Sunday, July 6, 2025

ஹிந்துக்கள் பாடிய ஹுசைன் புகழ்

 

                         உருது, இந்தியத் திருநாட்டில் பிறந்த உன்னத மொழி.

            ’இரண்டு வாட்கள் மோதும்போது இரண்டு பண்பாடுகள் சந்திக்கின்றன” என்று உருதுவில் ஒரு பழமொழி உண்டு. அதற்கு உருது மொழியே சான்றாகவும் உள்ளது.

            பாரசீக வழியிலான இஸ்லாமியப் பண்பாடும் இந்துப் பண்பாடும் உரையாடியபோது உருது மொழி உருவானது. எனவே, அதற்கு ‘ஹிந்துஸ்தானி’ என்றும் இன்னொரு பெயர் உண்டு.

            உருது மொழியை வளப்படுத்தியதில் ஹிந்துக் கவிஞர்களின் பங்கும் பெரிது. அவர்கள் இஸ்லாமின் மீது ஈர்ப்பும், நபியின் மீது நேசமும், நபிக் குடும்பத்தாரின் மீது கண்ணியமும் கொண்டவர்கள். 


            
இஸ்லாமிய வரலாற்றில் ரத்தம் காயாத ஏடாக இருப்பது கர்பலா நிகழ்வு. அதில் கொடுங்கோலன் யஜீத் என்பவனின் படையினரால் நபி (ஸல்) அவர்களின் திருப்பேரர் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களும் அன்னாரின் தூய குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர். இது ஹிஜ்ரி 61-ஆம் ஆண்டில் முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் கர்பலா என்னும் ஊர்ப்புறத்தில் நிகழ்ந்ததாகும்.

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று வீர மரணம் அடைந்த நிகழ்வின் வேதனை இன்றும் பல கோடி முஸ்லிம்களின் இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. அந்தத் துயரத்தில் பங்குகொள்ளும் ஹிந்துக் கவிஞர்கள் பலர் இம்மண்ணில் இருந்தனர், இருக்கின்றனர், இருப்பர் இன் ஷா அல்லாஹ்.

            ஹுசைன் (ரலி) அவர்களின் இறப்பை நினைவு கூர்ந்து பாடப்படும் கவிதைக்கு உருதுவில் மர்ஸியா என்று பெயர். அதனைப் பாடிய ஹிந்துக் கவிஞர்களும் பலர் உள்ளனர். அவர்களின் பட்டியலை காளிதாஸ் குப்தா ’ரஜா’ தொகுத்துத் தந்துள்ளார் [ரஜா என்பது இவரின் புனைபெயர். இமாம் ரஜா ஃகான் பரேலவி அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக இப்புனைபெயர் வைத்துக்கொண்டார்.] அவர்களில் சிலர்:

1.      ராம் ராவ் ‘சைவா’ [இவர்தான் மர்ஸியா எழுதிய முதல் ஹிந்துக் கவிஞர். சைவா என்பது அவரின் புனைபெயர்.]

2.      முன்ஷி சன்னு லால் லக்னவி [’தரப்’ என்னும் புனைபெயரில் கஜல்களும் ‘தில்கீர்’ என்னும் புனைபெயரில் மர்ஸியாக்களும் எழுதியவர்.]

3.     ரூப் கன்வர் குமாரி [கஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பெண். ஆக்ராவில் வாழ்ந்தவர். ரூப் கன்வர் குமாரி எழுதிய மர்ஸியாக்களில் பக்திக்குரிய சொல்லாடல்களும் பாரசீக வெளிப்பாடும் கலந்து அற்புதமாக வெளிப்பட்டுள்ளன. இது அவரின் தனித்தன்மை என்று கருதப்படுகிறது. இவரை ‘மர்ஸியாவின் மீரா’ என்று சொல்லலாம்.]

4.     ராஜா பல்வான் சிங் [பனாரஸ் அரசர் மஹாராஜா சைத் சிங்கின் மகன். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் இவர் பனாரஸை விட்டு வெளியேறினார். ஆக்ராவில் வசித்த இவரின் மகன் நஜீர் அக்பராபாதியின் சீடர் ஆனார். அவரும் பல மர்ஸியா கவிதைகள் எழுதியுள்ளார்]

5.     லாலா ராம் பிரசாத் ‘பஷர்’ [அஹ்லுல் பைத் என்னும் நபிக் குடும்பத்தார் மீது கொண்ட பற்றினாலும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மீது கொண்ட நேசத்தாலும் இவர் தன் வாழ்வின் இறுதியில் கர்பலாவுக்குச் சென்று தங்கி அங்கேயே மரணித்தார்.

6.     மேலும் சிலர்: ஸ்ரீ மக்கன் தாஸ், பாலாஜி தஸம்பக் ‘தாரா’, ஸ்வாமி பிரசாத் ‘அஸ்கர்’, ராஜேந்திர குமார், ராம் பிஹாரி லால் ‘சபா’, சந்திரசேகர் சக்சேனா, கவ்ஹர் பிரசாத் நிகம் ‘விலாயத்’ கோரக்பூரி, முன்ஷி லக்ஷ்மன் நாராயண் ‘சஃகா’, மஹேந்திர குமார் ‘அஷ்க்’, குன்வர் மொஹிந்தர் சிங் பேடி, பஸ்வா ரெட்டி, ஜெய்சிங், கிஷன் லால், கோபி நாத், ஜகன்னாத் ஆஜாத், மற்றும் சந்திர ஷர்மா ‘புவன்’ அம்ரோஹி.



இனி, இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் பற்றி ஹிந்துக் கவிஞர்களின் சிந்தையில் விளைந்த புகழ்ச்சிகளை ருசிப்போம்:

புவன் அம்ரோஹி பாடுகிறார்:

ஹுசைன் இப்னு அலீ (ரலி) ஒருவேளை இந்தியா வந்தால்

ஹிந்துக்கள் அவரை வரவேற்போம்

இமைகள் வருட அவரின் பாதத்தில் முத்தமிட்டபடி!

(ஹிந்த் மேன் காஷ் ஹுசைன் இப்னு அலீ ஆ ஜாத்தே

ஹிந்து ச்சூம்த்தே உன் கெ கதம் பல்கே பிச்சாத்தே)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாற்றைக் கேட்கும் எந்த ஒரு மனிதனும் அறவுணர்வால் அகம் நெகிழ்ந்து கண் கலங்கவே செய்வான். ராஜேந்திர குமார் தன் நேசத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்:

            கர்பலாவின் சரித்திரம் கேட்டு நான் இப்படி அழுதேன்

            நான் ஹிந்துவாகத்தான் இருந்தேன்

            என் கண்கள் ஹுசைனி ஆகிவிட்டன!

                        (இஸ் கதர் ரோயா மேன் சுன் கெ தாஸ்தானே கர்பலா

                               மேன் தொ ஹிந்து ஹி ரஹா ஆன்ஃகேன் ஹுசைனி ஹோ கயீ)

            ”ஹுசைன் என்னில் இருந்து உள்ளவர், நான் ஹுசைனில் இருந்து உள்ளவன்” (அல்-ஹுசைனு மின்னீ வ அன மினல் ஹுசைன்) என்று நபி (ஸல்) சொன்னார்கள். எதார்த்தத்தில் இமாம் ஹுசைனின் வரலாறு நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நீட்சியே ஆகும். ஹுசைனில் இருந்ததெல்லாம் நபி (ஸல்) அவர்கள்தானே! இந்தப் புரிதலோடு ராம் பிஹாரி லால் ‘சபா’ எழுதுகிறார்:

            கர்பலாவில் ஒரு கருவியாகத்தான் இருந்தார்

            ஹுசைன் இப்னு அலீ;

            அடைந்தவர் அங்கே அடைந்துகொண்டார்

நபி முஸ்தஃபாவின் சோதனையை.

                        (கர்பலா மேன் இக் பஹானா தா ஹுசைன் இப்னு அலீ

                              லேனே வாலே நே லியா தா இம்திஹானே முஸ்தஃபா)

            ’இறைநேசம்’ (விலாயத்) என்பது வெறுமனே இறை ஞானம் (மஃரிஃபா) இருப்பது மட்டுமன்று. இப்லீஸ் (ஷைத்தான்) ஆரம்பத்தில் இறைவனைப் பற்றிய அறிவு உள்ளவனாகத்தான் இருந்தான். வானவர்களுக்கே ஆசானாக (முஅல்லிமே மலாஇகா) இருந்தான். ஆனால், அவன் இறை நிராகரிப்பாளன் ஆகி வழிகெட்டுப் போனான். எனவே, இறை நேசம் (விலாயத்) என்பது எப்போதும் நபிக் குடும்பத்தார் மீதான நேசத்துடன் இணைந்து இருக்க வேண்டும். இக்கருத்தை, கவ்ஹர் பிரசாத் நிகம் ‘விலாயத்’ கோரக்பூரி தன் பாடல் வரிகளில் இப்படிச் சொல்கிறார்:

            முடிவற்ற மறுமையும் சொர்க்கமும்

            சுவன நன்னீர்த் தடாகமும் அவருக்காகும்

            நபிக்குடும்பத்தாரின் நேசத்துடன்

            இறைநேசம் இணைந்த ஒருவருக்கே!

                        (ஃகுல்த் உஸ்கீ ஹே ஃகைபான் உஸ் கா, கவ்ஸர் உஸ் கா ஹே

                              ஜிஸ் கோ உல்ஃபத் ஹே விலாயத் ஆலே பயம்பர் கே சாத்)

            அழுகை என்பது இதயத்தின் அங்கசுத்தி (ஒளூ) என்பர் ஞானியர். இறைவனுக்காக அழும் கண்களில் ஞானத்தின் ஒளி பிரகாசிக்கும். இறைத் தூதர்கள் மற்றும் இறை நேசர்கள் மீதான நேசம் என்பது இறை நேசத்தில் அடங்கியதாகும் என்பதால் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் உயிர் நீத்த நிகழ்வை எண்ணிக் கண்ணீர் வடிக்கும் கண்களுக்கு இறைக் கருணையின் கதவுகள் திறக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, முன்ஷி லக்ஷ்மன் நாராயண் ‘சஃகா’ சொல்கிறார்:

            பூர்விகத்தின் உலகில் இருந்து காட்சியாகிறது

            சொர்க்கத்தின் பாதை,

            கர்பலாவில் உயிர் நீத்த தியாகியை

            நினைத்து நான் வேதனையில் அழும்போதெல்லாம்.

                        (நழர் ஆ ஜாத்தீ ஹே பழ்மே அஜல் சே ராஹ் ஜன்னத் கீ

                              ஷஹீதே கர்பலா கே கம் மேன் ஜப் ரோ கர் நிகல்த்தே ஹே)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா களத்தில் நிகழ்த்திய வீரமும் உயிர்த் தியாகமுமே இஸ்லாமிய மூல மந்திரமான திருக்கலிமாவின் அகமிய ஞானத்தையும் அதன் தாத்பரியத்தின் வெளிப்பாடாக இருக்கும் தொழுகையின் உயிர்ப்பையும் மீட்டுத் தந்தன என்று ஞானியர் விளக்குகின்றனர். ’சத்திய இறைவனுக்கு மட்டுமே சிரம் பணிவேன்; அசத்தியத்திடம் தலை சாய்க்க மாட்டேன்’ என்னும் வீறுணர்வை இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் அங்கே உறுதிப்படுத்தினார்கள். தன் மூத்த சகோதரி சய்யிதா ஜைனப் (ரலி) அவர்களிடம் தம் குடும்பத்தாரை ஒப்படைத்து விட்டுக் கூடாரத்தை விட்டு வெளியேறி சிங்கம் போல் களத்துக்குச் சென்றார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியில் கிஷன் லால் இப்படிப் பாடுகிறார்:

            கோவிலில் இருந்து பார் நீ எமது மஸ்ஜிதை

            கூட்டம் முழுவதும் கைக்கட்டி நிற்கிறது;

            ஜைனபின் கைகளை எவர் கட்டிவிட்டாரோ

            அவரின் விதி அங்கே கைக்கட்டி நிற்கிறது!

                        (தேக் மந்திர் சே அப்னீ மஸ்ஜித் கோ

சப் ஜமாத் நே ஹாத் பாந்தே ஹே

                               ஜிஸ்னே ஜைனப் கே ஹாத் பாந்தே தே

உஸ்கே குத்ரத் நே ஹாத் பாந்தே ஹே)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் சிறுவராக இருந்தபோது ஒருநாள் நிகழ்ந்த இன்ப நிகழ்வு ஒன்றை நினைவு கூர்வோம். நபி (ஸல்) தொழுகையில் சிரம் பணிந்த நிலையில் (சஜ்தாவில்) இருக்கும்போது இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் நபியின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டு ’குதிரையே! செல்’ என்று ஓட்டினார்கள். நபி (ஸல்) தன் பிரியமுள்ள பேரருக்காக குதிரையாக பாவித்து விளையாட்டுக் காட்டினார்கள். அத்தகைய இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் பின்னாளில் கர்பலா களத்தினுள் ஒரு புரவியின் மீது அமர்ந்தபடி நுழைந்தபோது பகைவர்கள் அச்சத்தால் திடுக்கிட்டு அரற்றும்படி ‘செம்மறி மந்தைக்குள் புகுந்த சிம்மம் போல்’ நுழைந்தார்கள் என்கிறது வரலாறு. ஷஹ்சவார் என்றால் புரவியின் மீது ஆரோகணித்து வரும் இளவரசர் என்று பொருள். இந்தச் சொல்லினை, ‘மதீனத்து மன்னரான நபியின் மீது அமர்ந்து சவாரி செய்தவர்’ என்னும் அர்த்தமும் தொனிக்கும்படி பேராசிரியர் ஜகன்னாத் ஆஜாத் மிக அழகாகப் பாடியுள்ளார். அவரின் கவிதை இது:

            கொந்தளித்துள்ளது இதோ போர்க்களம்

            ஆயுதங்களின் ஆர்ப்பரிப்பு, ஆரவாரம்;

            கொலை பாதகரின் நடுவில் வந்துள்ளார்

            அவர்கள் அஞ்சி அரற்றும்படி முழக்கமிட்டு,

            இதோ புரவியில் ஆரோகணித்து ஓர் இளவரசர்!

            இப்பக்கம் இப்லீசின் வாரிசுகள் இருக்கின்றனர்;

            அப்பக்கம் மனிதனின் மகத்துவம், கம்பீரம்!

            ஹுசைன் தனியாக வந்துள்ளார் பார்;

            அங்கே, யஜீதின் ஆட்களோ ஆயிரம் பேர்.

            காலச் சக்கரமே! சற்றே நில் இங்கே

            இது போன்ற உதாரணம்

உனக்குக் கிடைக்காது வேறு எங்கும்!    

                        (தூஃபான் பர்ப்பா ஹே கர்ம் ஹே மைதானே கார்ஸார்

                              ஹே காத்திலோன் மேன் மஹ்வே ஃபுகான் இக் ஷஹ்சவார்

                              இப்லீஸியத் இதர் ஹே உதர் இன்சான் கா வகார்

                              தன்ஹா ஹுசைன் அவ்ர் யஜீதி ஹே ஹஜார்

                              ஏ கர்திஷே ஜமானா டெஹர் ஜரா யஹீன்

                              எய்சி மிஸ்லு ஃபிர் ந மிலேகி துஜே கஹீன்.)

            இமாம் ஹுசைன் (ரலி) போன்ற தன்னலமற்ற தியாகி ஒருவர் இன்று இஸ்லாமில் இருந்தால் தானும் அந்த நெறியில் சேர்ந்துவிடுவதாக கோபிநாத் என்பார் சொல்கிறார். அதாவது, இப்போது முஸ்லிம் பெயர்தாங்கிகள்தாம் அவரின் கண்ணுக்குப் படுகிறார்கள். சுயநலமற்ற ஒரு முஸ்லிமைக் கூட அவரால் பார்க்க முடியவில்லை என்பது கருத்து. அவர் இப்படிப் பாடுகிறார்:

            முஸ்லிம் ஆகிவிடுவேன், ஆனால் ஒரு கவலை உள்ளது;

            நேர்வழியை மறந்துவிட்ட ஒருவனாக ஆகிவிடக் கூடாதே!

            கேள்விப்பட்டுள்ளேன், புத்தகங்களில் படித்தும் இருக்கிறேன்

            முன்பொரு முஸ்லிம் இருந்தார், விண்மீனையே அழ வைப்பவர்!

                                    (ஹோ தோ ஜாவூன் மெய்ன் முஸல்மான் மகர் இக் கம் ஹே

                                              ஹோ ந ஜாவூன் கஹீன் ரஸ்த்தே கோ புலானே வாலா

                                              சுன் பீ ரக்கா ஹே, கிதாபோன் மேன் படா ஹே மெய்னே

                                              இக் முஸல்மான் தா ஜஹ்ரா கோ ருலானே வாலா.)

            இந்தப் பாடலின் கடைசி வரியில் உள்ள “ஜஹ்ரா கோ ருலானே வாலா” என்பது மிக அழகாக இருபொருள் கொண்டுள்ளது. ஜஹ்ரா என்பது அருந்ததி விண்மீனை (star of venus) குறிக்கும். இந்த வெளிரங்கமான அர்த்தப்படி, இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணத்தில் பிரபஞ்சமே அழுதது என்னும் பொருளை இவ்வரி தருகிறது. நபி (ஸல்) அவர்களின் மகளாரும் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களின் மனைவியும், சய்யிதுனா இமாம் ஹசன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் அன்னையுமான ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஜஹ்ரா என்று சிறப்புப்பெயர் உண்டு. எனவே, ‘இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர்த் தியாகம் பற்றி நபி (ஸல்) செய்த முன்னறிவிப்பு அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை அழ வைத்தது’ என்றும் இவ்வரி அர்த்தப்படுகிறது.

            ஹிந்துவாக இருந்தாலும் தான் “ஷப்பீர்” என்று அழைக்கப்படும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் பகைவனாக இல்லை என்று கோபிநாத் சுட்டுகிறார். யஜீதும் அவனின் படையினரும் இறை நிராகரிப்பாளரை விட மோசமானவர்கள் என்னும் கருத்தினையே அவர் இப்படி உணர்த்த விரும்புகிறார்:

            நான் ஒன்றும் அல்லன்; மரியாதைக்கு உரியவன் அல்லன்;

            என் பேச்சு பதிவு செய்யத் தகுதியானதும் அல்ல;

            இறை நிராகரிப்பாளன் என்க, இணை வைப்போன் என்க,

            என்னை என்ன வேண்டினும் சொல்வோர் சொல்லுக;

            நான் ஹிந்துதான் ஆனால், ஷப்பீரின் பகைவன் அல்லன்.

                                    (நா ச்சீஸ் ஹூன் மெய்ன் காபிலே தவ்க்கீர் நஹீன்

                                              தக்ரீர் மேரீ லாஇக்கே தஹ்ரீர் நஹீன்

                                              காஃபிர் கஹோ முஷ்ரிக் கஹோ ஜோ கெஹ்னா ஹே கெஹ் தோ

                                             ஹிந்து ஹூன் மகர் துஷ்மனே ஷப்பீர் நஹீன்)

            இதே கருத்தை இன்னோர் இடத்தில் இப்படிப் பாடுகிறார்:

            மார்க்கமற்றவன் நான்,

            வழிகாட்டி அற்றவன் அல்லன்!

            ஹிந்து நான், ஆனால்

            ஷப்பீரின் கொலைகாரன் அல்லன்!

                                    (பே-தீன் ஹூன் பே-பீர் நஹீன்

                                              ஹிந்து ஹூன் மகர் காத்திலே ஷப்பீர் நஹீன்)

            இதே நிலையில் தானும் இருப்பதாக கிஷன் லால் என்னும் கவிஞர் சொல்கிறார், கேளுங்கள்:

            நான் ஹிந்துவாக இருப்பினும் பகைவனாக இல்லை

            நபியின் வாரிசு மீது குறை சொல்பவனாக இல்லை

            என் நெற்றியில் உள்ள சிவப்பை வெறுப்புடன் நோக்காதே

            அது திலகம்தான், ரத்தக்கறை அல்ல!”

                                    (மெய்ன் ஹிந்து ஹோக்கே பீ துஷ்மன் நஹீன் ஹூன்

                                             நபி கீ ஆல் கோ ஷிக்வா நஹீன் ஹே

                                             மேரே மாத்தே கி சுர்ஃகீ பர் ந ஜாவோ

                                             திலக் ஹே ஃகூன் கா தப்பா நஹீன் ஹே.)

            கிஷன் லால் தன் நேசத்தின் உச்சத்தில் இந்த இந்தியத் திருநாட்டையே இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்துவிடுகிறார்:

            கண்ணில் அவரின் வசிப்பிடம்

இதயத்தில் ஷப்பீரின் இருப்பிடம்

இந்த பூமி ஷப்பீருடையது

இந்த வானம் ஷப்பீருடையது

கர்பலாவில் இருந்து இந்தியாவுக்கு

வருவோரிடம் நான் சொன்னேன்

அந்த கர்பலா நாளில் இருந்தே

இந்தியா ஷப்பீருடையது!

            (ஆன்ஃக் மேன் உன்கீ ஜகா தில் மேன் மகான் ஷப்பீர் கா

               யெ ஜமீன் ஷப்பீர் கீ யெ ஆஸ்மான் ஷப்பீர் கா

               ஜப் சே ஆனே கோ கஹா தா, கர்பலா சே ஹிந்த் மேன்

               ஹோ கயா உஸ் ரோஸ் சே ஹிந்துஸ்தான் ஷப்பீர் கா)

மஹிந்தர் சிங் என்னும் கவிஞர் “அஷ்க்” (கண்ணீர்) என்றே புனைபெயர் வைத்துக் கொண்டார். ஆனால் அவரின் கண்ணீர்த் துளிகள் இமாம் ஹுசைன் (ரலி) மீதான நேசத்தில் வைரத் துளிகளாய் மின்னுகின்றன. அவற்றைக் காய்ந்து போகாமல் காக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே கவலையாம். ஏன்? இதோ அவரே சொல்லக் கேட்போம்:

என் இந்த விழிகளின் கண்ணீர்

காய்ந்து போகாதிருக்கட்டும் எப்போதும்;

            அன்னை ஃபாத்திமா ஜஹ்ராவிடம்

            முகம் காட்ட வேண்டும் நான்.

            நான் ஹிந்துக்களை எல்லாம்

            ஹுசைனிகள் ஆக்கப் புறப்பட்டுள்ளேன்!

            ஏற்கனவே எரிந்து கொண்டிருப்போரை

            எரிக்க வேண்டியுள்ளது மேலும்!

                        (யெ மேரீ ஆன்ஃகோன் கே ஆன்சூ ந சூஃக் ஜாயி கஹீன்

                               ஜனாபே ஃபாத்திமா ஜஹ்ரா கோ முன்ஹ் திகானா ஹே

                               மேன் ஹிந்துவோன் கோ ஹுசைனி பனானே நிக்லா ஹூன்

                               ஜோ ஜல் ரஹே ஹேன் உன்ஹே அவ்ர் பீ ஜலானா ஹே)

            ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் நதிகளும் தலையானது கங்கை. இஸ்லாமில் சொர்க்கத்தின் தடாகம் குறிப்பிடப்படுகிறது. அதன் பெயர் ஹவ்ளுள் கவ்ஸர் என்பதாகும். மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிண்ணத்தில் அந்தத் தடாகத்து நீரை மொண்டு புகட்டுவார்கள் என்பது நபிமொழிகள் தரும் செய்தி. இதனால் நபி (ஸல்) அவர்கள் “சாக்கீயே கவ்ஸர்” என்று அழைக்கப் படுகிறார்கள். இனி, பஸ்வா ரெட்டி என்னும் கவிஞர் மிக நுட்பமாக ஒரு கற்பனை செய்கிறார், அதைக் காண்போம்:

            கங்கையிலிருந்து நான் கவ்ஸரிடம் சென்றபோது

            என்னை பார்த்து ஹுசைன் புன்முறுவல் செய்தார்!

            இறைவனற்ற இதயத்திலும் நான் ஹுசைனுக்கு அர்ப்பணம்

            ஹுசைனை அன்றி எனக்கு வேறெவரும் இல்லையே!

                        (கங்கா சே ஜப் பொஹுன்ச்சா மெய்ன் கவ்ஸர் பர்

                               தேக் கர் முஜ் கோ முஸ்குராயே ஹுசைன்

                              பே ஃகுதா தில் சே பீ ஹூன் ஃபிதாயே ஹுசைன்

                              மேரா கோயீ நஹீன் சிவாயே ஹுசைன்)

            பஸ்வா ரெட்டியின் இந்தக் கற்பனையைப் போன்றே குன்வர் மொஹிந்தர் சிங் பேடீ சீஃக் என்பாரும் கற்பனை புரிகிறார். முன்னவரின் கற்பனையில் இமாம் ஹுசைன் வந்தார்கள் என்றால் பின்னவரின் கற்பனையில் நபியே வருகிறார்கள்:

            உயிர்த் தியாகியரின் தலைவரே! நும் பெயர்

என் உதட்டில் எழுகின்ற போதெல்லாம்

கிண்ணத்தை ஏந்தியபடி சாக்கீயே கவ்ஸர்

என் முன்னே தோன்றுகிறார்.

                        (லப் பெ ஜப் ஷாஹே ஷஹீதான் தேரா நாம் ஆத்தா ஹே

                               சாம்னே சாக்கீயே கவ்ஸர் லியே ஜாம் ஆத்தா ஹே)

            இக்கவிஞர் மேலும் சொல்கிறார்:

            இஸ்லாமுக்கு நீங்கள் உயிரூட்டிவிட்டீர்

            உண்மை எது? பொய் எது? காட்டிவிட்டீர்

            வாழ்ந்தபடி சாவதுதான் அனைவருக்கும் இயல்கிறது

            மரணித்தும் வாழ்வது எப்படி? உம்மிடம் பயில்கிறது!”

                        (ஜிந்தா இஸ்லாம் கோ கியா தூ நே

                               ஹக் ஒ பாத்தில் திக்கா தியா தூ நே

                               ஜீ கெ மர்னா தோ சப்கோ ஆத்தா தா

                               மர் கெ ஜீனா சிஃகா தியா தூ நே)

             ஹிந்துக் கவிஞர்கள் பாடிய மர்ஸியாக்களை எல்லாம் தனியாகத் தொகுத்து ஒரு நூல் கொண்டு வர வேண்டும் என்று காளிதாஸ் குப்தா ‘ரஜா’ ஆசைப்பட்டாராம். அந்தப் பணி நிறைவேறும் முன்பே அவரின் ஆயுள் நிறைவு பெற்றுவிட்டது. அதனால் என்ன? அந்தப் பணியைத் தொடர்வதற்கு நூறு நூறு கவிஞர்கள் ’ஸாரே ஜஹான் சே அச்சா’வான இந்த ஹிந்துஸ்தானத்தில் உதித்துக்கொண்டுதான் இருப்பார்கள், இன் ஷாஹ் அல்லாஹ்.

 

1 comment:

  1. மிகவும் அற்புதமான பதிவு
    அல்லாஹ் பெருமைக்குரியவன்.

    ReplyDelete