Tuesday, August 6, 2024

வான்கா

 



            வீட்டின் மிக முக்கியமான புழங்கிடங்களில் ஒன்று மொட்டை மாடி என்றால் ஏற்பீர்களா? இங்கே பலருக்கும் அந்த உணர்வில்லை என்றே தோன்றுகிறது.

            தரையில் மாலை நடை செல்வதை மாற்றி மொட்டை மாடியில் உலவத் தொடங்கியபோது அது ஒரு புது உலகமாக இருந்தது. எங்கள் குடியிருப்புப் பகுதியே வேறொரு கோணத்தில் காட்சியானது. ஆங்கிலத்தில் Bird’s view என்பார்களே, அப்படி. அதை மிகச் சிறப்பாகத் தன் கதை ஒன்றில் பதிவு செய்தவர் யுவன் சந்திரசேகர் என்றே கருதுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ‘விருந்தாளி’ என்னும் கதையில் அவர் எழுதுகிறார்:

            ”எங்கிருந்தோ ஒரு பெண்குரல் எழுந்து உயர்ந்தது. ‘கா…கா…கா…..’ காக்கை லேசாக மேலெழும்பிவிட்டு மீண்டும் அமர்ந்தது. நாலைந்து எட்டுக்கள் தத்தியது. என்னிடம் சொன்னது: ‘வேப்பமரத்து வீட்டம்மாள் கூப்பிடுகிறாள். அவள் பையன் சாப்பிடும் நேரம்.’

            ”காக்கையின் சொற்களின் வழி, என் தெரு கதவிலக்கங்களையும் வாசல் முகப்பின் அலங்கார அடையாளங்களையும் இழந்து, மரங்கள் அடர்ந்த கானகமாக உருக்கொள்வது போல் தென்பட்டது.”

            இது போல், என் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து எட்டுத் திசைகளிலும் முழு வட்டமாகப் பார்க்கையில் வானகமும் இளவெயிலும் மரச்செறிவும் தென்பட்டன.

            மொட்டை மாடியில் வீடு பேறு தரும் நிறைவு இருக்கிறது. மண்படு வாழ்வை விட்டு விடுதலை ஆகி வெகுவாக மேலே உயர்ந்து விண்ணமுதம் பருகும் ஓர் உயிராக மாறிவிட்டோம் என்று தோன்ற வைக்கிறது. அதுவும், எங்கள் வீட்டுப் பகுதி ஏர்போர்ட்டுக்கு அருகில் இருப்பதால் தரை தளமும் ஒன்றாம் தளமும் மட்டுமே கட்ட(ட) அனுமதியுண்டு. எனவே, பக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் வளர்ந்து நின்று தம் நிழல் சாய்க்க வாய்ப்பில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபோது ஒரு வீட்டிலும் மொட்டை மாடியில் ஆட்களைக் காணவில்லை. பலருக்கும் இங்கே அது ஆடைகள் உலர்த்தப் போடும் இடம். இன்னும் சிலருக்கு அது வடகம் வற்றல் காய வைக்கும் இடம்.

            மொட்டை மாடியில் வீட்டாரை விட காக்காயும் குருவியும்தான் அதிகம் புழங்குகின்றன என்று கருதுகிறேன். “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றான் பாரதி. இங்கே அவன் ‘எங்கள் ஜாதி’ என்று கவிஞர்களைத்தான் குறிப்பிடுகிறான் என்று சொல்லலாம். 



அக்கம் பக்கத்தில் இவ்வளவு மரங்களா என்று வியப்பாக இருந்தது. பறவைகளுக்கான உலகம் ஒன்று அதில் இயங்கிக் கொண்டிருந்தது. பக்கத்துக் காலி மனையில் ஓங்கி வளர்ந்து என் வீட்டை விடவும் உயரமாக நிற்கும் வேப்ப மரத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு பறவையைக் காணக் கிடைக்கும். குயில், செம்போத்து, மைனா, வல்லூறு. இன்று ஒரு ஜோடி கிளிகள். இது வேம்பு பழுக்கும் வேனிற் பருவம். அது தன் சிவப்பு அலகால் பொன் மஞ்சளாகப் பழுத்த வேப்பங்கனி ஒன்றைக் கவ்வி எடுத்து லாவகமாகப் புசித்த காட்சியை ரசித்தேன். குறுந்தொகையின் 67-ஆம் பாடலில் அள்ளூர் நன்முல்லையார் இந்தக் காட்சியைப் பதிவு செய்திருக்கிறார்:

            ”______________ _______________ _______________ கிள்ளை

            வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

            புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்

            பொலங்கல ஒருகா சேய்க்கும”

            காசு மாலை என்று ஒன்று இருக்கிறதே, அது இந்தத் தமிழ் மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான டிசைன்! பெண்களுக்கு அதன் மீது தனி ஆர்வம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பொற்கொல்லன் ஒருவன், நீண்டு வளர்ந்து வளைந்த நகங்கள் உள்ள விரல்களால் தங்க இழை ஒன்றில் பொற் காசுகளைக் கோர்க்கிறான்.  அது போல் இருக்கிறதாம் சிவந்து வளைந்த அலகால் வேப்பம் பழத்தைக் கிளி உண்ணும் காட்சி.

            கீழே மரங்களிடை இட்ட கட்டடப் பரப்பு என்றால், மேலே? விழிகள் மலர விரிவானை நோக்கியிருந்தேன். வானத்தை நோக்கியிருந்தால் மனமும் விரியும் என்கிறது ஸூஃபி உளவியல். அரசர்கள் தினமும் சற்று நேரம் வானம் பார்க்க வேண்டும். அஃது அவர்தம் உள்ளத்தை விசாலமாக்கும் என்று இமாம் கஜ்ஜாலி எழுதியுள்ளார்கள். யான் அதை அனுபவித்தேன்.

            ’வானம் எனக்கொரு போதி மரம்’ என்னும் பாடல் வரி நினைவுக்கு வந்தது. ஒரு மரம் மட்டுமா அது? அது ஒரு நீலக் காடு அல்லவா? வான்கா!

            அந்த நீல வானக் காடு மண்ணின் காடு போல் உறைந்து உருச் சமைந்தது அன்று. அதில் களிற்று யானைகள் பையப் பைய மான்களாகவும் மாறும், மரங்களாகவும் ரூபிக்கும். மேகங்கள் வெள்ளியாய் மின்னி வெண் வண்ணம் காட்டி, சாம்பல் நிறமுற்று அப்பால் பொன் வண்ணமாகிப் பிறங்கும்.

            எமது மூதூரின் அடையாளமாகச் சொல்லப்படுவது மலைக்கோட்டை. மேலும், பொன்மலை, காஜா மலை ஆகிய இரண்டு குன்றுகளும் உண்டு. வானத்திலோ நூறு நூறு வெள்ளிப் பனிமலைகள், இமய வெற்புகள். வரி வரியாய், கட்புலனாகா நதிகளின் மணல் படுகைகள்.

அந்த மேக மலைகளின் மீது யாமும் கோட்டைகள் கட்டுகிறோம். மனக் கோட்டைகளா அவை? அல்ல, அல்ல. சிறுமிகளின் மனநிலை அடைந்து யாம் இழைக்கும் சிற்றில்கள். கூர்ந்து நோக்கினால் தெரியும், மனிதர்கள் தம் வாழ்வில் ‘தன்னைப் பிழிந்த தவம்’ போல் சிரமப்பட்டுத் தீட்டுகின்ற திட்டங்கள் யாவும் இறைவன் எழுதும் விதியின் காலுதைப்பில் பொசுக்கென்று உடைந்து போகும் மணல் வீடுகளே. மனிதர்கள் யாவரும் “முற்றில்லாத பிள்ளைகளோம் முலைகள் போந்திலோம்” என்னும் நிலையில் இருப்பதால், அவனும்கூட ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யாக நடந்து கொள்கிறான். புட்கள் சிலம்பும் அரவம் கேட்டு விழித்தெழுவோருக்கே அவன் சற்குருவாக வாய்க்கிறான். இவை எல்லாம் குறியீடுகளின் உள்ளர்த்தங்கள்.

இதெல்லாம் இருக்கட்டும். மொட்டை மாடியிலேயே ஒருவர் வசித்துவிட முடியாது. எதார்த்த வாழ்வு கீழே அழைக்கும்போது இறங்கித்தான் ஆக வேண்டும். பாதத்தில் மண் தோய நடந்துதான் ஆக வேண்டும். என்ன, பாதத்தில் ஒட்டி உதிரும் மண் கண்ணில் விழாமல் பார்த்துக் கொண்டால் போதும். 

Thursday, August 1, 2024

அங்கு உன்னைச் சந்திக்கிறேன்

 


”ரூமியின் வைரங்கள்” நூல் சீர்மை பதிப்பகத்தின் சார்பில் மறு வெளியீடாக வரவிருக்கிறது, இன் ஷா அல்லாஹ். அதில் தேவையான இடங்களுக்கு அடிக்குறிப்புகள் எழுதிச் சேர்த்து வருகிறேன். அடிக்குறிப்புகள் பொதுவாக ஓரிரு சொற்றொடர்களில் அமைந்து விடும். இந்த அடிக்குறிப்பு ஒரு பக்க அளவுக்கு வந்துள்ளது:



நன்மை தீமை எனும்

நினைவுகளுக்கு அப்பால்

உள்ளது ஒரு வெளி

உன்னை அங்கே சந்திக்கிறேன்


 -  இந்த வரிகளுக்கான மூலக் கவிதை தீவானே ஷம்ஸ் என்னும் நூலில் உள்ள 395-ஆம் ருபாயீ என்னும் நான்கடிக் கவிதை ஆகும். அதன் ஃபார்சி ஒலிபெயர்ப்பு: “அஸ் குஃப்ரோ ஸ இஸ்லாம் பிரூன் ஸஹ்ருஹாயீஸ்த் / மா ரா ப-மியானே ஆன் ஃபஸா ஸவ்தாயீஸ்த் / ஆரிஃப் ச்சூ பதான் ரசீத் சர்-ரா ப-நிஹத் / நை குஃப்ரோ ந இஸ்லாம் ந ஆஞ்சா ஜாயீஸ்த்.” இதன் பொருளாவது: “இறை நிராகரிப்புக்கும் இஸ்லாமுக்கும் அப்பால் ஒரு பாலைவனம் இருக்கிறது; அந்தப் பாழ்வெளியின் மத்தியில் நமக்கொரு பெருநிதி இருக்கிறது / அங்கே சென்றடையும் இறைஞானி தன் தலையைச் சாய்க்கிறார் / அந்த இடத்தில் நிராகரிப்பும் இல்லை, இஸ்லாமும் இல்லை, அங்கே இடம் என்பதே இல்லை!”



இந்தக் கவிதையைப் பற்றி ’சாஹிபுஸ் ஸைஃப்’ ஷைஃகு அப்துல் கரீம் அல்-கிப்ரீஸி அந்-நக்‌ஷபந்தி (ரஹ்) அவர்களின் ஆன்மிகப் பிரதிநிதி (கலீஃபா) ஷைஃகு லுக்மான் எஃப்பந்தி அவர்கள் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். அதிலிருந்து சில கருத்துக்கள் பின்வருமாறு:



“இந்த ஒரு வரியைப் பற்றி நான் நீண்ட காலமாகச் சிந்தித்து வந்திருக்கிறேன். நான் பகடி பேசுவதாக நினைக்க வேண்டாம். நிஜமாகவே சொல்கிறேன், அந்த ஒரு வரியைப் பற்றி நான் நெடுங்காலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். எதையாவது நானே கருத்துப் பண்ணிக்கொண்டு, ‘ஓ அவர் இதைச் சொல்கிறார், அதைச் சொல்கிறார்… இதன் படி இப்படிச் சொல்கிறார்… என்றெல்லாம் கூறுவதற்காக அல்ல. நம் குருநாதர் (ஷைஃகு எஃப்பந்தி) நமக்கு போதித்திருப்பதன் வெளிச்சத்தில் அதைப் பார்க்கிறேன். ஏனெனில், ஒரு ஞானியின் வார்த்தைகள் இன்னொரு ஞானியால்தான் விளக்கப்பட முடியும். எந்த அறிஞரும் அதற்கு விளக்கம் சொல்லிவிட முடியாது. அவர்கள் விளக்கினாலும் அது உங்களுக்கு யாதொரு பயனும் தராது. அவர் உங்களின் இதயத்தை, உயிரைத் தொட மாட்டார். பயன் இல்லை. அவர்கள் உங்களுக்கு மிகவும் அறிவார்ந்த, மிகத் தெளிவான விளக்கத்தைக் கூறலாம். ஆனால் அது உங்களைத் தொடப் போவதில்லை. ஏனெனில் ஞானி ஒருவரின் சொற்கள் ஞானியால்தான் விளக்கப்பட வேண்டும். அப்போது அது உங்கள் இதயத்தைத் தொடும்.

“சிலர் இந்த வரியை இப்படி மொழிபெயர்க்கிறார்கள்: ’நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அப்பால் ஒரு வெளி இருக்கிறது, அங்கே உன்னைச் சந்திக்கிறேன்.’ நல்ல மொழிபெயர்ப்பு. ’ஹலால் மற்றும் ஹராம் ஆகியவற்றுக்கு அப்பால் ஒரு வெளி இருக்கிறது. உன்னை அங்கே சந்திக்கிறேன்’ இரண்டுக்கும் இடையில் என்ன இருக்கிறது? ஹலாலுக்கும் ஹராமுக்கும் நன்மைக்கும் தீமைக்கும் இடையில், என்ன இருக்கிறது?

”நீங்கள் செய்ய வேண்டியது என்ன? விட வேண்டியது என்ன? நீங்கள் செய்ய முடிந்தது என்ன? செய்ய முடியாதது என்ன? அங்கே இருக்கும் வெளி என்ன? அந்த இடம் என்ன? அது என்ன?

ஒரு முரீது சொல்கிறார்: ’ஷரீஅத்’

“இல்லை, ஷரீஅத் என்பது சரியும் தவறும், நன்மையும் தீமையும் பற்றியது. அதுதான் ஷரீஅத்.

இன்னொரு முரீது சொல்கிறார்: “சுயேச்சை”

“இல்லை. சுயேச்சையானது அல்ல.

“அது ஷரீஅத் அல்ல. எனவே அது ஷரீஅத்தை விடவும் உயர்வான ஒன்றாக இருக்க வேண்டும். இப்போது நாம் ஹகீக்கத், மஃ’ரிஃபத் இத்தியாதிகளைப் பற்றிப் பேச வேண்டாம். இப்போது விடயம் சுய இச்சைக்கு அப்பாலாகிவிட்டது. இப்போது அது சுய நாட்டத்துக்கு (இஃதியார்) அப்பால் ஆகிவிட்டது, புரிகிறதா?

“சுயேச்சை என்றால் நீங்கள் இன்னமும் உங்கள் நாட்டத்தைச் செலுத்துகிறீர்கள் என்று பொருள். இங்கேதான் நாம் சுய இச்சையை, சுய நாட்டத்தைக் காட்டி வருகிறோம். அதற்கு அப்பால் என்ன இருக்கிறது? நீங்கள் சுயேச்சை என்கிறீர்கள். ஆனால் அதற்கும் அப்பால் ஒன்று இருக்கிறது. இப்போது, சுயேச்சைக்கு அப்பால் உள்ளது என்ன?

”அது அல்லாஹ்வின் நாட்டம், இல்லையா?

“அல்லாஹ் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாலானவன் அல்லனா? நிச்சயமாக. ஷர்ரிஹி வ ஃகைரிஹி மினல்லாஹ்… அவை அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன. நன்மையும் தீமையும் அல்லாஹ்விடம் இருந்தே வருகின்றன. நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்.

“அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ் நன்மையானவன். அல்லாஹ் நன்மைக்கும் அப்பாலானவன். நீங்கள் நன்மை என்றும் நீங்கள் தீமை என்றும் நினைப்பவற்றை விட்டும் அப்பாலானவன். தஸவ்வுஃப் (ஸூஃபித்துவம்) என்ன கற்பிக்கிறது? ஹஜ்ரத் ரூமி (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள் ஸூஃபித்துவத்தை போதிக்கிறார்கள். அவர் விவரிக்கவில்லை, அவர் விவரிப்பதற்காகக் கவிதைகள் எழுதவில்லை. அவர் போதிக்கிறார், நம்மை அல்லாஹ்விடம் நெருக்கமாக்குகிறார். அல்லாஹ் நமக்கு அளித்திருக்கும் சுய நாட்டம், அது பற்றி நமது ஷைஃகு என்ன போதித்திருக்கிறார்கள்? ஸாஹிபுஸ் ஸைஃப் பல தடவை சொல்லியிருக்கிறார்கள், அல்லாஹ் நமக்கு அளித்திருக்கும் சுய நாட்டம், அதை நாம் அல்லாஹ்விடமே திருப்பி அளிக்கிறோம்.

“உங்களுக்குப் புரிகிறதா?

“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் சுய நாட்டத்தை நீங்கள் அர்ப்பணித்து விடுகிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், சமிஃ’னா வ அதஃ’னா (நாங்கள் செவியேற்றோம், கீழ்ப்படிந்தோம்) உன்னிடமிருந்தே, எம்மிடம் இருந்து அல்ல, யாம் எமது சுய நாட்டத்தைக் கொண்டு நன்மை தீமை சரி தவறு என்று சிந்திப்பதை அல்ல. இல்லை, நாங்கள் சுய நாட்டத்தை உன்னிடமே திருப்பியளித்து விடுகிறோம். எங்கள் ரட்சகனே! இப்போது நின் நாட்டமே எமது நாட்டம். அடிபணிதல். அர்ப்பணமாதல். காதல் என்பது இல்லை எனில் நீங்கள் அர்ப்பணிப்பு என்பதை அடையவே முடியாது. ஏனெனில் காதலனே அடிபணிகிறான். அவன் ஒருபோதும் எழுந்து நின்று தன்னைக் காட்டிக் கொள்வதில்லை. அவன் சொல்கிறான், ‘நீயே, நீ மட்டுமே, நான் அல்லன்.’”