Tuesday, April 16, 2013

தேநீரின் கதை


மனித மனத்திற்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களில் கதையும் ஒன்று. காலத்தின் கதியைச் சற்றே மாற்றி அனுபவிக்கச் செய்யும் பண்பு சுவையான கதைகளில் நிச்சயமாக இருக்கின்றது.

மனித குலத்தின் ஆதி பெற்றோர்களான ஆதமும் ஹவ்வாவும் தம் பிள்ளைகளுக்குக் கதை சொல்லி வளர்த்திருப்பார்கள் அல்லவா? என்ன கதை சொல்லியிருப்பார்கள்? விலக்கப்பட்ட கனியின் கதை?

இறைவனும் தன் வேதத்தில் ஆங்காங்கே கதைகள் சொல்லித்தான் கருத்தை விளக்க்குகிறான். யூசுஃப் நபியின் சரிதத்தை ‘அஹ்சனுல் கஸஸ்’ – அழகிய கதை என்று அவனே சிலாகித்துப் போற்றுகிறான். ‘உங்களுக்கொரு அழகான கதை சொல்லப் போகிறேன்’ என்று குழந்தைகளிடம் கதைச்சொல்லி ஒருவர் ஆர்வமூட்டித் தொடங்குவதைப் போல் இருக்கிறது அது.

சூஃபி குருமார்கள் தங்கள் சீடர்களில் அகவிழிப்பை உண்டாக்கும் பயிற்சிகளில் ஒன்றாகக் கதைகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லப்பட்டு வரும் அந்தக் கதைகள் உலகெங்கும் விரவிக் கிடக்கின்றன. இந்தியாவின் சிம்லாவில், நபியின் பரம்பரையில் வந்த தந்தைக்கும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த இத்ரீஸ் ஷா அல்-ஹாஷிமி அவர்கள் அத்தகைய கதைகளை அரிதின் திரட்டித் தொகுத்து 1967-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நூலின் பெயர் ‘TALES OF THE DERVISHES Teaching-Stories of the Sufi Masters over the Past Thousand Years’.

சூஃபி குருமார்கள் சொல்லும் கதைகள் அவற்றின் இலக்கியச் சுவைக்காகவும், பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும் மக்களால் சிலாகிக்கப் படுகின்றன எனினும் அவற்றின் உண்மையான நோக்கமே வேறு என்று சொல்கிறார் இத்ரீஸ் ஷா. சராசரி மனிதன் அறியாத கண்ணோட்டத்தைத் திறந்து வைப்பதற்காகவே அவை வடிவமைக்கப் பட்டுள்ளன. எந்தக் கோணத்தில் அக்கதைகளை அணுக வேண்டும் என்று அறியாதார் அதன் உண்மையான நோக்கத்தை அடைய முடியாது. சில கதைகள் குறிப்பிட்ட ஆன்மிக அனுபவத்தை அடைந்தவர்களுக்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அனுபவத்தை அடையாத சாதகர்கள்கூட அவற்றைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. அதாவது அந்தக் கதையை விளங்குவதற்கு அந்தக் குறிப்பிட்ட ஆன்மிக அனுபவம் முன் நிபந்தனை ஆகிறது.

இந்தக் கதைகள் கோரும் முன் அனுபவங்களை நாம் அடைந்திருக்கிறோமோ இல்லையோ, இந்நூலில் இருந்து உங்களிடம் ஒரு கதையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தக் கதையின் பெயர் ‘THE STORY OF TEA’ (தேநீரின் கதை). [முன்பே ஓரிரு கவிதைகளில் பச்சைத் தேநீரின் பால் அடியேனுக்கு உள்ள தனி இச்சை குறித்து எழுதியிருக்கிறேன். கொடைக்கானலில் இருந்து பச்சைத் தேநீர் இலைகள் வாங்கி வந்த் பரிசளித்த சையத் இப்றாஹீம் பிலாலி அவர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பேசிக்கொண்டிருந்தேன், இத்ரீஸ் ஷா பற்றியும்!]

தேநீரின் கதையைப் படித்த போது அதன் உள்ளர்த்தங்களாக எனக்கு மனதில் மின்னலடித்த விஷயங்களையும் சாய்வெழுத்துக்களில் இடையிடையே குறித்தபடிச் சொல்லிச் செல்ல நாடுகின்றேன். இதே பாணியில் இந்நூலின்கண் உள்ள அனைத்துக் கதைகளையும் தமிழ்ப்படுத்திவிடலாமா என்றும் ஒரு கண் வைத்திருக்கிறேன். இனி, தேநீரின் கதைக்குள் செல்வோம்.

”பழைய நாட்களில், சீனாவிற்கு வெளியே தேநீர் அறியப்படவில்லை. அப்படி ஒரு பானம் இருப்பது பற்றிய வதந்தி தூர தேசத்து அறிஞர்களிடமும் முட்டாள்களிடமும் பரவியிருந்தது. எனவே, அவரவர் விருப்பத்தின்படியும் அவரவர் அது என்ன என்று அனுமானித்ததன் படியும் அதனை அடைவதற்கு முயற்சி செய்தார்கள்.

’ஈஞ்சா’ தேசத்தின் மன்னன் சீனாவுக்குத் தன் தூதுக் குழுவை அனுப்பி வைத்தான். [ஃபார்ஸி மொழியில் ஈஞ்சா என்றால் இங்கே என்று பொருள். இம்மை உலகை – பருப்பொருள் உலகை – உடலை (Physical Realm) இவ்வார்த்தைக் குறிக்கிறது. தூதுக் குழு என்பது ஐம்புலன்கள்.]

சீன மன்னர் அவர்களுக்குத் தேநீர் பரிமாறினார். அந்த நாட்டில் உள்ள விவசாயிகள் கூட அந்த பானத்தைதான் பருகுகிறார்கள் என்பதைக் கண்ட தூதுக்குழுவினர் தங்களுடைய மேன்மைமிகு மன்னருக்கு அது பொருத்தமானதல்ல என்றும், தேவலோக பானமான உண்மையான தேநீருக்குப் பதிலாக வேறு ஏதோ ஒன்றைத் தந்து சீன மன்னர் தங்களை ஏமாற்றுவதாகவும் எண்ணினார்கள்.

[சீன மன்னர் என்பது இறைவனுக்கான குறியீடு. சீனா என்பது ஆலமுல் லாஹூத் என்னும் தெய்வீக உலகைக் குறிக்கின்ற குறியீட்டுச் சொல். ‘சீனாவில் என்றாலும் ஞானத்தைத் தேடு’ (உத்லுபுல் இல்ம வலவ் பிஸ்ஸீன்) என்னும் நபிமொழியின் அடிப்படையில்தான் இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸீன் என்னும் அறபிச் சொல்லினை அப்ஜத் என்னும் ஒலிக்குறியீட்டு முறையில் மாற்றி அமைத்து (ஸாத்+யா+நூன் = 90+10+50 = 150) அதற்கான மாற்றுச் சொல்லைத் தேடும்போது (150 = 100+50 = காஃப்+நூன்) கிடைக்கின்ற ’கன்ன்’ என்னும் சொல் ‘கூர்ந்து நோக்குதல்’ என்னும் பொருளைத் தருகின்றது. அதாவது ஆழ்நிலை தியானம். ஆழ்நிலை தியானத்தால் ஞானத்தைத் தேடு என்பது மேற்சொன்ன நபிமொழியின் உட்பொருள் என்று இவ்வாறு இத்ரீஸ் ஷா தனது ‘THE SUFIS’ என்னும் நூலில் விளக்குகிறார். (அத்தியாயம் #11: THE SECRET LANGUAGE: I. THE COALMEN) தெய்வீக உலகின் இயல்பான அகவிழிப்பு நிலையே (Spiritual Consciousness) இக்கதையில் தேநீர் என்று குறியீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் – சூஃபிகள். ஏனெனில் ’இவ்வுலகம் மறுமையின் விவசாய நிலம்’ என்பது நபிமொழி. இதில் இன்னொரு நுட்பமான குறிப்பு என்னவெனில் அந்த தெய்வீக உலகின் விழிப்புநிலைதான் பருவுலகிலும் – நம் உடல்களிலும் பிரதிபலிக்கின்றது. ஐம்புலன்களான தூதுக்குழுவினருக்குப் பரிமாறப்பட்ட தேநீர் அதுதான்.]

’ஆஞ்சா’ தேசத்தின் மாபெரும் தத்துவவாதி தேநீர் பற்றிய அனைத்துச் செய்திகளையும் சேகரித்து பல காலம் ஆய்வு மேற்கொண்டார். அதன் விளைவாக, தேநீர் என்பது கிடைத்தற்கரிய ஒரு பானம் என்றும் நாம் அறிந்த அனைத்திலிருந்தும் அது முற்றிலும் வேறுபட்டது என்றும் முடிவு கட்டினார். ஏனெனில் அது ஒரு மூலிகை என்றும், நீர் என்றும், பச்சை நிறமானது என்றும், கறுப்பு நிறமானது என்றும், கசப்பானது என்றும், இனிப்பானது என்றும் முரண்பாடாகப் பலவாறு பல்வேறு கிரந்தங்களில் எழுதப்பட்டிருந்தது.

[’ஆஞ்சா’ என்றால் அங்கே என்று பொருள். அதாவது மறுமை அல்லது அப்பால். இம்மையை மறுதலிக்கின்ற போலி தத்துவம் இது. தத்துவம் எப்போதுமே தர்க்கத்தில் கால்கொண்டுள்ளது. தரவுகளை ஆய்ந்து முடிவு கட்டுகின்றது. பல்வேறு கிரந்தங்களில் இறைவனைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் ஏன் முரண்பாடாகத் தோன்றுகின்றன என்பதைத் தத்துவம் அறிவதில்லை. ஆன்மிக அனுபவங்கள் பற்றி சூஃபிகளின் கருத்துக்கள் வேறு வேறு விதமாக இருப்பதைக் காணும் வரட்டுத் தத்துவவாதி அஃது இல்லாத ஒன்று என்றே முடிவு கட்டிவிடுகிறான்.]

கோஷிஷ் மற்றும் பபீனேம் ஆகிய தேசங்களில், பல நூற்றாண்டுகளாக மக்கள் கையில் கிடைக்கும் மூலிகைகளை எல்லாம் சோதித்துப் பார்த்தார்கள். அவர்களில் பலர் விஷமூட்டப்பட்டார்கள்; அனைவரும் விரக்தி அடைந்தார்கள். தேநீர்ச் செடியை அவர்களின் தேசத்திற்குக் கொண்டு வருபவர் யாருமில்லை. அவர்கள் எந்தவொரு பானத்தைக் கண்டாலும் அருந்தினார்கள். ஆனால் பயன் ஏதுமில்லை.

[கோஷிஷ் என்றால் முயற்சி என்று பொருள். வழிபாட்டுச் சடங்குகள் – அமல்கள் – கடினமான தவங்களை இது குறிக்கும். பபீனேம் என்றால் பார்வை கொண்டவர்க்ள் என்று பொருள். அகப்பார்வைக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள். இவர்களுக்கும் கூட சத்தியம் எட்டவில்லை! பலரும் இந்த வழிகளில் தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்விடத்தில், நபிகள் நாயகம் பற்றி அல்லாமா இக்பால் பாடிய ஒரு கவிதைக் கண்ணி நினைவு வருகிறது:
‘ஜோ ஃபல்சஃபோன் சே குல் ந சகா அவ்ர் நுக்தவரோன் சே ஹல் ந ஹுவா
யெ ராஸ் இக் கம்லீ வாலே நெ பத்லா தியா ச்சந்த் இஷாரோன் மேன்’
தத்துவவாதிகளால் அவிழ்க்க முடியாததும்
வல்லுநர்களால் விளக்க முடியாததுமான இறை ரகசியத்தை
இந்த கம்பளி போர்த்திய நபி(ஸல்)
சிற்சில ஜாடைகளில் உணர்த்திவிட்டார்கள்!
எனவேதான் சூஃபித்துவத்தின் ஊற்றுக்கண் என்றும் முதல் சூஃபி என்றும் தம் அழகிய முன்மாதிரி என்றும் நபிகள் நாயகத்தையே சூஃபிகள் குறிப்பிடுகிறார்கள்.]

’மத்ஹப்’ பகுதியில் தேயிலையின் சிறிய பை ஒன்றை மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பல சடங்குகளைச் செய்தார்கள். அதனைச் சுவைக்க வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. சொல்லப்போனால், சுவைப்பது எப்படி என்றே எவரும் அறிந்திருக்கவில்லை. தேயிலையில் ஒரு மந்திர சக்தி மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்பினார்கள். ஒரு ஞானி சொன்னார், ‘மடையர்களே! அதன் மீது கொதி நீரை ஊற்றுங்கள்.’ அவர்கள் அந்த ஞானியைத் தூக்கிலிட்டார்கள், ஆணி அறைந்தார்கள். ஏனெனில், அவர்களைப் பொருத்தவரை, அவர் சொன்ன காரியம் அவர்களின் புனிதப் பொருளான தேயிலையை அழிப்பதாகும். எனவே அந்த ஞானி அவர்களின் மார்க்கத்திற்கு எதிரி என்பது உறுதியாகிவிட்டது!

[மத்ஹப் என்றால் சமயத்தின் சட்டவியல் (ஷரீஅத்) பற்றிய சிந்தனைப் பள்ளி. அது புறச்சடங்குகளைச் செம்மையாக நிறைவேற்றுவது சம்பந்தப்பட்டது. வெற்றுச் சடங்குகளே தமக்கு ஈடேற்றம் தந்துவிடும் என்று நம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஞானி என்று சொல்லப்படுபவர் சூஃபி. அவர் புறச்சடங்கை விடவும் அதன் உயிராக இருக்கக்கூடிய அகநிலைக்கு (ஹால் / அஹ்வால்) முக்கியத்துவம் கொடுக்கிறார். கொதிநீர் என்பது இறைக்காதல். அந்த நிலையில் இருந்த சூஃபி ஞானிகளில் சிலர், மன்சூர் அல்-ஹல்லாஜ், ஷிப்லி, அபுல்ஹசன் நூரி, சர்மத் போன்றோர் வரட்டுச் சமயவாதிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.]

அவர் இறப்பதற்கு முன் தன் அணுக்க நண்பர்கள் சிலரிடம் அந்த ரகசியத்தைச் சொல்லிச் சென்றார். அவர்கள் முயன்று கொஞ்சம் தேநீரைத் தயாரித்து மறைவாகப் பருகி வந்தார்கள். ‘நீங்கள் என்ன குடிக்கிறீர்கள்?’ என்று யாரேனும் கேட்டால், ‘எங்களுக்குள்ள ஒரு நோய்க்கான மருந்து இது’ என்று சொன்னார்கள்.

[தேநீர் தயாரிக்கும் கலை என்பது இங்கே ’தஸவ்வுஃப்’ என்னும் சூஃபித்துவத்தைக் குறிக்கிறது. மறைவாகப் பருகுதல் என்பது ஃகான்காஹ் என்னும் சூஃபி தியான மடங்களைக் குறிக்கும். இறைக்காதல் என்பது உண்மையில் அமிர்தம். ஆனால் உலக வழக்கில் அதனை ஒரு நோய் என்று நினைக்கிறார்கள்.]

உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. தேயிலை சிலரால் வளர்க்கப்பட்டது. ஆனால் அது என்ன என்று அவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. அது சிலருக்குப் பரிமாறப்பட்டது. ஆனால் அது சாமானியர்கள் பருகும் சாதாரண பானம் என்று அவர்கள் எண்ணினார்கள். அது சிலரின் உடைமையாக இருந்தது. அவர்கள் அதனை வழிபட்டார்கள். சீனாவிற்கு வெளியே, மிகச் சொற்பமானவர்களே அதனைப் பருகினார்கள், அதுவும் மறைவாக.

[சீனாவிற்கு வெளியே – அதாவது ஆலமுஷ் ஷஹாதத் என்னும் இவ்வுலகில். அவர்கள்தான் சூஃபிகள்]

பிறகு ஓர் அறிஞர் (ஸாஹிபுல் இல்ம்) வந்தார். தேயிலை வியாபாரிகளிடமும், அதனைப் பருகும் ரசிகர்களிடமும், மற்றவர்களிடமும் அவர் சொன்னார்:
‘சுவைப்பவன் அதனை அறிகிறான்
சுவைக்காதவன் அதனை அறிவதில்லை
தெய்வீக பானத்தைப் பற்றிப் பேசுவதை விடவும்
உங்கள் விருந்துகளில்
மௌனமாக அதனைப் பரிமாறுங்கள்.
அதனை விரும்புபவர்கள் இன்னும் கேட்பார்கள்
அதனை விரும்பாதவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள்.
விவாதம் மற்றும் மர்மங்களின் கடையை மூடுங்கள்,
அனுபவத்தின் தேநீர்க் கடையைத் திறவுங்கள்.”

[அந்த அறிஞர் (ஸாஹிபுல் இல்ம்) நபிகள் நாயகம்தான். ‘நான் அறிவின் பட்டினம்’ (அன மதீனத்துன் இல்ம்) என்பது அன்னாரின் அருள்மொழி.
’சுவை’ என்பது ஒரு சூஃபிக் கலைச்சொல்! அறபியில் அது ‘ஸவ்க்’ (Dhouq) எனப்படும். அதாவது இறையுணர்வுகளை இதயத்தால் சுவைத்தல்.
சூஃபிப் பாதை பேச்சின் (கால்) பாதை அல்ல. அனுபவத்தின் (ஹால்) பாதை.]

படிப்படியாகத் தேயிலை பட்டுப்பாதையின் வழியே கொண்டு வரப்பட்டது. அப்பாதையின் வழியே பீங்கான் அல்லது பட்டு அல்லது ரத்தினங்களைக் கொண்டு செல்லும் வணிகர் எவரேனும் ஓய்வெடுக்க அமரும்போது அவருக்குத் தேநீர் பரிமாறப்பட்டது. இவ்வாறு அதன் பிரியம் மக்களிடம் பரவியது. இதுவே தேநீர்க்கடைகள் சீனாவின் தலைநகரிலிருந்து புகாரா மற்றும் சமர்கந்த் வரை நெடுக அமைக்கப்பட்டதன் ஆரம்பம் ஆகும். சுவைத்தவர், அதனை அறிந்துகொண்டார்.

[இப்பத்தி நேர்த்தியாக இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று ’லிட்டரலாக’,  சீனாவிலிருந்து மேற்கு நோக்கி – அஃப்கானிஸ்தான், இரான் இராக் வரை வணிகரீதியாகத் தேநீர் பரவிய வரலாறு. Silk Route – பட்டுப் பாதை என்பது சீனாவிலிருந்து அஃப்கானிஸ்தானுக்குச் செல்லும் பாதை. இவ்வழியாகத்தான் இஸ்லாம் சீனாவை எட்டிற்று.

இன்னொன்று சூஃபிக் குறியீட்டுத் தளம். பட்டுப் பாதை என்பது ஆன்மிகப் பாதை. புழு ஒன்று தன்னைக் கூட்டுக்குள் அடைத்துக் கொண்டு பட்டுநூல் தயாரிக்கும் குறியீடு ஆன்மிகச் சிந்தனைப் பள்ளிகள் பலவற்றிலும் உள்ளதுதான். இங்கே சூஃபிப் பயிற்சிகளைக் குறிக்கும். தேநீர்க்கடைகள் – சூஃபி தியானக் கூடங்கள்.

புகாராவும் சமர்கந்தும் இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ளன. அது முன்பு ருஷ்யாவின் பகுதியாக இருந்தது. அதற்கும் முன்பு பழைய பாரசீக சாம்ராஜ்யத்தின் பகுதி. புகாராவில்தான் ஹதீஸ் கிரந்தத் தொகுப்பாளர்களில் முதன்மையரான இமாம் புகாரி வாழ்ந்தார்கள். புகாரா என்னும் பெயர் சமஸ்கிருதச் சொல்லான விஹார் என்பதன் திரிபு என்பர். விஹார் என்பது பௌத்த தியானக் கூடத்தைக் குறிக்கும்!

சமர்கந்த் என்றால் கனிச்சுவை என்று பொருள். கனி போல் இனிமையான நகரம்! சூஃபித்துவம் செழித்த பழநகர். சூஃபிச் செவ்வியல் இலக்கியங்கள் பலவற்றில் இந்நகர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கே புகாராவையும் சமர்கந்தையும் சொல்வதற்குக் காரணம், ஹதீஸும் தஸவ்வுஃபும் (நபிமொழியும் சூஃபித்துவமும்) ஆகும்.]

கவனியுங்கள், முதன்முதலின் இந்த தெய்வீக பானம் பற்றிக் குறை கருத்துக் கூறியோர் போலி தத்துவவாதிகளே. ‘ஆனால், இது வெறும் காய்ந்த இலைதானே!’ என்று அவர்கள் சொன்னார்கள். அல்லது, ‘கிறுக்கனே! எனக்கு வேண்டியது தெய்வீக பானம்தான், நீ ஏன் தண்ணீரைக் கொதிக்க வைக்கிறாய்?’ என்றார்கள். அல்லது ’இது என்ன என்று எனக்கு எப்படித் தெரியும்? எனக்கு ஆதாரம் கொடு, நிரூபித்துக் காட்டு. மேலும், தங்க நிறத்தில் இருக்கவேண்டும் என்றுதான் நூலில் போட்டிருக்கிறது. ஆனால் இது சாந்து நிறத்தில் இருக்கிறது’ என்றார்கள்.

[அத்தகைய அரைவேக்காடுகள் இன்றைக்கும் இருக்கிறார்கள்! சூஃபித்துவத்தை விளங்க முடியாத அந்த அகக்குருடர்கள் குறை பேசித் திரிவதையே தம் வாழ்வின் பணியாக வைத்திருக்கிறார்கள்.]

உண்மை அறியப்பட்ட போது, அன்பர்களுக்காகத் தேநீர் கொண்டு வரப்பட்டபோது, நிலைகள் தலைகீழ் ஆகிவிட்டது. (அல்லது தலைகள் நிலைகீழ் ஆகிவிட்டது!). பேரறிஞர்கள் போல் பிதற்றி வந்தவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பது வெளிச்சமானது. இன்றுவரை அதுவே நிகழ்ந்து வருகின்றது.

[உண்மை அறியப்பட்ட போது – ‘கூறுக: சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக, அசத்தியம் அழிவதாகவே இருந்தது’ (குர்ஆன் 17:81).
நபிகள் நாயகத்தின் வருகையை இஃது குறிக்கிறது. அன்பர்கள் – சூஃபிகள். தேநீர் – அகவிழிப்புணர்வு. எனவே சூஃபிப் பாதை.
நிலைகள் தலைகீழ் ஆகிவிட்டது – இதனை அறிய நீங்கள் ஆசைப்பட்டால் மௌலானா ரூமியைப் படியுங்கள். இப்னுல் அறபியைப் படியுங்கள். இமாம் கஸ்ஸாலியைப் படியுங்கள். இமாம் சாஅதியைப் படியுங்கள். இன்னுமுள்ள சூஃபி மகான்களின் வாழ்வையும் நூல்களையும் படித்துப் பாருங்கள்.]

இக்கதையின் முடிவில் இத்ரீஸ் ஷா எழுதியிருக்கும் குறிப்பு:
“உயர் ஞானத் தேடலுக்குக் குறியீடாக அனைத்து வகை பானங்களும் பல்வேறு ஞானிகளால் பேசப்பட்டுள்ளன.
சமீபத்திய சமூக பானமான காஃபி அரேபியாவின் மோக்கா பகுதியில் சூஃபி ஞானி அபுல் ஹசன் ஷாதுலி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. …. …. …. இக்கதை சூஃபி குரு ஹமதானி (கி.பி.1140) அவர்களால் சொல்லப்பட்டது.” 1 comment: