Wednesday, December 18, 2019

அனைத்துலகும் இன்பமுற...



      மனிதனின் உடல் சிறியது. ஆனால் அவனது உள்ளம் இப்பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கும்படி மிகப் பெரியது.

      தமிழும் அப்படியே. பிறை நுதலில் இடப்பட்ட திலகம் போன்று அம்மொழிக்குரிய மண் சிறியதுதான். தெக்கனமும் அதிற் சிறந்த திராவிட நற்றிருநாடும். எனினும், அதன் அகம் அறிவாலும் உணர்வாலும் மிகப் பெரியது. ”அத்திலக வாசனை” என்று குறிக்கப்படுவது அதன் சிந்தனை மரபே. “அனைத்துலகும் இன்பமுற” வேண்டும் என்பதே அதன் நோக்கு. அதனாற்றான், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று அது பேசிற்று.

      இந்த உலகளாவிய நோக்கு இருந்தமையான் உலகம் என்னும் முகவரியுடன் பனுவல்கள் தொடக்கம் பெறக் காண்கிறோம்.

      திங்களைப் போற்றித் தொடங்கி  ”அம்கண் உலகு அளித்தலான்” என்று சிலப்பதிகாரத்தின் முதற் கருத்து மொழிகிறது.

      ”உலகம் திரியா ஓங்குயர் விழுச்சீர்” என்று தொடங்குகிறது மணிமேகலையின் முதற்காதை.

      ”மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த” என்று கடவுள் வாழ்த்துக் கொண்டு தொடங்குகிறது சீவக சிந்தாமணி.

      ”உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்தும்” என்று கடவுள் வாழ்த்துக் கொண்டு தொடங்குகிறது வளையாபதி.

      உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்” என்று தொடங்குகிறது கம்பராமாயணம்.

      ”ஆக்குமா றயனாம் முதலாக்கிய உலகம்” எனத் தொடங்குகிறது வில்லி பாரதம்.

      ”உலகம் மூன்றும் ஒருங்குணர் கேவலத் தலகிலாத அனந்த குணக்கடல்” என்று தொடங்குகிறது யசோதர காவியம்.

      ”நால்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உலகம் எல்லாம்” என்று “வாழ்த்து”ப் பகுதியில் இலக்கு கொள்கிறது திருவிளையாடற் புராணம்.

      ”மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்” என்று ’வாழ்த்து’ப் பகுதியில் பேசுகிறது கந்தபுராணம்.

      ”உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று தொடங்குகிறது சைவத் தமிழுக்கு உரிய புராணம் ஆகிய பெரிய புராணம்.

      ”ஆதி பகவன் முதற்றே உலகு” என்று முதற் குறளிலேயே பேசுகிறார் தமிழ்நாடு உலகினுக்கே தந்த திருவள்ளுவர்.

      இன்னனம், அனைத்துலகையும் சுட்டிக் காட்டித் தொடங்கும் மரபு எப்படி ஏற்பட்டது? பேரிலக்கியங்கள் எல்லாம் இறை வேதங்களின் அமைப்பைப் பின்பற்றியே 
எழுதப்பட்டிருத்தல் வேண்டும். 



இறைவனால் இவ்வவனிக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஓரிலக்கத்திருபத்தைந்தாயிரத்தவர் என்றொரு கணக்குண்டு. பழங்காலச் சமூகங்கள் அனைத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் அவ்வச் சமூக மொழியிலேயே இறைச் செய்தியை முன்மொழிந்தனர். அவருள், இறை மறைகள் அருளப்பட்டாருளர் (அவை, கிதாப் மற்றும் சுஹ்ஃபு (நூற்கள் மற்றும் ஏடுகள்) என இரு வகையின.) அந்த இறைத்தூதர்களின் தொண்டர் குலத்துள் அடங்கும் அருட்கவிகள் அத்திருமறைகளின் அமைப்பைப் பின்பற்றியே தமது பனுவல்களைப் படைத்திருக்க வேண்டும் என்பது எளியேனின் கருதுகோள்.

இறைவன் இறக்கி அருளிய இறுதித் திருமறை எனப் பிறங்கும் குர்ஆனின் முதல் திருவசனத்தை ஓர்க:

“அனைத்துலகும் புரப்போனாம் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.” (1:1)

No comments:

Post a Comment