Sunday, September 1, 2019

ஆசறு நல்ல நல்ல


















”சோதிடம் தனை இகழ்” என்கிறார் பாரதியார் (புதிய ஆத்திசூடி).
     
      சோதிடத்தை இகழச் சொன்ன பாரதி நாத்திகர் அல்லர். அவர் ஓர் ஆன்மிகவாதி என்பதை மனம் கொள்க. சோதிடம் ஆன்மிகத்தின் அடையாளம் அன்று.
      
 பாரதி இப்படிச் சொல்லியிருப்பது அவரின் ஆத்மார்த்த சீடர்களுக்கு மிகவும் இடர்ப்பாடுதான். ஏன் அப்படிச் சொன்னார்? என்றொரு கேள்வி எழுப்பிக்கொண்டு, “Astrology is good; Astronomers are bad” என்று அமைதி காண்கிறார் ’சேக்கிழார் அடிப்பொடி’ தி.ந.ராமச்சந்திரன்.

      பாரதி அங்ஙனம் சொல்வதற்கு முன்னோடி ஒருவர் உண்டு. ஞானசம்பந்தர். கோளறு பதிகத்தில் அவர் பாடுகிறார்:

      ”வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
            மிக நல்ல வீணை தடவி
      மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
            உளமே புகுந்த அதனால்
      ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
            சனி பாம்பு இரண்டும் உடனே
      ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
            அடியார் அவர்க்கு மிகவே”

      இப்பாடல் எச்சமயம் சார்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, ‘இறைவன் உன் இதயத்தில் இருந்தால் நாட்கள் எல்லாம் நல்லவையே’ என்பதே இதன் கருத்துச் சுருக்கம். இது மெய்.

      ”இறை நம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் இருக்கை” என்பது நபிமொழி (கல்புல் முஃமினி அர்ஷுல்லாஹ்). அவன் நம் உள்ளிருக்க நாள்கள் எல்லாம் நல்லனவே நமக்கு.

      சோதிடத்தை இறை நம்பிக்கைக்கு, ஆன்மிகத்திற்கு எதிரான ஒன்றாகவே இஸ்லாம் நோக்குகிறது. குறி பார்த்தல் நாற்பது நாட்கள் இயற்றிய தொழுகையின் நற்பலனை நசித்துவிடும் என்பது நபிமொழி (காண்க நூல்: அல்-முஸ்லிம் ஹதீஸ் எண்: 2230).

      ”’இறையருளால் மாமழை பொழிந்தற்று’ என்போன் எனது நம்பிக்கையாளன், விண்மீனின் மறுப்பாளன். அதனெதிர் ‘இன்னின்ன விண்மீனால் மழைத்தது’ என்போன் விண்மீனின் நம்பிக்கையாளன், என்னை மறுத்தோன்.” என்று அல்லாஹ் அருளியதாக நபிகள் நாயகம் (ஸல்) நவின்றதை ஜைதிப்னு ஃகாலித் (ரலி) அறிவிக்கிறார் (நூல்: அல்-புகாரி:810; அல்-முஸ்லிம்:71)

      சரி. சோதிடத்தை இகழும்படி பாரதி சொன்னதை ஏற்று எவரேனும் கவி பாடியிருக்கிறார்களா? நாத்திகர்கள் பாடியிருக்கலாம். ஆன்மிகவாதிகள்?



      














 அண்மையில், தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் இயற்றிய ”தீன்குறள்” நூலினை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன். அதன் எழுபத்தாறாம் அத்தியாயத்திற்கு ”சோதிடம்” என்று தலைப்பு. சகுணம் பார்த்தல், குறி கேட்டல், கோளாறு நோக்கல் ஆகியவற்றை எல்லாம் அதன் பத்துக் குறட்பாக்களில் சாடித் தள்ளியிருந்தார். (குறிப்பு: கோளாறு என்றால் தவறு, பிழை, இடர்ப்பாடு என்று பொருள் கொள்கிறோம். ஆனால், அது அச்சொல்லுக்கான நேரடிப் பொருள் அன்று. அப்பொருட் கோடல் சோதிடம் சார்ந்ததே. கோள்+ஆறு = கோளாறு. ஆறு என்றால் பாதை. கோளாறு என்றால் கோள்கள் நகரும் பாதை. ராகு கேது வியாழன் புதன் போன்ற கோள்கள் இன்னின்ன பாதையில் நடப்பதன் பாதிப்பே இது என்று சொல்வதுதான் கோளாறு என்னும் சொல். அதனைப் பயனபடுத்தல் இஸ்லாமிய இறைக் கொள்கைக்கு ஏற்புடைத்தன்று.)

      அவ்வதிகாரத்தின் இறுதிக்குறளை அடியேன் மிகவும் சுவைத்தேன். கோள், நாள், நலம் ஆகிய மூன்று சொற்கள் அக்குறளில் இடம் பெற்று மேற்சொன்ன சிந்தனைகளை என் மனத்தில் எழுப்பின. இ.ப சொல்கிறார்:

      ”கோளும் குறியும் பாராரை இறைபார்க்கும்
      நாளும் பொழுதும் நலம்” (760).

No comments:

Post a Comment