Wednesday, September 21, 2011

தேவதையின் அரிதாரம்


(சிறுகதை)

 
மாலை ஸ்கூலில் மாறுவேடப் போட்டி நடக்கப்போவதாலும் அதில் என் வாண்டு மகள் கலந்துகொள்ளப் போவதாலும் வேறு எந்த என்கேஜ்மெண்ட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று காலையில் நான் கிளம்பும்போதே என் சகதர்மினி அன்புக் கட்டளை இட்டுவிட்டதன் பேரில் நானும் வேறு வேலைகளை இழுத்துக் கொள்ளாமல் மதியம் ஃப்ரீயாகிக் கொண்டேன். 

அவள் நினைவூட்டியது என் சுபாவம் தெரிந்துதான். இந்த விஷயம் எனக்கு மறந்தேவிட்டது, மற்ற எல்லா விஷயங்களையும் போலவே. பிள்ளைகளின் படிப்பு விளையாட்டு போன்ற விஷயங்களில் எப்போதும் தந்தையை விடவும் தாய்க்குத்தான் அதிக ஞாபகம் இருக்குமல்லவா? விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் இதுதானே விதி? எனவே, இவ்விஷயத்தில் அவளுடன் போட்டி போட இயலாது என்பதைப் புரிந்துகொண்டு நான் எப்போதோ ஜகா வாங்கிவிட்டேன். ஏனெனில் நான் என்னளவிலாவது ஒரு கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் இருக்கிறேன். போதாத குறைக்கு நான் ஆன்மிக நாட்டம் உள்ளவன் வேறு!

கே.ஜி குழந்தைகளுக்கான இந்த மாறுவேடப் போட்டி பற்றி ஒரு வாரத்திற்கு முன்பே மகளின் டீச்சர் சொல்லி அனுப்பிவிட்டார். அது என் கவனத்திற்கு வைக்கப்பட்ட போதே மனதிற்கு உடன்பாடாக இல்லை. மாறுவேடப் போட்டியின் இருத்தலியல் நியாயங்களை நான் கேள்விக்கு உட்படுத்திப் பேசியபோது என் சகதர்மினிக்கு மிகவும் எரிச்சலாகி விட்டது. 

“ஃபேன்சி ட்ரெஸ் காம்ப்பட்டீஷன்–ங்கிறது ச்சில்ட்ரன்ஸோட டேலண்ட்ட வளக்குறதுக்கான போட்டிதான்” என்பதில் தொடங்கி எல்லோரும் கலந்து கொள்ளும் போது மகள் மட்டும் சேராமல் போனால் அவளின் பிஞ்சு உள்ளத்தில் ஏமாற்றமும் டிப்ரஷனும் உண்டாகி அது படிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வரை சகதர்மினி வரிசையாக தொடுத்த அஸ்திரங்களால் நான் படிந்துவிட்டேன். பின்ன, டிப்ரஷன் அப்படியே லோ.பி.பி வரை கொண்டுபோய்விடும் அல்லவா? தவிர பி.பி உள்ளவர்களுக்கு ’சுகர்’ வந்துவிடும் வாய்ப்புகளும் அதிகமாமே?

நான் பச்சை கொடி காட்டியதோடு அன்றைக்கு அந்த சப்ஜெக்ட் முடிந்தது. கூடத்தின் படுதாவைப் பிடித்துக் கொண்டு பாதி முகம் தெரிய, நானும் அவளும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மகள் நான் சம்மதம் சொன்னதும் பூப்போல் முகம் மலர்ந்து ஓடி வந்து என் மடியில் ஏறிக்கொண்டாள்.

“குட்டிக்கு என்ன வேசம் போடலாம்னு நீங்களே ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க” என்னும் உத்தரவு அடுத்த நாள் மாலை நான் பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்திருந்தபோது நானே கேட்டு வாங்கிக்கொண்ட சூடான காபியின் ரூபத்தில் வந்தது. காபிக்கு நம் மூளையின் செல்களைத் தூண்டிச் சுறுசுறுப்பாக்கும் தன்மை உண்டாம். அதெல்லாம் எதற்கு? மூளைக்குச் சூடேற்றிக் கொண்டு மேற்படி உலகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குத்தானே? நான் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லை நண்பர்களே. பெண்களுக்கு இல்லம்தான் உலகம் எனும்போது வீட்டுப் பிரச்சனைகள் எல்லாம் உலகப் பிரச்சனைகள்தானே?

என் சுட்டி மகளுக்கு என்ன வேடம் போட்டால் நன்றாக இருக்கும் என்று நானும் யோசிக்கத் தொடங்கினேன். ஹைசன்பர்க் தியரி, ஐன்ஸ்டீன் தியரி, நீஷேயின் தத்துவம், சிவஞான போதம், களா-கத்ரு மஸ்அலா போன்றவற்றைவிட அதிகமாக மண்டையைக் குடைவதாக அது இருந்தது. 

ஒல்லிக்குச்சி அழகிக்கு என்ன வேடம் பொருத்தமாக இருக்கும்? அவளைப் பெற்ற மகராசி ஏரோப்ளேன் ஓட்டும் பைலட்டாக ஆசைப்பட்டவர். எனவே மகளுக்கு ஏர்-ஹோஸ்ட்டஸ் வேடம் போட்டால் என்ன என்று தோன்றியது. சின்னதாக ஒரு சேலையைக் கட்டிவிட்டு, கையில் ஒரு தட்டில் எக்ளேர்ஸ் சாக்லேட்டுக்களைக் கொடுத்து “ஸ்வாகத்” சொல்லியபடி அதை அப்படியே நடுவர்களுக்குக் கொடுக்கச் சொல்லலாம். இது நல்ல ஐடியாவாகத் தோன்றவே மகிழ்ச்சியோடு முன்வைத்தேன். மகள் பைலட்டாக இருந்தால் என்ன என்று கேட்டுவிட்டு அந்த யோசனையை மேலிடம் ரிஜக்ட் செய்துவிட்டது.

யோசித்து மீண்டும் ஒரு ஐடியாவைக் கொளுத்தினேன். டீச்சர் வேடம். ஆமாம் அதுதான் மகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சும்மாவே அவள் தன்னை ஒரு டீச்சராகத்தான் பாவித்துக் கொண்டு விளையாடுகிறாள். பொம்மைகள் எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் பிள்ளைகளாகிவிடும். பொம்மைகள் தவிர வேறு பிள்ளைகளும் அங்கே இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வாள். அவள்தான் அப்பிள்ளைகளின் டீச்சர். தமிழ் இங்க்லீஷ் பாடல்கள் சொல்லித் தருவாள். ஆனால் பிள்ளைகள் ஏகத்துக்கும் ரகளை செய்து அவளின் கோபத்தைத் தூண்டும். கீச்சுக்குரலில் உச்ச ஸ்தாயியில் “ஆல் ஆஃப் யூ ஷட் அப். சைலன்ஸ்” என்று கத்திக்கொண்டே அவர்களை ஸ்கேலால் விளாசுவாள். அதாவது, அப்படியான பாவனையில் மார்பில் தரையில் டப் டப் என்று அடித்துக் கொண்டிருந்தாள். நான் ஒரு நாள் அவளை அழைத்து, “தரை அடி தப்பாம விழும்னு சொல்லுவாங்க. அப்படி அடிக்காதம்மா” என்று சொல்லிவைத்தேன். என் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த வானவர்கள் கோரஸாக “ஆமீன்” சொல்லிவிட்டார்கள் போலும். ஒரு நாள் பள்ளியில் இருந்து வரும்போது இரண்டு கால்களின் முட்டிகளில் சிராய்ப்புக் காயத்துடன் அழுதுகொண்டே வந்தாள். ஓடும்போது சிமிண்ட் தரையில் விழுந்துவிட்டாளாம். அதிலிருந்து தரையை அவள் அடிப்பதே இல்லை. நல்ல டீச்சராக மாறிவிட்டாள்!  
   
நான் முன்வைத்த இந்த யோசனையும் ஏற்கப்படவில்லை. இன்னும் அருமையான ஐடியா வேண்டும் என்று என் சகதர்மினி கேட்கவே அவளிடமே ஏதாவது ஐடியா இருக்கத்தான் வேண்டும் தோன்றியது. “நீயேதான் சொல்லேன்?” என்றேன். மகளிடம் முன்பு பிறந்தநாளுக்கோ வேறு ஒரு வைபவத்துக்கோ எடுத்த பிங்க் நிற கவ்ன் ஒன்று இருப்பதைச் சுட்டிக்காட்டினாள். அடுக்கடுக்காக ஃப்ரில் வைத்து புஸ் என்று பஞ்சுமிட்டாய் போல் பரவி மகளை ஒரு பொம்மை போல் காட்டும் ஆடை. அதைப் போட்டு என்ன வேடம் என்று எனக்குப் புரியவில்லை. “ஏஞ்சல் வேஷம் போடலாம். அதுதான் அவளுக்குப் பொருத்தமாக இருக்கும்” என்றாள். இத்தனை சுலபமாக முடிந்தால் அதை நான் ஏன் வேண்டாம் என்று மறுக்கப் போகிறேன்? “ஆல்ரைட், அப்படியே செஞ்சுறலாம்” என்றேன். “இப்படிச் சொன்னா எப்படி? மத்த தேவையெல்லாம்?” என்றாள். இன்னும் என்ன என்பது போல் பார்த்தேன். சொன்னாள். தேவதை என்றால் அதுக்குன்னு ஒரு லட்சணம் இருக்கே? கையில் ஒரு நட்சத்திர மந்திரக்கோல் வேண்டும். அதை வைத்து வட்டம் போட்டுத்தானே அது வரம் கொடுக்கும்? அப்புறம், தலையில் ஒரு மினுக்கும் கிரீடம் வேண்டும். அது ஒருவித உலக அழகி அல்லவா? அத்துடன் மிக முக்கியமாக, அதன் தனித்தன்மையாக அதற்கு முதுகில் இரண்டு சிறகுகள் வேண்டும். அதை வைத்துத்தானே அது பறந்து வந்து ஜன்னல் வழியாக நுழைந்து நம் கட்டிலின் அருகில் வந்து ஒன்றரை அடி உயரத்தில் மிதக்கும்?


”கிரீடம், ரெக்கை, மந்திரக்கோலா? இதெல்லாம் எப்படிச் செய்யிறது? ரெக்கை வேணும்னா தெர்மோகோல் ஷீட்டில் செய்யலாம்…”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஃபேன்சி ட்ரெஸ்சுக்குத் தேவையானதெல்லாம் கடையிலயே செட்டா விக்கிதாம்.”

“எங்கே?”

“அல்லிமால் தெருவில உள்ள கடைகள்ல கேட்டா கிடைக்கும்னு மிஸ்ஸே சொன்னாங்க.”

ஆக, தேவதைக்கான ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதற்காக நானும் சகதர்மினியும் மறுநாள் மதியம் அல்லிமால் தெருவில் அலைவது என்று முடிவாயிற்று. அதன்படி மறுநாள் மதிய உணவும் லுஹர் தொழுகையும் முடிந்த பின் மீண்டும் ஃபார்மல் உடைக்குள் புகுந்துகொண்டு என் ஸ்கூட்டரில் சாவியை மாட்டித் திருகி ஒரு உதை விட்டேன். அலறிக்கொண்டு புகையைக் கக்கியது. அந்த எந்திரக் கரும்புரவியில் என் பட்டத்தரசியுடன் ஆரோகணித்து அதன் விசையை முடுக்கி திருச்சி மாநகரின் தேசிய நெடுஞ்சாலைகளில் கடுகி விரைந்து அல்லிமால் தெருவை அடைந்தேன். கெமிக்கல் திரவியங்கள் விற்கும் கடைகள், பேப்பர் ஐட்டம்ஸ் விற்கும் கடைகள் என்று அந்தக் குறுகிய தெரு நிறைந்திருந்தது. ஒரு பேப்பர் கடைக்குள் நுழைந்தோம்.

என்னே ஆச்சரியம்! அங்கே ஏற்கனவே எம்மைப் போன்ற புண்ணியம் செய்த பெற்றோர்கள் சிலர் இருந்தார்கள்! அவரவர் வீட்டிலும் ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப்படும் தேவதைகள் இருப்பதை நினைத்து என் நெஞ்சம் நெகிழ்ந்தது! 

இரண்டு தளங்கள் கொண்ட அந்தக் கடையின் மாடியில் இருந்து தக்காளி பழம் போல் இருந்த, பான் போட்ட சேட் முதலாளி இறங்கி வந்தார். லேசாகக் கலங்கியது போன்ற கண்களால் என்னைப் பார்த்து ‘என்ன வேண்டும்?’ என்னும் கேள்வியை வாயைத் திறக்காமலே ஒரு குதப்பல் புன்னகையால் கேட்டார். “ஏஞ்சல் வேஷத்துக்கு….” என்று நான் சொல்லத் தொடங்கியதுமே கையால் ஒரு அபய முத்திரை காட்டிவிட்டு உள்ளே சென்று நான்கைந்து ப்ளாஸ்டிக் பைகளை எடுத்து வந்தார். ஊதா, பச்சை, பிங்க் என்று பல நிறங்களில் செட் செட்டாக தேவதைக்கான உபகரணங்கள். வலைத்துணியால் செய்த தேவதைச் சிறகுகளும் எடுத்துத் தந்தார். அதில் இரண்டு எலாஸ்டிக் வளையங்கள் இருந்தன. கையை விட்டு முதுகில் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். ரொம்ப ஈசி.

போட்டியின் நாளும் வந்துவிட்டது. மதியம் மூன்று மணி வாக்கில் மகளை தேவதை ஆக்கும் பணியில் சகதர்மினி இறங்கிவிட்டாள். தேவதை என்றால் மூச்சா கக்கா போன்ற துடக்குகள் கிடையாதல்லவா? அதுவும் போட்டி மேடையில் இதெல்லாம் மைனஸ் பாய்ண்ட் ஆகிவிடுமே? எனவே, மகளைச் சிறிய பெரிய கடன்களெல்லாம் கழிக்கச் செய்து, முகம் கை கால் அலம்பித் துடைத்து, தேவதைக்கான உடைகள் அணிவித்து, முதுகில் சிறகுகளைப் பொருத்தி, தலையில் கிரீடம் மாட்டி, கையில் மந்திரக் கோலையும் தந்து ஒருமுறை அழகு பார்த்து “ஃபைன்” என்று புன்னகைத்தாள். இதோ, ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை தேவதையாகக் காணும் தாய்!

தேவதையை என் எந்திரக் கரும்புரவியின் முன் நிற்க வைத்து மகனும் துணைவியும் என் பின்னால் அமர்ந்திருக்க பள்ளிக்கூடம் நோக்கிச் செலுத்தினேன். நிகழ்ச்சிக்காக பள்ளி மண்டபமே களைகட்டியிருந்தது. ஸ்கூட்டரெனும் ’புரவி’யை அணைத்து நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம்.

நான் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். அப்படி ஒரு மேஜிக் ரியலிசக் காட்சி எதிர்பாராமல் கிடைத்தது. என் முன்னே இரண்டரை அடி உசரமுள்ள ’முண்டாசுக் கவிஞன்’ நின்றான். தமிழால் தகுதி பெற்றுப் பின் தமிழுக்குத் தகுதி தந்த கவிராஜனை அக்கோலத்திலா என் கண்கள் காண வேண்டும்? தலையில் முண்டாசு, முகத்தில் முறுக்கிய மீசை, புஷ்கோட், கையில் தடி எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஆனால் அரையில் ஒட்டுத் துணி இல்லை! அருகில் மாதிரி இலக்குமி அம்மாள், அதாவது கவிஞனைப் பெற்ற தாய் அவனது பஞ்சகச்சத்தை உதறி சரிசெய்து கொண்டிருந்தாள். அவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான். சரிதான், விஷயம் விளங்கிவிட்டது. நெக் ஆஃப் தி மூமெண்ட்டில் தனக்கு மோஷன் வருகிறது என்று அவன் தன் தாயிடம் சொல்லியிருக்கிறான். உடனே அரையில் நிர்வாண நிலை சித்திக்கப்பட்டு கழிப்பறைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான். பின்பு அவசரமாகத் துப்புரவு செய்யப்பட்டு அந்தக் கடுப்பில் பிட்டத்தில் நாலைந்து மொத்து வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறான். என்ன கொடும சார் இது? அதே பாரதிதான் நிகழ்ச்சியில் மேடையில் வந்து நின்று “ஓடி விளையாடு பாப்பா…” என்னும் கவிதையை ஒப்பித்தான்.


சற்றே தள்ளி இன்னொரு ஆகிருதியின் போன்சாய் வடிவத்தைக் கண்டேன். “வானம் பொழிகிறது பூமி விளைகிறது, உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்…” என்னும் புகழ்பெற்ற வசனத்தைப் பேசியவன். ஆனால் இந்தக் கட்டபொம்மன் வீரம் ததும்பும் முகமுடையவனாக இல்லை. நான்கு வயதுப் பையனிடம் என்ன வீரம் ததும்ப முடியும்? அதுவும் இவன் அவனது அம்மாவின் ஜாடையில் இருப்பவன் போலும். பெண்மை ததும்பும் பாவ முகம். அமுல் பேபி. அவனைக் கட்டபொம்மன் ஆக்குவதென்றால் சாத்தியமா? பொட்டபொம்மனைப் போல் ஆகிவிட்டது.

மண்டபத்தின் உள்ளே சென்று அமர்ந்தோம். தேவதை அவளின் மிஸ்ஸிடம் ஒப்படைக்கப் பட்டாள். மேற்படிக் காட்சிகள் என் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சியான சிந்தனைகளை நான் என் ஜோடியிடம் சொன்னேன். அதை அவள் துளிகூட ரசிக்கவில்லை. “இதப் பாருங்க. இப்படியெல்லாம் கிண்டல் பண்ணாதீங்க. குழந்தைகள என்கரேஜ் பண்ண முடிஞ்சா பண்ணுங்க. இல்லேன்னா பேசாம இருங்க. நம்ம புள்ளைய நாலு பேரு பாத்துக் கிண்டல் பண்ணினா நமக்கு எப்படி இருக்கும்?” என்றாள்.

அதெல்லாம் எனக்குத் தெரியாதா? நம்மையும் நாலு பேர் கிண்டல் செய்யத்தான் செய்வாங்க. அப்படிச் செய்து அவங்க சந்தோஷப் படுறதுக்கு நாமலும் ஒரு காரணமா இருந்தோம்னா அதுவும் ஒரு வகையில் தர்மம்தானே? புண்ணியம்தானே? தவிர, நான் கிண்டல் செய்வது குழந்தைகளை அல்ல. சொல்லப்போனால் நான் குழந்தைகளின் சார்பாகக் குரல் கொடுக்கிறேன். குழந்தைகளை வைத்து டேலண்ட் லேடண்ட் அது இது என்று பெரியவர்கள் செய்யும் கூத்துக்களை விமர்சிக்கிறேன். நான் ஒரு உரிமைப் போராளி! இந்த எண்ணம் என்னை இன்னும் வேகப்படுத்தியது. நிகழ்ச்சி ஆரம்பித்த பின் தொடர்ந்து என் ரன்னிங் கமெண்ட்ரியைக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். சிரிப்புணர்வு மிக மிக வலியது நண்பர்களே! என்னைக் கடிந்து கொண்டாலும் அவ்வப்போது சகதர்மினி அடக்க முடியாமல் சிரித்தாள். என் மனதைக் கவர்ந்த மாறு வேடங்களையும் அவை எனக்குப் பிடித்திருந்ததற்கான காரணங்களையும் உங்களிடம் சொல்கிறேன்.

ஒரு வாண்டுப் பையன் முழுமையான போலீஸ் யூனிஃபார்மில் மேடையேறினான். நடுவர்களைப் பார்த்து நச்சென்று நாலு சல்யூட் போட்டு வைத்தான். அப்புறம் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தான். புரட்சிக் கலைஞர் பேசுவது போன்ற பாணியில் இருந்தது. ஆனால் அவனுக்கிருந்த மூடில் அது புராண கதைகளில் ப்ராண நாதனை இழந்த பதிவிரதை பேசுவது போல் வெளிப்பட்டது. இறுதியாக “ஜெய்ஹிந்த்” என்று முழங்க முயன்று முனகினான். அந்தப் பையனுக்கு ஆறுதல் பரிசு வேண்டுமானால் தரலாம். ஆனால் முதல் மூன்று பரிசுகள் தரக்கூடாது என்று என் முடிவைச் சொன்னேன். அதற்கான காரணம் மேலே சொன்னது அல்ல. அவன் ஆள் போலீசைப் போலவே இல்லை. நாலைந்து மாதத் தொப்பை இல்லை என்றாலும் பேருக்கு ஒரு மாதத் தொப்பையாவது இருக்கவேண்டாமா? இவனோ வயிறு ஒட்டிப்போனவன். ஒருவேளை ஐடியலிசத்தை வெளிப்படுத்தினான் போலும். ஆனால் மாறுவேடப் போட்டியில் ரியலிசம்தான் வேண்டும்.



சிறுமி ஒருத்தி வெள்ளைச் சேலை தரித்து பாரதமாதாவாக அவதரித்து வந்திருந்தாள். கையில் தேசியக் கொடி வைத்திருந்தாள். கீழே நிற்கும் வரை தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டே நின்றாள். மேடையேறும்போது ஏதாவது சுவாரஸ்யமாகச் செய்யப்போகிறாள் என்று நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. மேடையேற மறுத்தவளை அவளின் அன்னை வலிந்து ஏற்றிச் சென்று மைக்கின் முன் நிறுத்தினார். பாரதமாதா ஓவென்று அழத் தொடங்கிவிட்டாள். நாடு இருக்கும் நிலையை எண்ணிப் பிலாக்கணம் வைக்கிறாள். என்னவொரு தத்ரூபமான நடிப்பு! இவளுக்குத்தான் முதல் பரிசு தர வேண்டும் என்றேன். ஆனால் அவள் தன் நடிப்பில் ஓவராக்டிங் செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டாள். தன் அம்மா கீழே இறங்குவதைக் கண்டவுடன் பாரத மணிக்கொடியைக் கீழே போட்டுவிட்டு பின்னாலேயே ஓடினாள். அதிலும் ஒரு கவித்துவம் இருக்கத்தான் செய்கிறது. நூற்றிப் பத்து கோடி ஜனங்களின் சங்கத்தைப் பெற்ற பாரதத் தாய்க்கும் ஒரு தாயின் அரவணைப்புத் தேவைப்படுவதைக் காணீர்! 



இப்படியாக, டெட்டிக் கரடி போல் வேடமிட்ட சிறுவன், கிட்னி திருடாத நல்ல டாக்டராக வேடமிட்ட சிறுவன், ஃபீய் ஃபீய் என்று மைக் முன் நின்று விசிலடித்துக் காதைக் கிழித்த ஒரு ட்ராஃபிக் போலீஸ், ஔவைப் ’பேத்தி’, உடலெங்கும் கத்திரிக்காய் கேரட் எலுமிச்சை முள்ளங்கி கீரை போன்ற காய்கறிகளைத் தொங்கவிட்டுக் கொண்டு “வெஜிடபிள் மேன்” என்றெழுதிய ஒரு பலகையைக் கையில் பிடித்தபடிப் பரிதாபமாக வந்த ஒரு காய்கறிக்காரன் மற்றும் பல மாறுவேடமிட்ட வாண்டுகள் மேடையேறி இறங்கினார்கள். ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்து பரிசுகள் அறிவிக்கப்பட்டு நடுவராக வந்திருந்த ஒரு பெண்மணி இலிப்புஸ்டிக் பூசிய உதடுகளில் செயற்கையான ஒரு சிரிப்பை இழுத்து வைத்துப் பல்லைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தபோதே எல்லோரும் வெளியேறத் தொடங்கினோம். தேவதை வாடி வதங்கிப் போயிருந்தாள். இரண்டு ரைம்ஸை தலையை ஆட்டி ஆட்டி மூச்சு முட்ட ஒப்பித்த தேவதைக்கு பரிசு ஒன்றும் கிடைக்கவில்லை.
திறமைகள் வளரவேண்டும் என்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனை கிடையாது. ஆனால் அதன் பெயரால் நடத்தப்படும் போட்டிகள் அதற்கு நியாயம் செய்வதில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டவன் நான். வினாடி வினா போட்டிகளில் கலந்துகொள்ளும் நெத்து மண்டைகள் பல தரவுகளை மனப்பாடம் செய்து வைக்கிறார்கள். சவரக் கத்தியைக் கண்டுபிடித்தவனின் பயோ டேட்டா, குண்டூசி ஒரு இன்ச் நீளம் இருந்தால் அதற்கு எவ்வளவு சைசில் கொண்டை போட வேண்டும், மேரத்தான் ரேசில் முதல் தங்கப் பதக்கம் வாங்கியவன் எப்படிச் செத்தான், மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை தடவை துடிக்கிறது, எதிர் அணியில் அமர்ந்திருக்கும் காயத்ரியைப் பார்க்கும்போது மட்டும் அந்த எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது, முதன் முதலில் பூமியில் இருசக்கர சைக்கிள் எந்த ஊரில் எந்தத் தெருவில் ஓடியது, அது எத்தனை பேர் மீது மோதியது என்பன போன்ற தரவுகளைத் தம் மூளையில் பதிவு செய்து வைப்பவர்கள், அதுவும் வினாடி வினாவில் ஜெயித்து இவை எதுவுமே தெரியாத ஒரு கவுன்சிலர் அல்லது வங்கி மேனேஜர் கையால் பிசாத்து சோப்பு டப்பாவைப் பரிசாக வாங்குவதற்காக (கேட்டால் அந்தக் காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ஒலிவ இலையைத்தான் தந்தார்கள். சோப்பு டப்பா அல்லது டிஃபன் டப்பி எவ்வளவோ தேவலாம் என்று சொல்வார்கள்.) ம்ஹும், இவ்வளவு தரவுகள் உள்ள மண்டைக்குக் கடைசியில் வாழ்வின் ஆதாரமான பல விஷயங்களில் புரிதல் என்பதே இருக்காது!

பேச்சுப் போட்டிக்குச் சென்று வென்ற பலரும் வெறும் கிளிப்பிள்ளைகளாகவும், பாட்டுப் போட்டியில் வெல்லும் பலரும் வெறும் டேப் ரிக்கார்டர்களாகவும்தான் உருவாகிறார்கள். சுயமாகச் சிந்திக்கும் திறனைப் பேச்சுப் போட்டி வளர்ப்பதில்லை என்பதையும் இசை மேதைமையைப் பாட்டுப் போட்டிகள் வளர்ப்பதில்லை என்பதையும் கண்டாகிவிட்டது.

மாறுவேடப் போட்டியில் ஏனோ எனக்கு மனம் லயிக்கவே இல்லை. நாம் வளர்க்க வேண்டியது வேடமிடும் திறமையை அல்ல. வேடமில்லாமல் வாழும் திறமையை என்று நான் நினைத்தேன். ஏற்கனவே தேவதைகளாக இருக்கும் குழந்தைகளுக்குத் தேவதை அரிதாரம் எதற்கு? தேவை இல்லைதானே?

6 comments:

  1. அடடா... என்ன மாதிரி ரசனைகள். அதை விவரித்த உங்கள் உணர்வுகள்!! உண்மை தான் தேவதைகளுக்கு ஏன் தேவை இல்லாத அரிதாரம்??

    ReplyDelete
  2. // பெண்களுக்கு இல்லம்தான் உலகம்
    எனும்போது வீட்டுப் பிரச்சனைகள் எல்லாம்
    உலகப் பிரச்சனைகள்தானே? //
    அருமை,அருமை, இப்பத்தான் புரியுது
    பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களை
    பெரிதுபடுத்துவது எதனால் என்று.

    உங்கள் ரசனையும் கிண்டலும்
    ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  3. அதென்ன இந்தப் பதிவும் சிறுகதை
    என்றே துவங்குகிறது.

    ReplyDelete
  4. அண்ணா

    பதிவ படிச்ச உடனே ஒன்னு
    கேக்கணும்னு தோணுது

    எத்தனை விவரிப்பு
    எத்தனை டீடைல்ஸ்

    உங்களுக்கு ஞாபக மறதி

    இத நாங்க நம்பனும் ஓகே... ஓகே

    ReplyDelete
  5. /// பாரதமாதா ஓவென்று அழத் தொடங்கிவிட்டாள். நாடு இருக்கும் நிலையை எண்ணிப் பிலாக்கணம் வைக்கிறாள்.///

    ///கிட்னி திருடாத நல்ல டாக்டராக வேடமிட்ட சிறுவன்,///

    நல்ல நகைச்சுவை உணர்வு. ஆக்கத்தைப் புன்முறுவலுடன் ரசித்தேன்.

    தேவதையைக் கண்டேன். நாங்களாக இருந்தால் திருஷ்டி சுத்திப்போடுவோம்.உங்கள் குடும்பங்களில் உண்டா?

    // நாம் வளர்க்க வேண்டியது வேடமிடும் திறமையை அல்ல. வேடமில்லாமல் வாழும் திறமையை//

    சிந்திக்கவும் தூண்டியது.

    சிரிப்பும் சிந்திப்பும் ,பலே!

    ReplyDelete