Sunday, April 23, 2017

சூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 2

Image result for sufi garden

’அச்சம்’, ‘நேசம்’ மற்றும் ‘மெய்யறிவு’ என்னும் மும்மை, நாம் முன்பே கண்டது போல், விரிபவையாகவும் அதே சமயம் குவிபவையாகவும், அடுத்தடுத்துத் தொடர்பவையாகவும் அதே சமயம் உடனிகழ்பவையாகவும் உள்ளன; இம்மூன்று பரிமாணங்களும் தனித்தனி வழிகளுடைய அதே சமயம் ஒற்றைப் பெருவழியின் அம்சங்களாகவும் இருக்கின்றன; அவை படித்தரங்களாகவும் சால்புகளாகவும் இருக்கின்றன. இந்த படித்தரங்களும் இயக்கங்களும் அவை மனித இயறகையில் மூன்று பரிமாணங்களாக இருப்பதிலிருந்து வருகின்றன. உடல், மனம், உயிர் (மொ.பெ.குறிப்பு: அல்லது உடல் பொருள் ஆவி – மனம் என்பதைக் குறிக்க பொருள் என்னும் சொல் தரும் அர்த்தபாவங்கள் தமிழின் ஆழத்தைக் காட்டுகிறது. அதாவது உடல் என்பது சொல் எனில் மனம் அதன் பொருள், அர்த்தம் என்றாகிறது. அர்த்தத்தையும் கடந்தது உயிரெனும் ஆவி. மனம் என்பதை ஃபார்சியில் ”மன்” என்பர். மன்+அம் = மனம். அது சிந்திக்கும் வேலையைச் செய்கிறது. ’மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பது சங்கத்தமிழ் வரி. அதாவது மன்னனின் சிந்தனையே மக்களின் சிந்தனையாக இருந்த காலம். மன்னனே நாட்டின் மனம் ஆகச் செயல்பட்டவன். மக்கட் திரள் அவனின் பேருடல். மன்+அம் = மனம் என்பதுபோல் மன்+அன் = மனன் à மன்னன். மனம் = பொருள் = மஃனா (அரபியில் ‘அர்த்தம்’ என்பதற்கு) = mean à meaning (ஆங்கிலத்தில் அர்த்தம் என்பதற்கு). உடல் மனம் உயிர் (corpus, anima, spiritus) ஆகியவையும் அவை சார்ந்த மனிதப் பண்புகளும் இதற்குச் சான்று. (குறிப்பு: ஆத்மஞானக் கலையகராதிப்படி hylikos or somatikos, psychikos, pneumatikos. Hylic (material) என்பதும் somatic (corporeal) என்பதும் ஒரே அர்த்தமுள்ளன.)

      மஃகாஃபத், முஹப்பத், மஃரிஃபத் என்னும் மும்மை சூஃபித்துவத்துக்குரியன என்பது இரண்டு முதன்மைக் காரணிகளால் நிரூபிக்க்ப்படுகின்றது, ஒன்று வெளிப்புறமானது, மற்றது உட்புறமானது. ஒரு பக்கம், சூஃபித்துவத்தின் வரலாற்று அல்லது சுழல்முறை மலர்ச்சி என்பது தோராயமாக மூன்று கட்டங்களில் நடந்தேறிற்று, அவற்றில் துல்லியமாக அச்சம், நேசம் மற்றும் மெய்யறிவின் ஆதிக்கம் இருந்தது. இன்னொரு பக்கம், தரீக்கத்தின் அடிப்படைப் பயிற்சியான ”விர்து” என்னும் சூஃபி அன்றாட தியானம் முறையே மஃகாஃபத், முஹப்பத் மற்றும் மஃரிஃபத்துடன் தொடர்புடைய முக்கியமான மூன்று மந்திரங்களைக் கொண்டிருக்கிறது. அதன் சுழல்முறை மலர்தலைப் பொருத்தவரை ஆரம்பத்திலிருந்தே அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்குமாதலால் முன்னேற்றத்தின் எந்த அடையாளத்தையும் அது காட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. ரகசியங்களின் கோட்பாட்டு மற்றும் செறிவேற்றப்பட்ட வெளிப்பாட்டு நோக்கில் சொல்வதெனில் ஒருவித ஆன்மிக நன்னிலையை மட்டுமே அது காட்டுகிறது.

      விர்தின் மும்மந்திரங்களின் பெயர்கள்: இஸ்திக்ஃபார், ஸலாத் அலந்நபி மற்றும் ஷஹாதத். அதாவது, பாவமன்னிப்புக் கோருதல், இறைத்தூதரின் மீது வாழ்த்து மொழிதல் மற்றும் இறைநம்பிக்கையை உறுதிப்படுத்தி சாட்சி பகர்தல்.  அச்சம் என்பது முதன்மையாக பச்சாதாபத்தையும் மன்னிப்புக் கோரலையும் தூண்டுகிறது. நேசம் என்பது அனைத்தின் மூல ஒளியான இறைத்தூதரின் வழியே இறைவனை அடைகிறது, மெய்யறிவு என்பது இறைவனைப் பற்றியதாக இருந்து, சத்தியத்திற்கும் மாயைக்கும் அல்லது ஏகமானதற்கும் கண்டமானதற்கும் இடையில் வேறுபடுத்திக் காட்டுகிறது.
q       q         q        q        q        q
Image result for islamic repentance

      ”இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்பதே இஸ்திக்ஃபாரின் வெளிப்படையான கருத்து. அது தவிர்தலின், எனவே சுத்தமாதலின் அல்லது சமனத்தை மீட்டலின் மந்திரமாகும். இது ஒவ்வொரு மனிதனையும் பற்றியது, ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் அவனியல்பில் குழப்பத்திற்கும் ஊசலாட்டத்திற்கும் (அரபியில் ‘வஹ்மு’ மற்றும் ’வஸ்வாஸ்’) ஆளாகின்றவன்; “நல்ல மனிதன் தினமும் ஏழுமுறை தவறுகிறான்” என்பதொரு முதுமொழி. அதாவது, தற்செயல்களில் எப்போதுமேயொரு சன்னமான குறைபாடு இருக்கிறது, அது பெரும்பிழையாக இல்லாத போதும். இஸ்லாமியக் கொள்கையின்படி இறைத்தூதர்கள் பாவம் செய்வதிலிருந்து தவிர்க்கப்பட்டவர்கள், ஆனால் இறைவனிடமிருந்தான நமது படிப்படியான விலகலின் சம்பளமான இந்த நுண்ணிய குறை அவர்களையும் தொடுகிறது. இந்த விளிம்பு இல்லை எனில் அடியான் (’அப்து) என்பவன் ரட்சகன் (ரப்பு) ஆகிவிடுவான். முஹம்மத் அவர்கள் தாமே இறைவனிடம் தினமும் பாவமன்னிப்புத் தேடினார்கள் என்றால் அது அவர்கள் பாவம் செய்ததால் அல்ல, மாறாக மனிதத் தன்மையின் குறைபாடுகளை நினைந்தேயாகும். தன் சூழலின் சீரற்ற தன்மையாலும் அது தவிர்க்கவியலாது தூண்டும் எதிர்வினைகளாலும் சிறந்த பூரண மனிதனும்கூட ஒருவிதமான குழப்பத்திற்கு அல்லது அசமனத்திற்கு ஆளாகிறான். குறைபட்ட சூழலுக்கு ஆற்றும் எதிர்வினைகள் எல்லா நேரங்களிலும் பூரணமானதாக இருந்துவிட முடியாது. மேலும், மதிப்புக்களைப் பிரித்துக் காட்டுகின்ற கராரான கோடும் இல்லை. இறைவனின் அடியான் (’அப்து) என்னும் நிலையில், மேலும் அனைத்து மூலப்படிவங்களையும் அறிவதால் அடியார்கள் அனைவரின் உச்சமாகவும் முழுத்தொகுப்பாகவும் இருக்கின்ற நபியவர்கள் அடிமைத்தனம் (’உபூதிய்யத்) என்னும் இருத்தல் நிலையில் காணலாகும் அனைத்துக் கண்ணோட்டங்களையும் செம்மைப்படுத்த வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான், அவர்களே முதலில் இறைவனிடம் மன்னிப்புக் கோருபவராக இருந்தார்கள். அதை அவர்கள், தனது சமுதாயத்தால் சிறப்பாக முன்னிறுத்தப்பட்ட  ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சார்பில் செய்தார்கள்.

      ”அச்சம்” என்பதிலொரு எதிர்மறையம்சம் உள்ளது. அது துறத்தல் அல்லது தவிர்தல் ஆகும். அதில் நோன்பு, உறங்காமை, பேசாமை மற்றும் தனிமை ஆகியன அடங்கும். அதில் உடன்பாடான உறுதியான தன்மையுமுண்டு. இயங்குதலும் வேலைகளும் அதில் அடங்கும், ஹிந்துக்கள் கர்மயோகம் என்று சொல்வது போல. இது மட்டுமே தனித்து முழு ஆன்மிகம் ஆகிவிட முடியாது என்றாலும் எந்த மனிதனும் இதன் கோரிக்கைகளை விட்டு முற்றிலும் தப்பிவிட இயலாது.

      ’நேசம்’ என்னும் பரிமாணத்தைப் பொருத்தவரை, அது விர்தில் இப்படி வெளிப்படுகிறது: “என் இறைவனே! ஒளியூட்டும் நின் பேரருளை நின் அடிமையும் திருத்தூதரும் எழுதவும் படிக்கவு கற்காதவருமான எம் தலைவர் முஹம்மதின் மீதும் அவரின் கிளைஞர்கள் மீதும் தோழர்கள் மீதும் பொழிந்து மேலும் அவர்களுக்கு நினது சாந்தியை வழங்குவாயாக”. (குறிப்பு: அல்லாஹும்ம என்பது அல்லாஹ் என்னும் பெயரின் மொழிபெயர்க்க முடியாத ஒரு விளி ஆகும். அதன் விகுதிக் குறிப்பு பன்மையில் இருக்கிறது. எனவே அதனை ஒருமையான பிரார்த்தனைகளில் கொண்டுவருவது சிக்கலாகிறது). குர்ஆனியக் கொள்கையின்படி, இறைக்காதல் என்பது நடைமுறையில் நோக்க இறைத்தூதர் மீதான காதல்தான். இறைத்தூதர் மீதான காதல் என்பது அவரைப் பின்பற்றுவதைக் கோருகிறது. இறைவனை நேசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இறைத்தூதரின் வார்ப்பினுள் வந்து முஹம்மதிய முழுமையின் வழியாக இறைவனை நேசிக்க வேண்டும். இறைவன் தனது தூதரை நேசிக்கிறான். அந்த இறைத்தூதரின் ஆன்மிக வடிவில் எந்த அளவுக்கு ஒரு மனிதன் தன்னை ஒன்றாக்குவானோ அந்த அளவுக்கு அவனையும் இறைவன் நேசிப்பான். இந்த வழியில்தான் இஸ்லாம் முஹப்பத் என்பதன் ரகசியத்தை அணுகுகிறது. முதலாக, அது இறைவனை நோக்கிய அடியானின் முன்னகர்வு அல்ல, அது தனது நியதிகளை முன்வைக்கும் பரஸ்பர மாற்றாகும். இறைவனை நேசிப்பது என்பது இறைவனால் நேசிக்கப்படுவதாகும். இறைவன் சுன்னத்தை (நபிவழியை) நேசிக்கிறான். எனவே, இறைவனால் நேசிக்கப்படுவதற்கு ஒருவன் நபிவழி என்னும் வரையறைக்குள் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிப்படையான வரலாற்று சுன்னத் ஒன்றுள்ளது, அது அரபி நபியின் முன்மாதிரி 

Image result for sufi love

(உஸ்வத்) ஆகும். எனினும், இயற்கையமைப்பு (ஃபித்ரத்) சார்ந்த சுன்னத் ஒன்றுமுள்ளது. ஆதியான, மீ-வழமையான, உட்பொதிந்த பேருரு அது. முஹம்மதிய சுன்னத் என்பது குறித்துக்காட்டும் பயன்பாடாகும். அதுவே அனைத்து இறைநேசத்தின் உள்ளார்ந்த மற்றும் பிரபஞ்சந்தழுவிய நியதியாகும். இக்கருத்தில், இறைவனை நேசிப்பது என்பது ஆன்மாவின் அழகை உணர்தலாகும் என்று நாம் சொல்லலாம், ஏனெனில், “அல்லாஹ் அழகன், அவன் அழகை நேசிக்கிறான்”.

      நேசத்தின் அகநிலை அனுபவத்தை விடவும் புறநிலை சுன்னத் ஒன்றைப் பின்பற்றுவதற்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் நோக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் நேசத்திற்கான அணுகுதல் வழங்கப்பட வேண்டும் என்பதும் அவ்வகையில் இறைவனால் நேசிக்கப்படும் அருள் கிடைக்கவேண்டும் என்பதுமாகும். இந்நோக்கமும் இக்கண்ணோட்டமும் இறைவனின் நேசம் தூயதொரு அன்பளிப்பாகவும் நிபந்தனையற்ற அருட்கொடையாகவும் இருக்கச் செய்கிறது. இக்கருத்திலேயே, “இறைவனை நேசி, நீ விரும்பியதைச் செய்” என்று தூய அகஸ்டினால் சொல்ல முடிந்தது. இஸ்லாம் மறுக்கவியலாததொரு சாத்தியக்கூறு இது. ஆதியமைப்பான ஃபித்ரா என்பதற்கு நம்மை மீட்டுவரும் உள்ளார்ந்த சுன்னத்தை, இதயத்தின் ரகசியத்தைக் (சிர்ரு) குறித்து இந்த அருட்கொடையை அது அனுமதிக்கிறது. (குறிப்பு: யூதர்களின் வேதமான தௌராத் (Torah) வெளிரங்கமான இறைச்சட்டத்தைப் பொருந்திய நிலைகளில் நேசத்தின் முதன்மையை வலியுறுத்துகிறது. ஏசுநாதரின் போதனை அந்தரங்க இறைச்சட்டத்தைப் பொருந்திய நிலைகளில் நேசத்தின் முதன்மையை வலியுறுத்துகிறது. இவையிரண்டும் ’கிடைமட்ட’ மற்றும் ’செங்குத்தான’ சால்புகளாகும். எப்போதும் ஒருங்கிணைவு மற்றும் சமனத்தில் அக்கறை கொண்டுள்ள இஸ்லாம் இவ்விரு நோக்குகளையும் இணைக்கிறது.)

      ”நேசம்” என்பது ஓர் ஆன்மிகக் கோட்பாடு, அதனை நாம் ஓர் அருட்கொடையாக அல்லது பேரார்வத்தினொரு வடிவமாக எப்படிப் பார்த்தாலும் சரி, அவ்விரண்டும்கூட ஒன்றையொன்று சார்ந்தவைதாம். அந்நிலையில், அது நன்மை, வண்மை மற்றும் உற்சாகம் ஆகிய ஆற்றல்மிகு பண்புகளைச் செயலுறுத்துகிறது. வண்மை என்பது தன்னையே இறைவனுக்கு வழங்கிவிடுவதாகும். அவ்வாறு வழங்குவதில் அது தன்னை அவனின் படைப்புக்களுக்கும் வழங்குகிறது. நேசம் என்பதில் ஒரு செயப்பாட்டுச் செம்மை இருக்கிறது. அது அழகு அமைதி மற்றும் ஒத்திசைவின் உணர்வாகும். ஒரே நேரத்தில் தியானத் தன்மையும் அறமுமாயிருக்கும் இந்தப் பண்பே குர்ஆனில் இப்படிச் சொல்லப்படுகிறது: “அதில் அவர்கள் வீண் பேச்சுக்களையும் பாவ வார்த்தைகளையும் கேட்க மாட்டார்கள். ’அமைதி’ ’அமைதி’ என்பதையே (கேட்பார்கள்)” (56:25,26). (குறிப்பு: ‘அமைதி’ (சலாம்) என்பது இறைவனின் அழகிய திருநாமங்களில் ஒன்று). பின்வரும் திருவசனம் முற்றிலும் ஒப்புமையான (முதாபிக்) ஒன்றாகும்: “கூறுக: ‘அல்லாஹ்’. பிறகு அவர்களை அவர்களின் வீண்பேச்சில் திளைக்க விட்டுவிடுங்கள்.” (6:91). அல்லாஹ் என்னும் திருநாமம் தற்செயல்களை உள்ளிழுத்துக்கொள்ளும் சுயம்பொருளைப் போன்று இதில் காட்டப்பட்டுள்ளது. படைப்புக்களின் உள்ளமையடிப்படை நன்மை அழகு மற்றும் அமைதியே ஆகும். தனிப்பட்ட தற்செய்கை தன் மேல் கவிந்தபடிக்கு நேசம் செய்தி வெளிப்பட அனுமதிக்கின்றன.

      அறிவு என்னும் பரிமாணம் விர்தில் (அன்றாட தியானிப்பில்) ஷஹாதத் (சாட்சி பகர்தல்) என்பதால் காட்டப்படுகிறது. அதனுடன் பின்வரும் குர்ஆன் திருவசனப் பகுதிகள் சேர்த்துச் சொல்லப்படுகிறது: ”அவனுக்கு இணை ஏதுமில்லை” (6:163), “ஆட்சி அவனதே, புகழ் அவனதே, அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்” (64:1). இது உணர்த்துவதாவது, இயற்கை விதிகள் போன்ற இரண்டாம் நிலைக் காரணிகள் எல்லாம் முதற்காரணத்தின் எதிரொலிகளேயாகும். பரம்பொருளே ஒவ்வொரு நிகழ்வையும் முடிவுசெய்கிறது, வரமற்ற தற்செயல்களின் நிச்சயமின்மையிலும்கூட எதுவும் அதனைத் தப்பிவிட முடியாது. 

      அறிவு முக்கியமாக இரண்டு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, இறைவனின் அப்பாலைத்தன்மையைக் (transcendence) (அரபியில் தன்ஸீஹ், சமஸ்க்ருதத்தில் நிர்க்குணம் – மொ.பெ.) குறிக்கின்ற புறநிலைக் கண்ணோட்டம். மற்றொன்று, இறைவனின் உள்ளுறைமையைக் (immanence) (அரபியில் தஷ்பீஹ், சமஸ்க்ருதத்தில் சற்குணம் – மொ.பெ.) குறிக்கின்ற அகநிலைக் கண்ணோட்டம். ஆனால், இறைவனின் சர்வவியாபகம் (Omnipresence) என்னும் புறநிலை உள்ளுறைமை என்றொரு நிலையுமுள்ளது. மேலும், தூய அறிவுநிலை (Pure Intelligence) என்னும் அகநிலை அப்பாலைத்தன்மையும் உள்ளது. இது படைப்புக்களின் சுயாதீனத்தை, தன்முனைப்பை விஞ்சிய நிலையாகும். எக்கார்ட் இந்நிலையை “increatus et increabilis” என்றார். மேற்சொன்னதில் முதலாம் கண்ணோட்டமானது ஆன்மிகக் கோட்பாட்டை அதன் சிந்தனை வடிவில் எழுப்புகிறது. இரண்டாம் கண்ணோட்டம் ஏக உள்ளமையால் (வஹ்தத்துல் உஜூது) நிர்ணயிக்கப்படும் ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது. அதாவது, மஃரிஃபத் என்பது முதற்காரணம் என்னும் புறநிலைப் பரிமாணத்தில் ஆன்மிகப் பகுத்தறிதலாகவும் உள்ளுறையும் பரம்பொருள் என்னும் அகநிலைப் பரிமாணத்தில் ஆன்மிக ஒளியூட்டமாகவும் இருக்கிறது. அதாவது, அது அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.

      இதுகாறும் நாம் அலசிவந்திருக்கும் இருநிலைகளாக அல்லாது தனித்து இறைவனின் கட்டற்ற நிலையைக் கருதினால் முக்கியமானதொரு புள்ளியை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆன்மிகக் கோட்பாடு என்பது கட்டற்றதையும் (இறைவனையும்) சார்பானதையும் (படைப்பு) பகுத்தறிவதேயாகும். (ஃபர்க்கு பைனல் முத்ல(க்)கி வல் முகய்யதி –மொ.பெ.) இது, கட்டற்றதில் சார்பு வேர் கொண்டிருப்பதையும் சார்புகளில் கட்டற்றது தன்னை வெளிப்படுத்துவதையும் கவனிக்கக் கோருகிறது. இவ்விரு உபபரநிலைகளில் (hypostases) முதலாவது, மூலப்படிவங்களின் நியமப்பாதையான படைப்புக்காரணியாக அல்லது தெய்வீகப் பேரறிவாக இருக்கிறது. அவற்றுள் இரண்டாம் உபபரநிலையானது படைக்கப்பட்ட மூலாதாரத்தை (created Logos) இறைத்தூதர், மறைவெளிப்பாடு, வானவர்கோன் ஆத்மா (ரூஹ்), ஆன்மிக அதிகாரம், புனிதச் சின்னம் போன்ற அதன் அனைத்து அம்சங்களிலும் குறிப்பதாக இருக்கிறது.

      சிற்றண்ட (microcosm, பிண்டம்) நோக்கில் அல்லது அகநிலை நோக்கில் அல்லது விரும்பினால் ஆன்மிக நோக்கில் இந்நிலை ஒப்புமையானதாகும். தூய பிரக்ஞையும் பேரான்மாவும் (நஃப்ஸி ரஹ்மானி – மொ.பெ) கலப்பற்ற சுயமும் ஆன உள்ளுறைமையான கட்டற்றதில் (முத்லக்) சார்பின் படைக்கப்படாத எதிர்பார்ப்பினையும் அதன் தனிப்பட்ட பிரக்ஞையையும் பகுத்தறிய வேண்டும். அதன் தலைமாறாக, அகநிலையான சார்பில் கட்டற்றதன் பிரக்ஞையின் வெளிப்பாட்டையும் பகுத்தறிய வேண்டும். இதை வேறு விதத்தில் சொல்வதெனில், நம்மிலுறையும் பரம்பொருளினுள்ளே, புறநிலையில் பெறப்படுவதான படைப்புக் காரணியாம் பிரிக்கும் பேரறிவும் அதனால் பிரிக்கப்பட்டவையும் உறுதிப்பட்டிருப்பதைப் தெளிந்தறியவும், ஒருவரின் இதய ஆழத்தில் தூய புனிதப் பேரறிவின் இருத்தல் அன்றி உருவாகவியலாத பகுத்தறிவு என்னும் தனதல்லாத அறிவுப்புலத்தைத் தெளிந்தறியவும் வேண்டும்.


      மஃரிஃபத் அல்லது ஞானம் என்பது இந்த உள்ளுறைப் பேரறிவில் அழிவற்ற ஆன்மா மீண்டும் ஒருங்கிணைவதாகும். இதன் தொடர்பில், ஆன்மாவுக்குள் பேரறிவு ஊடுறுவுவது, (கிறித்துவச் சொல்லாடலில் கூறுவதெனில்) ”உண்மை மனிதனும் உண்மைக் கடவுளும்” ஒத்திசைவதனால் உண்டாகும் அற்புதமாகும். எதிரிடையோ கலத்தலோ இல்லாது அளவற்றது ஆளுமையொன்றில் வெளிப்படுவதன் முழு ரகசியமும் இதுவே. (இதைத்தான் முஹம்மத் (ஸல்) அவர்களின் மெய்ந்நிலை (ஹகீக்கத்) என்றும் அவர்களை முழுமையான வெளிப்பாட்டிடம் (மழ்ஹரே அதம்மு) என்றும் சூஃபிகள் சொல்கிறார்கள் – மொ.பெ) இந்த பெரும் ரகசியமே, ஒரே சமயத்தில் முரணானதாகவும் விளங்கக் கடினமானதாகவும் ஆழ்ந்த உண்மையாகவும் உள்ள பின்வரும் அகஞானக் கூற்றின் அடிப்படை நோக்கினை கிரகிக்க உதவுகிறது: ”சூஃபி என்பவர் படைக்கப்படாதவர்” (அஸ்ஸூஃபி லம் யுஃக்லக்).

முற்றும் 

No comments:

Post a Comment