Tuesday, August 20, 2019

செம்புலம் பெய்மழை




     





  




 பிள்ளைகளுக்கு அன்பளித்தும் அவர்கள் பரிசுகள் பெற்றும் சேகரமாகியுள்ள நூற்களை அலசிக் கொண்டிருந்தேன். ஓராண்டுக்கு முன் வாங்கிய நூலொன்று கவனத்தை ஈர்த்தது. ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய “பிள்ளைகளுக்கான சிறந்த கதைகள்” (Great Stories for Children). பத்தொன்பது கதைகள் கொண்ட நூல். பிரிட்டிஷ் இணையருக்கு இந்தியாவில் பிறந்து சில ஆண்டுகள் மட்டும் தில்லியிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருந்தாலும் பெரும்பாலும் டார்ஜீலிங், டேராடூன், முசோரி என்று வட இந்திய குறிஞ்சி நிலங்களிலேயே வாழ்வைக் கழித்தவர். எனவே அவரின் கதைகளில் குறிஞ்சித் திணையின் சித்தரிப்புக்கள் நிறைந்துள்ளன.

      ரஸ்கின் பாண்ட் ஒரு சிறார் எழுத்தாளர் என்றே அறியப்படுகிறார் எனினும் அவரது கதைகளை வெறும் சிறாருக்கான எழுத்து என்று மட்டும் வகைப்படுத்திவிட முடியாது. மேற்சொன்ன நூலின் தலைப்பு ‘பிள்ளைகளுக்கான…’ என்றிருப்பினும் அந்நூல் ”இளம் வாசகர்களை ஈடுபடுத்திப் பரவசமூட்டும்” (… will engage and delight all young readers) என்றே பதிப்பகத்தார் பரிந்துரைக்கின்றனர். இளம் வாசகர்கள் என்றால் பதின்பருவத்து பிற்பகுதியைச் சேர்ந்தவர்களா? ஆனால் ரஸ்கின் பாண்டின் கதைகளை இன்ன வயதினருக்கு என்று அப்படி எளிதாக வகைப்படுத்திவிட முடியாது. ஆறு வயதுக்குச் சொல்லும் பாணியிலான கதைக்குள் பதினாறு வயதுக்கான குறிப்புக்களையும் கொடுத்துச் செல்கிறார். சில கதைகள் நாற்பது வயதுக்கும் ஆகிறது!

      நூலினுள் உள்ள கதை ஒன்றின் தலைப்பு பார்வையை நிறுத்தியது: The Coral Tree. இதனைத் தமிழில் திரா மரம் மற்றும் பவள மரம் என்று அழைப்பர். பவழ மல்லி என்பது வேறு. அது பவழ நிறக் காம்பு கொண்ட சின்னஞ் சிறு வெண் மலர்கள் பூக்கும் குறுமரம். அடியேனின் வீட்டுத் தோட்டத்தில் இப்போதுதான் ஒரு செடி வைத்திருக்கிறேன். பால்ய பருவத்தில் எனது தாத்தாவின் வீட்டில் குடியிருந்த ஐயங்கார் குடும்பத்தினர் பூசைக்காக அம்மரமொன்று வளர்த்தனர். அப்போதே அதன் பூக்களின் அழகை ரசித்திருக்கிறேன். (”பவழ மல்லி” என்று அறிஞர் அண்ணா ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்) 


     






 தலைப்பால் ஈர்க்கப்பட்டு கதையை வாசிக்கத் தொடங்கினேன். அதன் தொடக்கத்திலேயே இன்பமும் அதிர்ச்சியும் அடைந்தேன். (கவனிக்க: இன்ப அதிர்ச்சி அல்ல; இன்பமும் அதிர்ச்சியும்.) காரணம்? சொல்கிறேன். கதை ஐந்தே பக்கங்கள்தான். ஆனால் அதன் குறியீட்டுத் தன்மை மூச்சு முட்ட வைத்தது. அது ’பிள்ளை’க் கதையே அல்ல. அத்தனை உளவியல் உள்மடிப்புகள் கொண்டுள்ளது. இலக்கிய முதிர்வு கொண்ட இதயங்களுக்கானது.

      கதையின் நாயகன் தனது தாத்தாவின் பங்களாவை விற்றுவிட்டு இங்கிலாந்துக்குச் செல்கிறான். தன்னை அழைத்துச் செல்ல வரும் குதிரை வண்டிக்காகக் காத்திருக்கிறான். வீட்டின் சமையல்காரியான இளம்பெண் அவன் முன் வந்து நிற்கிறாள். இருவரும் உரையாடுகின்றனர். மீண்டும் அவளை அவ்வூருக்கு வந்து சந்திப்பதாக அவன் உறுதி கூறுகிறான். அவளோ தான் உலகமெல்லாம் சுற்றி வர ஆசைப்படுவதாகச் சொல்கிறாள். அவளுக்கு அப்போது ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறான். அவ்வீட்டின் தோட்டத்தில் பவள மரம் ஒன்று நிற்கிறது. ஓங்கி உயர்ந்த மரம். அதன் பவழ மலர்கள் அவளைக் கவர்கின்றன. ஆனால் அவற்றைப் பறிக்க அவளுக்கு எட்டவில்லை. அப்பூக்களைப் பறித்துத் தருமாறு அவனிடம் கேட்கிறாள். அவன் மரத்தில் ஏறி பூங்கிளைகளை வளைத்தொடித்து அவள் மீது பொழிகிறான். அவற்றை அவள் ஒரு கொத்தாகக் கையில் பிடித்துக்கொள்கிறாள். வண்டி வந்துவிடுகிறது. அவன் செல்கிறான். அவளை நோக்கி கையசைக்கிறான். அவளும் கையசைக்கிறாள். பூங்கொத்திலிருந்து பவழ இதழ்கள் உதிர்கின்றன. அவள் இரட்டை ஜடை போட்டிருக்கிறாள். அதில் ஒளிர் சிவப்பு ரிப்பன் கட்டியிருக்கிறாள். அது அப்போது அவிழ்ந்து அந்த பவழ இதழ்களுடன் விழுந்து கிடக்கிறது. இதுவே அக்கதையின் ஊடுபாவு.

      இதைப் படித்தாலே புரிந்திருக்கும். அவர்கள் காதலர்கள். அவளுக்கோ அவன் எட்டாத் தலைவன். அவளுக்கு எட்டாத அவனை அவனே கொடுத்தால்தான் அவளால் அடைய முடியும். அவன் அவளுக்குத் தன்னைப் பற்றிய நினைவுகளை மட்டுமே கொடுத்துவிட்டுச் செல்கிறான். அந்நினைவுகள் உதிரத் தொடங்குகின்றன. (பவள மலர்களின் குறியீடு). இங்கே, “மீனெறி தூண்டிலார்” என்று பாடலடியாற் பெயர் பெற்ற கவிஞர் எழுதிய குறுந்தொகைப் பாடல் (எண்:54) நினைவு வருகிறது. அப்பாடலில் தலைவனைக் குறிக்கும்போது, “கான யானை கைவிடு பசுங்கழை / மீனெறி தூண்டிலின் நிவக்கும்” என்று தலைவி பாடுகிறாள். அதாவது, அன்பிருந்த காலத்தில் யானை வளைக்கும் மூங்கில் போல என்னிடம் இறங்கி வந்து பழகினான்; அன்பற்ற காலத்தில் மீன் சிக்கியவுடன் தூண்டில் மீண்டும் நிமிர்ந்துவிடுவதைப் போல் பிரிந்து போய்விட்டான்’ என்று குறிப்பு.

      கதையில் மூன்று முறை இடம்பெறும் குறுந்தொகைப் பாடலின் படிமக் குறியீட்டின் நோக்கில் இப்படி நான் அக்கதையின் பிரதியை வாசித்திருக்கிறேன். ஆனால். அவர்கள் காதலர்கள் அல்லர் என்று வாதிடுவதற்கான வசதிகளும் அக்கதையிலுண்டு. அவர்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று சொல்ல இடமிருக்கிறது. அப்படித்தான் பார்க்க விரும்புவோர் அப்படி எடுத்துக்கொள்ளலாம்.

      சரி, இக்கதை எனக்கு இன்பமும் அதிர்ச்சியும் தந்தது என்று சொன்னேனே, அது இதுதானா? இல்லை. அதை இனிமேல்தான் சொல்லப் போகிறேன்.

      அவன் தனது தாதை கட்டிய பங்களாவின் முன்றிலில் (வெராண்டா) படுத்து உறங்கிவிட்டான். அவன் கண்விழித்த போது சாம்பல் நிறமாய் விடிந்திருக்கிறது. அப்போது அவன் மழை வாசத்தை முகர்கிறான். அதை ரஸ்கின் பாண்ட் “Smelt the rain on the red earth” என்று எழுதியுள்ளார். அதை வாசித்தபோது மனம் ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டது. சங்கத் தமிழ்க் கவிதை உலகுக்குத் தந்த அற்புதமான படிமக் குறியீடு அல்லவா அது! அதே குறிஞ்சித் திணை. இயற்றிய கவிஞரின் இயற்பெயர் அறிந்திலம். ‘செம்புலப் பெயல்நீரார்’ என்று பாடலடியால் பெயர் பெற்ற ’யாரோ’ எழுதியதுதான்:

      ”யாயும் ஞாயும் யாரா கியரோ
      எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்          
      யானும் நீயும் எவ்வழி அறிதும்
      செம்புலப் பெயல்நீர் போல
      அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”
      (குறுந்தொகை: 40).

      இக்கவிதையை ஏ.கே.ராமானுஜம் இப்படி ஆங்கிலம் செய்தார்:

What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
Did you and I meet ever?
But in love
our hearts have mingled
as red earth and pouring rain.



     










  செம்புலம் என்று தமிழில் சொல்லப்பட்டிருக்கும் சொல்லின் நயம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாதல் மிகவும் கடினம். செந்நிலம் அல்ல, செம்புலம். இந்த வேறுபாடு என்ன? அதேபோல், செம்புலம் என்பது செம்மையான புலம் என்றும் சிவப்பு நிறப் புலம் என்றும் இரண்டு பொருள்களை அடக்கியுள்ளது. Red earth என்று ஆங்கிலமாக்கும்போது செம்மையான மண் – வளமான மண் என்னும் பொருள் பிடிபடவில்லை. 

      ’செம்புலப் பெயல் நீர்’ - red earth and pouring rain – என்பது தலைவனையும் தலைவியையும் குறிப்பதாக விளக்கம். ’அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்று உள்ளப் புணர்ச்சியை வெளிப்படையாகச் சொல்லிய அதே வேளை அப்படிமக் குறியீடு கொண்டு தமது மெய்யுறு புணர்ச்சியையும் அவள் சொல்லிவிட்டாள் என்று கொள்ளும்போது அக்கவிதையின் நுட்பம் மேலும் கூடுகிறது.

      மழை பெய்கையில் விண்ணின் நீர் மண்ணில் கலக்கிறது; நிலத்தின் மண் விண்ணில் கலப்பதில்லை. ஆண் பெண் உறவின் பின் பெண்ணில் ஏற்படும் பாதிப்பு ஆணுக்கு இல்லை. இது பொய்யும் வழுவும் தோன்றக் காரணமாகிவிட்டது என்பதையும் தொல்காப்பியம் வழி அறிகிறோம். எனவேதான், விரைந்து தலைவியைத் திருமணம் புரியுமாறு தலைவனிடம் தோழி படபடப்புடன் பேசும் பாடல்கள் உள்ளன.

      இந்தப் புரிதலுடன் ரஸ்கின் பாண்ட் எழுதிய கதையைத் தொடர்ந்து வாசிக்கையில் அதன் உள்மடிப்புகள் திறந்து கொடுக்கின்றன. “அவளொரு கருநிறக் குறுமகள். பெரிய கருவிழிகள் கொண்டவள். சடைப் பின்னலை ஒளிர் சிவப்புப் பட்டையால் கட்டியிருக்கிறாள். புதிதாகத் தூய்மையாக இருக்கிறாள், பெய் மழையும் செம்புலமும் போல.” என்று எழுதுகிறார் ரஸ்கின் பாண்ட். இந்த ஓரிடத்தில் மட்டுமல்ல. இதே வரிகளைக் கொண்டுதான் கதையை முடிக்கிறார். எனவே இந்தப் படிமக் குறியீடு இக்கதையின் அடிக்கருத்தைத் தெரிவிப்பது என்று கருதலாம்.


      












  ஏ.கே.ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பை ரஸ்கின் பாண்ட் படித்திருக்க வேண்டும். அதன் தாக்கத்தில்தான் இக்கதையை அவர் எழுதியிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். அல்லது, விக்ரம் சந்திரா என்பார் எழுதி 1995 வெளிவந்த “Red Earth and Pouring Rain” என்னும் ஆங்கில நாவலையாவது அவர் வாசித்திருக்க வேண்டும். அந்த நாவலின் தலைப்பு குறுந்தொகைப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை அந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


      



இங்கே இன்னொரு தகவலையும் மிக மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். Bear’s Den (கரடிக் குகை) என்று லண்டனில் ஒரு நாட்டுப்புற ராக் இசைக் குழு 2012-இல் தொடங்கப்பட்டது. ஆன்றூ டேவி மற்றும் கெவின் ஜோன்ஸ் ஆகியோரைத் தலைப் பாணர்களாகக் கொண்டது. அவர்கள் ஜூலை 2016-இல் வெளியிட்ட “கம்யூனியன்” என்னும் இசைப்பேழையில் ஒரு பாடல்: “Red Earth and Pouring Rain”. அப்பாடலைக் கேட்கக் கேட்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழக மலைத்தொடர்களில் வாழ்வைத் துய்த்து அகம் மலர்ந்த கவிஞரொருவர் எழுதிய சின்னஞ் சிறு கவிதை ஒன்றில் வரும் அடி ஒன்று இருபதாம் நூற்றாண்டில் ஏ.கே.ராமானுஜனின் மொழிபெயர்ப்பு வழி மேற்குலகு மேவி இருபத்தோராம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் இசைக்கலைஞன் ஒருவனுக்குத் தூண்டுதலாய் இருந்து ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நெகிழ்ந்தேன். இதோ அப்பாடலிலிருந்து சில வரிகள்:

Remember what we found love
No one can ever take that away
Remember what we found
In the red Earth and the pouring rain
Don’t you remember love?

                இதை என் அகம் தமிழாக்கிக் கொள்கிறது இப்படி:

      ”யாது நாம் அடைந்தோம்
நினைவு கூர்க சகியே!
செம்புலத்தில் பெய் மழையில்
யாது நாம் அடைந்தோம்
நினைவு செய்!
காதல்
நினைவில்லையோ நினக்கு?”

ரஸ்கின் பாண்டின் ”பவள மரம்” கதையைப் படிக்கையில் குறுந்தொகைப் பாடலொன்றைப் படிப்பது போலவே உணர்ந்தேன். இன்பம் பொங்கிற்று. உலகப் புகழ் பெற்ற படிமக் குறியீடு அது. அதன் மூல முகவரியை ரஸ்கின் சொல்லவே இல்லை என்று காணக் காண அதிர்ச்சியாக இருந்தது.
       

No comments:

Post a Comment