Sunday, October 13, 2019

’அனா ஹதம்’ – சில குறிப்புகள்



அண்மையில் ’அனா ஹதம்’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்று எழுதினேன். அக்கவிதை செவ்விசையின் ராகப் பெயர்கள் கொண்டு பெண்ணை வருணிக்கின்றது. எத்தனை பேருக்குப் புரிந்தது, எப்படியெல்லாம் பொருள் தந்தது என்பதறியேன். சிலரிடம் அக்கவிதை பற்றி உரையாடும் வாய்ப்பொன்று அமைந்தது. பொழிப்புரை போல் பேசியதை இங்கே எழுதுகிறேன்.

மூன்றைப் பற்றி அறிவற்ற நிர்மூடரிடம் கேட்கக் கூடாது: இறைவன், ஆன்மா மற்றும் பெண். இம்மூன்றைப் பற்றி அவரிடத்துச் சொல்லுதலும் தகாது. இம்மூன்றும் தொடர்புடையன. “தன்னை அறிந்தவன் இறைவனை அறிவான்” என்று சூஃபித்துவத்தில் ஒரு கருத்துண்டு. ”பெண்ணை அறிந்தவன் தன்னை அறிவான்” என்கிறார் சூஃபி மகான் இப்னுல் அறபி.
     
 ’பேசாப் பொருளைப் பேச நான் துனிந்தேன்’ என்பார் பாரதி. இறைவன், ஆன்மா மற்றும் பெண் ஆகிய மூன்றுமே பேசாப் பொருண்மைகள். இம்மூன்றையும் பற்றித்தானே, குறிப்பாகப் பெண்ணைத்தானே இலக்கியங்கள் யாவும் பரக்கப் பேசுகின்றன என மயங்க வேண்டாம். நான் குறிப்பது இம்மூன்றின் ரகசியங்கள் பற்றி. கலீல் ஜிப்ரான் சொல்கிறார், அவரின் இதயம் அழகின் ஆன்மாவை விளித்துக் கேட்டதாம் ”நீ அனைத்தும் அறிதி. பெண்ணின் ரகசியம் பற்றி எனக்கு ஞானமூட்டு” (’Thou art all knowledge; enlighten me as to the mystery of woman’). அதற்கு அழகின் ஆன்மா சொல்லும் விடையில் இவ்வரி இடம் பெறுகிறது: “அவள் சமயம் அனையள், மூடர் அவளை உரை செய்யாத போது” (’She is like religion if not interpreted by the ignorant”). ஆம், “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி / பேணி வளர்த்திடும் ஈசன் / மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல / மாதர் அறிவைக் கெடுத்தார்” (பாரதி). ‘சமய ஞானமுள்ள பெண்ணை மணம் செய்து வாழ்வில் வெல்க’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு (சஹீஹ் புகாரி:4802; சஹீஹ் முஸ்லிம்:1466.)
     
 ”ஆண் நன்று, பெண் இனிது” என்கிறார் பாரதி (வசன கவிதை/ காட்சி/ ’இன்பம்’). எவ்வளவு இனிது? அவரே சொல்கிறார்: ”உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்; உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!” (’பெண்மை’). ஆம், “இம்மை என்பது இன்ப அனுபவம் / இம்மை இன்பங்கள் யாவிலும் சிறந்தது / நற்குணம் இலங்கும் நங்கையே” என்பது நபிகள் நாயகம் (ஸல்) அருளிய ஹதீஸ் ஒன்றின் கருத்து (சஹீஹ் முஸ்லிம்: 1467.) 

      இனி, ’அனா ஹதம்’ என்னும் தலைப்பில் எளியேன் இயற்றிய கவிதையைக் காண்போம்.

சில கவிதைகளை முன்னோர் எழுதிய ஏதேனுமொரு கவிதை வரி தூண்டக் கூடும். பாரதி தனது ஸ்வசரிதையை ஓர் அற்புதமான கவிதையாக எழுதினார். கவிதையின் தொடக்கத்தில் ஒரு மேற்கோள் காட்டுகிறார்: “’பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் / மெல்லப் போனதுவே’ – பட்டினத்தார்” இவ்வரி அவரது அகத்தில் நிகழ்த்திய கொந்தளிப்பே தனது பிள்ளைப் பருவம் ஒரு கனவு போல் கழிந்ததை நெடுங்கவிதையாய் எழுதும்படி அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.

அதுபோல், இக்கவிதையின் தொடக்கத்தில் யானொரு மேற்கோள் காட்டியுள்ளேன்: “’மோகன ராகம் நின் தேகம் / கீர்த்தனம் ஆக்கி ஞான் பாடும்’ -கவிஞர் வாலி.”

பலமுறை மனதில் கோதிப் பார்த்துக் கொள்ளும் பாடல் வரிகள் இவை. தமிழில் இருந்து உருவான இத்தேசத்துச் செவ்விசையில் நூற்றுக்கும் மேற்பட்ட ராகங்கள் உள. அவற்றுள் பெண்ணின் தேகத்தை வருணிக்க மோகனம் என்னும் ராகத்தின் பெயரைக் கவிஞர் வாலி ஏன் தேர்ந்தார்? ’பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன? பதினாறு பாட சுகமானது’ என்றெழுதிய கவியரசு கண்ணதாசனும் ஒரு ராகத்தின் பெயரைச் சுட்டினாரில்லை. (அது என்ன பதினாறு என்று கணக்கு? இதுவரை சரியான விடை எனக்குக் கிடைக்கவில்லை.)

”மோகனம்” என்பது தமிழர் கண்டறிந்த மிகத் தொன்மையான ராகம் என்று இசை ஆய்ந்த அறிஞர் கூறுகின்றனர். “முல்லைத் தீம்பாணி” என்பது அதன் தமிழ்ப் பெயர். (சிலப்பதிகாரம் > ஆய்ச்சியர் குரவை). சாதாரி என்றுமொரு பெயருண்டு.

திருவாசகம் மோகனப் பண்ணில்தான் பாடப்படுகிறது. தமிழ்நாட்டு அரசின் பாடலான ‘நீராருங் கடலுடுத்த…’ எனத் தொடங்கும் மனோன்மணீயக் காவியப் பாடல் எம்.எஸ்.விசுவநாதம் அமைத்த மோகன ராக மெட்டில்தான் பாடப்படுகிறது. அதனைத் ’தமிழ்த்தாய் வாழ்த்து’ என்று அழைக்கப்பட்டாலும், அப்பாடலில் எங்கும் தமிழைத் தாய் என்று சொல்லப் படவில்லை. அது தமிழ் மொழியை என்றும் சிதையாத சீரிளமைத் திறம் கொண்ட அணங்காகவே உருவகித்து வாழ்த்துகிறது. ”பெருந் தமிழணங்கு.”

கர்நாடக சங்கீத முறைமையில் இருபத்தெட்டாம் தாய் ராகமாக (மேளகர்த்தாவாக) அமைந்துள்ள ஹரிகாம்போதி என்னும் ராகத்தின் சேய் ராகம் (ஜன்ய ராகம்) என்று இது சொல்லப்பட்டாலும் ஐந்து ஸ்வரங்கள் கொண்ட இந்த ராகமே முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை வைத்தே பின்னர் ஏழு ஸ்வரங்கள் கொண்ட இதன் தாயான ஹரிகாம்போதி கண்டறியப்பட்டது என்ப.

”மோகனம்” குறிஞ்சித் திணைக்கு உரியது. பின்னர் முல்லைக்கும் உரித்தானது. எனவே அதன் பெயர் முல்லைத் தீம்பாணி எனப்பட்டது. ராகங்களை அவற்றின் தன்மைக்கேற்ப ஆண், பெண் என்று வகைப்படுத்துதல் உண்டு. ’மோகனம்’ பெண் ராகமாகச் சுட்டப்படுகிறது.

”ராகினீ!   
என் தர்மாவதீ!”

      இசை மரபில் ராகம் பெண்ணாக பாவிக்கப்படும்போது ராகினி என்று சொல்லப்படும். எனவே, இசையாக பாவிக்கப்படும் பெண்ணுக்கு இவ்விளி.

      மனைவியைக் குறிக்க வடமொழிக்கண் உள்ள சொற்களுள் ஒன்று ’சகதர்மினி’ என்பதாம். அதாவது, கனவனின் தர்மத்திற்கு உறுதுணையாய் இருப்பவள். அறம் பேணுவதில் ஆணுக்கு அருந்துணை அவள். எனவே, ’தர்மாவதீ’ என்னும் விளி. அறம் யாது? அறியாமை என்னும் இருளிலிருந்து ஞானம் என்றும் ஒளிக்குச் செலுத்தும் நெறியே அறம் என்க. பெண்ணின் அறம் யாது? ”கலி அழிப்பது பெண்கள் அறமடா!” என்கிறார் பாரதி.

      ”சம்பூரணமாய்ச்
சமைந்தவளே!
ஏகன் சமைத்த
உன் வடிவம்
ஏழிசை”

      ஏழு ஸ்வரங்களும் கொண்டு அமைந்தது ’சம்பூர்ண ராகம்’ (முழுமையான பண்) எனப்படும். அதனைத் தாய் ராகம் என்ப. இங்கே விளிக்கப்படும் இல்லாள் மக்களை ஈன்றவள். ”ஏழிசையாய்…” என்று இறைவனைச் சுட்டுகிறது சைவம். எனினும், இறை நாதம் என்பது சப்தமும் எழுத்தும் கடந்த மோனம். இறை நிலை என்பது உருக்கடந்த அருவம். எனவே, இக்கவிதை பெண் வடிவை ஏழிசை என்கிறது.

      இனி, ராகங்களின் பெயர்களைக் கொண்டு வருணிக்கின்றேன். ராகங்கள் பல. எழுபத்திரண்டு தாய்ப் பண்களும் முந்நூறு சேய்ப் பண்களும் என்றொரு கணக்குண்டு. இங்கே நான் சில பண்களின் பெயர்களை இரண்டு அடிப்படைகளில் கையாண்டிருக்கிறேன். இவற்றுள் சில பண்களில் அமைந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதொன்று. இவற்றுள் சில பண்களது பெயர்களின் அர்த்தத்தை இக்கவிதை நுவலும் கருத்துக்குத் தக எடுத்தாண்டுள்ளேன்.

      கரந்து
எனக்கே கமழும்
உன் கந்தம்
நளினகாந்தி

’பெண்ணுக்கொரு வாசம் உண்டு’. அது கொழுநனுக்கு மட்டுமே உரியது. அது, பாண்டிய மன்னனொருவன் செய்தது போல், இயற்கை மணமா செயற்கை மணமா என்று பரிசறிவித்து ஊராரிடம் கேட்டு அறியத் தகுவதன்று. அது மிக நுட்பமான நறுமணம். நளின காந்தி.

நளின காந்தியில் கர்நாடக் உலகம் உச்சி மேல் வைத்து மெச்சும் கீர்த்தனை தியாகையர் இயற்றிய ”மனவியாள கிஞ்சரா...” என்பது. ’நெஞ்சே! கேளாயோ...” என்று தன்னெஞ்சொடு கிளத்தல் என்னுந் துறையில் அமைந்தது. இதே ராகத்தில் இசைஞானி இளையராஜா அமைத்த அற்புதமான மெட்டுக்கு கவிஞர் வாலி பாடல் எழுதினார். “எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?” என்று பல்லவியின் முதலடியிலேயே மறவாமல் நெஞ்சைக் குறிப்பிட்டுவிட்டார்.

அன்றாடம் புதிதாய்
அழைக்கும்
உன் அசைவுகள்
ரீதி கௌளை

புதுமை என்பது இறைப் பண்பா? அல்லது படைப்பின் நிலையா? இரண்டும்தான். “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே / பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” (திருவெம்பாவை:9) என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். இறைவன் தனது உள்ளமையின் இருப்பால் பழையோன். தனது வெளிப்பாட்டின் ஒளிச்சுடர்களால் புதியோன். “ஒவ்வொரு கணமும் அவன் புதிய புதிய மாட்சிமையில் இருக்கிறான்” (குர்ஆன்:55:29). படைப்பின் நிலை என்ன? அதன் சுயம், படிவம் இறைவனின் அனாதியான பேரறிவில் எப்போதும் இருக்கிறது என்பதால் முன்னம் பழமைக்கும் பழமை அது. ஒவ்வொரு கணமும் அதன் இருத்தல் அழிந்து மீண்டும் புதிதாகத் தோற்றப் படுகிறது என்பதால் பின்னைப் புதுமைக்கும் புதுமை அது. எனவே பெண் ‘அன்றாடம் புதிதாய் இருப்பவள்’ எனப்பட்டாள்.

மோகன ராகத்தில் இசைஞானி மெட்டமைத்து எழுதிப் பாடிய ”இதயம் ஒரு கோயில்” பாடலொன்றில் வரும் வரிகள்:
 “பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது”

ரீதி கௌளை மிக அழகிய அசைவுகள் (கமகங்கள்) கொண்டது. இளமையும் முருகும் துலங்கும் அசைவுகள் உடையது. பெண்ணின் நளின அசைவுகளை உருது மொழியில் ”அங்டாயீ” என்னும் தனிச்சொல்லால் குறிக்கின்றனர். சயீத் ராஹி என்னும் கவிஞர் எழுதி ஹரிஹரன் பாடிய கஜல் ஒன்றின் இரண்டாம் கண்ணி இது:

“அப்படி என்னதான் உள்ளது உன் அசைவுகளில்
தினமும் நீ எனக்குப் புதிதாய்த் தெரிகின்றாய்”

ரீதி கௌளை ராகத்தில் செய்யப்பட்ட தமிழ்ப் பாடல்கள் இனியன. எனினும், அவற்றுள் சிறந்து நிற்பது ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று இசைஞானி மெட்டமைத்து, பஞ்சு அருணாச்சலம் எழுதி, பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல்.

சவியுறத் தழுவிய
நதியென
உன் நடை
சலநாட்டை

சவி என்றால் ஒளி என்று பொருள். பிற பொருட்கள் மீது பரிதியின் ஒளி படிகிறது. ஆனால் அவை ஒளியைத் தன்னுள் ஊடுறுவ விடுவதில்லை. காற்றோ எனில் ஒளி தன்னை ஊடுறுவ அனுமதித்தும் தான் கட்புலன் ஆவதில்லை. நீர் எனும் திரவக் கண்ணாடியோ ஒளியைத் தன்னுள் ஊடுறுவ விட்டு ஒன்றாகிவிட்டது போல் தழுவிக் கொண்டு தெளிந்து தெரிகிறது. கோதாவரியைப் பாடுமிடத்தில் கம்பர் “சவியுறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி” என்கிறார். மருதத்தில் நதியின் நடை என்பது ஓசை எழாது, அதிராது செல்லும் மென்னடை. நீர் ’சல சல’ என அலைகளாக அசைந்து நடப்பது. அதுபோல் நடை.

உயிரின் ஒளிமிகு
உன் பார்வை
பூபாளம்

பூபாளம் என்பது வைகறை நேர ராகம். விடியலில் இருள் நீங்கி உலகு வெளிச்சம் பெறுகிறது. அவள் ‘ஒளி படைத்த கண்ணினாள்.’ அவளின் பார்வை என் உலகை வெளிச்சமாக்குகிறது.

வினாடியெனினும்
விலகாதணையும்
அன்பின் அன்றிலே!
உன் சிணுங்கல்
ஹம்ஸத்வனி

ஹம்ஸம் என்றால் வெண் அன்னம். சங்க இலக்கியத்தில் அப்பறவைக்கொரு பெயர் அன்றில். குறுந்தொகையில் ஐம்பத்தேழாம் பாடல் சிறைக்குடி ஆந்தையார் பாடியது. அன்றில் பறவை இணை நீரில் நீந்தும்போது இடையே தாமரைப் பூ குறுக்கிட்டால் அதனைக் கடக்கும் பொருட்டுத் தாம் பிரிந்து நீந்த நேரும் சில ஓரிரு நொடிகளின் பிரிவும்கூட அவற்றுக்கு ஓராண்டு காலம் போல் சுமை ஆகித் தாங்க இயலாது வாடுகின்றன என்று அவர் பாடுகிறார். அவ்வளவு காதல் கொண்ட பறவைகளாம். ”பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன / நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் / பிரிவரிதாகிய தண்டாக் காமம்.”

மனமெனும் ஏரியில்
அலைகளாடும்
உன் பேச்சு
ஹம்ஸநாதம்

மனமெனும் ஏரி. வடமொழியில் ‘மனஸரோவர்’. கைலாய மலையில் உள்ள நன்னீர் ஏரிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் நீந்தும் அன்னங்கள் ஞானியரின் குறியீடு. ஞானியைப் ’பரமஹம்ஸர்’ – இறைவனின் அன்னம் என்று அழைப்பது மரபு. தியான நிலையில் உள்ள மனத்தை அலை எழா ஏரி என்று உருவகிப்பதுண்டு. அன்னம் நீந்துகையில் அலை என்னனம் எழாதிருக்க முடியும்? எழவே செய்யும். ஆனால், அன்னம் நீந்துவதால் மனஸரோவரின் நீர் தூய்மை இழப்பதில்லை. ஏனெனில், அது பரம ஹம்ஸம்.

சக்தி எழுந்த
சாந்த ரூபம்
உன் கோபம்
கம்பீர நாட்டை

இறைவனது சக்தியைப் பெண்ணாய் உருவகித்தல் மரபு. சிம்மத்தின் பிடர் சிலிர்த்ததைப் போல் சக்தி எழுச்சி பெற்ற கோபத்திலும் குழையாத சாந்தம் என்பது கருணையே அன்றி வேறன்று. அந்தக் கோபம் சமைக்கும் தீயே அன்றி எரிப்பதன்று. அது நம்மை யாது செய்யுமோ என்று அஞ்சத் தேவையில்லை. அதன் கம்பீரம் அழகின் இன்னொரு சாயை. கம்பீர நாட்டையில் இசைஞானி அமைத்த அருமையானதொரு பாடலுண்டு: “இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே.”
குறிஞ்சி மலர்ந்த
அரிய அழகே!
உன் சிரிப்பு
மலைய மாருதம்
     
 மலையிலிருந்து வீசும் மென் காற்று. மாருதம் என்றால் வீசும் காற்று என்று பொருள்.

இல்லத்திருந்து
உள்ளம் உருகும்
உன் ஏக்கம்
ஜோன்பூரி

குறிஞ்சிக்கு அடுத்து முல்லை. அதன் உரிப்பொருள் இருத்தல். கணவனின் வருகைக்காக இல்லத்தில் அவள் காத்திருத்தல். வரவு எதிர் பார்த்திருத்தல். ”காத்திருந்தேன் தனியே! – எதிர் / பார்த்திருந்தேன் உனையே” என்று கவிஞர் வாலி எழுதி இசைஞானி மோகன ராகத்தில் மெட்டமைத்த பாடலொன்று உண்டு. இங்கே, இருத்தலின் ஏக்கத்தை ஜோன்பூரி ராகம் என்று வருணித்திருக்கிறேன். அந்த ராகத்தில் பாடப்படும் அற்புதமானதொரு பாடல் கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய “நந்தனார் சரித்திரக் கீர்த்தனை” நூலில் உள்ள “எப்போ வருவாரோ எந்தன் கலி தீர…” என்னும் பக்திப் பாடல். எனவே, கவிதையின் அடுத்த அடி “கலி தீர…” என்று தொடங்குதல் காணீர்.

கலி தீர ஒளி சேர
இருள் மாய அருள் பாய
உன் பிரார்த்தனை
பஹுதாரி

உள்ளம் உருகி இறைவனிடம் உரையாடுவதே பிரார்த்தனை. அந்த உருக்கத்தை பஹுதாரி ராகத்தில் உணரச் செய்த கீர்த்தனை ஒன்றுண்டு. ஸ்ரீ தியாகராஜர் இயற்றிய ‘ப்ரோவோ பாரமா!” என்பது. ”உலகம் யாவையும் உய்விக்கும் உனக்கு / எளியேனைக் காத்தல் பாரமோ?” என்று கெஞ்சுகிறது அப்பாடல்.

மருள் மான் கண்ணில்
அரிமா நோக்கென
உன் புலவி
சிம்மேந்திர மத்யமம்

புலவி என்பதும் மெல்லிது. அஃது முள் என நடிக்கும் மலர் மொக்கு. பொய்க் கோபம். Feigned anger எனக் குறிப்பிடுகிறார் கவியோகி சுத்தானந்த பாரதி. மானின் கண்ணில் தோற்றும் அரிமா நோக்கு என்றமையால் அதனை சிம்மேந்திர மத்யம ராகம் என்று குறிப்பிட்டேன். இங்கே, மத்யமம் என்பது நடுநிலை தவறாமையைச் சுட்டும். பொய்க் கோபம்தான். ஆனால் நியாயமானது.

கருணை அமிர்தக்
கடலின் பாவாய்!
உன் ஸ்பரிசம்
பாகேஸ்ரீ

இசையே ஒரு கருணை என்னும் அமிர்தத்தின் கடல்தான் என்கிறார் ஆபிரகாம் பண்டிதர். இசை குறித்து அவரெழுதிய பெருநூலின் தலைப்பு “கருணாமிர்த ஸாகரம்.” இவ்வரிகளில் புராணக் குறிப்பொன்று தொன்மமாக எடுத்தாளப்பட்டுள்ளது. அது சற்றே மாற்றவும் பட்டுள்ளது. பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து அமிர்தமும் ஆலகால நஞ்சும் வெளிப்பட்டது என்பது புராணம். அமிர்தத்தையே கடைய அதிலிருந்து வெளிப்பட்டவளாகப் பெண்ணைப் பேசுகிறது இவ்வடி. மண் உடலானது ஆண். மண்ணிலிருந்து அல்லாமல் ஆணின் உடலில் இருந்தே வெளிப்பட்ட உடல் பெண். எனவே அவள் சதையின் சதை.

பாவை என்னும் சொல் பெண்ணைக் குறிக்கும். கண்ணின் கருவிழியைப் பாவை என்று சொல்வதுண்டு. அறபியில் கண்ணுக்கு ஐன் என்று பெயர். மனிதனுக்கு இன்சான் என்று பெயர். கண்ணின் கருவிழி போல் பிரபஞ்சத்திற்கு இறைவனது பார்வையின் குவி மையமாக இருப்பதால் மனிதன் ஐன் என்னும் சொல்லினடியாக இன்சான் எனப்பட்டான் என்றொரு விளக்கம் உண்டு (மொழியியல் ரீதியாக அது சரியெனப் படவில்லை). உன்ஸ் என்றால் நெருக்கம் என்று பொருள். இறைவனுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு மனிதனே. எனவே, உன்ஸ் என்னும் சொல்லினடியாக மனிதன் ‘இன்ஸான்’ எனப்படுகிறான் என்றுமொரு விளக்கமுண்டு (மொழியியல் ரீதிய்ல் இதுவே சரி.) விழிக்குப் பாவை போல் ஆணுக்குப் பெண். எனவே அவள் பாவை. மட்டுமல்ல, அவனுக்கு மிக அணுக்கமாக இருப்பவள் என்பதுமாம். பாவாய் என்பது விளி.

இனி, பாவாய் என்பதில் பாவு என்றுமொரு வேர் உள்ளது. பாகு என்பதன் இன்னொரு வடிவம். உருகிய நிலையே பாகு. அது மென்மையைக் குறிக்கும் சொல். மென்மையான ஓசையமைதி பெரிதும் கொண்ட மொழியான ஃபார்சியைக் குறித்துப் “பாகு மொழி பார்சி” என்றொரு சொலவடை உண்டு. பெண்ணின் மென்மையைப் பாகு என்னும் சொல்லால் குறிப்பதாகவும் பாவாய் என்னும் விளிக்கு அர்த்தமுண்டு. ராகங்களில் மிக மென்மையானது என்று சொல்லத்தக்க பாகேஸ்ரீ என்று அவளின் ஸ்பரிசம் உவமிக்கப்பட்டது.

பாவுதல் என்றால் உறுதிப்படுதல் என்றுமொரு பொருளுண்டு. கால் மண்ணில் பாவுதல் என்றால் உறுதியாக பாதம் பதித்து நிற்றல். அப்படி நோக்கப் பாவாய் என்பது ’ஆணின் வாழ்விற்குக் கிடைத்த உறுதிப் பொருள் பெண்’ என்று பொருட்படும்.

முக்தியின்
முன்சுவையாகும்
உன் முத்தம்
மதுவந்தி

இவ்வரிகளுக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை என்று நம்புகிறேன். ’கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல’ என்பது வள்ளுவம். ’வாய்க்கு அங்கே வேறு வேலை உண்டு’ என்பார் கவிக்கோ. என்ன வேலை? ’உண்டு’ என்னும் சொல்லால் அதனைக் குறிக்கிறார் வள்ளுவர்: ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் / ஒண்டொடி கண்ணே உள.’

சீலியா என்னும் தன் காதலியை நோக்கி பென் ஜான்சன் சொல்கிறார்: “மது நீட்டுக எனக்குன் கண்களால் மட்டும் / எனதால் நானுனக்கு உறுதி உரைப்பேன் / அல்லது, கிண்ணத்திலொரு முத்தமிட்டுச் செல் / நான் மதுவைத் தேடாதிருப்பேன்.” (“Drink to me only with thine eyes, / and I will pledge with mine / Or leave but a kiss in the cup /  And I’ll not look for wine.”)

’நான்’ கரையும்
நம் ஏகாந்தக் கலவி
அனாஹதம்.

நான் என்பது இங்கே தன்முனைப்பைக் குறிக்கும். நான் என்பது கரைந்து மறைந்து யோகத்தின் உன்னத நிலையான சமாதி என்னும் நிலை ஒரு சில கணங்களேனும் கலவியிற் கிடைக்கிறது என்று ஞானியர் சுட்டிக் காட்டுகின்றனர். அந்நிலையில் ஓசையும் இல்லை உருவமும் இல்லை. எனவே அந்நிலையில் பண்ணும் இல்லை, பெண்ணும் இல்லை. பண்ணொடு முயங்கி மௌனத்தை அடைதல் போன்றது இந்நிலை.

இசை என்பது ஓசைதான். ஆனால், அனாஹதம் என்றொன்று உண்டு. படைக்கப் படாத நாதம் அது. தம்பூரின் தந்திகளை மீட்டுகையில் உண்டாவது படைக்கப்பட்ட நாதம். வடமொழியில் அதற்கு அஹத் என்று பெயர். படைக்கப் படாத, மனிதனால் மீட்டப்படாத நாதத்திற்கு அனாஹத் என்று பெயர். அம் விகுதி சேர்த்துத் தமிழில் அஹதம் என்றூம் அனாஹதம் என்றும் அழைக்கிறோம். ஏகாந்தம் என்பது இரண்டு தாம் இரண்டு என்பதை மறந்து ஒன்றியிருக்கும் லய நிலை.

இக்கவிதையின் தலைப்பை நோக்குக. அது ”அனா ஹதம்” என்று இடைவெளி விட்டு இரண்டு சொற்களாக எழுதப்பட்டுள்ளது. அறபியில் அனா என்றால் நான் என்று பொருள். ஹதம் என்றால் அழித்தல், முடித்தல் என்று பொருள். எனவே, நான் என்னும் தன்முனைப்புக் கரைந்து மறைதலைக் குறித்தது.

1 comment: