Tuesday, August 14, 2018

கனியும் தருணம்




















இரண்டாம் பருவச் சுற்றில்
தள்ளிய குலைகள்
பழுக்கத் தொடங்கின
பப்பாளி மரங்கள்

அடர் மஞ்சளாய்
மாறியிருந்தன ஓரிரண்டு

வீட்டின்
சுற்றுச் சுவர் மீதேறினால்தான்
கைக்கெட்டும் எனக்கு

உறவினர்க்குத் தரல் வேண்டி
“பிடுங்கித் தர்றீங்களா?” என
வினயமாய்க் கேட்டாள்

மோவாயில் விரல்களைத்
தடவியபடி
மேல் நோக்கியபோது தோன்றியது
எவ்வளவு வன்முறையான சொல்
மிக இயல்பாகச் சொல்லிவிட்டாள்

‘பிடுங்க வேண்டாம்
பறித்துத் தருகிறேன்’
எனச் சொன்னேன்

பறித்தல் என்பதும்
வன்முறை அன்றோ?

கவர்தல் என்றார்
வள்ளுவரும்!

’எடுத்தல்’ என்பதிலும் சற்றே
வன்முறை இருக்கிறது

வாங்குதல் எனிலோ
வணிகம் தொனிக்கும்

என்ன யோசனை என்பதுபோல்
பார்த்தவளிடம் சொன்னேன்
’இரு, மரத்திடம் கேட்டுப்
பெற்றுத் தருகிறேன்’

No comments:

Post a Comment