மார்க் பூத் இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே
மனிதனின் பெருமையை விவரித்துச் செல்கிறார்.
”இந்நூல் விவரிக்கும் பிரபஞ்சம் வித்தியாசமானது.
அது மனிதகுலத்தை நினைவில் கொண்டு படைக்கப்பட்டது” என்கிறார் அவர். அதாவது நாம் வாழும்
பிரபஞ்சம் நம்மை இலக்காக வைத்துப் படைக்கப்பட்டது.
“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக
மனுவைப் படைத்தான் தனைவணங்க”
என்கிறார் தக்கலை பீரப்பா அவர்கள்.
இப்பிரபஞ்சம் கடவுளுடைய மனத்தில் இருந்து தோன்றியது என்கிறார்
மார்க் பூத். அதாவது அவர் கருத்துமுதல்வாதக் கொள்கையைத்தான் முன்வைக்கிறார். ”இந்த
’பொருளுக்கு முன் மனம்’ ஆன பிரபஞ்சத்தில் பொருள் என்பது கடவுளின் மனத்திலிருந்து உண்டானது
என்பது மட்டுமல்ல, மனித மனம் சாத்தியமாவதற்கான அனைத்து நிலைகளிலும் அது உண்டாக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் நோக்க மையமே மனித மனம்தான். பிரபஞ்சம் அதை போஷிக்கிறது, அதன் தேவைகள்
நிறைவேறும்படி உள்ளது. கடவுளின் மனம் பொருள்களை எப்படிப் பாதிக்கிறதோ, அதே அளவிற்கு
இல்லை எனினும், அதே வகையில் மனித மனமும் அதனைப் பாதிக்கின்றது” என்று சொல்லும் மார்க்
பூத் தொடரும் பத்திகளில் ஓரிடத்தில் சொல்கிறார்: “மனித மனத்தைப் பாதித்தே தவிர இப்பிரபஞ்சத்தில்
எதுவும் நடப்பதில்லை.”
மேலே சொல்லப்பட்ட கருத்து ஓர் விஷயத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்து
நிற்கிறது. அதுதான் இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கும் தன்னிச்சை. இதனை இஃக்தியார்
என்று சூஃபிகள் சொல்கின்றனர். இறைவனின் மகா அற்புதமாக இதனை நான் உணர்கிறேன். அதன் ரகசியம்
என்ன என்பதை வார்த்தைகள் விவரிக்க முடியாது என்றே நினைக்கிறேன். இறைவனை அன்றி வேறு
யாரும் அந்த இஃக்தியாரை (தன்னிச்சையை) வழங்க இயலாது. இறைவனிடமிருந்து பெற்ற அந்த அதி
அற்புத அருட்கொடையை மனிதன் இன்னொன்றுக்கு வழங்க முடியாது. ஆனால் அதை இன்னொன்றுக்கு
வழங்கிவிட வேண்டும் என்னும் துடிப்பு அவன் உள்ளத்தில் இருக்கிறது. Artificial
Intelligence என்னும் நவீன கணினி அறிவியல் துறை சாதிக்க முயன்று கொண்டிருப்பது அதையே!
அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள உறவும்
உறழ்வும் பற்றி இருபதாம் நூற்றாண்டு கண்ட விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் நிறையவே பேசியிருக்கிறார்கள்.
அவர்களின் அகப்பார்வைகள் தரும் தரிசனங்களின் அடியாக இரண்டையும் இவ்வாறு தொடர்பு படுத்திக்
காணலாம்:
அறிவியலின் களம் புறம்; ஆன்மிகத்தின் களம்
அகம்.
அறிவியல் என்பது பருப்பொருளின் ஆன்மிகம்;
ஆன்மிகம் என்பது ஆன்மாவின் அறிவியல்.
இப்பிரபஞ்சம் குறித்து அறிவியலும் ஆன்மிகமும்
தரும் விளக்கங்கள் பற்றி மார்க் பூத் சொல்கிறார்: “நவீன விஞ்ஞானம் இப்பிரபஞ்சம் எப்படி
இப்போது இருப்பது போல் உள்ளது என்பதை விளக்குகிறது. இந்நூலில் நாம் காணப்போகும் வகையிலான
தொல் தத்துவம் பிரபஞ்சம் பற்றிய நமது அனுபவம் இப்படியாக அமைந்தது எப்படி என்பதை விளக்குகிறது.
விஞ்ஞானத்தைப் பொருத்த வரை விளக்கப்பட வேண்டிய மிகப்பெரிய அற்புதம் இப்பிரபஞ்சமே. ஆன்மிகத்
தத்துவத்திற்கோ மாபெரும் அற்புதம் மனிதப் பிரக்ஞையே” (பக்கம்.42)
அகம் புறம் இரண்டையும் சமன்படுத்தி முன்செல்ல
வேண்டிய கட்டத்தில் மனிதகுலம் இன்றுள்ளது என்பது கண்கூடு. ஆன்மிகம் என்பது உலகைத் துறக்கச்
சொல்லும் எனில் அந்த போதனை இன்று வெற்றி பெறாது என்பது திண்ணம். புறவுலகைக் கண்டு அஞ்சும்
ஆன்மிகம் அல்ல, அதனைத் தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்ட
ஆன்மிகமே இன்று தேவைப்படுகிறது. அறிவியலும் சமய தத்துவங்களை எல்லாம் உதவாக் கற்பனைகள்
என்று சொல்லித் தப்பித்துவிட முடியாது. நவீன அறிவியல் கூற்றுக்களே ஆன்மிக மந்திரங்கள்
போல் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அனைவரும் அறிந்த மிகப் பிரபலமான அறிவியல் சமன்பாடான ஈயீக்வல்டூ
எம்சீஸ்கொயர் என்பதை வேறு கோணத்தில் சொன்னால் பருப்பொருளாய்க் காண்பதெல்லாம் சக்தி
அன்றி வேறில்லை; வார்த்தையே மாம்சமாகியுள்ளது; வானம் பூமியெங்கும் இறையொளியே நிறைந்திருக்கிறது!
விஞ்ஞானமோ மெய்ஞ்ஞானமோ அகமும் புறமும் முழுமையாய்
அறியப்பட வேண்டும் என்னும் பார்வை இன்று உறுதிப்பட்டுள்ளது. எனவே இரகசியமாகச் சொல்லப்பட்டு
வந்த ஆன்மிகச் சிந்தனைகள் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசப்படும் சூழல் உலகில் உருவாகி
உள்ளது. அந்த ரகசியங்கள் பூடகமாகச் சொல்லி வைக்கப்பட்ட புராணங்களும் தொன்மங்களும் மறுவாசிப்புச்
செய்யப்படும் தேவையை நவீன மனிதன் உணர்ந்திருக்கிறான். அது வெறும் கற்பனைக் குப்பைகளின்
மூட்டை அல்ல, தன் முன்னோர் தனக்குத் தந்து சென்றுள்ள புதிரான செல்வம் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான்.
மார்க் பூத் எழுதுகிறார்:
“மனிதப் பிரக்ஞை என்பது ஒருவித பேரற்புதம்.
இன்று நாம் இதனை மேலோட்டமாகக் காணத் தலைப்பட்டுள்ளோம். ஆனால், ஆதிமக்கள் அதன் அற்புதத்
தன்மையால் வியப்படைந்தார்கள். அவர்களின் அறிவுத் தலைவர்கள் மனிதப் பிரக்ஞையில் ஏற்படும்
மிக நுண்ணிய மாற்றத்தைக்கூட, இன்றைய நவீன விஞ்ஞானி தன் புறச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைப்
பதிவு செய்யும் சிரத்தைக்குச் சற்றும் குறையாத சிரத்தையுடன், துல்லியமாக அவர்கள் பதிவுசெய்தார்கள்.
அவர்களின் இந்த வரலாற்றுப் பதிவு – அதன் தொன்மங்கள் மற்றும் அற்புத நிகழ்வுகளுடன்
– மனிதப் பிரக்ஞை எவ்வாறு பரிணமித்தது என்பதன் வரலாறு ஆகும்.” (பக்கம்.42)
பிரபஞ்சம் / உலகம் என்பதற்கு ஆங்கிலத்தில்
Universe என்று பெயரிட்டவன் விவரமுள்ள ஆளாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றைச் சொற்றொடர்
என்று அதற்கு அவன் பெயர் சூட்டியுள்ளான். ஒரு சொற்றொடர் என்பது ஒரு பொருளைத் தருவது.
அந்தப் பொருள் அச்சொற்றொடரின் ஒவ்வொரு வார்த்தையாலும் உருவாகி வருவது. ஆனால் தனித்து
ஏதேனும் ஒரு வார்த்தைக்கு மட்டும் உரியது அல்ல. அச்சொற்றொடரின் ஒவ்வொரு எழுத்துக்கும்
அதில் பங்கு இருக்கிறது.
மேலும் verse என்பது செய்யுளடியைக் குறிக்கும்.
அதாவது அது இலக்கணப்படிச் செய்யப்படுவது, ஏனோ தானோ என்று கிறுக்கப்படுவது அல்ல. அதுபோல்
பிரபஞ்சாதிகளின் அமைப்பில் ஓர் ஒழுங்குமுறை உண்டு.
செய்யுள் வரியைச் செய்தவன் ஒருவன் – புலவன்
கவிஞன் – இருக்க வேண்டும். அவனது எண்ணமே செய்யுள் வரியாகி இருக்கிறது. இப்பிரபஞ்சத்தையும்
செய்தவன் ஒருவன் – இறைவன் – இருக்கிறான். அவனின் எண்ணத்திலிருந்தே அது தோன்றியுள்ளது.
பிரபஞ்சமே ஒற்றைமயமானது – அதாவது ஒரு முழு
உயிரி என்று பார்க்கிறது நவீன நோயட்டிக் விஞ்ஞானம். நம் சூரியக் குடும்பம் அதில் ஓர்
அங்கம் மட்டுமே. சூரியக் குடும்பத்தில் பூமி ஓர் உறுப்பு மட்டுமே.
மனிதனை “சிறிய பிரபஞ்சம்” என்று அழைப்பதுண்டு.
பிரபஞ்சத்தில் உள்ளதெல்லாம் அவனில் உண்டு என்பது கருத்து. ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
உண்டு’ என்பர். இக்கருத்துப்பட ஓரிடத்தில் மார்க் பூத் சொல்கிறார்:
”காட்சியுலகம் (visible world) என்பது மனிதனைப்
உள்வெளியாகப் புரட்டிய அமைப்பில் உள்ள ஒன்றுதான். நுரையீரலும் பறவையும் ஒரே பிரபஞ்ச
சக்தியின் வெவ்வேறு தளங்களிலான வெளிப்பாடுதான். மனித உடலை மேலிருந்து கீழாக நோக்கினால்
அதன் உள்ளுறுப்புக்களின் அமைப்பு சூரியக் குடும்பத்தைப் பிரதிபலிக்கும் என்பது ரகசியப்
பள்ளிகளின் அறிஞர்களுக்கு பொருள்பொதிந்த ஒரு கருத்துத்தான்” (பக்கம்.54)
இப்படிக் கூறும் பூத் இன்னொரு சுவாரஸ்யமான
தகவலையும் சொல்கிறார். முடிந்தால் சரிபார்த்துக் கொள்ளுங்கள்: “மனிதர்கள் நாளொன்றுக்குச்
சராசரியாக 25920 தடவைகள் சுவாசிக்கிறார்கள். அஃது ஒரு ப்ளேட்டோனிக் வருடத்தில் உள்ள
நாட்களாகும். (ஒரு ப்ளேட்டோனின் ஆண்டு என்பது சூரியன் உடுக்கூட்ட – சோடியாக் என்னும்
ராசியமைப்பு – வட்டத்தை ஒரு முறை சுற்றி வருகின்ற காலம்.) சராசரி அல்லது இலட்சிய மனித
ஆயுள் ஆன எழுபத்திரண்டு ஆண்டு என்பதில் உள்ள நாட்களின் எண்ணிக்கையும் அதுவே!” (பக்கம்.56, 57)
மார்க் பூத் ஆரம்பத்திலேயே சொல்வது போல்
இந்த நூல் மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கும் ஒன்றுதான். சரியாகச் சொல்வதெனில் இந்நூல்
முன்வைக்கும் பல சிந்தனைகள் தலைகீழானவை. பொதுவாக மக்கள் மனம் சிந்திக்கும் திசைக்கு
நேரெதிர் திசையில் சிந்தனையைச் செலுத்திப் பார்க்கும் பயிற்சியை வழங்குபவை. (ஐயோ, சிந்திப்பதே
ஒரு கஷ்ட காரியமாக இருக்கும்போது இப்படியெல்லாம் பயிற்சி செய்யச் சொன்னால் நடக்கிற
காரியமா என்று நினைப்பவர்கள் ஜகா வாங்கிவிட வேண்டியதுதான்.)
அவ்வாறு தலைகீழாக ஏன் சிந்திக்க வேண்டும்?
என்பது ஒரு நியாயமான கேள்வி. உலகில் பல அறிஞர்கள் அப்படித் தலைகீழாக சிந்தித்தவர்களே.
அதனால்தான் உலகம் அவர்களைப் பித்தர்கள் என்பது போல் பார்த்தது. Esoteric minds பல நேரங்களில்
Eccentric minds-ஆகப் பார்க்கப்படுவது வரலாற்றில் சகஜமான ஒன்று. “எது வெளிப்படுகிறதோ
அது தெளிவாகத் தெரிவதில்லை; மென்மை வன்மையை வெல்கிறது; வெறுமையாக உள்ளதே அதிகம் பயன்படுகிறது;
எது வளைகிறதோ அது நிமிர்கிறது” (தாவ்தெ ச்சிங் – லாவோசு) என்கிற ரீதியில் பேசுகிற ஒருவனை
சராசரி மனிதர்கள் வேறு எப்படிப் பார்ப்பார்கள் சொல்லுங்கள்?
இன்னமும் அந்தக் கேள்வி எஞ்சி நிற்கிறது.
’பெரீய்ய மண்டைகள்’ எனப்படும் அந்த ஞானிகள் ஏன் அப்படித் தலைகீழாக – அதாவது சராசரி
மனத்திற்கு எதிர் திசையில் – சிந்தித்தார்கள்? ஏனெனில் சராசரி மனிதர்கள் தலைகீழாகச்
சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்! எனவே, நேராகச் சிந்திப்பதற்காக அவர்கள் தலைகீழாகச்
சிந்தித்தார்கள்!
இதற்கு ஓர் உதாரணம். ஒரு மண்டபத்தில் ஆயிரம்
வவ்வால்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தன. அங்கே உள்ளே “Batman” நடந்து வருகிறான்
என்று வைத்துக்கொள்வோம். அவனையும் ஒரு பெரீய்ய வவ்வால் என்றே கருதும் அந்த வவ்வால்கள்
அந்த பெரிய வவ்வாலுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகவே நினைக்கும். ஆனால் அந்த வவ்வால்களின்
உலகில் (மண்டபத்தின் மேற்கூரையில்) ’நுழையும்’ batman அவைகளைப் போலவே தலைகீழாக – அதாவது
அவற்றின் இயல்பில் நேராக – நடந்துகொள்ள (தொங்க) வேண்டியிருக்கும். வேறு வழி இல்லை.
சரி. அந்த வவ்வால்களில் அவை பேட்மேனாகப்
பரிணமிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவற்றை பேட்மேனாக மாற்றுவதற்குத்தான்
அந்த பேட்மேன் அவற்றின் உலகிற்கு வந்திருக்கிறார் எனில் அவற்றுக்கு அவர் தரும் பயிற்சி
என்னவாக இருக்கும்? தலைகீழாக நடப்பதுதான்! அதாவது வவ்வால் உலகிற்குத் தலைகீழாக நடக்கும்போது
அது பேட்மேனின் உலகிற்கு நேரானதாக இருக்கும். ஏனெனில் பேட்மேன் என்பவர் வவ்வால் அல்ல,
அவர் ஒரு மனிதர்.
நம் சூழ்நிலைகள் நம் எண்ணங்களை உருவாக்குகின்றன
என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நம் எண்ணங்களே நம் சூழ்நிலைகளை உருவாக்குகின்றன
என்று ஆன்மிகம் சொல்கிறது.
பொருள் முதலில் இருந்தது; மனம் (எண்ணங்கள்)
அதன் விளைவாக உண்டானவை என்று விஞ்ஞானம் சொல்கிறது.
இறைவனின் எண்ணத்திலிருந்தே பொருள்கள் உண்டாயின
என்கிறது மெய்ஞ்ஞானம்.
மார்க் பூத் சொல்கிறார்: “இன்று நாம் இயல்பாக
மக்கள் சிந்திக்கிறார்கள் (people thinking) என்று காண்கிறோம்; பழங்கால மக்களோ சிந்தனைகள்
மனிதர்களை ஆக்குகின்றன (thoughts peopling) என்று பார்த்தார்கள்” (பக்கம்.57)
சிந்தனைக்குப் பல சவால்களையும் உழைப்பையும்
முன்வைக்கும் இந்த நூலில் ஓரிடத்தில் விஞ்ஞானி நீல்போர் சொன்ன அற்புதமான கருத்தொன்றினை
மேற்கோள் காட்டுகிறார் பூத்: “சரியான கருத்தின் எதிர்க்கருத்து தவறானதாகவே அமையும்.
ஆனால், ஆழமான உண்மையின் எதிர்க்கருத்து இன்னொரு ஆழமான உண்மையாக இருக்கக்கூடும்.”
விஞ்ஞானி ஒருவன் வெளிப்படுத்திய மெய்ஞ்ஞானப்
பார்வை இது!
இனி, இந்நூலிலிருந்து சில பகுதிகளையும் அவை
தொடர்பாக இந்நூலில் சொல்லாமல் விடப்பட்டவை என்று நான் சிந்தித்தவற்றையும் எழுதுகிறேன்.
(தொடரும்)
ஆழமான உண்மையின் எதிர்க்கருத்து இன்னொரு ஆழமான உண்மையாக இருக்கக்கூடும்/// அதிகம் யோசிக்க வைத்த வரி இது.
ReplyDeleteஎனக்கு கூட தோன்றும் எதிர்க்கருத்தின் வெளிச்சத்தில்தான் நம் கருத்தின் முழு பரிமாணமே நமக்கு பார்க்க கிடைக்கும். அப்போது அந்த வெளிச்சம் உண்மைதானே என்று!
வாழ்கையில் வெல்ல ஒரு ரகசிய மந்திரம்!!
ReplyDelete28 நாள் மாயாஜால பயிற்சியினால் புரட்சிகரமான மாறுதல்கள் உங்கள் வாழ்கையில் உருவாகும். அதாவது ஆரோக்கியம், நிதிநிலை, வேலை, உறவு, சின்ன சின்ன ஆசை, மிகப்பெரிய கனவு அத்தனையும் நிறைவேறும்.
http://www.panncom.net/p/4772