Thursday, October 3, 2013

ஹாஃபிழ் தோட்டத்து ரோஜாக்கள் (part-1)


(14-ஆம் நூற்றாண்டில் மத்திய இரானில் உள்ள ஷிராஸ் நகரில் வாழ்ந்த சூஃபிக் கவிஞர் ஷம்சுத்தீன் ஹாஃபிழ் அவர்களின் கவிதை வரிகள்)


இத்தனைக்குப் பிறகும்
சொல்வதில்லை வானம் பூமியை நோக்கி
‘கடன்பட்டுள்ளாய் எனக்கு நீ’ என்று

அத்தகைய காதலால்
ஆவதைக் கவனி
வானம் முழுவதிலும்
வெளிச்சமிடுகிறது அது!


சூரியன் ஒப்புக்கொண்டது ஒருநாள்
‘நான் வெறும் நிழலே!
ஒளிமிக்க என் உருவத்தை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்
அந்த முடிவற்ற பேரொளியை
உனக்கும் காட்ட ஆசைதான் எனக்கு

தனிமையிலோ அல்லது இருளிலோ
நீ இருக்கும்போது
உன் சுயத்தின் ஒளியை
உன்னிடம் காட்ட ஆசைதான் எனக்கு!


ஏசுவின் மூச்சு
நுழைந்து செல்லும்
புல்லாங்குழலில்
ஒரு துளை நான்
இந்த இசையைக் கேள்



புரிந்துகொள்ள இதுதான் நேரம்
நன்மை தீமை பற்றிய
உன் கருத்துக்கள் எல்லாம்
சிறுபிள்ளைகளின் நடைவண்டிகளே!
ஓரத்தில் வைத்துவிட்டு வா,
சத்தியத்திலும் காதலிலும்
வாழ முடியும் உன்னால்


எனக்குத் தெரிந்ததெல்லாம்
காதல் மட்டுமே

என் இதயத்தைக் காண்கிறேன்
எல்லைகள் அற்றதாய்
எல்லா இடத்திலும் உள்ளதாய்


இதயம் என்பது
ஆயிரம் தந்தி வீணை
காதல் மட்டுமே
சுருதி கூட்ட முடியும் அதில்!


இப்போது நீ இருக்கும்
இந்த இடம்...
வரைபடத்தில்
வட்டமிட்டு வைத்தான்
இறைவன் உனக்காக!


இவ்வுலகின் அழகாய்
இறைவன் சந்திக்கின்றான்
நம்மை


முன்னொரு காலம்
உன்னுயிரும் என்னுயிரும்
ஒன்றாய் அமர்ந்திருந்தன
ஒருவருக்கொருவர்
பாதங்கள் தொட்டபடி

உன் இதயமும் என் இதயமும்
மிகப் பழைய தோழிகள் அன்பே!


பொறாமையும்
உன் துன்பங்களும் எல்லாம்
இறைவனை விடவும் உனக்குத் தெரியும்
என்ற உன் நினைப்பில் இருந்தே.


வாழ்விற்கான நன்றியின்
தூய வசந்தத்தில்
வா, என்னுடன் சேர்ந்துகொள்!


No comments:

Post a Comment