Friday, December 20, 2019

நமனை அஞ்சோம்




”அச்சம் தவிர்” – மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியின் முதல் ஆணை.
      
 அவர் அச்சத்தின் மீது தீராப் பகை கொண்டிருந்தார் என்பதை அவரின் கவிதைகள் ஆங்காங்கே காட்டுகின்றன.
       
ஆத்திசூடியின் இறை வாழ்த்தில் அவர் எழுதினார்:
      ”... ... ... ... ... பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
      பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே!”

      இதில், ”உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று சேக்கிழார் செப்பியதை வழிமொழிந்துள்ளார் என்று சொல்லத் தகும்.

      அந்த ஒரே இறைவனை “மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்” என்றும் சுட்டுகின்றார்.

      மறையை அருள் புரிந்த இறைவன் அச்சமின்மை என்னும் நெஞ்சுரத்தையும் நபிக்கு அருள் புரிந்தான். நபிக்கு மட்டுமன்று, அவரைப் பின் தொடர்ந்து ‘வேத வாழ்வினைக் கைப் பிடித்தோர்’ அனைவருக்குமே அச்சமின்மை அருளப்பட்டது, அருளப்படுகிறது, அருளப்படும்.

      ”தெளிவுற அறிக, திண்ணமாக இறைநேசர்களுக்கு யாதொரு அச்சமும் இல்லை, அவர்கள் கவல்வதும் இல்லை” (10:62) என்கிறது அந்தத் திருமறை.

      அல்லாஹ்வைப் புகழ்ந்து மகாகவி பாரதி பாடலொன்று இயற்றியுள்ளார். ”எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெடச் செய்பவன்” என்று அதில் அல்லாஹ்வை அவர் வருணித்துள்ளார்.

      நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. சைவம் சார்ந்துவிட்ட அப்பரை இழுத்து வந்து சமண வேந்தன் முன் நிறுத்துகின்றனர். மரண தண்டனை என்று அச்சுறுத்திப் பார்க்கின்றனர். அப்போது அவர் பாடிய பதிகம் இப்படித் தொடங்குகிறது: “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.”

      ”ஜெயமுண்டு பயமில்லை மனமே” என்று பாடியவர் மகாகவி பாரதி. அல்லாஹ்வைப் பற்றி அவர் கூறிய வருணனை அவரது வேறொரு பாடல் வரிகளை எனக்கு எப்போதுமே நினைவூட்டும்:

      ”ஜெய பேரிகை கொட்டடா!
      பயமெனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப்
      பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்!
      வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
      வேத வாழ்வைக் கைப் பிடித்தோம்!”

      அல்லாஹ், நபிகளுக்கும் அவர்தம் தோழருக்கும் அச்சம் தவிர்த்து ஜெய பேரிகை கொட்ட வைத்தான். எப்படி? பேரிகையை ஃபார்சி மொழியில் ”நஃரா” என்று சொல்வர். ”அல்லாஹு அக்பர்” (இறைவன் மிகப் பெரியோன்) என்னும் மந்திர முழக்கம் ”நஃரா-யே தக்பீர்” எனப்படுகிறது. (’தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம் இனிக்கும்’ என்று நாகூர் ஹனீபா பாடிய பாடலுண்டு.) இந்த முழக்கமே நபியின் ஜெய பேரிகை.

      நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியாக வெற்றியளித்தோம்” (இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹம் முபீனா – 48:1) என்பது நபிக்கு இறைவன் அருளிய ஜெயம்.

      ”லா யம்னஅன்ன அஹதகும் மஃகாஃபத்துன்னாசி அன்(ய்)யதகல்லம பிஹக்கின் இதா அலிமஹு” – ‘உண்மையை அறிந்திருப்பின் அதனை உரைப்பதை விட்டும் மானிடரின் அச்சம் உங்களில் ஒருவரையும் தடுத்துவிட வேண்டாம்’ என்று நபி (ஸல்) நவின்றார் (அறிவிப்பாளர்: அபூ சயீதுல் குத்ரி (ரலி); நூல்:முஸ்னத் அஹ்மத் #11459). இன்னனம், உண்மையை உரக்கச் சொல்வதே பயமெனும் பேயை அடித்தல்.

      அச்சத்தின் பகைவரான மகாகவி பாரதி, ”ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்கு / உண்மை தெரிந்தது சொல்வேன்” என்று பாடியதும் இங்கே நினையத்தகும்.

      சத்தியம் என்னும் வாள் கொண்டே பொய்மை என்னும் பாம்பினைப் பிளக்க இயலும். “வ குல் ஜாஅல் ஹக்கு வ ஸஹக்கல் பாத்தில்; இன்னல் பாத்தில கான ஸஹூக்கா” – ‘மேலும் (நபியே!) கூறுக: சத்தியம் வந்துவிட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது; நிச்சயமாக, அசத்தியம் அழிவதே!’ (17:81) என்கிறது குர்ஆன்.

      அச்சமின்றி உண்மை உரைத்துப் பொய்யை அழிப்பதே  ‘வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வு’.

1 comment: