Monday, July 22, 2024

ஹோஷ் பர் தம்

 

(பேராசிரியர் ஹாஜி. சே.மு.முஹம்மதலி அவர்களின் "இனிய திசைகள்” மாதிகையின் ஜூலை 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)



            கடந்த சில நாட்களாக மூச்சுப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். ஸூஃபிகளிடம் ஒரு சொலவடை உண்டு: ஹோஷ் பர் தம் (மூச்சில் கவனம்).

            இன்று அதிகாலை – விடியலுக்கு முந்தைய நேரத்தில் – சிந்தையில் ஒரு விளக்கம் உண்டானது, நான் யாரிடமோ பேசுவது போல், அல்லது யாரோ என்னிடம் பேசுவது போல்.

            இரண்டு பேர் இப்போது மிகவும் உடல் நலம் குன்றிய நிலையில் இருக்கிறார்கள். இருவருக்குமே நினைவுகள் தப்பி விட்டன. ஒருவர் ஆண்; மற்றவர் பெண். இருவருக்குமே இப்போது முன்பு மாதிரி வழிபாடுகள் செய்ய முடியவில்லை. அதிலும், அந்தப் பெண்மணி படுத்த படுக்கையாகிவிட்டார். எலும்பும் தோலுமாக மெலிந்து விட்டார். முதுமையின் இந்த அவல நிலையை அண்மையில் கண்டு அது என் மனத்தை மிகவும் பாதித்திருக்கிறது. அதைப் பற்றிய சிந்தனைகள் ஓடுகின்றன.

            இதில் ஓர் ஆச்சரியமான ஒற்றுமை. முதுமையால் முடங்கிக் கிடக்கும் இந்த இருவருக்கும் ஒரே பெயர்: ஷரீஃப் மற்றும் ஷரீஃபா. இந்தப் பெயருக்கு கண்ணியமானவர்கள், சிறந்தவர்கள் என்று அர்த்தம். ஏனைய படைப்புகளுக்கு இல்லாத மேன்மை (ஷராஃபத்) அருளப்பட்டவன் மனிதன். எனவே அவன் “அஷ்ரஃபுல் மஃக்லூகாத்” – படைப்புக்களில் மிகச் சிறந்தவன் என்று போற்றப்படுகிறான். ஆனால், முதுமையின் அவலத்தை நோக்கும்போது மனம் திடுக்கிடத்தான் செய்கிறது.

            ’நாம் யாருக்கு ஆயுளை நீட்டுகிறோமோ படைப்பில் அவரை குறைபட்டவர் ஆக்கிவிடுவோம். அவர்கள் விளங்கமாட்டார்களா?’ (மன் நுஅம்மிர்ஹு நுனக்கிஸ்ஹு ஃபில் ஃகல்க்கி அஃபலா யஃகிலூன் – குர்’ஆன் 36: 68) என்று அல்லாஹ் சொல்கிறான்.

            இந்தத் திருவசனத்திற்கு உதாரணம் போல் தமது ஆயுளின் அந்திமக் காலத்தில் சாய்ந்து கிடப்போர் பலரையும் பார்க்கத்தான் செய்கிறோம். அன்ன ஆகாராம் உட்செல்லாத நிலையில் கிடப்போரைப் பற்றி விசாரிக்கும்போது ஒன்று சொல்வார்கள்: “மூச்சு மட்டும் இருக்கு.”

            மரணம் என்பது அந்த மூச்சும் கூட திணற ஆரம்பிக்கும் நிலையாகும். “மூச்சுத் திணறும் மரணத் தருணம்” என்று என் குருநாதர் பாடியிருக்கிறார்கள். “தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு அது சுழி மாறிப் போனாலும் போச்சு” என்பது தமிழில் ஒரு முதுமொழி.

            இதைச் சிந்திக்கும்போது ஒரு விளக்கம் பளிச்சிட்டது. ஆம், மூச்சு மட்டுமே இறுதி வரை இயங்கி வருகிறது. எனவே, இறுதி வரை இறை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் மூச்சில்தான் செய்ய வேண்டும். எனவேதான் ஸூஃபிகள் ’மூச்சு திக்ரு’ என்னும் பயிற்சியை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு மூச்சிலும் இறைதியானம் இருக்க வேண்டும். ஒரு மூச்சுகூட இறைவனை மறந்த நிலையில் வீணாகிப் போய்விடாமல் சுதாரிப்பாக இருப்பதையே ’ஹோஷ் பர் தம்’ என்கின்றனர். இந்தப் பயிற்சிக்கு ‘பாஸே அன்ஃபாஸ்’ (மூச்சைப் பாதுகாத்தல்) என்று பெயர் வைத்துள்ளனர்.



            மனிதன் உடலால் வழிபாடுகள் செய்கிறான். அது இளமைக் காலத்தில் அதிகமாகச் செய்ய இயல்வதாகும். ஆனால் முதுமை முற்ற முற்ற உடல் வலிமை குறைவு படுவதால் உடலால் செய்யும் வழிபாடுகளும் குறைந்து போகின்றன. நின்று தொழுகை செய்த பலர் அமர்ந்து விடுகின்றனர். கண் பார்வை மங்குவதால் நீண்ட நேரம் குர்’ஆன் பிரதியைப் பார்த்து ஓத முடியாமல் ஆகிறது. ஆனால், உடல் ஓய்ந்தாலும் மூச்சு இயங்குகிறது. எனவே, மூச்சில் இறைநினைவை இணைக்கும் கலையைப் பயின்று பயிற்சி செய்ய வேண்டும்.

            எவருக்கு இறைவன் ஆயுளை நீடிக்கிறானோ அவர்களைப் படைப்பில் பலகீனமாக்கி விடுகிறான் என்பது பொது நியதிதான். என்றாலும், இறைநேசர்கள் இதற்கு விதிவிலக்காக இருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் செய்யும் வழிபாடுகளை இளைஞர்கள்கூட செய்ய முடிவதில்லை.  ஏனெனில் இறைநேசர்களுக்கு உடலை மிகைத்த உயிர்ப்பு (ரூஹானிய்யத்) அருளப்படுகிறது. 

            ஆம். ஃகல்க் (படைப்பு) நிலையில் அவர்கள் மெலிந்தாலும் ஹக் (இறைவனை)க் கொண்டு அவர்கள் வலிமையடைகின்றனர்.

            ”தஃகல்லகூ பி-அஃக்லாக்கில்லாஹ்” – ’இறைவனின் பண்புகளைக் கொண்டு உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்’ என்னும் நபிமொழிப்படி இறைநேசர்களில் ஹக்கின் திருப்பண்புகள் நிறைகின்றன.

            என் குருநாதர் எப்போதும் சொல்வார்கள், ”உடல் நலம் (ஆஃபியத்)துடன் கூடிய நீடித்த ஆயுளுக்காகப் பிரார்த்தியுங்கள். அதற்கு அடுத்த நிலையில் பொருளாதார அபிவிருத்தி.”

ஆம், பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை அல்லவா? ஆனால் மனிதர்கள் பொருள் ஈட்டுவதில்தான் தம் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். பொருள் வேண்டாம் என்றோ குறைந்த பொருளே போதும் என்றோ அமைதிபடும் வாழ்முறை, பண்பாடு இன்று இல்லை. ’பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே’ என்கிறார் இளையராஜா.

“அல் ஹாக்குமுத் தகாஸுர்; ஹத்தா ஸுர்த்துமில் மகாபிர்” (அதிகம் ஈட்டிக் குவிக்கும் பேராசை உங்களை மறதியில் ஆழ்த்திவிட்டது; நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை – குர்’ஆன் 102:1-2). பேராசை பற்றி வேதம் ஓதும் பேரோசை நின் செவியில் கேட்டிலையோ, அன்றி நீதான் செவிடோ, எம்பாவாய்?

மனிதர்கள் தம் இறுதி மூச்சு வரை வீணாக்கி விடுகின்றனர். எனவே, மூச்சைப் பற்றிய விழிப்புணர்வு எவருக்கு இளம் வயதிலேயே உண்டாகி, இறை தியானத்தில் மூச்சினை ஈடுபடுத்தும் சித்திக்கப் பெறுவாரோ அவர் தன் இம்மை மற்றும் மறுமை வாழ்வு தித்திக்கப் பெறுவார். இதில் ஐயமில்லை.

அத்தகைய இறைநேசர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வழிபாடுகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகும். எனவே, மூச்சில் தியானிக்கும் பயிற்சியில் ஈடுபடுக. இது பற்றி நபிகள் நாயகம் நவிலும் நன்மாராயம் (பஷாரா) ஒன்று சமிக்ஞை (இஷாரா) தருகிறது: தூபா லிமன் தால உம்ருஹு வ தால அம்ருஹு (எவரின் ஆயுள் நீட்டப்பட்டு அவரின் நற்காரியங்களும் நீட்டப்படுகிறதோ அவருக்கு நன்மாராயம்!)

            இதனுடன் தொடர்புடைய இன்னொரு செய்தியும் நினைவில் எழுந்தது. என்றேனும் வாட்ஸாப்பில் இடுகையனுப்பும் ஆன்மிக சகா உத்தமபாளையம் அப்துல் காதிர் பிலாலி அவர்கள் ஐந்து நாட்களுக்கு முன் இடுகை ஒன்றை எனக்கு முன்னகர்த்தியிருந்தார். அதில் கல்வத்து நாயகம் (ரஹ்) சொன்ன பாடல் வரிகள் இருந்தன:

            ”ஞானமும் கல்வியும் நாழி அரிசிக்குள்ளே

            நாழி அரிசியை நாய் கொண்டு போய்விட்டால்

            ஞானமும் கல்வியும் நாய்பட்ட பாடே”

            ”ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” என்பது ஔவையின் வாக்கு (தனிப்பாடல் #57). அவ்வயின் நோக்கின், ஔவையின் பாடலுக்கு கல்வத்து நாயகம் (ரஹ்) மேலும் நுட்பமான விளக்கத்தை ஸூஃபி பரிபாஷை கொண்டு பாடியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அதன் உட்பொருள் என்ன? யார் சொல்வது? 



ஏர்வாடி மு.முகம்மது சலாகுதீன் என்பார் இப்பாடலுக்கு அவரறிந்த விளக்கத்தைச் சொல்லியிருந்தார்:

“நாழி என்றால் கால்படி அளவைக் குறிப்பதாகும். கால்படி என்பதை கால்+படி(தல்) அதாவது கால் என்கிற மூச்சு ஓட்டத்தை சரக்கலையின் வாயிலாக படிய வைப்பதைக் குறிப்பதாகும்.   … … … மேலும் இதில் அரிசி என்கிற பதம் மிகவும் நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரிசி நமக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை. நெல் விதையில் இருந்து உமியை (மேல்வுரை தொலியை) நீக்கியப் பின்னரே அரிசி என்பது கிடைப்பதைப் போன்று சுவாசத்தில் ஏற்படுகின்ற கசடுகளை நீக்கி சுவாசத்தில் ஒரு சமநிலை பிறக்கின்ற போது உமி (தொலி) நீக்கிய அரிசியை போன்று தூய அறிவு பயனுள்ளதாக உலகிற்குக் கிடைக்கிறது. சுவாசத்தி நுட்பங்களை அறியாத மனிதர்களிடமிருக்கும் தூய அறிவினை நாய் என்கிற சைத்தான் மனோ இச்சையை தூண்டி களவாடிக் கொண்டு போய்விட்டால் ‘ஞானமும் கல்வியும் நாய் பட்ட பாடே’. மனிதன் உலகிற்கு ஏன் வந்தோம் என்கிற நோக்கத்தை அறியாமல் உலகின் மாயவலையில் சிக்கி உலகியல் தேவைக்காகவே மறுமையின் நற்பேறுகளை மறந்து இறுதி மூச்சுவரை நாய் போல் உலகில் அலைந்து திரிந்து தேடி தேடியது தேடியபடி கிடைக்காததால் நிராசையுடன் இறுதியில் துன்பத்தின் பிடியில் அகப்பட்டு மரணப் படுக்கையிலே வீழ்ந்து மரணிக்கிறான்.”

இதில் அரிசி என்பதற்குச் சொல்லப்பட்டிருக்கும் நயவுரையை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்னும் தமிழ்ப் பழமொழி இதைத்தான் உணர்த்துகிறது. நம் சுவாசங்கள் அழுக்காகவும் ஒழுங்கற்றும் உள்ளன. மூச்சைத் தூய்மை செய்தால், அதாவது சீர்படுத்தினால், அகத்தைத் தூய்மை செய்யலாம்.

இப்படியெல்லாம் சிந்தனைகள் இன்று எற்பாட்டு வேளையில் ஓடிக் கொண்டிருந்தன. இப்போது, காலை உணவுக்குப் பின்னர், மடிக்கணினியில் நூல் ஒன்றைத் திறந்தேன். ரஷாத் ஃபீல்டு என்பார் எழுதிய “The Last Barrier” (கடைசித் தடை) என்னும் நாவல். மூன்று மாதங்களுக்கு முன்பு வாசிக்க ஆரம்பித்து வேறு வேலைகளின் காரணமாக மூன்று அத்தியாயங்களுடன் நிறுத்தி வைத்திருந்தேன். தொடரலாம் என்று எடுத்து நான்காம் அத்தியாத்தை ஆரம்பித்தேன். அதன் ஆரம்பத்தில் இப்னு அறபி (ரஹ்) அவர்களின் மேற்கோள் ஒன்று இருந்தது:

            ”தெய்வீக மூச்சில் எல்லாம் அடங்கியுள்ளன, வைகறை விடியலில் நாள் அடங்கியிருப்பது போல்.”



            இதை வாசித்ததும் என்னிச்சை ஏதுமின்றி மூச்சு ஆழப்பட்டது. தொடர்ந்து வாசித்தபோது இன்னுமொரு வியப்பு. ஹமீத் என்னும் ஸூஃபி இந்தக் கதையின் நாயகனுக்கு மூச்சைப் பற்றிப் போதிக்கிறார்:

            ”இந்தக் காலை நேரத்தில் நான் உனக்கு மூச்சைப் பற்றிக் கொஞ்சம் கற்றுத் தரப் போகிறேன். மூச்சே வாழ்வின் ரகசியம் என்பது உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன். ஏனெனில் மூச்சு இல்லாமல் எதுவும் இல்லை. சரியான சுவாசிப்பால் நீ பயணிக்க விரும்பும் பாதையைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமாகும். காற்றைக் கவனி – அது வீசும்போது பூமியை விட்டு மேலே தூக்க முடிந்த எடையற்ற எதனையும் ஏந்திச் செல்கிறது.  அது பூக்களின் நறுமணத்தை எடுத்துச் செல்கிறது, மரங்களில் இருந்து உதிரும் இலைகளைக் கொண்டு போகிறது, செடிகளில் இருந்து விதைகளைச் சுமந்து சென்று அவை எங்கே வேர் பிடிக்க வேண்டுமோ அங்கே போடுகிறது. இதில் ஒரு பெரிய செய்தி இருக்கிறது! நாம் மூச்சைக் கொண்டுதான் இவ்வுலகில் வருகிறோம், மூச்சைக் கொண்டுதான் இவ்வுலகை விட்டுச் செல்கிறோம். எந்திரம் போல் வாழும் சராசரி மனிதன் தன் மரணத் தருணம் வரை மூச்சைப் பற்றி மறதியிலேயே இருக்கிறான். மரண வேளையில் அவன் தன் நுரையீரலுக்குள் மூச்சை இழுக்கப் போராடுகிறான், இவ்வுலகின் வாழ்க்கை என்று அவன் அறிந்ததின் மிச்ச சொச்சத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தவிக்கிறான்.”

            மேலே நான் சொன்ன செய்திகளின் பிழிவு போல் இந்தப் பத்தி அமைந்திருக்கிறது அல்லவா? மூன்று மாதங்கள் கழித்து திடீரென்று யோசனை வந்து இந்த நாவலை எடுத்து, இந்தப் பத்தியை வாசிக்க நேர்ந்தது எப்படி? இதில் வியக்க ஒன்றுமில்லை. எல்லாம் ஒரே உள்ளமையில் இருப்பவைதாம். ’இனம் இனத்தோடு சேரும்’ என்பது ஒரு ஞான வாக்கியம்.     

 

(29-05-2024-இல் எழுதியது;

”இனிய திசைகள்” ஜூலை 2024-இல் வெளியானது.)

Thursday, July 18, 2024

இத்ரீஸ் ஷாஹ்…?

 


            அண்மையில் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அதைப் பற்றிய குறுஞ்ச் செய்தி ஒன்றை சகோதரர் உவைஸ் எனக்கு அனுப்பியிருந்தார்.



            அந்த நூலின் பெயர் “Empire’s Son, Empire’s Orphan”; எழுதியவரின் பெயர் நைல் கிரீன். இந்த நூல் எதனைப் பற்றியது? “The Fantastical Lives of Ikbal and Idries Shah” என்று அதன் அட்டையிலேயே ஒற்றை-வரியம் (one-liner) குறிப்பிடப்பட்டுள்ளது. ஈண்டு இக்பால் என்று குறிப்பிடப்படுபவர் அல்லாமா இக்பால் அல்லர்; இவர் இத்ரீஸ் ஷாவின் தந்தையான சர்தார் அக்பர் அலீ ஷாஹ் (1894-1969) என்பவராவார். இதனை கவனம் கொண்டு மேற்செல்க.

            இக்பால் அலீ ஷாஹ் மற்றும் இத்ரீஸ் ஷாஹ் ஆகியோரின் குற்றங் குறைகளை இந்நூல் விவரிக்கிறது. தந்தையும் தனையனும் தம் சிந்தை சித்தரித்த கற்பனைக் கதைகளால் ஐரொப்பிய அறிவுலகை மயக்கிவிட்டனர் என்பது குற்றச்சாட்டின் சாரம்.



            நான் பெரிதும் மதிக்கும் அறிஞர் அன்னிமேரி ஷிம்மெல் சொல்கிறார்: “இத்ரீஸ் ஷாஹ்வையும், தி ஸூஃபீஸ் உள்ளிட்ட அவரின் நூற்ளையும் ’சீரியஸ்’ஆன மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.” பீட்டர் லம்பான் வில்சன் என்பாருக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் மேலும் சொல்கிறார்: “அவருக்கு கல்விப்புலப் பின்னணி இல்லை. அவரின் விட்டேற்றியான எழுத்துக்கள் இயைபு படுத்த முடியாத விடயங்களால் நிரம்பியுள்ளன. வரலாற்று ஈடுபாடோ சுழியம். துல்லியம் துக்குனியூண்டு மட்டுமே… ஓர் அறிஞராக இல்லாவிடினும் ஆழமான ஆத்மானுபவம் கொண்ட ஒருவரை, அவரால் தன்னை ‘கல்விப்புல’ பாணியில் வெளிப்படுத்திக் கொள்ள முடியாவிடினும், அவரின் சொற்களில் உண்மையும் நேர்மையும் சுடர்விடும் எனில், ஸூஃபி என்று ஏற்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அது ஒரு பிரச்சனை அன்று. ஆனால், வெறும் பாசாங்குகளை முன் வைக்கும் இத்ரீஸ் ஷாஹ்வை என்னால் ஏற்க முடியாது.”



            சகோதரர் உவைஸ் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியை வாசித்துவிட்டு வெகு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ”நான் நேசித்த நூற்கள்” என்னும் நூலில் இத்ரீஸ் ஷாஹ் பற்றி ஓஷோ சொல்லியிருக்கும் கருத்தையும் நினைவு கூர்ந்தேன்: “இந்த மனிதனின் ஒவ்வொரு நூலையும் நான் பரிந்துரைக்கிறேன். பயப்பட வேண்டாம், நான் இன்னமும் பைத்தியமாகத்தான் இருக்கிறேன்! என்னை எதுவும் தெளிய வைக்க முடியாது. ஆனால், இத்ரீஸ் ஷாஹ்வின் ஒரு நூல் ஏனைய நூற்கள் அனைத்துக்கும் மேலே உயர்ந்து நிற்கிறது. எல்லாமே அழகான நூற்கள்தாம். அவை அனைத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் தி ஸூஃபீஸ் (ஸூஃபிமார்) என்னும் இந்த நூல் ஒரு வைரம். தி ஸூஃபீஸில் அவர் செய்திருக்கும் பணியின் மதிப்பு அளவிட முடியாதது. பேசுவது எனக்கு எளிதான ஒன்றுதான். தூங்கும்போதுகூட என்னால் பேச முடியும், அதுவும் தர்க்க பூர்வமாக! நல்லது. இது போன்ற ஒன்றை எப்போது நான் அடையாளம் கண்டாலும் அதை நான் பாராட்டுவேன். இது மிகவும் அழகானது – இத்ரீஸ் ஷாஹ்வின் தி ஸூஃபீஸை நீங்கள் புரிந்து கொண்டால் இதையும் புரிந்து கொள்வீர்கள். அவர்தான் மேற்குக்கு முல்லா நஸ்ருத்தீனை அறிமுகப்படுத்தியவர். அதன் மூலம் அவர் மகத்தான பணி செய்துள்ளார். அவருக்குக் கைம்மாறு அளிக்க இயலாது. மேற்கு என்றென்றைக்குமாக அவருக்குக் கடன்பட்டே இருக்க வேண்டியதுதான். எளிய சிறிய நஸ்ருத்தீன் கதைகளை இத்ரீஸ் ஷாஹ் மேலும் அழகாக்கிவிட்டார். அந்த குறுங்கதைகளைத் துல்லியமாக மொழிபெயர்ப்பது மட்டுமன்று, அவற்றை அழகு படுத்தவும், அவற்றை மேலும் சிந்தனையுடையதாக்கவும், கூர்மையாக்கவும் அவரால் இயன்றுள்ளது. நான் அவரின் நூற்கள் அனைத்தையும் (என் பட்டியலில்) சேர்க்கிறேன்.”

            அன்னிமேரி ஷிம்மெல் கூறுவதில் நான் ஏற்கும் கருத்தும் இருக்கிறது, மறுக்கும் கருத்தும் இருக்கிறது. அதே போல் ஓஷோ கூறுவதிலும்.



            இத்ரீஸ் ஷாஹ்வின் பெருநூல் என்று கருதப்படும் தி ஸூஃபீஸ் என்னும் நூலினை நான் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அது ஓர் அருமையான நூல் என்றே இன்றளவும் கருதுகிறேன். பின்னர், மௌலானா ரூம்யின் வாழ்வில் நூறு கதைகள், தர்வேஷ்களின் கதைகள், முல்லா நஸ்ருத்தீன் கதைகள் 1-5 பாகங்கள் என்று அவரின் ஏழு நூற்களைத் தமிழாக்கமும் செய்துவிட்டேன். உண்மையில் என் கருத்தில் இத்ரீஸ் ஷாஹ் பற்றிய மதிப்பீடு என்ன?

            இத்ரீஸ் ஷாஹ்வை ஒருபோதும் நான் ஒரு ஸூஃபி மகான் என்றோ இறை நேசர் அல்லது இறை ஞானி என்றோ கருதியதில்லை. ஆனால் அவர் ஸூஃபித்துவம் பற்றி பரக்க எழுதிய ஓர் ’அறிஞர்’ என்றே கருதுகிறேன்.

            சிக்கல் எங்கே வருகிறதென்றால், அன்னிமேரி ஷிம்மெல் சொல்வது போல் அவர் ’ஆதார’பூர்வமாக எழுதவில்லை, புனைவுகளைக் கலந்து எழுதியிருக்கிறார் என்னும்போது அவரை எவ்விதத்தில் அறிஞர் என்று ஏற்க முடியும் என்பதில்தான். அகாடெமிக் ரீதியில் அவர் ஓர் அறிஞர் என்றும்கூட ஏற்கப்பட முடியாதவர் என்று அன்னிமேரி கருதுகிறார். அதனால்தான், “சீரியஸ்” மாணவர்கள் அவரின் நூற்களைத் தவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால், நான் யோசித்துப் பார்க்கிறேன், இந்த சீரியஸ் மாணவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? அவர்களால் ஸூஃபித்துவத்தில் ஈடுபட முடியுமா? ஸூஃபித்துவம் வெறுமனே அகாடெமிக் ஆராய்ச்சியன்று. சொல்லப்போனால், சீரியஸ் மாணவர்கள் அதில் நடைபோட முடியாது என்றே சொல்லலாம். ஏனெனில் அது பகுத்தறிவுப் புலம் அன்று. உன் அறிவைக் கழற்றி வைத்துவிட்டு வா என்பதே அத்துறையில் முதல் நிபந்தனையாக இருக்கும். நாகூர் ரூமி எழுதிய “திராட்சைகளின் இதயம்” நாவலை வாசித்துப் பாருங்கள், நான் சொல்வது புரியும். ஸூஃபித்துவத்துக்கு ’சீரியஸ்’ மாணவர்கள் தேவையில்லை, ’சின்சியர்’ சீடர்கள்தாம் தேவை.

            புத்தகங்களை வாசிப்பதால் ஒருவர் ஸூஃபியாகிவிட முடியாது என்பதை ஸூஃபி மகான்கள் காலந்தோறும் வலியுறுத்தி வந்துள்ளனர். இதில் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி நூற்களை ஸூஃபி மகான்கள் பெரிதாகவே கருத மாட்டார்கள் என்பதற்கான நியாயங்கள் உண்டு. அத்தகு நூற்கள் ஸூஃபித்துவத்தின் உள்ளுணர்வுப் புலனை விட்டும் வெகு தொலைவிலானவை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

            இத்ரீஸ் ஷாஹ் பற்றிய ஓஷோவின் மேற்கோளை மீண்டும் படித்துப் பாருங்கள். கல்விப் புலம் சார்ந்த இறுக்கமான தர்க்க ரீதியான சிந்தனை முறை அமைந்த ஒருவருக்கு அது பித்தனின் பிதற்றல் போன்றுதான் ஒலிக்கும். இத்ரீஸ் ஷாஹ்வின் நூற்களும் பல இடங்களில் அது மாதிரிதான் எதிர்பாராத திருப்பங்களைக் காட்டிக் கொண்டே இருக்கும். ஸுஃபித்துவம் என்பதற்கு “ஃகிலாஃபே ஆதத்” – பழக்கங்களுக்கு முரண்படுதல் என்று ஒரு வரையறை உண்டு!

            இத்ரீஸ் ஷாஹ் ஒரு சூஃபி நெறியின் குருவாகவோ பிரதிநிதியாகவோ அறியப்பட்டவர் அல்லர். அவர் இன்ன ’சில்சிலா’ என்னும் குருவழித் தொடரைச் சேர்ந்தவர் என்று நான் எங்குமே வாசித்ததில்லை. தான் அனைத்து சூஃபி நெறியிலும் வல்லவர் என்பது போல் அவரின் எழுத்துக்களில் தொனிக்கலாம். அதைத்தான் அன்னிமேரி ஷிம்மெல் சாடுகிறார் எனில் அதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

            ஆனால், ஸூஃபிப் பள்ளிகளின், குறிப்பாக நவீன கல்விப் போக்கிற்கு இயைந்து செல்பவற்றின் ‘சின்சியர்’ சீடர்களுக்கு ‘சமிக்ஞைகள்’ வழங்குகின்றவை என்று அவரின் நூற்களைக் கருதுகிறேன். அவ்வகையில் அவை முக்கியமானவை என்றே சொல்ல வேண்டும்.   

Saturday, July 13, 2024

தெள்ளத் தெளிந்தார்க்கு…

 


”தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்” என்கிறார் திருமூலர்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவர் சீவனைச் சிவன் என்று சொல்லவில்லை, சிவலிங்கம் என்றே குறிப்பிடுகிறார். ஜீவான்மாவே பரமான்மா என்பதைச் சைவ சித்தாந்தம் ஒப்பாது.

பசுவே பதி ஆகிவிடாது. பசு பதியைச் சேரும். அப்போது, ஞானம் என்னும் பால் பொங்கி வழியும். ‘பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ப் பொழியுமே’ என்கிறார் திருமூலர். அந்நிலையிலும் பசு பசுதான், பதி பதிதான். உயிர் உயிர்தான், இறைவன் இறைவன்தான். 

’லிங்கம்’ என்னும் சொல்லுக்குக் ’குறி’ என்று பொருள். ’குறி’ என்றால் ’அடையாளம்’ (sign) என்று அர்த்தம். மனித உடலிலும் பாலினம் காட்டும் அடையாளம் உண்டு. எனவே, அவ்வுறுப்பைக் குறி என்று கூறப்படும். அவ்வளவில் அமைந்து நேர்ப்படச் சிந்தித்தால் தத்துவம் புரியும். [ஆனால், சித்த சேட்டை கொண்டோர்க்கு அனர்த்தம் உறும். அவர் அல்லர் யாம் கருதும் வாசகர்.]


நவீன மொழியியல் கோட்பாட்டாளர் ழாக் லகான் சொல்லும் ‘sign – signifier – signified’ என்னும் மும்மையை “குறி – குறிப்பான் – குறிப்பீடு” என்றே தமிழ் செய்கிறோம். [இதனை Observance – Observer – Observed (கவனம் – கவனிப்பான் – கவனிக்கப்படுபவன்) என்னும் மும்மையாகவும் காணலாம். “The Observer is the Observed” (கவனிப்பவனே கவனிக்கப்படுவோன்) என்கிறார் நவீன தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. திக்ரு – தாகிர்- மத்கூர் (தியானம் – தியானிப்பவன் – தியானிக்கப்படுவோன்) என்னும் மும்மையை ஸூஃபிகள் விளக்கும்போது, ‘தியானிப்பவனே தியானிக்கபடுவோன் ஆகிவிடும் நிலை’ என்பதைச் சுட்டுகின்றனர்.]

குறி என்பது எதற்காக? அறிவதற்காக. எனவே அறிதற் பொருட்டு காட்டப்படும் குறிகளை அறிகுறிகள் என்று சொல்கிறோம்.

பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் அடையாளங்கள் (அத்தாட்சிகள் – ‘ஆயாத்’) நிரம்பியிருப்பதாக குர்’ஆன் மீண்டும் மீண்டும் சொல்கிறது. அந்த அத்தாட்சிகளை எல்லோரும் காண்பதில்லை. சித்தம் தெளிந்தார்க்கே அந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

அந்த அடையாளங்கள், அத்தாட்சிகள், அறிகுறிகள் எதில் உள்ளன? முகத்தின் அடையாளம் முகத்தில்தானே இருக்கும்?

“நீவிர் எத்திசை திரும்பினும் அல்லாஹ்வின் முகமே நிறைந்துள்ளது” (2:115) என்கிறது குர்’ஆன்.

  அந்த அடையாளங்கள் அனைத்தும் ஒரு தரத்தன அல்ல. இறைவனின் ஆகப் பெரும் அடையாளமாக உயிரே உரைக்கப்படுகிறது.



            பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த ஸூஃபி ஞானி முஹம்மது காசிம் மரைக்காயர் என்பவர் ”அஸ்ராருல் ஆலம்” (பிரபஞ்ச ரகசியம்) என்றொரு நூல் எழுதினார். அந்நூல் குருவுக்கும் சீடனுக்குமான உரையாடலாக அமைந்துள்ளது. அதன் முதல் வினா விடையே உயிர் பற்றியதுதான். “அல்லாஹுத் த’ஆலாவுக்குப் பத்து விஷயங்களில் நமது உயிரை உவமை காட்டலாம்” என்று குரு குறிப்பிடுகிறார். அந்தப் பத்து விஷயங்களை இங்கே சுருக்கமாத் தருகிறேன்.

1.      கண்ணுக்குத் தெரியாத உயிர்தான் உடலின் அங்கங்கள் அனைத்தையும் இயங்கச் செய்கிறது. உயிர் இல்லாவிடில் உடல் பிணம்தான். அதுபோல், பார்வைக்குப் படாத இறைவன்தான் அகில உலகங்களையும் நடத்துகிறான். அவன் இல்லை என்றால் எதுவுமில்லை.

2.      உடலின் உறுப்புகள் பல என்றாலும் அவை அனைத்தையும் இயக்கும் உயிர் ஒன்றே. அதுபோல், உலகங்கள் பல, ஆனால் அவற்றைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே.

3.      உடல் செய்யும் நன்மைகளும் தீமைகளும் உயிரின் நாட்டத்தால் அமைகிறது. பிரபஞ்ச காரியங்கள் அனைத்தும் இறைவனின் நாட்டத்தால் நிகழ்வன.

4.      உடலில் எது நேர்ந்தாலும் உயிருக்குத் தெரியாமல் போவதில்லை; அதுபோல், பிரபஞ்சத்தில் எது நிகழ்ந்தாலும் இறைவன் அறியாமல் நிகழ்வதில்லை.

5.      உடலில் எதையும்விட உயிரே அருகிலிருக்கிறது; அதுபோல், அனைத்து வஸ்துக்களுக்கும் இறைவனே மிக நெருக்கமாக இருக்கிறான்.

6.      உடல் உண்டாகும் முன்பே உயிர் இருந்தது, உடல் அழிந்த பின்னரும் உயிர் இருக்கும். அதுபோல், பிரபஞ்சம் உண்டாகும் முன்பே இறைவன் இருந்தான், பிரபஞ்சம் அழிந்த பின்னரும் அவன் இருப்பான்.

7.      உடலில் இன்ன இடத்தில்தான் உயிர் இருக்கிறது என்று மட்டுப்படுத்த முடியாது. அது எங்கும் விரவி இருக்கிறது. அதுபோல், பிரபஞ்சத்தில் இறைவன் இல்லாத இடமே இல்லை.

8.      உயிர் உடலில் இருப்பது தெரிகிறது. ஆனால் அதன் தன்மை என்ன என்று நாம் அறிய முடிவதில்லை. அதுபோல், பிரபஞ்சமெங்கும் இறைவன் இருக்கிறான் என்பது தெரிகிறது. ஆனால், அவனின் தன்மையை நாம் அறிய முடிவதில்லை.

9.      உயிர் உடலில் இருந்தாலும் உடலின் எந்த உறுப்புடனும் அதனை ஒப்பிட்டுக் கூற முடியாது. அதுபோல், இறைவன் பிரபஞ்சத்தில் இருந்தாலும் அவனுடன் எதையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.

10.   உயிரை ஐம்புலன்கள் எட்ட முடிவதில்லை; அதுபோல், இறைவனை ஐம்புலன்கள் எட்டுவதில்லை.

இப்படிப் பத்துப் பொருத்தங்களைப் பார்த்து மயங்கித்தான் சிலர் சீவனே சிவன் என்று பிழையாகக் கருதிவிட்டனர் போலும். 

இந்த தத்துவத்தைச் சொல்ல வந்த வைணவம் ‘சரீர சரீரி பாவனை’ என்னும் கோட்பாட்டை வகுத்துள்ளது. அதாவது, உடலும் உயிரும்போல பிரபஞ்சமும் இறைவனும் என்பதே அதன் விளக்கம். “திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை / படர் பொருள் முழுவதுமாய்  அவை அவை தொறும் / உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன் / சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே” (திருவாய்மொழி-7) என்கிறார் நம்மாழ்வார்.

இன்னனம், உயிரை இறைவனின் அத்தாட்சியாக – அடையாளமாக – அறிகுறியாகக் கண்டு சித்தம் தெளிந்தாரையே நாம் ‘என் உயிரே! என் ஆருயிரே! என் உயிரின் உயிரே!’ என்றெல்லாம் விளிக்கத் தகும். அவ்வுணர்வு பேரின்பக் காதல் ஆகும்.