Sunday, September 8, 2019

நல்லான் தீம்பால் நனி கசிய... - 1.



                கவிக்கோ’ என்று பற்பல தரத்தினர் உணர்ந்தும் உணராதும் ஏத்துமொரு ஆளுமை அப்துல் ரகுமான். தோராயமாக, நாற்பதாண்டு காலப் பரப்பில் பதின்மூன்று கவிதை நூற்களை அளித்தவர் (கவியரங்கக் கவிதைகள் சில தொகுப்புக்களாக வந்துள்ளன. அவை நீங்கலாக இக்கணக்கு).

      ’ஆலாபனை’ என்னும் கவிநூல் தொட்டு அவரெழுதிய பிற்காலத்துக் கவிதை நூற்களும் அக்காலங்களில் வெளிவந்த கட்டுரை நூற்களும் செம்பாகம் மெய்யியல் சார்ந்தன. கனிந்த அகத்தைக் காட்டுவன. அவற்றுள் ஒரு கவிப்பனுவல் “பறவையின் பாதை” என்பது. தமிழில் எழுதப்பட்ட முதல் சூஃபிப் புதுக்கவிதை நூல் என்று இதனைக் கருதலாம் என்கிறார் கவிக்கோ. அத்தொகுதியின் முதற் கவிதை ’கவிக்கோ ஒரு ஞானக் கவி’ என்றுரைக்கப் போதுமான சான்றாகப் பிறங்குகின்றது. அக்கவிதையின் தலைப்பு “மேய்ச்சல்” (30-12-1997; ’பாக்யா’)


      தமிழும் ஆங்கிலமும் வல்லார் ஆகிய பேராசிரியர் முனைவர் அந்தோனி குருசு அவர்கள் அக்கவிதையை “Pasturage” என்னும் தலைப்பில் ஆங்கிலம் ஆக்கி வாசித்துக் காட்டினார் (13-08-2019, செவ்வாய் பிற்பகல், புத்தொளிப் பயிற்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகம்). அக்கவிதைக்கு சூஃபித்துவம் சார்ந்து விளக்கம் நல்கும்படி என்னிடம் கேட்டார். பொழிவின் இடைவேளையில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அவருடன் பேசக் கிடைத்த அவகாசத்தில் அக்கவிதையின் முதலிரு வரிகளுக்கு மட்டும் சுருக்கமாக உட்பொருள் சொல்லி வைத்தேன். ‘அத்தொகுப்பில் உள்ள சிறந்த கவிதை அதுதான்’ என்று என் மதிப்பீடுரைத்து, “அஃதொரு பல்சமயக் குறியீட்டு ஞானக் கவிதை. அதில் சைவ சித்தாந்தம், வைணவம், கிறித்துவம் மற்றும் சூஃபித்துவக் குறியீடுகள் உள” என்று நான் சொன்னதை அவர் வியந்தார். கவிதையின் மூல வரிகளுடன் அன்னாரின் மொழிபெயர்ப்பை முதலில் காண்போம். அதன் விளக்கங்களை அடுத்துக் கூறுவேன்.

      மேய்ச்சல் (Pasturage)

’என்னை மனிதனை விட உயர்த்து’ என்று
இறைவனிடம் கேட்டேன்.
(Lift me up above man
 I asked God)

அவன் என்னைப்
பசுவாக்கினான்.
அவனே என்
மேய்ப்பனும் ஆனான்
(He made me a cow
He himself became my shepherd)

அவன் என்னைக்
காயாத மேய்ச்சல் நிலங்களுக்கு
ஓட்டிச் சென்றான்
(He led me towards
The Un-dried grazing lands)

அவனே எனக்கு
மேயவும், அசை போடவும்
கற்றுக் கொடுத்தான்.
(He himself taught me to graze
And to ruminate)

நான் சூரியனையும்
நட்சத்திரங்களையும்
மேய்ந்தேன்.
சப்தங்களையும் ரசங்களையும்
மேய்ந்தேன்.
வாசனைகளையும் ஸ்பரிசங்களையும்
மேய்ந்தேன்.
(I grazed the suns and stars
Sounds and juices
Fragrant and feelings)

மேய்ந்தவற்றை அசைபோட்டபோதுதான்
புற்கள் பலவகை என்றாலும்
அவற்றின் சாரம் ஒன்றுதான்
என்பதை அறிந்தேன்
(When I started chewing I understood
The grass are many kinds
But the essence is one.)

பிறகு, என் மேய்ப்பன் என்னை
வெட்ட வெளிக்கு ஓட்டிச் சென்றான்
அங்கே ஒரு புல்கூட இல்லை
மேய்ச்சல் நிலங்களிலேயே
அது மேலானதாய் இருந்தது.
(Then, my shepherd
drove me to the open plain.
There was no grass among the grazing land.
That was supreme)

அங்கேதான் நான்
அதிகமாக மேய்ந்தேன்
(There I grazed bountiful)

பசி அதிகரிக்க
என் மேய்ப்பனையே மேய்ந்துவிட்டேன்
(When hunger increased
I grazed the Shepherd himself.)

நான் மேய்ந்ததெல்லாம்
என் ரத்தமானது
என் மடி
ரத்தத்தைப் பாலாக்கியது
(All that I grazed
became my blood.
My udder transformed
Blood into milk)

முட்டிக் குடிப்பவர்களுக்கும்
கறப்பவர்களுக்கும்
என் மடி பால் சுரக்கிறது
(For those who are
butting to drink my udder
the milk springs.)

குடிப்பதற்கோ கறப்பதற்கோ
யாரும் இல்லை என்றாலும்
என் பால், காம்புகளின் வழியே
கசிந்து சிந்துகிறது.
(Though nobody is available
to drink or extract milk
my milk oozes out
through the teat
spilling).

பேராசிரியர் அந்தோனி குருசு அவர்களின் மொழிபெயர்ப்பை இப்போது வாசிக்கும்போது அடியேனுக்கும் இக்கவிதையை ஆங்கிலமாக்க ஆர்வம் எழுகிறது. அவரது மொழிபெயர்ப்பே சால நன்றெனினும் சிற்சில இடங்களில் எனக்குத் தோன்றும் மாற்றுச் சொற்களிட்டு அலங்கரிக்க அவா. முயன்று பார்க்கிறேன்:

’Raise me above man’
Prayed I to God

And He made me a cow.
Himself, my shepherd became He.

He led me towards
never-drying meadows.

To graze and ruminate
Himself, He taught me.

I grazed the sun, the stars,
the sounds, the juices,
the fragrances and the feelings.

Chewing the cud, I understood
that the grasses are many
But the essence is one.

Then my shepherd
drove me to the wilderness.
Not a single grass was there
And it was supreme indeed!

It was there I grazed a lot.

Hunger raised and I
grazed my Shepherd Himself.

All that I grazed
became my blood.

My udder turned
Blood into milk.

For those butting
and for those milking,
my udder springs.

To drink and milk
though none is there
my milk keeps dribbling
through my teats.”

      பேராசிரியர் அந்தோனி குருசு அவர்களின் ஆங்கிலப் பெயர்ப்புக் குறித்தும் அடியேன் அதிற்செய்து கண்ட சில மாற்றங்கள் குறித்தும் சில விளக்கங்கள் புகல்வாம்.

      ”மேய்ச்சல்” என்னும் வினையாலனையும் பெயரினை மேய்ச்சல் நிலம் என்பதற்கான ஆகுபெயராய்ப் பொருட்கொண்டு “Pasturage” என்று நயம்பட மொழி பெயர்த்துள்ளார். அதனை “மேய்தல்” என்று வினையாகக் கொண்டு “Grazing” எனச் சொல்லினும் ஒக்கும். அவ்வார்த்தையைக் கவிதைக்குள் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      ”என்னை மனிதனை விட உயர்த்து” என்னும் தொடக்க வரியை “Lift me up above man” என்று குருசு ஐயா தந்திருப்பதை அடியேன் “Raise me above man” என்று மாற்றிக் கொண்டேன். Above என்னும் சொல் ’மேலே’ / ‘உயரத்தில்’ என்று பொருட்படும் (ஜான் டெய்லர் இயற்றிய “twinkle twinkle little star” என்னும் சிறார் பாடலில் “Up above the world so high” என்னும் அடியைக் காண்க). எனினும், “lift up” என்பது உயர்த்து என்பதோடு “தூக்கு” என்றும் பொருட்படுமால் அதனை மாற்றி “raise up” என்றேன். “Raise” என்னுஞ் சொல் தரும் பொருட் பிரிகைகள் ஆன்மிகம் சார்ந்தன.

      திருக்குர்ஆனில் ஒரு வசனத்தின் பகுதி: “அல்லாஹ் சொன்னபோது, ‘ஏசுவே! நான் உம்மைப் பற்றிக்கொள்வேன், உம்மை எம்பால் உயர்த்துவேன்…’” (இத் காலல்லாஹு யா ஈஸா இன்னீ முதவஃப்பீக்க வ ராஃபிஉக இலய்ய… - 3:55). இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் சஹீஹ் இண்டர்நேஷனல், மௌலானா யூசுஃப் அலி, முஹம்மத் சர்வர், முஹ்சின் கான், ஆர்பெரி ஆகியோர் “raise” என்னும் சொல் இட்டுள்ளனர். ascend, exalt  ஆகிய சொற்களிட்ட பெயர்ப்புக்களும் உள. டாக்டர் முஹம்மது ஜான், மௌலவி அ.கா.அப்துல் ஹமீது பாக்கவி, ஐஎஃப்டி, மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஆகியோர் செய்த தமிழ்ப் பெயர்ப்புக்கள் அனைத்திலும் “உயர்த்துவேன்” என்றே உள்ளது.

      ”என்னை உயர்த்து” என்பதை “exalt me” அல்லது “elevate me” என்றும் பெயர்க்கலாம். ‘raise me’ என்பதில் அச்சொல்லின் அர்த்தத் தொனிப்பும் அடங்கும். இடத்தால் உயர்த்துதல், தகுதியால் உயர்த்துதல் என்னும் இரு பொருளும் அச்சொல்லில் தொனிக்கின்றன.

     


















 சுவாமி விவேகானந்தருக்கு மனக்கினிய வேதாந்தப் பனுவல்களுள் ஒன்றான கதோபனிஷத்தில் நசிகேதனுக்கு யமன் சொல்வதாக ஒரு ஸ்லோகம்: “உத்திஸ்தத ஜாக்ரத வரன்னிபோதத” – “எழுமின் விழிமின் ஞானியரை அணுகி அறிமின்” (1:3:14). இதனை விவேகானந்தர் தனது உரைகள் பலவற்றில் பயன்படுத்தியுள்ளார். ”Arise Awake and stop not till the goal is reached” (“எழுமின் விழிமின் இலக்கை எட்டும்வரை நில்லாது செல்மின்”) என்று அவர் 12, நவம்பர், 1896 அன்று லாகூரில் பேசியது ஸுப்ரசித்தம்.

      மகாகவி இக்பால் இயற்றிய “பாலே ஜிப்ரீல்” என்னும் உருதுக் கவிநூலில் உள்ள 53-ஆம் பாடலின் புகழ் பெற்ற கண்ணி, “ஃகுதி கொ புலந்த் கர் இத்னா” (உன்னையே நீ உயர்த்துக இப்படி...) என்று தொடங்குகிறது “Elevate/ raise yourself so high that even God, before issuing every decree of destiny, should ask you: Tell me, what is your intent?” என்பது முழுக் கண்ணியின் ஆங்கிலப் பெயர்ப்பு. மேஜர் தி.சா.ராஜு அவர்களுக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. அவரது தமிழாக்கம் இது:
      ”தன்னை தவத்தால் வசப்படுத்தி உயர்ந்து நில்
      இறைவன் எதிர்ப்பட்டு உனைக் கேட்பான்
      என்ன ஆணை?”

      மகாகவி இக்பால் இயற்றிய பாரசீகக் காவியங்களுள் ஒன்று “அஸ்ராரே ஃகுதி” (சுயத்தின் ரகசியங்கள்). அதனை, கேம்ப்ரிஜ் ’பல்கலை’யின் பேராசிரியர் ரெனால்டு அல்லைன் நிக்கல்சன் ஆங்கிலம் செய்தார் (“Secrets of the Self”). அதிலொரு வரி: “சா(க்)கியா பர்ஃகீஸ் வ மை தர் ஜாம் குன்” (சகியே! எழு, கோப்பையில் மது வார்ப்பாய்! – O Saki! Arise and pour wine into the cup. ஒப்புமை: “வாடீ, என் கிண்ணம் வழிய மது வார்த்திடுவாய்” – உமர் கய்யாம் ருபாயத் ச.து.சு.யோகியார் மொழிபெயர்ப்பு, பாடல் எண்:7). (குறிப்பு: இது பாவியர் மாந்தும் ஊன மது அன்று, சூஃபியர் அருந்தும் ஞான மது என்று விளங்குக.) 

      அடுத்து, ”அவன் என்னைக் / காயாத மேய்ச்சல் நிலங்களுக்கு / ஓட்டிச் சென்றான்” என்னும் வரி. “He led me towards / the Un-dried grazing lands” என்பர் குருசு. “He led me towards / never-drying meadows” என்பது அடியேனின் பெயர்ப்பு. இதில், “காயாத மேய்ச்சல் நிலம்” என்னும் சொற்றொடர், ஸ்ரீவள்ளி (1945) என்னும் திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய “காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே…” என்னும் பழம்பாடலை நினைவூட்டுகிறது. ”காயாத கானகம்” – காயாத மேய்ச்சல் நிலம். ’Never-drying’ என்று நான் தந்திருக்கும் சொற்றொடருக்கு ஒரு ஒப்பு காட்டுகிறேன். “உலப்பிலா ஆனந்தக் கண்ணீர்” என்று மாணிக்க வாசகர் பாடியிருப்பதை (அன்னே பத்து) பேராசிரியர் ஆதிமுருகவேல் அவர்கள் “never drying tears of joy” என்று பெயர்த்துள்ளார்.

நான் சூரியனையும் / நட்சத்திரங்களையும் / மேய்ந்தேன். / சப்தங்களையும் ரசங்களையும் / மேய்ந்தேன். / வாசனைகளையும் ஸ்பரிசங்களையும் / மேய்ந்தேன். / (I grazed the suns and stars / Sounds and juices / Fragrant and feelings) என்னும் வரிகள் ஐம்புலன் பற்றியன. ‘சூரியனும் நட்சத்திரங்களும்’ மேயப்பட்டது பார்வையால். (கவிக்கோ ஒரு விண்மீன் விரும்பி. அதனாற்றான் சூரியனையும் நிலவையும் என்று சொல்லாமல் நட்சத்திரங்களை இரவின் அடையாளமாக இயம்பியுள்ளார்.) சப்தங்கள் மேயப்பட்டது கேள்வியால். ரசங்கள் மேயப்பட்டது நாவால். ரசம் என்பது இங்கே சுவை /  ருசி என்று பொருட்படும். ரசம் என்பதை “flavor” எனவும் ஆங்கிலப் படுத்தலாம். குருசு “juices” என்று குறிப்பிடுகிறார். அது நயமிக்க சொல்தான். Juice என்பதை ஆங்கிலத்தில் essence என்றும் குறிப்பிடுவர் (நுட்பமான வேறுபாடும் உண்டு). தமிழில் அவை முறையே சாறு என்றும் சாரம் என்றும் சொல்லப்படும். அவற்றின் ஓசை ஒப்புமையை மனம் கொள்க.














‘Juice’ என்னும் சொல் தமிழர் அனைவரும் அறிந்த சொல்தான். ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், தர்பூஸ் ஜூஸ் என்றெல்லாம் கேட்டுத்தானே வாங்கிக் குடிக்கிறார்கள்? அரிய சொல் அன்று. எனினும், அச்சொல் அடியேனின் சிந்தையில் ஒரு விந்தைச் சொல்லாகவே சுடர்கிறது. அப்படிச் சுடரச் செய்தவர் அமெரிக்கக் கவிஞர் கோல்மன் பார்க்ஸ். (ஜியார்ஜியா பல்கலையின் கவிதைத் துறை சார்ந்த மேனாள் பேராசிரியர்). சூஃபி மகாகவி மௌலானா ரூமியின் கவிதைகளை ஏறத்தாழ முப்பது நூற்களாக ஆங்கிலத்தில் பெயர்த்தவர். கவிஞர் என்பதினும் “ரூமி வியாக்யானி” (Rumi interpreter) என்பதாகவே உலகெங்கும் அறியப்படுபவர். ”ஈரான் எனது முதல் தாய்நாடு” என்று சொன்னவர். சூஃபி ஞானி பாவா முஹையுத்தீனின் சீடர். அவரது சொந்தக் கவிதைகளும்கூட நூற்களாக வெளிவந்திருக்கின்றன. அவரது முதல் கவிநூல் 1972-இல் வெளிவந்தது. அதன் தலைப்பு “ஜூஸ்”. எளிய இனிய தலைப்பு. ஆனால், தன்னை வெல்லும் பிறிதோர் சொல் இல்லாச் சொல்.

”ஸ்பரிசங்கள்” என்பதை “feelings” என்று பெயர்த்துளார் குருசு. ஆனால் அது அவ்வளவாகப் பொருந்தவில்லையோ என்று என்னுள் ஒரு நெருடல் எழ வேறு சொல் தேடினேன். ஃபீலிங்ஸ் என்பது உணர்வுகளைக் குறிக்கும். எமோஷன்ஸ் என்பதினும் சற்றே பாந்தமான சொல்தான். எனினும், ஸ்பரிசம் எனும் வடமொழிக் கிளவி தரும் அர்த்தபாவம் அதில் தொனிக்கவில்லை. Feelings என்பதில் உள்ளத்தால் மட்டுமே உணரப்படுவனவும் உண்டு. ஆனால் ஐம்புலன்களைச் செப்பும் இவ்வரியில் ஸ்பரிசம் என்பது தொடுவுணர்வையே குறிக்கிறது. Sense of touch என்னும் விளக்கமான சொற்றொடரைக் குறிக்க ஒற்றைச் சொல் வேண்டும். தொடுவுணர்வில் இன்பமும் துன்பமும் இனியவும் கொடியவும் உள. ஆனால், ஸ்பரிசம் என்பது சுகமான தொடுவுணர்வை மட்டுமே குறிக்கும். “comfort(s)” எனலாமா? அதுவும்தான், ஆனால் அதனினும் இன்னும் விரிவான பொருளுடைத்து. அச்சொல்லும் தோற்கிறது. “தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத் / தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று பாரதி பாடிய கீதம் என் உட்செவியில் இசைக்குது. என்னவொரு சொற்றொடர் இயற்றிவிட்டான்! “தீண்டும் இன்பம்” என்பதைத் தலைப்பாக்கி சுஜாதா புதினம் ஒன்று எழுதினார். கதைப்படி அது, ஒரு பெண்ணின் பார்வையில் காமத்தின் முதல் தொடுகை நல்கும் இன்பத்தையும், பின்னர் அவள் ஈன்ற குழவியின் முதல் தொடுகை தரும் இன்பத்தையும் குறிப்பது. தீண்டும் இன்பம் என்பதைக் குறிக்கும் வடமொழிச் சொல் ஸ்பரிசம். கவிக்கோவுக்கு மிகவும் பிடித்தமான வடமொழிச் சொற்களுள் ஒன்று அது. அதற்கு இணையான தமிழ்ப்பதமும் ஆங்கிலச் சொல்லும் எவை? என் புலமை இங்கே கையற்றுப் புலம்புகிறது. நானென்ன கம்பனா? கவியில் நான் அவனது கட்டுத்தறி கூட அல்லன். (கம்பா! இதற்குத் தமிழ்ச்சொல் யாது? சற்றே என் காதில் நீ ஓது!)

அடுத்து, ”பிறகு, என் மேய்ப்பன் என்னை / வெட்ட வெளிக்கு ஓட்டிச் சென்றான் / அங்கே ஒரு புல்கூட இல்லை / மேய்ச்சல் நிலங்களிலேயே / அது மேலானதாய் இருந்தது.” என்னும் வரிகள். ”Then, my shepherd / drove me to the open plain. / There was no grass among the grazing land. / That was supreme” என்று ஆங்கிலம் செய்திருக்கிறார் குருசு. அடியேன் சில சொற்களை மாற்றி, ”Then my shepherd / drove me to the wilderness. / Not a single grass was there / And it was supreme indeed!” என்று வரைந்தேன். வெட்ட வெளி என்பதைத் திறந்த வெளி என்று தொனித்தால் அது open plain என்பதே சரி. அடியேனின் உள்ளம் சும்மா இருக்காதே? “வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது” என்று இசைஞானி இளையராஜா தன் நூலொன்றுக்கு இட்ட தலைப்பை நினைந்தேன். அது சித்தர்களிடமிருந்து அவர் பெற்றது. சைவ சித்தாந்தத்தில் அம்லபம் என்றும் அம்ப்ரம் என்றும் சொல்லப்படுவது. மன்றம் என்றும் அதற்குப் பெயருண்டு. ’தடுத்தாட்கொண்ட புராணத்தில்’ சிவனைப் ‘பழைய மன்றாடி’ என்கிறார் சேக்கிழார். (இச்சொற்றொடரின் நுட்பங்களை விளக்கி நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவர்களெழுதிய கட்டுரை ஒன்றுண்டு.) பதினெண் சித்தர்களுள் ஒருவர் ‘கடுவெளிச் சித்தர்’. அவர் பெயர் குறிக்கும் கடுவெளியும் அஃதே. புல்கூட இல்லாத வெளி என்றால் அது ’பாழ்வெளி’தான். ஆனால் அஃது, டி.எஸ்.எலியாட்டின் கவிதைத் தலைப்பான “The Waste Land” (பாழ்நிலம்) அன்று. பாழ்படுதல் என்பது ஆங்கிலத்தில் “ruination”. பாழடைந்த மீதங்கள், சிதலங்கள் “ruins” எனப்படும்.

”வெட்ட வெளி” என்பதை நான் “Wilderness” என்று ஆங்கிலம் ஆக்கினேன். சூஃபிக் குறியீட்டுக் கவிதைகளில் அடிக்கடி காணப்படும் ஒரு சொல் அது. அதனை ஃபார்சியில் ’பயாபான்’ என்றும் ”வீரான்” என்றும் அழைப்பர். உருதுவும் இச்சொற்களைக் கையாளும். “வனாந்திரம்” என்னும் மணிப்ரவாளச் சொல் இதனைக் குறிக்கும். உமர் கய்யாமின் பாடல்களை ஃபிட்ஜெரால்டு செய்த ஆங்கில பெயர்ப்பின் வழி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழாக்கினார். அவற்றுள் ஒரு சில பாடல்கள் சீர்த்தி பெற்றன. “வெய்யிற் கேற்ற நிழலுண்டு” எனத்தொடங்கும் பாடல் அவற்றுள் ஒன்று. அதன் பாரசீக மூலத்தின் பின்னிரு அடிகள் இவை: “வாங்கா மனோ தூ நிஷஸ்தா தர் வீரானீ / ஃகுஷ்தர் புவத் அஸ் மம்ல(க்)க(த்)தே சுல்தானீ” ”எழுதி ஏட்டைக் கெடுத்த” எட்வர்டு ஃபிட்ஜெரால்டு இவ்வரிகளை ஆங்கிலத்தில் and Thou / Beside me singing in the Wilderness - /Oh, Wilderness were Paradise enow!என்று வரைந்தார். அதனை அடியொற்றி கவிமணியும் “வையந் தருமிவ் வனமன்றி / வாழும் சொர்க்கம் வேறுண்டோ?” (பாடல் எண்:106) என்று பாடிவிட்டார். “இவைகளோடு நீயும் / பாடிக்கொண்டிருக்க வேண்டும். / வனாந்தரமே / போதுமான நந்தவனமாயிற்றே” (பாடல் எண்: 10) என்பது வ.மி.ஷம்சுத்தீன் மற்றும் வீ.சி.அருளானந்தம் ஆகியோர் செய்த பெயர்ப்பு. (ஒப்புமை: “விண் சொர்க்கமே பொய் பொய் / என் சொர்க்கம் நீ பெண்ணே!” என்று எழுதினார் புலமைப் பித்தன்.) ஆனால், மூலத்தின் சொற்களை நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்தால் And then, that thou and I should sit in the wilderness / Is better than the kingdom of a sultan.என்று வரும். ராபர்ட் கிரேவ்ஸ் மற்றும் இத்ரீஸ் ஷாஹ் ஆகியோர் இவ்வரிகளை Set for us two alone on the wide plain.
No Sultan's bounty could evoke such joy.”  
என்று வழங்குவர். “wilderness” என்பது “wide plain” என்றும் சொல்லப்படலாம். அந்தோனி குருசு அவர்கள் செய்திருக்கும் “open plain” என்பதும் அதுவே.








“Wilderness” என்னும் சொல்லுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு: ”பாலே ஜிப்ரீல்”-இல் (பாடல் 176) மகாகவி இக்பால் பாடும் ஒரு கண்ணி: “பயாபான் கீ ஃகல்வத் ஃகுஷ் ஆ(த்)தீ ஹே முஜ்கோ / அஸல் செ ஹே ஃபித்ரத் மேரீ ராஹ்பானா” (”The solitude of the wilderness pleases me / By nature I was always a hermit”) தமிழாக்கிப் பார்ப்போம்: “வனாந்தரத் தனிமை எனக்கென்றும் இனிமை / ஆதி முதற்றே துறவென் இயல்பு.”

அடுத்த வரி: “அங்கேதான் நான் / அதிகமாக மேய்ந்தேன்.” இதனை குருசு அவர்கள் “There I grazed bountiful” என்று சால நேர்த்தியுடன் ஒற்றை வரியாகப் பெயர்த்துள்ளார். ”It was there I grazed a lot” என்று அடியேன் பெயர்த்திருப்பதன் திறத்தினை விளக்க நாணுகிறேன்.

அடுத்து, ”முட்டிக் குடிப்பவர்களுக்கும் / கறப்பவர்களுக்கும் / என் மடி பால் சுரக்கிறது” என்னும் வரிகள். ”For those who are / butting to drink my udder / the milk springs.” என்பது குருசு அவர்களின் ஆங்கிலம் (”to drink my udder” அல்ல, “to drink from udder” அல்லது “to drink from my udder” என்பதே சரி என்று திருத்தம் உரைத்தார் எனது நண்பரும் ஆங்கிலப் பேராசிரியரும் தமிழ் எழுத்தாளருமான நாகூர் ரூமி அவர்கள்). சுரக்கிறது என்பது ஆங்கிலத்தில் நேரடியாக “secretes” என்றுதான் வரும். அச்சொல் “secret” (ரகசியம்) என்பதுடன் தொடர்புடையது. ரகசியம் என்பது மறைவானது. வேதம் என்பது மறை. உள்ளிருப்பது மறைந்திருக்கும். உள்ளிருந்து சுரந்து வெளிப்படுவதே மறையின் வெளிப்பாடு. இப்படிப் பொருள் நயங்கள் விரியலாம். எனினும், சுரத்தல் என்பதை மேலும் மெருகூட்டும் சொல் ‘பொங்குதல்’ என்பது. “springs” என்னும் சொல் அதனைக் குறிக்கிறது. குருசு அவர்களின் பெயர்ப்பில் “கறப்பவர்கள்” குறிக்கப்படவில்லை. அக்குறை நீக்க அடியேன் அவ்வரிகளை “For those butting / and for those milking, / my udder springs.” என்று மாற்றினேன். ‘milk’ என்பதை ஆங்கிலத்தில் பெயர், வினை (noun, verb) இரண்டாகவும் பயன்படுத்தலாம். காலை நடையின் உரையாடலினூடே ஒருமுறை “Hills milking the sky” என்று நித்ய சைதன்ய யதி சொன்னதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

அடுத்து, ”குடிப்பதற்கோ கறப்பதற்கோ / யாரும் இல்லை என்றாலும் / என் பால், காம்புகளின் வழியே / கசிந்து சிந்துகிறது.” என்னும் வரிகளுக்குக் குருசு அவர்கள் தரும் ஆங்கிலத்தில் உள்ள “available” மற்றும் “extract” ஆகிய சொற்கள் சற்றே அலுவல் தொனி கொண்டிருப்பதாக அடியேனுக்குப் படுகிறது. அன்னனம் தொனிக்காது ஆங்கிலப்படுத்த வேண்டி அச்சொற்களை நீக்கி மாற்றினேன். இஃது மௌலானா ரூமியின் மஸ்னவி ஷரீஃப் பாடல்களுக்கு ரெய்னால்டு நிக்கல்சன் செய்த மரபார்ந்த பெயர்ப்புக்களை கோல்மன் பார்க்ஸ் நெகிழாங்கிலத்தில் மறு ஆக்கம் செய்தற் போலாம்.

(will be concluded in the next part. In Shaa Allah)

No comments:

Post a Comment