Saturday, October 5, 2013

முச்சுடர்

(முனாஜாத்: இறைவனுடன் உரையாடல்)



இறைவா!
உன் மறையில் உரைத்தாய்:
“அந்நாளில் சில முகங்கள் பிரகாசிக்கும்
தம் இறைவனின் தரிசனத்தில்”

இறைவா!
தெய்வீகச் செய்தியில்
தெரியப்படுத்தினாய்:
“முஹம்மதே!
நீவிர் இல்லை எனில் நீவிர் இல்லை எனில்
வானங்களைப் படைத்திருக்க மாட்டேன்,
நீவிரில்லை எனில் வெளியிட்டிருக்க மாட்டேன்
என் ரட்சகத்தன்மையை”

திருமறையில் உன் நேசம்
திறந்து உரைத்தாய்:
”முஹம்மதே!
'சொர்க்கத்தின் தடாகத்தை உமக்கே தந்தோம்!'
'விரைவில் உம் ரட்சகன்
வழங்குவான் உமக்கு,
திருப்தி அடைவீர்கள்'”

இறைவா!
உன்னிடம் உரைத்தார்கள்
உத்தமத் திருநபி:
”நம்பிக்கையாளன் ஒருவனேனும்
நரகத்தில் இருப்பான் எனில்
நீ தரும் சொர்க்கத்தில்
திருப்தி இல்லை எனக்கு”

இந்தச் செய்திகளில்
இதயம் கிளர்ந்திருந்தது
இரவெல்லாம்...

”இறைவா! என் இறைவா!
முஹம்மத் இல்லை எனில்
சொர்க்கம் சொர்க்கமல்ல உனக்கு

இறைவா! என் இறைவா!
உன் தரிசனமும்
உன் முஹம்மதின் சகவாசமும்
இல்லை எனில்
சொர்க்கம் சொர்க்கமல்ல எனக்கு

இறைவா! என் இறைவா!
நானங்கு இல்லை என்றானால்
சொர்க்கம் சொர்க்கமல்ல
உன் முஹம்மதுக்கு!”

1 comment:

  1. இறைவா! என் இறைவா!
    உன் தரிசனமும்
    உன் முஹம்மதின் சகவாசமும்
    இல்லை எனில்
    சொர்க்கம் சொர்க்கமல்ல எனக்கு ....

    ReplyDelete