Thursday, September 15, 2011

சிவாஜி நேசன்


”நைமியப்பா, இதப் பாருங்க, தல எப்பிடி கில்லி மாதிரி இருக்கார்னு”

“அட போடா, பல்லி மாதிரி இருக்கான்… ஹீரோன்னா என் அண்ணே(ன்) சிவாஜிதான்”

“ஒங்ககிட்ட போய் காட்னேனே” என்று சொல்லிக்கொண்டே, தனக்கு வந்திருந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினான் சல்மான். 

திண்ணையில் என்னுடன் உட்கார்ந்திருந்த நைமியப்பா தன் வாயில் மீதமிருந்த நாலைந்து பற்கள் தெரிய குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். தாளாத சிரிப்பு மெல்ல துருப்பிடித்து வந்து இருமலாக இடிந்தது. தோளில் கிடந்த டர்க்கி டவலால் வாயைப் பொத்தி அப்படியே துடைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு அறுபத்தெட்டு வயது ஆகியிருந்தது. வெளியே நடமாடுவது நின்றுபோனது. ஜும்மாவுக்கு மட்டும் பெரிய பள்ளிக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். மற்றபடி அந்தத் திண்ணையே பகல் உலகம், வீடே இரவுலகம், ஒரு வருஷமாக.

நைமியப்பா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். அந்த வயதில் அவரைப் பார்க்கும்போதுகூட, சட்டையையும் கைலியையும் நீக்கி அரையில் ஒரு துண்டைக் கட்டிவிட்டால்… குளிர் தாங்காமல் கைகளைக் கட்டிக் கொண்டு நடுங்குவாரானால் திருவருட் செல்வர் போலவே இருப்பார் என்று நான் நினைத்ததுண்டு. இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். நாம் யாருக்காவது தீவிர ரசிகராக இருக்கிறோம் என்றால் அவருடைய சாயலில் பேச்சு, பார்வை, அசைவுகள் எல்லாம் உருக்கொண்டு விடுகின்றன. உருவத்திலும்கூட அந்தச் சாயல் படிந்துவிடுகிறது. நான் பள்ளியில் படித்திருந்த நாட்களில் ஆறுமுகம் என்றொருவன் இருந்தான். வெறித்தனமான ரஜினி ரசிகன். தலைமுடியை அவன் சிலுப்பி விட்டுக்கொள்வதும், இடுப்பில் கைவைத்து நிற்பதும், பந்துமுனைப் பேனாவைக் காற்றில் டைவ் அடிக்க விட்டு வாயால் லாவகமாகக் கவ்வுவதும், முறைத்துப் பார்ப்பதும் என்று அச்சு அசலாக அப்படியே சூப்பர் ஸ்டாரைக் கேவலப் படுத்துவது போல இருப்பான். கலியமூர்த்தி ஐயா பிரம்பால் விளாசும்போது எல்லா மாணவர்களும் ஆஸ் ஊஸ் என்று கையை உதறிக்கொண்டு கதறுவார்கள். ஆனால் ஆறுமுகம் அதில் வீறுமுகம் காட்டுவான். முதல் அடி விழுந்ததும் “ஹஹ்ஹஹா…ஹா… ஹா… ஹா…” என்று ஸ்டைலாக அண்ணாந்து சிரித்து ஐயாவை வெறுப்பேற்றி, தொடர்ந்து இன்னும் இரண்டு அடிகள் வாங்கிய பிறகுதான் “ஹா…ஹாவ்…வ்வ்வ்…வூ…” என்று அழத் தொடங்குவான். அதை நாங்கள் அப்போது மிகுந்த வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்போம். அதெல்லாம் ஒருவித தவம் என்பது இப்போதுதான் புரிகிறது. ஆனால் என் முகத்தில் எந்த நட்சத்திர சாயலும் படியவில்லை. ஒருவேளை ஏகப்பட்ட பேருக்குத் தீவிர ரசிகனாக இருந்தேன் என்பதால் எவருடைய சாயலும் படமால் தப்பித்துவிட்டேன் போலும்.


நைமியப்பாவின் முகபாவனையில் சிவாஜி கணேசனின் சாயல் இருந்தது. குரலிலும் இருந்தது. அறுபதுகளில் நைமியப்பா தன் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ஃப்ரேம் செய்யப்பட்டு கூடத்தில் தொங்குகிறது. அதில் அவர் கோட்சூட் அணிந்து லேசாகப் பக்கவாட்டில் பார்ப்பதுபோல் இடது பக்கம் நிற்கிறார். நடுவில் சீனியத்தாவும் வலதுபக்கம் ராமகிருஷ்ண ஐயங்காரும் நிற்கிறார்கள். முன்னால் இருவர் அமர்ந்திருக்கிறார்கள். அதைக் காட்டி ”’அந்த நாள்’ சிவாஜி மாதிரி இருக்கேன்ல?” என்பார். அப்போதெல்லாம் அப்படித்தான், நைமியப்பா ரொம்ப மார்டனாக இருந்தார். ‘இந்தியாவின் மார்லன் ப்ராண்டோ’ என்னும் பட்டம் சிவாஜி கணேசனுக்கு என்றால், எங்கள் கிராமத்தின் மார்லன் ப்ராண்டோ நைமியப்பாதான். 

அந்த நாட்களைத் தன் ரசனையின் வசந்த காலம் என்றே நைமியப்பா எப்போதும் நினைவு கூர்வார். நன்கு மழித்த முகத்தில் உதட்டுக்கு மேல் கீறியது போல மையால் மீசை வரைந்துகொள்வது அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் வழக்கமாக இருந்ததாம். ஒல்லியாக இருந்த தன் உடற்கட்டு பற்றி அவருக்கு மிகவும் விசனம் உண்டாகுமாம். எப்படியாவது சிவாஜி கணேசன் மாதிரி பூசினாற்போன்ற உடல்வாகு பெற்று இன் செய்த சட்டை எடுத்துக்காட்டுகின்ற லேசான தொப்பையுடன் வலம் வந்து கன்னியரின் மனங்களைக் கவர வேண்டும் என்று பெரிதும் ஆசை கொண்டிருந்ததாகச் சொல்வார். சிவாஜி ரசிகர்கள் பத்து பேர் சேர்ந்து ரசிகர் மன்றமும் வைத்திருந்தார்களாம். ஒவ்வொருவருக்கும் ஒரு புனைபெயர் இருந்தது. நைமியப்பா ‘சிவாஜி நேசன்’ என்று புனைபெயர் சூடிக்கொண்டார். சிவாஜி கணேசன் என்ற பெயருடன் ஒலியமைப்பில் இயைந்துள்ள பெயர் அது என்பதை ஒரு நண்பர் சுட்டிக் காட்டியபோது அவருக்குப் பெருமை தாங்கவில்லை. ரசிகர் மன்றத்துக்கு அவரே தலைவராக இருந்திருக்கிறார்.
சிவாஜி நடித்த படம் வெளியாகும் போதெல்லாம் புத்தாடைகள் அணிந்து தியேட்டருக்குச் செல்வதை ஒரு சிரத்தையான கடமையாகக் கடைப்பிடித்துள்ளார். “என்னங்கத்தா, பெருநாளுக்குப் புதுத்துணி போட்டுக்கிட்டு பள்ளிவாசலுக்குப் போவோம் சரி, அப்பிடியா சினிமாவுக்கும் போனீங்க? அந்தளவுக்கா சிவாஜி மேல க்ரேஸு?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டே விட்டேன். சிரித்துக் கொண்டே நிதானமாகச் சொன்னார், “அது ஒருவிதக் காதல் மாதிரிங்க தம்பி. சொல்லப்போனா காதல விட இன்னும் பெரிய பைத்தியம் அது. சிங்கப்பூரு அஜீஸ் ராவுத்தர் இருக்காறே, அவரு எளமையில ஒரு ஆங்க்லோ இண்டியன் புள்ள மேல ஆசப்பட்டாரு. அவ பொறந்த நாளன்னிக்குத் தானும் புதுத்துணி உடுத்துவாரு. அது மாதிரிதான் இதுவும். ஒரு காலம் வரைக்கும் அப்பிடி இருந்திச்சு. அண்ணே(ன்) மெய்ன் ஹீரோவா நடிக்கிறது கொறய ஆரம்பிச்சப்ப அந்தப் பழக்கம் போயிடிச்சு.”

பி.ஏ முடித்துவிட்டு (உண்மையைச் சொன்னால் அவர் பாஸாகவே இல்லை) ஊருக்கு வந்து கடையில் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் மனம் அதில் லயிக்காமல் கசந்து கிடந்ததாம். நோட் நோட்டாகக் கதைகளும் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்த காலகட்டம் அது. எப்படியாவது சிவாஜி நடிக்கும் ஒரு படத்திற்குத் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களைத் தான் எழுதிவிட வேண்டும் என்னும் கனவு அவருக்குள் வேர் விட்டிருந்தது. 


1960-இல் கே.ஆசிஃப் இயக்கத்தில் “முகலே ஆஸம்” வெளிவந்தது. அப்போதே முப்பது லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மெகா திரைப்படம் அது. சலீம்-அனார்க்கலி ஜோடியின் காதலைச் சொல்லும் அந்தக் காவியம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் நூற்றி ஐம்பது தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. திலீப் குமார் முகலாய இளவரசர் சலீமாகவும், மதுபாலா இளவரசர் சலீமின் காதலியான அனார்க்கலியாகவும் நடித்திருந்தார்கள். அந்தப் படம் நைமியப்பாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அனார்க்கலியாக மதுபாலா நடித்ததில் அவருக்கு யாதொரு ஆட்சேபனையும் இருக்கவில்லை. ஆனால், அண்ணன் சிவாஜி கணேசன் இருக்க இத்தனை பெரிய ப்ராஜக்டில் இன்னொரு நடிகன் சலீமாக நடிப்பதா? அதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ”சலீம் ரோல் மட்டுமில்ல தம்பி, மாமன்னர் அக்பர் ரோல்ல ப்ரித்விராஜ் கபூர் நடிச்சிருந்தார். அந்த ரோலையும் சேத்தே எங்கண்ணே(ன்) சிவாஜிகிட்ட குடுத்திருந்தா இன்னும் பிரமாதமா பண்ணீருப்பாரு” என்றார். நான் தாங்கமுடியாமல், “ஆமாங்கத்தா, நீங்க சொல்றதுகூட கொஞ்சம் கம்மிதான். அனார்க்கலி ரோலையும் சேத்தே சிவாஜிட்ட கொடுத்திருக்கலாம். பிச்சு ஒதறீருப்பாரு” என்றேன்.

’முகலே ஆஸம்’ படத்தை நைமியப்பா பதினைந்து முறை பார்த்ததாகச் சொன்னார். திருச்சியில் பிரபாத் தியேட்டரில் ஒரு வெற்றிப் படமாக ஓடியதாம். அந்தத் தியேட்டரில் சிவாஜி தன் பால்ய வயதில் வேலை செய்ததாகவும் சொன்னார். அப்போது சிவாஜி தன் பெற்றோர்களுடன் சங்கிலியாண்டபுரத்தில் வசித்த வீடு இன்னமும் இருக்கிறது. ’சின்ன எஜமான்’ என்றழைக்கப்பட்ட அப்துஸ்ஸமது ராவுத்தருடன் ஏ க்ளாஸில் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்த்ததாகப் பெருமையுடன் சொல்லிக்கொள்வார். “படம் ஆரம்பிச்சு ஓடீட்டிருக்கு. சலீம் வளர்ந்து வாலிபனாயிர்றான். சலீம்னு திலீப் குமார காட்டுறாங்க. நானும் பாக்குறேன். என் மனசுக்குல்ல என்ன ஓடுதுங்கிற? திலீப் குமார் மொகமே தெரியல எனக்கு. சிவாஜியண்ணன் மொகம்தான் தெரியுது. அதுலயும், எறகு ஒன்னு எடுத்து அனார்க்கலியோட கன்னத்துல மெதுவா தடவிக் கொடுப்பானே சலீமு, அந்த ஷாட்ல திலீப் குமாருட்ட எமோஷன் பத்தல தம்பி. என் அண்ணே(ன்) மட்டும் நடிச்சிருந்தார்னா?.... அடடா, அட்டகாசமால்ல இருந்திருக்கும்!” என்று தன் மனக்குறையை ஒருமுறை இறக்கி வைத்தார். தேங்காய் வியாபாரம் லாப கதியில் தொண்ணூறு டிகிரியில் விறுவிறு என்று ஏறுவது போலவும், ஆறு மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய் தன் கையில் புரள்வது போலவும், அதை வைத்து முகலே ஆஸம் படத்தைத் தமிழில் தயாரித்து, சிவாஜியை சலீமாகவும் அக்பராகவும் நடிக்க வைத்து ஒரே நாளில் உலகெங்கும் ஐநூறு தியேட்டர்களில் வெளியிட்டு, அது தொடர்ந்து எல்லா தியேட்டர்களிலும் இரண்டு வருடங்கள் ஓடி அமோக வெற்றி பெற்று, அண்ணன் சிவாஜி கணேசன் ஆஸ்கார், நோபல் முதலிய சகல விருதுகளையும் வாங்குவது போலவும் அடிக்கடி பகற்கனவு கண்டு மகிழ்ந்திருந்ததை நைமியப்பா என்னிடம் மட்டும் ஒரு தொண்ணூறு தடவையாவது சொல்லியிருப்பார்.


வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு மட்டும் பள்ளிக்கு வரும் நைமியப்பா வெள்ளை ஜிப்பாவும் கைலியும் அணிந்து தோளில் கறுப்பு அல்லது மரூண் நிறத்தில் பொடிக் கட்டங்கள் போட்ட மெல்லிய துண்டு போர்த்தி தலையில் மரூண் நிறத் துருக்கித் தொப்பி வைத்துக் கொண்டு வருவார். இரு பக்கமும் வயிறு வரை தொங்கும் சால்வை முனைகளை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு பள்ளிவாசல் படிக்கட்டில் கம்பீரமாக நின்று சிங்கம் பார்ப்பது போல் இடமும் வலமும் ஒரு பார்வை பார்ப்பார். இந்தப் போஸ்கூட அவருக்கு அண்ணன்.சி.கவிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு. அது சரிதான். ‘பாவ மன்னிப்பு’ படத்தின் போஸ் அது என்று ஜாகிர் சிச்சா சொன்னார்கள். பிறகு அதைப் பற்றியும் நான் நைமியப்பாவிடம் கேட்டேன். அதே நிதானமான சிரிப்புடன் அலமாரியில் இருந்து அந்தத் துருக்கித் தொப்பியை எடுத்து என் கையில் கொடுத்தார். உயரமான வட்டமான தொப்பி அது. மேல் பகுதியில் இருந்து குதிரை வால் தொங்குவது போல் குஞ்சம் வைத்த தொப்பி. இப்பவெல்லாம் அதைப் போட்டுக் கொண்டு குஞ்சம் ஆட ஒருவன் நடந்து சென்றால் பயல்கள் ஏகத்துக்கும் கேலி செய்வான்கள். ஆனால் ஒரு காலத்தில் அது ஃபாஷனாக இருந்ததாம். “இந்தத் தொப்பிதான் தம்பி அப்ப இருந்த ஃகான் சாகிபுகள்லாம் போட்டிருப்பாங்க. காயிதே மில்லத் சாகிபும் இந்த மாடல்தான் போட்டிருந்தார். எங்க அத்தாவும் ஐயாவும் இந்த மாதிரித் தொப்பிதான் போட்டிருந்தாங்க. ஊருக்குப் பெரியவங்க இல்லியா? பின்னால ஃபாஷன் மாறிச்சு. ராம்பூர் தொப்பி போட ஆரம்பிச்சாங்க. அப்துல் சமது சாகிபு ராம்பூர் தொப்பிதான் போட்டிருப்பார். ரொம்ப இளமையா ஷோக்கா இருக்கும். இப்பல்லாம் பல மாதிரி தொப்பி போடுறாங்க.” என்று சொல்லி சில நொடிகள் பேசாமல் இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார், “அண்ணே(ன்) பாவ மன்னிப்பு படத்துல முசுலிம் ரோல்ல நடிச்சிருந்தார். அதுல இந்தத் தொப்பிதான் போட்டிருப்பார். அப்பத்தான் நானும் தொப்பி அணிய ஆரம்பிச்சேன். திருச்சிக்குப் போய் இந்தத் தொப்பி கெடைக்குதான்னு பாத்தேன். அங்க கெடைக்கல. நம்ம சேக்தாவூது மெட்றாஸுக்குப் போனவரு வாலாஜா பள்ளிவாசல் பக்கத்துல இது கெடச்சுதுன்னு வாங்கிட்டு வந்து குடுத்தாரு. மச்சான் இவ்வளவு பிரியமா நம்மல நெனப்பு வச்சு வாங்கிட்டு வந்தாரேன்னு அப்பதான் அந்த மேற்கு வயக்காட்டுல பிரச்சனையா நின்ன நாலு செண்ட்ட அவருக்கு விட்டுக் குடுத்தேன்.”

(அண்மைக்காலத்தில் வெளியான ‘பொக்கிஷம்’ என்னும் படத்தில் சேரன் இந்த மாதிரித் தொப்பியை அணிந்துகொண்டுதான் இஸ்லாத்தில் ஆகி நிக்காஹ் முடிப்பது போல் கனவு காண்பதாக ஒரு பாடல் காட்சி வருகிறது. நைமியப்பா இவ்வுலகில் இல்லாத இந்த நேரத்தில் இதை எப்படி நான் அவருக்குச் சொல்வது?)

எண்பதுகளில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வந்தபோது நைமியப்பாவுக்கு மீண்டும் பழைய சிவாஜி படங்களை அவ்வப்போது பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஞாயிற்றுக் கிழமையானால் சாயங்காலம் என்ன படம் போடுகிறார்கள் என்று மிக ஆவலாக எதிர்பார்ப்பார். ஒரு முறை “சாந்தா சக்குபாய்” என்று ஒரு படத்தை ஒளிபரப்பினார்கள். அது நைமியப்பாவின் தாத்தா காலத்துப் படம். அவர் சரியான கடுப்பாகிப் போனார். “போடுறானுங்க பாரு படம்னு. ஹைதர் காலத்துல எடுத்ததெல்லாம் தூசித் தட்டியெடுத்துப் போடுவானுங்க. பராசக்தி, திரிசூலம் மாதிரி புதுப் படங்களாப் போட்டா என்ன?” என்று சொல்லி நிறுத்தி எங்களைப் பார்த்தார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தது ஏன் என்று விளங்காமல் அவரும் சேர்ந்து சிரித்தார். பெருநாட்களை ஒட்டி வரும் வெள்ளிகளில் தூர்தர்ஷனில் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி வந்தால் அதில் நிச்சயமாக “எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி” என்னும் பாடல் இடம்பெறும். நைமியப்பா மிகுந்த பரவசத்துடன் அந்தப் பாடலை ரசித்துக் கொண்டாடுவார். தாளம் போட்டுக்கொண்டே வெடுக் வெடுக்கென்று தலையை ஆட்டுவார். அந்தப் படம் வெளிவந்த சமயத்தில் ஊரில் நடந்த மீலாது விழாவில் குஞ்சம் வைத்த தொப்பியும் தோளில் சால்வையுமாய் கையில் ஒரு தப்ஸ் வைத்துக் கொண்டு இந்தப் பாடலை அவர் பாடியிருக்கிறார். பின்னாளில் அதே போல் “நல்ல மனசில் குடியிருக்கும் நாகூராண்டவா…” என்னும் பாடல் வெளிவந்தபோது அதைப் பார்த்துவிட்டு நக்கலாக “அண்ணே(ன்) மாதிரி ஆவனும்னு ஆசப்படுறானுங்கப்பா எல்லாரும். உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமாப்பா?” என்று தன் சகாக்களிடம் சொன்னாராம்.

என் நண்பனின் தம்பி ஒருத்தன் ஆலிம் பட்டம் பெற்றபோது அவன் முதன் முதலாக வெள்ளிக் கிழமை பயான் செய்வதற்காகப் பெரிய பள்ளியில் ஏற்பாடு செய்தோம். சும்மாவே அவன் தத்தித் தத்திதான் பேசுவான். கன்னி பயான் என்பதால் ரொம்பவும் பயந்து போயிருந்தான். ஆயத்து ஹதீஸ் எல்லாம் குறிப்பு எழுதி ஒரு காகிதத்தைக் கையில் வைத்திருந்தான். உள்ளங்கை வேர்த்துக் குறிப்புக்கள் அழிந்து சோதனை செய்துவிட்டது. தத்துபித்தென்று சின்னப்பிள்ளை போல் உளறிக் குழறி ஒருவழியாகப் பேசி முடித்தான். திருதிரு என்று அவன் முழி பிதுங்கித் தடுமாறியதைப் பார்த்து எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பிரபலமான வெள்ளிமேடைப் பேச்சாளிகளிடம் சில டெக்னிக்குகள் உள்ளன. பாவம் அவனுக்கு அவை தெரியவில்லை. குறிப்புச்சீட்டை வெறுங்கையில் வைக்கக் கூடாது, ஒரு கர்ச்சீப்பை மடித்து வைத்துக்கொண்டு அதன் மீது வைத்துக் கொள்ள வேண்டும். அதை குனிந்து பார்க்கக் கூடாது. இமை தாழ்த்தி மட்டுமே பார்க்க வேண்டும். நாம் அப்படி அதைப் பார்க்கிறோம் என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது ஒரு ப்ளஸ் பாய்ண்ட். முடிந்தால் அதற்காக ஒரு கூலிங்கிளாஸ் அணிந்துகொள்ளலாம். ஜும்மா முடிந்ததும் அந்த இளம் ஆலிமுக்கு நைமியப்பா தன் வீட்டில்தான் விருந்துக்குச் சொல்லியிருந்தார். சாப்பிட்ட பிறகு நாங்கள் திண்ணையில் அமர்ந்தோம். நைமியப்பா அவனிடம் உரையாடினார்.

“எங்கே ஓதுனீங்க தம்பி?”
“வேலூர்ல”
”ம்.. பயான்ல எதுக்கு இவ்வளவு பதட்டம்?”
“இதுதான் முதல் தடவை பயான் பண்றேன். அதுனால டென்ஷனா இருந்திச்சு”
”நீங்க சொல்ற பதில ஏத்துக்க முடியில தம்பி. பராசக்தி பாத்திருக்கீங்களா?”
“என்னாது?,,,”
“சிவாஜியண்ண(ன்) நடிச்ச முதல் படம். பராசக்தி. ‘சக்சஸ்’னு சொல்லிக்கிட்டே எண்ட்ரி ஆவாரு. கலைஞர் அப்பிடி ராசியா வசனம் எழுதிக் கொடுத்தாரு. அதுல கோர்ட் சீன் ஒன்னு வருதே பாத்ததில்லியா நீங்க?”
“இல்லையே...”
“அட என்ன ஆளு தம்பி நீங்க, அப்புறம் எப்பிடி பயான் பண்ண கத்துப்பீங்க? சிவாஜியண்ண(ன்) படங்களப் பாத்தீங்கன்னா உணர்ச்சிகரமாப் பேசுறது எப்பிடின்னு கத்துக்கிறலாம். அதுக்காகவாவது பாருங்க. நமக்குத் தேவையான வித்தை யாருட்ட இருந்தாலும் எங்க இருந்தாலும் கத்துக்கிறணும். என்ன, நான் சொல்றது புரிஞ்சுதா?”

அவன் மிரண்டுபோய் தலையாட்டினான். அத்தோடு அங்கிருந்து கிளம்பினோம். நடந்து போகையில் என்னிடம் கேட்டான், “என்னண்ணே, ஒரு ஆலிமப் பாத்து படம் பாக்கச் சொல்லி இவரு நசீஹத்துப் பண்றாரு?”
“இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆளப் பாத்திருக்கியா நீ?
“இல்ல”
“அதுதான் நைமியப்பா. உள்ள சுத்தமான வெள்ள. நீ ஆலிம்னு ஒனக்கே ஒரு நெனப்பு வந்து அவரு பேசுனது தப்புன்னு தோணுது. நீ நல்லாப் பேசணும்கிற அக்கறையிலதானே அப்பிடிச் சொன்னாரு? அதப் புரிஞ்சுக்க. அவரு சொன்னத கேக்கணும்னு அவசியமில்ல. தனக்குத் தெரிஞ்சத அவரு சொல்றாரு, அவ்வளவுதான்”

கி.பி.2000, ஜூன் மாதம் நைமியப்பா உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தவரைப் பார்க்கச் சென்றேன். தூங்கிக் கொண்டிருந்தார். கடுமையான ஜுரமும் வயித்தாலையும் என்று அவரது மூத்த மகன் கமாலுத்தீன் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார்கள். இருபது நாட்கள் ஓடியிருக்கும். நான் கடையில் இருந்தபோது சைக்கிளில் அரக்கப் பரக்க வந்த சல்மான் என்னை அழைத்துக்கொண்டு போனான். நைமியப்பாவின் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது. ஏதோ புலம்பிக் கொண்டிருந்தார். நான் பேச்சுக்கொடுத்தேன். குரலை அடையாளம் கண்டுகொண்டு கண்களை லேசாகத் திறந்து பார்த்தார்.

“ஏங்கத்தா, சிவாஜியண்ண(ன்) நரகத்துக்குத்தான் போவாராம்ல?” என்றார்.
“என்னப்பா சொல்றீங்க?”
“ஹஜ்ரத் சொன்னாரே?”
“எப்ப?”
“ஜும்மா பயான்ல.. நீ கேக்கலயா?”

கலிமாவை ஒத்துக்கொள்ளாதவங்க வாழ்க்கை இந்த உலகத்தில் சொர்க்கப் பூங்காவாக இருக்கலாம். ஆனால் மறுமை வாழ்வில் அவர்கள் நரகத்தில் பிரவேசித்து அனுபவிக்கப் போகும் தண்டனைகள் பயங்கரமானவை என்று அவ்வார ஜும்மா பயானைத் தொடங்கி அவற்றை சிம்மக் குரலில் கர்ஜித்து விளக்கியிருந்தார் ஹாஃபிஜா. 

“தொழுகை முடிஞ்சது நான் போயி அவருகிட்ட கேட்டேன் தம்பி..”
“ம்..என்ன கேட்டீங்க?”
“ஹாஃபிஜா, சிவாஜியண்ணனுமா நரகத்துக்குப் போவாருன்னு கேட்டேன். கலிமாச் சொல்லாட்டி யாராயிருந்தாலும் நரகந்தான்னு சொன்னாரு. ரசூலுல்லாவோட சிச்சாவே கலிமா சொல்லாம நரகவாதி ஆகிப்புட்டாங்களாம்.”
நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் சட்டென்று என் கையைப் பற்றினார். 
“சிவாஜியண்ண(ன்) ரொம்பப் பாவம்த்தா. கொழந்த மனசுக்காரரு. இப்ப நான் இருக்கிற நெலமையில மெட்றாசுக்கெல்லாம் போக முடியாது. நான் மவுத்தாயிட்டாலும் நீங்க போய் அவர பாத்து வெளக்கமா எடுத்துச் சொல்லுங்க. அவரு கலிமாச் சொல்லட்டும். எனக்காக இதைச் செய்யிங்கத்தா”
நைமியப்பா அதைச் சொல்லத் தொடங்கியபோது முதலில் என் மனதில் சிரிப்பின் அலை ஒன்று மெல்ல எழுந்தது. அவர் சொல்லிமுடிக்கையில் என் கண்கள் கலங்குவதை நான் உணர்ந்தேன். நான் சிரித்துக் கொண்டே அழுதேன்.

5 comments:

  1. சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ரொம்ப அருமையா இருக்கு

    சினிமாவ பத்தி சொல்லிகிட்டே
    இஸ்லாத்த உள்ள நுழைக்கிற
    வித்தை உங்கள தவிர யாருக்கும் வராது

    ReplyDelete
  3. அருமையான பதிவு,
    சரித்திரப் படங்களென்றால் அது சிவாஜி கணேசன்தான்
    என்று மனதில் பதிந்தே விட்டதால், மொகலே ஆசம்
    பார்க்கும் போது திலீப் குமார் மிக மிக மொக்கையாகத்
    தெரிந்ததென்னவோ உண்மைதான் :)

    ஒருவேளை திலீப் குமாரை அதற்கு முந்தையப் படங்களில்
    கண்டிருந்தால் ரசித்திருப்போமோ என்னவோ.

    பதிவின் கடைசி பாரா மனதை என்னவோ செய்கிறது

    ReplyDelete
  4. // அவ பொறந்த நாளன்னிக்குத் தானும் புதுத்துணி உடுத்துவாரு. //

    ஆஹா இது புதுசா இருக்கே!!

    ReplyDelete
  5. ///“சிவாஜியண்ண(ன்) ரொம்பப் பாவம்த்தா. கொழந்த மனசுக்காரரு. இப்ப நான் இருக்கிற நெலமையில மெட்றாசுக்கெல்லாம் போக முடியாது. நான் மவுத்தாயிட்டாலும் நீங்க போய் அவர பாத்து வெளக்கமா எடுத்துச் சொல்லுங்க. அவரு கலிமாச் சொல்லட்டும். எனக்காக இதைச் செய்யிங்கத்தா”///

    சிவாஜி மட்டுமா குழந்தை மனசுக்காரர்? நைமியப்பாவும் அதே மாதிரிதான்.
    இந்த மாதிரி வெள்ளந்தியான மனிதர்களால்தான் மானுடம் வெல்கிறது.

    'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று நிற்கிறார்களே முஸ்லிம்கள் என்று சில சமயம் நினைப்பதுண்டு. ஆனால்,'ஐயோ இவர்கள் எல்லாம் நரகத்திதில் இடர் படப் போகிறார்களே' என்ற் அவர்களுடைய உண்மையான ஆதங்கம்,அல்லவா அவர்களை அப்படிப் பேச வைக்கிறது என்று எண்ணி அமைதியாவேன். ந‌ல்ல நடை. அழகான சித்தரிப்பு.

    நைமியப்பா கற்பனைப் பாத்திரம் போல் தோன்றவில்லை.

    ReplyDelete