Thursday, June 30, 2011

நெஞ்சாங்கூட்டில்…



(இந்தக் கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன் ‘இஸ்மி’ இதழுக்காக எழுதியது. திருக்குர்ஆன் வசனங்கள் அடிப்படையில் தொடர் கட்டுரைகள் எழுதவேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பட்டது. ‘இஸ்மி’ பத்திரிக்கை சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டது. சென்ற மாதம் நண்பர் கேப்டன்.யாசீன் பிலாலி ஃபோன் செய்து “ஆமிர் கலீமி” மாத இதழில் கட்டுரைத் தொடர் ஒன்று எழுதுமாறு கேட்டார். இதை எடுத்து அனுப்பினேன். இன்று இதழ் என் வீட்டுக்கு வந்தது. அப்படியே எடுத்துத் தருகிறேன்.)




கண்கள் இரண்டு. ஆனால், பார்வை ஒன்று.
செவிகள் இரண்டு. ஆனால், கேட்டல் ஒன்று.
நாசியில்கூட துளைகள் இரண்டு. ஆனால், சுவாசம் ஒன்று.

மனிதனுக்கு இதயம் ஒன்று. இரண்டு இதயங்கள் இல்லை. ஆனால், அந்த ஒற்றை இதயத்தில் பல்லாயிரம் சிந்தனைகள்.

இப்படி உடலாலும் மனதாலும் மனிதன் ஒரு முரண்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: “எந்த மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை.” (33:4)

ஐந்து புலன்களும் வெளியுலகுடன் சம்பந்தம் உள்ளவை. இறைவன் ஏகன். ஆனால், படைப்புக்கள் பல. கண்கள் காணும் காட்சிகள் பல. நாசி நுகரும் மணங்கள் பல. நாவுக்குச் சுவைகள் பல. செவி கேட்கும் ஒலிகள் பல்விதம். உடல் தொட்டு உணரும் ஸ்பரிசம் பல்விதம்.

ஐந்து புலன்களும் பற்பலவாக நிற்கும் படைப்புக்களை அறிந்தாலும், இதயம் அவற்றைப் படைத்த இறைவனையே உணர வேண்டும் என்பதால்தான் ‘இரண்டு இதயங்களை அமைக்கவில்லை’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஐம்புலன்களும் வெளியே இருப்பவை. இதயம் நெஞ்சிற்குள் மறைந்துள்ளது. வெளியே பன்மை இருந்தாலும் உன் அந்தரங்கத்தில் ஏகத்துவம் இருக்கட்டும் என்று கூறுவது போல் உள்ளது இந்த வசனம்.

“இறை நம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் ஆசனம் (அர்ஷ்)” என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள் அல்லவா! ஏகனைத் தாங்கும் இதயம் ஒருமையாகத்தானே இருக்க முடியும்!

“விதங்களில்
ரகஸ்யமாகி உள்ளது
ஏகத்துவம்”

என்று பாடினார் மகாகவி அல்லாமா இக்பால். விதங்களைக் காண்கையில் ஏகத்துவத்தை உணரும் இதயங்களையே இறைவன் மனித இதயங்கள் என்று மதிப்பிடுகிறான். அவ்வாறு உணராத இதயம் கொண்டவர்களை அல்லாஹ் என்னவாக மதிப்பிடுகிறான் என்பதைப் பாருங்கள்:

“அவர்களுக்கு இதயங்கள் உண்டு
அவற்றைக் கொண்டு உணர மாட்டார்கள்;
அவர்களுக்குக் கண்கள் உண்டு
அவற்றைக் கொண்டு பார்க்க மாட்டார்கள்;
அவர்களுக்குச் செவிகள் உண்டு
அவற்றைக் கொண்டு கேட்க மாட்டார்கள்;
அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள்,
இல்லை, அவற்றினும் இழிந்தவர்கள்.” (7:179)

இந்த வசனத்தில் இதயம், கண்கள் மற்றும் செவிகள் ஆகியவை முறையே கூறப்பட்டுள்ளன. காணாமலேயே உணர்பவர்கள் உண்டு. கண்டு உணர்பவர்கள் உண்டு. கண்டு உணர்ந்தவர்கள் சொல்வதைக் கேட்டு உணர்பவர்களும் உண்டு. அப்படியும் உணரவில்லை என்றால் விலங்கை விடவும் கேவலம்தான்.

இறை அடையாளங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் விரவியுள்ளன. இதயம் உள்ளவர்கள்தான் அவற்றைக் காண முடியும். இதயக் கண் திறவாமல் வெறும் புறக்கண்கள் மட்டுமே கொண்டு திரிபவை விலங்குகள்தான்.



“வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும்
இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும்
இதயத்தில் மையம் கொண்டோருக்கு
நிச்சயமாகப் பல அடையாளங்கள் உள்ளன.” (3:190)

என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான். ‘உலுல் அல்பாப்’ என்று அல்லாஹ் குறிப்பிடுவோரை ‘ஞானமுள்ளோர்’, ‘அறிவுடையோர்’ என்று மொழிபெயர்ப்பதுண்டு. ‘அல்பாப்’ என்பது பன்மை. ‘லுப்’ என்பது ஒருமை. ‘லுப்’ என்னும் பதத்திற்கு ‘இதயத்தின் மையம்’ என்பது பொருள். பூவின் இதயத்தில் தேன் சுரப்பதுபோல் மெய்ஞ்ஞானம் இதயத்தில் சுரக்கும் என்பது இங்கே குறிப்பு.

வானங்களிலும் பூமியிலும் தன் அடையாளங்களைக் காட்டும் அல்லாஹ்தான், “உங்களுக்குள்ளேயே நீங்கள் பார்க்க வேண்டாமா?” (51:21) என்றும் கேட்கிறான்.

அல்லாஹ் இவ்வாறு கேட்டதும் நமக்கு ஆசையாகவும் ஆச்சர்யமாகவும் வருகிறது. “இதயமுள்ளோர்க்கு அல்லாஹ் இரவும் பகலும் வானத்திலும் பூமியிலும் தன் அடையாளங்களைக் காட்டுகிறானே. நமக்குள்ளேயே பார்க்கச் சொல்கிறானே. நமக்கே தெரியாமல் நமக்குள் அவன் என்னதான் ஒளித்துவைத்தான்?” என்று முகவிரலாக யோசிக்கிறோம். அதற்கு அல்லாஹ்வே ஒரு பதில் சொல்கிறான்.

“விரைவில் நமது அடையாளங்களை வெளியிலும் அவர்களுக்கு உள்ளேயும் நாம் காட்டுவோம். முடிவாக வெளியிலும் உள்ளிலும் ‘ஹக்’தான் இருக்கிறான் என்ற விஷயம் அவர்களுக்குத் தெளிவாகிவிடும்.” (41:53)

இதயத்தின் விழி தன் உள்ளேயும் வெளியேயும் அவனுடைய அடையாளங்களையே கண்டு ரசிக்கிறது.

இந்த நிலை இறைவன் தன் இனிய நேசர்களுக்குத் தரும் பரிசு. அவனுக்காகக் காதல் தாகம் இல்லாதோரின் நிலை மிகவும் பரிதாபமானது. அவர்களின் இதயங்களுக்கு இறைவனிடம் மதிப்பேதும் இல்லை.

“அவர்களின் இதயங்கள் மீதும் செவிகள் மீதும்
அல்லாஹ் முத்திரை இட்டுவிட்டான்.” (2:7)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது.



“அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, அவர்களுடைய உள்ளங்கள் மீது தாழிடப்பட்டுவிட்டதா?” (47:24) என்று இறைவன் கேட்கிறான்.

அல்-குர்ஆனின் முதல் அத்தியாயம் ‘அல்-ஃபாத்திஹா’. அதற்கு ‘திறப்பு’ என்று அர்த்தம். எத்தனையோ நபர்கள் எத்தனையோ முறை திருமறை நூலைத் திறக்கிறார்கள். ஆனால், உண்மையான திறப்பு (ஃபாத்திஹா) என்பது இதயத்தின் பூட்டைத் திறப்பதாகும்.



1 comment:

  1. ///“இறை நம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் ஆசனம் (அர்ஷ்)” என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்///

    இந்தக் கருத்திலிருந்துதான் அடியார்கள் வணக்கம் வந்துள்ளது இந்து மதத்தில்

    'திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்....'

    ReplyDelete