Monday, September 26, 2011

உள்முகக் காலம்


“Being with you and not being with you is the only way I have to measure time.”
Jorge Luis Borges

“உன்னுடன் இருப்பதும் உன்னுடன் இல்லாதிருப்பதுமே காலத்தை அளக்க என்னிடம் உள்ள ஒரே வழி” என்னும் இந்தக் கவித்துவமான கருத்தை எழுதியவர் ஜோர்ஜ் லூயி போர்ஹே என்னும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதியவர். மிக முக்கியமான நவீன இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான இவரைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “என்றார் போர்ஹே” என்னும் நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். காலம் மற்றும் வெளி (TIME AND SPACE) குறித்து போர்ஹே தன் எழுத்துக்களின் வழி நிகழ்த்திய சாதகங்கள் பற்றி மீண்டும் மீண்டும் அதில் குறிப்பிட்டிருந்தார். பின்வரும் பத்தி அதில் குறிப்பாக என் கவனத்தை ஈர்த்தது:

“இந்தியக் கடவுளைப் பற்றி போர்ஹே அதிக கவனம் கொள்ளவில்லை. அவர் கதையின் கடவுள் மேற்கு உலகின் அரூபவாசி. இந்த அரூப நபர் ஹெஜ்.ஜி.வெல்ஸின் கட்புலனாகாத மனிதன் நாவலில் வரும் புனைபாத்திரம் போலவே நடமாடுகிறார். அங்கும் கடவுளின் காலைச் சுற்றிப் படர்ந்துள்ள காலம்தான் போர்ஹேயை வசீகரிக்கிறது. மனிதக் கால அளவும், கடவுளின் கால அளவும் மாறுபட்டவை என்ற தகவலே அவரை வியப்பில் ஆழ்த்திச் சிரிக்கின்றது. ‘ரகசிய அற்புதம்’ எனும் போர்ஹே கதையில் ஒரு துளி காலம் உறைந்து அதனுள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது. இதே போல் குறுக்கு வெட்டுப் பாதைகளின் தோட்டம் என்ற கதையில் மூன்று காலமும் ஒரே நேரத்தில் நிகழ்வுறுவது காட்டப்படுகிறது. காலம் எனும் கடவுளின் சுழியை மீள்வட்டமாகிப் பார்க்கிறார் போர்ஹே.” (’என்றார் போர்ஹே’, பக்.104) 

இப்பத்தியில் காலத்தைப் பற்றிய போர்ஹேயின் அவதானங்களாகச் சொல்லப்பட்டிருக்கும் மூன்று புள்ளிகள் என் சிந்தனையைத் தூண்டின.
1. மனிதக் கால அளவும், கடவுளின் கால அளவும் மாறுபட்டவை.
2. காலத்தின் ஒரு துளிக்குள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்துள்ளன.
3. மூன்று காலங்களும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.



போர்ஹே இலக்கியம் செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகில் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அலஜோ கார்பெந்தர், கார்லோஸ் புயண்டஸ் போன்ற இலக்கிய ஆளுமைகளும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்த இலக்கியம் ‘மாய எதார்த்தம்’ (MAGIC REALISM) என்னும் வகையைச் சேர்ந்தது. அவ்வகை இலக்கியத்திலும் கால வெளி குறித்த ஆழமான சாதக அவதானங்கள் உண்டு. உதாரணமாக காலத்தை உணர்தலில் தனிமைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் புகழ் பெற்ற நாவலான “நூறாண்டு காலத் தனிமை” (A HUNDRED YEARS OF SOLITUDE) என்னும் பெயரைக் கொஞ்சம் ஆழமாக கவனித்தாலே காலத்தின் பாரம் உள்ளத்தில் அழுத்துவதை உணர முடிகிறது. அந்தப் பெயரே காலத்தைக் குறித்த ஒருவித பயத்தை மனதில் தூண்டுவதாக உள்ளது.

போர்ஹேயின் எழுத்துக்கள் மாய எதார்த்த வகையைச் சார்ந்தவை அல்ல. அவர் ஒரு தனிப்பாணியில் எழுதிக்கொண்டிருந்தவர். அவருடைய எழுத்துக்களின் பாணி பற்றி எஸ்.ரா சொல்லும் இந்த வரையரை தெளிவு தரும்: “போர்ஹேயின் கதைகள் யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு அதீத நிலைகளை உருவாக்கக்கூடியவை. ஒருவகையில் அவை மெடாபிஸிகல் ரியலிச [METAPHYSICAL REALISM] கதைகள் என்று வேண்டுமானால் சொல்லலாம் அல்லது மீமாய கதைகள் என்று வகைப்படுத்தலாம்.” (’என்றார் போர்ஹே’, பக்.17)

மாய எதார்த்தமோ அல்லது மீமெய்ம்மியல் எதார்த்தமோ, எப்படியானாலும் காலத்தையும் வெளியையும் பற்றிய அவதானிப்பில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் வளர்த்தெடுத்துக் கொண்ட தனித்துவத்தின் பின் கீழைத் தேய ஆத்ம ஞான மரபின் பங்களிப்பு மிக ஆழமாக உள்ளது என்பதை மறுக்கமுடியாது. போர்ஹே பௌத்தம் மற்றும் இந்து ஞான மரபுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் என்று எஸ்.ரா குறிப்பிடுகிறார். அத்துடன் சூஃபி மரபையும் நாம் குறிப்பிட வேண்டும். போர்ஹேயின் கால அவதானங்களாக முன்வைக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று புள்ளிகள் அதற்கான ஒரு சங்கேதமாக இருப்பதை நாம் காணலாம்.


லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்படுபவர் செர்வாண்டிஸ் (CERVANTES). அவர் எழுதிய ‘டான் குய்ஷே டி லா மான்ச்சா’ (DON QUIXOTE OF LA MANCHA) என்னும் காவியம் உலகப் புகழ் பெற்றது. அதனைத் திரைப்படமாகவும் நான் பார்த்திருக்கிறேன். என் மனதைக் கவர்ந்த இலக்கியப் பாத்திரங்களில் முன்னணியில் நிற்பவர்களில் நிச்சயமாக டான் குய்ஷேவுக்கு இடம் உண்டு. என் பெரிய தந்தை என்னைக் கிண்டலாக ‘குய்ஷாட்டிக் ஃபெல்லோ’ என்று அழைப்பதை இங்கே நினைவு கூர்கிறேன். செர்வாண்டிஸ் தன் அமர காவியத்தை எழுதப் பின்னணியாக இருந்தது சூஃபி மரபே என்று இத்ரீஸ் ஷா தன்னுடைய மேக்னம் ஒபஸ் படைப்பான “THE SUFIS” என்னும் நூலில் விளக்குகிறார். 

போர்ஹேவின் மீது தாக்கம் ஏற்படுத்திய இன்னொரு எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். பல பல்கலைக்கழகங்களில் அவர் ஷேக்ஸ்பியர் பற்றி உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். ஷேக்ஸ்பியருக்கு ரகசிய சூஃபி மரபுகளுடன் தொடர்புகள் இருந்தன என்றும் அவருடைய படைப்புக்களில் சூஃபி ஞானத்தின் பதிவுகளை நிறையவே காண இயலும் என்றும் இத்ரீஸ் ஷா கூறுகிறார்.


இளம் வயதில் போர்ஹே அவரின் தந்தை சேகரித்து வைத்திருந்த வீட்டு நூலகத்தில் வாசித்த நூற்களில் ரிச்சர்ட் பர்ட்டனின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான ’ஆயிரத்தொரு அரபுக் கதைகள்’ என்னும் நூலும் ஒன்று. அது ஒரு சூஃபி இலக்கியம். குறியீடுகளால் நிறைந்தவை அந்தக் கதைகள். மாய எதார்த்த உலகத்திற்குள் வாசகனைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்பவை. வாசகனின் அகவெளியின் கட்டமைப்பைக் கரைக்கும் சக்தி பெற்றவை. வாழ்வின் மீதான பார்வையை மாற்றி அமைக்கக்கூடியவை. வேறொரு காலத்தின் லயத்தை அவற்றை வாசிப்பவன் உணரமுடியும். அந்த லயத்தின் தித்திப்பு பின் எப்போதும் மனதை விட்டு அகலாததாக நின்றுவிடக்கூடியது. மீண்டும் மீண்டும் அவனைத் தன்னுள் அழைத்துக் கொண்டே இருப்பது. தன் அக உலகை அவன் மறந்து போய் விடாமல் இருக்க ஒரு நிரந்தர ஞாபகமூட்டியாக இருப்பது. 

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் தந்தை ஜோர்ஜ் கலிர்மோ போர்ஹே ஃபிட்ஜெரால்டின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த உமர் கய்யாமின் பாடல்களை ஸ்பானிய மொழியாக்கம் செய்து வெளியிட்டார். நேர்த்தியாக இல்லை என்றாலும் பூடகமாகவேனும் சூஃபி மரபு குறித்த ஓர் அறிமுகத்தை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களுக்குத் தந்தவை உமர் கய்யாமின் பாடல்கள். 

இவை எல்லாம் போர்ஹே சூஃபி மரபின் வழியாகவும் தன் மனவளத்தை உருவாக்கிக் கொண்டவர் என்பதற்கான ஏதுக்கள் என்று சொல்லலாம். 

கால வெளி குறித்த போர்ஹேயின் அவதானங்களில் மிக முக்கியமான சிறுகதை “THE ALEPH” என்பதாகும். இது ஒரு சூஃபிக் கலைச் சொல். இதனைக் காலத்தைக் குறிக்கும் சொல்லாக போர்ஹே கையாள்கிறார். ஒற்றைப் புள்ளியான ஒரு காலத்தில் ஒட்டு மொத்தப் பிரபஞ்சமும் அதன் அனைத்து நிகழ்வுகளும் பொதிந்து கிடக்கிறது என்பதுதான் அச்சொல்லின் அர்த்தம். அதனை ப்யுனஸ் அயர்ஸ் நகரில் உள்ள தன் வீட்டில் ஒருவன் உணர்ந்து கொள்வதாக போர்ஹே இக்கதையை அமைத்திருக்கிறார். அது ஒரு ஞான தரிசனம்தான்.போர்த்துகீசிய மொழி எழுத்தாளர் ’பாலோ கோயல்லோ’வும் இதே தலைப்பில் இதே கருத்தியலை வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.



ALEPH என்பதை தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் ’ஆல்ப்’ என்று எழுதியுள்ளார். அது அலிஃப் என்பதுதான் சரி என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அலிஃப் என்பது சூஃபி மரபில் உள்ள பிரபஞ்ச தோற்றக் கோட்பாடான “தனஸ்ஸுலாத்” என்பதன் முதல் நிலையைக் குறிக்கிறது. பிரபஞ்சம் தோற்றாத நிலையை புள்ளி (DOT) குறிக்கும். அது இறைவன் தன்னில் தான் தனித்திருந்த நிலை (அஹதிய்யத்). பின் இறைவன் பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியது புள்ளி கீழிறங்கி ஒரு நேர்க்கோடாக ஆன நிலையை வைத்து விளக்கப்படுகிறது. ஒன்று என்பதையும் அது குறிக்கிறது. அந்த எழுத்துத்தான் அலிஃப். அது முழுப்பிரபஞ்சமும் ஒருமை நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. அது முன் பின்னாகப் பிரியாத, தொடர் நிலையாக உருப்பெறாத ஒற்றைக் காலம். அதுவே நபிகள் நாயகத்தின் எதார்த்தம் என்று சூஃபிகள் கூறுவர். இக்கருத்தில் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடியுள்ள இந்த வரி போர்ஹே குறிப்பிடும் அலிஃப் என்பதற்கொரு நல்ல தமிழ் வார்த்தையைத் தருகிறது:
“ஏகமாய் ஒரு காலம் அழியாத ஒளியான
எம்பிரான் முன்னிற்கவே” (அகத்தீசன் சதகம், பாடல்:5)



இந்த அலிஃப்தான் அரபி அட்சரங்களின் முதல் எழுத்து. அலிஃப் என்பது லத்தீன் அமெரிக்க உச்சரிப்பில் அலெஃப் (ALEPH) என்பது போல் எழுதப் படுகிறது. 1999-இல் சூஃபி ராக் இசைக்குழுவான ஜுனூன் வெளியிட்ட ‘பர்வாஸ்’ என்னும் இசைப்பேழையில் அலிஃப் என்னும் ஒரு பாடல் இருந்தது. ஆங்கிலத்தில் அதனை ALEPH என்றுதான் எழுதியிருந்தார்கள். அது பஞ்சாபி சூஃபி மகான் பாபா புல்லே ஷாஹ் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல். அதன் பல்லவி:

“இல்மோன் பஸ் கரே ஓ யார் / இகொ அலிஃப் தேரே தர்கார்
இல்ம் ந ஆவே விச் ஷுமார் / ஜாந்தி உமர் நஹீ(ன்) இஃத்பார்”
(ஏட்டறிவு போதும் என் நண்பனே!
அலிஃப் ஒன்றுதான் உன் தேவை எல்லாம்
ஏட்டறிவு அளவின்றி வந்துகொண்டே இருக்கும்
நீ எதுவரை இருப்பாய் என்று யார் அறிவார்?)

 
சூஃபி மரபின் தாக்கம் போர்ஹேயிடம் இருந்திருக்கலாம். ஆனால் அலிஃப் என்னும் கோட்பாட்டை போர்ஹே சூஃபி மரபில் இருந்து பெறவில்லை. அதை அவர் வேறொரு மரபில் இருந்து பெற்றார் என்றுதான் சொல்லவேண்டும். அது அவரே மிகவும் ஈடுபாடு காட்டி வந்த ‘கப்பாலா’ (KABBALAH) மரபு.


(TO BE CONTINUED...) 













2 comments:

  1. 'அலிஃபிலிருந்து இறங்கிய புள்ளி
    ஆச்சர்யம் நிகழ்த்தியது'.

    ‍-- அரபுத்தமிழன் மஸ்தானின்
    ஆச்சர்யக்குறி(யீட்டு)க் கவிதை :)

    'புல்லாக்கி ஜானோ மே கோன்' பாட்டு வந்த
    பிறகு பாபா புல்லி ஷா பற்றி தெரிய வந்தது.

    ReplyDelete
  2. எவ்வளவு நுணுக்கமான செய்திகள் நண்பரே! எங்கும் கிடைக்காது. தொடரட்டும் விஷயதானம்.நன்றி!

    ReplyDelete