Tuesday, July 23, 2013

மனதில் (3) உறுதி வேண்டும் - part 1


இறை நம்பிக்கை என்றால் என்ன?

இதற்குப் பல கோணங்களில் பல விடைகள் இருக்கலாம். உள்ளம் சம்பந்தப்பட்டு இதற்கோர் ஆழமான விடையை நபி(ஸல்) அவர்களின் வாக்கில் காண்கிறோம்.

‘அல்-ஈமானு ஹுவல் யகீன்’ என்கிறார்கள் அவர்கள்.

‘இறைநம்பிக்கை என்பது நிச்சயமாக ’யகீன்’தான்’ என்பது அதன் பொருள்.

யகீன் என்பதை ஆங்கிலத்தில் Conviction, Certainty, Certitude என்றெல்லாம் மொழிபெயர்க்கிறார்கள்.

தமிழில் உறுதி என்றும் தெளிவு என்றும் பொருள் தரப்படுகிறது.

யகீன் என்பது இந்த இரண்டுமே சேர்ந்ததாகும்.

யகீன் = தெளிவு+உறுதி.

ஒரு விஷயத்தைப் பற்றி மனத்தில் உண்டாகும் தெளிவினால் விளையும் மனவுறுதி என்று இதனைக் கூறலாம். ’மனத்திட்பம்’ என்பது இன்னும் அருமையான சொல்லாக இருக்கும்.

சமஸ்கிருதத்தில் ‘பிரத்யக்‌ஷம்’ என்னும் வார்த்தை யகீன் என்பதற்குப் பொருந்தும் என்று கருதுகிறேன். ஊர்ஜிதம் என்பது புழக்க பாஷையில் உள்ளது. அதுவும் ஓகேவாகலாம்.

உள்ளத்தில் தெளிவு எந்தெந்த வகையில் உண்டாகும் என்று கேட்டால் அடியேன் மூன்று என்று முத்திரை காட்டிவிடுவேன்.

[அடடே! சின்முத்திரைக்குப் புதுப்பொருள்: மூன்று தெளிவுகள் உன்னுள் உண்டானால் உன் ஆன்மா இறைவனை அடையும்!]

மூன்று என்று நான் சொல்லும் வரையறை திருக்குர்ஆன் தருவது. ஆம், யகீன் எதனடியாக விளையுமோ அதை வைத்து யகீனை அது மூன்றாக வகைப்படுத்துகிறது.

இல்முல் யகீன்: அறிவால் (கல்வியால்) உண்டாகும் மனத்திட்பம்.
ஐனுல் யகீன்: காட்சியால் உண்டாகும் மனத்திட்பம்
ஹக்குல் யகீன்: அனுபவத்தால் உண்டாகும் மனத்திட்பம்.

இந்த மூன்று யகீன்களும் சூஃபிகளின் வட்டத்தில் மரபாக ஒரு உவமானம் சொல்லி விளக்கப்படுகின்றன.

புகை தெரிகின்றதை வைத்து அங்கே நெருப்பு இருக்கின்றது என்று உறுதி கொள்வது. நெருப்பின்றிப் புகையாது என்னும் அறிவு இங்கே உறுதியின் அடிப்படையாகிறது.

புகை வரும் இடத்தை நோக்கி ஒருவன் செல்கிறான். அங்கே நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைக் கண்களால் பார்க்கிறான். இங்கே காட்சி என்பது உறுதியின் அடிப்படையாகின்றது.

இன்னும் அருகில் நெருங்குகிறான். நெருப்பின் கதகதப்பை உணர்கிறான். இன்னும் நெருங்குகிறான். அதன் உஷ்ணத்தை, அனலை உணர்கிறான். இங்கே அனுபவம் என்பது உறுதியின் அடிப்படையாகிறது.

இன்னொரு உவமானம். பாரசீக சூஃபிக் கவிஞர் ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:

சில விட்டில்கள் ஒன்றுகூடிப் பேசின. அரசனின் மாளிகையில் விளக்கு ஒன்று இருப்பதாகவும். அதனுள் பிரகாசமான சுடர் ஒன்று இருப்பதாகவும் அவற்றின் வேத நூலில் எழுதப்பட்டிருப்பதை அறிகின்றன. இந்த ‘அறிவு’ சில விட்டில்களின் இதயங்களில் உணர்வைத் தூண்டுகிறது. எப்படியேனும் அந்த விளக்கை தரிசித்துவிட வேண்டும் என்று அவை முடிவெடுக்கின்றன. அந்த அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்கின்றன.

அரண்மனையில் உள்ள ஓர் அறையின் நடுவில் அந்த பிரகாசமான விளக்கை அவை காண்கின்றன. அந்த விளக்கின் காட்சியில் தம்மையே மறந்து பேரானந்தம் அடைகின்றன. ஒரு விட்டில் அந்த விளக்கைப் பற்றி மிகப்பெரிய காவியம் பாடுகின்றது. இன்னொரு விட்டில் அந்த விளக்கின் அழகை தாம் படித்திருந்த வேதத்தின் செய்திகளுடன் ஒப்பிட்டு வருணித்து உரைநூல் ஒன்று வரைகிறது.

அவற்றில் மிகச்சில விட்டில்கள் அந்த விளக்கின் அழகால் ஈர்க்கப்படுகின்றன. பாய்ந்து சென்று அந்த விளக்கின் ஜுவாலைக்குள் தன்னையே அர்ப்பணிக்கின்றன. மறுபக்கம் அவை தீயின் பொறியாய்க் கனன்றுகொண்டு வந்து விழுகின்றன. ஏனைய விட்டில்கள் அவற்றைப் பரிதாபமாகப் பார்க்கின்றன. ஆனால் அவற்றால் அந்த விட்டில்களின் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. விளக்கில் எரிந்த விட்டில்களின் அருகில் இருந்தபடி விளக்குச் சுடரின் அனலை அவை கொஞ்சம் அனுபவித்துக் கொள்கின்றன. தாமும் விளக்கை அனுபவித்துவிட்டதாக அவை மகிழ்கின்றன.

இன்னொரு உவமானம்.
இளைஞன் ஒருவனுக்கு அவனின் பெற்றோர்கள் பெண் பார்க்கிறார்கள். இன்னார் வீட்டில் ஒரு பெண் இருக்கின்றாள். நல்ல அழகி என்று பேசிக்கொள்கிறார்கள். அப்பெண்ணின் லட்சணங்களை அவன் கேள்விப்படுகிறான். பார்த்தவர்கள் சொன்னதிலிருந்து அவனுக்கு ஒரு மனக்கருத்து உண்டாகிறது. ஆனால் இந்த மனப்பிம்பம் அவளின் அசலான உருவமாக இருக்க முடியுமா?

நிச்சயமும் செய்தாகிவிடுகிறது. மணப்பெண்ணை அவன் ஒருமுறை நேரில் பார்க்க அனுமதிக்கின்றார்கள். பார்க்கிறான். தன் கற்பனையை எண்ணி வெட்கப்படுகிறான்.

திருமணம் நடந்தது. அவளை அனுபவித்து இன்பம் அடைகின்றான். அந்த அனுபவம் அவனுக்கே உரியதுதான். யாரும் யாருக்கும் சொல்லிக்கொள்ள முடியாத, உயிர்கள் அனைத்தும் அறிந்த ரகசியம் அது.

இந்த மூன்று யகீன்களும் மூன்று வகை மனிதர்களை உருவாக்குகின்றன.

அறிவிலிருந்து யகீன் அடைந்தவர் ஆலிம் (அறிஞர்)
காட்சியிலிருந்து யகீன் அடைந்தவர் ஆரிஃப் (ஞானி)
அனுபவத்திலிருந்து யகீன் அடைந்தவர் ஆஷிக் (காதலர்)

இப்லீஸ் (ஷைத்தான்) இறைவனை அறிந்த ஆலிமாகவும், இறைவனைக் கண்ட ஆரிஃபாகவும் இருந்தான். ஆனால் இறைவனை அனுபவித்த ஆஷிக்காக இல்லை.

மனிதன் இந்த நிலையில் அனைத்துப் படைப்பினங்களை விடவும் மேலான நிலையில் வைக்கப்பட்டான். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நிலையை அல்லாஹ் சொல்கிறான்:

”அவரை நான் செவ்வையாக உருவாக்கி என் உயிரிலிருந்து அவருக்குள் ஊதியபோது, ‘அவருக்குச் சிரம் பணியுங்கள் என்றேன்.” (15:29; 38:72)

இறைவன் தன் உயிரிலிருந்து ஊதியது அவர் உடலெல்லாம் பரவியது. அந்த நிலையில் ஆதம் (அலை) சொன்ன வாசகம் ‘அல்ஹம்துலில்லாஹ்’ – எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அந்த வாசகமே திருக்குர்ஆனின் திறப்பாக (ஃபாத்திஹா) முதல் திருவசனமாக அமைக்கப்பட்டுள்ளது: “அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” – அகிலங்கள் அனைத்தின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மனிதன் பிரபஞ்சத்தின் குறியீடாக இருக்கிறான்.

அதன்பின் ஆதம் (அலை) தன் ரட்சகனைக் கண்டார்கள். அதன்பின் இறைவன் அவர்களுக்குக் கற்பித்தான்.

“அவனே மனிதனைப் படைத்தான்
அவனே அவருக்கு விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்”
(55:3,4)

”எல்லாப் பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்” (2:31)

எனவே, மனிதனின் உயர்வு என்னவெனில், அவன் முதலில் ஆஷிக்காக இருந்து பின்பு ஆரிஃபாகி அதன் பின் ஆலிம் ஆனவன்.

ஆதம் (அலை) அவர்கள் இறைவன் தன் உயிரிலிருந்து தமக்குள் ஊதியதை முதலில் அனுபவித்தார். அதன் பின்னர்தான் தன் விலாவிலிருந்து தனக்காகப் படைக்கப்பட்ட பெண்ணான ஹவ்வா (அலை) அவர்களை அனுபவித்தார்.

பேரின்பத்தின் சாயலாக அவருக்குச் சிற்றின்பம் தரப்பட்டது.

‘உயிர் ஊதுதல் என்னும் அந்த மூல நிகழ்வின் நினைவு கூர்தலாகவே ஆண் பெண்ணுடன் இணைதல் இருக்கிறது’ என்பது இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் கருத்து. இந்த நியாபகமூட்டலில் நிகழாத தாம்பத்யம் அதன் ஆன்மிக நோக்கத்தை எட்டாது.

’அவரை நான் செவ்வையாக்கி அவருக்குள் என் உயிரிலிருந்து ஊதிய போது...’
உயிர் ஊதப்படும் முன் உடல் செவ்வையாக்கப் பட்டதன் சாயலும் பெண்ணை நேசிப்பதில் ஆண் செய்ய வேண்டிய கடமை ஆகிறது.

’மனைவியுடன் கூடும் முன் கணவன் அவளுக்குத் தூது அனுப்பவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். தூது அனுப்புவது என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் வினவினார்கள். ‘முத்தங்கள் பொழிவது’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (’திப்புன் நபவி’ – இப்னு கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா) இந்தக் குறிப்பைச் சிந்தித்துக் கொள்க.

‘உலகில் நீ எப்படிக் காதலிக்கின்றாயோ
அதற்குத் தகுமாறே
மறுமையில் இறைவன்
உன்னிடம் நடந்துகொள்வான்’
என்கிறார் மௌலானா ரூமி (ரஹ்).


ஆதம் (அலை) உயிரூட்டப்பட்டதன் சாயலாய் உள்ள ஆண் பெண் இணைவு நிகழ்வின் வழியாகவே மனித சந்ததிகள் தோன்றுகின்றன. எனவே, ’மனிதன் இறைவனின் ரகசியம் ஆவான்’ என்னும் கருத்தின்படி நாமெல்லாம் இறை-ரகசியத்தின் பிரதிகளாக இருக்கிறோம்.

(to be continued...)

4 comments:

  1. Excellent.. Would like to say what abul bashar said Alhamdulillaah

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ்..அருமையான பதிவு... .என்போன்ற பாமரமக்களும் புரிந்து கொள்ளும் எளிமையான விளக்கம்..

    ReplyDelete
  3. எளிமையான அதே நேரம் ஆழ்ந்த கருத்துள்ள விளக்கம்

    ReplyDelete
  4. மாஷாஅல்லாஹ்...அருமை!!பாரக்கல்லாஹ்!!

    ReplyDelete