Wednesday, October 17, 2012

எறும்பின் கண் -7


சுலைமான் நபி செய்த அந்த இரண்டு காரியங்கள் யாவை?

பல்கீஸ் அரசி தன் பரிவாரங்களுடன் தன்னைப் பார்க்க வருவதற்கு முன் அவரின் நாட்டிலிருந்து அவரின் சிம்மாசனத்தைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது ஒரு காரியம். அதனை அவர்கள் எவ்வாறு நிகழ்த்தினார்கள் என்பதைத் திருக்குர்ஆன் கூறுகிறது:
”’பிரமுகர்களே!
அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன்
உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை
என்னிடம் கொண்டு வருபவர்?’
என்று (சுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
ஜின்களில் இஃப்ரீத் கூறிற்று:
’உம் இடம் விட்டு நீங்கள் எழுமுன்
யானதை உம்மிடம் கொணர்ந்து சேர்ப்பேன்;
திண்ணமாய் அதன்மேல் ஆற்றலுடையேன்
நம்பிக்கைக்கு உரியவன்’
இறைமறை ஞானம் தன்னிடம் உள்ள
ஒருவர் சொன்னார்:
‘உம் கண் இமைப்பதற்குள்
உம்மிடம் அதனைக் கொணர்ந்து சேர்ப்பேன்’
அவ்வாறே அதனைத் தன்முன் கண்டதும்
(சுலைமான் நபி) கூறினார்:
‘இஃதென் ரட்சகனின் அருட்கொடை;
நன்றியாகின்றேனோ மறுக்கின்றேனோ
என்று எனைச் சோதிக்க;
எவன் நன்றி செலுத்துகின்றானோ
அவன் தனக்கே செலுத்துகின்றான்;
எவன் மறுக்கின்றானோ,
திண்ணமாக என் ரட்சகன்
தேவையற்றவன், கண்ணியம் மிக்கவன்’”
(27:39,40)


’இது என் இறைவனின் அருட்கொடை’ (ஹாதா மின் ஃபழ்லி றப்பீ) என்று சுலைமான் நபி குறிப்பிட்டதன் விளக்கம் என்ன? இது பற்றி இரண்டு வியாக்கியானங்கள் உள்ளன.
1.பல்கீஸ் அரசியின் சிம்மாசனம்
2.இறைமறையின் ஞானம் பெற்ற அந்த ஞானி. (அவர் பெயர் ஆசிஃப் இப்னு பர்ஃகியா என்று விரிவுரைகளில் வந்துள்ளது.)

இவ்விரண்டில் எது பொருத்தமானது? என் அறிவிற்கு எட்டிய வரையில் இரண்டாவது பதில்தான் பொருத்தமானது.

ஏனெனில் பல்கீஸ் அரசியின் சிம்மாசனம் இறைஞானத்தை விடவும் பெரிய அருட்கொடை அல்ல. அதனைக் கண் இமைப்பதற்குள் தன் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஞானம் பெற்ற ஒருவர் தன் அவையில் இருப்பதையே சுலைமான் நபி இறைவனின் அருட்கொடை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு வலு சேர்ப்பதற்கு முன்புள்ள திருவசனங்களின் பக்கம் கவனிப்போம். பல்கீஸ் அரசி அனுப்பிய அன்பளிப்பைப் பார்த்துவிட்டு சுலைமான் நபி சொன்னார்கள்:
நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்கிறீர்களா?
அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது
உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்.”
(27:36)


அல்லாஹ் நபிமார்களுக்குக் கொடுத்த விஷேசமான சொத்து இறைஞானம்தான் என்பதைச் சுட்டும் நபிமொழியை முன்பே கண்டோம். நபிமார்களின் வாரிசுகள் ஞானிகளே என்னும் நபிமொழியின் படிக்கு இங்கே அந்த ஞானி சுலைமான் நபியின் ஆன்மிக வாரிசாக இருக்கிறார். அவரையே இறைவனின் அருட்கொடை என்று அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பதுதான் மிகவும் பொருத்தமானது.

அந்த ஞானி கண்ணிமை நொடி நேரத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்ட அந்த சிம்மாசனத்தில் சில மாற்றங்களைச் செய்யுமாறு சுலைமான் நபி சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அற்புதமான நிகழ்ச்சி ஒன்றினையும் திருக்குர்ஆன் வருணிக்கின்றது:
“(சுலைமான் நபி) கூறினார்:
‘அவளின் அரியாசனத்தை
அவளுக்காக மாற்றுங்கள்;
நேர்வழி பெற்றோருள் உள்ளவளா
நேர்வழி அற்றோருள் உள்ளவளா
என்று நோக்குவோம்’
ஆகவே அவள் வந்தபோது
‘இது ஒப்பதா நின் அரியணை?’
என்று கேட்கப்பட்டது;
அவள் சொன்னாள்:
‘நிச்சயமாக அதனைப் போன்றே இது உள்ளது’
(சுலைமான் நபி சொன்னார்:)
’இவளுக்கு முன்பே நாம் ஞானம் அருளப்பட்டோம்
நாம் முஸ்லிம்களாக உள்ளோம்.
அல்லாஹ்வின் வேறானதற்கு
அவள் அடிமை செய்ததே
அவளைத் தடுத்திருந்தது
திண்ணமாய் அவள்
நிராகரிப்பாளரின் சமுதாயத்தில் இருந்தாள்’”
(27:41-43)

இவ்வாறு சொன்னபிறகு பல்கீஸ் அரசிக்கு ஏகத்துவ இறைஞானத்தை உணர்த்த இரண்டாம் நிகழ்ச்சியை சுலைமான் நபி பின்வருமாறு நடத்துகின்றார்கள்:
“’இம்மாளிகையில் பிரவேசியுங்கள்’
என்று அவளிடம் சொல்லப்பட்டது.
அப்போது அவள் (அதன் தரையைத்)
தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்.
எனவே (தன் ஆடையைத்) தன் இரு
கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்.
‘நிச்சயமாக அது மெருகேற்றிய பளிங்கினாலான மாளிகையே!’
(என்று சுலைமான் நபி அப்போது கூறினார்).
(அவள் சொன்னாள்:)
‘ரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே
அநியாயம் செய்து கொண்டேன்;
அகிலங்களுக்கெல்லாம் ரட்சகனான அல்லாஹ்வுக்கு
சுலைமானுடன் முற்றிலும் வழிபட்டேன்’”
(27:44)

இதுவரை நாம் கண்ட இரு நிகழ்ச்சிகளில் இருந்து நாம் முன்னெடுத்துச் சிந்திக்க வேண்டும். சுலைமான் நபியின் அவையத்து ஞானி அக்காரியத்தை எப்படிச் செய்து முடித்தார்? கண் இமைக்கும் நேரத்திற்குள் வேறு நாட்டில் இருந்த சிம்மாசனத்தைத் தான் நிற்கும் அரண்மனைக்கு எவ்வாறு கொண்டு வந்தார்? இதில் பிரபஞ்ச ரகசியம் அடங்கியுள்ளது. சூஃபி மொழியில் அதற்கு “தஜத்துதே அம்ஸால்” (மாதிரிகளின் புத்தாக்கம்) என்று பெயர்.

’ஃபுசூசுல் ஹிகம்’ என்னும் நூலில் இந்நிகழ்ச்சிகளைப் பற்றி மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்:
“வஸ்துக்களின் ரகசியங்களைப் பொருத்த விஷயத்தில் ஜின்னை விடவும் இறைஞானம் பெற்ற மனிதனின் நிலை மேலானது என்பதை இந்நிகழ்ச்சி காட்டுகிறது. ஜின்னின் செயல் உடலின் அசைவால் ஆனது. ஞானியின் செயல்பாடு அவரின் அகக்கண்ணால் ஆனது. உடலின் அசைவை விடவும் கண்ணின் அசைவு அதி விரைவானது. கண் அசையும் கணம் அது பொருளுடன் தொடர்பு கொள்ளும் அதே கணம்தான். அப்பொருள் எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சரியே. கண் திறக்கும் அக்கணமே அது விண்ணுடனும் விண்மீன்களுடனும் தொடர்பு கொள்கிறது. காட்சி மறையும் அதே கணத்தில் அதனிடம் பார்வை மீண்டு விடுகிறது. இதில் சிறிதும் இடைவெளி என்பதில்லை.


“ஓர் இடம் விட்டு உடல் எழுவது என்பது அப்படி அல்ல. விழியின் வேகம் அதில் இல்லை. ஆசிஃப் இப்னு பர்ஃகிய்யா அந்த ஜின்னை விடவும் செயலில் பூரணமாக இருந்தார். அவர் பேசிய அதே கணத்தில் செயலும் நிகழ்ந்தது. அதே கணத்தில் சுலைமான் (அலை) பல்கீஸின் அரியாசனம் தன் முன் உருவாகி நிற்கக் கண்டார்கள். அது தன் இடத்தில் அசைக்கப்படாமல் இருந்ததைக் கண்டார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம். ஒரே கணத்தில் ஒரு பொருளின் இடமாற்றம் நிகழ்வதை நாம் சிந்திப்பதில்லை. ஏனெனில் அது ஒரே கணத்தில் இல்லாமை ஆகி (மஃதூம் – non-existent) மீண்டும் உள்ளமைக்குத் (உஜூத் – existence) திரும்புகின்றது. (இதுவே தஜத்துதே அம்ஸால் என்னும் தத்துவம்). இதனை அகக்கண் திறந்த ஞானியர் அன்றி வேறு எவரும் விளங்குவதில்லை. இது பற்றித்தான் அல்லாஹ் சொன்னான்: ”இல்லை, எனினும் இவர்கள் புதிய படைப்பைப் பற்றி ஐயத்தில் உள்ளனர்” (பல் ஹும் ஃபீ லப்சிம் மின் ஃகல்க்கின் ஜதீத் -50:15). ஒவ்வொரு கணமும் மாற்றத்தை உணராமலேயே அவர்கள் புதிய படைப்பைக் காண்கிறார்கள். இதனால், அந்த அரியாசனம் பல்கீஸின் அரண்மனையில் இல்லாமல் (மஃதூம்) ஆன அதே கணமே அதனை சுலைமான் நபி தன் கண்முன் புத்துயிர் பெறுவதாகக் கண்டார்கள். இதுவே இறைவனின் மூச்சால் படைப்புக்கள் புத்துயிர் பெறுவதாகும். இந்த சக்தியை ஒருவரும் அறிவதில்லை. இன்னும் சொல்வதெனில், மனிதன் தான் ஒவ்வொரு கணமும் இல்லாமல் (மஃதூம்) ஆகிக்கொண்டும் அதே கணத்தில் உள்ளமைக்கு மீண்டுகொண்டும் இருப்பதை உணர்வதே இல்லை.

”இது எவ்விதத் தாமதமும் இல்லாமல் நிகழ்கின்றது. ஒன்றின் இல்லாமைக் கணம் அதன் மாதிரியின் புத்துயிர்ப்புக் கணமாக உள்ளது. (இதுவே தஜத்துதே அம்ஸால் என்னும் கோட்பாடு ஆகும்) இது ’அஷ்அரீ’க்களிடம் உள்ள தஜ்ரீதுல் அஃராத் (நிகழ்வுகளின் புத்தாக்கம்) என்பதை ஒத்ததாகும்.

இந்தத் தத்துவத்தின் குறியீடாக சூரியன் உள்ளது! எனவே சூரியனை வழிபட்டுக் கொண்டிருந்த பல்கீஸ் அரசிக்கு இத்தத்துவத்தின் எதார்த்தத்தை நினைவூட்டி, சூரியன் அத்தத்துவத்தை விளக்குவதற்காக மனிதன் தன் மொழியமைப்பில் பயன்படுத்திக் கொண்ட ஒரு குறியீடு மட்டுமே என்பதை உணர்த்துவதற்காக சுலைமான் நபி ’அரியாசன இடமாற்றம்’ என்னும் செய்முறை விளக்கத்தை (demonstration) இறைஞானி ஒருவரைக் கொண்டு நிகழ்த்தினார்கள்.

‘பாஞ்சாலி சபதம்’ காவியத்தின் நடுவில் அர்ஜுனனின் வாய்மொழியாக காயத்ரி மந்திரத்தை பாரதி தமிழில் தருவதை முன்பு குறிப்பிட்டு விளக்கினோம். அப்பகுதியில் சூரியனைக் குறியீடாக வைத்து அவர் சொல்லும் கருத்தினை மேற்சொன்ன தஜத்துதே அம்ஸால் என்னும் தத்துவத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். அஃது மிகத் தொன்மையான காலத்திலேயே இந்திய மண்ணில் இருந்ததொரு ஞான தரிசனம் என்பதை பாரதியின் வரிகள் காட்டுகின்றன:
கணந்தோரும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்
காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம்
கணந்தோரும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்


பிரபஞ்சத்தில் எதுவும் ஒருகணமும் நிலையானதாய் இல்லை என்னும் இப்பார்வையை கிரேக்க தத்துவவாதியான ஹெராக்ளிட்டஸிடம் நாம் காண்கிறோம். “மாற்றம் என்பதே மாறாத ஒன்று” என்னும் அவரின் பொன்மொழி பரவலாக அறியப்பட்ட ஒன்று. “அனைத்தும் மாறுகின்றது; எதுவும் நிலைப்பதில்லை” என்பதும் அவர் சொன்னதுதான். “ஒரே நதியில் நீ இருமுறை இறங்க இயலாது. ஏனெனில் புதிய நீர் கணந்தோரும் பாய்ந்தபடி உள்ளது” என்று அவர் சொன்னதில் ’தஜத்துதே அம்ஸால்’ கோட்பாட்டின் பார்வை இருக்கின்றது.

ஹெராக்ளிட்டஸின் இந்தத் தத்துவத்தைப் பற்றி ஓஷோ பல இடங்களில் பேசியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த அகதரிசனங்களில் இதுவும் ஒன்று. எனினும் அவர் ஹெராக்ளிட்டஸை விட ஒரு படி இன்னும் தாண்டிப் போவார்: “நான் சொல்கிறேன், ஒரு நதியில் நீங்கள் ஒரே முறைகூட இறங்க முடியாது. ஏனெனில் நீங்கள் உங்கள் காலினைத் தண்ணீரின் மேற்பரப்பில் வைக்கும்போது இருக்கும் நீர் வேறு, உங்கள் கால் உள்ளே இறங்கும்போது உள்ள நீர் வேறு!”

இதே ’நதி’ என்னும் உதாரணம் கொண்டும் ’சூரியன்’ என்னும் உதாரணம் கொண்டும் ‘தஜத்துதே அம்ஸால்’ என்னும் தத்துவத்தை மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் தன் மஸ்னவி காவியத்தில் இவ்வாறு பாடுகிறார்கள்:
”உயிரைத் தெளித்தபடி வீழ்கிறது உச்சிக் கதிரவன்
கணந்தோறும் காலியாகி மீண்டும் நிரப்பப் படுகிறது
மெய்ம்மையின் சூரியனே! உயிரைப் பொழிக!
பழைய உலகில் புதுமையைக் கொணர்க!
ஆதமின் இருப்பில் உயிர் பாய்ந்துகொண்டுள்ளது
நதியில் நீர் பாய்ந்துகொண்டே இருப்பதைப் போல்!”
(ஜான் ஃபிஷான் உஃப்தாத் ஃகுர்ஷீதே புலந்த்
ஹர் தமீ தை மீ ஷவத் புர் மீ குனந்த்
ஜான் ஃபிஷான் ஏ ஆஃப்தாபே மஃனவீ
மர் ஜஹானே குஹ்னா ராபே மஃனவீ
தர் உஜூதே ஆதமீ ஜானோ ரவான்
மீ ரஸத் அஸ் கைப் ச்சூன் ஆபோ ரவான்
மஸ்னவி :2220-2222)

சுலைமான் (அலை) அவர்களின் அவைக்கு வந்த பல்கீஸ் அரசிக்கு நிகழ்த்திக் காட்டிய இரு நிகழ்ச்சிகளையும் இணைத்து இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் மேலும் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
“பல்கீஸ் அரசி அந்த அரியணையைப் பார்த்தபோது, தன்னுடைய நாட்டிற்கும் சுலைமான் நபியின் அரண்மனைக்கும் உள்ள தொலைவை எண்ணிப்பார்த்து, அங்கிருந்து தன் அரியணையை இத்தனை காலதேச இடைவெளியில் எடுத்து வந்திருக்க இயலாது என்று நினைத்தவராக “நிச்சயமாக அதனைப் போன்றே இது உள்ளது” (க அன்னஹு ஹுவ -27:42) என்று சொன்னார். தஜத்துதெ அம்ஸால் என்னும் தத்துவத்தின்படி அவர் சொன்னது உண்மையே. அது அதுவேதான். புதுப்பித்தலின் கணத்தில் முன்பிருந்த அதேதான் இப்போதும் நீங்கள். சுலைமான் நபியின் ஞானத்தின் மேன்மையைக் காட்டும் ஒரு விஷயம் அவர்கள் பல்கீஸ் அரசியை அரண்மனைக்குள் பிரவேசிக்குமாறு சொல்லி உணர்த்தியதில் இருந்தது. அதன் கண்ணாடித் தன்மையை உணராத பல்கீஸ் அதனை ஓடும் நீர் என்று நினைத்துத் தன் ஆடை நனையாதிருக்கும் பொருட்டு அதனைச் சற்றே உயர்த்திப் பிடித்தார். அதன் மூலம், அவர் கண்ட அரியணை இதைப் போன்றதே என்பதை சுலைமான் நபி உணர்த்தினார்கள். இது உச்சமான ஞான போதனை. ‘நிச்சயமாக அதனைப் போன்றே இது உள்ளது’ என்று சொன்னபோது பல்கீஸ் அரசி விஷயத்தின் புள்ளியைத் தொட்டுவிட்டார் என்று அவருக்கு மறைமுகமாக அறிவித்துவிட்டார். அந்தத் தருணத்தில் பல்கீஸ் அரசி சொன்னார்: ‘ரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே
அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் ரட்சகனான அல்லாஹ்வுக்கு
சுலைமானுடன் முற்றிலும் வழிபட்டேன்’ (27:44)


“அவர் சுலைமான் நபிக்கு அடிபணியவில்லை. ஆனால் அகில உலகங்களின் ரட்சகனுக்கு அடிபணிந்தார். சுலைமான் நபியோ அகில உலகங்களின் ஒரு பகுதியே. இறைத்தூதர்கள் தங்களின் இறைநம்பிக்கையைக் குறுக்கிக் கொள்ளமாட்டார்கள் என்பது போலவே பல்கீஸ் அரசி தன் அடிபணிதலைக் குறுக்கிக் கொள்ளவில்லை.
இதற்கு மாறாக ஃபிர்அவ்னின் மந்திரவாதிகளோ, ”மூஸா மற்றும் ஹாரூனின் ரட்சகன்” (ரப்பி மூசா வ ஹாரூன் -26:48) என்று குறுக்கவும் செய்தார்கள். இதுவும் பல்கீஸ் அரசியின் அடிபணிதலை ஒத்ததுதான் என்றாலும் அதன் தன்மை இதில் இல்லை. அல்லாஹ்வுக்கு அடிபணிதலில் ஃபிர்அவ்ன் கடைசியில் பெற்ற தெளிவை விட பல்கீஸ் அரசி பெற்ற தெளிவு அதிகமானது. மேலும், “இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த ரட்சகன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனை அன்றி வேறு தெய்வம் இல்லை என்று நானும் நம்பிக்கை கொள்கிறேன்” (ஆமன்து அன்னஹூ லா இலாஹ இல்லல்லதீ ஆமனத் பிஹீ பனூ இஸ்ராஈல -10:90) என்று ஃபிர்அவ்ன் சொன்ன போது அவன் சூழ்நிலையால் கட்டுண்டு இருந்தான். அவன் இவ்வாறு இறைவனை இறைத்தூதர்களைக் கொண்டும் இனத்தைக் கொண்டும் குறிப்பாக்கினான். பல்கீஸ் அரசியின் இஸ்லாமோ சுலைமான் நபியின் இஸ்லாம் எதுவாக இருந்ததோ அதுவாகவே ஆயிற்று. ஏனெனில் அவர், “சுலைமானுடன்” (மஅஸ் சுலைமான் -27:44) என்று சொன்னார். சுலைமான் நபி எந்த வழிகளில் எல்லாம் இறைநம்பிக்கையில் செயல்பட்டார்களோ அவை அனைத்திலும் பல்கீஸ் தன்னை ஆக்கிக் கொண்டார்.”
(ஃபுசூசுல் ஹிகம் அத்தியாயம் 16)

வான்வெளி எங்கும் விண்மீன் கூட்டம்
வைரத் திரளென ஒளிரும் காட்சி
விண்மீன் முன்னே பால்வெளி ஞாயிறு
விண்டுரை செய்யின் கடுகினும் சிறிதே
உடுக்கள் மீன்கள் என இவை எல்லாம்
வெளியெனும் காட்டில் மின்மினிக் கூட்டம்
எட்டுத் திக்கிலும் விரிந்த இவ்வெளியில்
எங்கே ஞாயிறு? எங்கே பூமி?
பாழ்வெளி தன்னில் பார்வை பரவின்
பூழ்தித் துகளெனத் தோன்றும் காண்க

பிரபஞ்சப் பரப்பில் சூரியன் என்பது பெருவனக் காட்டில் அலையும் ஒரு மின்மினிப் பூச்சி போன்றது. அந்த மின்மினிதான் காட்டுக்கே வெளிச்சமிடும் சூரியன் என்று கருதும் ஒரு பூச்சி அதை விட எத்தனை சிறியதாக இருக்கவேண்டும்!

ஆனால் அது மின்மினித் திரையை விலக்கி அகக்கண்ணால் மெய்ம்மையின் சூரியனையே தரிசித்து விடுமானால் அதன் பேரானந்தம் சொல்லவும் கூடுமோ?

எறும்பிற்குக் கண் உண்டா என்று துவங்கிய இந்தத் தேடல் எறும்பின் சமவெளிக்கு அழைத்துச் சென்று அப்படியே சுலைமான் நபியின் ஞான உலகிற்குள் ஆற்றுப் படுத்திவிட்டது. அந்த உலகின் விசாலத்தின் முன் வியந்து வியந்து என் அறிவின் சிறு கால்களால் அடியெடுத்து நான் நடந்ததை இங்கே கட்டுரையாகப் படியெடுத்துத் தந்தேன்.

“சர்க்கரைக் கிடங்கினுள்
சட்டென்று புகுந்துவிட்ட
எறும்பு போல் ஆனேன்”
என்று இயம்பும் மௌலானா ரூமியின் ஆன்மிகப் பெருவியப்பின் ஒரு துளி இந்த அற்பனின் இதயத்திலும் வீழ்ந்தது இறைக்கருணையின் அடையாளமே!


அந்த வியப்பில்தான் எழுதினேன்:
”பிரபஞ்சத்தினும்
பெரிது உன் அழகு
என் அறிவோ
எறும்பின் கண்”

(முற்றும்) 

1 comment:

  1. எங்க ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் ஒரு கிதாபில் எழுதினார்கள், “ஒரு சிசு கர்ப்பத்தில் இருக்கும் போது அது தான் உலகம் என்று நினைத்து கொண்டிருக்குமாம், அப்புறம் இந்த உலகத்தில் வந்து பிறந்தவுடன், கர்ப்பப்பை எவ்வளவு சிறியது என்று விளங்கி கொள்ளுமாம், அதே மாதிரி இங்கே பிறந்து வாழ்கின்ற மனிதன் இந்த பூமியை தான் உலகம் என்று நினைத்து கொள்வானாம், மறுமையில் தான் இந்த உலகம் எவ்வளவு சிறியது என்று விளங்குமாம்..” - இதே போல் ஒரு கருத்தை எழுதியிருப்பார்கள்.

    சிசு வை போல் எனக்கு தெரிந்த கர்ப்பபையையே உலகம் என்று நினைத்து கொண்டு வாழ்ந்து கொண்டும் என் கண்ணுக்கு தெரியாததை இல்லையென்றும் இருக்கவே முடியாதென்றும் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன்...

    ஆன்மீக பெருவியப்பு உங்களின் கட்டுரைகளை படிக்கும் போது தான் அனுபவக்கிறேன்...

    ReplyDelete