Sunday, April 1, 2012

இசைப்புயலின் மையம் (தொடர்ச்சி -2 )



இந்தப் பாடல் காதலன் பாடுவது போல் எழுதப்பட்டுள்ளது. ஏழு நிலைகளையும் அவன்தான் விவரித்துச் செல்கிறான். காதலியின் குரல் இடையிடையே பின்னணியில் ஒலிப்பதாக வருகிறது. அதற்கான வரிகளை குல்சார் எழுதவில்லை. உருதுக் கவிதையின் சிகரங்களில் ஒருவரான மீர்ஸா காலிப் எழுதிய ஒரு கஜலின் கடைசிக் கண்ணியை மேற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார்:
காதல் நம் வசத்தில் இல்லை காலிப்,
அது ஒரு வினோத நெருப்பு
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
(இஷ்க் பர் ஸோர் நஹீ(ன்) ஹே எ வோ ஆதிஷ் காலிப்
ஜோ லகாயா ந லகே அவ்ர் புஜாயா ந பனே)
             
காதலின் ஏழு நிலைகளில் இரண்டாம் நிலையாக இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள ‘உன்ஸ்’ (நெருக்கம்) என்பதை வருணிக்கும் வரிகளைக் கொஞ்சம் கவனிப்போம்:
கண்கள் இரண்டும் தீண்டின இப்படி
மிதமாக மிதமாக நெருக்கம் தோன்றியது
என் உள்ளம் வெளிப்பட்டது
(ஆன்கோ(ன்) நே குச் எய்சே ச்சுவா
ஹல்கா ஹல்கா உன்ஸ் ஹுவா
தில் கோ மெஹ்சூஸ் ஹுவா)

குல்சாரின் உருது வரிகள் இன்னும் அதிகமான அர்த்த பாவங்களுக்கு இடம் கொடுக்கின்றன. அவை என் தமிழாக்கத்தில் தொனிக்கவில்லை. அந்த அர்த்த பாவங்களை எல்லாம் மனதில் கொண்டுதான் குல்சார் எழுதினாரா என்னும் கேள்விக்குப் பதில் சொல்வது இயலாது. இருக்கலாம். அல்லது உருது மொழி தரும் அர்த்தப் பரப்புக்களில் நானாக இவற்றைக் கண்டடைந்ததாகவும் இருக்கலாம்.

’உன்ஸ்’ என்னும் அரபிச் சொல் ’இன்சான்’ என்னும் சொல்லுக்கு மூலமாகும். மனிதனைக் குறிக்க ஆதம், இன்சான், பஷர் போன்ற சொற்கள் உள்ளன. ஆதம் என்றால் மண்ணால் படைக்கப்பட்டவர் என்று பொருள். அது மனிதனின் உடலைத்தான் குறிக்கும். ஆனால் இன்சான் என்பது அவனது ஆத்மாவின் நிலையைக் குறிப்பதாகும். இறைவனுடன் உன்ஸ் (நெருக்கம்) உள்ளவனே இன்சான். சகல சிருஷ்டிகளிலும் இறைவனுடன் மனிதன் பெற்றிருக்கும் நெருக்கம் வேறு படைப்புக்கள் எதற்கும் அருளப்படவில்லை.

இன்சான் என்னும் சொல்லுக்கு வேறு ஒரு சொல்லையும் அறிஞர்கள் கூறுகின்றனர். “ஐன்” என்பது அது. ஐன் என்றால் கண் என்று பொருள். ஐன்சான் என்பதுதான் இன்சான் ஆனது என்று கருதுபவர்கள் உண்டு. அதாவது இறைவனுக்குக் கண்மணி போன்றவன் மனிதன். அவனை மையமாக வைத்துத்தான் அனைத்து சிருஷ்டிகளும் பார்க்கப் படுகின்றன என்பது கருத்து.

உன்ஸ் என்பதை விளக்கும் வரிகளில் குல்சார் ஐன் (கண், உருதுவில் ஆன்ஃக்) என்பதைக் கொண்டுவந்திருப்பது மிகவும் பொருத்தமானது:
கண்கள் இரண்டும் தீண்டின இப்படி
மிதமாக மிதமாக நெருக்கம் தோன்றியது
என் உள்ளம் வெளிப்பட்டது
(ஆன்கோ(ன்) நே குச் எய்சே ச்சுவா
ஹல்கா ஹல்கா உன்ஸ் ஹுவா
தில் கோ மெஹ்சூஸ் ஹுவா)

மெஹ்சூஸ் என்னும் அரபிச் சொல்லின் வேர் ’ஹிஸ்ஸ்’ என்பதாகும். ஹிஸ்ஸி என்றால் வெளிப்படையான (MANIFEST) என்பது பொருள். தில் (இதயம்) என்பது அந்தரங்கமானது (பாத்தின்). அந்தரங்கத்தில் எது இருந்ததோ அது உன்ஸ் (நெருக்கம்) உருவானதும் வெளிப்பட்டுவிட்டது என்று பொருள் கொண்டால் இந்த வரியின் விஸ்தீரணம் இன்னும் அதிகமாகிறது.

ஏனெனில் முதல் மனிதரான (இன்சானே அவ்வல்) ஆதமின் அந்தரங்கத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்டது முதல் பெண்ணான ஹவ்வா அவர்களைத்தான்.

’சத்ரங்கி ரே’ என்னும் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளில் குல்சார் இப்படிப் பாடியுள்ளார்:
என் இதயத்தின் நிழலே
என்னுடன் எப்போதும் இருக்கும் நிழலே
ஏழு வண்ணங்கள் கொண்டவளே
(தில் கா சாயா ஹம்சாயா சத் ரங்கீ ரே)
நிழல் என்பது உடலுக்கு வெளியே விழுந்தாலும் அது எப்போதும் உடலுடன் கூடவே இருக்கிறது, பிரியாமல் இருக்கிறது. பெண் என்பவள் ஆணிலிருந்து அவனுக்கு வெளியே படைக்கப்பட்டிருந்தாலும் நிழலைப் போல் அவனுடன் எப்போதும் பிரியாமல் இருப்பவள் என்பது கருத்து.

மண்ணில் இருந்து படைக்கப்பட்ட ஆதி மனிதர் ஆதம் அவர்களுக்குள் இறைவனின் உன்ஸ் (நெருக்கம்) உண்டானதும் அவர்கள் ’அஷ்ரஃபுல் மஃக்லூகாத்’ – படைப்புக்களில் சிறந்த படைப்பு என்னும் உயர்வை எட்டிவிட்டார்கள். அப்போது அனைத்து வானவர்களும் அவருக்குச் சிரம் பணிந்தார்கள். அந்த நெருக்கம் எப்போது உண்டானது?
“அவரை நான் செவ்வையாக உருவாக்கி
அவரில் என் உயிரிலிருந்து ஊதியதும்
‘அவருக்குச் சிரம் பணியுங்கள்’
என்று கூறியதை (நினைவு கூர்வீராக)”
(ஃபஇதா சவ்வைத்துஹூ வ நஃபஃக்து ஃபீஹி மின் ரூஹீ ஃபகஊ லஹூ சாஜிதீன் – 15:29)

சூஃபிகளின் விளக்கப்படி இறைவன் முதல் மனிதருக்குள் அவனது உயிரிலிருந்து ஊதியது என்பது ”நூரே முஹம்மத்” – முஹம்மதின் ஒளியைத்தான். அது ஊதப்பட்டதும் உன்ஸ் (இறைநெருக்கம்) உருவாகிவிட்டது. பின்னர் அவருடைய விலா எலும்பில் இருந்து அவருடைய ஜோடியான ஹவ்வா அவர்களை இறைவன் படைத்தான். எனவே பெண் என்பவள் ஆணுக்கு நெருக்கத்திற்கு உரியவள் ஆனாள்.

இனி, ஹவ்வா என்னும் பெயரின் அர்த்தங்களில் தொனிக்கும் கருத்துக்களைக் கவனித்துப் பார்ப்போம்.

ஹவ்வா என்னும் பெயரின் மூலச் சொல் ‘ஹயாத்’ என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஹயாத் என்றால் வாழ்வு (life) என்றும் ஜீவன்- உயிர் என்றும் பொருள். இதன் மூலச் சொல்லான “ஹய்” என்பது இறைவனைக் குறிக்கும் திருநாமம் ஆகும் – ஹய்யுன் (உயிருள்ளவன்)
“அல்லாஹு, அவனை அன்றி வேறு தெய்வம் இல்லை.
அவன் உயிருள்ளவன் நித்தியமானவன்”
(அல்லாஹூ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் – 2:255) 

ஹயாத் என்னும் சொல்லிலிருந்து ஹவ்வா என்னும் பெயர் உருவாக்கப்பட்டது என்றால் அது பெண் சிருஷ்டியியக்கத்தின் வாகனமாக, கருவியாக இருக்கிறாள் என்பதைக் குறிக்கும். இறைவன் கர்த்தாவாக இருக்கிறான், மனிதன் அவனின் பிரதிநிதியாக இருக்கிறான், பெண் கருவியாக இருக்கிறாள். சிருஷ்டிகள் உருவாகி வருவதற்குரிய கர்ப்ப அறை அவளுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளது. கருவை ‘செவ்வையாக உருவாக்குதல்’ அவளுக்குள்தான் நடைபெறுகிறது.

பெண்ணைப் பற்றி மௌலானா ரூமி அவர்களின் கவிதை ஒன்று இங்கே நினைக்கத் தகும்:
“பெண் சத்தியத்தின் ஒளிச்சுடர்
அவள் காதலி அல்ல
ஒருவகையில் அவள் படைப்பவள் என்று சொல்
அல்லது வெறும் சிருஷ்டி மட்டும் இல்லை என்று”
(பர்தவே ஹக்கஸ்த் ஆ(ன்) மஃஷூக் நேஸ்த்
ஃகாலிக் அஸ்த் ஆ(ன்) கோயீ யா மஃக்லூக் நேஸ்த் – மஸ்னவி 1:2431)

சத்தியத்தின் ஒளிச்சுடர் (பர்தவே ஹக்) என்னும் கருத்துடன் குல்சார் எழுதிய ஒரு வரி ஒத்துப்போகிறது:
நீயொரு ஒளி ஆவாய்
ஏன் தொலைவில் இருக்கிறாய்?
(கோயி நூர் ஹே தூ க்யூன் தூர் ஹே தூ)

ஹவ்வா என்னும் சொல்லின் வேரிலிருந்து பிறக்கும் இன்னொரு சொல்லான ‘ஹவா’ என்னும் சொல்லுக்கு ஒன்று சேர்த்தல், இணைதல், தழுவுதல் என்னும் அர்த்தங்கள் உண்டு. பெண் என்பவள் ஆணுடன் இணைவதற்கானவள்.

ஹயாத் என்னும் சொல்லின் மூலத்திலிருந்து உண்டாகும் இன்னொரு சொல் ‘ஹயா’ – வெட்கம், நாணம். நாணம் பெண்ணின் சிறந்த குணங்களில் ஒன்று. அந்த நாணமும் அவள் சிருஷ்டியியக்கத்திற்குத் தயாராகும் ருதுமங்கலத்தை அடைந்தவுடன் அதிகமாகிவிடுதல் இயல்பு.

அரபியில் இரண்டு ’ஹ’ எழுத்துக்கள் உள்ளன. ஒன்று மெல்லினம், மற்றது வல்லினம். ஹவ்வா என்னும் பெயரில் உள்ள ஹ மெல்லினம். அதை வல்லினம் ஆக்கினால் ‘உன்ஸ் ஹுவா’ என்று குல்சார் எழுதியிருக்கிறாரே அந்த ‘ஹுவா’ என்பது வரும். அதை ‘ஹவா’ என்று படிக்கும்போது அரபியில் அதன் அர்த்தங்கள் இரண்டு. ஒன்று காற்று, மற்றொன்று ஆசை.

ஹவா என்பதைக் காற்று என்று கொண்டால் அதன் குறிப்பு மூச்சு என்பது. “நான் அவருக்குள் என் உயிரில் இருந்து ஊதியதும்…” (15:29) என்று அல்லாஹ் சொல்வதில் ஊதுதல் என்பது மூச்சை ஜீவனுடன் சம்பந்தம் உடையதாக்குகிறது. எனவே ஹயாத் (ஜீவன்) என்பதை உள்ளுக்குள் ஊதுவது இதிலிருந்து உண்டாகிறது.

இந்த உயிர் ஊதுதல் என்பது இன்னொரு நிலையிலும் நடைபெற்றது. ஏசுநாதரை அன்னை மர்யம் (அலை) அவர்கள் கருவுற்றபோது. ரூஹிலிருந்து மனிதனுக்குள் ஊதிய அல்லாஹ் அப்போது ஜிப்ரீல் என்னும் ரூஹை மனித வடிவில் மர்யமிடம் அனுப்பி வைத்தான்:
“அப்போது நாம் அவரிடத்தில்
நம் ரூஹை அனுப்பிவைத்தோம்;
சரியான மனித உருவில் தோன்றினார்
(ஃப அர்சல்னா இலைஹா ரூஹனா ஃபதமஸ்ஸல லஹா பஷரன் சவிய்யா -19:17)
அப்போது மர்யமுக்குள் ரூஹ் ஊதப்பட்டது:
”மேலும், இம்ரானுடைய மகளான மர்யமையும்.
அவர் தன் கற்பைப் பாதுகாத்துக் கொண்டார்;
நாம் நம் ரூஹிலிருந்து அதில் ஊதினோம்”
(வ மர்யமப்னத்த இம்ரானல்லதீ அஹ்ஸனத் ஃபர்ஜஹா
ஃபநஃபஃக்னா ஃபீஹி மின் ரூஹினா – 66.12)

இதன் சாயலில்தான் ஆதம் என்னும் முதல் ஆணுக்கும் ஹவ்வா என்னும் முதல் பெண்ணுக்குமான இணக்கம் உருவாக்கப்பட்டு நிக்காஹ் என்னும் பிணைப்பு- புணர்ச்சி உண்டாக்கப்பட்டது. அதில் ஆணிலிருந்து ஜீவனைப் பெண்ணுக்குள் செலுத்துதல் உண்டாக்கப்பட்டது. அதனையும் குறியீடாக ‘ஜீவனை ஊதுதல்’ என்று இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ரூஹ் என்பது பஞ்ச பூதங்களைக் கடந்தது. ஆனால் மூச்சு என்பது காற்று. காற்றின் அடுத்த நிலையில் உள்ளது நீர். ஆணிலிருந்து பெண்ணுக்குள் ஜீவன் செலுத்தப்படுவதற்கு நீரின் வடிவம் கொடுக்கப்பட்டது. அது ஜீவநீர் (மாவுல் ஹயாத்) ஆனது. “குன் (ஆகுக) என்னும் சொல்லைப் பதிவு செய்ய இரண்டு எழுத்துக்கள் தேவைப் படுகின்றன. அதுதான் ஆணும் பெண்ணும்” என்று விளக்கம் தருவார்கள் மௌலானா ரூமி (ரஹ்). நீர் என்பதும் கூட ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் ஆகிய இரண்டு வாயுக்களின் கூட்டுத்தான்!

மர்யம்(அலை) அவர்களிடம் வானவர்கோன் ஜிப்ரயீல் அனுப்பப்பட்ட போதும் தானே ரூஹை ஊதியதாக அல்லாஹ் கூறுவது கவனிக்கத்தக்கது. படைப்பவன் அவன்தானே! அதேபோல், ஆணை முன்வைத்துப் பெண்ணுக்குள் ஜீவனை ஊதுவதும் நம் செயல்களைப் படைக்கும் ‘ஃபா இலே ஹகீக்கி’யான அவன்தான்.

இவ்வாறு, ஜீவனை ஊதுவதில் மூன்று நிலைகள் இவ்வாறு வந்தன.
மனிதனுக்குள் ஜீவனை அல்லாஹ் ஊதிய நிலை.
ஜிப்ரயீலை முன்வைத்து மர்யமுக்குள்  ஜீவனை அல்லாஹ் ஊதிய நிலை.
ஆதமை முன்வைத்து ஹவ்வாவுக்குள் ஜீவனை அல்லாஹ் ஊதிய நிலை.

வல்லின ஹ கொண்டு ’ஹவா’ என்று படிக்கும்போது அதற்கு இன்னொரு பொருள் ’ஆசை’. வேறு பொருள்களும் உண்டு: தூண்டுதல் (to tempt), ஈர்த்தல் (to attract), மகிழ்வுறுத்தல் (to delight). இவை எல்லாம் ஓர் ஆணுக்குப் பெண்ணிடம் உண்டாகும் இயல்பான நிலைகள்தான். “பெண்களின் மீதான இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது” (ஸுய்யின லின்னாசி ஹுப்புஷ் ஷஹவாத்தி மினன் நிசாயி – 3:14)

மேற்சொன்ன கருத்துக்களை எல்லாம் குல்சார் சாஹிபின் ‘சத்ரங்கீ ரே’ பாடலின் வரிகளில் பிரதிபலித்துக் காண முடிகிறது. ஹயாத் (வாழ்க்கை), ஹவா (காற்று, ஆசை) என்னும் அர்த்தங்களுக்கான வரிகள்:
இப்போது சொல்
இந்தக் கொடுங் காற்று
எங்கே போய் நிற்கும்?   
(இஸ் பார் பத்தா மூஸோர் ஹவா டெஹரேஹி கஹா(ன்))

வாழ்வின் அனைத்து வாசமும் நீயே
என் ஆசை அபிலாஷை நீயே நீயே
(தூ ஹி தூ ஜீனே கி சாரி ஃகுஷ்பூ
தூ ஹி தூ தூ ஹி தூ ஆர்ஸூ)

பெண்ணுக்கும் நறுமணத்திற்கும் ஒரு தொடர்புண்டு. ”உங்கள் உலகிலிருந்து மூன்று பொருட்கள் எனக்குப் பிரியமாக்கப் பட்டுள்ளன. நறுமணம், பெண்கள், மற்றும் என் கண்களின் குளிர்ச்சி தேக்கப்பட்டுள்ள தொழுகை” (ஹுப்பிப் அலய்ய மின் துன்யாக்கும் அத்தீபு வந்நிஸாஉ வ ஜுஇலத் குர்ரத்த ஐனீ ஃபிஸ்ஸலாத்) என்று நபி(ஸல்) அருளினார்கள். நறுமணத்திற்கு அடுத்த நிலையில் பெண்கள் சொல்லப்பட்டதன் காரணம் ‘பெண்ணில் சிருஷ்டியின் நறுமணம் உள்ளது’ என்று இப்னுல் அரபி (ரஹ்) விளக்கம் தருகிறார்கள்.

அதே ஹவா என்னும் சொல்லுக்கு விழுதல், சாய்தல் என்னும் அர்த்தங்களும் உண்டு. இதனடியாக ‘சாஷ்டாங்கம் செய்தல்’ –சஜ்தா என்னும் பொருளையும் சிலர் தருகின்றனர். ஹவ்வாவின் பெயருக்கு ‘சஜ்தா செய்பவள்’ என்னும் பொருள் தரும் சொல்லை மூலமாக ஹீப்ரானி மொழியில் சில அறிஞர்கள் காட்டுகின்றனர். சஜ்தா என்பது உண்மையில் தன் மூலத்தை நோக்கிச் சாய்வதுதானே? அவ்வகையில்தான், “மனிதர்களுக்கு சஜ்தா செய்யலாம் என்று அல்லாஹ் [என் சமுதாயத்திற்கு] அனுமதித்திருந்தால் கணவனுக்கு சஜ்தா செய்யும்படி மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி (ஸல்) அருளினார்கள். ஹவ்வாவின் மூலப்பொருள் ஆதம்தானே!

இன்னொரு வகையான சாய்தலும் உண்டு. பெண்ணிடம் ஆண் சாயும் நிலை. இது பற்றி மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் சில வரிகளை இங்கே சொல்லலாம்:
“அழகியர் உருவாக்கப்படும் மண்ணைத்தான்
அரசர்களின் நாவுகள் சுவைக்கின்றன.
புழுதி மிக்க இந்தக் களிமண்ணில்
தன் சொந்தக் கோப்பையில் இருந்து
ஒரு துளி அழகை இறைவன் கலந்துவிட்டான்.
காதலனே! ஆயிரம் பரவசங்களுடன்
நீ முத்தமிடுவது அதைத்தான்,
இந்த களிமண் உதடுகளை அல்ல!
திரையின் பேரின்பமே இப்படி எனில்
அது விலகும்போது எப்படியென்று யோசி!”
(மஸ்னவி 5:372)

”சிரம் பணிவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன” என்று அவர்களே இன்னொரு இடத்தில் சொல்கிறார்கள். மக்கள் தங்கள் தலை சாயும் சஜ்தாவைப் பற்றி மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். ஆனால் மனம் சாயும் சஜ்தாவைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு இருப்பதில்லை. மனமும் மண்ணிடமே சாயுமானால் அது மண்ணுக்குச் செய்யும் சஜ்தா ஆகுமே தவிர இறைவனுக்குச் செய்யும் சஜ்தா ஆகாது. உடலின் மூலம் மண் என்பதால் உடலை மண்ணின் பக்கம் சாய்க்கச் சொன்னது. ஆனால் உயிர் தனது மூலத்திடம் சாயும் சஜ்தாவைச் செய்வது அத்தனை எளிதல்ல. இதற்கு மேலும், மண்ணின் மூலம் எதுவோ அதை அறிந்து, அதை மண்ணில் நோட்டமிட்டவனாக சிரத்தை மண்ணில் சாய்க்கும் சஜ்தாவே பூரணமானது. இப்லீசுக்குத் தன் உடலின் மூலம் நெருப்பு என்பதும், ஆதமின் உடலின் மூலம் மண் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் அந்த நெருப்பு மற்றும் மண்ணின் மூலங்கள் எது என்பது அவனுக்குத் தெரியவில்லை. மண்ணின் மூலம் எது என்பதைப் பார்க்கத் தவரியவன் ஷைத்தான் ஆவான்.

காதலின் ஏழு நிலைகளைக் ஆண் பெண் காதலைக் கொண்டு குறியீடாகப் பாடும் இந்தப் பாடலில் ’இபாதத்’ என்னும் நிலைக்கு குல்சார் எழுதியுள்ள வரிகளில் சஜ்தாவைக் குறிப்பிடுகிறார்:
நான் தரையில் சிரம் பணிகின்றேன்
கொஞ்சம் சுதாரிப்புடன்
கொஞ்சம் மயக்கத்துடன்
(மை(ன்) ஃபர்ஷ் பெ சஜ்தே கர்த்தா ஹூ(ன்)
குச் ஹோஷ் சே குச் பேஹோஷி சே)

மண்ணிலிருந்து ஆதம் படைக்கப்பட்டுப் பின்னர்தான் அவருக்குள் அல்லாஹ் தன் ஜீவனிலிருந்து ஊதினான். அதாவது சூஃபிகளின் விளக்கப்படி முஹம்மதின் ஒளி – நூரே முஹம்மத் அவருக்குள் ஊதப்பட்டது. பின்னர் ஹவ்வா படைக்கப்பட்டபோது வெறுமனே ஆதமின் உடலிலிருந்து அவரின் உடல் மட்டும் வரவில்லை, அவருக்குள் ஊதப்பட்ட ரூஹிலிருந்தே ஹவ்வாவின் ரூஹும் உண்டாயிற்று. தனக்குள் ஊதப்பட்ட முஹம்மதின் ஒளியைத் தன் ஜோடியான பெண்ணில் அவர்கள் கண்டார்கள். ஹவ்வாவின்பால் ஈர்க்கப்பட்டு அவர்களைத் தன்னில் சேர்த்துக்கொள்ளும் இச்சை உண்டாகி அவரைத் தீண்ட தன் கையை ஆதம் நீட்டிய போது அல்லாஹ் அவர்களைத் தடுத்து ‘மஹர்’ என்னும் திருமணக்கொடை தரச் சொன்னான். அதாவது நபி(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் என்னும் வாழ்த்து ஓதுவதே அந்த திருமணக்கொடை. ஏனெனில் ஹவ்வாவின் படைப்பே ஆதமுக்குள் ஊதப்பட்ட முஹம்மதின் ஒளியின் ஸ்தூல வெளிப்பாடுதான். எனவே ஆதமுக்கும் நிக்காஹ் என்பது நபியின் வழிமுறை (ஸுன்னத்) ஆயிற்று. ஸுன்னத் என்பது நபியைத் தன்னில் பிரதிபலிப்பதுதானே! ‘ஸலவாத்’ என்பது ஸலாத் (தொழுகை) என்பதன் பன்மை.

ஆக, பெண்ணின் பக்கம் ஆண் சாய்வதானது மண்ணின் அகமியத்தில் நெற்றியை வைப்பதுதான். எனவே, பெண்ணின் உடலை மட்டும் காண்பவன், இச்சிப்பவன் வெறுமனே மண்ணை மட்டுமே காண்கிறான், அதன் மூலத்தை அல்ல. அப்படியாக அவனுடைய நிலை ஷைத்தானுடைய நிலையாக உள்ளது. அவனுடைய பார்வை ஷைத்தானுடைய பார்வையாக இருக்கும். பெண்ணில் தன் அகமியமான முஹம்மதின் ஒளியைக் காண்பவனே ’நிக்காஹ்’ என்னும் நபிவழியை அடைந்தவன் ஆவான். திருக்குர்ஆன் கற்றுத்தரும் பிரார்த்தனை ஒன்றைக் கவனியுங்கள்:
“மேலும் அவர்கள், ‘எங்கள் ரட்சகா!
எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரிடமும் இருந்து
கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை வழிகாட்டியாக
ஆக்கியருள்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்”
(வல்லதீன யகூலூன ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஃயுனின் வஜ்அல்னா லில்முத்தக்கீன இமாமா – 26:74)

நான் தரையில் சிரம் பணிகின்றேன்
கொஞ்சம் சுதாரிப்புடன்
கொஞ்சம் மயக்கத்துடன்
(மை(ன்) ஃபர்ஷ் பெ சஜ்தே கர்த்தா ஹூ(ன்)
குச் ஹோஷ் மே(ன்) குச் பேஹோஷி சே)

இந்த வரிகளில் குல்சார் பயன்படுத்தியிருக்கும் ‘ஃபர்ஷ்’ என்னும் அரபிச் சொல்லைக் கொஞ்சம் கவனிப்போம். அதன் அர்த்தத் தொனிகள் பல. பொதுவாக ஃபர்ஷ் என்பது தரையையும் தரையில் விரிக்கப்படும் பாய், கம்பளம் முதலியவற்றையும் குறிக்கும். அரபிகள் பெண்ணைக் குறிப்பதற்கு இந்தச் சொல்லைக் குறியீடாகப் பயன்படுத்துவர். ’இவன் என் மகன்’ என்று பொருள்பட “ஹாதா இப்னு ஃபராஷீ” – இவன் என் பாயின் மகன் என்று சொல்வதுண்டு. ஃபர்ஷத் என்றால் மெத்தை.

அதே மூலத்தில் இருந்து வரும் ஃபராஷ் என்றால் பட்டாம்பூச்சி. கூட்டுப் புழுவாக இருந்த ஒன்று வண்ணமயமான சிறகுகளுடன் வெளிப்படுவது. ஆதமுக்குள் மறைந்திருந்த அகமியமான ஒளி ஹவ்வாவாக வெளிப்பட்டது போல்.

ஃபர்ஷ் என்பதன் இன்னொரு பொருள் வண்ணம் தீட்டுதல். ஃபுர்ஷத்/ ஃபுர்ஷாத் என்றால் வண்ணம் தீட்டும் தூரிகையைக் குறிக்கும். ’சத்ரங்கீ ரே’ என்பதை இந்த அர்த்தத்தில் பார்க்கும் போது ’ஏழு வண்ணங்களை என் மீது தீட்டும் தூரிகையே’ என்று பொருள் கொள்ளலாம்.

‘சத்ரங்கீ ரே’ என்பதில் சொல்லப்படும் ஏழு வண்ணங்கள் என்பவை காதலின் ஏழு நிலைகள் என்னும் அர்த்தத்தில்தான் இந்தப் பாடல் வடிக்கப்பட்டுள்ளது என்றாலும் சூஃபி மரபில் ‘அல்லாஹ்வின் வண்ணம்’ – சிப்கத்துல்லாஹ் என்பதற்குள்ள விளக்கங்களின் அடிப்படையில் இச்சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் கொள்ள இடமுண்டு. அதாவது ‘உம்முஹாத்தே சிஃபாத்’ (திருப்பண்புகளின் தாய்) என்றும் ‘சிஃபாத்தே ஜாத்தியா’ (சுயத்தின் திருப்பண்புகள்) என்றும் சொல்லப்படும் ஏழு திருப்பண்புகள் குடிகொண்டவள் என்பது பொருள். அதாவது, ஹயாத் (உயிர்), இல்மு (அறிவு), குத்ரத் (சக்தி), இராதத் (நாட்டம்), சமாஅத் (கேள்வி), பஸாரத் (பார்வை) மற்றும் கலாம் (பேச்சு) ஆகிய ஏழு திருப்பண்புகள் குடிகொண்ட / பிரதிபலிக்கின்ற பெண். இந்த ஏழு வண்ணங்களைத் தீட்டும் ‘ஃபுர்ஷத்’ – தூரிகை அவள். சிஃபாத், ஜாத் ஆகிய அரபிச் சொற்கள் இலக்கணப்படிப் பெண்பாற் சொற்கள். எனவேதான் இவற்றைப் பெண்ணாக வருணித்துப் பாடுகின்ற பாவிகம் (poetics) உண்டாயிற்று, குணங்குடி மஸ்தான் சாகிபின் ‘மனோன்மணி’ போல.

மீண்டும் ’வண்ணம்’ என்னும் கோட்பாட்டிற்கே வந்துவிட்டோம். ’ரங்க்ரேஸா’, ‘சத்ரங்கீ’ ஆகிய வார்த்தைகளைக் கொண்ட பாடல்கள் இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்டன. ஏ.ஆர்.ரஹ்மானிடம் தமிழில் இந்த வண்ணம் வந்திருக்கிறதா என்று பார்ப்போம்.

2 comments:

  1. உங்களது ரஹ்மான் பற்றிய மூன்று பதிவுகளும் ரஹ்மான் & அவரது இசை குறித்த சில முக்கிய விஷயங்களை நான் கற்றுக்கொள்ள மிகமிக உதவிகரமாக இருந்தது. சுஃபி குறித்த உங்களுது பதிவுகளும் இப்பொழுதுதான் ஆர்வமாக வாசித்து வருகிறேன். இதுபோன்ற கட்டுரைகள எழுதுவதற்கு மிக்க நன்றி..

    ரஹ்மான் பற்றி அடுத்த பாகம் எழுதும் எண்ணம் உள்ளதா ?

    கண்டபடி உங்களது லிங்க்களை, வாக்கியங்களை - எனது ஒரு பதிவில் (http://kolandha.com/2012/11/dilsere.html) உபயோகப்படுத்தியிருக்கிறேன்....

    ReplyDelete
  2. Wonderful writing. உர்தும் வங்காளமும் அதன் இலக்கிய செறிவிற்காக கற்று கொள்ளலாம்.

    ReplyDelete