அந்திப் பொழுது. அலைகடல் முன் கரையில் தோஸ்த்துடன் அமர்ந்திருந்தேன்.
அலைகள் மீண்டும் மீண்டும் எழுந்து விழுவதும் கரையில் தவழ்ந்துவிட்டுக் கடலுக்குள் மீள்வதுமான
காட்சி சுகமாய் இருந்தது.
”எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கடலின் அலைகள் கரையில்
விளையாடும் காட்சி அலுப்பதே இல்லையே?” என்றேன். தோஸ்த் புன்னகை செய்தார்.
“கடலின் அலைகள் எப்படி உள்ளன? ஒரே மாதிரியா? வெவ்வேறு மாதிரியா?”
என்று கேட்டார்.
“ஒரே மாதிரிதான் உள்ளன. அதே நிறம். ஏறத்தாழ ஒவ்வொரு அலையும்
அதே உயரம். அதே வளை வடிவம். நீரால் ஆன துப்பட்டா போல் விளிம்பில் வெள்ளையாய் நுரை கட்டிக்கொள்ளும்
அலங்காரம். ஒரே மாதிரிதான் அலைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன என்றாலும் அவற்றைப்
பார்த்துக் கொண்டிருப்பதில் சலிக்காத சுவாரஸ்யம் உள்ளது” என்றேன்.
”ஒரே மாதிரி இருக்கும் இந்த அலைகளைப் பார்ப்பதிலேயே மனதிற்கு
இவ்வளவு சுவை இருக்கிறது என்றால், ஒவ்வொரு அலையும் புதுப்புது கோலமாய் வந்தால்? புதிய
புதிய வடிவங்களில், வண்ணங்களில் வந்தால்? அதில் எத்தனை சுவாரஸ்யம் இருக்கும்?” என்று
கேட்டார் தோஸ்த், பேச்சை ஓர் இலக்கை நோக்கிச் செலுத்துபவர் போல.
“சொல்லத் தெரியவில்லை. சுவாரஸ்யம் அதிகமாகத்தான் இருக்கும் என்று
தோன்றுகிறது” என்றேன்.
“ஒரு பலூன்காரன் ஒரே வண்ணத்தில் ஒரே வடிவம் கொண்ட பலூன்களைக்
கொண்டு வந்தால் குழந்தைகள் லேசாகத்தான் சுவாரஸ்யம் அடையும். ஆனால் அவன் பல வண்ணங்களில்
பல வடிவங்களில் பலூன்களைக் கொண்டு வந்தால் குழந்தைகள் அதிகமாகக் குதூகலிப்பார்கள் அல்லவா?
வளர்ந்தவர்களின் மனநிலையும் அப்படித்தான்
இருக்கிறது. விதங்களில் நாம் சுவாரஸ்யம் அடைகின்றோம்.
இந்தப் பிரபஞ்ச தோற்றம், அதில் உள்ள சர்வகோடி சிருஷ்டிகளின்
கோலங்கள் எல்லாம் இறை உள்ளமை என்னும் கடலில் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அலைகள்.
வெவ்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் தோன்றித் தோன்றி மறையும் இந்த அலைகளில் நம் மனங்கள்
சிக்கிக் கொண்டும் சொக்கிக் கொண்டும் சுக துக்கங்களை அனுபவிக்கின்றன. ஆனால் சுவாரஸ்யம்
குறையவே இல்லை. குறிப்பாக, இக்காலம் அலைகள் அபரிதமாகக் கிளம்பி ஆர்ப்பரிக்கும் காலமாக
இருக்கிறது. மனிதனின் சிந்தனை வழியாகவே எத்தனை எத்தனை வகையான அலைகள் பொங்கிப் பாய்ந்து
கொண்டிருக்கின்றன என்பதைப் பார். வீடுகள், வாகனங்கள், ஆடைகள், அணிகள், உணவுகள், வகை
வகையான பொருட்கள்... சுவாரஸ்யத்தைத் தூண்டும் அலைகள்.
அலைகளுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று காணும் ஆர்வம் ஒருபோதும்
எழாத நிலைக்கு இவை மனிதனை வைத்துவிடும் போலும்.
அலைகளில் கடல்தான் இருக்கிறது. ஆனால் அலைகளில் கடலின் ஆழம் இருப்பதில்லை.
ஆழம் அறிய வேண்டும் எனில் அலைகளுக்கு அப்பால் செல்லத்தான் வேண்டும்.
கடற்கரையில் புரளும் அலைகளின் மீது மீனவன் தன் வலைகளை வீசுவதில்லை.
நீ உன் சிந்தனை வலையை படைப்புகள் என்னும் அலைகளுக்கு அப்பால் வீசு.
அலைகளில் விளையாடுவது தீதல்ல. ஆனால் அலைகளில் விளையாடிக்கொண்டு
மட்டுமே காலம் கழிப்பவன் மீனவன் ஆகான்.
அலைகளுக்கு அப்பால் பல ஆபத்துக்கள் காத்துக் கிடக்கின்றன. சுறா
மீனின் தாக்குதலைக் கரையில் அமர்ந்திருப்பவர்கள் அறிவது அரிது. ஆன்மிகத்தின் ஆழங்களுக்கு
நீ செல்லச் செல்ல அதிலிருக்கும் ஆபத்துக்களை அறிவாய்.
சிறந்த மீனவன் சுறா மீன்களையும் பிடித்து விடும் கலையில் தேர்வான்.
அலைகள் ஓயட்டும் கடலுக்குள் செல்கிறேன் என்று ஒரு மீனவன் சொன்னால்
அவன் கடலுக்குச் செல்லும் காலம் வரப்போவதில்லை.
“ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இவ்வுலகில்
நீ ஆகு” (குன் ஃபித்துன்யா கஅன்னக கரீபுன் அவ்
ஆபிருஸ் ஸபீல்; நூல்:புகாரி.) என்பது நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி.
ஓர் இடத்திற்கு வரும் அந்நியனுக்கு அவ்விடத்தில் உள்ள எதுவும்
பரிச்சயமானதாக இருக்காது. அதுபோல் மாறிவரும் உலகக் கோலங்களில் எல்லாம் பரிச்சயப்பட்டுக்
கொண்டிருக்காதே. உன் காலம் வீணாகக் கழிந்துவிடும்.
வழிப்போக்கன் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்குவதில்லை. எப்பொருளையும்
உன் மனம் தங்குமிடமாக எடுத்துக் கொள்ளாதே.
“செவிகளையும் கண்களையும் இறுக்கி மூடு
அப்பால் செல் அப்பால் செல் அப்பால் செல்”
என்கிறார்
மௌலானா ரூமி (ரஹ்)
“எம் பணி
காலையிலும் மாலையிலும்
கடந்து செல்வதே
செல்வது செல்வது
நிரந்தரமாய்ச் செல்வதே”
என்கிறார்
அல்லாமா இக்பால் (ரஹ்)
Alaigalaal eluntha ennangalil ithanai vannangalaaa...? Wonderful...
ReplyDeletePeace to Mowlana and Allaamaa (rahmathullaahi alaihi)