Saturday, December 8, 2012

ஸீரோ டிகிரியில் ரூமி (தொடர்ச்சி)



மௌலானா ரூமியின் மஸ்னவி காவியத்தில் வரும் அந்தக் கதையைச் சொல்லும் முன் சாரு நிவேதிதா தன் எழுத்துக்களில் அடிக்கடி ஹதீஸ் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவது பற்றிச் சில சொல்லியாக வேண்டும். நாகூரிலே தான் வளர்ந்த நாட்களை விவரிக்கும் போது அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “இரவுப் பொழுதுகள் ஹதீஸ் கதைகளில் கழியும். சமயங்களில் இரவு முழுவதும் நீளும் கவ்வாலி” (நூல்: ஒழுங்கின்மையின் வெறியாட்டம். கட்டுரை: ”இஸ்லாமிய சமூகம்தான் எங்களை ஏற்றுக்கொண்டது!”) ஹதீஸ் என்னும் சொல்லை அவர் எந்த அர்த்தத் தளத்தில் பயன்படுத்துகிறார் என்பதை இவ்வரி காட்டுகிறது. இஸ்லாமியக் கல்வியியலில் ஹதீஸ் என்னும் கலைச்சொல் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளையே குறிக்கும். ஆனால் சாரு அந்த அர்த்தத்தில் மட்டுமல்லாது, பொதுவாக அவர் நாகூர் தர்ஹாவில் கேட்ட இஸ்லாமிய பயான்களில் வரும் கதைகளைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார். அந்த வகையில் கஃபன் கள்ளன் கிஸ்ஸா, ஜைத்தூன் கிஸ்ஸா போன்ற கதைகளையும் அவர் ஹதீஸ் என்றே சொல்வார். உதாரணம் ஒன்று தருகிறேன்:

“இப்படியே ஆன்மிகத்தில் தீவிர பற்று ஏற்பட்டுப் போனது. வீட்டில் இருந்த நேரத்தை விட தர்ஹாவில் இருந்த நேரம்தான் அதிகம். உறங்குவதும் அங்கேதான். காலை ஐந்து மணிக்கு நேப்பாளி கூர்க்கா தனது லத்தியைத் தரையில் அடித்து எழுப்பும்போதுதான் வீட்டு ஞாபகமே வரும்.

இப்படியாக இரவுகளில் தெருத்தெருவாய் சுற்றித் திரியும் சுதந்திரம் இருந்ததால் ஒரு நல்ல பலன் உண்டானது. நிறைய கவ்வாலிக் கச்சேரிகளையும் ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. (பின்னாளில் எனது இசை ரசனைக்கு இந்தக் கச்சேரிகளே அடித்தளமாக அமைந்தன எனலாம்.) அதேபோல், ஆன்மீகச் சொற்பொழிவுகளில் நூற்றுக்கணக்கான ஹதீஸ்களையும், சூஃபி கதைகளையும் கேட்டேன்.

ஒரு ஹதீஸ்:
ஒரு முதியவர் ஒரு இளம் பெண்ணுக்கு அல்-குரானை ஓதுவிக்கிறார். அப்போது ஒரு நாள் குரானில் ஆழ்ந்திருக்கும் அப்பெண்ணின் நாசியில் ஏதோ மாமிசம் கருகும் துர்நாற்றம் தெரிய, தலையை உயர்த்திப் பார்க்கிறாள். அங்கே விளக்கின் ஜுவாலையில் தனது ஒரு கையைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். பதறிப்போன அந்தப் பெண் ’இது என்ன?’ என்று கேட்க, ஆசிரியர் கூறிய பதில்: ‘என் மனம் உன் அழகைத் தீண்டிவிட்டது. அதை அடக்கவே கையை நெருப்பில் காட்டினேன்.’” (நூல்: கனவுகளின் மொழிபெயர்ப்பாளன், பக்.47,48)

இனி மஸ்னவி ஷரீஃபில் மவ்லானா ரூமி சொல்லும் கதை (தமிழில் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு அடியேனின் பாணியில் தருகிறேன்):

“சுலைமான் நபியின் ஆட்சிக் காலம் அது. அரண்மனையில் அவர் தன் அரசுப் பிரதானிகளுடன் அமர்ந்திருக்கிறார்.

அவைக்குள் அந்நியர் ஒருவர் நுழைகிறார். கம்பீரமான தோற்றம். ஏதோ மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஒன்றின் சக்கரவர்த்தி தனி ஆளாய் அங்கே வந்துவிட்டது போல் இருக்கிறது அவரின் வருகை.

உள்ளே நடந்து வந்த அவர் நேராகத் தலைமை அமைச்சரை நோக்கி நடக்கிறார். த.அமைச்சரின் முன் நின்று அவரை சில நொடிகள் உக்கிரமாகப் பார்க்கிறார். பிறகு திரும்பி சுலைமான் நபியை நோக்கி நடக்கிறார்.

சுலைமான் நபியின் காதுகளில் ஏதோ கிசுகிசுக்கிறார். அரசரான சுலைமான் நபியும் அவரிடம் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அவர் தலையாட்டி விட்டு விறுவிறு என்று நடந்து அரசவையை விட்டு வெளியேறி விடுகிறார்.

யாருக்கும் எதுவுமே புரியவில்லை. அந்த மனிதரை அதற்கு முன் யாரும் நாட்டில் பார்த்ததே இல்லை. எனவே ஆர்வமும் குழப்பமும் அங்கே எகிறுகிறது.

தலைமை அமைச்சருக்கானால் தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. வந்தவர் அவரையல்லவா சுட்டெரிப்பது போல் பார்த்தார். எனவே அவர் எழுந்து சுலைமான் நபியிடம் ஓடுகிறார். “இறைத்தூதரே! மாமன்னரே! அந்த மனிதர் யார்? அவர் ஏன் என்னை அப்படிக் கோபமாகப் பார்த்தார்? அவர் உங்களிடம் என்ன சொன்னார்? தயவு செய்து கூறுங்கள்” என்று கெஞ்சுகிறார்.

சுலைமான் நபி சற்றே சிந்தனையில் ஆழ்கிறார்கள். பிறகு சொல்கிறார்கள், “அவர்தான் உயிர் வாங்கும் வானவர் – இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம். ஆனால் அவர் ஏன் அப்படி உங்களை முறைத்துப் பார்த்தார் என்பது தெரியவில்லை! அமைதியாக இருங்கள் அமைச்சரே!”

அந்தக் காலத்தில் அப்படித்தான். உயிரெடுக்கும் வானவர் மனித ரூபத்திலும் வந்து வாங்குவார். வேறு ரூபங்களிலும் வரலாம். ஞானிகளுக்கு அவரைத் தெரிந்துவிடும்.
சுலைமான் நபி சொன்னதைக் கேட்டதும் மந்திரிக்கு வெலவெலத்து விட்டது. ”அரசரே! இதைக் கேட்டுவிட்டு நான் அமைதியாக இருப்பதா? எப்படி? ஒரு கிறுக்கனால்கூட முடியாத காரியமாச்சே. அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயெ என் பாதி உயிர் பிதுங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டது. இப்போது நான் அரை மனிதன்! எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுங்கள் அரசே! காற்றுக்குக் கட்டளை இடுங்கள். அவர் திரும்பி வருவதற்குள் என்னை எங்கேயாவது பாதுகாப்பாக அனுப்பி விடுங்கள். அமைச்சர் பதவியை நான் இப்போதே ராஜினாமா செய்து விட்டேன். என் மீது கருணை காட்டுங்கள்” என்று கதறி அழுதார்.

“இறைவன் விதித்தபடி எல்லாம் நடக்கும் அமைச்சரே. ஏன் இவ்வளவு பதட்டம்? போய் அமைதியாக இருங்கள். உங்கள் மதிநுட்பமெல்லாம் எங்கே போனது?” என்று சுலைமான் நபி கூறினார்கள். ஆனால் அவரின் காதில் எதுவும் ஏறுவதாகத் தெரியவில்லை. அவர் மிகவும் மிரண்டு போயிருந்தார். மீண்டும் மீண்டும் அதையே கெஞ்சினார்.

சுலைமான் நபி புன்னகைத்தார்கள். “சரி அமைச்சரே! நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“இங்கிருந்து ஐயாயிரம் மைல்கள் தள்ளி, சிரந்தீவுக்குக் கொண்டு போய் என்னை விட்டுவிடுங்கள்” என்று அவர் சொன்னார்.

சுலைமான் நபி காற்றுக்கு ஆணையிட்டார்கள். ரத்தினக் கம்பளத்துடன் அமைச்சரைத் தூக்கிக் கொண்டு காற்று கடுகிப் பறந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர் சிரந்தீவில் ஒரு சோலையில் இறங்கினார். ஆசுவாசமாக ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார்.

’புறப்படுங்கள் அமைச்சரே’ என்று ஒரு குரலைக் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டது. நிமிர்ந்து பார்த்தால் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம். ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது.

“உங்கள் உயிரை இந்த நிமிடம் இந்தச் சோலையில் வாங்க வேண்டும் என்று விதியில் இறைவன் எழுதியிருக்கிறான். நான் உங்களை சுலைமான் நபியின் அவையில் பார்த்தபோது குழம்பிப் போனேன். ‘இவனுக்கு உடல் முழுக்க ஐநூறு சிறகுகள் முளைத்தாலும் பத்து நிமிடத்தில் சிரந்தீவுக்குப் பறந்து வர முடியாதே என்று குழம்பிப் போய்தான் உங்களைப் பார்த்தேன். அதைப் பற்றித்தான் நபியிடம் பேசினேன். ‘இறைவன் விதித்தபடி எல்லாம் நடக்கும். நீங்கள் அந்த இடத்திற்குப் போய் காத்திருங்கள்’ என்று அவர்கள் சொன்னார்கள். அதுவும் சரிதான். உங்கள் உயிரை இங்கே நான் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கடமை. உங்களை இங்கே கொண்டு வந்து வைக்க வேண்டியது இறைவனின் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு இப்போதுதான் இங்கே வருகிறேன். ஆச்சரியம் பாருங்கள். நீங்கள் இங்கே ரெடியாக இருக்கிறீர்கள்!” என்று இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் விளக்கினார்கள். விளக்கிக் கொண்டே அவரின் உயிரையும் உருவி எடுத்துவிட்டார்கள்!”

ஒரு கதை எப்படியெல்லாம் காலப்போக்கில் வேறு வேறு பரிணாமங்களை அடைகிறது என்பது எப்போதுமே வியப்பான ஒன்றுதான். மஸ்னவி ஷரீஃபை நமக்குத் தந்த மவ்லானா ரூமி ஒரு மாபெரும் கதைச்சொல்லி. அஃப்கானிஸ்தான், இரான், இராக், அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அவர் நெடுகப் பயணித்திருக்கிறார். அப்போது அவருள் எத்தனைக் கதைகளும் காட்சிகளும் சேகரமாகி இருக்கும் என்பதை நினைக்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த வளம் அவரின் காவியத்தில் தெரிகிறது. அப்படி அவர்கள் கேட்ட கதைகளில் இந்தியாவில் இருந்து சென்ற கதைகளும் கணிசமாக இருந்திருக்க வேண்டும். இந்து, பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்களின் கதைகளை அவர் கேட்டிருக்கக் கூடும். பஞ்ச தந்திரக் கதைகளில் வரும் சில கதைகள் மஸ்னவியில் உள்ளன.

மேலே நாம் கண்ட மஸ்னவி கதை சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் நான் சொல்லியிருக்கும் வடிவத்தில் அல்ல. சாரு சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது ஒன்று அவர் மஸ்னவி கதையை மாற்றி எழுதியிருக்க வேண்டும். அப்படியெனில் அது அவரின் க்ரியேட்டிவிட்டியைக் காட்டுகிறது என்று கொள்ளலாம். அல்லது அது ஏதேனுமொரு புராணத்தில் உள்ள கதையாக இருக்க வேண்டும். அது ரூமி வாழ்ந்த பகுதிகளில் இஸ்லாமிய மோஸ்த்தரில் மாற்றமடைந்து உலவி அவரின் காதில் விழுந்து மஸ்னவியில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, யூத / கிறித்துவ இலக்கியங்களில் இருந்து அந்தக் கதை ரூமிக்கும் கிடைத்து, இந்தியாவிற்கு வந்து புராண வடிவமும் பெற்றிருக்கலாம். இவை எனக்குத் தோன்றும் சாத்தியங்கள். இதோ சாருவின் பிரதி:

“நெருக்கமான சிநேகிதரின் திருமண வைபவத்துக்காக திருநெல்வேலி வந்த யமன் அங்கே அத்திருமண வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த எலியைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்தபடி யோசித்தான். இந்த எலி இந்த நேரத்தில் இங்கே எப்படி என முணுமுணுத்தபடி உள்ளே நுழைந்தான். யமன் தன்னைப் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்தபடி செல்வதைக் கண்ட எலி பயந்துபோய் யமன் வெளியே வருவதற்குள் நாம் இந்த இடத்தை விட்டு அகன்றுவிட வேண்டும் என்று நினைக்க அவ்வமயம் பார்த்து அந்தப் பக்கமாகப் பறந்து வந்துகொண்டிருந்த பருந்திடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி என்னை எங்கேயாவது எடுத்துக்கொண்டு போய்விட்டாயானால் பெரிதும் உபகாரமாக இருக்கும் என்றது. நான் இப்போது ஜவ்வாது மலைக்குப் பக்கத்திலே இருக்கும் தொங்கு மலைக்குப் போகிறேன் அங்கே உன்னை விட்டுவிடவா எனக் கேட்க இந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் என நினைத்த எலியும் அப்படியே செய் என்றது. தான் சொன்னபடி எலியைத் தொங்கு மலையில் போட்டுவிட்டுச் சென்றது பருந்து. இங்கே திருநெல்வேலியில் திருமண வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியே வந்த யமன் எலி அங்கே இல்லாததைக் கண்டு ஆசுவாசமடைந்து அவனும் தொங்குமலை வந்து சேர்ந்தான். அங்கே அந்த எலி சாவகாசமாக எதையோ கொறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு நல்லதாயிற்று உன்னுடைய உயிர் இதோ இந்தத் தொங்குமலையில் இந்த நிமிடம் போக வேண்டும் என்பதாய் கணிக்கப்பட்டிருக்கும் போது நீ எப்படி அங்கே திருநெல்வேலியில் மேய்ந்துகொண்டிருக்கிறாய் என்று நினைத்துத்தான் ஆச்சர்யப்பட்டேன் நல்ல காலம் நீ குறிப்பிட்ட நேரத்தில் இங்கே ஆஜராகிவிட்டதால் என் பிரச்சனை தீர்ந்தது என்று சொல்லிக்கொண்டே தன் பாசக் கயிற்றை அவ்வெலி மீது வீசினான். இந்தக் கதையின் மூலம் நீ அறிந்துகொள்ளும் நீதியாவது:”
(ஸீரோ டிகிரி: அத்தியாயம்#27, பக்.131,132)

மவ்லானா ரூமி சொல்ல வரும் நீதி அல்லது ஞானம் என்ன என்பதை நான் குறிப்பிடவில்லை. அதேபோல் சாரு நிவேதிதா சொல்லியிருக்கும் நீதியை நான் சென்சார் செய்திருக்கிறேன். ஏனெனில் அதை நான் இங்கே போட்டால் ஆங்கிலப் படங்களில் அதிகமாக இடம்பெற்றுள்ள பெருமைக்குச் சொந்தமான எஃப்பெழுத்து வார்த்தையால் என்னை நீங்கள் தூற்றக்கூடும். இக்கதைகள் ஒரு பிரபஞ்ச நீதியை உணர்த்துகின்றன. அதை நீங்கள் உங்கள் உள்ளுணர்வால் அறியக் கடவது.

இப்படியாக இந்தக் கதைகளின் நீதியைப் பற்றி நான் டைப்படித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அடியேனின் மனதில் முல்லா நஸ்ருத்தீனின் நீதிக்கதை ஒன்று ஃப்ளாஷ் ஆகிறது:

முல்லா நஸ்ருத்தீனின் மகன் சோம்பேறியாக இருந்தான். ‘ஊருக்கே அறிவுரை சொல்லிக் கொண்டு திரிகின்றீர்களே. பெத்த புள்ளைக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லக்கூடாதா?’ என்று அவரின் மனைவி அடிக்கடி பிலாக்கணம் வைத்ததால் ஒருநாள் தன்னுடைய மகனுக்கு அறிவுரை சொல்ல எண்ணி ஒரு கதை சொன்னார். “அதிகாலை நேரம். ஸுப்ஹு சாதிக் என்னும் சுப்ரபாதம். கதிரவன் மெள்ள தலைகாட்டிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு புழு கண்விழித்துத் தன் உடலை நெளித்து நெளித்து அன்றைய நாளின் பணியைத் தொடங்கும் நோக்கில் ஒரு செடியின் கொப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. மிகவும் சுறுசுறுப்பான புழு அது. அப்போது அங்கு வந்த குருவி ஒன்று தன் அலகால் அந்தப் புழுவை ஒரே கவ்வாகக் கவ்வித் தின்றுவிட்டது. இப்படியாக அந்த இனிய வேளையில் அந்தப் புழுவின் வாழ்க்கை முடிவுற்றது” என்றார் முல்லா. மகன் திருதிருவென்று விழித்தான். முல்லா கதையைத் தொடர்ந்தார், “இன்னொரு புழு. மகா சோம்பேறி. அது அலாரம் வைத்து ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருக்கும். அப்படியாக அன்று எழுந்து உடலை நெளித்துக்கொண்டு அது தரையில் ஊர்ந்து கொண்டிருந்த போது பள்ளிக்கு அவசரமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் பூட்ஸ் காலில் மிதிபட்டுச் செத்தது. இப்படியாக அதன் கதை முடிந்தது.” என்றார். பையன் அலங்க மலங்கப் பார்த்து, “அத்தாவே! இந்தக் கதையில் ஒரு நீதியும் விளங்கவில்லையே?” என்றான். ”முட்டாளே! விதிக்கு நீ சுறுசுறுப்பானவனா சோம்பேறியா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்னும் பேருண்மை இதில் உனக்குத் தெரியவில்லையா?” என்றார் முல்லா.

வழக்கம்போல் இதையும் என் பாணியில்தான் சொல்லியிருக்கிறேன், கூடுதல் குறைவுகளுடன். (இதே கதையை வேறிடத்தில் மீண்டும் சொல்ல நேர்ந்தால் பிரதி மாறும்!). இக்கதையை எனக்குச் சொன்னவர் ஓஷோ.

2 comments:

  1. இந்த எமன் உயிரை எடுக்கும் கதை "To cut a long story short by Jeffery Archer" சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக உள்ளது.
    what is the source of the first version of the story?

    ReplyDelete