Monday, August 12, 2013

ஏசுவின் பறவைகள்

ஏசுநாதரைப் பற்றி சூஃபிகளிடம் உள்ள கதைகளில் இதுவும் ஒன்று. சூஃபிகளின் நூற்களில் அவரின் பெயர் ’ஈசா’ என்றும் அவரின் புனிதத் தாயாரின் பெயர் ’மர்யம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இனி சூஃபிகள் சொல்லும் கதையைக் கவனிப்போம்.


மர்யமின் மகனான ஈசா சிறுவராக இருந்தபோது ஒருநாள் களிமண்ணில் பறவைகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் செய்தது போல் செய்ய முடியாத மற்ற பிள்ளைகள் ஓடிச் சென்று பெரியவர்களிடம் பல அவதூறுகளைக் கூறினார்கள். அன்றைய தினம் ’சப்பாத்’தாக (வாராந்திரப் பெருநாள். வழிபாட்டுக்கு மட்டுமே உரிய விடுமுறை தினம். யூதர்களுக்கு அது பிரதி சனிக்கிழமை ஆகும்) இருந்தபடியால் பெரியவர்கள் சொன்னார்கள், “இன்றைய தினம் எந்த வேலையும் அனுமதிக்கப் பட்டதல்ல. நாம் அவரைத் தடுக்க வேண்டும்.”

மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார். மக்கள் திரண்டு அங்கே வந்து அவர் செய்த பறவைகள் எங்கே என்று அவரிடம் கேட்டார்கள். சிறிது தூரத்தில் இருந்த பறவைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவை உயிருள்ள பட்சிகளாகப் பறந்து சென்றன.

”பறக்கும் பறவைகளைச் செய்வது இயலாத காரியம். எனவே இது சப்பாத் பெருநாளை முறித்ததாக ஆகாது” என்று ஒரு முதியவர் கூறினார்.

”நான் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வேன்” என்றார் இன்னொருவர்.

”இது ஒரு கலை அல்ல. இது ஏமாற்று வித்தையே அன்றி வேறல்ல” என்றார் இன்னொருவர்.

எனவே சப்பாத் பெருநாளும் முறிக்கப் படவில்லை, அந்தக் கலையும் கற்பிக்கப் படவில்லை. ’ஏமாற்று வித்தை’ என்பதைப் பொருத்த வரை அந்த மக்கள் - சிறியவர்களும் பெரியவர்களும் – தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் பறவைகளை வடிவமைத்து உயிரூட்டுவதின் தாத்பரியம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை.

சனிக்கிழமையில் உலக வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியது ஏன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். எது ஏமாற்று வித்தை எது அல்ல என்பது பற்றி அந்த முதியவர்களுக்கே தெளிவு இல்லை. கலையின் ஆரம்பம் மற்றும் செயலின் முடிவு பற்றிய அறிவு அவர்களிடம் இல்லை. பலகையை நீட்டுவித்தது பற்றிய செய்தியும் இப்படித்தான்.
அந்த நிகழ்வு யாதெனில், மர்யமின் மகனான ஈசா, தச்சரான யூசுஃபின் கடையில் இருந்தார். தேவைப்பட்டதை விடவும் நீளம் குறைவாக இருந்த ஒரு மரப்பலகையைத் தன் கைகளால் அவர் இழுத்தார். அந்தப் பலகை நீளமாகிவிட்டது!

இந்த நிகழ்ச்சி மக்களிடம் பரவிய போது சிலர் சொன்னார்கள், “இது ஓர் அற்புதம். எனவே அந்தப் பையன் ஒரு ஞானியாக இருக்கவேண்டும்”

வேறு சிலர் சொன்னார்கள், “நாங்கள் இந்தக் கட்டுக்கதையை நம்பமாட்டோம். மீண்டும் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்”

இன்னும் சிலர் சொன்னார்கள், “இது உண்மையாக இருக்க முடியாது. எனவே இதையெல்லாம் நூற்களில் எழுதி வைக்காதீர்கள்”

இந்த மூன்று சாராரிடமும் வெவ்வேறு உணர்வுகள் இருந்தாலும் அவர்களில் எவரும் அந்த அற்புதத்தின் சாராம்சத்தை அடைந்துகொள்ளவே இல்லை. “அவர் ஒரு மரப்பலகையை நீளமாக்கினார்” என்னும் வாசகத்தின் உட்பொருள் என்ன என்பதை அவர்கள் விளங்கவே இல்லை.

இந்த எளிமையான சூஃபிக் கதையின் சூக்குமங்களை இனி கவனிப்போம்:

மர்யமின் மகனான ஈசா சிறுவராக இருந்தபோது ஒருநாள் களிமண்ணில் பறவைகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் செய்தது போல் செய்ய முடியாத மற்ற பிள்ளைகள் ஓடிச் சென்று பெரியவர்களிடம் பல அவதூறுகளைக் கூறினார்கள்.

இந்த அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஈசா (அலைஹிஸ்ஸலாம்) நிகழ்த்தியதாகத் திருக்குர்ஆனில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (காண்க: 3:49 மற்றும் 5:110).

விளையாட வேண்டும் என்னும் ஆர்வம் சிறுவர்களுக்கு இருப்பது இயற்கை. அதனால்தான் அறபியில் ஒரு பழமொழி சொல்லப்படுகிறது: அஸ்ஸபிய்யு ஸபிய்யன் லவ்கான நபிய்யன் – இறைத்தூதராகவே இருப்பினும் சிறுவர் சிறுவர்தான். ஆனால் இறைத்தூதரின் விளையாட்டும்கூட இறைவனின் அத்தாட்சி ஆகிவிடுகிறது. அந்நபிய்யு நபிய்யன் லவ்கான ஸபிய்யன் – சிறுவராகவே இருப்பினும் இறைத்தூதர் இறைத்தூதர்தான் (மற்ற பிள்ளைகளைப் போல் அல்ல) என்று சொல்வதுதான் சரி.

அன்றைய தினம் ’சப்பாத்’தாக (வாராந்திரப் பெருநாள். வழிபாட்டுக்கு மட்டுமே உரிய விடுமுறை தினம். யூதர்களுக்கு அது பிரதி சனிக்கிழமை ஆகும்) இருந்தபடியால் பெரியவர்கள் சொன்னார்கள், “இன்றைய தினம் எந்த வேலையும் அனுமதிக்கப் பட்டதல்ல. நாம் அவரைத் தடுக்க வேண்டும்.”

பொது மக்களின் கண்களுக்கு ஆன்மிகம் ஒரு வியாபாரமாகத் தெரிகின்றது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யார்? இறை இல்லத்தை வட்டி வசூலிக்கும் இடமாகவும் சந்தைக் கடையாகவும் மாற்றி வைத்திருந்த யூதர்கள்!

நல்ல பணம் இருப்பதைப் போலவே கள்ளப் பணமும் இருக்கிறது. கள்ளப் பணத்தின் புழக்கம் ஜாஸ்தியாகும் போது நல்ல பணமெல்லாம் கள்ளப்பணமாகவே சந்தேகிக்கப் படுகின்ற நிலை வந்துவிடுகிறது. போலி ஆன்மிகவாதிகள் பெருகிப் போன அந்த யூத சமூகத்தில் ஈசா (அலை) அவர்களையும் மக்கள் ஒரு ஆன்மிக வியாபாரியாகவே எண்ணியதில் ஆச்சரியம் இல்லை.

யூத மனம் வியாபாரத்திலும் வட்டியிலும் ஊறிப்போன ஒன்று. அதனால்தான் அவர்களுக்கு வாரம் ஒரு நாள் வியாபாரமே கூடாது என்ற மாபெரும் சோதனை வைக்கப்பட்டது. அவர்கள் அந்த வியாபார மனநிலை வழியாகவே இறைத்தூதரையும் பார்க்கிறார்கள்.

மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார். மக்கள் திரண்டு அங்கே வந்து அவர் செய்த பறவைகள் எங்கே என்று அவரிடம் கேட்டார்கள். சிறிது தூரத்தில் இருந்த பறவைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவை உயிருள்ள பட்சிகளாகப் பறந்து சென்றன.

குளம் என்பது ஜீவனின் குறியீடு. ’மாவுல் ஹயாத்’ என்னும் ஜீவநீரூற்று கொண்டு மக்களின் இதயங்களை உயிர்ப்பித்தவர் ஈசா (அலை). ஜீவனைக் கொண்டு ஞான ஸ்நானம் தந்தார்கள் என்பதன் கருத்து அதுவே.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களான “அல்-ஹய்யு” (ஜீவனுள்ளவன்) மற்றும் “அல்-முஹ்யு” (ஜீவனளிப்பவன்) ஆகிய இரண்டின் சுடர்கள் ஈசா (அலை) அவர்களில் அபரிதமாக வெளிப்பட்டிருந்தன (ஜுஹூர்). எனவே அவர்களின் அமைப்பிலேயே அல்லாஹ்வின் படைப்பாம்சம் இலங்கிக் கொண்டிருந்தது. திருக்குர்ஆன் அவர்களைச் சிறப்பித்து ரூஹுல்லாஹ் (அல்லாஹ்வின் ஆன்மா) என்றும் கலிமத்துல்லாஹ் (அல்லாஹ்வின் வாக்கு) என்றும் (உடைமைப் பொருளில்) கூறுகின்றது:

”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா
அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார்
அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்;
மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்”
(4:171)

”மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார்.” என்பது அவர்களின் இந்த ஆன்மிகத் தன்மையைக் குறிப்பதாகும். ஏனெனில் நீர் என்பது உயிரூட்டலின் குறியீடாகும்:

”உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே வெளியாக்கினோம்” (21:30)

கதையைத் தொடர்ந்து பார்ப்போம்:

”பறக்கும் பறவைகளைச் செய்வது இயலாத காரியம். எனவே இது சப்பாத் பெருநாளை முறித்ததாக ஆகாது” என்று ஒரு முதியவர் கூறினார்.

சடங்குகளின் பிடியில் உறைந்து போய்விட்ட மனநிலை இது. கண் முன்னால் நடக்கும் அற்புதம் அந்த உள்ளத்தில் உணரப்படவே இல்லை. அவருடைய கவலை எல்லாம் கட்டிக் காக்கப்பட்டு வந்த மரபு உடைந்துவிடக் கூடாது என்பதுதான். மார்க்கத்தைப் பின்பற்றுவோருள் பெரும்பான்மையானோரின் மனநிலை இதுவே.

”நான் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வேன்” என்றார் இன்னொருவர்.

ஆன்மிகத்தைப் பற்றிய தவறான புரிதல் கொண்ட ஒருவரின் பார்வை இது. ஆன்மிகம் என்பது ஒரு கலை அல்ல. ஆன்மிகத்தில் கலை ஓர் அம்சமாக இருக்கலாம். அல்லது கலையின் அம்சங்கள் ஆன்மிகத்தில் இருக்கலாம். ஆனால் அது வெறும் கலையாக மட்டும் சுருங்கிவிட்டால் ஆன்மிகமாக இருக்காது.

இதைச் சொன்னவர் ஏற்கனவே ஒரு கலைஞராக இருக்கவேண்டும். இசை, சிற்பம், ஓவியம் போன்ற ஏதேனும் ஒரு கலையில் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொள்வது போல், நடனம் ஆடுவதற்குக் கற்றுக் கொள்வது போல் ஆன்மிகத்தையும் கற்றுக்கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். ஆன்மிகம் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் மாற்றி அமைப்பதை வேண்டி நிற்கிறது. அதை ஒருவர் பகுதி நேரப் பயிற்சியாகக் கற்றுக் கொள்ள இயலாது. கலைக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இது. கலை முழுமை கொள்ளும்போது ஆன்மிகமாகப் பரிணமிக்க முடியும். ஆனால் ஆன்மிகம் கலையாக மட்டும் ஜீவிக்க முடியாது.

”இது ஒரு கலை அல்ல. இது ஏமாற்று வித்தையே அன்றி வேறல்ல” என்றார் இன்னொருவர்.

மூன்றாவது வகையான மனநிலை இங்கே வெளிப்படுகின்றது.

மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது இங்கே அவசியம். மூளை வலது இடது என்று இரண்டு பாகங்களாக உள்ளன. Right and Left Hemispheres. வலது பக்க மூளை உணர்ச்சிகளின் செயல்பாடுகள் கொண்டது. கற்பனை உள்ளுணர்வு போன்றவை அதன் இயக்கம். அது கலைப்பகுதி. இடது பக்க மூளை தர்க்கம் பகுத்தறிவு கணிதம் போன்ற செயல்பாடுகள் கொண்டது.

முதியவரின் பேச்சில் வெளிப்பட்டது முற்றிலும் உறைந்து போய்விட்ட மனநிலை. அதில் கலையுணர்வும் இல்லை, பகுத்தறிவும் இல்லை.

கலைஞனின் பேச்சில் வெளிப்பட்டது வலதுபக்க மூளையின் செயல்பாடு. அதன் பார்வையில் ஆன்மிகம் ஓர் அழகியல் மட்டுமே.

இப்போது பேசுவது இடதுபக்க மூளை. அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும் முட்டாள்களின் தர்க்கவியலும் பகுத்தறிவும் கொண்ட அணுகுமுறை. அது சொல்கிறது, ‘இது ஒரு கலை அல்ல’. உண்மைதான்! ஆனால், ஆன்மிக விஷயங்களில் பகுத்தறிவு அரை உண்மையைத்தான் பேசும். லா இலாஹ – ’கடவுள் இல்லை’ என்பது அரை மந்திரம்தானே? அதன் மீதிப்பகுதியான இல்லல்லாஹ் – ’அல்லாஹ்வை அன்றி’ என்பதற்கு அது வந்து சேராது. எனவே, அற்புதத்தை அது வெறும் ஏமாற்று வித்தையாகவே காண்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நிலவைப் பிளந்து காட்டினார்கள். அந்த பேரற்புதம் சில மனிதர்களுக்கு வெறும் சூனியமாகவே பட்டது. அவர்கள் நபியை நிராகரித்துவிட்டுப் போனார்கள்.

எனவே சப்பாத் பெருநாளும் முறிக்கப் படவில்லை, அந்தக் கலையும் கற்பிக்கப் படவில்லை. ’ஏமாற்று வித்தை’ என்பதைப் பொருத்த வரை அந்த மக்கள் - சிறியவர்களும் பெரியவர்களும் – தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் பறவைகளை வடிவமைத்து உயிரூட்டுவதின் தாத்பரியம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை.
சனிக்கிழமையில் உலக வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியது ஏன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

வாராந்திரப் பெருநாள் என்பது தன் உயிர்த்தன்மையை இழந்துவிட்டது. அது ஓர் உறைந்த பிணம் போல் ஆகிவிட்டது. ’அன்ஃபாஸே ஈசா’ அதாவது ஈசா நபியைப் போன்ற ஓர் ஆன்மிக வாதியின் மூச்சுத்தான் அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும். அவர்கள்தான் முஹய்யுத்தீன் – சன்மார்க்கத்திற்கு உயிரூட்டுபவர்கள். ஆனால் மக்கள் அத்தகைய ஆன்மிக வாதிகளை நிராகரித்து விடுகிறார்கள். தங்கள் பிணத்திற்கு – உயிரற்ற சடங்குகளுக்கு ஆடை அலங்காரம் செய்து அத்தர் பூசி அழகு பார்த்து மகிழ்கிறார்கள்.
மனம் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து விடுகிறது. தாளெடுத்து பேனாவால் எழுதிக் கணக்கு வழக்கு பார்த்தால்தானே அது கூடாத காரியம்? மனக்கணக்கு போட்டுப் பார்த்தால் ஆயிற்று. இப்படியாக இறைவனின் தியானத்தில் மூழ்க வேண்டிய மனம் அன்று உலக விஷயங்களில் இரட்டிப்பு வேலை செய்கிறது! அல்லது வெட்டிப் பொழுது போக்குகளில் மூழ்கிவிடுகிறது. ஆன்மிகப் பிரசங்கம் (ஃகுத்பா) ஒன்றேகால் மணிக்கு என்றால் 1:14:55 வரை உலகக் காரியங்களில், வியாபாரத் தந்திரங்களில் ஈடுபடுகின்றது.

ஆன்மிகம் காதலைப் போல் என்பதும் தொழுகை அதன் தாம்பத்யம் என்பதையும் மனிதர்கள் விளங்கவில்லை. ‘விலங்குகளைப் போல் மனைவியின் மேல் விழாதீர்கள். வீடு கூடும் முன் அவளுக்குத் தூது அனுப்புங்கள். அதுதான் முத்தங்கள்’ என்பது ஒரு நபிமொழியின் கருத்து. பலரின் ஆன்மிக வாழ்வில் Foreplay என்பதையே காணவில்லை!

எது ஏமாற்று வித்தை எது அல்ல என்பது பற்றி அந்த முதியவர்களுக்கே தெளிவு இல்லை. கலையின் ஆரம்பம் மற்றும் செயலின் முடிவு பற்றிய அறிவு அவர்களிடம் இல்லை.

இறைத்தூதர்களின் அற்புதங்களும் கண்கட்டி வித்தைகளான சூனியங்களும் வெளிப்படையில் ஒன்று போலவே காட்சி தரக்கூடும். அதன் அகமியத்தைத் தரிசிக்கும் ஆற்றப் அகக்கண் திறந்தவர்களுக்கே சாத்தியம். இதைத் திருக்குர்ஆன் நபி மூசா (அலை) அவர்களின் கைத்தடி (அஸா) நிகழ்ச்சியை வைத்து விளக்குகின்றது.

ஃபிர்அவ்னுடைய சபையின் மாந்திரீகவாதிகள் தங்கள் கைத்தடிகளைக் கீழே போட்டார்கள். அவை குட்டிப் பாம்புகளாகி நெளிந்தன. மூசா (அலை) அவர்களும் தன் கைத்தடியைக் கீழே போட்டார்கள். அதுவும் ஒரு பெரிய பாம்பானது. (மாறாக அது ஒரு கீரிப்பிள்ளை ஆகவில்லை.) அது அந்தக் குட்டிப் பாம்புகளை எல்லாம் விழுங்கி விட்டது. பிறகு மீண்டும் கைத்தடியாகி விட்டது. ’அஸா’தாரணமான அற்புதம்!

ஒரே செயலாக இருந்தாலும் மாந்திரீகவாதிகள் செய்தது சிஹ்ரு (மாயவித்தை, மேஜிக்) என்றும் மூசா (அலை) செய்தது இறையற்புதம் (முஃஜிஸா) என்றும் திருமறை தீர்ப்பளிக்கின்றது.

மக்கள் புறக்கண்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் அகக்கண்களோ குருடாகிக் கிடக்கின்றன. எனவே உண்மைக்கும் பொய்க்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரிவதில்லை. கவர்ச்சியான போலிகளிடம் கவிழ்ந்து விடுகிறார்கள்.

உண்மையான ஏகத்துவம் (தவ்ஹீத்) எது, போலித் தவ்ஹீத் எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

உள்ளமையின் கவனிப்பில் (இஃதிபாரெ உஜூத்) ஏகத்துவம் (தவ்ஹீத்) எது ஷிர்க் (இணைவைப்பு) எது என்பதிலும் அவர்களுக்குத் தெளிவு இல்லை. இதை அதுவாகவும் அதை இதுவாகவும் விளங்கி வழிகேட்டில் போய்விடுகிறார்கள்.

அத்தகையவர்கள்தான் இறைநேசர்களின் அற்புதச் செயல்களை (கராமாத்) நிராகரிக்கின்றார்கள். அது சாத்தியமே இல்லை என்று புத்தி பேதலித்துப் பிதற்றுகின்றார்கள். என்ன செய்வது, காய்ச்சலில் நாக்குக் கசந்து போனவனுக்கு டர்கிஷ் டிலைட், பஃக்லாவா, குலாப் ஜாமூன் என்று எதைக் கொடுத்தாலும் அவனுக்கு ’உவ்வே’ என்று குமட்டிக் கொண்டுதானே வரும்?

உண்மையில் ’முஃஜிஸா’ என்பது தாய் என்றால் கராமத் என்பது அதன் குழந்தை. ’மார்க்க அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள்’ (அல்-உலமாஉ வரஸத்துல் அன்பியா) என்றார்கள் நபி (ஸல்). தாயின் ஜாடையும் பண்பும் குழந்தையிடம் இருக்கத்தானே வேண்டும்?

ஈசா (அலை) அவர்கள் இறந்தவரை உயிர்த்தெழ வைத்தார்கள் என்பது முஃஜிஸா. அதே அற்புதத்தை முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் நிகழ்த்தினார்கள் என்பது கராமத்.

முஃஜிஸாக்களை ஒப்புக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகின்ற பேர்வழிகள் கராமாத்துக்களை நிராகரித்துப் பேசுவது விசித்திரமாக இருக்கின்றது. ’அல்ஜீப்ரா கணக்குப் புரிகின்றது அரித்மெட்டிக்தான் புரியவே இல்லை’ என்று ஒருவன் சொன்னால் எப்படி இருக்கும்? அவனுக்கு அல்ஜீப்ராவும் புரியவில்லை என்பதற்கு அது ஆதாரமாகும்.

கராமாத்துக்களை ஒருவனால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றால் அவனுக்கு முஃஜிஸாத்துக்களும் நிச்சயமாக விளங்காது. வஹீ மற்றும் இல்ஹாம் பற்றிய நிலையும் இப்படித்தான். வலிமார்களான இறைநேசர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் இல்ஹாம் பற்றிய புரிதல் இல்லாதவனால் ஒருபோதும் நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து வரும் வஹீ பற்றியும் புரிந்துகொள்ள முடியாது.

பலகையை நீட்டுவித்தது பற்றிய செய்தியும் இப்படித்தான்.
அந்த நிகழ்வு யாதெனில், மர்யமின் மகனான ஈசா, தச்சரான யூசுஃபின் கடையில் இருந்தார். தேவைப்பட்டதை விடவும் நீளம் குறைவாக இருந்த ஒரு மரப்பலகையைத் தன் கைகளால் அவர் இழுத்தார். அந்தப் பலகை நீளமாகிவிட்டது!

ஒரு செடி பல வருடங்களில் பெரிய மரமாக வளர்கிறது. ஒரு கன்றுக்குட்டி சில வருடங்களில் பெரிய பசுவாகிறது. குழந்தை வளர்ந்து வாலிபத்தை அடைகிறது. அந்த பௌதிக வளர்ச்சி எங்கிருந்து வருகின்றது. ஆகாரம் தண்ணீர் என்று பல இடைக் காரணங்கள் நம் அகக் கண்களை மறைக்கின்றன. ஒன்று மற்றொன்றாக எப்படி மாறுகின்றது. அது இறைவனின் ஞானத்தில் அவனின் கற்பனையில் எப்படிப் பார்க்கப் படுகின்றதோ அப்படி ஆகின்றது.

ஈசா (அலை) அவர்களின் கைகள் அங்கே இறையாற்றலின் கருவிகளாக இருந்தன. இறைநேசரின் விவரிப்பில் அல்லாஹ் சொல்கிறான் “அவரின் கையாக நான் ஆகிவிடுகிறேன். அதைக் கொண்டு அவர் பற்றுகிறார்” (ஹதீஸ் குத்ஸி. நூல்: புகாரி). அப்படிப்பட்ட கையின் வழியே அமானுஷ்யமான செயல்கள் நிகழ்வதில் தடை என்ன?
தாவூத் நபியின் குளுமையான கையின் தீண்டலில் இரும்பு மெழுகைப் போல் இளகிவிட்டதே!

நபி (ஸல்) அவர்களின் கைகளை அல்லாஹ் தன் கைகள் என்று சொன்னதன் அடிப்படையும் இதுதான்: “(நபியே! எதிரிகள் மீது பொடிக் கற்களை) நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை. ஆனால் அல்லாஹ்தான் எறிந்தான்” (8:17)

வெளிப்பார்வைக்கு அது நபியின் செயல். எதார்த்தத்தில் (ஹகீகத்தில்) அது அல்லாஹ்வின் செயல்தான்.

படைப்புக்களின் சுயங்கள் (ஜவாத்) அவனுடைய உள்ளமையில் (உஜூத்) அவனால் வெளிப்படுத்திக் காட்டப்படுபவையே. அதை அவன் எப்படி நாடுகின்றானோ அப்படி வெளிப்படுத்துவான். அந்த வெளிப்பாடு கால தேச பரிமானங்களில் ஒரு முறைப்படி வெளிப்படுத்தப் படுகின்றன என்றாலும் அந்தப் பரிமானங்களுக்கு இறைவனின் கற்பனை கட்டுப்பட்டதல்ல. ஏனெனில் அந்தப் பரிமானங்களே அவனின் அறிவில் (இல்ம்) அறியப்பட்டவையாக (மஃலூம்) உள்ளவைதான்.

எனவே, ஒரு கைத்தடி ஒரு நொடியில் பாம்பாக மாறிவிடுவது அசாத்தியம் அல்ல. சந்திரன் இரு துண்டுகளாகப் பிளந்துபோவது அசாத்தியம் அல்ல. மலைப்பாறை பிளந்து அதிலிருந்து ஓர் சினை ஒட்டகை வெளிப்பட்டுக் குட்டியை ஈனுவது அசாத்தியம் அல்ல. சமைத்த உணவு நூறு வருடங்கள் கெடாமல் இருப்பது அசாத்தியம் அல்ல. ஓர் இரவுக்குள் மக்களின் உடல்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாறிப்போவது அசாத்தியம் அல்ல. வானளாவி எரியும் தீயின் மையம் பூஞ்சோலையாக மாறிவிடுவது அசாத்தியம் அல்ல. சிறிய ஊசியின் காது வழியே பெரிய ஒட்டகை நுழைந்து வெளியேறுவது அசாத்தியம் அல்ல. இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களின் புதைக்கப்பட்ட புனித உடல்கள் காலா காலத்துக்கும் அணுவும் அழியாமல் அப்படியே இருப்பது அசாத்தியம் அல்ல.

இவையெல்லாம் அசாத்திய நிகழ்வுகள் அல்ல. ஆனால் அரிய நிகழ்வுகள்.
படைப்புக்களின் சுயங்கள் அல்லாஹ்வின் அறிவில் தரிப்பட்டுள்ளன. அவற்றை அவன் தன் உள்ளமையில் வெளிப்படுத்திக் காட்டுகின்றான். அவற்றை இறைத்தூதர் நாடியபடிக்கு வெளிப்படுத்திக் காட்டுவது அந்த இரைத்தூதரின் மீது அவன் கொண்டுள்ள நேசத்தின் அடையாளமாக இருக்கின்றது.

”உம் ரட்சகனின் பக்கம் நீர் பார்க்கவில்லையா,
நிழலை அவன் எப்படி நீட்டுகிறான் என்பதை?”
(25:45)

நிழல் (ழில்) என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதன் உட்பொருள் படைப்புக்களின் சுயங்களைத்தான் என்று சூஃபிகள் விளக்குகின்றார்கள். ஈசா (அலை) அவர்களின் கைகள் இழுத்தபோது இறைவனே பலகையைத் தன் உள்ளமையில் நீட்டித்து வெளிப்படுத்தி (ஜுஹூர் ஆக்கித்) தந்தான்.

இந்த நிகழ்ச்சி மக்களிடம் பரவிய போது சிலர் சொன்னார்கள், “இது ஓர் அற்புதம். எனவே அந்தப் பையன் ஒரு ஞானியாக இருக்கவேண்டும்”

வேறு சிலர் சொன்னார்கள், “நாங்கள் இந்தக் கட்டுக்கதையை நம்பமாட்டோம். மீண்டும் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்”

இன்னும் சிலர் சொன்னார்கள், “இது உண்மையாக இருக்க முடியாது. எனவே இதையெல்லாம் நூற்களில் எழுதி வைக்காதீர்கள்”

முன்பு சொன்ன அதே மூன்று மனநிலைகள் இங்கே எதிர் வரிசையில் சொல்லப் படுகின்றன. கலையுணர்வு கொண்டவர்கள் அந்த அற்புத நிகழ்ச்சியை வியந்து போற்றுகின்றார்கள். பகுத்தறிவுவாதிகள் அதை சந்தேகிக்கின்றார்கள். மீண்டும் நிகழ்த்திக் காட்டுமாறு கேட்கிறார்கள். இது அறிவியல் அணுகுமுறை. அற்புதங்கள் தன் இஷ்டப்படி ஞானிகளால் நிகழ்த்தப்படுவன அல்ல. அவர்களின் வழியாக இறைவன் நிகழ்த்துவன. மீண்டும் மீண்டும் செய்து பார்க்க அவை விஞ்ஞானச் சோதனைகள் அல்ல. இது அந்த அறிவுஜீவிகளுக்குப் புரியவில்லை. மூடிய மனநிலை உள்ளவர்கள் அந்த அற்புதத்தை அறவே ஏற்க மறுக்கிறார்கள்.

கலை ஆராதிக்கிறது, அறிவியல் ஆராய்கிறது, மூடிய மனம் நிராகரிக்கிறது.
இந்த மூன்று சாராரிடமும் வெவ்வேறு உணர்வுகள் இருந்தாலும் அவர்களில் எவரும் அந்த அற்புதத்தின் சாராம்சத்தை அடைந்துகொள்ளவே இல்லை. “அவர் ஒரு மரப்பலகையை நீளமாக்கினார்” என்னும் வாசகத்தின் உட்பொருள் என்ன என்பதை அவர்கள் விளங்கவே இல்லை.

மூன்று மனநிலைகளுமே ஆன்மிகத்திற்குப் போதுமானவை அல்ல. மனம் ஒரு வீடு என்றால் கலை அதன் முன்வாசல், அறிவியல் அதன் பின்வாசல். (மூடிய மனமோ இரண்டு கதவுகளையும் அடைத்துக் கொண்டது.) ஆனால் ஆன்மிகமோ அந்த வீட்டின் கூரையைப் பிய்த்தெறிந்து விடுகின்றது.

இதனை விளக்க மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் சொல்லும் ஒரு குறியீடு:
”மழை பெய்து கொண்டிருந்தது. சிங்கம் ஒன்று அதில் நனைந்தபடி கம்பீரமாக நடந்து போய்க் கொண்டிருந்தது. கொடாப்புக்குள் கூனிக் குறுகி அமர்ந்திருந்த கோழி ஒன்று அந்தச் சிங்கத்தைப் பார்த்து இரக்கப்பட்டது. ‘சிங்கமே! மழைல நனஞ்சீன்னா ஒனக்கு ஜல்ப்பு புடிச்சுக்கும், காய்ச்சல் வந்துரும். இப்படி உள்ள வா. மழ விட்டப்புறம் போகலாம்’ என்று அழைப்பு விடுத்தது. சிங்கம் அந்தக் கோழியின் அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டது! கொடாப்பையும் காணவில்லை, கோழியையும் காணவில்லை!

அன்பர்களே! பிரபஞ்சமெங்கும் பொழிந்து கொண்டிருக்கும் இறையருள் என்னும் மழையில் ஆனந்தமாக நனைந்தபடி நடைபோடும் சிங்கம்தான் ஆன்மிகம். மனித மனமோ கொடாப்புக்குள் ஆசைகளை அடைகாத்தபடி படுத்திருக்கும் கோழியாக உள்ளது.
சிங்கத்திற்கு அழைப்பு விடுப்போம். அந்தச் சிங்கத்திற்குள் நாம் இருப்போம்!
     
இந்தக் கதைக்கு இத்ரீஸ் ஷாஹ் எழுதிய பின்குறிப்பு:

ஏசுநாதரை ஆன்மிகப் பாதையின் ஒரு குருவாக சூஃபி ஆசிரியர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றார்கள். அவரைப் பற்றி வாய்மொழியாக வழங்கப்பட்டு வருகின்ற ஏராளமான மரபுக் கதைகள் மத்திய நாடுகளில் உள்ளன. திறமை மிக்க தொகுப்பாளருக்காக அவை காத்திருக்கின்றன. இந்தக் கதை பல்வேறு வடிவங்களில் பல சூஃபிப் பிரதிகளில் காணப்படுகின்றது. பைபிளில் ஏசுவுக்கு வழங்கப்படும் பல பெயர்கள், ‘தச்சனின் மகன்’ போன்றவை, குறியீடான ஆன்மிகப் பெயர்களே அன்றி வரலாற்று ரீதியானவை அல்ல என்று சூஃபிகள் சொல்கிறார்கள்.

6 comments:

  1. ரொம்ப அருமை...

    ReplyDelete
  2. Please read my friend's blog, he is from Bangladesh: http://www.mysticsaint.info/2007/12/what-jesus-runs-away-from-rumi.html

    ReplyDelete
  3. அன்பர்களே! பிரபஞ்சமெங்கும் பொழிந்து கொண்டிருக்கும் இறையருள் என்னும் மழையில் ஆனந்தமாக நனைந்தபடி நடைபோடும் சிங்கம்தான் ஆன்மிகம். மனித மனமோ கொடாப்புக்குள் ஆசைகளை அடைகாத்தபடி படுத்திருக்கும் கோழியாக உள்ளது.
    சிங்கத்திற்கு அழைப்பு விடுப்போம். அந்தச் சிங்கத்திற்குள் நாம் இருப்போம்!

    ReplyDelete
  4. அருமையாக வந்திருக்கிறது கட்டுரை. பகுத்தறிவும்,மனமும்- தர்க்கத்தையும் கலையையும் வைத்தே நிகழ்வுகளை எடை போடுகின்றன .ஆனால் ஆன்மீகமோ இந்த இரண்டும் அல்லாத ஒன்று,அதை மூன்றாவது என்றும் சொல்ல முடியாது.ஆனால் இரண்டும் அல்ல.ஆனால் உலகியல் வாழ்வில் இந்த இரண்டின் மூலம்தான் ஆன்மீகத்தை வெளிப்படுத்த முடியும். மனிதர்களோ இந்த இரண்டையே அதுவாக நினைத்து மயங்கிப் போய் தவற விடுகிறார்கள்... நிலாவை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டும் கை விரலைத்தான் நிலா என்கிறானோ என்று குழந்தை அதையே பார்க்குமாம்...என்று எங்கோ படித்த நினைவு...

    அதனால்தான் ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லி புரிய வைக்க முடியாது.அந்த புரிதல் நிகழ்ந்தால்தான் உண்டும்.

    சென்ற நூற்றாண்டு 'புலன்களுக்கு மட்டுமே தெரியும் பொருட்களை பற்றிய அறிவான இயல் - அறிவியல் மனிதர்களை விழுங்கிவிட்டது.இன்னும் நூறு வருடமாகலாம் அதிலிருந்து தலையை திருப்பி உள்ளே பார்க்க...

    என்ன சொன்னாலும் முதல் கேள்வி வருவது நிரூபி பார்க்கலாம்...அடுத்த கேள்வி உனக்கு நடப்பது எனக்கே ஏன் நடக்கலை அப்ப இது பொய்...இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை உள்ளே தானாகவே வந்தால்தான் உண்டு. அது அமைதியில்தான் வரும்.அதுவரை பெரும்பான்மைக்கு மதம்தான் பயன்படுகிறது ஆன்மீகம் அல்ல...

    ReplyDelete