Sunday, March 20, 2011

பூர்வீக வீட்டின் கொன்றை மரம்



தாத்தாவோ
அவரின் தந்தையோ
நட்டுவைத்ததாம்
என் மகனின் நாட்களில்
இன்றும் இருக்கும்
இந்தக் கொன்றை மரம்.

பூர்வீக வீட்டின்
வெளிமதிலருகே
நிழல் தரும் எத்தனிப்புடன்
நிற்பதுபோல் நிற்கிறது.

வரிசையாய் அறைகள் கொண்ட
நீள்மனை போல்
விதைகளின் கிலுகிலுப்பையான
கரிய நீண்ட காய்கள்
காணப்படுவதில்லை இப்போதெல்லாம்
மெலிந்துவிட்ட அதன் கைகளில்.

மஞ்சள் பட்டுடுத்திய
புதுமணப் பெண்போல்
நின்ற காலங்கள்
சென்று போயின.

காலத்திற்கு அப்பால் துழாவும் 
வேர்களின் வழியே
உயிரின் அலைகளில் புரண்டு
கிளைகளில் கரையொதுங்கும்
மஞ்சள் சிப்பிகளாய்க்
கொஞ்சமாய்ச் சிரிக்கிறது வசந்தத்தில்
என் பாட்டியைப் போலவே,
பூர்வீக வீட்டில் நிற்கும்
கொன்றை மரம். 

1 comment:

  1. ///மஞ்சள் சிப்பிகளாய்க்
    கொஞ்சமாய்ச் சிரிக்கிறது வசந்தத்தில்
    என் பாட்டியைப் போலவே,
    பூர்வீக வீட்டில் நிற்கும்
    கொன்றை மரம்.///

    இரண்டு தலைமுறையாய் நம்மோடே இருக்கும் மரத்தையும் பாட்டி போன்ற நெருங்கிய உறவினராய் பார்க்க கவிஞனாலேயே முடியும்.

    ReplyDelete