Friday, December 24, 2010

கனியாகும் கட்டம்

ஏதோ   ஒரு திரைப்படத்தில் பார்த்த காட்சி ஒன்று ஞாபகம் வருகிறது. ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்காக ஒருவன் பாலக்கட்டையில் நிற்கிறான். “சாகப் போறீங்க, உங்களுக்கு எதுக்கு மோதிரம் வாட்ச் செய்னெல்லாம்? எனக்குத் தரக்கூடாதா?” என்று அவனிடம் ஒருவன் கேட்கிறான். அதில் ஞாயம் இருப்பதால் உடனே அவன் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்துவிட்டு ஆற்றில் குதிக்கிறான். தண்ணீர் ஆழம் போதாததால் அவன் மூழ்கிச் சாக முடியவில்லை. இடுப்பளவு தண்ணீரில் எழுந்து நின்று மேலே பார்க்கிறான். “ஐயா, நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். குடுத்ததை திருப்பித் தா” என்கிறான். “அப்படியெல்லாம் முடிவை மாத்தாதீங்க. ஆழமான இடமா பாத்து குதிக்கலாம்” என்கிறான் வந்தவன். “இல்லை, தற்கொலை செய்வது கோழைத்தனம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க” என்பான் இவன். வந்த ஆள் சொல்வான், “அதெல்லாம் கோழைங்க சொன்னது. தற்கொலை செய்துகொள்வது வீரத்தனம்!”

ஆன்மிகம் என்பது பகுத்தறிவுக்கு எதிரானது என்று பொதுவாக ஒரு கருத்து உள்ளது. இந்தக் கருத்தை வைத்திருப்பவர்கள் அரைவேக்காட்டுப் பகுத்தறிவுவாதிகள் என்று எனக்கு மிகத் தாமதமாகத்தான் புரிந்தது. அதேபோல் பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது என்பதும் ஒரு பொதுக் கருத்து. இதுவும் அரைவேக்காட்டு ஆன்மிகவாதிகள் கூறுவதுதான்.

பகுத்தறிவு (INTELLIGENCE ) என்பதும் உள்ளுணர்வு (INTUITION )  என்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் நிகழும் செயல்பாடுகள். இரண்டுமே முழுமை அல்ல. பகுத்தறிவு தர்க்கத்தைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் துறை விஞ்ஞானம்/ அறிவியல். உள்ளுணர்வு கற்பனையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் துறை கலை. இந்தப் பிரிவில் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்பதெல்லாம் கிடையாது. ஆனால் கலைகளை விட அறிவியல் உயர்ந்தது என்று ஒரு பொதுப்பார்வை உள்ளது. அதுவும் அரைவேக்காடுகளின் பார்வைதான்.



திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பகுத்தறிவுப் பாசறை ஒன்றின் சுவற்றில் ஒரு வாசகம் கண்டேன். "பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்" என்று எழுதியிருந்தார்கள். நான் அறிந்த வரையில் புத்திசாலிகளான கணித மேதைகள், விஞ்ஞானிகள் எல்லாம் ஆழமான இறைநம்பிக்கை கொண்டவர்கள்தான். நாத்திகர்கள் கலை உலகில் உருப்படியான பங்களிப்பு எதையும் செய்யவில்லை என்பதே என் அவதானம். ஒரு நாத்திக சிம்பனி இசைக்கலைஞனை நான் கேள்விப்பட்டதில்லை. நியூட்டனோ ஐன்ஸ்டினோ நாத்திகர் அல்லர். ஆனால் அவர்களிடம் கூர்மையான தர்க்கம் இருந்தது. என்னைப் பொருத்தவரை உண்மையான ஆன்மிகம் என்பது பகுத்தறிவு உள்ளுணர்வு இரண்டையுமே முழுமையாகப் பயன்படுத்துவது.

பகுத்தறிவு ரீதியாக மத விளக்கங்கள் கொடுப்பது இன்றைக்கு ஒரு ட்ரென்ட். பலரையும் ஆட்டிப் படைக்கின்ற ஒரு பைத்தியக்காரத்தனமாக அது மாறியிருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்களை இந்த நவீனப் போக்கு மிகவும் பாதித்துள்ளது.திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்திற்கும் அறிவியல் ரீதியாகவே சரியான பொருளைக் கண்டறிய முடியும் என்பது போன்ற ஒரு மாயத் திரை பல மனங்களின் மீது படர்ந்துள்ளது. என்னைப் பொருத்தவரை, தர்க்கமாகட்டும் அல்லது உள்ளுணர்வு - கற்பனை ஆகட்டும், தான் எட்டிய எல்லையைத் தாண்டி மேலும் காலடி எடுத்து வைக்கத் தவறி ஒரு தளத்தில் நின்று விடுமானால் அது உண்மையை ஒருபோதும் கண்டறியாது. எனவே என் சிந்தனைகளில் எனக்கு நானே எதிர் தர்க்கங்களை முன்வைத்தபடியே நகர்ந்து செல்வதுதான் என் வழக்கம். அது என் உரையாடல் பாணியும் கூட.

"இந்து மதம், கிருத்துவ மதம், புத்த மதம் என்பதுபோல்  இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம்" என்று ஒருவர் கூறினார். இதை அவர் எந்தப் புரிதலில் சொன்னார் என்று குடைந்து பார்க்க நான் ஆவலானேன். மதம் என்றால் என்ன? மார்க்கம் என்றால் என்ன? என்று விளக்கும்படி அவரிடம் கேட்டேன். 'மதம் என்பது மனிதனே உருவாக்கிக் கொண்டது. மார்க்கம் என்பது இறைவனின் வழி' என்பது போல் ஒரு விளக்கத்தை அவர் கூறினார். 'அப்படியானால் இஸ்லாம் மதம் என்று சொல்லக்கூடாதா?' என்று நான் கேட்டேன். கூடாது என்றார். "எனக்கென்னவோ இஸ்லாம் மார்க்கம் என்று சொல்வதைவிட இஸ்லாம் மதம் என்று கூறுவதுதான் பொருத்தமானது என்று தோன்றுகிறது" என்று சொன்னேன். என் பதில் அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. என் கருத்தை விளக்கும்படிக் கேட்டார். மதம் என்பது சமஸ்க்ருத வார்த்தை. கொள்கை என்பது அதன் அர்த்தம். இஸ்லாம் மதமல்ல என்று சொன்னால் அதில் கொள்கையே இல்லை என்றாகிவிடும். இஸ்லாத்தில் கலிமத்துத் தவ்ஹீத்  என்னும் கொள்கையும்  (அகீதா) உண்டு, முஆமலாத் - முஆசராத் (சரியை - வழிபாடுகளின் செயல்கள்) என்னும் மார்க்கமும் உண்டு. செயல்களை விட கொள்கைதான் முக்கியமானது. ஏனெனில் கொள்கையின்றி செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே இஸ்லாம் மார்க்கம் என்பதைவிட இஸ்லாம் மதம் என்பது இன்னும் பொருத்தமானது. மதம் என்பது சமஸ்க்ருத வார்த்தை என்பதும் அதன் அர்த்தம் கொள்கை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?" என்று சகோதரரிடம் கேட்டேன். "தெரியாது, மக்களின் புழக்க பாஷையில் மதம் என்பது பொதுவாகப் பயன்படுவது மாதிரிதான் நான் சொன்னேன்" என்றார். "இதுதான் உங்கள் சமயவியல் அணுகுமுறையின் லட்சணம். அரபி வார்த்தையாக இருந்தால் அகராதி, கலைக்களஞ்சியம் எல்லாம் புரட்டுவீர்கள். பிற சமயச் சொற்கள் என்றால் அதன் பின்னணியும் தெரியாது முன்னணியும் புரியாது. அதற்கு மட்டும் புழக்க பாஷையில் பிளந்து கட்டுவீர்கள்!" என்றேன். என் முகத்தையே இறுக்கமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். நான் பேச்சை மாற்றினேன்.

"ஆப்பிள் என்பதற்குத் தமிழில் என்ன சொல்வது? சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?"
"ஆப்பிள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் கிடையாது."
"ஏன் இல்லை?"
"அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் ஆப்பிளே இல்லை. அதனால்தான்."
"சரி, மா பலா வாழை என்ற சொற்கள் இருக்கிறதா?"
"இருக்கிறது. அந்தக் காலத்தில் அந்தப் பொருட்கள் தமிழ் நாட்டில் இருந்ததால் சொற்களும் இருக்கின்றன."
"சரி, ஏக இறைவன், ஏகத்துவம் என்றெல்லாம் சொல்கிறோமே, 'ஏகம்' என்ற சொல் என்ன மொழி என்று தெரியுமா?"
"தமிழ் வார்த்தைதானே அது?"
"இல்லை. சமஸ்க்ருத வார்த்தை. ரிக் வேதத்துல இருக்கு. 'ஏகம் சத்' என்று இறைவனை வருணிக்கும் வாசகத்தில் இருக்கிறது. இதுலேர்ந்து என்ன தெரியுது?"
"ஒன்னும் தெரியலியே."
"ஏகத்துவக் கொள்கை ரிக் வேதத்துல இருக்குன்னு தெரியுது!"

மீண்டும் பேச்சு 'மதம்' நோக்கித் திரும்பியது. "இந்து மதம், கிருத்துவ மதம் என்று சொல்வதுபோல் இஸ்லாம் மதம் என்றுதான் சொல்லவேண்டும். இந்து சமயம், புத்த சமயம் என்று சொன்னால் இஸ்லாம் சமயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்து மார்க்கம், கிருத்துவ மார்க்கம் என்று சொன்னால் இஸ்லாம் மார்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். பிற சமயங்களைக் குறிக்க ஒரு வார்த்தையும் இஸ்லாத்தைக் குறிக்க ஒரு தனி வார்த்தையும் சொல்வது திருக்குர்ஆன்-நபிவழிக்கு மாற்றமானது. புரிகிறதா?" என்றேன். எப்பூடி? என்பது போல் பார்த்தவரிடம் விளக்கினேன்.
"உங்களுக்கு உங்கள் வழி
எனக்கு (என்) வழி"
(லகும் தீனுக்கும் வலிய தீன்) (109 : 6 ) என்றுதானே திருமறையில் தான் தூதருக்கு இறைவன் கற்பிக்கிறான்? தன்னை நிராகரித்தவர்களைப் பார்த்து நபிகள் இவ்வாறு கூற  வேண்டும் என்றுதானே இந்த வசனம் அருளப்பட்டது. நிராகரித்தவர்களின் வழிக்கும் தன் வழிக்கும் 'தீன்' என்ற அதே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறான். வெவ்வேறு வார்த்தைகளை அல்ல!

தர்க்கம் எப்போதுமே இருமுனை கூரான கத்தி. ஒருவர் முன்வைக்கும் தர்க்க வாதம் அவரது வாதத்தின் மீதே பாயவும் கூடும். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விவாதத்தைக் கண்டேன். அல்லாவுக்கு உருவம் உள்ளதா இல்லையா என்னும் விவாதம் அது. விவாதப் பொருள் திசைமாறிப் போன ஓரிடத்தில் ஒரு சகோதரர் கேட்டார், "அல்லாவுக்கு உருவம் இல்லை என்று கூறுகிறீர்களே, அப்படி என்றால் காற்றுக்கு உருவம் இல்லையே அதை வணங்குவீர்களா?" என்று. நான் ஆச்சரியப்பட்ட இடங்களில் இந்தக் கேள்வியும் ஒன்று. இவ்வளவு சொதப்பலான கேள்விகளையெல்லாம் எப்படித்தான் கேட்கிறார்களோ என்று நினைத்தேன்.காற்றுக்கு உருவம் இல்லை என்று யார் சொன்னது? அங்கேயே அவரின் வாதம் மண்ணைக் கவ்வி விட்டது! காற்றுக்கு உருவம் உண்டு என்ற எளிய உண்மைகூட தெரியாத ஒருவர் சமயத்தை ஆய்வு செய்கிறேன் வாய்வு செய்கிறேன் என்று கிளம்பி, அவர் பின்னால் ஒரு கூட்டமும் போகிறது என்றால் உண்மையிலேயே அது ஒரு கேடுதான்!

காற்று நம் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதாலேயே அதற்கு உருவம் இல்லை என்று அர்த்தமல்ல. பாக்டீரியா, வைரஸ் எதுவும் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் நுண்ணோக்கியில் பார்த்தால் அவற்றின் உருவம் தெரியும். காற்று என்பதே ஆக்சிஜன் ஹைட்ரஜன் கார்பன்-டையாக்சைடு ஹாலோஜன்கள் முதலிய வாயுக்களின் கலவைதான்! வாயு பகவான் ஒரு ஆள் அல்ல. ஒரு கும்பல்! அவை ஒவ்வொன்றும் பலப் பல கோடானு கோடானு....கோடானு கோடி அணுக்களின் மொத்தம். ஸ்கூல் பிள்ளைகளைக் கேட்டால்கூட வாயுக்களின் அணுவிற்கு உருவம் உண்டு  என்பதை, அவற்றின் அணுக்  கட்டமைப்பை (ATOMIC STRUCTURE ) வரைந்தே காட்டிவிடுவார்கள். அணு என்பது அருவமல்ல. அது பருப்பொருளின் நுண்ணிய துகள். இத்தனைக்கும் அணு என்பது அடிப்படைப் பொருள்கூட கிடையாது. அதையும் உடைத்து புரோட்டான் எலெக்ட்ரான் நியூட்ரான் லெப்டன் முவான் நியூட்ரினோ டாவ் என்று மேலும் மேலும் நுண்ணிய துகள்களைக் கண்டுவிட்டார்கள். இவை எதுவுமே அருவம் அல்ல. எல்லாமே உருவம் கொண்ட பருப் பொருள்தான். பருப்பொருள் என்றாலே அது உருவமுள்ளதாகத்தான் இருக்க முடியும். காற்றுக்கு உருவமில்லை என்பது எத்தனை சொத்தையான தர்க்கம்! அது வெறும் குதர்க்கம்தான்!



ஆனால் இந்த வாதத்தில் உள்ள தர்க்கத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல என்னால் முடியும். நான் என்ன நகர்த்திச் செல்வது? அந்த தர்க்கத்தின் கையைப் பிடித்துக் கொண்டால் அது தானாகவே நம்மை அழைத்துச் செல்கிறது. தர்க்கம் என்பது எப்போதும் எதிர்ப் பக்கம் 'கோல்' அடித்தவுடனே சேம்சைடு கோலும் போட்டு மகிழ்கின்ற ஒரு கிறுக்கு விளையாட்டு வீரன். அதனுடன் ஞானிகள் மட்டுமே மகிழ்ச்சியாக விளையாட முடியும்! ஏனெனில் அது உதைத்து விளையாடும் கால்பந்தே நம் தலைதான்!



காற்றுக்கும் உருவம் இருக்கிறது என்பது உண்மைதான். அதற்கு வடிவமும் இருக்கிறது. விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமிப்பந்தின் நிழற்படங்களைப் பார்த்தால் அதனைச் சுற்றி காற்று மண்டலம் வளையமாக இருப்பதைக் காணலாம். அது காற்றின் வடிவம்தான். அதற்கு வெளியே விண்வெளியில் இருப்பதெல்லாம் ஒளியும் காஸ்மிக் கதிர்களும்தான். இவையெல்லாம் உலவும் அந்த வெளி இருக்கிறதே அதற்கு என்ன உருவம்? அதற்கு உருவம் இல்லை! குறைந்த பட்சம் அறிவியல் ஆராய்ந்த வகையில். உண்மையில் அதற்கு உருவமே இல்லை என்றால் பிரபஞ்சம் விரிந்துகொண்டே உள்ளது என்று ஐன்ஸ்டீன் கூறுவதற்கு என்ன அர்த்தம்? அப்படியானால் அந்த விண்வெளியும் கோள வடிவம் என்றால் அதற்கு வெளியே என்ன இருக்கிறது? அதைக் கொலவர்த்வுடையதாக உள்ளடக்கி வைத்திருப்பது எது? தர்க்கம் இப்படிப் போய்க்கொண்டே இருக்கும்.

"சகல கோள்களும் மிதந்துகொண்டிருக்கும் வெளிக்கு உருவம் இல்லை என்றால் அதை வணங்குவீர்களா?" என்று அந்தச் சகோதரர் கேட்டிருந்தாலாவது அந்த வாதத்தில் கொஞ்சம் பலம் இருந்த்ருக்கும். உருவமற்ற அந்த வெளியின் எதார்த்தம் என்ன என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அதற்கு அடுத்தக் கட்டத்திற்குச் செல்கின்ற கதவு திறக்கும்!

தர்க்கம் தன்னை உடைத்துக் கொள்கின்ற கட்டத்திற்கு முன்னகராவிட்டால், அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கி அடியெடுத்து வைக்காவிட்டால் அது சாத்தானின் தர்க்கமாகத்தான் இருக்கும் என்பதைத் திருக்குரானில் உள்ள கதை ஒன்று நமக்குக் காட்டுகிறது!

அல்லாஹ் மண்ணைக் கொண்டு மனிதனின் உடலைப் படைத்து அதில் தன் உயிரிலிருந்து ஊதி உயிரூட்டி எழுப்பியவுடன் ஆதம்(அலை) என்ற அந்த முதல் மனிதருக்கு சிரம் பணியுமாறு வானவர்களுக்கும் ஜின்களுக்கும் கட்டளை இடுகிறான். எல்லோரும் சிரம் பணிகின்றார்கள், இப்லீஸ் என்னும் ஷைத்தானைத் தவிர. 'நான் கட்டளையிட்ட போது சிரம் பணியாதபடி உன்னைத் தடுத்தது எது?' என்று அல்லாஹ் அவனிடம் கேட்கிறான்.
"அவன்(இப்லீஸ்) சொன்னான்:
நான் அவரைவிட மேலானவன்.
நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்
மேலும் நீ அவரை மண்ணிலிருந்து படைத்தாய்"
(7 : 12 ) மற்றும் (38 :76 )
இப்லீஸின் இந்த வாதத்தை ஊன்றி கவனித்துப் பாருங்கள். அவன் சொன்ன தகவல் பொய்யல்ல. ஜின்களை நெருப்பிலிருந்துதான் இறைவன் படைத்தான். (காண்க: குரான் 15 :27 மற்றும் 55 :15 ). மனிதனை மண்ணிலிருந்துதான் இறைவன் படைத்தான். (காண்க 6 :2 ; 15 :26 ; 32 :7 ; 38 :71 ; 55 :14  ). எனவே இந்தத் தகவலில் ஷைத்தான் தவறு செய்யவில்லை. அவன் தவறு செய்த இடம் எது என்றால் சரியான தகவல்களைத் தவறாகப் புரிந்துகொண்டது! "நான் அவரைவிட மேலானவன்" என்று சொன்னானே, அங்கே பிசகிவிட்டது! வெள்ளி மோதிரத்தை விட தங்க மோதிரம் மதிப்பு மிக்கது என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அதே வெள்ளி மோதிரம் நபியின் விரலை அலங்கரிக்குமானால் அதற்கு ஈருலகம் ஈடாகுமா?

ஷைத்தானின் தர்க்கம் ஒரு கட்டத்தோடு நிற்கிறது. தன்னை இறைவன் நெருப்பிலிருந்து படைத்தான் என்பதை அறிந்த அது அந்த நெருப்பு எதிலிருந்து வந்தது என்பதை சிந்திக்கவில்லை. மனிதனை இறைவன் மண்ணிலிருந்து படைத்தான் என்பதை அறிந்த அது அந்த மண் எதிலிருந்து வந்தது என்பதை சிந்திக்கவில்லை. அதாவது படைப்பாகிய தன்னின் மூலம் நெருப்பு என்னும் இன்னொரு படைப்பு என்றுதான் அவனது குறையறிவு பார்த்தது. படைப்பாகிய மனிதனின் மூலம் மண் என்னும் இன்னொரு படைப்பு என்றுதான் அவனது குறையறிவு பார்த்தது. நெருப்பையும் மண்ணையும் தாண்டி அவனுடைய தர்க்கம் செல்லவில்லை. எனவே, எந்த தர்க்கம் படைப்புக்களைத் தாண்டவில்லையோ அது ஷைத்தானிய தர்க்கம்! அப்படிப்பட்ட தர்க்கத்தைதான் இப்லீஸின் சீடர்கள் செய்யமுடியும்!

எந்த ஒரு பொருளின் மூலம் எது என்னும் கேள்விக்கு விடையாக இன்னொரு படைப்பு சுட்டிக்காட்டப்படுமானால் அந்தப் படைப்பின் மூலம் எது என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கும், தனக்கு மூலம் என்று வேறு இல்லாத ஒன்றைக் காட்டும் வரை! அதை தர்க்கம் தொட்டால்தான் அது சரியான அறிவு. இல்லையென்றால் அனைத்தின் மூலமும் எது என்றும் விளங்காது, ஆதமின் மண்ணுடலுக்குள் அல்லாஹ் ஊதியது எது என்பதும் விளங்காது!

சகோதரர் நன்றாகத்தான் காய் நகர்த்துகிறார். ஆனால் அந்தக் காய்கள் வெம்பிவிடுகின்றன. காய் கனியாகும் கட்டத்திற்கு நகர்த்தத் தெரிய வேண்டும்!

5 comments:

  1. காய் கனியாகி நமக்கென வளர்ந்து
    "நாளை நமதே"

    முந்திவிட்டாரே இன்று இஸ்மாயில் பாய் :-)

    ReplyDelete
  2. //முந்திவிட்டாரே இன்று இஸ்மாயில் பாய்
    :-) //

    யார் முந்தி யார் பிந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை, பந்தியில் பரிமாறப் பட்டதே அருமையான சாப்பாடு...அதை சுவையுங்கள்!! அதற்குள்ள கருத்தைப் பரிமாறிக் கொள்ளுங்கள். அது இன்னும் கூடுதல் சுவையாய் இருக்கும். (மவுனமாய் எப்போதும் படித்து விட்டு போய்விடுவேன். இன்று ரொம்ப பேசிட்டேனோ :-)))நன்றி!!

    ReplyDelete
  3. ///"இதுதான் உங்கள் சமயவியல் அணுகுமுறையின் லட்சணம். அரபி வார்த்தையாக இருந்தால் அகராதி, கலைக்களஞ்சியம் எல்லாம் புரட்டுவீர்கள். பிற சமயச் சொற்கள் என்றால் அதன் பின்னணியும் தெரியாது முன்னணியும் புரியாது. அதற்கு மட்டும் புழக்க பாஷையில் பிளந்து கட்டுவீர்கள்!" என்றேன். என் முகத்தையே இறுக்கமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.////

    மிகவும் துணிச்ச‌ல்தான் உங்க‌ளுக்கு.

    ReplyDelete
  4. அருமை சார் என்னையும் சிந்திக்க வைத்ததற்கு

    ReplyDelete