Wednesday, February 13, 2013

ஒரு ரகசிய நூல் -2


”நிச்சயமாக அல்லாஹ் ஆதமை அவனின் தோற்றத்தில் படைத்தான்” என்னும் ஹதீஸ் வாசகத்திற்கு இருவரின் பக்கமும் எப்பொருளில் சேர்த்து விளங்க வேண்டும் என்பதை இமாம் ஜாஃபருஸ் சாதிக் (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் தெளிவுபடுத்துகிறது : “அந்த உருவம் என்பது தோற்றப்பட்டதும் படைக்கப்பட்டதும் ஆகும். அல்லாஹ் தான் படைத்த அனைத்து உருவங்களிலும் மேலானதாக அதனைத் தேர்ந்தெடுத்து அதைத் தன்னுடன் சார்த்திக் கூறினான், எப்படி அவன் கஃபாவையும் ரூஹையும் (ஆன்மாவையும்) தன்னுடன் சார்த்தி ’என் வீடு’ (2:125, 22:26) என்றும் ’என் உயிரிலிருந்து அவருள் ஊதினேன்’ (15:29, 38:72) என்று சொன்னானோ அது போல.”

”பைத்தீ” – என்வீடு என்று அல்லாஹ் சொல்வதன் பொருள் அந்த வீடு (இறையாலயம்) அவனது உடைமை என்பதுதானே தவிர அவனே வீடாக இருக்கிறான் என்பதல்ல.
“ரூஹீ” - என்னுயிர் என்று அல்லாஹ் சொல்வதன் பொருள் உயிர் (ஆன்மா) அவனது உடைமை (அவனால் படைக்கப்பட்டது) என்பதுதானே தவிர அவனே அந்த ஆன்மா என்பதல்ல.

ஏசுநாதரைச் சிறப்பித்து ‘ரூஹுல்லாஹ்’ – அல்லாஹ்வின் உயிர் என்றும் ‘ஆயத்துல்லாஹ்’ – அல்லாஹ்வின் வார்த்தை (அடையாளம்) என்றும் சொல்லும்போதும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதும் அவனது உடைமையானதுமான உயிர், வார்த்தை (அடையாளம்) என்றுதான் சொல்கிறோம்.

‘நாக்கதல்லாஹி’ – அல்லாஹ்வின் பெண் ஒட்டகை (7:73) என்று சொல்லும்போதும் அந்தப் பெண் ஒட்டகை அல்லாஹ்வின் படைப்பு என்றும் அவனின் உடைமை என்றும்தான் புரிந்துகொள்கிறோம்.

‘நூருல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒளி என்று நபி (ஸல்) அவர்களைச் சொல்லும்போதும் அவர்கள் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒளியாக அவனுடைய உடைமையாக இருக்கிறார்கள் என்னும் பொருளில்தான் சொல்கிறோமே அல்லாமல் அவர்களே அல்லாஹ் என்று தவறாக விளங்கிக் கொள்வதில்லை.

‘சூரத்திஹி’ – அவனின் உருவம் என்று சொல்லும்போது ’ஹி’ என்னும் விகுதியை அல்லாஹ்வின் பக்கம் சார்த்தும்போது அவனால் படைக்கப்பட்டதும் அவனின் உடைமை (ஆஸார்) ஆனதுமான ஆதமின் உருவம் என்றுதான் விளங்கவேண்டுமே அல்லாது அவனின் பண்பாக (சிஃபத்) அதை விளங்கி அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கருதினால் சுத்த வழிகேடாகிவிடும், இணைவைப்பாகிவிடும்.

இறைவனின் படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்தவன் என்பதை மேற்கண்ட விளக்கங்கள் காட்டுகின்றன.

இறைவனின் அழகிய திருநாமங்கள் 99 என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதனடியாகத் திருக்குர்ஆனில் இருந்து அர்ரஹ்மான், அர்ரஹீம் என்று தொடங்கி 99 திருநாமங்கள் பட்டியலிடப்படுவதுண்டு. அதில் அல்லாஹ் என்னும் திருநாமம் இடம்பெறாது. ஏனெனில் இவை 99-ம் இறைவனின் ரட்சகத்தன்மையை (ருபூபிய்யத்) திருப்பண்புகளை (சிஃபாத்) குறிப்பவை. ஆனால் அல்லாஹ் என்பது இறைவனின் சுயத்தை (Being) குறிக்கும் திருநாமம் ஆகும். அவனது அனைத்துப் பண்புகளும் அவனின் சுயத்தில் தரிப்பட்டவை. அவனது சுயத்தை விட்டு அவனின் எப்பண்பும் பிரிந்தது அல்ல.

ஒட்டுமொத்த படைப்பினங்களுள் மனிதனின் நிலை எத்தகையது எனில் 99 திருநாமங்களுடன் ஒப்பிடும்போது அல்லாஹ் என்னும் சுயப்பெயரின் நிலை எவ்வளவு உயர்வானதோ அதைப்போல என்று சூஃபிகள் சொல்கின்றனர். அதாவது இறைவனின் திருப்பண்புகளில் ஒருசிலவற்றுக்கு மட்டுமே கண்ணாடியாக இருந்து பிரதிபலிப்பதாகப் பிற படைப்புக்கள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் இறைவனின் அனைத்துப் பண்புகளும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடியாக மனிதன் இருக்கிறான். அதாவது அல்லாஹ் என்னும் மகத்தான திருநாமத்திற்குரிய (இஸ்முல் அஃழம்) கண்ணாடியாக மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

எல்லா மனிதர்களும் இந்த நிலையிலே இருக்கிறார்கள் என்பது கருத்தல்ல. மனிதன் அந்த நிலைக்கு முன்னேற இயலும் என்பது கருத்து. பொதுவாக, மனிதனை – ஆதம் நபியை – ஃகலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் பிரதிநிதி) என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நிலையே இறைவனின் சுயத்திற்குக் கண்ணாடியாக இருக்கும் நிலை ஆகும். அந்த நிலையில் இருப்பவரை “முழுமையான மனிதன்” (அல்-இன்சானுல் காமில்) என்று அப்துல் கரீம் ஜீலி (ரஹ்) குறிப்பிட்டார்கள்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளின் மீதும் இறைத்திருநாமங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளின் பெயரும் இறைவனின் பெயர்களுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. எனவே அனைத்துப் பெயர்களின் தொகுப்பும் அல்லாஹ் என்னும் மகத்தான பெயருடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லாஹ் என்னும் மகத்தான திருப்பெயரின் ஒளிச்சுடருக்குக் கண்ணாடியாக மனிதன் இருப்பதால் அவனில் அனைத்துப் பொருள்களின் பெயர்களும் அடங்கிவிடுகின்றன.

“மேலும் அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்பித்தான்” (வ அல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா – 2:31)

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஆன்மிகக் கலைச்சொற்களில் ஒன்று ”வஜ்ஹு” (முகம்) என்பது. இறைவனைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இச்சொல்லின் உட்பொருள் இறைவனின் உள்ளமை என்று மார்க்க அறிஞர்களும் ஞானிகளும் சொல்கிறார்கள்.

”அனைத்துப் பொருட்களும் அழிபவையே
அவனின் முகத்தைத் தவிர”
(குல்லு ஷைஇன் ஹாலிக்குன் இல்லா வஜ்ஹஹு – 28:11)
என்னும் திருவசனத்தின் உட்பொருள் “இறைவனின் உள்ளமை மட்டும் அழியாது இருக்கும். அது தன்னில் வெளிப்படுத்திக் காட்டி நிற்கும் படைப்புக்களான வஸ்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்” என்பதாகும்.

இறைவனின் ஞானத்தில் மனிதனுக்குச் சிறப்பானதொரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும், அவன் இறைவனது சுயத்தின் ஒளிச்சுடர்களை (தஜல்லியாத்) பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறான் என்றும் கண்டோம். இதனடிப்படையில் இமாம் பாகிர் (ரஹ்) அவர்கள் ”நாமே இறைவனின் முகம்” (நஹ்னு வஜ்ஹுல்லாஹ்) என்று சொன்னதாக ஒரு குறிப்பு உண்டு.

“அவனைப் போல் எதுவும் இல்லை” (லைச கமித்லிஹி ஷைஉன் 42:11) என்னும் திருவசனத்தை மீண்டும் கவனிப்போம். இதன் மூல வார்த்தைகளை நேரடியாகப் பொருள் கொண்டால் “லைச இல்லை; க போல்; மித்லிஹி –அவனின் உதாரணம்; ஷைஉன் – பொருள்” – என்று பார்த்தால் “அவனின் உதாரணம் போல் எப்பொருளும் இல்லை” என்று வரும். இதனுடன் இன்னுமிரு திருவசனங்கள் தரும் கருத்தையும் ஒப்புநோக்க வேண்டியுள்ளது:
“மேலும் அவனுக்கே உயர்வான உதாரணம் உரியது”
(வலில்லாஹில் மதலுல் அஃலா – 16:60)
“மேலும் வானங்களிலும் பூமியிலும் உயர்வான உதாரணம் அவனுக்கே”
(வலஹுல் மதலுல் அஃலா ஃபிஸ்ஸமாவாத்தி வல் அர்ளி – 30:27)

இவ்வசனங்களின் கருத்து, ”சூரத்திஹி” என்பதற்கு இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் கொடுத்த விளக்கத்தின் போக்கில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதாவது, தான் படைத்த மனித சூரத்தை (உருவத்தை அமைப்பை) அல்லாஹ் அதன் சிறப்பினைப் புலப்படுத்தும் நோக்கில் தன் பக்கம் சாற்றிச் சொன்னது போல் இங்கே ’உயர்வான உதாரணம்’ (மதலுல் அஃலா) என்பதையும் அவன் தன் பக்கம் சார்த்திக் கூறியிருக்கிறான். அந்த உயர்வான உதாரணம் மனிதப் படைப்பே ஆகும்.

No comments:

Post a Comment