Thursday, April 11, 2013

அறுகோணக் கண்ணாடி


’சமீப காலமாக நீங்கள் எழுதும் ’ஸ்பான்’ (வேகம்) குறைந்துவிட்டதே?’ – ஒரு வாரமிருக்கும், திருச்சிக்கு வந்து கல்லூரியில் என்னைச் சந்தித்த நண்பர் அலாவுதீன் கேட்டார். வேறு சில நண்பர்களும் கேட்டார்கள்.

ஒருவேளை, இது கட்டுரைகளுக்கான ’சீசன்’ இல்லை போலும் என்றுதான் எனக்கே நான் பதில் சொல்லிக் கொண்டேன். கவிதைத் துளிகள் மட்டுமே அவ்வப்போது மனதில் பூத்துக் கொண்டிருந்தன.

எதுவுமே எழுதத் தோன்றாமல்தான் இருக்கின்றது. மௌனத்தில் இருக்க மனம் விரும்புகின்றது. மீண்டும் இசைக்கான காலம் வந்துவிட்டது போல் உள்ளது. வெளியிலோ இங்கே கொடுங் கோடை. உள்ளேயோ வசந்தகாலம்!

’கவிதைகள் மட்டும் எப்படித் தோன்றுகிறது?’ – ஞாயமான கேள்வி. என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

‘எத்தனைக் காலம்
எத்தனைப் பூக்கள்
என்னில் மலர்ந்து விட்டன
மலர்ந்து உலர்ந்து விட்டன...
இனியும் பூக்கத்தான் வேண்டுமா?
புதிதாய்ப் பூக்க என்னதான் மிச்சம்?
யோசித்துக் கொண்டிருந்தது நிலம்
எனினும்
வானம் லேசாகத் தூரிச் செல்ல
ஒவ்வொரு கொப்பிலும்
புதிய மொட்டுக்கள்!’

இப்படிக் கவிதையாகவே வந்தது விடை.

‘வெறுமனே எழுதிக் கொண்டிருப்பதிலேயே நாட்கள் கழிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது’ என்று நண்பர் அலாவுதீனிடம் சொன்னேன். எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேனோ அதில் எந்த அளவு நான் அடைந்திருக்கிறேன் என்பது அல்லவா முக்கியம்?

சூஃபிகளில் ஒருவரான இப்னு ஃகஃபிஃப் ஷீராஸி அவர்கள் சொல்லும் ஒரு நிகழ்ச்சியை கோல்மன் பார்க்ஸ் தனது Essential Rumi நூலின் பதினைந்தாம் அத்தியாயமான “Teaching Stories: How the Unseen World Works” என்பதன் முன்னுரையாகத் தந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சி இது:

“எகிப்தில் இறைஞானியர் இருவர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட நான் அவர்களைச் சந்திப்பதற்காக அங்கே விரைந்தேன். நான் அங்கு அடைந்தபோது அற்புதமான ஞானிகள் இருவர் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். நான் அவர்களுக்கு மூன்று முறை சலாம் உரைத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு விடை சொல்லவே இல்லை. நானும் அவர்களுடன் நான்கு நாட்கள் தியானத்தில் அமர்ந்திருந்தேன். நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பதால் என்னுடன் ஏதாவது பேசும்படி ஒவ்வொரு நாளும் அவர்களை நான் கெஞ்சினேன். கடைசியில், அவர்களில் இளையவர் தன் கண்களைத் திறந்தார். ‘இப்னு ஃகஃபிஃப், வாழ்க்கை மிகவும் சுருக்கமானது. மீதமுள்ள பகுதியை உன்னை ஆழப்படுத்துவதற்குப் பயன்படுத்து. மக்களுக்கு முகமன் உரைப்பதில் அதை வீணடிக்காதே!’ என்று அவர் சொன்னார். மேலும் எனக்கு அறிவுரை பகருமாறு அவரிடம் நான் கேட்டேன். ‘உனக்கு இறைவனை நியாபகப் படுத்துபவர்களுடன் இரு. ஞானத்தை வெறுமனே பேசுபவர்களுடன் அல்ல, அந்த ஞானமாகவே இருப்பவர்களுடன் இரு’ என்று கூறிவிட்டு அவர் மீண்டும் தியானத்தில் மூழ்கிவிட்டார்”

[குறிப்பு: ‘நீங்கள் சலாத்தினைப் பரப்புங்கள்’ என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்க இந்த சூஃபி ஞானி சொல்வது அதற்கு மாற்றமாக இருக்கிறதே? என்று கேள்வி எழலாம். நபித்தோழர்களின் ஆன்மிக நிலைக்கு அந்த அறிவுரை மிகவும் அழகானதாக இருந்தது. சலாம் சொல்வதை முகஸ்துதியின் ஆயுதமாக ஆக்கிக் கொண்ட நபர்கள் அதிகமாகிவிட்ட சூழலில் இந்த சூஃபி ஞானி வாழ்ந்திருப்பார். எனவே அப்படிப்பட்ட மக்களைத் தேடி நாடி ஓடி சலாம் உரைத்துக் கொண்டிருப்பது வாழ்வை வீணாக்குவதுதான் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.]

ஆக, இப்படியான மனநிலையில் நான் கடந்த ஒரு மாத காலமாக இருந்து வருகையில், வாசகர் வட்டத்தைப் பெரிதாக்க வேண்டுமெனில் ஃபேஸ்புக்கில் உன் வலைப்பூவைப் பற்றி லிங்க் கொடு என்று என் சகோதரன் ஆலோசனை சொன்னான். எழுதுவதே இங்கே கேள்விக்குறியாக இருக்கிறதே என்று நான் மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். ஏனெனில், நான் ஒரு எழுத்தாளன் அல்லன், கவிஞன் அல்லன். ‘எழுத்து என் வேள்வி’ என்பது போலெல்லாம் ஒருபோதும் நான் எண்ணியது இல்லை.

இப்படி நினைக்கையில் எனக்கு ஓஷோ சொன்ன நகைச்சுவைத் துணுக்கு ஒன்று ஞாபகம் வந்தது:
இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் சந்தித்துக் கொண்டார்கள்.
‘உன் மகளின் படிப்பு முடிந்துவிட்டதா?’
‘ஓ, போன மாதமே முடிந்துவிட்டதே’
‘இப்ப என்ன செய்கிறாள்?’
‘அவள் தியானம் செய்துகொண்டிருக்கிறாள்’
‘நல்லது, ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட தியானம் செய்வது கொஞ்சம் பரவாயில்லைதான்’

ஓஷோ: ஆனால் உண்மையில் தியானம் என்பதே ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்!

’ஆன்மிகத்தால் சமூகத்துக்கு என்ன பயன்? மக்களுக்கு அதனால் என்ன நன்மை?’ என்று என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். ’ஆன்மிகம் தியானம் என்பதெல்லாம் பொறுப்பற்ற சோம்பேறிகளின் கண்டுபிடிப்பு’ என்று விவாதம் செய்திருக்கிறார்கள்.

இப்போது அதுதான் நினைவுக்கு வந்தது. எழுதுவதும் நின்றுவிட்டால் என் இருப்புக்கே அர்த்தமில்லை என்று சொல்லிவிடுவார்கள்!

இந்த எண்ண ஓட்டத்தின் தொடர்ச்சியாக மௌலானா ரூமியின் கவிதை ஒன்று நியாபகம் வந்தது. கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் தந்த ‘FEELING THE SHOULDER OF THE LION’ என்னும் நூலில் உள்ள ‘கஸ்தூரி மான்’ (The Gazelle) என்னும் கவிதையிலிருந்து தமிழாக்கித் தருகிறேன்:

“மாபெரும் மன்னரான முஹம்மது ஃக்வாரிஸ்ம்
ஒருமுறை சப்ஸவார் என்னும் நகரின்மீது படையெடுத்தார்.
சட்டென்று வீழ்ந்தது அது:
‘காணிக்கையாக எதைக் கேட்டாலும் தருகிறோம்’

‘இறைவனுடன் ஒன்றி வாழ்கின்ற
மனிதப் புனிதர் ஒருவரைக் கொண்டுவாருங்கள்
இல்லையேல்
கதிர்களைப் போல்
உங்களை அறுவடை செய்துவிடுவேன்’

அவர்கள் பொற்காசுகளின் மூட்டைகளைக் கொண்டுவந்தார்கள்.
சப்ஸவார் நகரில் அந்நிலையில் வாழும் மனிதப் புனிதர்
அல்லது புனித மனிதர்
எவருமே இல்லை என்று அவர்கள் அறிவார்கள்.

‘காசுகளில் ஆர்வம் காட்ட
இன்னும் நான் சிறுபிள்ளை என்ற நினைப்பா உங்களுக்கு?’

அபூபக்கர் போன்ற ஒருவரைத் தேடி
மூன்று பகல்கள் மூன்று இரவுகள்
அலைகிறார்கள் அவர்கள்.

இறுதியாக,
இற்றுப் போன ஒரு சுவரின் கீழே
இற்றுப் போன ஒரு வழிப்போக்க்னைக் கண்டார்கள்.

மெய்யான மனிதனைச்
சட்டென்று அடையாளம் கண்டுகொண்டார்கள்.
‘எழு! அரசர் உன்னைப் பார்க்க விரும்புகிறார்.
எங்கள் உயிர்களை நீ காப்பாற்ற முடியும்!’

‘நான் இங்கே இருக்க வேண்டியவன் அல்ல.
என்னால் நடக்க முடிந்திருந்தால்
இந்நேரம் நான் என் நண்பர்களின் ஊரை அடைந்திருப்பேன்’

சவத்தைச் சுமப்பது போல்
அவர்கள் அவரை
அரசனிடம் தூக்கிச் சென்றார்கள்.
கோலாகலமான ஊர்வலம்!

சப்ஸவார் என்பது இவ்வுலகம்,
உண்மை மனிதன் இங்கே வீணனாகிறான்,
வெளிப்பார்வையில் அவனுக்கு எந்த மதிப்புமில்லை
எனினும்,
சப்ஸவாரில் இருந்து அந்த மன்னன் கேட்பதெல்லாம்
அத்தகைய ஒருவரைத்தான்.
வேறு எதுவும் வேலைக்கு ஆகாது.

முஹம்மத் (ஸல்) சொல்கிறார்கள்:
‘அல்லாஹ் உங்கள் உருவங்களைக் கவனிப்பதில்லை
ஆனால் உங்கள் உள்ளங்களைக் கவனிக்கிறான்’

கல்ப்- ஆழ்ந்த உள்ளம் –
எழுநூறு பிரபஞ்சங்கள்
வெறும் புழுதித் துகளாகும் அந்த வெளி
கடுகு விதை போன்ற சப்ஸவாரில்
நாம் தேடிக் கொண்டிருப்பது அதையே.

அத்தகைய காதல் உள்ளம் கொண்ட ஒருவர்
இறைவன் நம்மைப் பார்க்கப் பயன்படுத்தும்
அறுகோணக் கண்ணாடி ஆவார்.

அவர் அன்ன ஒருவர் வழியாகவே
அருட்கொடைகள் வருகின்றன

அவரின் கைகள்
நிபந்தனையின்றித் திறக்கின்றன.
அந்த இணைவு மொழிக்குள் அடங்காது.

உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் இதை.

செல்வந்தர்கள் பணம் கொண்டு வருகிறார்கள்.
இறைவன் சொல்கிறான்:
‘எவரின் காதல் என் காதலுடன் கலக்கின்றதோ
அவருக்கான பக்தியைக் கொண்டு வாருங்கள்’

அந்தக் காதலே இறைவனின் எதிர்பார்ப்பு
அந்தக் காதலே நம் ஒவ்வொருவருக்கும்
தாயும் தந்தையும் ஆகும்
ஒவ்வொரு பொருளின் மூலம் ஆகும்

நீங்கள் சொல்லக் கூடும்:
‘இறைவா! இதோ நான்
இதயக் காதலைக் கொண்டு வந்திருக்கிறேன்’

‘துர்ஃபான் மாகாணத்தின் குத்தூ என்னும் கிராமம்
இத்தகைய காதலால் நிரம்பி வழிகிறது
போ!
உலகிற்கு அச்சாணி ஆனவரின்
உள்ளத்தைக் கொண்டு வா!
ஆதாமின் ஆத்மாவின்
ஆத்மாவின் ஆத்மாவைக் கொண்டுவா!’

இறைவன் அதற்காகக் காத்திருக்கிறான்.
சப்ஸவார் முழுக்க அலைந்து திரிந்தாலும்
அத்தகைய ஒருவரைக் காண்பது அரிது.

சப்ஸவாரின் நகரத் தலைவரே வரலாம்.
இறைவன் சொல்வான்:
‘இந்த நாறும் பிணம் எனக்கெதற்கு?
சப்ஸவாரைக் காப்பாற்றக் கூடிய
இறைக் காதலனைக் கொண்டு வாருங்கள்.’”






No comments:

Post a Comment