Saturday, February 24, 2018

2 POEMS






















அடைக்கும் தாழ்

சில சமயம் தோன்றும்
நானொரு மனிதனா என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்கள் பாவம் என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்களுடன்தான் வாழ்கிறோமா என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்கள் இனிமையானவர்கள் என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்கள் மோசமானவர்கள் என்று

அவ்வப்போது இப்படியெல்லாம்
தோன்றிக்கொண்டேதான் இருக்கும்

இதில்
அலட்டிக்கொள்வதில்
அர்த்தம் என்ன அன்பே!

***





















painting by Robert Mullenix

மழையாசை

வானம் மூடிக்கொண்டிருக்கும்
இக்காலைப் பொழுதில்
மனதில் இறகு கோதுகின்றது
மழையெதிர்பார்ப்பு

கைப்பேசியும் சைகை
காட்டுகிறதாம்
‘மழை வரும்’ என்கிறாள்

வானிலை அறிக்கையை
ஒரு கவிதையைப் போல்
ரசிக்கின்றேன்

நாசியைக் கூர்தீட்டித்
தேடுகின்றேன்
காற்றில் உணரலாகும்
ஒரு மெல்லிய வாசமாய்
வருமழையின் மூச்சு

அவளைப் பார்த்தபடி
உவமிக்கிறது மனம்
மழையின் வருகை
உன் வருகை போலிருக்கும்
என

நிலக்கடலை
அவித்து வைத்தால்
நன்றாக இருக்கும் என்றும்
ஆவி பறக்கும்
கப்பக்கிழங்கு மட்டுமே
உன்னதமான பொருத்தம் என்றும்
மனம் போடுவதெல்லாம்
ஒரு தினுசான கணக்கீடுகள்தான்

வாங்கி வந்த
விரலி மஞ்சளையும்
மல்லியையும்
வெய்யில்லில் உலர்த்தவேண்டுமே என்று
கவலை தெரிவிக்கிறார்
(என் பிள்ளைகளின்)
நன்னிமா

மழையாசையே
ஓர் ஆனந்தமாய்
அனுபவித்துக்கொண்டும்
’ஆமீன்’ என்கிறது
என் ஆத்மா

***

குறிப்பு: ’ஆமீன்’ என்பது நமது அல்லது பிறரின் பிரார்த்தனைக்கான முத்திரைச் சொல். ‘அப்படியே ஆவதாகுக’ என்று பொருள்.


No comments:

Post a Comment