சுட்டிக்காட்டுவது புற-அறிவை (இல்மெ ழாஹிர்) அல்ல, ஆன்மிகமான அக-அறிவையே (இல்மெ பாத்தின்) என்பது போதரும்.

விளங்குதல் என்பதில் இவ்வசனம் “அக்லு” என்னும் சொல்லினைப் பயன்படுத்துகிறது. அறிவது என்பது வேறு விளங்குவது என்பது வேறு. அறிவது மக்களிடையே சமமாக நிகழக்கூடும். ஆனால் அவரவரின் விளங்குதல் என்பது பல்வேறு நிலைகளில் அமையும். (’நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்’ என்கிறார் திருவள்ளுவர்.) விளங்குதல் என்பதை நோக்கிச் செலுத்துகின்ற ஒருவகை அறிவைப் பெற்றிருப்பவர்களையே இவ்வசனம் “ஆலிமூன்” (அறிஞர்கள்) என்று குறிப்பிடுகிறது. அவர்கள் அக-அறிவைப் பெற்றிருப்பவர்கள்தான். அக்ல் என்பதை ஆங்கிலத்தில் Intelligence / Intellect என்று மொழிபெயர்ப்பதுண்டு. இச்சொல்லே இதயம் (கல்ப்) மற்றும் அதன் மையமான ’லுப்’ ஆகியவற்றைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் என்று கூறும் மார்ட்டின் லிங்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “இதயம் பல நேரங்களில் சிந்தனைக்கு நிகர்ச்சொல்லாக வருகிறது. அதாவது, இச்சொல் இன்று தவறாகப் புழங்கும் அர்த்தத்தில் அல்ல. மாறாக, லத்தீன் மொழியின் ’இன்டலெக்டஸ்’ என்பதன் முழு அர்த்தத்தில் – எட்டா நிலையை நோக்கும் புலன் என்னும் அர்த்தத்தில் – வருகிறது” (மார்ட்டின் லிங்ஸ், “சூஃபியிசம் என்றால் என்ன?”, தமிழில் புன்யாமீன், மெல்லினம் வெளியீடு, முதற்பதிப்பு:2013, பக்.52-53). ’எட்டா நிலையை நோக்கும் புலன்’ (‘the faculty which perceives the transcendent’) என்பது வெளிப்புலன்கள் அல்ல, அகப்புலன்களே ஆகும். (’ரவி பார்க்காததைக் கவி பார்ப்பான்’ என்பது முதுமொழி). இந்த முன் நிபந்தனையை நிறைவேற்றும் எவரும் இறைவன் உரைக்கும் உவமைகளை (அம்ஸால்) விளங்கிக்கொள்ள முடியும்.

உவமைகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தும் இறைவசனங்கள் பற்றி இதுவரை பேசியவற்றை நோக்க, அகமிய அறிவு கொண்டோரில் இரு நிலையினர் உள்ளனர் என்பதை அவதானிக்க முடிகிறது: உவமைகளை விளங்குவோர் மற்றும் அவற்றுடன் உருவகங்களையும் (குறியீடுகளையும்) விளங்குவோர். முன்னதைக் காட்டிலும் பின்னது மேனிலையாகும். (தமிழில் அணியிலக்கணம் பயில்வோருக்குத் தெரியும், உவமையின் வகைமை விளக்கம் தரும் தொல்காப்பியம் உருவகத்தை அதன் சிறப்பான தனித்தன்மை கொண்ட வகைமையாகச் சுட்டுகிறது (‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும்...’). உவமையை விளங்குவதினும் உருவகத்தை – அதன் நுண்ணிய உத்திகளான உள்ளுறை மற்றும் இறைச்சி ஆகிய குறியீடுகளை விளங்குவது மேலானது என்பதே தமிழறிவு.

உவமைகளை விளங்குவதற்கு அகக்கல்வியை ஒருவர் தேடவேண்டும். அது அவரின் முயற்சிக்கு விடப்படுகிறது. முயன்றால் அந்நிலை எய்தலாம் என்பதால்தான் இறைவன் உவமைகளை அனைத்து மனிதருக்குமாக முன்வைக்கிறான். ஆனால் உருவகங்களை, குறியீடுகளை விளங்குவது என்பது மனிதன் தன் சுயமுயற்சியால் அடையக்கூடிய ஒன்றல்ல. அதற்கு இறைவனின் தேர்ந்தெடுப்பு (இஸ்த்திஃபா) தேவைப்படுகிறது. அந்நிலை இறைவனின் தரப்பிலிருந்து அடியாருக்கு அருளப்படுமொரு சிறப்பு நிலையாகும். ”ராசிஃகூன ஃபில் இல்மு” (அறிவில் உறுதிப்படுத்தப் பட்டோர்) என்று அவர்கள் குறிப்பிடப்படுவதால் இது போதரும். எனவே, அம்ஸால் என்னும் உவமைகளை விளங்குவோரினும் முதஷாபிஹாத் என்னும் குறியீடுகளை விளங்கிக்கொள்வோர் மேலான படித்தரம் கொண்டவர்கள் ஆவர்.

இனி, on a personal note என்று ஆங்கிலத்தில் சொல்வது போல், இப்பொருண்மை சார்ந்து எனக்கும் என் மகனுக்குமாக நடந்த உரையாடலைத் தழுவிச் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அஃதொரு இனிய மாலைப் பொழுது. கிரிக்கெட் ஆடிவிட்டு மகனும் நானும் முகப்புத் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அதற்கு முன் தினம்தான் ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய “Symbols” என்னும் கட்டுரையை வாசித்திருந்தேன். (அதனை, “குறியீடுகள்” என்னும் பெயரில் மொழிபெயர்த்து ஏப்ரல் 18-ஆம் தேதி பிரபஞ்சக்குடிலில் வெளியிட்டேன்.) அதில், அடையாளங்கள் (signs) மற்றும் குறியீடுகள் (symbols) ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை மிகத் தெளிவாக அவர் சொல்லியிருந்தார். அவரின் கருத்தைப் பின்வருமாறு சூத்திரப்படுத்திக் கொண்டேன்: ”குறியீடுகள் கருத்துக்களைச் சுட்டுகின்றன; குறிகள் பொருட்களைச் சுட்டுகின்றன.”

கருத்து மற்றும் பொருள் (idea and object) என்னும் இரண்டு நிறுவல்கள் தத்துவ உலகில் மிகவும் அடிப்படையானவை. இவற்றைச் சார்ந்த முதல்வாத நோக்குகளே சிந்தனையுலகை இடது மற்றும் வலது சாரிகளாகப் பிரித்துப் போட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இவ்விரண்டிற்குமான தொடர்புகள் பற்றி நான் அப்போது சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனந்த குமாரஸ்வாமியின் இந்த எளிய ஆனால் ஆழிய வரையறையை என் மகனுக்குக் கற்பிக்க விரும்பினேன்.

“நான் சில பெயர்களைச் சொல்வேன். அது பொருளா அல்லது கருத்தா என்று நீ சொல்” என்று அவனிடம் சொன்னேன். “அது எப்படி, எல்லாப் பெயருக்கும் பொருள் இருக்கத்தானே செய்யும்?” என்றான். (”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியம்!). “அவசரப்படாத கண்ணு. பொறுமையா கேட்டுட்டுச் சொல்லு” என்றேன். “மரம், வீடு, பந்து, ஸ்கூட்டர், வானம், பறவை, கதவு” என்று நான் சொல்லிச் செல்லவும் அவை ஒவ்வொன்றுக்கும் “thing” (பொருள்) என்று சொல்லிக்கொண்டே வந்தவனிடம் சட்டென்று “அன்பு” என்றேன். பொருளென்று வழமையாய்ச் சொல்ல வாயெடுத்து நிறுத்தி, சிரித்தபடி “idea” (கருத்து) என்றான். “மகிழ்ச்சி” என்றேன், கபாலியைப் போல. “idea” என்றான் சிரித்துக் கொண்டே. “கோபம், சோகம்…” என்று மெய்ப்பாடுகளாக அடுக்கவும் கருத்து என்றே சொல்லிவந்தான்.

“சரி. பொருள்கள் என்று நாம் சொன்னதில் ஒரு கேள்வி. மரம் என்பதற்கும் நாற்காலி என்பதற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?” என்று கேட்டேன். “மரம் என்பது இயற்கையிலேயே இருப்பது. அதிலிருந்து பலகை எடுத்து மனிதன் செய்தது நாற்காலி” என்றான்.

Related image

“அதாவது, நாற்காலி என்பது ஒரு பொருளாக ஆவதற்கு முன் தச்சனின் சிந்தையில் ஒரு கருத்தாக இருந்ததுதானே?” என்றேன். “ஆம்” என்றான். கருத்தே இங்கு பொருளாக மாறியிருக்கிறது. (கருத்துமுதல்வாதம்!). மரம் எப்படி வந்தது? பறவை எப்படி வந்தது? இயற்கையாக இருப்பவை என்று நாம் சொல்லும் பொருட்கள் எல்லாம் எப்படி வந்தன? அவை யாருடைய கருத்தில் உதித்தவை? “அல்லாஹ்வின் இல்மில் – ஞானத்தில் இருந்து வந்தவை” என்று பதில் சொன்னான்.

மரத்திலிருந்து நாற்காலி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மனிதனின் மனத்தில் உதித்தது எப்படி? (முதலில், அதற்கு ’மரம்’ என்று பெயரிட வேண்டும் என்னும் எண்ணம் எப்படி தோன்றிற்று? தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் என்னுமியலின் முதல் நூற்பாவிற்கான உரையில் சேனாவரையர் சொல்கிறார்: “தனிமொழியாவது சமய ஆற்றலால் பொருள் விளக்குவது”. அடிக்குறிப்பு: ”சமய ஆற்றலாவது இச்சொல்லால் இப்பொருளை உணரவேண்டுமென்ற இறைவனின் விருப்பம். இதனை வடநூலார் ‘சங்கேத ரூபா சக்தி’ என்பர்”.)

”அல்லாஹ் அந்த எண்ணத்தை மனிதனின் மனத்தில் போடுகிறான்” – இது என் மகன் சொன்ன பதில். ‘அப்படியெனில், முதன்மையாக நாற்காலி என்பதும் இறைவனின் எண்ணம்தான் அல்லவா? அடுத்துத்தானே அது மனிதனின் மனத்தில் தோற்றுகிறது?” ஆம். இயற்கையை நாம் செயற்கை ஆக்குகிறோம். இயற்கை இன்றிச் செயற்கை இல்லை! இறைவனின் வெளிப்பாடு இயற்கை என்றும் மனிதனின் வெளிப்பாடு செயற்கை என்றும் இங்கே சொல்லலாம். ஆனால், ஆழ்ந்து நோக்க, அனைத்துமே இறைவனின் வெளிப்பாடுகள்தாம், மனிதன் வெளிப்படுத்தும் செயற்கை உட்பட. ஏனெனில் இறைவனின் ஞானத்தில் இல்லாத ஒன்று மனிதனின் சிந்தனையில் முகிழ்த்து வெளிப்படுவதில்லை, இந்த வீடு, ஸ்கூட்டர், பந்து, கதவு, ஏணி என்று எல்லாமே.

இயற்கை மற்றும் செயற்கை ஆகிய தமிழ்ச் சொற்களில் உள்ள தத்துவ நோக்கு வியக்க வைக்கிறது. ”இயல்” என்பது இருப்பது என்னும் பொருளைத் தருகிறது. செயலின் விளைவாக அன்றி இருப்பது இயற்கை ஆகும். செயலின் விளைவாகத் தோன்றுவன எல்லாம் செயற்கை ஆகும். வானாதி அண்டங்கள் யாவையும் நாம் இயற்கை என்று சொல்வதெல்லாம் மனிதமைய நோக்கில்தான் (anthropocentric view). ஏனெனில் அவற்றை மனிதன் ’செய்ய’வில்லை. (கை இயலாயிருக்கிறது. அதில் வினை என்னும் செயல் தோன்றுகிறது. கைவினை. அதன் விளைவாகப் பொருள்கள் உண்டாகின்றன. ”கைவினைப் பொருட்கள்” என்னும் எளிய தமிழ்ச் சொற்றொடரில் எத்தகைய தத்துவம் துலங்குகிறது என்பதைப் பாருங்கள்!) ஆனால், இறைமைய நோக்கில் (theocentric view) பார்க்கும்போது அனைத்தும் இறைவனின் படைப்புக்கள் என்பதால் வெளியுலகாய் அமைந்தன அனைத்தும் செயற்கையே. எனில் இவற்றின் இயற்கை எது? இறைவனின் ஞானத்தில் (இல்முல்லாஹ்) காலாதீதமாய் அமைந்திருக்கும் அவற்றின் மூலப்படிவங்கள் (Archetypes; இதனை சூஃபி மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தனது நூற்களில் அஃயானே ஸாபி(த்)தா (நிலைப்பட்ட படிவங்கள்) என்று குறிப்பிடுகிறார். அதுவே அனைத்து சிருஷ்டிகளின் இயற்கை ஆகும். இக்கட்டுரையின் பொருண்மை கருதி, இச்சிந்தனை ஓட்டத்தை இங்கேயே நிறுத்தலாம். (இதன் நீட்சியாக, இறைவனின் செயல் எதன் மீது ஏற்படுகிறது? அவனின் உள்ளமை அன்றி வேறற்ற நிலையில் அவனது செயல்களின் விளைவு எதன்மீது ஏற்படுகிறது? செயலின் விளைவு உள்ளமையை மாற்றாது எனில் அவனது ஞானத்தில் உள்ள படிவங்களின் மீதே அவனின் செயல்களும் இயங்க வேண்டுமாதலால் அவனது செயல்களும் அதன் விளைவுகளும்கூட ஞானத்திலேயேதான் நிகழ்வனவா? என்கிற ரீதியில் சிந்தித்தால் இறைமைய நோக்கில் காண செயற்கை என்பதே கிடையாது என்னும் முடிவில் போய் நிற்கிறது. அதாவது, பந்து என்பதன் இயற்கை எது? அது இப்போது எதார்த்தத்தில் இருப்பது இறைவனின் ஞானத்தில்தான் என்பதால் அதுவும் இயற்கைதான் அல்லவா? எனவே மனிதமைய நோக்கில் செயற்கை என்று நாம் காணும் எதுவும் இறைமைய நோக்கில் இயற்கைதான்).

மரமறுத்து நாற்காலி செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தை மனிதனின் மனத்தில் இறைவனே போடுகிறான் என்றென் மகன் சொன்னதன் தொடர்ச்சியாக நான் அவனிடம் கேட்ட கேள்வி, “இப்படி இயற்கையைக் கையாண்டு புதுப்பொருள் செய்யும் எண்ணத்தை மனிதனுக்கு மட்டும்தான் அல்லாஹ் கொடுக்கிறானா? வேறு உயிரினத்திற்கு அந்த நிலை இருக்கிறதா? எப்படி?”. இக்கேள்வி தொட்டு நாங்களிருவரும் அடைந்த கண்டறிதல்களை இனி கோர்வையாகச் சொல்லிச் செல்கிறேன்.

மரம் இருக்கிறது. அதில் கிளைகள் கொப்புகள் இலைகள். அவற்றில் ’இயற்கை’யாகவே பூவும் பிஞ்சும் காயும் கனியும் தோன்றுகின்றன. பறவைகளுக்கு அவை உணவாகின்றன. ஆனால் பறவைகளுக்கான கூடுகள் மரத்தில் இயற்கையிலேயே உண்டாகின்றனவா? என்றால் இல்லை. கூடுகளைப் பறவைகளே ‘செய்’கின்றன. அதில் சில பறவைகள் தொழில்நுட்ப நேர்த்தி பெறுவதைக் காண்கிறோம். தூக்கணாங்குருவியின் கூடு எத்தனை நுணுக்கமாக நெய்யப்படுகிறது! அதன் வாய் நோக்கும் திசை மழையின் வருகையை அல்லது வராமையைக் காட்டிவிடும் என்று சொல்கிறார்கள்! எத்தகைய உய்த்துணரறிவு! எனவே, நாம் விவரிக்கும் கோட்பாட்டின்படி, கூடு என்பது பறவையின் சிந்தனையில் இறைவனால் வைக்கப்படுகிறது. அப்பறவை அதனை நிதர்சனம் செய்கிறது. சுள்ளிகளும் புற்களும் இதர மூலப்பொருட்களும் கண்டடைந்து சேகரிக்கப்பட்டுப் பறவையால் கூடு உருவாகிறது.
Image result for weaver bird nest india

மீன்கள்? அவை நீரில் வசிக்கின்றன. நீருக்குள் ஏதேனும் பாறைப் பிலங்கள் காணப்படின் அதனுள் அவை உறையக்கூடும். ஆனால் அவை வீடுகள் செய்வதில்லை. முள்ளம்பன்றிகள்? மலேசிய நாட்டின் பழங்குடியினரான ஜஹாய் மக்களைப் பற்றியதொரு ஆவணப்படம் கண்டேன். அவர்கள் முள்ளம்பன்றிகளை வேட்டையாடுகிறார்கள். அவை நெகிழ்நிலத்தில் பொந்து அமைத்து உள்ளே பதுங்கியுள்ளன. பதினைந்து அடிகள் சுற்றளவு கொண்ட பொந்தமைப்பிற்குப் பல வாசல்கள் இருக்கின்றன. இது நுணுக்கம் இல்லாதவொரு எளிமையான பொந்தமைப்புத்தான். ஆனால் கரையான் மற்றும் எறும்புப் புற்றுக்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவற்றின் நுண்ணமைப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. ஒரு கரையான்புற்றானது சராசரியாக பத்து அடி உயரமும் எட்டு அடி அகலமுமாயிருக்கும். ஒருவகைக் கரையான்கள் இருபத்தாறு முதல் முப்பது அடி வரை கட்டுகின்றன. காங்கோவில் கண்டறியப்பட்ட ஒரு கரையான்புற்று நாற்பத்திரண்டு அடி உயரமிருந்ததாம். (கரையான்களிலும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் அரபு சேக்குகளெல்லாம் உண்டு போலும்). கரையான்களின் சமூக அமைப்பு, எறும்புகள், குளவிகள் மற்றும் வண்டுகளின் சமூக அமைப்புடன் ஒப்புநோக்கப்படுகிறது. எறும்புகள் மற்றும் தேனீக்களின் ’குடியிருப்புக்களும்’ மிகவும் நுண்ணிய கட்டமைப்புக்கொண்டவை என்பதைக் கவனிக்கவும்.

பாம்பு? அது கரையான் எழுப்பும் புற்றில் நுழைந்து வாழ்கிறது. (காலே இல்லாத பாம்பின் காலனியாதிக்கம்!). அல்லது பாறைகள் மரங்கள் போன்றவற்றில் இயற்கையாக அமைந்த குறுமுழைகளில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறது. (முழை என்றால் குகை. குகைக்குள்ளும் பல சிறு பொந்துகள் இருப்பதுண்டு. ”மலை முழை அதனின் கண்ணே குறுவளை அனேகம்” என்கிறார் உமறுப்புலவர். அதிலொரு வளையில் (பொந்தில்) கருநாகம் (’கரிய பாந்தள்’) இருந்ததாம். (சீறாப்புராணம்: ஹிஜ்ரத்துக் காண்டம்: விடமீட்ட படலம்: பாடல்#3)). சிங்கங்கள் புலிகள் ஓநாய்கள் போன்றன? மலை மற்றும் கானக முழைகளில்.

இவ்வாறு யோசித்துப் பார்த்ததில் பறவைகள் மற்றும் எறும்பு, தேனீக்கள், கரையான்கள் போன்ற பூச்சிகள் ஆகியவையே சிறப்பாக ’வீடு’ கட்டுகின்றன என்று காண முடிந்தது. காட்டு ராஜா தனக்கொரு அரண்மனையைக் கட்டுவதில்லை. கால்நடைகள் தமக்கொரு உறைவிடம் உருவாக்குவதில்லை.

இந்த அவதானம் எனக்கு வியப்பாகவே இருந்தது. ஏனெனில், கட்டுமானப் பணிகளில் மனிதனன்றி, இன்னும் சொல்லப்போனால் மனிதனினும், சிறப்புப் பெற்றுள்ள இச்சிறு பூச்சிகளையும் பறவைகளையும் குர்ஆனில் அல்லாஹ் மிகவும் சிறப்பிடம் தந்து கூறியுள்ளான். “தேனீ” (அந்-நஹ்லு), “எறும்பு” (அந்-நம்லு) என்னும் தலைப்பில் இரண்டு அத்தியாயங்களே உள்ளன.

உறைவிடக் கட்டுமானம் பற்றிய கருத்துருவம் இறைவனால் மனத்தில் போடப்பட்டு அதனைச் செயல்படுத்த இயங்குதல் என்னும் கோட்பாட்டுக்குச் சிறந்த உதாரணமாக தேனீயை குர்ஆன் குறிப்பிடுவதைக் காணலாம். “உம் ரட்சகன் தேனீக்கு வெளிப்படுத்தினான்: மலைகளிலும் மரங்களிலும் அவர்கள் கட்டியெழுப்புவதிலும் நின் வீட்டை அமைத்துக்கொள்” (வ அவ்ஹா றப்புக இலந்நஹ்லி அனித்தஃகிதீ மினல் ஜிபாலி புயூத்தன் வ மினஷ் ஷஜரி வ மிம்மா யஃரிஷூன் – குர்ஆன்:16:68)
Image result for honey bee hive

இவ்வசனத்தில் உள்ள ”அவ்ஹா” என்னும் சொல் மிக முக்கியமானதொரு கலைச்சொல். இறைத்தூதர்களின் இதயங்களுக்கு இறைவன் அருளுகின்ற வேத வெளிப்பாடுகளையே (Revelations) வஹீ என்றழைப்பர். இங்கே தேனீ என்னும் பூச்சிக்கு இறைவன் வஹீ அறிவித்ததாக வருவது அச்சிறு பூச்சிக்கு இறைவன் வழங்கியுள்ள கண்ணியத்தை, மதிப்பைக் காட்டுகிறது. இறைவனின் படைப்புக்களில் எதனையும் துச்சமென நினைக்கக் கூடாது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

தேனீயின் வீட்டைக் குறிப்பிடும் குர்ஆன் எறும்பின் வீட்டைப் பற்றியும் சொல்கிறது. பேரரசர் ஆகிய நபி சுலைமான் (அலை) (Solomon) அவர்கள் தம் படையினருடன் வருவதைக் கண்ட எறும்பு தனது கூட்டத்தாருக்கு எச்சரிக்கை செய்கிறது. ”அவர்கள் எறும்புகளின் சமவெளிக்கு வரும் வரை. (அப்போது) ஓர் எறும்பு கூறிற்று ’எறும்புகளே! உங்கள் உறைவிடங்களுக்குள் நுழையுங்கள். சுலைமானும் அவரின் படையினரும் அவர்கள் அறியாத நிலையில் உம்மை நசுக்கிவிட வேண்டாம்” (ஹத்தா இதா அதௌ அலா வாதிந்நம்லி காலத் நம்லத்துன் யா அய்யூஹந் நம்லுத்ஃகுலூ மசாக்கினக்கும் லா யஹ்திமன்னக்கும் சுலைமானு வ ஜுஹூதுஹு வஹும் லா யஷ்உரூன் – குர்ஆன்: 27:18). இவ்வசனத்தில் வீடு அல்லது உறைவிடம் என்பதைக் குறிக்க ”மஸாக்கினா” என்னும் சொல் ஆளப்படுகிறது. சுகூன் என்றால் நிம்மதி என்று பொருள். மஸாக்கினா என்றால் நிம்மதியை அடையுமிடம். ”எலி வளையானாலும் தனி வளை” என்பது தமிழ் முதுமொழி. அது சொந்த வீட்டின் நிம்மதியைச் சுட்டுகிறது. இங்கே குர் ஆன் அதே போல் குறிப்புக்காட்டுகிறது, எறும்புக்கே ஆனாலும் தன் வீட்டில்தான் நிம்மதி! ஏனெனில் இந்த எறும்புகள் மனிதர்களின் இருப்பிடத்தில் கூடு கட்டியவை அல்ல. தம் சொந்த நிலத்தில் (பட்டா நிலம் பார்த்துக்குங்க!) “வாதிந் நம்லு” (எறும்புகளின் சமவெளி அல்லது எறும்பு நகர் என்பது அந்த இடத்தின் பெயர். இறைவன் வைத்த பெயர்! தமிழகத்திலும் அப்படியோர் ஊர் உள்ளது. எறும்புகளை மிகவும் மதிப்புடன் சுட்டிச் சொல்லும் ஊர் – திருவெறும்பூர்!)

Image result for hudhud bird

வீடு கட்டும் திறன் தரப்பட்ட உயிரினங்களில் ஒன்று பறவை என்பதாகக் கண்டோம். அதனொரு பிரதிநிதியும்கூட சுலைமான் நபியுடன் தொடர்புபடுத்திச் சொல்லப்படுகிறது. சும்மா அல்ல, தூதர் (Ambassador) என்னும் பெரும்பதவி கொண்டு கீர்த்தி பெற்று விளங்கிற்று அது. (காண்க: குர்ஆன்: 27:20-28) இனத்தால் அது ஒரு கொண்டலாத்தி (hoopoe). அரபியில் ஹுத்ஹுத் என்று சொல்வார்கள். அரசனுக்குத் தூதுப்பணி செய்த அப்பறவையின் தலையிலேயே இறைவன் மகுடம் போன்ற அமைப்பை வழங்கி அதனை விசிறி போல் விரித்து மடக்கி ஜாலாக்குக் காட்டும் திறனையும் கொடுத்திருக்கிறான்.

எறும்பும் பறவையும் மட்டுமல்ல, உறைவிடம் கட்டும் திறனில் சிறந்ததாக நாம் முன்பு கண்ட கரையானும் சுலைமான் நபியுடன் தொடர்புப் படுத்திச் சொல்லப்படுகிறது. கரையான் என்னும் பெயர் நேரடியாகச் சுட்டப்படாவிடினும், மரத்தை அரிக்கும் அதன் குணம் குறிப்பிடப்படுகிறது. சுலைமான் நபியின் இறப்புச் சூழலில் அது இடம்பெறுகிறது. பலஸ்தீனத்து மாபெரும் இறையில்லத்தை ”ஜின்கள்” என்னும் அசுர கனங்களைக் கொண்டு அவர்கள் கட்டியிருந்த போது மேற்பார்வை பார்த்த நிலையில் உயிர் பிரிந்தது. ஆனாலும், அஸா என்னும் கைத்தடி ஊன்றியபடி அவர்களின் உடல் நின்றிருந்தது. இதைக் கண்ட ஜின்கள் இராப்பகலாக ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தன. பணி முடிந்தபோது அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டிருந்ததை இறைவன் வெளிப்படுத்தினான். “நாம் அவருக்கு மரணத்தை விதித்தபோது, அவற்றுக்கு எதுவும் அவரின் மரணத்தைக் காட்டவில்லை, அவரின் கைத்தடியைத் தின்றதொரு மண்ணுயிரி தவிர” (ஃபலம்மா களைனா அலைஹில் மவ்த்த மா தல்லஹும் அலா மவ்த்திஹீ இல்லா தாப்பத்துல் அர்ளி தஃகுலு மின்ஸஅ(த்)தஹு – குர்ஆன்: 34:14). 

இந்தத் திருவசனம் குறிப்பிடும் உயிரினம் கரையான் என்பதே மிகப்பொருத்தமாக அமையும். “தாப்பத்துல் அர்ளி” (பூமியின் உயிரினம் – creature of the earth / earthly creature) என்றே அது பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது சுலைமான் நபியின் கைத்தடியைத் தின்றதாகச் சொல்லப்படுவதால் மரத்தை அரிக்கும் திறன் கொண்ட கரையானையே குறிப்பதாகச் சொல்லலாம். மட்டுமல்ல மண்ணுக்குள் சிறு சிறு பொந்துகள் போட்டு வாழும் மண்புழுவை விடவும், எலிகளை விடவும், அவற்றினும் சிறந்த கட்டட வல்லுநர்களான எறும்புகளைவிடவும் சராசரியாகப் பதினைந்து அடி உயரத்திற்கு மண்ணையே எழுப்பிப் புற்றுக் கட்டும் கரையானை “தாப்பத்துல் அர்ளி’ என்று புகழ்வதுதான் சாலப் பொருத்தமானது!


இவ்வாறு, மனத்தில் ”உதித்த” கருத்தினை (idea) வெளிப்பொருளாக மாற்றும் திறன் கீழ்நிலை உயிர்களில் காணப்படினும் அவையெல்லாம் ஏதோ முன்னறிவிப்புப் போன்றும் கொசுரு (samples) மாதிரியும் இருக்கின்றன, மனிதனிடம் அத்திறன் வெளிப்படுவதை நோக்கும்போது. 

to be continued...

No comments:

Post a Comment