Friday, March 1, 2013

ஓர் அல்லி மலர் போல்



சில தினங்களுக்கு முன் – பல தினங்களாகவும் இருக்கலாம் – என் இல்லத்திற்கு வந்திருந்த மௌலா.அப்துல் காதிர் பிலாலி அவர்கள் தன் பாட்டனார் தமிழாக்கம் செய்த சூஃபி ஞான நூல் ஒன்றினை அன்பளிப்பாகத் தந்து சென்றார்கள்.

“மெய்வழி – ’ஹிகம்’ மொழிபெயர்ப்புச் சுருக்கம்” என்பது தமிழில் அந்நூலுக்குக் கொண்டுக்கப்பட்டுள்ள தலைப்பு. தமிழாக்கம் செய்தவர் மௌலவீ அல்ஹாஜ் டி.எம். மூஸாகான் பாகவி என்னும் மகான். உத்தமபாளையத்தில் வாழ்ந்தவர்கள். ஏற்கனவே அந்நூலின் முதற்பதிப்புப் பிரதி (1963) ஒன்று என்னிடம் இருக்கிறது. எனினும் மௌலா ஹாஜி. ஷாஹுல் ஹமீது ஃபைஜி அவர்கள் பதிப்பித்திருக்கும் இப்பிரதி எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி தந்தது.

அரபியில் ’ஹிகம்’ என்றால் ஞானங்கள் என்று அர்த்தம். சூஃபித்துவ உலகில் மைல்கல் போல் கருதப்படும் ஞான விளக்க நூல்களில் இதுவும் ஒன்று. இதனை இயற்றிய ஞானி இப்னு அதாவுல்லாஹ் அஸ்ஸிக்கந்தரிய்யி (IBN ATAILLAAH OF ALEXANDRIA, d.1309) அவர்கள் ஷாதுலிய்யா ஞானப் பள்ளியின் (தரீக்காவின்) மூன்றாம் தலைமை குருநாதர்.
உலகெங்கும் பரவியிருக்கும் ஷாதுலிய்யா நெறியில் ஆத்ம சீடர்களால் அடிக்கடி படித்தும் பரிமாறியும் சிலாகிக்கப்படும் இந்நூலுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பல உள்ளன. இணைய தளங்களிலும் விரிவுரைகளும் விளக்கங்களும் செய்யப்பட்டு வருகின்றது.

செழுமையான அரபி நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் எண்ணிடப்பட்டு அறிவுரைகள் அமைந்துள்ளன. ஞானம் செறிந்த சிறு சிறு வாசகங்கள் அவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர். டாக்டர் அப்துல் ஜப்பார் விக்டர் டான்னர் என்பார் இந்நூல் பற்றிக் கூறுவதாவது, “ஹிகம் நூல் வேறு பரிமாணத்தில் உள்ளது. அது மீண்டும் மீண்டும் படிக்கப் படும்போது ஆழமாக வேலை செய்கின்ற தன்னளவில் நிறைவான நூலாகும். ஞான ஒளியைத் தேடுவோர்க்கு மிக ஆழமான, காலாதீதமான, குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் அமைந்த முத்துக்களை அது வழங்குகின்றது”

நண்பர் வழங்கிச் சென்ற பிரதியை இன்று மாலை அகஸ்மாத்தாகப் புரட்டியபோது 117-ம் எண்ணிட்ட உபதேசத்தில் இருந்த ஞான வெளிச்சத்தில் சொக்கி நின்றுவிட்டேன். அது பின்வருமாறு. குறிப்பு: [ ] என்னும் அடைப்புக்குள் அடியேன் அரபியைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.

“அறிவு ஞானமற்ற பொது ஜனங்கள் ஏதாகிலுமொரு பாவமான காரியங்களைச் செய்தால் அதை மறைக்கும்படி அல்லாஹுத் தஆலாவிடம் துஆ [மேலான இறைவனிடம் பிரார்த்தனை] கேட்பார்கள். ஏனெனில் ஜனங்களுக்குத் தெரிந்தால் தன்னுடைய மதிப்பு போய்விடும் (இன்னும்) அவர்களின் உபகாரம் ஒத்தாசைகள் இல்லாமல் போய்விடும் என்பதைப் பயந்து அவ்விதம் மறைக்கக் கேட்பார்கள்.

ஆகவே அவர்களின் எண்ணமும் கவனமும் மனிதர்களைப் பற்றியதாய் ஆகிவிடுகிறது. ஆனால் அல்லாஹுத் தஆலாவிற்குச் சொந்தமான அறிவு ஞானமுள்ள ஜனங்கள், பாவமான காரியங்கள் தங்கள் மனதுகளில் ஊசாடாமலும், அதன் பக்கம் சிந்தனைகள் செல்லாமலும் பாவங்களை விட்டும் மறைக்க அல்லாஹுத் தஆலாவின் பொருத்தமெனும் பார்வையை விட்டு விழுந்து விடுவார்கள் என்பதைப் பயந்து மறைக்கக் கேட்பார்கள். ஆகவே இவர்களின் எண்ணமும் சிந்தனைகளும் அல்லாஹுத் தஆலாவைப் பயந்ததினால் இருக்கிறது.

இவ்விரு கூட்டத்தார்களின் நோக்கங்களுக்கிடையில் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. அதாவது ஒரு கூட்டத்தினர் சிருஷ்டிகளைப் பயந்தும் மற்ற கூட்டத்தினர் ஹக்கைப் பயந்தும் மறைக்கத் தேடுகிறார்கள்”

இந்த ஞான உரையின் கருத்தில் என் சிந்தனை நெடு நேரம் நின்றிருந்த போது  மௌலானா ரூமி (ரஹ்) தன் மஸ்னவி காவியத்தில் சொல்லியிருக்கும் ஒரு கதை ஞாபகம் வந்தது. இதற்கும் அதற்கும் அடிப்படையில் என்ன தொடர்பு என்று தெளிவாகத் தெரியவில்லை. மௌலானா ரூமியும் இப்னு அதாவுல்லாஹ்வும் சமகாலத்தவர்கள் என்பதாலா? ஆனால், மௌலானா ரூமியின் அந்தக் கதையில் வருபவனும் தன் பாவங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புபவனே! அந்தக் கதை இதோ:

“சில காலங்களுக்கு முன் நஸூஹ் என்னும் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். ஹமாம் என்னும் பொதுக் குளியலறையில் பெண்களுக்கு தேகம் தேய்த்து விடும் பணி செய்து வாழ்ந்து வந்தான். அவன் முகத்தில் தாடியும் இல்லை, மீசையும் இல்லை.

இளம்பெண்ணின் முகமாய் அது தோற்றம் தந்தது. அவன் பெண்வேடம் தரித்துக் கொண்டான், வேலைக்காக. ஆனால் அவன் அலி அல்ல. ஆண்மையை மறைத்துக் கொண்டான், அவ்வளவே.

பெண்களின் கேசத்தை அலசும்போது அவர்தம் மேனியைத் தீண்டுவதில் இன்பம் கண்டிருந்தான். அழகிய யுவதிகளுக்கு, குறிப்பாக இளவரசிக்கு, சதைபிடித்து விடுவதில் அவனின் பாலுணர்வு சதாகாலமும் வீரியமுடன் விழித்துக் கிடந்தது.

இப்படி தொடர்ந்து காமுகமாய் இருக்க வேண்டி இல்லாததாய் வேறு ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விட்டால் என்ன என்று அவன் மனம் அடிக்கடி யோசிக்கும். ஆனால் அவனால் அந்த வேலையை விட்டு விலக முடியவில்லை.

அப்போது, அவ்வூருக்கு வந்திருந்த இறைநேசர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டான். சூஃபி, மகான், ஞானி என்றெல்லாம் அவரைப் பற்றிய வியப்புரைகள் அவன் செவியில் விழுந்து அவரிடம் இழுத்தன. சென்று கண்டான். “உங்கள் பிரார்த்தனையில் என்னையும் ஞாபகம் வையுங்கள்” என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

உலகை விட்டு விடுதலை ஆன அந்த மகான் இறைவனின் பக்கம் முற்றிலும் தன்னைத் திறந்து வைத்தவர் ஆவார். நஸூஹின் இரகசியம் அவருக்கு வெளிச்சமானது. எனினும், தகைமையால் அவர் அது பற்றிப் பேசாமல் இருந்தார்.

இறைஞானி சொற்பமாகவே பேசுகிறார். ஆனால் அவர் தெய்வீக மர்மங்களால் நிரம்பியவர் ஆவார். அவருக்குள் பல ரகசிய குரல்கள் கேட்ட வண்ணம் உள்ளன. அந்தக் கோப்பை புகப்பட்டப்பட்ட எவரும் மௌனமாகத்தான் இருப்பார்.

அந்த மகான் புன்னகை செய்துவிட்டுச் சத்தமாகப் பிரார்த்தித்தார், “எப்படி என்று உனக்கே தெரிந்த வழியில் நீ உன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும்படி அல்லாஹ் உன்னை ஆக்கி அருள்வானாக!”

அத்தகைய சூஃபியின் பிரார்த்தனை பிறரின் பிரார்த்தனைகளை விட்டும் வேறுபட்டது. அவர் தன் சுயத்தை முற்றிலும் கரைத்துவிட்டவர் ஆவார். தான் ஒன்றுமில்லை என்பதை ஆழமாக உணர்ந்தவராவார். அவரின் பிரார்த்தனை இறைவன் தன்னுடன் தானே உரையாடுவது போன்றது. அது மறுக்கப் படுவதில்லை.

நஸூஹ் தன்னை மாற்றிக் கொள்வதற்கான காரணங்கள் வெளிப்படத் தொடங்கின.

ஆடையற்ற ஓர் இளம்பெண்ணுக்கு அவன் தொட்டியில் நீர் வார்த்துக் கொண்டிருந்த போது தன் காதணியில் பதித்திருந்த பெரிய முத்து ஒன்று இல்லாததை அவள் கண்டாள்.

சட்டென்று, கதவுகள் அடைத்துத் தாழிடப்பட்டன. மெத்தைகளிலும் விரிப்புகளிலும் துவட்டும் துண்டுகளிலும் ஆடைகளிலும் அந்த முத்து தேடப்பட்டது. எங்கும் இல்லை.

இப்போது அரசரின் பெண்கள் அனைத்துப் பெண்களையும் சோதிக்கிறார்கள், வாயில், அக்குள்களில், அபங்களில், எங்கெல்லாம் மறைக்க முடியுமோ எல்லா இடங்களிலும்.

எப்பெண்ணும் சோதனைக்குத் தப்ப முடியாது என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொருவரையும் ஆடை களைய ஆணையிடுகிறாள் அந்தப்புரத்தின் அதிகாரப் பெண்.

அப்போது நஸூஹ் ஒரு குளியலறைக்குள் தாழிட்டுக் கொண்டு நிற்கிறான், நடுங்கியபடி!

“அந்த முத்தை நான் திருடவில்லை. ஆனால் அவர்கள் என்னை அம்மணமாக்கிப் பார்த்தால்? இந்தப் பெண்களால் நான் அடையும் நிலையைக் கண்டுவிட்டால்? இறைவா! என்னைக் காப்பாற்று. நான் பொடுபோக்காக இருந்துவிட்டேன். ஆனால், தயவு செய்து இந்த முறையும் என் பாவத்தை மறைத்துவிடு. நான் எப்படி இருந்தேன் என்பதை வெளிப்படுத்திவிடாதே இறைவனே! நான் திருந்திவிடுகிறேன்.”

அவன் அழுகிறான், முணகுகிறான், மீண்டும் அழுகிறான், அவனுக்கான நேரம் நெருங்கி வருகிறது.

’நஸூஹ், உன்னைத்தவிர எல்லோரையும் சோதனை செய்தாகிவிட்டது. நீ வெளியே வா. உன்னையும் பார்த்து விடுவோம்’

அந்தக் கணத்தில் அவன் உயிரின் சிறகுகள் படபடக்கின்றன. பறவை மேலே எழும்பி விட்டது.

அவனின் தன்முனைப்பு இடிந்த சுவர் போல் சாய்ந்து விழுந்தது.

தன்னில் தான் இல்லாமல், ‘நான்’ இல்லாமல், இறைவனுக்குத் தலைசாய்த்து விட்டான்.

அவனின் கப்பல் மூழ்கி அவ்விடத்தில் கடல் அலையடித்து அசைகிறது.

ராஜாளியின் கால் பிடி நழுவி அதிலிருந்து விழும் இரையைப் போல் அவனின் தேக அவமானம் விழுந்து விட்டது.

அவனுடைய கற்கள் நீர் அருந்துகின்றன. அவனின் களம் தங்க இழை தைத்த பட்டுத்துணி போல் பளபளக்கிறது.

நூறு ஆண்டுகள் செத்துக் கிடந்த ஒருவர் சட்டென்று உயிர்பெற்று வாலிப முறுக்குடன் வருகின்றார்.

முறிந்த கிளையில் முகை அரும்பி முறுவல் செய்கிறது.

இதெல்லாம், அச்சம் கிளப்பிய அந்த அழைப்பிற்குப் பின் நஸூஹின் உள்ளே நடக்கின்றன.
நீண்ட இடைவெளி. மிக நீண்ட மௌனம்.

அப்போது ஒரு பெண் உரத்த குரலில் கத்துகிறாள், ‘இதோ இங்கே இருக்கிறது!”
குளியல் சாலை கைத்தட்டல் ஓசைகளால் நிரம்புகிறது. நஸூஹ் தன் புதிய வாழ்க்கை தன் முன் ஒளிவீசக் காண்கிறான்.

பெண்கள் அவனிடம் (அவளிடம்!) மன்னிப்புக் கேட்கக் கூடுகிறார்கள், “உன் மேல் சந்தேகப் பட்டதற்கு ரொம்ப வருந்துகிறோம். நீ எடுக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியும்.’

எப்படியெல்லாம் அவனைச் சந்தேகப் பட்டுவிட்டோம் என்று பலவாறு பேசி அவனிடம் அவர்கள் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியில் அவன் பேசுகிறான்: ‘நீங்கள் யாரும் நினைத்ததை விடவும், சொன்னதை விடவும் நான் ரொம்பவும் அவமானக்காரன். உலகிலேயே மிகவும் கேவலமானவன் நான்தான். நீங்கள் சொன்னதெல்லாம் நான் செய்ததில் நூறில் ஒரு பங்குதான். என்னிடம் மன்னிப்புக் கேட்காதீர்கள்.

உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது. ஒருவருக்கும் தெரியாது. என் கேவலத்தை அல்லாஹ் மறைத்துவிட்டான். சைத்தான் எனக்குத் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தான். ஆனால் கொஞ்ச காலத்தில் அவை எனக்கு எளிதாகி விட்டன. எந்த அளவுக்கு என்றால், பிறகு நான் சைத்தானுக்குத் தந்திரங்கள் சொல்லித் தந்தேன். அல்லாஹ் நான் செய்வதை எல்லாம் பார்த்தான். ஆனால், பொது இடத்தில் என் பாவங்களை வெளிப்படுத்தவில்லை.

இப்போது நான் மீண்டும் முழுமையில் தைக்கப் பட்டுவிட்டேன்.

நான் செய்தவை இப்போது நான் செய்யாதவை போல.

எந்த அடிபணிவை நான் செய்யாது இருந்தேனோ, அதை இப்போது செய்துவிட்டேன்.

ஒரு சைப்ரஸ் மரம் போல், ஒரு அல்லி மலர் போல், தூய்மையாக, கண்ணியமாக, விடுதலையாக, சட்டென்று இப்போது அப்படி உணர்கிறேன்.

நான் சொன்னேன், “போச்சே! என்னைக் காப்பாற்று.” அந்தப் ‘போச்சே!’ என்னும் கைசேதம் ஒரு கயிறாகி என் கிணற்றுக்குள் இறங்கி வந்தது. அதைப் பிடித்து ஏறி வந்து நான் இப்போது சூரிய ஒளியில் நிற்கிறேன்.

ஒரு கணம், நானொரு குறுகிய நாறுகின்ற சேற்றில் கிடந்தேன். மறுகணம், இந்தப் பிரபஞ்சமும் என்னைக் கொள்ள முடியா விசாலம் ஆனேன்.

என் உடலில் உள்ள ஒவ்வொரு ரோமமும் பேச முடிந்தாலும் நான் என் நன்றியை நவில இயலாது.

இந்த வீதிகளின் தோட்டங்களின் குறுக்கும் மறுக்கும் நின்றுகொண்டு நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம், ‘நான் அறிந்ததை எல்லோரும் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்பது மட்டுமே!”



2 comments:

  1. //அத்தகைய சூஃபியின் பிரார்த்தனை பிறரின் பிரார்த்தனைகளை விட்டும் வேறுபட்டது. அவர் தன் சுயத்தை முற்றிலும் கரைத்துவிட்டவர் ஆவார். தான் ஒன்றுமில்லை என்பதை ஆழமாக உணர்ந்தவராவார். அவரின் பிரார்த்தனை இறைவன் தன்னுடன் தானே உரையாடுவது போன்றது. அது மறுக்கப் படுவதில்லை.//

    மிகப் பெரிய நெருக்கடிகளில் மட்டும் நாம் சுயத்தை இழக்கிறோம், தற்காலிகமாக. அப்பொழுது அங்கு இருப்பது இரண்டல்ல. நடப்பதும் பிரார்த்தனை அல்ல; உரையாடல்.

    ஞானிகள், நிரந்தரமாக சுயத்தைக் கரைத்தவர்கள்; உரையாடிக்கொண்டு இருப்பவர்கள். ‘வேண்டுதல் வேண்டாமை இலானை’ வேண்டுதல் வேண்டாமை அற்றவனே அடைய முடிகிறது. இவர்களுக்குக் கொள்ளுதலும் இல்லை; தள்ளுதலும் இல்லை.

    ReplyDelete
  2. "அவனின் தன்முனைப்பு இடிந்த சுவர் போல் சாய்ந்து விழுந்தது.
    தன்னில் தான் இல்லாமல், ‘நான்’ இல்லாமல், இறைவனுக்குத் தலைசாய்த்து விட்டான்.
    அவனின் கப்பல் மூழ்கி அவ்விடத்தில் கடல் அலையடித்து அசைகிறது."

    இந்த வரிகளில் ஒளிர்வது அத்வைதமல்லவா?
    இறைவா! இஸ்லாத்தை முழுமையாக புரிந்துகொள்ள இந்த ஏழைக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.

    ReplyDelete