Monday, December 6, 2010

உருவெளிக் களங்கள் - 9

காரில் சென்றுகொண்டிருந்தபோது எஃப்.எம் கேட்டுக்கொண்டே சென்றேன். டிரைவரின் சாய்ஸ். நான் வைத்திருக்கும் இசைத் தகடுகள் பிறரின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை. சூஃபிப் பாடல்களை எல்லோரும் ரசிக்க மாட்டார்கள். இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தொகுப்புக்களும் வைத்திருக்கிறேன் என்றாலும் அவை என் தேர்வு என்பதால் பல 'ஹிட்' பாடல்கள் இருக்காது. சோகம் கசியும் பாடல்களை ஒரு முறை போட்டுக்கொண்டு போனேன். "தூக்கம் வருது பாட்டை மாற்றுங்கள்" என்று ஓட்டுநர் கொஞ்சம் கடுப்பாகவே கூறியதால் அதன் பிறகு பெரும்பாலும் எஃப்.எம்தான். சொல்ல வந்த விஷயம் வேறு. நூத்தியாறு புள்ளி அலைவரிசையில் ஒரு புதுப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு வரி என் காதுகுடைந்தது. எந்தப் பிக்காளிக் கவிஞன் எழுதினானோ தெரியாது. இளமையின் தத்துவத்தை எழுதுகிறேன் என்று இப்படி எழுதியிருந்தான்: "இளமை விடுகதை. பெண்களே விடை!" NONSENSE ... என்று என் மனதில் திட்டிக் கொண்டேன். பொதுவாக இளமையில் அப்படித் தோன்றுவது இயல்புதான் என்பதால் போனால் போகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை ஒரு புதிர் என்றால் அதற்குப் பெண் என்பவள் விடை அல்ல என்றாலும் விடையைக் கண்டறிவதற்கான ஒரு குறிப்பு (ஹிண்ட், க்ளூ) என்று அவளைக் கூறலாம். இந்தச் சிந்தனை நான் கல்லூரி மாணவனாக இருக்கும்போதே வந்து விட்டது. பெண் என்பவள் ஆணுக்கு வழித்துணையே அன்றி இலக்கல்ல. எந்த அளவுக்கு அவள் வழித்துணையாக இருக்க முடியுமோ அதே அளவுக்கு அவள் தடையாகவும் இருக்க முடியும்! "ஒரு மனிதனுக்கு அவனின் மனைவி சொர்க்கத்தின் பூங்காவாக இருப்பாள் அல்லது நரகத்தின் குழியாக இருப்பாள்" என்றார்கள் ஹஜ்ரத் உமர்.

சூஃபித்துவம் பெண்ணையே ஒரு குறியீடாகத்தான் பார்க்கிறது. அவளின் அழகு வெறும் ஜடத்தத்துவம் அல்ல. அது ஓர் ஆன்மிக வரைபடம். இந்த சிந்தனை உண்மையான அழகு எது என்னும் விசாரணைக்கு இட்டுச் சென்றது. அக அழகு என்பது பண்புகளால் உருவாகின்றது. அதுதான் உண்மையான அழகு என்று சமயங்களும் ஞானிகளும் கூறினாலும் புற அழகின் தாக்கம் லேசானதாக இல்லை. அதற்கென்று தனி அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் புற அழகு கொண்டவர்கள் எல்லாம் குணத்தால் அழகாக இருக்கிறார்களா என்றால் இல்லையே? பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் போன்ற ஊடகங்கள் வழியே மனங்கள் பெண்ணின் உருவங்களால் நிரப்பப் படுகின்றன. பெண்ணின் உடலழகு ஒரு மாபெரும் வணிகக் கருவியாகியுள்ளது. இலக்கியங்களில் கால காலமாக பெண்ணின் அழகு வருணிக்கப்பட்டு வருகிறது. ஓவியங்களிலும் சிற்பங்களிலும் அவளே! ஆனால் வெறும் புற அழகின் கவர்ச்சி நிலைக்காது என்பது எல்லோருடைய உள்மனதிற்கும் தெரியும். 

ஆனால் ஒரு பெண்ணுக்குப் புற அழகு இல்லாமல் போனால் அதனால் ஏற்படும் இழப்புக்களும் எதார்த்தத்தில் இருக்கவே செய்கின்றன. தான் அழகாக இருக்கவேண்டும் என்னும் கவலை பெண்ணின் ஆதாரக் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்தக் கவலையும் ஒரு மாபெரும் வணிகக் கருவியாகியுள்ளது!

ஒரு தூய அழகை தரிசித்துவிடும் தவத்தில் கவிஞர்களும் சிற்பிகளும் ஓவியர்களும் தங்கள் கலைப்பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதையே அவர்களின் படைப்புக்கள் காட்டுகின்றன. அது உன்னதப் பண்புகளை, தெய்வீகப் பண்புகளைப் பெண்ணின் உருவில் பிரதிபலித்துக் காண்கிறது. உன்னதப் பண்புகள் பிரதிபலிக்காத புற அழகை எந்தக் கலைஞனும் ஆன்மிகவாதியும் தன் சாதனைக்குப் பயன்படுத்த முடியாது. 

"பாலோடு தேன்கலந்  தற்றே பணிமொழி 
வாளெயிறு  ஊறிய நீர்"
என்று வள்ளுவர் கூறுகிறார்.(கவனியுங்கள், இது ஃபிரெஞ்சு கிஸ் அல்ல, தமிழ் முத்தம்!) இந்தத் திருக்குறளில் அடிக்கோடு இட வேண்டிய சொல் என்று எதை நினைக்கிறீர்கள்? பணிமொழி என்பதைத்தான்!  "பணிவாகப் பேசுகின்ற பெண்" என்று வள்ளுவர் கூறுவது அவளின் பண்பின் அழகைக் காட்டுகிறது. அக அழகுடன் சேர்ந்த புற அழகைத்தான் அவர் முன்வைக்கிறார்.
"மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 
பலர்காணத் தோன்றல் மதி"
என்று அவர் சொல்வதைப் பாருங்கள். "ஏ நிலாவே! பூப்போன்ற கண்கள் கொண்ட என் காதலியின் முகத்தைப் போல் நீ இருப்பது உண்மை என்றால் இப்படி எல்லோரும் பார்க்கும்படித் திரியாதே!" என்று டோஸ் விடுகிறார். காதலில் அவரும் தனியுடைமைவாதிதான்!

புற அழகும் அக அழகும் சேர்ந்திருப்பதுதான் மனிதன் விரும்பக்கூடிய அகாக இருக்கிறது. காவியங்கள் படைத்த கவிஞர்கள் எல்லாம் தங்கள் கதாநாயகிகளை அப்படிப்பட்ட உன்னத அழகிகளாகத்தான் உருவாக்கியுள்ளார்கள். கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. தசரதனின் பிரியமான மனைவி அவன் உயிருக்கு உலை வைத்த இரண்டு வரங்களை அவனிடம் கேட்டாள். அந்த இரண்டு வரங்களை அவனிடம் பெற்றே தீருவது என்று என்னென்ன சூழ்ச்சிகள் செய்கிறாள் என்பதைக் "கைகேயி சூழ்வினைப் படலம்" பகுதியில் கம்பன் காட்டுகிறான். தன்னை அலங்கோலமாக்கிக் கொண்டு தரையில் கிடக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள். இப்படி தசரதனின் மனதைக் கரைத்து வரங்களையும் கேட்டுவிட்டாள். தன் அழகில் மயங்கித்தான் வரங்கள் தந்து தன்னை தசரதன் மணந்து கொண்டான் என்ற எண்ணம் அவள் மனதில் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். அதை தசரதன் இப்போது உணர்கிறான். அவளிடம் சொல்கிறான்:
"ஏண்பால் ஓவா நாணம் மடம் அச்சம் இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்"
"அடியே கைகேயி!, நல்ல பெண்களுக்கு நகை நட்டு அழகில்லையடீ. நாணம் மடம் அச்சம் இதுதான் உண்மையான அழகு" என்று சொல்கிறான். 

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் ஒரு சம்பவம். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது அவர்களின் மனைவி ஆயிஷா தன் கைகளில் இரண்டு வெள்ளி வளையல்கள் அணிந்திருப்பதைப் பார்க்கிறார்கள். 'ஆயிஷா, என்ன இது?' என்று கேட்கிறார்கள். 'உங்களுக்காக என்னை அலங்கரித்துக் கொண்டேன்' என்று பதில் வருகிறது. 'வேண்டாம் ஆயிஷா, அவற்றைக் கழற்றிவிட்டு' என்று நபிகள் நாயகம் சொல்லிவிட்டார்கள். ஏசுவின் அன்னை மர்யம் அவர்களைத்தான் முஸ்லிம் பெண்களின் முன்மாதிரி என்று திருக்குர்ஆன் சொல்கிறது. அவர்களைப் போலவே நகைகள் அணியாத எளிமையைப் பெண்கள் கடைபிடிப்பதை நபிகள் நாயகம் விரும்பினார்கள் என்று கருதுகிறேன். இன்றைக்கு பெந்தகோஸ் பெண்கள் அந்த எளிமையைக் கடைப்பிடிக்கிறார்கள். துப்பட்டிக்குள் ஒரு நகைக் கடையையே சுமந்து கொண்டு நடமாடும் முஸ்லிம் பெண்களை நினைத்தால் திகைப்பாக உள்ளது!



கலீல் கிப்ரானின் அமர காவியமான 'THE BROKEN WINGS ' நூலைப் படித்தபோது தன் காதலி 'செல்மா கராமி'யை அவன் வருணித்த வரிகள் இன்னும் என் மனதில் உன்னதப் பெண்ணழகின் இலக்கணமாக மின்னுகிறது. அதிலிருந்து கொஞ்சம் இங்கே தருகிறேன்:   
"செல்மா கராமியிடம் உடல் அழகும் ஆத்ம அழகும் இருந்தது. ஆனால் அவளை அறிந்தேயிராத ஒருவருக்கு அவளை நான் எப்படி வருணிப்பேன்?... ... ... செல்மாவின் அழகு அவளுடைய பொன் கூந்தலில் இல்லை. ஆனால், அதனைச் சூழ்ந்திருக்கும் தூய்மையில் இருந்தது. அவளின் நீண்ட கண்களில் இல்லை. ஆனால், அவற்றிலிருந்து வீசிய ஒளியில் இருந்தது. அவளின் சிவந்த உதடுகளில் இல்லை. ஆனால், அவளது வார்த்தைகளின் இனிமையில் இருந்தது. அவளின் தந்தக் கழுத்தில் இல்லை. ஆனால், அது சற்றே முன்னால் சாய்ந்திருப்பதில் இருந்தது. அது அவளின் நேர்த்தியான உருவத்தில் இல்லை. ஆனால், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் எரியுமொரு வெள்ளைத் தீப்பந்தம் போன்ற அவளது ஆன்மாவின் மேன்மையில் இருந்தது அது."




ஏசுவின் பண்புகளை வைத்தே ஜிப்ரான் தன் கதைகளின் பெண்களை உருவாக்கியிருப்பதைக் காணலாம். எளிமையான தோற்றம் கொண்டவர்களாக அவர்களை வருணிக்கிறார். ஆனால் அந்த எளிமையில் தெய்வீக அழகு பிரதிபலிப்பதாகக் காட்டுகிறார். இறைத்தூதர்கள் இறைவனைப் பிரதிபலித்தார்கள் என்றால் இந்தப் பெண்கள் இறைத் தூதர்களைப் பிரதிபலிக்கின்றார்கள். எதற்காகாக அந்தக் கண்ணாடி மெருகேற்றப் பட்டதோ அதைத் தெளிவாக அது பிரதிபலிப்பதாக!

2 comments:

  1. //"ஏண்பால் ஓவா நாணம் மடம் அச்சம் இவையே தம்
    பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்"

    "அடியே கைகேயி!, நல்ல பெண்களுக்கு நகை நட்டு அழகில்லையடீ. நாணம் மடம் அச்சம் இதுதான் உண்மையான அழகு" என்று சொல்கிறான். ///

    என்னவொரு ஆழமான பார்வை. பெண்ணிய வாதிகள் முறைப்பார்களே, பத்தாம் பசலிக்கருத்து என்று!

    ReplyDelete
  2. இன்றைக்கு பெந்தகோஸ் பெண்கள் அந்த எளிமையைக் கடைப்பிடிக்கிறார்கள். துப்பட்டிக்குள் ஒரு நகைக் கடையையே சுமந்து கொண்டு நடமாடும் முஸ்லிம் பெண்களை நினைத்தால் திகைப்பாக உள்ளது!
    // super comment sir //

    ReplyDelete