Tuesday, August 6, 2013

நோன்பைத் திறந்து... part-3

நோன்பு நோற்றிருந்த அடியானில் அல்லாஹ் தன் நிலையை (ஹால்) அடியானில் பிரதிபலித்திருந்தான். இஃப்தார் செய்த பின் அந்தப் பிரதிபலிப்பு அடியானிலிருந்து மறைந்து விடுகிறதே தவிர அல்லாஹ்வின் நிலை அவனை விட்டும் எங்கும் நீங்காது, மாறாது. அல்லாஹ்வும் அடியானை விட்டும் நீங்குவதில்லை.

“அவன் உங்களுடன் இருக்கிறான், நீங்கள் எங்கிருந்த போதும்”
(வ ஹுவ மஅகும் அய்ன மா குன்தும் -57:4)

அல்லாஹ்வுக்கு உணவின் தேவை இல்லை. இஃது அவனுடைய சுயத்தின் நிலை ஆதலால் அவனுக்குப் பசியோ தாகமோ இல்லை. ஆனால் அடியானின் ஃபித்ரத் – இயற்கை இயல்பு, உணவின் தேவை உண்டு என்பதுதான். எனவேதான், நோன்பில் அல்லாஹ்வின் ஹால் (நிலை) அடியானில் பிரதிபலித்த போதும் அதன் அஸராத் (விளைவுகள்) அடியானுடைய இயல்புக்கு ஏற்ப உண்டாகி அவனுக்குப் பசியும் தாகமும் மிகைத்து விடுகின்றது.

இந்த இடத்தில், நோன்பு திறந்த பின் – இஃப்தாருக்குப் பின் நபி(ஸல்) அவர்கள் ஓதிய மந்திரத்தைக் கவனியுங்கள்:
“தாகம் போனது (தஹபழ் ழமாஉ)
நாளங்கள் நனைந்தன (வப்தல்லத்தில் உரூக்கு)
நற்கூலி உறுதிப்பட்டது (வ-ஸபத்தில் அஜ்ரு)
அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹு)”
(நூல்: சுனன் அபூதாவூத்: கிதாபுஸ் ஸவ்ம்: 2350; தாருகுத்னி: 25)

உறுதிப்பட்ட அந்த நற்கூலி எது? மறுமையில் இறைவனின் சந்திப்பு (லிகா).

’தாகம் போயிற்று’ என்றுதான் நபி(ஸல்) கூறுகின்றார்கள். நோன்பு போயிற்று என்று அல்ல. அது அடியானுடன் இருக்கும் அல்லாஹ்விடம் நீங்காமல் இருக்கின்றது.

இப்படியாக, நோன்பு சம்மந்தப்பட்ட மூன்று மந்திரங்களுமே ’அபூதாவூத்’ என்னும் ஹதீஸ் கிரந்தத்தில் காணப்படுவதும் எனக்கு வியப்புத் தட்டிற்று. காரணம், நோன்பு என்னும் வணக்கத்திற்கும் நபி தாவூத் (அலை) அவர்களுக்கும் ஆழமான தொடர்பு உண்டு.

வருடம் முழுவதும் நோன்பு வைப்பேன் என்று சொன்ன அபூ சயீதுல் குத்ரீ (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) சொன்ன அறிவுரை: “ஒர் நாள் நோன்பு வைத்து ஒரு நாள் விட்டு விடுக. இதுவே நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு. நோன்புகளில் மிகவும் சிறந்தது இதுவே.” (நூல்: ஸஹீஹுல் புகாரீ: 1840).

நோன்புடன் நபி தாவூத் (அலை) அவர்களுக்குள்ள தொடர்பு இது மட்டும்தானா? நோன்பின் அகமியங்களை விளங்குவதற்கு அன்னாரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதங்களில் ஒன்று இரும்பினைக் கையால் மெழுகைப் போல் இலகுவாக உருக்கிக் கவசங்கள் தயாரித்தார்கள் என்பது.

அல்லாஹ் கூறுகிறான்:
“அவருக்கு நாம் இரும்பை மென்மையாக்கினோம்;
வலிமையான போர்க் கவசங்கள் செய்க
அவற்றின் கண்ணிகளை உறுதியாக்குக”
(வ அலன்னா லஹுல் ஹதீத்;
அனிஃமல் சாபிகாத்தின் வ கத்திர் பிஸ்சர்த் -34:10,11)

அல்லாஹ் கூறுகின்றான் (ஹதீஸ் குத்ஸி): “நோன்பு ஒரு கவசம்” (அஸ்ஸவ்மு ஜுன்னத்)
கவசம் தயாரிக்க நெருப்பு வேண்டுமே? ’ரமலான்’ என்றால் கரிப்பது என்று பொருள். பாவங்களைக் கரிக்கும் நெருப்பு அது.

இரும்பு எது? நம்முடைய ’நான்’ என்னும் தன்முனைப்பு (அனிய்யத்).

ரமலான் என்னும் நெருப்பில் தன்முனைப்பை உருக்கி நோன்பு என்னும் கவசம் செய்க. அதிகாலையில் அந்த நெருப்பில் உன் தன்முனைப்பு உருகத் தொடங்கட்டும். நோன்பு தொடங்கும் முன் உள்ள நேரம் ‘சஹர்’ எனப்படும். ’இரவு விழிப்பு’ என்பது அதன் பொருள். (இதன் உச்சரிப்பு: சீன்-ஹா-ரே)

இன்னொரு சஹர் இருக்கின்றது (உச்சரிப்பு: ஸாத்-ஹா-ரே). இதற்கு இரண்டு அர்த்தங்கள்: உருகுதல் மற்றும் திருமண உறவு.

நோன்பாளியே! நான் என்னும் தன்முனைப்பை ரமலானின் நெருப்பில் உருக்கிவிடு, உன் ரட்சகனின் சந்திப்பிற்காக.

“இரவின் விழிப்பில்
எழுந்த நெருப்பில்
உருகத் தொடங்கியது உள்ளம்
உன்னை அடைவதற்காக”

நோன்பு ஒரு கவசம். இஃப்தார் என்பது நோன்பு திறத்தல். கவசத்தைத் திறத்தல் என்பது கழற்றுதல். அரசன் எப்போது கவசத்தைக் கழற்றுவான்? வெற்றி (ஃபலாஹ், ஃபத்ஹ்) அடைந்ததும் அல்லவா?

அது என்ன போர்? அதன் வெற்றி எது? இந்தத் திருவசனத்தை கவனிக்கவும்:
“எவர் நம்மில் போர் செய்வாரோ
அவரை நம் வழிகளில் செலுத்துவோம்”
(வல்லதீன ஜாஹிதூ ஃபீனா
லனஹ்தியன்னஹும் சுபுலனா -29:69)

’ஜாஹிதூ ஃபீனா’ (நம்மில் போர்செய்வாரோ) என்பதன் கருத்து என்ன? அதன் வெளிப்படையான பொருள் (ழாஹிரி மஃனா) ’நமக்காகப் போர் செய்வாரோ’. அந்தரங்கப் பொருள் (பாத்தினி மஃனா) ‘வல்லதீன ஜாஹிதூ ஃபீ அனா’ – ‘எவர் ’நான்’ என்பதில் போர் செய்வாரோ’ அதாவது, தன்முனைப்புடன் போரிடுவாரோ அவரை இறைவன் தன்னை அடையும் பாதைகளில் அழைத்துச் செல்கிறான். இறைவனை அடைவதற்கான பல வழிமுறைகளை அவர் அறிந்துகொள்வார்.

இரும்பு வாள் கொண்டு செய்யும் போரினை நபி(ஸல்) அவர்கள் சிறிய போர் (ஜிஹாதுல் அஸ்கர்) என்றும் ’நான்’ என்னும் தன்முனைப்புடன் (மனோ இச்சைகளுடன்) செய்யும் போரினைப் ’பெரிய போர்’ (ஜிஹாதுல் அக்பர்) என்றும் குறிப்பிட்டார்கள். (நூல்: பைஹகீ)

சிறிய போர் வெளியில் நிகழ்கிறது. பெரிய போர் உள்ளில் நிகழ்கிறது. எனவே, மேற்காணும் திருவசனத்தின் வெளிப்பொருள் (இபாரத்துன் நஸ்ஸ்) சிறிய போரினையும் உட்பொருள் (இஷாரத்துன் நஸ்ஸ்) பெரிய போரினையும் சுட்டுகின்றன.

நபி தாவூத் (அலை) செய்த ’சிறிய போர்’ ஒன்று தன்முனைப்பை வீழ்த்துவதற்காகச் செய்யப்படும் ஆன்மிகமான பெரிய போருக்கு விளக்கமாக அமைகின்றது. அது, ஜாலூத்தின் (கோலியாத்தின்) படைகளுடன் நபி தாவூத் (அலை) அவர்களின் தலைமையிலான படை போரிட்டு வென்றதாகும். ’ஜாலூத்’ தன்முனைப்பின் குறியீடாவான். அது பற்றி அல்லாஹ் பின்வருமாறு சொல்கிறான்:

“தாவூது ஜாலூத்தைக் கொன்றார்
அல்லாஹ் ஆட்சியையும் ஞானத்தையும் தந்தான்
தான் விரும்பியதை எல்லாம்
அவருக்குக் கற்பித்தான்”
(வ கதல தாவூது ஜாலூத்த
வ ஆதாஹுல்லாஹுல் முல்க வல் ஹிக்மத
வ அல்லமஹு மிம்மா யஷாஉ -2:251)

ஜுன்னத் (கவசம்) என்பதில் உள்ள பேஷ் என்னும் முடிச்சைக் கழற்றினால் அது ஜன்னத் (சொர்க்கம்) ஆகிறது. ஜன்னத்தில் அடியான் அடையும் பேரின்பம் – நோன்பாளியின் இரண்டாம் இன்பம் – அல்லாஹ்வின் சந்திப்பு (லிகா) அல்லவா?

எனவே இஃப்தார் என்பது நோன்பு என்னும் ஜுன்னத்தைத் திறந்து ஜன்னத்தின் இன்பத்தை முன்மாதிரியாக இங்கே ரிஜ்கின் வழியே அடையும் சிறிய ’லிகா’ ஆகும்.

”போரின் முடிவில்
கவசத்தைக் கழற்றினேன்
சொர்க்கத்தில்
உன்னை தரிசிக்க”

நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறைதான் (ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைப்பதுதான்) நோன்புகளில் மிகவும் சிறந்தது என்று நபி(ஸல்) குறிப்பிட்ட ஹதீஸை முன்பு கண்டோம் அல்லவா? இங்கே இன்னொரு விஷயத்தின் பக்கம் கவனம் செலுத்துவோம்.

நோன்பு என்பது படைப்புக்களின் தொடர்பை விட்டும் நீங்கியிருத்தலின் நிலையை நம்மில் ஓரளவு கொண்டுவருவதாக உள்ளது. (உணவு பானம் தாம்பத்யம் ஆகியவற்றை விட்டும் நீங்கி இருப்பது)

’இஃப்தார்’ என்பது படைப்புக்களின் தொடர்பை (உண்ணுதல், குடித்தல், தாம்பத்ய உறவு) மீண்டும் அடியான் அடைந்து கொள்வதாக உள்ளது.

அல்லாஹ் படைப்புக்களை விட்டும் நீங்கித் தன்மயமாக இருக்கும் நிலைக்கு ’ஷஃனே தன்ஸீஹ்’ என்றும் அவன் தன் படைப்புக்களுக்குத் தான் ரட்சகனாய் இருந்து அவற்றில் வெளிப்படும் நிலைக்கு ’ஷஃனே தஷ்பீஹ்’ என்றும் சொல்லப்படும்.

நோன்பு ஷஃனே தன்ஸீஹின் பக்கம் காட்டக்கூடிய குறிப்பாகவும், இஃப்தார் ஷஃனே தஷ்பீஹின் பக்கம் காட்டக்கூடிய குறிப்பாகவும் இருக்கின்றன.

நபி தாவூத் (அலை) அவர்கள் நோன்பைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். நபி முஹம்மத் (ஸல்) அவர்களோ தன்ஸீஹ் தஷ்பீஹ் ஆகிய இரண்டின் பக்கமும் மக்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே, தினமும் நோன்பு நோற்று வந்த அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களை நோக்கிச் சொன்னார்கள், “சில நாட்கள் நோன்பு வையுங்கள், சில நாட்கள் விட்டு விடுங்கள்” (நூல்: புகாரி, முஸ்லிம், நசாயீ, திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியின் இன்பம் நோன்பில் இருப்பதாகச் சொல்லவில்லை, நோன்பின் முடிவில் இஃப்தாரில் இருப்பதாகச் சொன்னார்கள்.
ஷஃனே தன்ஸீஹில் – அல்லாஹ் என்னை விட்டுப் பிரிந்து எனக்கு அப்பால் இருப்பதில் எனக்கு எப்படி இன்பமிருக்க முடியும்?

ஷஃனே தஷ்பீஹில் – அல்லாஹ் என்னுடன் இருப்பதில்தான் என் இன்பம் உள்ளது.
இந்தத் தன்மைகள் நபிமார்களின் பெயர்களிலேயே பிரதிபலிப்பதாக இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் விளக்குகின்றார்கள்:

”தாவூத் என்னும் பெயரில் உள்ள அனைத்து எழுத்துக்களும் (அரபியில்) ஒன்றோடொன்று ஒட்டாமல் பிரிந்து நிற்கின்றன. எனவே அவர்களில் ஷஃனே தன்ஸீஹின் ஞானம் அதிகமாக வெளிப்பட்டிருந்தது. முஹம்மத் என்னும் பெயரில் அனைத்து எழுத்துக்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன. எனவே அவர்களில் ஷஃனே தஷ்பீஹின் ஞானம் அதிகமாக வெளிப்பட்டிருந்தது”

இது இறைவனின் மாபெரும் அருட்கொடை ஆகும். அந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் அகிலத்திற்கெல்லாம் அருட்கொகையாக (ரஹ்மத்தல்லில் ஆலமீன்) இருப்பதன் பொருள் அகிலங்கள் அனைத்தும் அவர்களைக் கொண்டு அல்ல்லாஹ்வுடன் ஷஃனே தஷ்பீஹில் தரிப்பாடாகியுள்ளது.


நாமும் அன்னாரின் ஆன்மிக வழியில் அல்லாஹ்வின் சந்திப்பை அடைவோமாக!

1 comment: