Friday, February 8, 2013

கசியும் பானை



ஃப்யூஷன் பாடல் ஒன்று கேட்டேன். அதன் கவித்துவமான வரிகளின் முதற்பகுதி எனக்கு மவ்லானா ரூமியின் கவிதைகளை நியாபகப் படுத்தின.

நான் கேட்ட அந்தப் பாடல் பக்திப் பாடல் அன்று. அது எனக்கு ஆன்மிகக் கவியை நினைவூட்டியது எப்படி என்று வியந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அன்பெனும் ஒற்றை உணர்வின் பல்வேறு பரிமானங்கள் பற்றி ஏதோ ஒரு கட்டுரையில் அப்துல் ரகுமான் எழுதியிருந்ததை அசை போட்டேன். அன்பு இரக்கம் காதல் நேசம் பாசம் இப்படி அதற்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள் என்று வியந்தபின் சொல்லியிருப்பார், ‘காமம் என்பதும் கோரப்பல் முளைத்த காதல்தான்’ என்று.

மொட்டு பூ பிஞ்சு காய் கனி - எல்லாம் ஒரே கொப்பில்தான் அல்லவா?

காய்க்கும் கனிக்கும் இடைப்பட்ட நிலையில் – செங்காய் என்பது காயாகவும் கனியாகவும் சுவைப்பது போல் – அன்பின் நிலைகளிலும் இடைநிலைகள் உண்டு.

அப்படித்தான், நான் கேட்ட அந்தப் பாடலில் காமமும் காதலும் பக்தியும் கலந்திருந்தன.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்கிறார் வள்ளுவர்.

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?” எனக் கேட்பவரும் அவரே.

எல்லைகளைக் கரைத்துக் கொள்ளும் அன்பு அருளாகி விடுகிறது!

எல்லை உள்ளது உருவம். எல்லைகள் கரைந்தால் அருவம்.

எல்லைகள் உள்ளது மனிதக் காதல். எல்லைகள் கரைந்திடின் இறைக்காதல்.

காதலின் தீ எல்லைகளை எரித்துவிடுகிறது.


இறைத்தூதர் யூசுஃப் பேரழகர். அவர்மேல் சுலைகா கொண்ட காதல் அந்தத் தீயாய் இருந்து அவரின் உள்ளத்தை உருக்கிக் கொண்டிருந்ததை மவ்லானா ரூமி தன் மந்திர வரிகளால் கவிதையாக்கித் தருகிறார்கள். கோல்மன் பார்க்ஸ் “The Phrasing Must Change” என்று ஆங்கிலத்தில் தந்த அந்தக் கவிதையை அடியேன் தமிழ் செய்கிறேன்.

“உன் ஆன்மாவைப் பற்றி
அதனை அறிந்தோரிடம் கேள்
அவர்கள் சொல்லும் வார்த்தைகளைச்
சொல்லிக்கொண்டு திரியாதே

கடுகு விதை முதல்
சந்தனக் கட்டை வரை
எல்லாம் தனக்கு யூசுஃபின் பெயராய்
இருக்கச் செய்தாள் சுலைகா

அவர்மீது அத்தனைக் காதல் அவளுக்கு
அவள் மட்டுமே உள்ளர்த்தம் அறிந்த
வெவ்வேறு பேச்சுக்களில்
அவரின் பெயரை மறைத்து வைத்தாள்

’தீயின் அருகில் உருகுகின்றது மெழுகு’
என்றவள் சொல்லும்போது
என் காதல் என்னைக் கேட்கிறது
என்பதை அப்படிச் சொன்னாள்

அல்லது
‘பாருங்கள், மேலே உள்ளது நிலா’ என்றோ
‘மரக்கிளையில் புதிய இலைகள்’ என்றோ
‘கிளைகள் நடுங்கி அசைகின்றன’ என்றோ
‘மல்லி விதைகள் தீப்பிடித்தன’ என்றோ
‘ரோஜாக்கள் திறக்கின்றன’ என்றோ
‘அரசர் இன்று மகிழ்ச்சியாய் இருக்கிறார்’ என்றோ
‘அடடே! அது கொடுத்து வைத்ததல்லவா?’ என்றோ
‘இருக்கைகளைத் துடைக்க வேண்டும்’ என்றோ
‘நீர்ச் சுமப்பவன் வந்திருக்கிறான்’ என்றோ
’கிட்டத்தட்ட நண்பகல்’ என்றோ
‘காய்கள் பக்குவமாய் உள்ளன’ என்றோ
‘ரொட்டிக்கு இன்னும் கொஞ்சம் உப்பு தேவை’ என்றோ
‘மேகங்கள் காற்றுக்கு எதிராய்ப் போவது போலுள்ளது’ என்றோ
’தலைவலிக்கிறது’ என்றோ
‘தலைவலி தேவலம்’ என்றோ
எதை அவள் புகழ்ந்தாலும்
அதில் அவள் சொல்வது யூசுஃபின் உறவு
எதை அவள் இகழ்ந்தாலும்
அதில் அவள் சொல்வது அவரின் பிரிவு

பசியோடு அவள் இருந்தால், அது அவருக்காகவே
தாகமா? அவரின் பெயரே ஷர்பத்.
குளிர், அவரே போர்வை.

அப்படியொரு காதலில் யாரும் இருந்தால்
நண்பன் அவருக்குச் செய்வது இதுதான்

புனிதப் பெயர்களை
மக்கள் அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள்
எனினும், அவர்கள் அதற்கு உழைப்பதில்லை

இறைவனின் பெயர் கொண்டு
ஏசுநாதர் நிகழ்த்திய அற்புதம்...
சுலைகா அதனை
யூசுஃபின் பெயரில் உணர்ந்தாள்

ஒருவர் மற்றொருவரின்
உள் மையத்துடன் இணைந்திருக்கும்போது
அந்த நிலையைப் பேசுவதே
’ஹூ’ என்னும் பெயரை
உச்சரிப்பதாகும்,
தான் அற்று வெறுமையாய்,
காதல் மட்டுமே நிரம்பியதாய்.

’தன்னுள் இருப்பதையே பானை கசிய விடுகிறது’
என்று சொல்கிறது பழமொழி ஒன்று

உறவின் குங்கும இழை, சிரிப்பு
பிரிவின் வெங்காய நெடி, அழுகை

பிறருக்கோ ஆயிரம் வேலைகளும்
அவர்கள் நேசிக்கும் மக்களும் உண்டு.
நம் நண்பனுடன் நண்பனின் வேலை அதுவல்ல”

யூசுஃபின் மீது சுலைகா கொண்டிருந்த காதல் பின்னாளில் இறைவன் மீதான பக்தியாய்க் கனிந்து விட்டது என்னும் குறிப்பொன்றை இமாம் கஸ்ஸாலி எழுதியிருக்கிறார்கள். யூசுஃபில் தெரிந்த அந்த அற்புத அழகிற்கு மூலம் இறைவன்தான் என்பதை அறிந்ததும் அவரின் மனம் அந்த இறைவனின் பக்கம் திரும்பிவிட்டதாம்.

“என் நெஞ்சம் ஐயா,
தீ உண்டிருந்த மெழுகலவோ”
என்கிறார் தாயுமானவர்.

மேற்கண்ட கவிதையின் குரலிலேயே மவ்லானா ரூமி பேசும் இன்னொரு கவிதை, ”WAX” என்னும் தலைப்பில் கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் தந்ததை தமிழ் செய்கிறேன்:

“உன்னையும்
நீ எப்படி இருக்கிறாய் என்பதையும்
நான் பார்க்கும்போது
மற்றதை விட்டும் என் கண்களை மூடுகிறேன்

உன் சுலைமான் முத்திரைக்காக
என் தேகம் முழுவதும் மெழுகாகிறேன்

ஒளி ஆகிவிடக் காத்திருக்கிறேன்

விஷயங்கள் மீதான
கருத்துக்களைக் களைகிறேன்

உன் மூச்சிற்காக
நாணலின் குழலாகிறேன்

என் கைக்குள் இருந்தாய் நீ
நானோ அது கொண்டு
எதையோ தேடித் துழாவியிருந்தேன்

நான் உன் கைக்குள் இருந்தேன்
எனினும், கொஞ்சமே அறிந்தோரிடம்
கேள்விகள் கேட்டிருந்தேன்

என் வீட்டுக்குள் நுழைந்து திருடினேன் எனில்,
என் தோட்டத்தின் காய்கறிகள் பறிக்க
வேலி தாண்டிக் குதித்தேன் எனில்
மிகவும் அசடாக அல்லது போதையில்
அல்லதொரு கிறுக்கனாய்
இருந்திருக்கத்தான் வேண்டும் நான்.
எனினும் இனி அல்ல.
என் ரகசிய சுயத்தைக்
குத்திக்கொண்டும் கிள்ளிக்கொண்டும் இருந்த
அந்த அஞ்ஞான முஷ்டியை விட்டும்
விடுதலை அடைந்துவிட்டேன்.

பிரபஞ்சமும்
விண்மீன்களின் ஒளியும்
என் வழியே வருகின்றன.
உன் திருவிழா வளைவின் மீது
வைக்கப்பட்டுள்ள இளம்பிறை நான்.”

இனி, ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த ஃப்யூஷன் பாடல்:



“ஒரு விஷயம் நீ அறிய விரும்புகிறேன்
இது எப்படி என்று தெரியும் உனக்கு

படிக நிலாவை நான் பார்க்கும்போது,
இலையுதிர் காலத்தின் சிவந்த கிளையை
என் ஜன்னலில் நான் காணும்போது,
சொல்லாமல் தோன்றும் சாம்பலைத்
தீயின் அருகில் நான் தீண்டும்போது,
அல்லது, விறகின் மரத்த தேகத்தை...
ஒவ்வொன்றும்
உன்னிடமே என்னைக் கொண்டு வருகின்றன.
நறுமணங்கள், ஒளி, உலோகங்கள்
இருப்பன எல்லாம்,
எனக்காகக் காத்திருக்கும் உன் தீவு நோக்கி
நீந்திச்செல்லும் சிறிய படகுகள் போல்
ஒவ்வொன்றும்
உன்னிடமே என்னைக் கொண்டு வருகின்றன.

சரி, இப்போது
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை நேசிப்பதை நீ நிறுத்திவிட்டால்
நான் உன்னை நேசிப்பதும்...
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ என்னை மறந்துபோனால்
என்னைத் தேடாதே
நானும் உன்னை மறந்து விட்டிருப்பேன்

என் வாழ்வில் கடந்து செல்லும்
பதாகை படபடக்கும் காற்றுகளை
உன்மத்தம் என்றெண்ணி
என் வேர்கள் பிடித்துள்ள இதயத்தின் கரையில்
என்னை விட்டு நீங்கிச்செல்ல
நீ முடிவெடுத்தாய் எனில்...
நினைவில் வை,
அந்நாளில், அவ்வேளையில்,
நான் என் கரங்களை உயர்த்துவேன்
என் வேர்கள் வேறு நிலம் தேடிப் புறப்படும்.

ஆனால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும்
உன்னை எனக்கென்று உணர்ந்தாய் எனில்,
தீராத இனிமையுடன்
ஒவ்வொரு நாளும் ஒரு மலர்
என்னைத் தேடி உன் உதடுகளுக்கு ஏறிவரும்.
என் காதலே! என்னவனே!
அந்த நெருப்பெல்லாம் மீண்டும் கிளர்கிறது என்னில்
உன் காதலைத் தின்று வளரும் என் காதல்
நேசனே!
நீயிருக்கும் காலமெல்லாம்
உன் கைகளில் இருக்கு அது
என்னை நீங்காமல்”

“உள்ளிருக்கும் ஆன்மா” (The Spirit Within) என்னும் இசைப்பேழைக்கு உருவாக்கி வெளியிடாமல் வைக்கப்பட்ட “Forgotten in the Wonderland” என்னும் மடோனாவின் பாடல் இது.


No comments:

Post a Comment